எபிடோட் - 73 (26.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
காஞ்சீபுரம் வீட்டை விற்கும் முயற்சியில் பாகவதரின் மகன் சிவராமன் புரோக்கருடன் வருகிறான். அவனை சந்த்திக்கும் அவன் வீட்டு குடித்தனக்காரர் பாகவதர் வீட்டின் பேரில் ஏற்கனவேயே 5 லட்சம் கடன் வாங்கியுள்ளதாகவும், அது அடமானத்தில் இருப்பதாகவும் கூற, அவன் திகைக்கிறான்.
சாம்பு சாஸ்திரி கூப்பிட்டதால் அவர் வீட்டுக்கு வரும் பிரியாவுக்கு சரியான வரவேற்பு இல்லை. அவள் கேட்டரரின் மனைவியுடன் வரதட்சணை சட்டம் பற்றிப் பேசியதால் அந்தாத்து மாமி சம்பந்தத்தை முறித்து விட்டுப் போனதாக செல்லம்மா அவளிடம் கூற அவள் திகைக்கிறாள். ஆர்த்தியும் தன் திருமணம் நின்றுபோன துயரத்தில் அவளிடம் கடுமையாகப் பேசுகிறாள். அவளிடம் இம்மாதிரியெல்லாம் வார்த்தைகளை கொட்டினால் அவற்றை அள்ள முடியாது என அவள் அன்னை கடிந்து கொண்டு ஆர்த்திக்கு எடுத்துக் கூறுகிறாள்.
அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்க, அவரும் ஆமாம் என ஆமோதிக்கிறார். மகாபாரதத்திலிருந்தே உதாரணம் கூறுகிறார். பாஞ்சாலி சபதம் வரும் சமயம் தாறுமாறாக வார்த்தைகளை விட வேண்டாம் என துரியன் விதுரரால் எச்சரிக்கப்படுகிறான். இக்கட்டத்தை வியாச பாரதம் மற்றும் பாரதியாரின் பாஞ்சாலி சபதத்திலிருந்தே முறையே வடமொழி மற்றும் தமிழில் மேற்கோள்களை சோ காட்டுகிறார்.
நான் இந்த வீட்டின் மருமகள் என்னும் ஹோதாவில் நல்லதை நினைத்தே பேசினேன், அது இம்மாதிரி முடியும் என நினைக்கவில்லை எனப் பிரியா கண் கலங்கிக் கூறி விடை பெறுகிறாள்.
பாகவதர் வீட்டில் அவர் எல்லாரது கேள்வி கணைகளுக்கும் ஆளாகிறார். ராஜி தன்னை பேரனுக்காக ஒன்றும் சேர்த்து வைக்கவில்லை என குத்திக் காட்டியதாலேயே தான் ஷேர் மார்க்கெட்டில் பணம் ஈட்ட எண்ணியதாக பாகவதர் கூற, அவரை எல்லோருமே கண்டித்துப் பேசுகின்றனர்.
பிரியா தன் வீட்டில் யோசனையில் ஆழ்ந்திருக்க, அங்கு வரும் அவள் கணவன் கிருபா விஷயம் அறிந்து கோபப்படுகிறான். மன்னி என்ற மரியாதை இன்றி ஆர்த்தி நடந்து கொண்டதற்கு அவளை நான்கு வார்த்தைகள் கேட்டு வருவதாகக் கூறி அப்பா வீட்டுக்கு கிளம்புகிறான். பிரியா வேண்டாம் எனத் தடுத்தும் அவன் கேட்கவில்லை.
தந்தை வீட்டுக்கு வரும் கிருபா தன் தங்கை ஆர்த்தியை கடிந்து கொள்கிறான். அவளும் தன் குற்றம் உணர்ந்து மன்னிப்பு கேட்கிறாள். கேட்டரரின் மனைவி இந்த சம்பந்தத்தை எப்படியுமே கைவிட முடிவு செய்து விட்டதாகவும், பிரியா பேசியதை ஒரு சாக்காக வைத்துக் கொண்டதாகவும், ஆகவே இதில் பிரியாவின் குற்றம் ஏதுமில்லை என்றும் சாம்பு முத்தாய்ப்பாக கூறுகிறார். பிரியாவை சமாதானம் செய்ய செல்லம்மா புறப்படுகிறாள். ஆர்த்தியையும் தன்னுடன் வந்து பிரியாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமென அவளையும் அழைத்துக் கொண்டு புறப்படுகிறாள்.
நாதனும் வசுமதியும் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல வீட்டிலிருந்து புறப்படுகின்றனர். அவர்கள் அந்தண்டை போனதும் அசோக் உள்ளே வருகிறான். தான் இனிமேல் தன் வீட்டிலேயே வசிக்கப் போவதாக அவன் கூற, சிங்காரம் மகிழ்கிறான். இதைக்கூற நாதனை செல்பேசியில் அழைக்க, அவரோ தான் இப்போது பிசியாக இருப்பதாகவும் எதுவானாலும் வந்தவுடன் பேசிக் கொள்ளலாம் எனக் கூறிவிட்டு போனை கட் செய்கிறார்.
(தேடுவோம்)
எபிசோட் - 74 (27.04.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
இருந்தாலும் விடாது சமையற்கார மாமி வசுமதியின் செல்லுக்கு ஃபோன் செய்ய, அவளோ பர்வதத்துடன் பேசுகிறாள். ஆகவே லைன் கிடைக்கவில்லை. சிங்காரம் விடாது கார் டிரைவரின் செல்லுக்கு ஃபோன் செய்ய, அவன் சிங்காரம் ஃபோன் செய்வதாக நாதனிடம் கூற, ஃபோனை கட் செய்யச் சொல்கிறார் நாதன். ஆனால் வசு இம்முறை டிரைவரின் போனில் பேசுகிறாள்.
அசோக் நிரந்தரமாகவே வீடு திரும்பிவிட்டான் என்னும் செய்தியை கேட்டு அவள் மகிழ்கிறாள். ஆஸ்திரேலியாவது மண்ணாவது, எனது குழந்தையை பார்த்தே ஆக வேண்டும் எனக்கூறிவிட்டு, வண்டியை நிறுத்தச் சொல்லி, ஆட்டோ பிடித்து வீடு திரும்புகிறாள். அசோக்கைப் பார்த்து மிகவும் மகிழ்கிறாள். ஏன் அவள் டிரிப்பை கேன்சல் செய்தாள் என அசோக் கேட்க, அவளோ அசோக்கை விட வேறு எதுவும் பெரிதில்லை எனக் கூறுகிறாள். பின்னாலேயே நாதனின் காரும் வந்து சேருகிறது. அவரும் டிரிப்பை கேன்சல் செய்துவிட்டார். எப்படி இந்த அற்புதம் என அவர் அசோக்கைப் பார்த்து கேட்க, அவனோ நேரம் வரும்போது சொல்வதாகக் கூறிவிடுகிறான்.
அசோக் வந்திருப்பதால் இரவு சமையல் தடபுடலாக இருக்க வேண்டும் என வசுமதி சமையற்கார மாமியிடம் கூற, அசோக் தான் ஸ்வயம்பாஹம் செய்தே சாப்பிடப்போவதாகக் கூறுகிறார்.
அது என்ன ஸ்வயம்பாஹம் என நண்பர் கேட்க, சோ முதலில் அதை சுயம்பாகம் என உச்சரிக்க வேண்டும் (கந்தனில் வரும் க வைப் போல) எனக் கூறுகிறார். பிறகு அது என்ன என்று அவர் விளக்குகிறார். ஒருவர் தனது சாப்பாட்டுக்குத் தேவையானதை தானே சமைத்து சாப்பிடுவது என்றும், சாப்பாடு ருசிக்காக இல்லை, பசிக்காக மட்டுமே என்பதையும் அவர் விளக்குகிறார். வர்ண ரீதியான பிராமணனுக்கு போஜனத்தில் பிரியம் இருக்கலாகாது. அவன் உடலுக்கு விதிக்கப்பட்டது சௌகரியங்கள் இல்லை, துன்பங்கள் மட்டுமே. அப்போதுதான் வேதங்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறுகிறார். மீதி விளக்கங்களை வீடியோவில் காண்க.
அசோக் நீலகண்டன் வீட்டுக்கு ஃபோன் செய்து தான் நிரந்தரமாகவே வீட்டுக்கு வந்து விட்டதைக் கூற, அவரும் மகிழ்கிறார். அது ஏன் என்னும் காரணத்தை பர்வதம் கேட்க, முக்கால்வாசி பிட்சை எடுப்பதில் உள்ள கஷ்டத்தால் இருக்கும் என ஒரு அனுமானத்தை வைக்கிறார். பர்வதமும் அவ்வாறே இருக்கும் என ஆமோதிக்கிறாள். உமா கோவிலுக்கு போயிருப்பதால் அவளுக்கு ஃபோன் செய்து கூற முயல்கிறாள். செல் வீட்டிலேயே அடிக்கிறது.
நாதன் வீட்டுக்கு போய் அசோக் வந்தது பற்றி விசாரிக்க வேண்டும் என நீலகண்டன் கூற, அதெல்லாம் வேண்டாம், ஏனெனில் தங்களது மாப்பிள்ளை இருக்கும் நிலையில் இது பல சங்கடங்களை வரவழைக்கும் என பர்வதம் தடுக்கிறாள். இருப்பினும் நீலகண்டன் கேட்பதாக இல்லை.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் செல்லம்மா அசோக் திரும்பி வந்தது குறித்து பேச, அவர் அசோக்கே தனக்கு ஃபோனில் சொன்னதாகவும், வசுமதியும் தன்னுடன் சகஜமாகவே பேசினாள் என்றும் கூறுகிறார். துணிகளை உலர்த்த மொட்டை மாடிக்கு போனால் அங்கு பட்டாபி ஆர்த்தியுடன் பேசிக் கொண்டிருகிறான். தனக்கு கௌரியை மணக்க விருப்பம் இல்லை என்றும், பேசாமல் இருவருமாக போய் பதிவுத் திருமணம் செய்து கொண்டு விடலாம் என்னும் ஆலோசனை கூற ஆர்த்தி அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்கிறாள். பட்டாபியை தனக்கு சில நாட்களாகத்தான் தெரியும் என்றும், தன் பெற்றோரையோ தன் பிறந்ததிலிருந்தே தெரியும் என்றும், அவர்களை தலைகுனிய வைக்கும் எந்தக் காரியமும் தான் செய்வதாக இல்லை என்றும் திட்டவட்டமாகக் கூறுகிறாள்.
இதை கேட்ட செல்லம்மா மகிழ்ச்சியுடன் ஆர்த்திக்கு தெரியாமல் படியிறங்கி சாம்பு சாஸ்திரிகளிடம் விஷயத்தைக் கூறுகிறாள். இந்த சாம்பு சாஸ்திரி ஒரு ஏழை பிராமணன் எந்த சொத்தையும் சேர்த்து வைக்கவில்லை என இனி யாருமே கூறவியலாது. தன் மகள் ஆர்த்தி என்னும் பெரிய சொத்துக்கு முன்னால் எல்லாமே தூசுதான் என மனப்பூரிப்போடும் நெகிழ்ச்சியோடும் கூறுகிறார்.
இங்கு டோண்டு ராகவன்.
அசோக் திரும்பியது நிஜமாகவே எதிர்ப்பாராத திருப்பம். ஆர்த்தி, சாம்பு ஆகிய பாத்திரங்கள் பேசியது அவர்களது பாத்திரப் படைப்புக்குப் பெருமையே சேர்க்கிறது. இந்த 74-ஆம் எபிசோடின் சுட்டிக்காக அடுத்த நாள்வரை காத்திராது போட்டது என்னையும் மீறி நிகழ்ந்தது.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
No comments:
Post a Comment