12/14/2006

பள்ளிச்சாலை தந்த ஏழைத்தலைவன் - 7

இதற்கு முந்தையப் பதிவை இங்கே பார்க்கலாம்.

நான் போன பதிவில் கூறியதை இங்கு விளக்குகிறேன். அங்கு கூறியது: "இவ்வளவு செயலாக இருந்த காமராஜ் அவர்கள் கடைசி காலத்தில் மன உளைச்சலோடு இருந்த நிலவரத்தை என் மனக்கண்ணில் பார்க்கிறேன். அதற்கெல்லாம் மூல காரணமான நிகழ்ச்சி என்று நான் பார்ப்பது 1963-ல் நடந்தது."

மேலாண்மை பற்றி எண்ணற்ற புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அவை வெவ்வேறு விதமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் ஒரு அடிநாதம் எல்லோராலும் ஒப்புக் கொள்ளப்பட்டது. அதாவது வேலையை பங்கிட்டு தருதல். எல்லா வேலையையும் அடியைப் பிடிடா பாரதப்பட்டா என்பது போல தலைவனே செய்து கொண்டிருக்க முடியாது. திருவள்ளுவரும் அது பற்றி ஒரு குறள் எழுதியுள்ளார், "இதனை இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்" என்று. (குறள் சரியாக எழுதப்படாவிட்டால் தயவுசெய்து யாராவது திருத்துங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்).

இப்போது இப்பதிவுக்கு வருகிறேன். அறுபதுகளின் துவக்கம் வரை காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருந்ததென்றால், மத்தியில் பொதுக் குழு, அந்தந்த மாநிலங்களுக்கு தனிக்குழு என்றிருக்கும். தமிழக காங்கிரசுக்கு காமராஜ் அவர்களது அற்புதத் தலைமை வாய்த்திருந்தது. அவரது உச்சக்கட்ட காலத்தில் அதிருப்தியினர் கோஷ்டி என்று அவ்வளவாக இல்லை. ஏனெனில் அம்மாதிரி கோஷ்டிகளை மத்தியக் குழு எப்போதுமே ஆதரித்ததில்லை. அதுவும் நேரு அவர்களிடம் அது நடக்கவே நடக்காது.

இப்போது பின்னோக்கிப் பார்க்கும்போது 1963-ல் காமராஜ் திட்டம் என்று வந்து பல காங்கிரஸ் மந்திரிகள் கட்சி வேலைகளுக்காக ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. அவர்களில் முக்கியமானவர் காமராஜர். ஆனல் அவர் பொருத்தமட்டில் ராஜினாமா அவராகவே செய்தார், ஏனெனில் திட்டத்தையே அவர் பெயரில், அவரை முன்னிருத்தி கொண்டு வந்திருந்தனர். காமராஜ் அவர்கள் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு தில்லிக்கு சென்றார். அவர் கர்மவீரர். எங்கிருப்பினும் தனது தனித்தன்மை இழக்காமல் காரியமாற்றக்கூடியவர். ஆனால் இழப்பு என்னவோ தமிழகத்துக்குத்தான்.

அதைக்கூட பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் பின்னால் நடந்த விஷயங்கள் துரதிர்ஷ்டவசமானவை. 1964-ல் நேரு மறைந்தார். அவருக்கு அடுத்து யார் என்ற கேள்வி எழுந்தபோது காமராஜ் அவர்கள் திரைமறைவில் திறமையாகச் செயலாற்றி லால்பஹதூர் சாஸ்திரியை பிரதமராகும் பணியில் தன் பங்காற்றினார். சாஸ்திரி அவர்களும் தன் மேல் வைக்கப்பட்ட நம்பிக்கை பொய்க்காத வண்ணம் கடமையை செய்தார். அவர் 1966 ஜனவரியில் இறந்தது நாட்டின் துர்பாக்கியமே.

இப்போது இருவர் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டனர். ஒருவர் மொரார்ஜி தேசாய் இன்னொருவர் இந்திரா காந்தி. மொரார்ஜி அவர்கள் பதவிக்கு வந்தால் தங்கள் கட்டுப்பாட்டில் அவர் இருக்க மாட்டார் என்று எண்ணியவர்களில் காமராஜும் ஒருவர். ஆகவே அவர்கள் ஆதரவு இந்திரா காந்திக்கு என்று ஆனது. அப்போது இந்திரா அவர்கள் மிகுந்த பணிவுடன் நடந்து கொண்டார். அவருக்கு மெழுகு பொம்மை என்று பெயர் உண்டு. அவரை தங்கள் கருத்துக்கேற்ப செயல்பட வைக்கலாம் என்பதே அவரை ஆதரித்த தலைவர்களின் எண்ணம். ஆனால் நடந்ததென்னவோ தலைகீழ். இந்திரா காந்தி அவர்கள் மெதுவாக காமராஜரையும் மற்றவரையும் ஒதுக்க ஆரம்பித்தார். துரதிர்ஷ்டவசமாக 1967-தேர்தலில் காமராஜ் அவர்கள் தோற்றது இந்திரா காந்திக்கு சாதகமாயிற்று. காமராஜ் அவர்கள் பல வகையில் இந்திரா காந்தியால் அவமானப்படுத்தப்பட்டார். 1969-ல் காங்கிரஸை இந்திரா காந்தி தன் சுயநலனுக்காக இரண்டாக உடைத்தார். ஜனாதிபதி தேர்தலில் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளரான சஞ்சீவரெட்டியின் தோல்விக்கு காரணமாக இருந்தார்.

1966-ல் ரூபாயின் மதிப்பை குறைத்தபோதே அதை காமராஜ் எதிர்த்தவர். அதே போல பாங்குகள் நாட்டுடைமையாக்கல், மன்னர்களின் ப்ரீவி பர்ஸ் ரத்து செய்தது போன்ற நடவடிக்கைகள் இந்திரா காந்தி அவர்கள் தனது நிலையை தக்க வைத்துக் கொள்வதற்காகவே செய்தவை என்பதிலும் காமராஜ் உறுதியாக இருந்தார்.

தமிழகத்தை பொருத்தவரை காங்கிரஸ் கட்சி பெரும்பாலும் அப்படியே காமராஜ் அவர்கள் வசமே இருந்தது. 1969-ல் கட்சி உடையாது இருந்திருந்தால் 1971 தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் பதவிக்கு வந்திருக்கும். ஆனால் என்ன செய்வது, எல்லாமே இறைவன் கையில்தானே. பல ஆண்டுகள் தமிழகத்திலிருந்து விலகி இருந்த காமராஜ் அவர்களுக்கு உண்மை நிலை அவ்வளவாகத் தெரியாது போனது துரதிர்ஷ்டமே.

1971-க்கு பிறகு காமராஜ் நிலைமை இன்னும் மோசமானது. ஆனாலும் மனம் தளராது அவர் பணியாற்றினார். ஜூன் 1975-ல் அவசர நிலை பிரகடனம் வந்ததும்தான் அவர் நிஜமாகவே மனம் நொந்து போனார். அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீளவே இல்லை. அதே ஆண்டு காந்தி ஜெயந்தியன்று அவர் மறைந்தார்.

ஆகவே என்னை பொருத்தவரை 1963-ஆம் ஆண்டை ஒரு சகாப்த்தத்தின் முடிவுக்கான ஆரம்பம் என்றுதான் பார்க்கிறேன்.

இன்னொரு விஷயத்தையும் பார்க்கீறேன். தமிழகத்தில் 1971-க்கு பிறகு காங்கிரஸ் மிகவும் தேய்ந்து போய் ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது. அது இன்றைக்கும் அப்படியே உள்ளது. இதற்கு முழுபொறுப்பு இந்திரா காந்தி அவர்களின் செயல்பாடே ஆகும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

வஜ்ரா said...

பெருந்தலைவர்கள் செய்யும் சிறு தவறுகள் மிகப்பெரும் தவறுகளாக அமைந்துவிடுவது சரித்திரம் நமக்குச் சொல்லும் பாடம்.

அன்று காந்தி படேலுக்குப் பதிலாக தேர்ந்தெடுத்த நேருவினால் கஷ்மீர் பிரச்சனை இன்றளவும் நம்மை "அட்டைப் பூச்சி" போல் உரிஞ்சிக்கொண்டிருக்கிறது.

கர்மவீரர் செய்த தவறு இந்திரா காந்தி.

அதை அவர் எண்ணி ஒரு நாளும் வருந்தவில்லையா ? நிச்சயம் எமர்ஜென்சியின் போது அவர் உயிருடன் தான் இருந்தார் என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

"அதை அவர் எண்ணி ஒரு நாளும் வருந்தவில்லையா?"

என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் வஜ்ரா அவர்களே. பயங்கரமாக வருந்தினார். அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்ட 4 மாதத்திற்குள் அவர் இறந்து விட்டார்.

இந்திராவிடம் இது பற்றி பேசுமாறு அவரிடம் சிலர் கேட்டதற்கு அவர், "வேண்டாம்பா, அந்த அம்மா இன்ஸல்ட் வேறு பண்ணுவாங்க" என்றார்.

மனது ஒடிந்த நிலையில் அவர் மரணம் நிகழ்ந்தது. அது வரை அவருடன் இருந்த பலர் அவர் இறந்ததற்கு காத்திருந்ததைப் போல இந்திரா காங்கிரசுடன் ஐக்கியமாயினர்.

அது பெரிய சோகக் கதை. அவசர நிலை பற்றி நான் இட்ட இப்பதிவை பார்க்கவும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

//ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் ஆதரவைக் கெஞ்சி பெறும் நிலை வந்து விட்டது//
காங்கிரஸ் இல்லையென்றால் வெற்றிபெற இயலாது என்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகளும் வந்துவிட்டன என்றும் சொல்லலாம்.
(உள்குத்து எதுவும் இல்லீங்க சாமிகளா :)) )

dondu(#11168674346665545885) said...

"காங்கிரஸ் இல்லையென்றால் வெற்றிபெற இயலாது என்ற நிலைக்குத் திராவிடக்கட்சிகளும் வந்துவிட்டன என்றும் சொல்லலாம்."

இதில் என்ன ஆறுதல் பெறுவது? காங்கிரசின் இன்றைய நிலைக்கு இந்திராகாந்தியே முழு பொறுப்பு. 1971-ல் லோக் சபாவுக்கு மட்டும் தமிழகத்திலிருந்து காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். தமிழக சட்டசபைக்கு ஒரு சீட்டு கூட காங்கிரசுக்கு இல்லை. அந்த அளவில் அன்னை மாதா தாயார் இந்திரா அவர்கள் காங்கிரசின் மானத்தை வாங்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அதெல்லாம் சரி டோண்டு சார். ஆனால் 1967-லே ராஜாஜி தி.மு.க.வை ஆதரிச்சதை எப்படி நியாயப்படுத்துவீங்களாம்? அதுக்கப்புறம் காங்கிரஸ் தமிழ் நாட்டிலே தலை தூக்கவே இல்லையே?

ராஜாஜியின் செய்கையை விமரிசக்கவே மாட்டீங்களா நீங்க?

முனிவேலு

dondu(#11168674346665545885) said...

"ராஜாஜியின் செய்கையை விமரிசக்கவே மாட்டீங்களா நீங்க?"

ஏன் மாட்டேன்? கண்டிப்பாக இதற்கு பதில் கூறுவேன்.

அதற்கு முன்னால் ஒரு சிறு டைவர்ஷன். கல்கி அவர்கள் 1941-ல் தனது பத்திரிகை ஆரம்பித்த போது இவ்வாறு எழுதியிருந்தார். "ராஜாஜி மேல் எனக்கு அளவுகடந்த பக்தி இருப்பதாலேயே நான் அவரை ஆதரிப்பதாகக் கூறுகிறார்கள். எனக்கு அவர் மேல் அளவு கடந்த பக்தி உண்டென்பது உண்மையே. ஆனால் அதே சமயம் அவர் செய்வதும் சொல்வதும் சரியாக இருக்கும்போது நான் எப்படி ஆதரிக்காமல் இருக்க முடியும்?" பேராசிரியர் கல்கியின் நிலைதான் எனக்கும்.

ஓக்கே, 1967 பற்றி பேசுவோம். அந்த ஆண்டு ராஜாஜி தலைமை தாங்கிய சுதந்திரக் கட்சி காங்கிரஸை எதிர்த்தது. ஆகவே தி.மு.க.வுடன் கூட்டு வைத்துக் கொண்டது. அவ்வளவே. மேலும் 1967-ல் காங்கிரஸ் பலமான நிலையிலேயே இருந்தது. ராஜாஜி அவர்களும் அதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்னாலேயே சுதந்திரக் கட்சியை நிறுவியவர்.

காமராஜ் அவர்கள் தில்லியில் இருந்ததால் தமிழகத்தின் நாடி அவர் கையில் முழுமையாக இல்லை என்றுதான் கூற வேண்டும். இல்லாவிட்டால் "படுத்துக் கொண்டே ஜெயிப்போம்" என்றெல்லாம் வார்த்தை விட்டிருக்க மாட்டார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றது காலத்தின் கட்டாயம். ராஜாஜி வகுத்த தேர்தல் வியூகத்தின் வெற்றி. காங்கிரசுக்கும் வெறும் தேர்தல் தோல்வி அவ்வளவே.

ஆனால் 1971-ல் இந்திரா செய்தது காங்கிரசை படுகுழியில் தள்ளியதாகும். அவர் அவ்வாறு செய்ததற்கு முழுக்க முழுக்க அவர் சுயநலமே காரணம் ஆகும்.

இரண்டையும் ஒப்பிடவே முடியாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நீங்க தெய்வமா மதிக்கிற ராஜாஜியை பத்தி 5 பதிவுங்கதான் போட்டிருக்கீங்க, ஆனாக்க காமராஜ் பத்தி 7-ஆ.

உங்க நடுநிலைமையை காமிச்சுக்கத்தானே இம்மாதிரியெல்லாம் செய்யறீங்க?

முரளி மனோஹர்

அஹோரி said...

"இதனை இதனால் இவனால் முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல்"

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது