11/11/2010

வி.எஸ். திருமலை கதைகள் - 6. அதிசயச் சாமியார்

இது ஒரு லைட்டான கதை. அதிலும் சோபிப்பார் திருமலை அவர்கள் என்பதை இன்னேரம் புரிந்து கொண்டிருப்பீர்கள்தானே. நேரே கதைக்குப் போவோம் நாம்.

கவலை நிறைந்த உள்ளத்தினளாய் பார்வதியம்மாள் நாற்காலியில் உட்கார்ந்திருந்தாள். அவள் கையில் இருந்த பெரிய புராணம் அவள் கவனத்தைக் கவராது இருந்தது.

“பரமசிவம்!” என்று கனத்த, அதிகாரக் குரல் வாசலில் கேட்டது. தெருவில் நின்ற சாமியாரை சரிவரக்கூட பார்க்கவில்லை பார்வதியம்மாள். வழக்கமாகத் தானே உள்ளிருந்து வந்து கனிவுடனும், தாழ்மையுடனும் அளிப்பாள்; இன்று அதற்கு மாறாகத் தன் சமையற்காரியைக் கூப்பிட்டு பிச்சை போடச் சொன்னாள்.

“அந்த சாமி பிச்சை வாங்குவதில்லையம்மா... ஆரூடம் தெரியும் என்கிறது. அதைக் கூப்பிடட்டுமா?” என்றாள் அவள், கையில் அரிசிப் படியுடன் திரும்பி வந்து.

“சரி, அந்தச் சாமியைத்தான் கேட்போமே, நம் மனக்குழப்பத்தைத் தீர்க்குதா, பார்ப்போம்” என்று எண்ணிய பார்வதியம்மாள், “திண்ணையில் உட்காரச் சொல்” என்று உத்தரவிட்டாள்.

அவள் ஒரே மகன் ஆறுமுகத்தைப் பற்றியதுதான் அவள் கவலை. தன் கல்வியை அவன் பூர்த்தி செய்து ஒரே மாதம் கூட ஆகவில்லை. கலாசாலையின் தன்கூட படித்த மீனாக்ஷியைக் கல்யாணம் செய்து கொள்வேன் என்று அவன் ஒற்றைக் காலில் நின்றான். மீனாக்ஷியின் குடும்பம் பண விஷயத்தில் ஆறுமுகத்தின் குடும்பத்துக்கு எந்த விதத்திலும் சமம் இல்லை. அவன் தகப்பனார் கதிர்வேலு முதலியாருக்குச் சற்று டாம்பீக மனப்பான்மை. கல்யாணம் என்றால் அவருக்கு ஒருவன் தனது வாழ்க்கைத் துணைவியை ஏற்றுக் கொள்ளும் சுபசம்பவம் மட்டும் அல்ல; பகட்டுக்குரிய ஒரு சந்தர்ப்பமும் ஆகும். அவர் எப்படித் தம் மகன் இஷ்டத்திற்குச் சம்மதிப்பார்?

அதற்கு முன் தினம்தான் கதிர்வேலு முதலியார் தனது ஸ்டாலின் மீசை துடிதுடிக்க, காளி போன்ற பெரிய உருண்டைக் கண்களில்தீ ஜொலிக்க இடி முழக்கம் செய்தார், மகனைப் பார்த்து.

“மைனர்வாள்! என்ன ஐயா இது? கன்றுக்குட்டிக் காதலா?.. ரொம்பத் தெரிந்தவன்தாண்டா நீ. நீயே பெண் பார்த்து விட்டாயோ..? வீட்டிலே பெரியவங்க இருக்கிறாங்க என்பதே உனக்கு ஞாபகம் இல்லை போலிருக்கு! சினிமாவில நடக்கிற மாதிரின்னு நெனைச்சுட்டியோ? அடேய், துஷ்யந்தா! இந்தப் பைத்தியக்காரத்தனமெல்லேம் இந்த வீட்டிலே நடக்காது, அதை மனசுலே வச்சுக்கோ!...”

இவ்வாறு இன்னும் என்னென்னவோ சொன்னார்.

வாயடைத்து நின்ற ஆறுமுகம், தன் அம்மாவை நோக்கிப் பல கண்வீச்சுக்களை வீசினான். “நீ குறுக்கிட்டு ஒரு வார்த்தை என் பக்கம் பேசாவிட்டால் அப்பா அடிக்க வருவார், அம்மா” என்று தீனமாக பேசின அவன் கண்கள். அவள் பேசாது இருந்து விட்டாள். “மனிதனுக்கு மிகச் சிறந்த நண்பன் அவன் தாய் என்று சொன்னவன் மடையன்!” என்று எண்ணிக் கசந்தான் ஆறுமுகம்.

ஆறுமுகத்தை அன்று காலை முதல் காணவில்லை. மத்தியானம் போஜனத்துக்குக் கூட வரவில்லை அவன். மகன் உணவில்லாமல் பட்டினியாகக் கிடக்கிறானே என்ற கவலை பார்வதியமாளுக்கு. அவனுக்கு மீனாக்ஷியின் மேல் உண்மையான காதலா என்பதை அறியமுடியாது தவித்தாள் பார்வதியம்மாள். நேசத்தையோ இச்சையுணர்ச்சியையோ சிறுவயதில் தவறாகக் காதல் என்று கொண்டு விடுகிறார்கள் என்பதை அவள் அனுபவபூர்வமாகவே உணர்ந்தவள். தன் மகனுக்கு அப்பெண்மேல் உண்மையான அன்பு இருந்ததா என்பதைச் சந்தேகமற உணர விரும்பினாள் அவள்! அவன் காதல் உண்மை என்ற நிருபணத்துக்காகவே அவளது சம்மதமும் ஆசியும் தயாராகக் காத்துக் கிடந்தன. எஜமானி சரி என்றால் கதிர்வேலு முதலியார் மாற்றிப் பேசுவாரா என்ன?

“ஓம் நமச்சிவாயா” என்று சாமியார் வாசலில் முழங்கினார். அங்கே சென்றாள் பார்வதியம்மாள்.

“திருக் கயிலையங்கிரியில் இருப்பவள் பெயருடையவளே! உனக்குச் சிவனருள்!” என்று ஆசி கூறினார் சாமியார்.

சாமியாரின் கம்பீரத் தோற்றத்தில் நல்ல சிவனடியாரின் லட்சணங்களைக் கண்டாள் பார்வதியம்மாள்.

பெரிய பெரிய செஞ்சடைகள், நீண்ட தாடி, வன்மை பொருந்திய உடலெங்கும் திருநீறு ஜொலித்தது. நெற்றியில் பெரிய குங்குமப் பொட்டு, அடர்த்தியான புருவங்கள், பெரிய பெரிய ருத்ராக்ஷ மணிமாலை; சாமியார் பத்மாசனத்தில் உட்கார்ந்திருந்தார்; அவர் கை கண்டத்தில் இருந்தது; மற்றக் கை ருத்ராக்ஷ மணிகளை உருட்டிக் கொண்டிருந்தது.

“சாமி இளமை தாண்டவில்லை போலிருக்கு... ஆனால் என் பெயருக்குக் குறிசொல்லிவிட்டதே” என்று எண்ணினாள் பார்வதியம்மாள்.

“இச்சிவம் யாவும் அறியும்” என்றார் சாமியார், அவள் நினைப்பதை ஊகித்து. “நடந்ததைச் சொல்லும், நடக்கப் போவதையும் சொல்லும்.”

“கொஞ்சம் பால் பழம்...”

“சிவம் இன்றையப் பொழுதுக்கு ஆகாரம் உண்டுவிட்டது. இனி நாளைக்குத்தான்.”

“என் மனதில் ஒரு கவலை இருக்கிறது. சாமி ஏதேனும் சொன்னால்...” என்று இழுத்தாள் பார்வதியம்மாள். இதற்குள் அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்கள் கூடிவிட்டனர்.

“சிவம் சொல்வதைக் கேள், தாயே! உன் மகனைப் பற்றியல்லவா கவலை உனக்கு?... நல்ல பையன், பெயர் ஆறுமுகமோ? ஊம், புத்திசாலி... பூர்வஜன்ம பாக்கியம் இஅவன் மகனாகக் கிடைத்தான்” என்று பேசிக் கொண்டே போனார் சாமியார்.

சாமியார் மேலும் சொன்னார்: “ஆனால் உன்மகன் வாழ்வில் ஒரு கண்டத்தைக் காண்கிறது இச்சிவம். ஏமாற்றத்தால் அவன் துர்மரணம் அடையலாம்! சிவனருள் கிட்டட்டும் தாயே, நீ யோசித்து அவன் இஷ்டத்தைப் பூர்த்தி செய்; உனக்கு புதிய மகள் கிடைப்பாள்; மதுரைவாழ் அம்மன் பெயர் கொண்டவள் அப்பெண். அவள் கால் வைத்தால் உன் வீடு இன்னும் செழிக்கும்!”

பக்கத்து வீட்டு அம்மாவைப் பார்த்து சாமியார் சொன்னார்: “உன் மகள் ரேடியோவில் பாட விரும்புகிறாள்.. நடக்காத காரியம்; நற்குரலும், இசை இயல்பும் அவள் சுபாவ அணிகளில் காணப்படவில்லை... மாலையில் அவள் இசைப்பயிற்சி அபஸ்வரம் பிறருக்குத் தலைவேதனை கொடுப்பதைத் தவிர வேறு பலன் அளிக்காது...”

எதிர் வீட்டுப் பெண்ணின் வேண்டுகோளுக்கு சாமியார் சொன்னது: “உன் மகன் படிப்பு உனக்குக் கவலை தருகிறது. குற்றம் உன்னுடையதுதான்! அவன் வெளியே விளையாட வேண்டிய சமயத்தில் அவனை வீட்டினுள் அடைத்து வைத்தால் அவன் மனம் எப்படிப் புஸ்தகத்தில் செல்லும்?... ஆசைதீர விளையாடி வந்தானானால், அவன் கண் படிப்பதை அவன் அறிவு கிரஹித்துக் கொள்ளும்.

இப்படியாகப் பல குறிகள் சொல்லி, அவர்களை வியப்பில் மூழ்க அடித்து விட்டுச் சென்றார் சாமியார்.

அன்றிரவு பார்வதியம்மாளுக்கும் கதிர்வேலு முதலியாருக்கும் ஒரு சிறு விவாதம் நடந்தது. பார்வதியம்மாள் கட்சி ஜெயித்தது என்று சொல்லத் தேவையில்லை.

ஊரில் உள்ள எல்லோரும் அந்தக் கல்யாண வைபவத்துக்கு வந்து ஆறுமுகம்-மீனாக்ஷி தம்பதியை ஆசீர்வதித்தனர்.

கல்யாணச் சந்தடியெல்லாம் ஓய்ந்து தனிமை பெற்று, ஆனந்தமாக நிலா வெள்ளி முலாம் பூசிய தோட்டத்தில் நடக்கையில் நம் கதாநாயகன் கேட்டான்: “மீனா நான் சாமியார் வேஷம் போட்டு, அம்மாவை ஏமாத்தி, அப்பாவின் சம்மதம் பெற்ற சம்பவத்தை நீ நம்பவில்லையே?”

“அன்று சொன்னதை கெட்டால் எனக்குக் கதை மாதிரித்தான் இருந்தது. ஆனால் அத்தையே நேற்று சொன்னார்கள்!” என்றாள் அவன் சகதர்மிணி.

“அம்மாவே சொன்னாளா, என்ன உள்ருகிறாய்?” என்றான் ஆறுமுகம் வியப்புடன்.

“ஆமாம், பெற்ற தாயை ஏய்க்க முடியும்னு பார்த்தீங்களா?... அத்தைக்கு உங்கக் குரலைக் கேட்டவுடனேயே விஷயம் புரிஞ்சுடுத்தாம்! உங்க பொய்த் தாடியைப் பிச்சு, தலையில் தண்ணியைக் கொட்டலாமான்னு ஒரு கணம் யோசிச்சாங்களாம். அதுக்குள்ளே, ‘சீ, பாவம்! நம்ம பிள்ளைதானே? அந்தப் பெண் மேல் எவ்வளவு ஆசை இருந்தா இம்மாதிரி வேஷம்போடத் துணிவான்’ என்று தோணித்தாம். உடனே சரி, மகன் இஷ்டப்படியே கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்துட்டாப் போச்சுன்னு அவங்க தீர்மானிச்சுட்டாங்களாம்” என்று விளக்கிச் சொன்னாள் மீனாக்ஷி.


அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது