10/08/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 4. மாயக் குதிரை

ஏற்கனவேயே நான் சொன்னதுதான். அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார்.

திருமலை சாரின் இச்சிறுகதை பற்றி நான் கூறுவதைவிட நீங்களே படித்துக் கொள்வது நலம். எனக்கு மிகவும் பிடித்த கதை.

“நான் மகா மகா துரதிஷ்டக்காரன் சார் !” என்று கூறிய வண்ணம் கணேசய்யர் என் வீட்டுக்குள் நுழைந்தார். என்னிடம் கடன் கேட்க வரும்போதெல்லாம் அவர் அப்படி தமது துரதிர்ஷ்டத்தை நொந்துக் கொண்டு வருவார்; இல்லாவிட்டால் அவரிடம் எனக்கு அனுதாபம் உண்டாகாது என்பது அவருடைய அபிப்பிராயம்.

“நீங்கள் சொல்வது ரொம்பவும் உண்மைதான் சார்!... நீங்கள் அதிர்ஷ்டக்காரராக இருந்தால், இந்த நிமிடம் உங்களுக்குக் கடன் கொடுக்க என்னிடம் கொஞ்சம் கூடப் பணம் இல்லாமல் போகுமா?” என்று நான் பதில் சொன்னேன்.

“ஒரு ஐந்து ரூபாய் கூடவா இல்லை?” என அதிர்ச்சியடைந்து கேட்டார்.

“ஆமாம் சார்! என்ன செய்வது? ஒரு ரூபாய் கூட இல்லை!”

நான் மட்டும் ஒரு விஷயத்தில் சற்று அவசரப்படாமல் நிதானமாக யோசனை செய்திருந்தால், இப்போது நான் உங்களிடம் இப்படிக் கடன் கேட்க வேண்டிய அவசியமே இருந்திருக்காது சார்! சொன்னால் நீங்கள் நம்பவே மாட்டீர்கள்! ஆனால் உண்மையில் அது மாதிரி, போன திங்கட்கிழமையன்று என் வீட்டில் நடந்தது”.

“எது மாதிரி சார் நடந்தது?”

“நான் ஒரு பெரிய லட்சாதிபதியாக மாறியிருக்க வேண்டும்”.

“லட்சாதிபதியாகவா! அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம்தான் ! ஆனால் அவ்வளவும் உண்மை!”

“விஷயத்தை சற்று விளங்கும்படிதான் சொல்லுங்களேன்!”

கணேசய்யர் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, “போன திங்கட்கிழமை சாயங்காலம் ஒரு குடுகுடுப்பைக்காரன் வந்து, ‘மாயக் குதிரை உங்களுக்கு வேணுமா?’ என்று ஒரு குதிரை பொம்மையைக் கையில் வைத்துக் கொண்டுக் கேட்டான். “மாயக் குதிரை என்றால், மாயவித்தையெல்லாம் அது செய்யுமா? என்று நான் கேட்டேன்.

”மாயக் குதிரையாவது மண்ணாங்கட்டியாவது” சார்!... அவனை நீங்கள் நம்பி விட்டீர்களா என்ன?”

“அவனை முதலில் நம்பவில்லை. நம்பாமல்தான் அவன் குதிரையின் மாய சக்திகளைப் பற்றிக் கேட்டேன்.”

“அவன் என்ன சொன்னான்?”

“அவனிடமிருந்த மாயக் குதிரை நாம் வேண்டும் வரம் எதுவானாலும், அப்படியே கொடுத்து விடுமாம். ஆனால் இரண்டே தடவைகள்தான் அதை வரம் கேட்கலாமாம். அப்புறம் அதன் சக்தி மறைந்து விடுமாம்!”

“ஆச்சரியமாக இருக்கிறதே! ... நீங்கள் அதை விலை கொடுத்து வாங்கினீர்களாக்கும்?...”

“முழு விலையையும் கொடுத்து விடுவேனா? ... முன் பணமாக ஐந்தே ரூபாய்தான் கொடுத்தேன். அதன் சக்தி நிரூபிக்கப்பட்ட பின் அவன் கேட்ட இருபது ரூபாயைத் தருவதாகச் சொன்னேன். சரிதான் என அவன் போய் விட்டான்”.

“இப்படிக்கூட ஒருவர் அசட்டுக் காரியம் செய்வார்களா சார்?... போயும் போயும் ஒரு குடுகுடுப்பைக்காரன் வார்த்தையை நம்பலாமா?”

“முதலில் நான் நம்பத்தான் சார் இல்லை! ஆனால் அதை நம்பும்படி என் மனைவிதான் எனக்கு யோசனை சொன்னாள். ‘எல்லோருமே மோசக்காரர்களாக இருப்பார்களா என்ன? இவன் கொண்டு வந்திருக்கும் குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருக்காது என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்த மாதிரி அதிசயம் முன்பு ஒரு முறை நடந்திருப்பதாக என் தாத்தா சொல்லியிருக்கிறார்’ என்று அவள் பிடிவாதமாகச் சொன்னதன்பேரில், நான் அந்தப் பொம்மையை வாங்கி விட்டேன்.

“அப்புறம்?”

“உண்மையிலேயே அந்த குதிரைப் பொம்மைக்கு மாய சக்தி இருந்தது என்பது அன்று இரவுக்குள்ளாகவே தெளிவாகி விட்டது எங்களுக்கு”!

“என்ன! மாய சக்தியா! நிஜமாகவா?”

“நிஜமாகத்தான் சார், நிஜமாகத்தான்! அந்தக் குதிரை சாதாரண குதிரை இல்லை. மகா மாயாவிக் குதிரை”.

“அப்படி என்ன மாயா சக்தி இருந்தது அதனிடத்தில்?”

“நாம் கேட்கும் வரத்தைக் கொடுக்கும் சக்தி அதனிடம் இருந்தது சார்”!

“அப்படியா?”

ஆமாம், குடுகுடுப்பைக்காரன் அந்தக் குதிரையை கொடுத்துவிட்டுப் போன அரை மணி நேரத்திற்கெல்லாம், முதல் வரத்தைக் கேட்டு விட்டேன். வரம் கேட்டு இருபத்திரண்டு மணி நேரம் ஆவதற்குள் அதன்படி நடந்து விடும் என்று சொல்லியிருந்தான். ஆனால், கேட்டு நான்கு மணி நேரத்துக்குள்ளாகவே நான் கேட்ட வரம் அப்படியே பலித்து விட்டது...!”

“என்ன வரம் கேட்டீர்கள்?...”

“அதில்தான் நான் சற்று அவசரப்பட்டு விட்டேன்! மெள்ள நிதானமாக யோசித்து வரம் கேட்டிருக்க வேண்டும். என் மனைவி சொன்ன யோசனைகளையெல்லாம் கூட லட்சியம் செய்யாமல் ஒரு அழகான மோட்டார் கார் வேண்டும் என்று அவசரப்பட்டுக் கேட்டு விட்டேன்! ஆபீசுக்குப் போக ரொம்ப சௌகரியமாக இருக்குமே என்று அவ்வாறு கேட்கத் தோன்றிற்று!”

“அது கிடக்கட்டும்; நீங்கள் கேட்டபடியே உங்களுக்கு மோட்டார் கார் கிடைத்ததா என்ன?”

“பேஷாகக் கிடைத்தது”

“கிடைத்ததா? எப்படி கிடைத்தது? வானத்திலிருந்து வந்து குதித்ததா?”

“இல்லை! ...இரவு பத்து மணி இருக்கும். நான் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது என் மனைவி என்னைத் தட்டி எழுப்பி, ‘வாசலில் ஏதோ மோட்டார் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது. சீக்கிரம் போய் பாருங்கள்!’ என்று சொன்னாள். அப்படியே நான் எழுந்திருந்து போய் வாசலில் பார்த்தேன்! அங்கே நிஜமாகவே வெகு அழகான பச்சை நிற மோட்டார் கார் ஒன்று நின்று கொண்டிருந்தது.. அதன் பக்கத்தில் இருந்த ஒரு ஆசாமி ‘இந்த மோட்டார் கார் உங்களுடையதுதான்’ என்று கூறிவிட்டு சட்டென்று இருட்டில் எங்கோ மறைந்து விட்டான்”.

“அதிசயமாக இருக்கிறதே!”

“அதிசயம் என்றுதானே அப்போதிலிருந்தே சொல்லிக் கொண்டிருக்கிறேன்?”

“ஆமாம், அந்த மோட்டார் நிஜமாகவே ஓடக்கூடியதுதானா?”

“அதே சந்தேகம்தான் என் மனைவிக்கும் உண்டாயிற்று. உடனே அவளைக் காரில் ஏறச்சொல்லி, நானே அதை ஓட்டிக் கொண்டு போனேன், பரீட்சித்துப் பார்ப்பதற்காக”.

“நன்றாக ஓடிற்றோ?”

“அதிவேகமாக ஓடியது. ஆனால், அது ஓடிய வேகத்தில் ஒரு புளீய மரத்தின் மேல் மோதிக் கொண்டது”.

“ஐயையோ,... அப்புறம்?”

“அந்த இடத்தில் என் மனைவி காயமடைந்து, அந்த இடத்திலேயே இறந்து விட்டாள்!”

“ஐயையோ, நிஜமாகவா?”

“பொய்யா சொல்வேன்?... பாக்கி சமாசாரத்தையும் கேளுங்கள்! நல்ல வேளையாக அப்போது மாயக் குதிரையின் சக்தி சட்டென்று நினைவுக்கு வந்தது. உடனே அதைக் கையில் எடுத்து இரண்டாவது வரத்தைக் கேட்டேன்”.

“மனைவி பிழைத்து எழுந்திருக்க வேண்டுமென்றா?...”

“பிழைத்து எழுந்திருந்தால், தேகமெல்லாம் காயங்கள் இருக்குமே சார்! விகாரமாகவல்லவா இருக்கும் பார்ப்பதற்கு?...”

“காயங்களும் மறைய வேண்டும் என்று கேட்டிருக்கலாமே?”

“கேட்பதற்கு ஒரே ஒரு வரம்தானே சார் பாக்கியிருந்தது.?

“அட ராமா!... சரி, அப்புறம் என்னதான் செய்தீர்கள்?”

“நடந்ததெல்லாம் ஒரு கனவாகப் போய்விடட்டும்’ என்று நான் வரம் கேட்டேன்! அப்படியே அதுவும் பலித்து விட்டது.”

“எப்படி?”

“யாரோ என்னைத் தட்டி எழுப்புவது போலிருந்தது. ‘அடேடே இதுவரை கண்டதெல்லாம் கனவுதானா!” என்று நான் உடனே விழித்துக் கொண்டேன். குதிரையும் மறைந்து போய் விட்டது”.

“எல்லாம் விசித்திரமாக இருக்கிறது சார்!”

“விசித்திரம்தான்! நான் மட்டும் அவசரப்பட்டு ஒரு மோட்டார் காருக்கு ஆசைப்படாதிருந்தால் விபத்தே நேர்ந்திருக்காது. இரண்டாவது வரத்தை அநியாயமாக வீணாக்கியிருக்க வேண்டாம். நான் ஒரு கோடீஸ்வரனாக வேண்டும் எனக்கேட்டிருக்கலாம்! அவசரப்பட்டு விட்டதால் எல்லாம் எல்லாம் வெறும் கனவாகி விட்டது! அதனால்தான் இப்போது உங்களிடம் கடன் கேட்கும் நிலைமைக்கு நான் வந்திருக்கிறேன்”.

கணேசய்யர் கூறிமுடிந்ததும், “கதை பேஷாக இருக்கிறதே சார்! இதை எந்தப் புத்தகத்திலாவது படித்தீர்களா?” என்று நான் அவரைக் கேட்டேன்! நான் கேட்டதுதான் தாமதம், அவர் சட்டென்று எழுந்திருந்து, “இந்தக் கதையை நீங்கள் ஏற்கனவே புத்தகத்தில் படித்தாகி விட்டதா?” என்று முணுத்த வண்ணம் நடையைக் கட்டி விட்டார்!


அன்புடன்,
டோண்டு ராகவன்







5 comments:

SRK said...

கதை பிரம்மாதம்.

R. Gopi said...

சூப்பர் கதை. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கக் கூடாது.

கிடைத்த வரத்தை சாபமாக்கிக் கொண்டார் (இரண்டாவது வரம்).

வலைஞன் said...

மிக அருமையான கற்பனை.
அப்படியே அச்சாக கல்கி நடை.
நன்றி.

எல் கே said...

கதை அருமை

ரிஷபன்Meena said...

கதை அருமையாக இருந்தது. வி.எஸ்.திருமலை பற்றி மேலதிக தகவல்கள் அறிய ஆசை. இந்தக் கதைத்தொகுப்பின் பெயர் என்ன?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது