2/13/2007

மொழிபெயர்ப்பாளர் - பொறியாளர்

சாதாரணமாக ஃபிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளில் எம்.ஏ. செய்திருப்பவர்களை பார்த்தால் அவர்கள் ஏதாவது பல்கலை கழகத்தில் (உதாரணத்துக்கு ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம்) ப்ளஸ் டூவுக்கு பிறகு மூன்றாண்டு காலம் பி.ஏ. பிறகு எம்.ஏ. என்று படிக்கிறார்கள். இதன் தாக்கம் என்ன? பின்னால் பார்ப்போம். அதற்கு முன்னால்:

பல கம்பெனிகளில் ஜெர்மன், பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக ஆள் எடுக்கும் போது, வேலைக்கான விளம்பரங்களில் முக்கியமாகக் கேட்பது சம்பந்தப்பட்ட மொழியில் எம்.ஏ. பட்டம் இருக்க வேண்டும் என்பதுதான். பிறகு வேண்டா வெறுப்பாக தொழில் நுட்ப சம்பந்தமான கட்டுரைகளை மொழிபெயர்த்த அனுபவம் இருக்க வேண்டும் என்று குறிப்பிடுவார்கள்.

இது பல விபரீதங்களுக்கு வழி வகுத்தது. ஜெர்மனிலோ ஃபிரெஞ்சிலோ முதல் ரேங்கில் எம்.ஏ. பட்டம் பெற்றவர்கள் பல கம்பெனிகளுக்கு மொழிபெயர்ப்பாளர்களாக வந்தனர். வந்த சில நாட்களிலேயே அவர்கள் சாயம் வெளுத்தது. ஏனெனில், பொது அறிவில் அவர்கள் நிலை ப்ளஸ் டூ மாணவனது நிலையாகவே இருக்கும். அதுவும் அந்த இரண்டு ஆண்டுகள் ஆர்ட்ஸ் க்ரூப் எடுப்பவர்கள்தான் சாதாரணமாக மொழிகளை கற்க செல்வார்கள். சுத்தம்.

ஐ.டி.பி.எல்லில் என்னை மொழிபெயர்ப்பாளனாக எடுக்கும் முன்னால் அப்படித்தான் ஆயிற்று. எனக்கு முன்னால் அம்மாதிரி ஜே.என்.யூ. வில் எம்.ஏ. பிரெஞ்சு வெற்றிகராமாக முடித்த ஒரு பெண்மணியை செலக்ட் செய்தனர். அவரது திறமைக் குறைவு சில நாட்களிலேயே வெளிப்பட்டது. பிரெஞ்சிலிருந்து ஆங்கிலத்துக்கு அகராதி எல்லாம் வைத்து ஒப்பேற்றி விட்டார். ஆனால் ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சுக்கு தொழில் நுட்ப சம்பந்தப்பட்ட பேப்பர்களை மொழி பெயர்க்கும்போது முழி பிதுங்கியது. முதலில் அல்ஜீரியாவுக்கு அனுப்பிய பேப்பர்கள் எல்லாம் அவற்றில் உள்ள பிரெஞ்சு அபத்தமாக இருந்தது என முகத்தில் அடிக்காத குறையாகத் திருப்பினர். பிறகு ஐ.டி.பி.எல். அம்மாதிரி ஆங்கிலத்திலிருந்து பிரெஞ்சுக்கான மொழிபெயர்ப்புகளை மார்க்கெட்டில் அவுட்சோர்சிங் முறையில் செய்வித்தனர், ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவில். எல்லோருக்கும் ஒரே கோபம். அப்பெண்மணியின் நிலைமையோ பரிதாபம். பிறகு அவர் திருமணம் முடிந்து சென்னைக்கு போய் விட்டார், வேலையையும் விட்டார்.

இப்போதுதான் நான் தளத்திற்கு வந்தேன். செலக்ட் ஆனேன். என்னை இஞ்சினியராக வேறு எடுத்து கொண்டார்கள். அது பற்றி இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். எனது பிரெஞ்சு மொழிபெயர்ப்புகள் ஒன்றுகூட புரியவில்லை என திருப்பப்படவில்லை. அது பற்றி இப்பதிவில் விவரமாக கூறியிருக்கிறேன். இங்கு நான் இதையெல்லாம் சொல்வதற்கு காரணமே டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க முக்கியமாக டெக்னிகல் பின்னணி அவசியம் என்பதே. அவற்றை படித்து புரிந்து கொள்ள ஒரு தனி மனநிலை தேவைப்படுகிறது. ஆகவே இம்மாதிரி வேலைகளுக்கு தொழில்நுட்ப அறிவுடையவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவர்களுக்கு மொழியறிவும் தேவை என குறிப்பிடுதல் அவசியம்.

ஆனால் நான் மொழிபெயர்ப்பாளன் மட்டும் அல்ல பொறியாளரும் கூட. அதுவும் க்ளாஸ் 1 அதிகாரி. என்னை எப்படி நடத்துவது என்பதில் முதலில் குழப்பம். பிறகு சுதாரித்து கொண்டு மிக்க மரியாதையுடன் நடத்தினர். இத்தனைக்கும் காரணம் இந்த டபிள் டெசிக்னேஷனே. CPWD யில் இருந்தபோது எனது மொழியறிவு எனக்கு எனது மேலதிகாரிகளிடமிருந்து மரியாதையைத் தேடித் தந்ததென்றால், ஐ.டி.பி.எல்.லிலோ நிலைமை தலைகீழ்.

துபாஷி வேலையில் இது இன்னும் அதிக அளவில் உணரப்பட்டது. பிரெஞ்சு அல்லது ஜெர்மன் மட்டும் பேசும் பொறியாளர்களுக்கு ஈடு கொடுக்க முடிந்தது. ஒரு முறை ஒரு சிறு டெஸ்ட் சம்பந்தமாக மண்டை உடைந்தது. அவரவர் தங்கள் வேல்யூக்களை கம்பேர் செய்து கொண்டிருந்தனர். ஒரு சைட் 98 என்று கூறிய இடத்தில் இன்னொரு கட்சி 7 என்று கூறியது. நான் சட்டென்று பேப்பர்களை தரச்சொல்லி பார்த்தேன். பிறகு கேஷுவலாக கூறினேன், ஒரு சைட் கிலோக்ராம்/சதுர செண்டிமீட்டரில் குறித்திருந்தது, இன்னொரு சைட் பவுண்ட்/சதுர அங்குலத்தில். ஆனால் இரு சைடுகளுமே நம்பர் மட்டும் எழுதி வைத்துக் கொண்டிருந்தனர். ஆகவே, இரண்டுக்கும் ஒரே மதிப்புதான் என்று. 1Ksc = 14 lbs-sq.inch.

இப்போதுதான் நான் எதிர்பார்க்காதது நடந்தது. கம்பெனியின் சேர்மன் அகர்வால் என்னை ஓரமாக அழைத்து சென்று லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கினார். அவர் சொன்னார், "என்ன ராகவன், அது எங்களுக்கு தெரியாதா? அதை வைத்து கிட்டத்தட்ட அரை மணியாவது கழிக்க எண்ணியிருந்தோம், ஏனெனில் அவர் இன்னொரு அசௌகரியமான விஷ்யத்தை துறுவி பார்க்க இருக்கிறார். இன்று தப்பித்துவிட்டு நாளை ஒப்பேற்றி விடலாம் என்று நினைத்தேனே" என்று புலம்பினார். நான் அசடு வழிய வேண்டியதாயிற்று. அவர் பயந்தபடியே நடந்தது. அவ்வப்போது பத்தவச்சுட்டியே பரட்டை என்ற ரேஞ்சில் என்னை பார்த்து மானசீகமாக புலம்புவதை பார்த்தேன். விசிட்டரின் பேச்சை கவனிப்பது போன்ற முகபாவத்தை வைத்து கொண்டு அவரது பார்வையை தவிர்த்தேன்.

ஆனால் மனிதர் நல்லவர். அவரே, "நீங்கள் என்ன செய்திருக்க முடியும்? உங்களுக்குள் இருந்த பொறியாளன் சமய சந்தர்ப்பம் தெரியாது வந்து விட்டான்" என்று சமாதானமும் செய்தார். ஆனால் இதில் தமாஷ் என்னவென்றால், நான் பொறியாளன் என்பதாலேயே நான் கேட்ட தொகையை கொடுத்து என்னை நியமித்திருந்தனர். இதுதான் சொந்த செலவில் சூன்யம் வைத்து கொள்வது என்பதோ?

அன்புடன்,
டோண்டு ராகவன்

35 comments:

Anonymous said...

மிக மிக அருமையான அனுபவம் டோண்டு சார். இது போல பல கட்டுரைகளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன்.உங்களில் புரட்டி போட்ட ஒரு ஞாயிற்றுகிழமை போன்ற ஒரு கருத்துள்ள பதிவு

Anonymous said...

டோண்டு செம மூடு போல .
அந்த பழைய டோண்டுவை மீண்டும் கான்பதில் ரொம்ப சந்தோழம்.

dondu(#11168674346665545885) said...

நன்றி நெப்போலியன் மற்றும் அனானி அவர்களே. கடந்து போனவற்றை பார்த்து, அதிலிருந்து பாடம் கற்றல் நலம். அனுபவங்கள் தரும் பாடம் எந்த எம்.பி.ஏ. கோர்சிலும் கிடைக்காது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Madhu Ramanujam said...

என்ன பண்றது சொல்லுங்க. ஆர்வக் கோளாருல அப்பப்ப இப்படி ஆவாது சகஜம் தான் :).

Anonymous said...

டோண்டு அய்யா
உங்களின் முரட்டு வைத்தியம் பதிவுகளை என் வாழ்க்கையில் வெற்றிகரமாக பரிசோத்து வெற்றி கண்டவன் நான். உங்களின் இது போன்ர பதிவுகள் நாடு நரம்புகளை மெறுக்கேற செய்கின்றன்.

Anonymous said...

டோண்டு அய்யா இந்த நிலை இன்னமும் தொடர்கிறது. தமிழநாட்டில் இருக்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் பல பேர் இன்னமும் ஃபியூஸ் கூட மாற்ற தெரியாதவர்கள் தான்.

dondu(#11168674346665545885) said...

//உங்களின் முரட்டு வைத்தியம் பதிவுகளை என் வாழ்க்கையில் வெற்றிகரமாக பரிசோத்து வெற்றி கண்டவன் நான்.//

சபாஷ்.

படிப்பு விதிகளை கற்றுத் தரும், ஆனால் வாழ்க்கையோ விதி விலக்குகளை கற்றுத் தரும்

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//தமிழநாட்டில் இருக்கும் பெரும்பாலான பொறியியல் கல்லூரிகளின் ஆசிரியர்கள் பல பேர் இன்னமும் ஃபியூஸ் கூட மாற்ற தெரியாதவர்கள் தான்.//
நான் கல்லூரியில் வயரிங் பாடம் படித்ததில்லை. கேபிள் போடுவது பற்றி பாடம் வரும்போது cable laying is common sense என்று லெக்சரர் வேறு சப்ஜெக்டுக்கு தாவி விட்டார்.

ஆனால், நான் மத்தியப் பணித்துறையில் இந்த வேலைகளைத்தான் மேற்பார்வை பார்த்தேன்.

நம்ம கடல் கணேசன் போன்ற கப்பல் எஞ்சினியர்கள்தான் உள்ளே புகுந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. நாங்களெல்லாம் சூப்பர்வைஸ்தான் செய்தோம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

டோண்டுவை உலக கோப்பை இந்திய அணியில் புறக்கணித்தை கண்டித்து என் பின்னோட்டம் இங்கு இடுகிறேன்

dondu(#11168674346665545885) said...

//ஆர்வக் கோளாறுல அப்பப்ப இப்படி ஆவது சகஜம் தான் :).//
ஆனால், அதே அகர்வால்தான் இன்னொரு இடத்தில் எனது இஞ்சினியரிங் அறிவை வைத்து வந்தவரை அசத்தினார். அது பற்றி பிறகு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//நம்ம கடல் கணேசன் போன்ற கப்பல் எஞ்சினியர்கள்தான் உள்ளே புகுந்து வேலை செய்ய வேண்டியுள்ளது. நாங்களெல்லாம் சூப்பர்வைஸ்தான் செய்தோம//

ஐஐடியில் படிக்கும் பலரும் வெளிநாடு நோக்கு ஓடி போகும் போது சாதாரண இந்தியனை பற்றி யார் கவலைபடுவார்கள்.
ஐஐடி அண்ணா பல்கலைகழகம் REC(NIITE) போன்ற இடங்களில் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் கட்டாயம் குறைந்தது ஐந்து வருடமாக பணி ஆற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்,

dondu(#11168674346665545885) said...

//ஐஐடியில் படிக்கும் பலரும் வெளிநாடு நோக்கி ஓடி போகும் போது சாதாரண இந்தியனை பற்றி யார் கவலைபடுவார்கள்.
ஐஐடி அண்ணா பல்கலைகழகம் REC(NIITE) போன்ற இடங்களில் பயிலும் மாணவர்கள் இந்தியாவில் கட்டாயம் குறைந்தது ஐந்து வருடமாக பணி ஆற்ற வேண்டும் என்ற சட்டம் கொண்டு வர வேண்டும்.//

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில், ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்?

அதுவும் சப்சிடைஸ் செய்து கல்வியளித்த தாய் நாட்டை விட்டு செல்வது மனதுக்கு வேதனை அளிக்கிறது.

ஆனால் கடல் கணேசன் கதை வேறு. அவர் அழுத்த்ம் திருத்தமாக இந்தியாவிலேயே நிலை பெற்றுள்ளார். கப்பலில் வெளி நாடுகளுக்கு செல்லும்போது பல இடங்களில் கரையில் இறங்கக் கூட் முடிவதில்லை. அவரைப் போன்றவரது உழைப்புதான் உண்மையான உழைப்பு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நான் கடல் கணேசனை சொல்லவில்லை.பொதுவாக இந்த மெத்த படித்தவர்கள் இந்திய அரசாங்கதின் சலுகைகள் எல்லாம் அனுபவத்து விட்டு அயலான் நாட்டுக்காக உழைப்பது மிக மிக வருத்தம் அளிக்கும் விழயம்.
இந்திய நாட்டில் மருத்துவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சலுகைகளை இலவசமாக பெற்று கொள்கிறார்கள். ஐரோப்பாவில் இவர்களை அடித்து விரட்டுகிறார்கள். இருந்தும் சொரனை இல்லாமல் அங்கு தான் வாழ்வேன் என்று அலையும் விந்தை மனிதர்களை பார்த்தால் காலில் கிடக்கும் செருப்பை எடுத்து அவர்கள் முகத்தில் எறியகூட தோன்றலாம்.

இந்திய கிராமங்களில் மருத்துவ வசதி இல்லாத மக்கள் பலர்.

வெளிநாட்டிற்க்கு ஓடி போகும் மருத்துவர்கள் பொறியாளர்கள் இவர்கள் அனைவரையும் என்ன செய்து தடுப்பது

SP.VR. SUBBIAH said...

//மிக மிக அருமையான அனுபவம் டோண்டு சார். இது போல பல கட்டுரைகளை உங்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கிறேன்//

வழிமொழிகிறேன்.
SP.VR.சுப்பையா

கால்கரி சிவா said...

//வெளிநாட்டிற்க்கு ஓடி போகும் மருத்துவர்கள் பொறியாளர்கள் இவர்கள் அனைவரையும் என்ன செய்து தடுப்பது
//


நான் இன்ஸ்ட்ருமெண்டேஷன் படித்து விட்டு வெளியே வந்தபோது என்னுடன் சேர்ந்து இந்தியா முழுவதிலும் 300 பேர்கள்தான் வெளியே வந்தார்கள். அப்படி வந்தவர்களில் அரசாங்க வேலை கிடைத்தவர்கள் 150 பேர். மீதி இந்தியாவில் தனியார் கம்பெனிகளில் வேலைக்கு சேர்ந்தார்கள். அப்போதெல்லாம் டைரக்ட் இன்வெஸ்ட்மெண்ட் கிடையாது. ஏதாவது ஒரு வட-இந்திய மார்வாடி கம்பெனியில் கொலாபெரஷன் வைத்துக் கொண்டு வெள்ளைக்காரன் இந்தியாவில் பிசினஸ் செய்வான். என்னைப் போன்ற இஞ்ஜினியர்களை குறைந்தவிலையில் அள்ளிக் கொண்டு அவர்கள் தொழில் செய்யும் மத்திய கிழக்கு மற்றும் தூர கிழக்கு நாடுகளுக்கு போய்விடுவான். நானும் என் மார்வாடியிடம் போய் அவன் எனக்கு மாதம் 1 லட்சம் சம்பளம் தருகிறான். நீ அவ்வளவு தரவேண்டாம், நான் ஒரு சின்ன ப்ளாட் வாங்க வேண்டும் ஒரு 1 லட்ச ரூபாயை குறைந்த வட்டியில் தந்து என்னுடைய சம்பளத்தில் பிடித்தால் போதும் என்றேன்.

அதெல்லாம் முடியாது என்றான்.

மாதம் 1 பிளாட் வாங்கும் அளவிற்கு பணம் அண்ட் நம்மை மதிக்கும் கம்பெனியில் சேருவதா? இல்லை மார்வாடியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி கொண்டு இருப்பதா?

இப்போது அதே வெள்ளைக்காரன் நேராக இந்தியாவிற்கு வந்து நல்ல சம்பளம் தந்து வேலைக்கு வைத்துள்ளான்.

இந்தகால இஞ்ஜினியர்களை கேளுங்கள் எல்லாருமே இந்தியாவில் வேலை செய்வதை விரும்புவார்கள்.

மேல் படிப்பு :

இங்கே உள்ள பல்கலைகழகங்களில் உள்ள வசதியையும் வாய்ப்பையும் பாருங்கள். யாருக்குதான் ஆசை வராது இங்கே படிக்க.
நம் நாட்டில் ஐஐடி ஆகட்டும் அண்ணாவாகட்டும் வசதிகள் மிக கம்மி. அங்கே வரும் மாணவர்களின் அறிவுக்காகத்தான் அந்த கல்லூரிகளுக்கு பெயர். ஆசிரியர்களோ கல்லூரியோ அரசாங்கமோ ஒன்றும் செய்யவில்லை.

சகாயவிலையில் டிகிரி என்ற பாஸ்போர்ட் தருகிறார்கள் அவ்வளவுதான்.

Anonymous said...

so much self praising. And moreover after reading all your recent post,You yourself agreed that your handling things in an immatured way, Then I don't know how can you boast yourself for this silly things...

dondu(#11168674346665545885) said...

//so much self praising....//

You see these things as self-praise?

Worth reflecting over sir.

Regards,
Dondu N.Raghavan

dondu(#11168674346665545885) said...

//ஐரோப்பாவில் இவர்களை அடித்து விரட்டுகிறார்கள்.//
மதியாதார் வாசலை மிதியாதே என்று கூறினார் தமிழ் மூதாட்டி ஔவை (ஔவைதானே?)

ஆனால் ஒன்று, பிரிட்டனில் உள்ள இந்திய டாக்டர்களெல்லாம் திடீரென ஒரு நாள் அங்கிருந்து கிளம்பி விடுகிறார்கள் என வைத்து கொள்வொம். அங்கு செயல்பட்டு வரும் நேஷனல் ஹெல்த் படுத்து விடும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//மாதம் 1 பிளாட் வாங்கும் அளவிற்கு பணம் அண்ட் நம்மை மதிக்கும் கம்பெனியில் சேருவதா? இல்லை மார்வாடியின் கடைக்கண் பார்வைக்கு ஏங்கி கொண்டு இருப்பதா?//

மதிப்பு எங்கு கிடைக்கிறதோ அங்கு செல்ல வேண்டியதுதான். மேலும் ஒரு அளவுக்கு மேல் எல்லாமே வணிகம்தான். கம்பெனிகள் கொடுக்கும் சம்பளம், அவை நம்மை மரியாதையுடன் நடத்துவது, போன இடத்தில் பொதுவான பொருளாதார நிலை எல்லாவற்றையும் சீர்தூக்கி பார்க்க வேண்டியது அவசியமாகிறது.

என்னை எடுத்து கொண்டால் சொந்த நாட்டில், சொந்த ஊரில் என் கைகள் மற்றும் மூளையை மட்டும் நம்பி வேலை செய்கிறேன். நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வடுவூர் குமார் said...

மொழிபெயர்ப்பு சற்று கடினமான வேலை தான் அதுவும் தொழிற்நுட்பத்தை மாற்றுவேண்டுமென்றால்,அந்த அறிவு இல்லாதவர்கள் நிறையவே கஷ்டப்படவேண்டும்.
பழைய துள்ளல் தெரிகிறது--- எழுத்தில்.

dondu(#11168674346665545885) said...

நன்றி வடுவூர் குமார் அவரகளே. ஆதரிச நிலை என்னவென்றால், ஒரு பொறியியல் சம்பந்தமான கட்டுரைக்கு அந்த குறிப்பிட்ட பொறியியல் அனுபவம் பெற்ற மொழிபெயர்ப்பாளர் செய்ய வேண்டும் என்று கூறலாம். என்ன, கூடவே மொழியறிவும் நன்றாக இருக்க வேண்டும்.

ஆனால் இது காரியத்துக்காகாது. ஒவ்வொரு பொறியியல் இரிவுக்கும் அது படித்துள்ள மொழிபெயர்ப்பாளர்கள் கிடைக்க மாட்டார்களே. ஏனெனில் சாதாரணமாக மொழிபெயர்ப்பு மற்றும் பொறியியல் துறைகளில் நன்றாக பிரகாசிக்க வேண்டுமானால் இரு வேறு மனநிலை தேவைப்படுகிறது. பொறியாளர்கள் பொதுவாக மொழிகளில் அவ்வளவு தேர்ச்சியற்றவர்கள் என்ற நிலை இருக்கிறது. இது எந்த மொழி பேசுபவர்களுக்கும் பொருந்தும். நான் பார்த்த அளவில் மகா மோசமான ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு எழுத்துக்கள் பார்த்துள்ளேன்.

நான் இருப்பது ஆதரிச நிலைக்கு அடுத்த நிலை. அதாவது, மின்பொறியாளனாக இருந்தாலும் சிவில் இஞ்சினீயரிங் பேப்பர்கள் பல மொழி பெயர்த்துள்ளேன். அதுவும் ஸ்ட்ரக்சுரல் இஞ்சினியரிங் சம்பந்தமாக முழு புத்தகமே மொழி பெயர்த்துள்ளேன். கல்லூரியிலும் அது எனக்கு பிடித்த பாடம் என்பது வேறு விஷயம். பொதுவாக பொறியியல் சம்பந்தமுள்ள கட்டுரைகள் ஒரு வித ஒழுங்கில் இருக்கும். ஆகவே என்னை போன்றவர்கள் அவற்றை எளிதில் மொழிபெயர்க்க முடிகிறது.

கூடவே இருக்கின்றன தொழில் நுட்ப அகராதிகள். என்னிடம் இப்போதுள்ள அகராதிகளின் இன்றைய மதிப்பு ஒரு லட்சம் ரூபாய்களுக்கு மேல் இருக்கும்.

அதுவும் இணையம் வந்ததும் ஆன்லைன் அகராதிகள் உள்ளன. சக மொழிபெயர்ப்பாளர்களிடமிருந்து உதவி கேட்டு விரைவில், சில சமயங்களில் நிமிடங்களில், உதவி பெறலாம்.

//பழைய துள்ளல் தெரிகிறது--- எழுத்தில்.//
முதலைக்கு தண்ணீரில் பலம். அது போல என்னுடைய துறை சம்பந்தமாக நான் கூறவிருப்பது அனேகம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

fhygfhghg said...

அவுட்சோர்சிங் முறையில்

டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க

டபிள் டெசிக்னேஷனே.

வேல்யூக்களை கம்பேர்

கேஷுவலாக

cable laying is common sense என்று லெக்சரர் வேறு சப்ஜெக்டுக்கு
--------


நீங்களே இப்படி சகட்டுமேனிக்கு ஆங்கிலத்தைக் கலந்தால் நாங்கள் என்ன செய்வது மொழிபெயர்ப்பாளரே? :-)

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் வழிப்போக்கன். என்ன செய்வது, ஆசிரியர் கூறியது ஆங்கிலத்தில்தானே. அதை அப்படியே கூறுவதுதான் இந்த இடத்தில் செய்ய வேண்டும்.

சாதாரணமாக இம்மாதிரி சுருதி சேரா வாக்கியங்களை sic என்று அடைப்புக் குறிகளுக்குள் எழுதுவார்கள். அதன் பொருள் as quoted என்று வரும்.

இன்னொரு விஷயம் இதே ஆசிரியர்தான் நான் இட்ட இப்பதிவில் some unknown person has set the paper என்று கூறியவர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//-அவுட்சோர்சிங் முறையில்
-டெக்னிகல் விஷயங்களை மொழிபெயர்க்க
-டபிள் டெசிக்னேஷனே.
-வேல்யூக்களை கம்பேர்
-கேஷுவலாக//

மன்னிக்கவும் வழிப்போக்கன் அவர்களே. இந்த சொற்களை கவனிக்கவில்லை. ஏனெனில் அவற்றை வேறுமொழிச் சொல்லாக நான் பார்க்க தவறி விட்டேன். நாம் ரொம்ப இயல்பாக அவற்றை பேச்சில் குறிப்பதால் அன்னியத்தன்மை தெரியவில்லை.

நீங்கள் சொல்வதும் நியாயம்தான். எதிர்காலத்தில் அவ்வாறு நடக்காது பார்த்து கொள்கிறேன். அதற்காக இப்போது திருத்தினால், உங்கள் பின்னூட்டத்துக்கு அர்த்தம் இன்றி போய் விடும். ஆகவே எழுதியது அப்படியே இருக்கட்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

///
நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.
நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.
///

மகர நெடுங்குழைகாதன் அருளால் எவனும் கூப்பிட்டதில்லை என்பது வேறு விஷயம்.

dondu(#11168674346665545885) said...

//நான் வெளி நாடு செல்ல ஆசைப்பட்டது கூட கிடையாது.//

"மகரநெடுங்குழைகாதன் அருளால் எவனும் கூப்பிட்டதில்லை என்பது வேறு விஷயம்".

அபாரம். :))))))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

suvanappiriyan said...

உங்களைப் போன்ற அனுபவஸ்தர்கள் இது போன்ற விஷயங்களை பதிந்தால் என் போன்றவர்களுக்கு நல்ல பதிவை படித்த திருப்தி ஏற்படும். உங்களிடமிருந்து இதுபோன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.

சுவனப்பிரியன்.

dondu(#11168674346665545885) said...

நல்வரவு சுவனப்பிரியன் அவர்களே. ஹாஜியாருக்கு என் வணக்கங்களைத் தெரிவிக்கவும். மொழிபெயர்ப்பு பற்றி பேச பல விஷயங்கள் உள்ளன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

//ஏனெனில், பொது அறிவில் அவர்கள் நிலை ப்ளஸ் டூ மாணவனது நிலையாகவே இருக்கும். அதுவும் அந்த இரண்டு ஆண்டுகள் ஆர்ட்ஸ் க்ரூப் எடுப்பவர்கள்தான் சாதாரணமாக மொழிகளை கற்க செல்வார்கள். சுத்தம்.//

இங்கு அளவுக்கு அதிகமாக ஆர்ட்ஸ் படித்தவரின் திறமைகளை பற்றி குறைத்து கூறப்பட்டுள்ளது.

இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.

- ஆர்ட்ஸ் படிச்ச அறிவாளிகள் சங்கம், தென் சென்னை பிரிவு.

dondu(#11168674346665545885) said...

//இங்கு அளவுக்கு அதிகமாக ஆர்ட்ஸ் படித்தவரின் திறமைகளை பற்றி குறைத்து கூறப்பட்டுள்ளது.//
தவறாக புரிந்து கொண்டுள்ளீர்கள். மொழிபெயர்ப்பு அதுவும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய கோப்புகளை மொழிபெயர்ப்பதில் மேலே உள்ளவர்களின் திறமைகளை நான் குறைவாகவே மதிப்பிடவில்லை. ஏனெனில் அவர்களிடம் இந்த விஷயத்தில் திறமையே இல்லை என்றுதான் கூறுகிறேன். அவ்வாறாகி விட்டபோது அதில் என்ன குறைப்பது?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

maple dondo,

pada shokka kiithappaa :)

"Leer"
"Der Zug IST Klein"
continu,continu your bla..bla..

Anonymous said...

||ஏனெனில் அவர்களிடம் இந்த விஷயத்தில் திறமையே இல்லை என்றுதான் கூறுகிறேன்.||

அய்யயோவ்! யாரோ பழைய டோண்டுவ காணும் சொன்னாங்க!
இப்படி அவமானபடுத்த ஒருவரால் தான் முடியும்.
யாரும் பழைய டோண்டுவை தேட வேண்டாம்.

dondu(#11168674346665545885) said...

//அய்யயோவ்! யாரோ பழைய டோண்டுவ காணும் சொன்னாங்க!
இப்படி அவமானபடுத்த ஒருவரால் தான் முடியும்.
யாரும் பழைய டோண்டுவை தேட வேண்டாம்.//
ஆர்ட்ஸ் படித்தவர்கள் அது சம்பந்தமான விஷயங்கள் அடங்கிய கோப்புக்களை மொழிபெயர்க்கலாம். உதாரணமாக நாவல்கள். இது பற்றி நான் ஏற்கனவே பல இடங்களில் எழுதியுள்ளேன். ஆனால் என்ன செய்வது, நான் குறிப்பிட்ட இடங்களில் தொழில் நுட்ப அறிவு தேவைப்படுகிறதே.

அதுவும் வேலைக்கான தகுதிகளை பட்டியலிடும்போது தொழில் நுட்பம் அறிந்தவரை முன்னிருத்தாது மொட்டையாக எம்.ஏ. செய்திருக்க வேண்டும் என்று கூறினால் இப்படித்தான் நடக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சாமீ!! உங்கட சுய புராணம் ரெம்ப ரெம்ப தலைவலியாகப் போச்சு.
உங்களை நீங்களே புகழ்வதைப் பார்த்தா, ஜெயலலிதா தன்னைத் தானே
புகழ்வது நினைவுக்கு வருகுதப்பா. சாமீ! பார்ப்பனியர்களுக்கு இதே பொழைப்பாப் போச்சு.


புள்ளிராஜா

dondu(#11168674346665545885) said...

//உங்களை நீங்களே புகழ்வதைப் பார்த்தா, ஜெயலலிதா தன்னைத் தானே புகழ்வது நினைவுக்கு வருகுதப்பா. சாமீ! பார்ப்பனியர்களுக்கு இதே பொழைப்பாப் போச்சு.//

அடேடே, வாங்க, வாங்க. உங்களைப்பத்தி ஊரே கேட்ட கேள்வி திடீர்னு ஒரு ஹைப்பர்லிங் போல ஞாபகம் வந்து விட்டது.

ஆமா, "புள்ளி ராஜாவுக்கு எய்ட்ஸ் வருமா" என்னும் கேள்வி தமிழுலகம் முழுக்க பிரபலம் ஆனதுக்கு காரணமான் சம்பந்தப்பட்ட மொழிபெயர்ப்பாளர் பாராட்டத் தகுந்தவர். அதே போல வேறு சில வாக்கியங்கள்:

"இது என்ன புதுக் கதை"

"நீங்களும் உஜாலாக்கு மாறிட்டீங்களா"?

இம்மாதிரி வாக்கியங்கள் எல்லாம் இப்போது சுலபமாகத் தோன்றினாலும் அவற்றை உருவாக்க எவ்வளவு பாடுபட வேண்டும் தெரியுமா?

இப்படித்தான் ஐஷ்மன் வழக்கில் தீர்ப்பு சொல்லும்போது இஸ்ரவேல நீதிபதி மதிப்புக்குரிய பெஞ்சமின் ஹாலெவி (Benjamin Halevi) தீர்ப்பை படிக்கும்போது ஒவ்வொரு பத்தியையும் ஒவ்வொரு மொழியில் படித்தார் (ஆங்கிலம், ஜெர்மன், ஸ்பானிஷ்...). அதுவும் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு தாவும்போது அதை அனாயசமாக செய்தார்.

உங்கள் பின்னூட்டம் எனக்கு இதையும் ஞாபகத்துக்கு கொண்டு வந்தது. ஐஷ்மன் கேஸை பற்றி இரண்டு மூன்று பதிவுகள் போட எனக்கு நினைவளித்ததற்கு நன்றி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது