11/22/2010

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல்

எனது அபிமான நடிகர் ஜெமினி கணேசன் பற்றி நான் இன்றுதான் முதல்முறையாக அறியும் தகவல் எனக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நன்றி: அந்திமழை. முதலில் கட்டுரைக்கு செல்வோம்.

ஜெமினிகணேசன் எனக்கு உறவினர்: கருணாநிதி
Created On 22-Nov-10 09:28:03 AM
நடிகர் ஜெமினி கணேசனின் 90-வது பிறந்தநாள் விழா, சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில், ஜெமினி கணேசனின் வாழ்க்கை வரலாறு குறித்த குறுந்தகடை இயக்குனர் கே.பாலசந்தரும், வரலாற்று புத்தகத்தின் முதல் பிரதியினை கவிஞர் வாலி, வைரமுத்து ஆகியோரும் முதலமைச்சர் கருணாநிதியிடமிருந்து பெற்றுக்கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் அவர் பேசியது:

ஜெமினியை எல்லோரும் நேசிக்கக் கூடியவர்கள். அத்தகைய அருமை நண்பர், மறைந்தும் மறையாத மாணிக்கம். நம்முடைய கவிப்பேரரசு, மகன் தந்தைக்கு ஆற்றுகின்ற உதவி அல்லது காட்டுகின்ற நன்றி என்ற திருக்குறளின் பொருளை எடுத்துரைத்து, மகன் என்று இல்லாவிட்டாலும் மகள் என்ற முறையிலே கமலா செல்வராஜ் இந்த விழாவை அற்புதமாக இன்றைக்கு நடத்தியிருக்கிறார் என்று கூறினார். விழாவை சிறப்பாக நடத்திய கமலா செல்வராஜ், ஆண்கள் கூடி, ஏன் மகன்கள் இருந்து நடத்தினால் கூட, இவ்வளவு சிறப்பாக இந்த விழாவை நடத்தியிருக்க முடியுமா என்று எண்ணுகின்ற வகையில் இந்த விழாவை நடத்தியிருப்பது பாராட்டத்தக்கது. அவருக்கு ஜெமினி சார்பில் என் வாழ்த்துகள்.

ஜெமினி கணேசன், 17.11.1920-ல் புதுக்கோட்டையில் பிறந்தவர். அவருடைய தாயார் கங்கம்மா. தந்தையார் ராமு. ஜெமினியின் அத்தை டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. ஜெமினியின் சின்ன தாத்தா நாராயணசாமி. அவருக்கு பிறந்த இரண்டு குழந்தைகளும் இறந்துவிட்டன. எனவே அவர் குழந்தைக்காக இரண்டாம் தாரமாக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த "சந்திரம்மா'' என்ற பெண்ணை மணந்தார். அந்த மணம் கலப்பு திருமணம். இதை ஜெமினி கணேசன் பிறந்த பிராமண சமுதாயம் ஏற்றுக்கொள்ளவில்லை. அவரைச் சாதியிலிருந்தே தள்ளி வைத்தது. ஆகவே, ஜெமினி பிறந்தபோதே ஒரு புரட்சி முழக்கத்தோடு பிறந்திருக்கிறார் என்பதற்கு இது எடுத்துக்காட்டு.

முத்துலட்சுமி ரெட்டியை பெருமைப்படுத்தியது கழக அரசு. இந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு, சந்திரம்மா மூலம் நான்கு குழந்தைகள் பிறந்தன. அவற்றுள் முதல் குழந்தைதான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி என்று சொன்னால் உங்களுக்கெல்லாம் ஆச்சரியமாக இருக்கும்.

ஆக, முத்துலெட்சுமி ரெட்டி இசை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். புதுக்கோட்டை மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்த சுந்தர ரெட்டி என்பவரைக் காதலித்து மணந்தார். சாதி, மொழி வேறுபாடு கடந்து அவர்களின் திருமணம் நடைபெற்றது. ஆகவே, அந்த கலப்பு திருமணத்திற்கு பிறகு அவர்கள் இருவரும் சமுதாய சீர்திருத்தப் பணிகளில் ஈடுபட்டார்கள்.

இன்னும் சொல்லப் போனால், சென்னை மருத்துவ கல்லூரியில் முதல் முதலாக டாக்டராகப் படித்த ஒரு பெண்மணி முத்துலெட்சுமி ரெட்டி. அதனால்தான், மேலவை உறுப்பினராக இருந்து அவர் ஆற்றிய பணியை எடுத்துக்காட்ட, விளக்கிக் காட்ட மேலவையிலும், பேரவையிலும் அவருடைய திருவுருவப்படத்தை இந்த அரசு வைத்து பெருமைப்படுத்தியிருக்கிறது என்பதை நான் எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

சென்னை மாகாண சட்டசபையில் 1929-ல் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துலெட்சுமி ரெட்டி, ``பொட்டுக் கட்டும்'' வழக்கத்தை - அதாவது தேவதாசி முறையை அகற்ற வேண்டும், ஒழிக்க வேண்டும் என்பதற்காக போராட்டம் நடத்தினார். இது காமராஜர் அரங்கம். இந்த அரங்கத்தில் அவருடைய குருநாதர் சத்தியமூர்த்தியைப் பற்றி நினைவூட்டுவதைப் பற்றி தவறில்லை.

தீரர் சத்திய மூர்த்தி, என்னதான் காங்கிரஸ் தியாகி ஆக இருந்தாலும்கூட, அவர் சனாதன கொடுமைக்கு தன்னை ஆட்படுத்திக் கொண்டவர்தான். ஒரு சட்டத்தை தமிழக சட்டசபையிலே கொண்டு வந்தபோது - தேவதாசிகளை ஒழிக்க வேண்டும். பெண்களுக்கு பொட்டுக்கட்டி அவர்களை கேவலப்படுத்துவது என்பது முறையல்ல, ஆகவே, அந்தப் பொட்டுக்கட்டும் வழக்கத்தை ஒழிக்க வேண்டும் என்று சட்டம் வந்தபோது - ஒருவர் எழுந்து ``இல்லை, இல்லை. அந்த வழக்கம் இருப்பது நல்லது, அது தொடர வேண்டும், ஏனென்றால் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்தும் சமுதாயம் அந்தப் பெண்கள் சமுதாயம்தான், எனவே, பொட்டுக்கட்டும் வழக்கம், தேவதாசி முறை தொடர்ந்து அனுமதிக்கப்பட வேண்டும்'' என்று சொன்னார். அவர்தான் தீரர் சத்தியமூர்த்தி என்று கூறுவார்கள்.

அதை எதிர்த்து ஒரு பெண் குரல் கிளம்பியது. அந்தப் பெண் குரல்தான் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டியின் குரல். பெண்கள் சமுதாயம் காளைகள் வெறித்தால் சாந்தப்படுத்துகின்ற சமுதாயம் என்றால், அப்படிப்பட்ட பெண்களை உங்களுடைய வீட்டிலிருந்து அனுப்புங்கள் பார்க்கலாம் என்று முத்துலெட்சுமி ரெட்டி சிம்மக்குரல் கொடுத்து முழங்கினார் - முழங்கினார். மன்னிக்க வேண்டும் - ஒரு வரலாற்று உண்மையை எடுத்துச் சொல்லும்போது, அதிலே பிசிறு வரக்கூடாது. அதிலே குறைபாடு வரக்கூடாது என்பதற்காக உண்மையை அப்பட்டமாக அப்படியே சொல்கிறேன். அந்த முத்துலெட்சுமி ரெட்டிதான் இந்தியப் பூபாகத்தில் அன்றைக்கு புரட்சிகரமான மங்கையாக விளங்கி - அப்படி விளங்கிய காரணத்தால் இந்த இயக்கத்தின் ஆட்சி நடைபெறும்போது, அவருடைய திருவுருவப்படத்தை நாங்கள் சட்டமன்ற மேலவை யிலும், பேரவையிலும் வைத்து கௌரவப்படுத்தி யிருக்கிறோம்.

இதை இந்த விழாவில் ஏன் சொல்ல வேண்டு மென்றால், இந்த விழாவிற்கு சம்பந்தம் இருக்கிறது. ஜெமினி கணேசனுடைய அத்தை முத்துலெட்சுமி ரெட்டி. ஆகவே, எனக்கும், ஜெமினி கணேசனுக்கும் சொந்தம் இருக்கிறதா, இல்லையா? என்னை வாலியோ அல்லது நம்முடைய இயக்குநர் சிகரம் அவர்களோ பிரித்துப் பார்த்து ``உனக்கு சொந்தம் இல்லை'' என்று சொல்ல முடியாது. சொந்தக்காரர் அவர்கள். அதனால்தான் இந்த விழாவை அவர்கள் வற்புறுத்தினாலும், வற்புறுத்தாவிட்டாலும் வந்திருந்து நடத்திக் கொடுத்திருப்பேன். காரணம், எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டு விழா இது.

அவருடைய படத்தை வைத்திருப்பது மாத்திரம் இல்லை; அந்த அம்மையார் பெயரால் இன்றைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், கர்ப்பிணிப் பெண்களின் நலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்ற பெயர் சூட்டி கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம்.

அத்திட்டத்தின்கீழ் 2006-க்குப்பின் கர்ப்பிணிப் பெண்கள் ஊட்டச் சத்து உட்கொள்ள 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. குழந்தை பிறப்பதற்கு முன்பு 3 ஆயிரம் ரூபாய், குழந்தை பிறந்த பிறகு 3 ஆயிரம் ரூபாய் - ஆக, 6 ஆயிரம் ரூபாய் அந்த கர்ப்பிணிப் பெண்களுக்கு கொடுக்கிறோம் என்றால், அந்தத் திட்டத்திற்குப் பெயரே "டாக்டர் முத்து லெட்சுமி ரெட்டி நினைவு மகப்பேறு நிதியுதவித் திட்டம்'' என்றுதான் அந்தப் பெயரை வைத்திருக்கிறோம்.

அந்த முத்துலெட்சுமி ரெட்டியின் குடும்பத்துப் பிள்ளை - அவரால் வளர்க்கப்பட்ட பிள்ளை, ஜெமினி கணேசன். அந்த ஜெமினி கணேசன் பள்ளிப் பருவத்திலேயே எந்த அளவுக்கு புரட்சிகரமாக விளங்கினார் என்பதற்கு ஒரே ஒரு உதாரணத்தைச் சொல்ல விரும்புகிறேன்.

அவர் படித்த பள்ளிக்கூடத்திலே - ஒரு சமஸ்கிருத ஆசிரியர் பற்றிய விவரம் (இதெல்லாம் நான் சொல்வதல்ல, ஜெமினி அவர்களே எழுதி, கமலா செல்வராஜ் வெளியிட்ட புத்தகத்தில் வந்திருக்கின்ற உண்மை விவரங்கள்). ஜெமினி, ராஜா முத்தையாச் செட்டியார் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பிலே படித்த போது, அப்பள்ளியில் இருந்த சமஸ்கிருத ஆசிரியர் பற்றி இந்நூலில் குறிப்பிடும் ஜெமினி கணேசன், "இருபது பிராமண மாணவர்கள் மத்தியில் பிராமணர் அல்லாத ஒரே மாணவன் கோவிந்தராஜீலு. ஆனால், அவனுடைய சமஸ்கிருத உச்சரிப்புதான் மிக நன்றாக இருக்கும். அப்படியும் ஆசிரியர், `பிராமணனே இல்லாத நீயெல்லாம் ஏன் சமஸ்கிருதம் கற்றுக் கொள்ள வருகிறாய்?' - என்று கேட்கும்போது, எனக்கு கோபம் வரும். ஒரு பிராமணர் அல்லாத சூத்திரனைப் பார்த்து சமஸ்கிருத ஆசிரியர் ``நீ பிராமணன் இல்லையே, ஏன் சமஸ்கிருதம் படிக்க வேண்டும்?'' என்று கேட்டவுடன், கோபத்தால் கொதித்து, இனம், குலம், மதம் என்ற சின்ன வட்டத்துக்குள் சிக்கி வாழ்வது தவறு. பரந்த உலகத்தில் பரந்த மனதுடையவனாக, இந்தியன் என்ற உணர்வோடு வாழ வேண்டுமென்பது பிறப்பில், வளர்ப்பில், எனக்குள் ஊறிப்போன ஒன்று'' -என்று முழங்கியவர் ஜெமினி கணேசன். எங்கள் சுயமரியாதை இயக்கத்திற்கும், அவருக்கும் இதுபோன்ற பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை என்றே கருதுகின்றேன்.

ஜெமினி கணேசன் அவர்கள் அவருடைய வாழ்க்கையில் சீர்திருத்தவாதியாக, சாதி, மதம் இவைகளையெல்லாம் மறுப்பவராக, ``ஒன்றே குலம், ஒருவனே தேவன்'' என்ற கருத்து கொண்டவராக, எல்லோரையும் நண்பர்களாகப் பெறுகிற அந்த பரந்த மனப்பான்மை உள்ளவராக வாழ்ந்து காட்டினார் - அவருடைய வாழ்க்கைப் பாதை, நடந்து பார்த்து, உணர்ந்து பார்த்து, அவர் வழியிலே நாமும் புகழொளியைப் பரப்ப வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்.

தமிழின்பால் அவருக்குள்ள ஆர்வத்தை நான் பல நேரங்களில் பார்த்திருக்கிறேன். ஒருமுறை நான் கோலாலம்பூரில் தமிழ் மாநாட்டிற்குச் சென்றிருக்கி றேன். அந்த மாநாட்டிலே திரும்பிப் பார்த்தால், ``வணக்கம்'' என்ற ஒலி கேட்கிறது. யாரென்று பார்த்தால், ஜெமினி கணேசன். அந்த மாநாட்டிற்கு வந்து எங்களோடு இரண்டொரு நாட்கள் தங்கி பொழுதைப் போக்காமல், தமிழைப் பருகி, கருத்துக்களை ஏற்றுச் சென்றவர் அருமை நண்பர் மறைந்த ஜெமினி கணேசன் என்று கருணாநிதி பேசினார்.


இப்போது டோண்டு ராகவன்.

சும்மா சொல்லப்படாது பலரால் “சாம்பார்” என அன்புடனும், சிலரால் இளப்பமாகவும் அழைக்கப்பட்ட ஜெமினியின் பின்னால் இத்தனை விவரங்களா?

ஒரு காலகட்டத்தில் மும்மூர்த்திகளாக அறியப்பட்ட சிவாஜி, எம்ஜிஆர் மற்றும் ஜெமினி ஆகிய மூவரில் எனக்கு ஃபேஃபரைட் ஜெமினியே. அதுவும் சாவித்திரியுடன் நடித்தால் டபுள் ஓக்கே.

பல கோடிகள் சம்பாதித்தும் ஊதாரித்தனமாக செலவழித்து கடைசி நாட்களில் பஞ்சப் பரதேசியாக மறைந்த நட்சத்திரங்கள் மெஜாரிட்டியாக இருந்தபோது ஜெமினி போன்ற சிலர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பலருக்கு முன்னுதாரணமாக திகழ்ந்திருக்கிறார்கள்.

மகிழ்ச்சியுடன்,
டோண்டு ராகவன்

12 comments:

Unknown said...

அப்படியே ராசாவுக்கும் சொந்தக்காரரா என்று சொன்னால் தமிழ்நாடு சுபிட்சமடையும்.

அப்பாவி தமிழன் பரணி said...

தீரர் சத்தியமூர்த்தி அந்த அளவிற்கு பேசவில்லை, முக்கியமாக பேசியது நாம் மூதறிஞர் என்று அழைக்கும் ராஜாஜி அவர்கள் தான் பேசினார் அப்பொழுதான் டாக்டர் முத்துலட்சுமி அவர்கள் அவர்கள் எழுந்து ராஜாஜி அவர்களுக்கு எதிராக வரலாற்று சிறப்புமிக்க இந்த வார்த்தைகளை கூறினார் ( டாக்டர் முத்துலட்சுமி அவர்களும் மூவளுதூர் ராமையம்மாள் அவர்களும் கரம் கோர்த்து இந்த வன்கொடுமையை எதிர்த்து போராடினார்கள், டாக்டர் அவர்கள் சட்டசபைக்கு இந்த வன்கொடுமையை எதிர்த்து பேச போகும் முன் மூவளுதூர் அம்மையார் அவர்களை சந்தித்து கலந்துரையாடினார் அப்பொழுது மூவளுதூர் அம்மையார் அவர்கள், ராஜாஜி அவர்கள் இந்த வன்கொடுமையை தீர்க்க எதிர்ப்பு காட்டுவார் அவர் அடங்க வேண்டும்மானால் இதை நீ பேச வேண்டும் என்று காலத்தில் அழிக்க முடியாத வசனத்தை டாக்டர் அவர்களுக்கு சொல்லிக்குடுத்து சட்டசபையில் பெண் சிங்கமாய் கர்ஜிக்க வைத்தார் )

Venkat said...

Sir!

Did you read/listen to the extensive 2g tapes released by the open magazine?
sample to describe the levels to which our elected representatives collude with business magnates to loot our money:(this particular conversation only illustrates the leevl of closenes and control the power brokers have on the MPs and ministers)
:
-------------------------------
RADIA: So you don’t know what to do with him, you know. I told him just learn to keep quiet and keep his head down. As far as the media is concerned, he can’t resist talking to the media, and then he just says everything, you know. He is saying. The latest rumour is that he and Kanimozhi are having an affair which is actually not true.

TATA: Who?

RADIA: His latest thing is that he and Kanimozhi are having an affair.

TATA: Whose latest thing?

RADIA: The latest rumour in Delhi.

TATA: Oh I see.

RADIA: That Raja and Kanimozhi are having an affair, which is not true.

TATA: Yeah, but spread by who?

RADIA: By whom else, Maran, but that’s because Raja, whenever the media comes to meet him or anybody comes to meet him, he keeps on telling them how much of a soft corner he has for Kani, and every time he talks about her, as dark as he is, he still blushes.

TATA: (Laughs)

RADIA: He gives away the sign that he probably has a crush on her and she has got zero interest in him. Everybody then puts two and two together and gossips. You have this really weird man and he can’t understand why his wife is going to beat him up.

TATA: (laughs)

RADIA: He’s telling me today, ‘What do I do with all of these people, to all these rumours?’ And I told him, ‘Don’t talk to people about you have this soft corner for Kanimozhi,’ and that ‘You have to protect her.’ And I said to him, ‘You know, you actually blush.’ He said, ‘You can’t make out I am blushing.’ I said, ‘I’m sorry, but look at your eyes.’ Anyway, he can’t hide the fact that he’s got a crush on her. And Kani says to me, ‘God help me Niira, keep me away from this man.’ It is quite funny. On the lighter side of Delhi. But then for the madness that I hate being here. So these are the lighter moments of life. I’m back in Bombay from Friday.

TATA: Okay, so we’ll get together.


-----------------------------
Hmm..
Sevanthi ninan is now defending Burkha !

Simulation said...

http://www.maalaimalar.com/2009/11/02121342/gemini.html

pichaikaaran said...

சத்திய மூர்த்தி குறித்து கலைஞர் சொன்ன தகவல் உண்மையா?

pichaikaaran said...

காமராஜரின் குருவான சத்தியமூர்த்தி பற்றிய இந்த கருத்துக்கு காங்கிரஸ் கட்சி எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் ?

dondu(#11168674346665545885) said...

@அப்பாவி தமிழன் பரணி
அவ்வாறு ராஜாஜி சட்டசபையில் பேசவில்லை. சத்தியமூர்த்திதான் பேசினார் என நான் ஏற்கனவேயே பல இடங்களில் படித்துள்ளேன்.

@பார்வையாளன்
உங்கள் கேள்விக்கான பதில் அடுத்த டோண்டு பதில்கள் பதிவின் வரைவுக்கு சென்று விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

D. Chandramouli said...

Whenever we think of Gemini, a pleasant and happy feeling passes through our mind. He had a beautiful face and no wonder, many women fell over his charm. When the stalwarts of Sivaji and MGR ruled the Tamil cinema, Gemini had his own ardent fans. He portrayed soft-spoken roles nicely and we could associate with him easily. AM Raja and PBS later lent their voices so well for Gemini, and eveyone of his songs are still mermerizing and can be heard repeatedly. However, when Savithri was in doldrums and suffering from serious illness, leading to coma, it is not known why Gemini did not step in and care for her. It is pathetic to see the photo of her last days (in the hands of her son?), Gemini and a doctor looking over her. Savithri might have brought her downfall by herself, but still Gemini might have stood by her when she needed him most. I would be interested to know Gemini's side of the story on this.

pichaikaaran said...

தொடர்புடைய இன்னொரு கேள்வி...
காமராஜரின் தலைவரையே கலைஞர் இப்படி தைரியமாக விமர்சிக்கிறார் என்றால், இனியும் காங்கிரசுக்கு பணிந்து போக தேவையில்லை... தேர்தலை தனித்து நின்றும் சந்திக்கலாம் என்ற நிலைக்கு அவர் வந்து விட்டதாக கருதலாமா ?

dondu(#11168674346665545885) said...

@சந்திரமௌலி
சாவித்திரியை அவர் கடைசி காலத்தில் நடத்தியவிதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

off topic:

நீரா ராடியா டேப்புகள் லீக் ஆன நிலையில், பத்மஸ்ரீ பர்கா தத், மற்றும் இந்துஸ்தான் டைம்ஸின் வீர் சாங்க்வி இருவரும் கிட்டத்தட்ட காங்கிரஸ் ஏஜண்டுகள் போல் நடந்துகொண்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிந்தது.

http://www.youtube.com/watch?v=dqnAYhNafOg

இதில் வரிசையாக எல்லாம் கிடைக்கிறது.

பத்திரிக்கையாளர்கள் இப்படி கட்சி புரோக்கர் போல் நடந்துகொண்டுள்ளதைப்பற்றி ஒரு பத்திரிக்கையாளரான துக்ளக் சோ என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள ஆவலாக உள்ளது.

எப்படி இதை அவரிடம் கேட்பது ? ஈ.மெயில் முகவரி ?!!

மேலும், கிட்டத்தட்ட 5 நாளாக எல்லா டீ.வி சேனல்களும் இவ்விசயத்தைப் பேசாமல் கள்ள மௌனம் காத்தது நீங்கள் அறிந்திருக்கலாம். அதையும் கேட்கவேண்டும்.

hayyram said...

இதை தங்கள் கேள்வி பதில் பகுதியில் வெளியிடலாம்:

தமிழ் சினிமாவில் பிராமணக் காட்சிப் படுத்தல் பற்றி தங்கள் அபிப்பிராயம் என்ன?

தொடர்புடைய சில சுட்டிகள்:

http://www.jeyamohan.in/?p=9352

http://www.jeyamohan.in/?p=7499

http://hayyram.blogspot.com/2009/05/blog-post_5138.html

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது