கேள்விகள் கேட்போருக்கு ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
அருண்குமார்:
1. சீனாவிற்க்கு செக் வைக்க இந்தியா அல்லது அமெரிக்கா வட கொரியாவை தூண்டி விடுகிறதா?
பதில்: அமெரிக்கா என்னவோ தூண்டிவிடும் வலிமையுடன் உள்ளது. அதன் உளவுத் துறைக்கு அதுதான் ரொடீன் வேலையே. ஆனால் இந்தியாவிடம் அதற்கெல்லாம் தேவையான ஆள்பலமோ பொருள்பலமோ இருப்பதாகத் தெரியவில்லையே.
2. பசங்க படம் பார்த்தீர்களா?
பதில்: பசங்க படமும் பார்க்கவில்லை, பாய்ஸ் படமும் பார்த்ததில்லை. என்னவோ பார்க்கத் தோன்றவில்லை. நல்லா இருக்காமா?
அனானி (அதே 32 கேள்விகள் வல்லுநர்)
1. இந்தியாவில் இனி கூட்டணி ஆட்சிகளின் தயவில்தானா இல்லை நிலமை மாறுமா?
பதில்: இப்போதைக்கு கூட்டணி கட்சிகள் ஆட்சிதான். நிலைமை மாறும் அறிகுறிகள் ஏதும் கண்ணுக்கு தெரியவில்லை.
2. இனி ராமதாஸ், வைகோ, சரத், லாலு, பாஸ்வான் நிலைமை?
பதில்: அவர்களாக விலகும்வரை அவர்களை குறைத்து மதிப்பிட இயலாது. அரசியல் என்பது ஒரு போதை மாதிரி. எனக்கு தெரிந்து மொரார்ஜி தேசாய் ஒருவர்தான் சமீபத்தில் 1979-ல் திடீரென அரசியல் சன்னியாசம் வாங்கிக் கொள்வதாகக் கூறி, பிறகு அரசியலையே திரும்பிப் பார்க்கவில்லை.
3. பள்ளிகளுக்கான தமிழக அரசின் ‘புத்தகம் பூங்கொத்து’ திட்டம் செயலாக்கம் தற்சமயம் எப்படி உள்ளது?
பதில்: திட்டம் நன்றாகத்தான் உள்ளது. அது எப்படி செயல்படுத்தப்படுகிறது என்பதுதான் முக்கியம். இது தொடர்ந்து அவதானிக்கப்படவேண்டிய திட்டம்.
4. ஆசிரியர் பட்டயப் பயிற்சி பெற்றவர்களில் மாவட்ட வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் அனைவருக்கும் வாய்ப்பிருக்கா?
பதில்: நன்றாகவே இருக்கிறது. ஆனால் அரசு எல்லா காலியிடங்களையும் நிரப்ப வேண்டும். அது பல முறை நடப்பதில்லை. ஆகவே இத்துறையில் வேலையில்லா திண்டாட்டம் என்று இருந்தால் அது செயற்கையானதே.
நான் சமீபத்தில் 1970-ல் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் எனது பெயரை பொறியாளர்களுக்கான பட்டியலில் பதிந்தபோது ஆசிரியர் பயிற்சி பெற்றவர்களுக்கு தமிழகத்தில் நல்ல டிமாண்ட் எனக் கூறினார். அதற்காக நான் இப்போது போய் B.T. எல்லாம் படிக்கவியலாது என விளையாட்டாக கூறினேன். ஆனால் அதன் பிறகு ஆசிரியர்களின் நிலையை அப்வ்வப்போது அவதானித்து வருகிறேன். தில்லியில் நான் இருந்தபோது பல ஆசிரியர்கள் டியூஷனிலேயே நிறைய பணம் அள்ளினர். கூடவே அரசு வேலை வேறு. ஆனால் அதே சமயம் முறையான பயிற்சி இன்றி வெறுமனே டீச்சர்களாக பணி புரிந்தவர்கள் கொத்தடிமை ரேஞ்சுக்கு நடத்தப்பட்டதும் நிஜம். இதனாலேயே பி.எட். படிப்புக்கு போட்டி அதிகம். அதை பயன்படுத்தி போலி பயிற்சி பள்ளிகளும் உருவாகியுள்ளன.
5. இன்றைய அதிரடி (காலை முதல் மாலை வரை) உண்ணாவிரதங்களைப் பார்க்கும்போது?
பதில்: ஒன்று செய்யலாம். உண்ணாவிரதத்துக்கு அனுமதி வேண்டுமென்றால் குறைந்தபட்சம் ஐந்து நாட்களாவது இருக்க வேண்டும் என்ற ஒழுங்கு ஏற்படுத்த வேண்டும். உண்ணாவிரதம் இருப்பவர்களை 24 மணி நேரமும் டி.வி. கேமராவின் பார்வையிலேயே இருக்க செய்ய வேண்டும். அப்போதுதான் திருட்டுதனமாக ஏதும் உண்ண இயலாது. பிறகு பார்க்கலாம் எவ்வளவு பேர் உண்ணாவிரதம் செய்ய முன்வருகின்றனர் என்று.
6. ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரைப்படி மாவட்ட கலெக்டரின் சம்பளம் ஒரு லட்சத்திற்கு ச்ற்று குறைவாமே?
பதில்: ஓ இதைத்தான் லட்சப் பற்றாக்குறை என்கிறார்களோ?
7. அமிதாப் சிவசேனை கட்சியினர் ராசியாகிவிட்டனரா?
பதில்: நான் கூகளிட்டு தேடியவரைக்கும் எல்லா செய்திகளுமே ஓராண்டு பழையன. இப்போது நிலைமை என்னவென்று புரியவில்லை. இந்த இடுகையின் முதலில் நான் விடுத்த வேண்டுகோளை பாருங்கள்.
8. புதுக் கதாநாயகர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்? ஏன்?
பதில்: விஷால். ஆனால் அவரை புது கதாநாயகன் என ஒப்பு கொள்வார்களா? கூடவே ஜீவாவையும் பிடிக்கும். அதுவும் அவர் ரொம்பவுமே க்யூட்டாக இருப்பதால். பை தி வே இருவருக்கும் ஏதேனும் உறவுமுறை இருக்கிறதா? முகஜாடை ஒத்து போகிறதே.
9. புதுக் கதாநாயகிகளுக்குள் உங்களைக் கவர்ந்தவர் யார்? ஏன்?
பதில்: இப்போதிருக்கும் கதாநாயகிகள் வருகிறார்கள், போகிறார்கள். மனதில் நிற்பதில்லை. அவர்களிடம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் எல்லாம் பல இருப்பதால் பெயரையெல்லாம் நினைவில் வைத்து கொள்வதில்லை. முன்னணி விஷயங்கள் ரெண்டும் நல்லபடியாக இருந்தால் பெயரையெல்லாம் யார் பார்க்க போகிறார்கள்?
10. புது நகைச்சுவை நடிகர்களுள் உங்களைக் கவர்ந்தவர் யார்? ஏன்?
பதில்: சந்தானம். ஒரு படத்தில் அவர் கதாநாயகியின் வீட்டுக்கு வருபவரை அவளை பெண்பார்க்க வந்தவர் என அவளிடம் குறிப்பிட்டு விட்டு, கதாநாயகியும் வந்தவர் காலை தொட்டு வணங்கி காப்பி எல்லாம் கொடுத்து உபசரிக்க, அப்போது வரும் நாசர் அவர் வீட்டுக்கார பையன் என உண்மையை போட்டு உடைக்க, அவள் கோபத்துடன் சந்தானத்தை பார்க்க, அவர் குதித்து கும்மாளம் போடும் காட்சி நன்றாக இருந்தது. படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பு. கஞ்சா கருப்புவையும் பிடிக்கும். அதுவும் போலீஸ்காரர்களை எலெக்ட்ரிக் கம்பம் ஏறுபவர்கள் (“அதுவும் இந்த அக்கா எப்படி கம்பமெல்லாம் ஏறுவாக”?), ஓட்டுநர்கள், போஸ்ட்மேன் என்று எல்லா தொழில்முறைகளையும் குறிப்பிட்டு, கடைசிவரை போலீஸ் என சரியாக ஊகிக்காமல் இருந்து உதை வாங்கும் சீன் அபாரம். இப்படத்தின் பெயரும் ப்ளீஸ்.
11. ஒகேனக்கல் பிரச்னையாக ஆளுக்கு ஆள் வேலை நிறுத்தம், கதவடைப்பு என்று செய்தார்களே இப்போது?
பதில்: இப்போது என்ன ஏதேனும் தேர்தலா வருகிறது, அது பற்றி எல்லாம் கவலைப்பட?
12. சினிமாவில் ‘சென்சார்’ இருக்கா?
பதில்: இருக்கிறது போலத்தான் தோன்றுகிறது. ஆனால் சென்னையில் சென்சார் தடுத்தால் பம்பாய்க்கு கொண்டு சென்று சான்றிதழ் வாங்குகிறார்கள் எனவும் கேள்விப்பட்டேன். அது உண்மையானால் என்ன நடக்கிறது இங்கே என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
13. வேலூர் தங்கக் கோவிலுக்கு போயிருக்கிறீர்களா? என்ன் விசேஷம்?
பதில்: போயிருக்கிறேன், ஒரு முறை. படாடோபமாக இருக்கிறது. வட இந்திய கோவிலுக்கு செல்லும் உணர்வைத் தருகிறது.
14. டெல்லி அக்சர்தாம் கோவில் மாதிரியா?
பதில்: இந்தக் கோவிலைத்தானே சொல்கிறீர்கள்? அது 2005-ல் கட்டப்பட்டது. நான் தில்லியை விட்டு 2001-லேயே வந்தாகி விட்டது. திரும்ப அங்கு போகும் ப்ரொக்ராம் எதுவும் தற்சமயம் இல்லை. ஆகவே இந்தக் கோவிலை பார்க்கும் வாய்ப்பும் இப்போதைக்கு இல்லை.
15. இவர்களுக்கு இந்த அளவுக்கு பணம் கொடுப்பது யார்?
பதில்: கருப்பு பணம் இப்படி தாண்டவமாடும் நாட்டில் இது என்ன கேள்வி? அதுவும் கோவிலுக்கு கொடுத்தால் போகிற வழிக்கு புண்ணியம் என நினைப்பவர்கள் அனேகம் பேர் உள்ளனர். அப்படி ஒரு கோவிலை உருவாக்கிய பிறகு அதை நிர்வகிப்பவர்களுக்கு பணத் தட்டுப்பாடே இருக்காது அல்லவா?
16. இந்த ஆடம்பரச் செலவினங்களுக்கு வருமான வரித்துறையின் அனுமதி வாங்கிக் கொடுக்கும் பெரிய நபர்கள் யார் யார்?
பதில்: இந்தியாவின் முக்கிய பணக்காரர்களில் பெரும்பான்மையினர் இவர்களுள் அடங்குவர்.
17. அவ்ர்களுக்கு இதில் லாபம் என்ன?
பதில்: தேன் எடுப்பவன் என்ன செய்வான் என்பதை அறிவீர்கள்தானே.
18. 10ம் வகுப்பு அரசுத் தேர்வுக்கு இனி டாட்டா இது சரியாய் வருமா?
பதில்: நான் படிப்பதற்கு முந்தைய காலத்தில் எட்டாம் வகுப்புக்கே தேர்வு இருந்து வந்திருக்கிறது. அதற்கு ESLC (Elementary School Leaving Certificate) எனப் பெயர். அதை எடுத்ததால் ஏதும் கெடுதல் நடந்ததாக எனக்கு தெரியவில்லை. என்ன சிலர் 10-வது முடிந்ததும் தொழிற்கல்விக்கு சென்றனர். அவர்கள் இன்னும் இரண்டு ஆண்டுகள் பொதுவான பள்ளிக் கல்வி முறையில் தங்கியிருக்க வேண்டும். அது கெடுதலா என்பதை அவர்கள்தான் அனுபவ பூர்வமாக சொல்ல வேண்டும்.
19. பேருந்துக் கட்டண உயர்வு பிரச்னை மீண்டும் தலைதூக்குமா?
பதில்: இன்னும் ஆட்டோ டாக்சி கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் பேருந்து கட்டணங்கள் மிகக் குறைவே. ஆகவே எவ்வளவு பேருந்துகள் விட்டாலும் கும்பல் குறையாது. ஆனால் அதிக பேருந்து விடுவார்களா என்பதுதான் சஸ்பென்சான கேள்வி.
20. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு அடுத்ததாகப் பெரிய விவசாயிகளுக்கும் கடனை தள்ளுபடி செய்துவிடுவார்கள் போலுள்ளது?
பதில்: அக்கூத்தை 2011-ல் அதிகம் பார்க்கலாம் என நினைக்கிறேன்.
21. பேசாமல் கடன் கொடுப்பதை இலவசம் என்று சொல்லிவிட்டால்?
பதில்: கடனை ஒழுங்காக திருப்பித் தருவதுதான் பொருளாதார சுழற்சிக்கு ஏதுவாக இருக்கும். எல்லாவற்றையும் இலவசமாக தந்தால் சோம்பேறித்தனம்தான் வளரும். பிறகு கடன் தரவும் பணம் இருக்காதுதானே.
22. தமிழக அரசியல் கெட்டுப் போனதற்கு முக்கிய காரணம் யார்?
பதில்: தவறு செய்யும் ஆட்சியாளர்களை தூக்கியெறியும் வாய்ப்பைத் தரும் தேர்தல் நேரத்தின்போது சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு தவறானவர்களை தேர்ந்தெடுக்கிற பொது மக்களே முக்கிய குற்றவாளிகள்.
23. இந்திய அரசியல் கெட்டுப் போனது யாரால்?
பதில்: சுயநல அரசியல்வாதிகளை இனம் காணாது மறதி திலகங்களாய் இருக்கும் பொது மக்களே முக்கிய காரணம். அதாவது தமிழ் நாடு நிலவரம் பெரிய ஸ்கேலில்
24. உலக அரசியல் கெட்டுப் போனது யார் காலத்தில்?
பதில்: உலக அரசியல் என்று தனியாக ஏதும் இல்லை. பல நாடுகளின் அரசியல் செயல்பாடுகளின் கூட்டு அவியல்தான் அது. இதில் யாரை எதற்கு பொறுப்பாக்குவது?
25. புத்தகப் பதிப்புத் துறைக்கு இப்போது நல்ல காலமா?
பதில்: எல்லா பதிப்பாளர்களும் கிழக்கு பதிப்பகம் போல சின்சியராக இருந்தால் நல்ல காலமே.
26. ப.சிதம்பரம் அவ்ர்களின் வெற்றி ஒருவேளை நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டால்,தடை செய்யப்பட்டால் அவர் என்ன் செய்ய் வேண்டும்?
பதில்: அவர் ஒன்றுமே செய்ய வேண்டாம். அவரை மற்றவர்களாகவே வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள்.
27. கருணாநிதியை நவீன பகீரதன் என்று புகழ்கிறாரே ஸ்டாலின் இது கொஞ்சம் ஓவராய் இல்லை?
பதில்: ஓவராக எல்லாம் இல்லை. எவ்வளவு முயற்சி செய்து தனது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆதாயம் செய்து வருகிறார்! இதில் அவர் பகீரதனுக்கு ஒப்பானவர்தான். ஏனெனில் பகீரதனும் தனது சித்தப்பன்மார்களது அஸ்திகளை கரைக்கவே கங்கையை கொண்டுவர அகோர தபஸ் செய்தான்.
28. அழகிரியின் செயல்பாடுகள் கொஞ்சம் வித்தியாசமாய்?
பதில்: ஆயிரம் கார்கள் உலா எல்லாம் செய்யாது எளிமையாக இருப்பதைத்தானே கூறுகிறீர்கள்? நல்ல விஷயம்தான். ஆனால் அவரது அல்லக்கைகளிடம் அவர் இன்னும் ஜாக்கிரதையாக இருத்தல் நலம். அவரது பெயரை உபயோகித்து சில்லறை பார்க்கும் வேலைகளை முளையிலேயே கிள்ளி எறிதல் நலம்.
29. பிரபாகரன் விசயத்தில் நக்கீரன் ஏன் இப்படி செய்திகளை தருகிறது?
பதில்: அதனுடைய வியாபார யுக்தி அது என வைத்து கொள்ள வேண்டியதுதான்.
30. அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் குடி நீர் கட் அரசாணை சரியா?
பதில்: நிச்சயமாக சரியில்லைதான். பணம் கட்ட மறுக்கும் ஓரிரு அபார்ட்மெண்ட்காரர்களுக்காக ஒட்டு மொத்த கட்டிடத்தையும் வெட்டுக்கு உட்படுத்துவது சரியில்லைதான். அதே சமயம் அபார்ட்மெண்ட் அசோசியேஷனே மொத்தமாக கட்டினாலும் அந்த ஓரிரு அபர்ர்ட்மெண்ட்காரர்களுக்கு சப்ளையை நிறுத்தக் கூடாது என அசோசியேஷனை மட்டும் கட்டிப் போடுவது என்ன நியாயமோ தெரியவில்லையே. அரசிடம் பவர் இருக்கிறது. வழிக்கு வராத அபார்ட்மெண்ட்காரர்களுக்கு தனியே சப்ளையை துண்டிக்கும் தொழில்நுட்ப ஏற்பாட்டை செய்யவியலும். இல்லாவிடில் பல வகைகளில் தலைவலியை உண்டு பண்ண முடியும்.
31. டாட்டாவின் ஒருவிநாடி ஒரு பைசா திட்டம் செல்பேசி துறையில் ஒரு புரட்சியை ஏற்படுத்துமா?
பதில்: இந்த சேவை பற்றி கூறுகிறீர்களா? பார்க்க நன்றாகத்தான் உள்ளது. ஆனால் ஸ்மால் பிரிண்டையெல்லாம் படித்தால்தான் ஏதேனும் முடிவாக கூற இயலும். பொறுத்திருந்து பார்ப்போம்.
32. ராமதாஸின் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை மீண்டும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தவா?
பதில்: புதிதாக என்ன கேட்டு விட்டார்? வன்னியர்களுக்கு மொத்தமாக கொடுக்கவில்லையென்றாலும் தனது மகனுக்கு மந்திரி பதவி கிடைத்தாலும் போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என இருந்து விடுவாரே.
ராம்குமார்:
1. எமர்ஜென்சி காலத்தில் அரசு அலுவகங்களில் பணிகள் வேகமாக நடந்தது என்று சொல்கிறார்களே, உண்மையில் அப்படித்தான் நடந்ததா?
பதில்: ஆரம்ப காலத்தில் வெகு சில நாட்களுக்கு அவ்வாறு நடந்தது நிஜம். ஆனால் அது பயத்தால் நிகழ்ந்தது. இந்தியா அதுவரை அனுபவித்தறியாத சர்வாதிகார ஆட்சி. எதிர்ப்பு பற்றிய செய்திகள் சென்சாரால் அமுக்கப்பட்டன. இது பற்றி நான் இப்பதிவில் இவ்வாறு எழுதியிருந்தேன். “சிலர் கூறலாம், அவசர நிலை காரணமாக ரயில்கள் எல்லாம் நேரத்துக்கு ஓடின, விலைவாசிகள் கட்டுப்பாட்டில் இருந்தன என்று. இருக்கலாம், ஆனால் இந்திரா காந்தியின் கெட்ட எண்ணத்திற்கு அவையெல்லாம் ஈடாகாது”.
ரமணா
1. கவிஅரசு கண்ணதாசன் பாடல்களில் தங்களை கவர்ந்தது எது?
பதில்: வீடுவரை உறவு, வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை கடைசிவரை யாரோ என்னும் பாடல், சமீபத்தில் 1962-ல் வெளி வந்த பாதகாணிக்கை என்னும் படத்தில் வந்து. இப்பாடலை நான் விவரிப்பதைவிட நண்பர் சுப்பையா இன்னும் நன்றாக கூறுவார்.
2. எங்கே பிராமணன் தொடர் போல பல உண்மைகள் பொதிந்த அவரது அர்த்தமுள்ள இந்து மதம் பற்றி தொடர் பதிவு எழுதும் எண்ணம் உண்டா?
பதில்: இதுவரை அவ்வாறான எண்ணம் இல்லை. என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனின் அருள் இருந்தால் முடியலாம்.
3. அவர் இலக்கியத்திருட்டு செய்து பாடல்கள் செய்தார் என்ற குற்றச்சாட்டிற்கு உங்கள் பதில் என்ன?
பதில்: ”எனது தந்தையின் பாக்கெட்டிலிருந்து பணம் எடுக்க மகனான எனக்கு உரிமை இல்லையா” என அவர் இது சம்பந்தமாக அவரிடம் கேட்கப்பட்ட போது கூறினார்.
4. கடைசிவரை கடனாளியாய் வாழந்ததற்கு முக்கிய காரணம் எது?
பதில்: காரணம் மிகவும் எளிமையானது. வரவை மீறிய செலவு, தெரியாத வேலைகளில் எல்லாம் ஈடுபட்டு கையை சுட்டுக் கொண்டது.
5. அவரது நண்பர் செல்வந்தச் சீமான் கலைஞர் கூட உதவி செய்யவில்லையா?
பதில்: கலைஞர் எல்லாவற்றையும் ஓசியில் பெறுபவர் என்பதை விளக்க அவர் ஒரு மோசமான உதாரணம் தந்தாரே படித்ததில்லையா?
6. அவரது வனவாசம் படித்துள்ளீர்களா?
பதில்: இல்லை.
7. அதில் உங்கள் நெஞ்சை தொட்ட சம்பவம் எது?
பதில்: அப்புத்தகத்தை படிக்காததால் அதை எவ்வாறு கூறிட இயலும்? இருப்பினும் தனது “அர்த்தமுள்ள இந்து மதத்தில்” வனவாச கால கட்டம் பற்றி பல இடங்களில் கழிவிரக்கத்துடன் எழுதியதை படித்துள்ளேன்.
8. கடைசியில் எம்ஜிஆரின் உதவி அரசுக் கவிஞராய் கெளரவித்தது -எப்படி யார் தலையீட்டில் நடந்தது?
பதில்: 1979 அல்லது 80-ல் இந்த நியமனம் நடந்தது என நினைக்கிறேன். இசையமைப்பாளர் விஸ்வநாதன் சிபாரிசு செய்திருப்பார் என்பது எனது யூகம். பதிவர் சுப்பையா இன்னும் சரியாக கூறுவார்.
9. கண்ணதாசன் ஒருவேளை திமுகவில் தொடர்ந்திருந்தால்?
பதில்: நடக்காத காரியம், ஏனெனில் அவரது பின்னால் ஏற்று கொண்ட ஆத்திக கொள்கைகள் அவரை அங்கு தொடர்ந்து இருக்க விட்டிராது.
10. வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் -அவர் கவிஅரசு கண்ணதாசனை எதில் விஞ்சியதால் கொடுக்கபட்டது?
பதில்: ஆட்சியில் இருப்பவரை புகழ்வதில் மிஞ்சியதால்.
அனானி (29.06.09 இரவு 10.39-க்கு கேட்டவர்)
இந்த பழமொழிகளுக்கு டோண்டு பாணியில் நக்கலாய் கலாய்க்கவும்.
1. உப்பை தின்னவன் தண்ணி குடிப்பான்
பதில்: சர்க்கரை தின்பவன் இனுசுலின் போட்டு கொள்வான்.
2. தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்
பதில்: ஆனால் தடி எடுக்காதவனோ வரி கட்டுபவன் மட்டுமே.
3. கெடுவான் கேடு நினைப்பான்
பதில்: நீ திருடன் என இறுமாந்தால் உனக்கு மேல் ஒரு பக்கா திருடன் வருவான்.
4. பேராசை பெரு நஷ்டம்
பதில்: அப்புறம் உள்ளதும் போச்சுடா நொள்ளைக் கண்ணான்னு இருக்க வேண்டியதுதான்.
5. எறும்பூர கல்லும் தேயும்
பதில்: எறும்பு என்ன, மரவட்டைகள் ஊறினாலும் கல் தேயும்தானே.
6. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது
பதில்: புயலில் கோபுரங்களே பறக்கும் போது எச்சில் இலை தன் கதி என்ன கவலைப் பட்டதாம் என்னும் சொலவடையையும் கேள்விப் பட்டுள்ளேன்.
7. இலவு காத்த கிளிபோல
பதில்: பிளேடு கம்பெனிகளில் டிபாசிட் போட்டு பனகல் பார்க் பக்கம் கூட்டம் போடுபவர்கள் நினைவுக்கு வருகின்றனர்.
8. ஊர் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்
பதில்: ஏன், கொடைக்கானல் வளர்க்காதாமா?
9. ஊர்த்தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைத்தது போல்
பதில்: ஒத்துக்கறேன், ஒத்துக்கறேன், இலவச டி.வி. கொடுப்பது கேவலமான செயல்னு.
10. கழுத்துவலி போய் திருகுவலி வந்தது போல்
பதில்: குடும்பத்துலே ஒத்தருக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தா இன்னும் நாலு பேருக்கு என்னென்ன வாங்கி தர வேண்டியிருக்கோ.
11. புலியை பார்த்து பூனை சூடு போட்டது போல்
பதில்: புலியை பார்த்து தைரியமா பூனை அதுக்கு சூடு வச்சிட்டு உயிர் தப்பிட இயலுமா?
12. சூரியனை பார்த்து நாய் குரைத்தது போல்
பதில்: எருமைப்பட்டி என்னும் ஊரிலிருந்து உள்ளூர் அரசியல்வாதி பேசியதாக விகடனில் சமீபத்தில் 1959-ல் ஒரு துணுக்கு படித்தேன். எருமைபட்டிக்காரர் கூறுகிறார், “சவால் விடுகிறேன் ஐசன்ஹோவருக்கு, என்னுடன் அமெரிக்க வெளியுறவு கொள்கை பற்றி ஒரே மேடையில் விவாதிக்கத் தயாரா”?
13. நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும்
பதில்: நாய்க்கு வாய் இருந்தால் “ஏண்டா மொட்டக்கம்னாட்டி, நானாடா உன்கிட்ட வந்து என்னை குளிப்பாட்ட சொன்னேன், எனக்கு ஜல்பு பிடிச்சா நீயாடா சோம்பேறி சாம்பிராணி புகையெல்லாம் போடப் போறேன்னு கேட்டுட்டு கடிக்குமே. அது மட்டும் பரவாயில்லையாமா?
14. ஆடத் தெரியாதவனுக்கு தெருக் கோணல் எனபது போல்
பதில்: ஆடப் போற ரோடு எப்படி இருக்குன்னு பார்க்கத்தானே கவுண்டமணி ராமராஜன் கோஷ்டி ஒரு நாள் முன்னதாகவே கனகாவின் கிராமத்துக்கு வந்ததா சொல்லிக்கிட்டாங்க.
15. உப்பில்லா பண்டம் குப்பையிலே
பதில்: அதிக உப்புள்ள பண்டமும் அதே குப்பையிலேதான். ரொம்ப கஷ்டம்டா சாமி இந்த வாழ்க்கை.
16. உப்பிட்டவரை உயிர் உள்ளவும் நினை
பதில்: அப்போ ஐஸ் கட்டிக்கு ரொம்ப நன்றியுணர்வு இருக்கணும்னு சொல்லறீங்களா?
17. கூட இருந்து குழிபறிப்பது போல்
பதில்: யாராவது இந்த வேலையையும் செய்யணும்தானே. வேலையில்லா திண்டாட்டம் அப்படி.
18. பார்த்தால் பசு பாய்ந்தால் புலி
பதில்: ஓடினால் அது என்ன? மானா?
19. பசுத்தோல் போர்த்திய புலி போல்
பதில்: அதனிடம் பால் கறக்க முயற்சிக்காமல் இருந்தால் பிழைக்கலாம்.
20. நாடறிந்த அந்தணரருக்கு பூணுல் எதுக்கு
பதில்: பூணல் இல்லையானா ஏன் இல்லை என்று எல்லோரோட கேள்விகளுக்கும் பதில் சொல்லியே அலுத்து விடுவாரே அந்த அந்தணர்.
எவனோ ஒருவன்:
1. ’மனதளவில் நான் யூத்துதான்’ என சொல்லிக்கொள்பவர்களிடம், என்னைப் போன்ற குழந்தைகள், ‘என்னடா மச்சான், சௌக்கியமா?’,’ஏ மாப்பு! என்ன ஆளையே காணோம்’, என்றமாதிரி பேசினால் ஏற்றுக்கொள்வார்களா? நீங்கள் எப்படி?
பதில்: தெரியாது. என்னிடம் யாரும் இதுவரை அம்மாதிரி கூறியதில்லை. அவ்வாறு கூறும் குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை இராது என நினைக்கிறேன். :))))
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று இருப்பேன்
-
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்று (5 டிசம்பர் 2024) மாலையில் விஷ்ணுபுரம்
பதிப்பகம் அரங்கில் இருப்பேன். வாசகர்கள் சந்திக்கலாம். சேலம் புத்தகத்
திருவிழா நவம...
34 minutes ago
25 comments:
//சீனாவிற்க்கு செக் வைக்க இந்தியா அல்லது அமெரிக்கா வட கொரியாவை தூண்டி விடுகிறதா?//
இதெல்லாம் ரொம்ப அபாண்டம்! வட கொரியா ரொம்ப நாளாவே ந்யூக்ளியர் சமாச்சாரங்களை
ரெடி பண்ணிக்கொண்டிருக்கிறது! அமெரிக்காவும் ரொம்ப நாளாவே கூவிக்கொண்டிருக்கிறது!
இதில் எப்படி அமெரிக்கா வ. கொரியாவை உசுப்ப முடியும்? ஆனால் இதில் ஒரு சந்தோஷமான
சமாச்சாரம் இருக்கிறது! சைனாவுக்கு ஆப்பு வைக்க வந்துவிட்டது வ. கொரியா! வ. கொரியா
ஸ்டேட்மெண்ட் விடும்போதெலாம் சைனாவும் "டிக்கியில் குண்டூசி குத்தின" மாதிரி புலம்புவது
இப்போது சகஜமாகிவிட்டது! மவனே, அவனிடம் (சைனாவிடம்) இருக்கும் ஒரு ட்ரில்லியன்
டாலரையும் உருவும்வரை விடக்கூடாது!
//படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பு//
படத்தின் பெயர் "ஜெயங்கொண்டான்"
//ஆயிரம் கார்கள் உலா எல்லாம் செய்யாது எளிமையாக இருப்பதைத்தானே கூறுகிறீர்கள்?
நல்ல விஷயம்தான். ஆனால் அவரது அல்லக்கைகளிடம் அவர் இன்னும் ஜாக்கிரதையாக
இருத்தல் நலம். அவரது பெயரை உபயோகித்து சில்லறை பார்க்கும் வேலைகளை
முளையிலேயே கிள்ளி எறிதல் நலம்//
எல்லாம் "தாத்தா" பதவியில் (உயிருடன்) இருக்கும்வரைதான் அவருக்கு செண்ட்ரலில் மரியாதை
(கொஞ்சமாவது) இருக்கும்! அவருக்குப் பிறகு தம்பிக்கு ஜால்ரா போட்டால்தான் பொழப்பு
நடக்கக்கூடும்! அதனால் அல்லக்கைகளை கொஞ்ச நாள் தலைமறைவாக இருக்கச்சொல்வது
அண்ணனுக்கு நல்லது!
//வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் -அவர் கவிஅரசு கண்ணதாசனை எதில் விஞ்சியதால்
கொடுக்கபட்டது?//
அப்படியே இவர்களையும் லிஸ்டில் சேர்த்துக்கொள்ளலாம்: கமல், வாலி, பா. விஜய், பல சமயம்
ரஜினி!
//எனக்கு தெரிந்து மொரார்ஜி தேசாய் ஒருவர்தான் சமீபத்தில் 1969-ல் திடீரென அரசியல் சன்னியாசம் வாங்கிக் கொள்வதாகக் கூறி, பிறகு அரசியலையே திரும்பிப் பார்க்கவில்லை. //
1977-ல் அவர்தான் பிரதமர்!. :)
@நல்லதந்தி
தட்டச்சு பிழையாகி விட்டது. 1979 என்று அடிப்பதற்கு பதிலாக 1969 என அடித்து விட்டேன். பிழையை சுட்டிக் காட்டியதற்கு நன்றி. அதை திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் -அவர் கவிஅரசு கண்ணதாசனை எதில் விஞ்சியதால் கொடுக்கபட்டது?
பதில்: ஆட்சியில் இருப்பவரை புகழ்வதில் மிஞ்சியதால்.//
கவிப்பேரரசு பட்டம் கலைஞர் கொடுத்தது. எனவே கலைஞரை புகழ்ந்ததால் கிடைத்தது என்றால் சரி, ஆட்சியாளர்களை புகழ்ந்ததால் அல்ல!
@கிச்சா
கலைஞர் அச்சமயம் ஆட்சியாளராக இருந்தார் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
from http://charuonline.com/July2009/Psycho.html
// மூன்றாவதாக போலி டோண்டு போன்ற ஆசாமிகள் வரிசையில் சேர்க்கபட்டு இந்த நபர் கைது செய்யபடுவதற்காக சைபர் கிரைம்பிரிவில் புகார் செய்ய இருக்கிறேன். //
போலி டோண்டு விவகாரம் சாரு-விற்கும் தெரிந்துள்ளதே
டோண்டு அவ்வளவு பிரபலமா ?
//கழுத்துவலி போய் திருகுவலி வந்தது போல்
பதில்: குடும்பத்துலே ஒத்தருக்கு மந்திரி பதவி வாங்கி கொடுத்தா இன்னும் நாலு பேருக்கு என்னென்ன வாங்கி தர வேண்டியிருக்கோ.//
குடும்பத்திலே ஒருத்தருக்கு மட்டும் மந்திரி பதவி வாங்கி குடுத்து ஒருத்தர் பட்ட அவஸ்தை கதையை ("விக்ரமாதித்தனும், வேதாளமும்" ) இங்கே படிங்க:
http://hereisarun.blogspot.com/2009/07/blog-post.html
போலி டோண்டு விவகாரம் சாரு-விற்கும் தெரிந்துள்ளதே
போலி டோண்டு அவ்வளவு பிரபலமா ?
போலி டோண்டு என அடிக்க வேண்டியது. டைப்போ
எரர்-ஆகி டோண்டு என வந்து விட்டது.
//விஷால். ஆனால் அவரை புது கதாநாயகன் என ஒப்பு கொள்வார்களா? கூடவே ஜீவாவையும் பிடிக்கும். அதுவும் அவர் ரொம்பவுமே க்யூட்டாக இருப்பதால். பை தி வே இருவருக்கும் ஏதேனும் உறவுமுறை இருக்கிறதா? முகஜாடை ஒத்து போகிறதே.//
விஷாலையும், ஜீவாவையும் பார்த்தால் உங்களுக்கு ஒரே மாதிரி தெரியுதா!
இல்லை ஜீவாவின் அண்ணன் ரமேஷ் பெயரைத்தான் விஷால் என்று குறிப்பிடிகிறீர்களா?
இருவருமே கலைகுடும்பத்தை சேர்ந்தவர்கள் தான்!
//முன்னணி விஷயங்கள் ரெண்டும் நல்லபடியாக இருந்தால் பெயரையெல்லாம் யார் பார்க்க போகிறார்கள்?//
பிண்ணனியும் முக்கியம் அமைச்சரே!
//பேசாமல் கடன் கொடுப்பதை இலவசம் என்று சொல்லிவிட்டால்?//
அரிசி கிலோ நூறு ருபாய்க்கு விற்கும்!
பணவீக்கம் இப்படி தான் உருவாகிறது!
//ராமதாஸின் வன்னியர் தனி இட ஒதுக்கீடு கோரிக்கை மீண்டும் ஒரு பதட்டத்தை ஏற்படுத்தவா?//
எல்லாத்துக்கும் இட ஒதுக்கீட்டில் வேலை கொடுத்துட்டு ஒழுங்கா படிச்சவனை தெருவில நிப்பாட்ட!
//உப்பில்லா பண்டம் குப்பையிலே
பதில்: அதிக உப்புள்ள பண்டமும் அதே குப்பையிலேதான். ரொம்ப கஷ்டம்டா சாமி இந்த வாழ்க்கை.//
”டச்சிங் வேர்ட்ஸ்”
//முன்னணி விஷயங்கள் ரெண்டும் நல்லபடியாக இருந்தால் பெயரையெல்லாம் யார் பார்க்க போகிறார்கள்?//
Ilamai idho idho......
//தவறு செய்யும் ஆட்சியாளர்களை தூக்கியெறியும் வாய்ப்பைத் தரும் தேர்தல் நேரத்தின்போது சில நூறுகளுக்கு ஆசைப்பட்டு தவறானவர்களை தேர்ந்தெடுக்கிற பொது மக்களே முக்கிய குற்றவாளிகள்//
Super... Nethi Adi..
//கலைஞர் எல்லாவற்றையும் ஓசியில் பெறுபவர் என்பதை விளக்க அவர் ஒரு மோசமான உதாரணம் தந்தாரே படித்ததில்லையா?//
Appadiyaa, theriyaadhey, konjam sollungalen.
//வைரமுத்துவிற்கு கவிப்பேரரசு பட்டம் -அவர் கவிஅரசு கண்ணதாசனை எதில் விஞ்சியதால் கொடுக்கபட்டது?
பதில்: ஆட்சியில் இருப்பவரை புகழ்வதில் மிஞ்சியதால்.//
Bale Bale, besh.....
//அவ்வாறு கூறும் குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை இராது என நினைக்கிறேன். //
machans NAMITHA rasigaraa?
7. அமிதாப் சிவசேனை கட்சியினர் ராசியாகிவிட்டனரா?
அமிதாப்பிற்கும் சிவசேனைக்கும் என்றும் பிரச்சினை இல்லை..மகாராஷ்ட்ரா நவநிருமாண் சேனையுடன் தான். எதிர்பார்த்த, கிடைத்த வெளிச்சத்திற்கு பிறகு பிரச்சினையை தொடர அவசியம் இல்லையே..
1.நமது பாரத தேசத்தில் உள்ள கட்சிகளின் எண்ணிக்கை 1000 த்தை தாண்டிவிட்டதா?
2.திராவிடக்கட்சிகளின் கொள்கையான சுமரியாதை திருமணங்களை அவர்களில் எத்தனை விழுக்காடு நபர்கள் கடைபிடிக்கிறார்கள்?
3.கூட்டணி பற்றி விஜயகாந்த் திடீர் மனமாற்றம் நல்ல பலனை யாருக்கு கொடுக்கப் போகிறது?
4.பாலகங்காதர திலகர், நீலகண்ட பிரம்மச்சாரி, கோபாலகிருஷ்ண கோகலே, வ.உ.சி.யெல்லாம் ஆகியோர்களின் தியாகம் சரியாய் போற்றப்படுகிறதா?நினைக்கப்படுகிறதா?
5. ஒரு ஒப்பீடு :கல்யாணத்திற்கு முன் காதலர்கள் மன நிலை , கல்யாணத்திற்குப் பின் காதலர்கள் மன நிலை?
6.இந்த வருடம் மருத்துவர் படிப்புத் தேர்வில் முற்பட்ட ஜாதியினர் 50 பேர் மட்டும்
தேர்வு எதைக்காட்டுகிறது?
7.நினைத்ததற்கெல்லாம் நீதிமன்றம்
போய் தடை வாங்குபவர்கள் பற்றி?
8.வாழ்க்கை சிலருக்கு மட்டும் எப்போதும் ஜாலியாய் எப்படி?
9.மவுனமாக உள்ள பெண்களை டோண்டு சந்தித்தால் ?
10.அரசியில்வாதிகள் அடிக்கடி கட்சி மாறுகிறார்களே ,இதில் அதிக பலன் பெற்றவ்ர் யார்?
11.ஜெயலலிதா ஆட்சியில் ஏற்பட்ட குளறுபடிகளில் மிகவும் மக்களை பாதித்தது எது?
12.இன்றையத் தமிழக அரசியலில் ஜெயலலிதாவின் அடுத்த துருப்பு சீட்டு எதுவாய் இருக்கும்?
13.மதுரைப் பகுதியில் வேலும் வாளும் விளையாடும் வீர பூமியில் பெரும் தொண்டர்களுடன் ஜெ.யிடமிருந்து க.விடம் கட்சி மாற இருப்பதாய் கசியும் தகவல்கள் பற்றி?சதுரங்க ஆட்டம் எப்படி?
14.மீண்டும் தி.அரசு ஜெ யின் தானைத்தளபதியாமே?
15.சென்னையில் ஓடும் குளுகுளு வசதிப் பேருந்துகள்-மக்களின் விமர்சனம் ?
16.பொதுவாய் பெண்கள் மிக அதிகம் பேசுவது எப்போது?
17. பொதுவாய் பெண்கள் மிகக் குறைவாய் பேசுவது எப்போது?
18.சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் மிகவும் சிறப்பாய் உள்ளது எது?
19.தந்தை பெரியாரின் கருத்துகளளில் தங்களை மிகவும் கவ்ர்ந்தது எது?
20.பெரியாரின் கருத்துகளில் உங்களால் ஜீரணிக்க முடியாதது எது?
21.பெரியார் -அண்ணா -ஒப்பிடுக?
22.காமராஜ்-ராஜாஜி -ஒப்பிடுக?
23.கலைஞர்-எம்ஜிஆர் ஒப்பிடுக?
24.அழகிரி-ஸ்டாலின் ஒப்பிடுக?
25.தமிழகத்தில் கூட்டணிக்-(1 வ்து ,2 வது,3 வது,4 வது )- கட்சிகளிடையே உறவு எப்படி உள்ளது?
26.அ.தி.மு.க.வில் அணுகுண்டு அதிரடி மாற்றங்கள் என்னவாய் இருக்கும்?
27.அன்பு மணி முயற்சியால் ராமதாசும், கலைஞரும் மீண்டும் ஒரே அணியில் சாத்யமா?
28.தமிழர் தலைவரின் மீண்டும் மாநில சுயாட்சி கோரிக்கை?
29.எக்ஸ்சேஞ்ச் ஆஃபர்- உங்கள் அனுபவம் எப்படி?
30.அரசியல் உலகில் ஒருவன் எப்போது நல்ல பெயர் வாங்க முடியும்?
31.நண்பர்களாய் இருந்து கொண்டு சமயம் வரும் போது நம்மை பற்றி துஷ்பிரச்சாரம் செய்வோரை?
32.பதிவுலகில் உங்களின் நெருங்கிய நண்பர்,தங்கள் வழி நடக்கும் சகபதிவர்,ஆதர்ச குரு,துரோகி ,நிரந்திர பின்னூட்ட ஆதரவாளர்,வால் பையன் ஆகியோரை எதிர்பாரதவிதமாய் ,உங்கள் நங்க நல்லூர் பகுதியில் சந்திக்கும் போது உங்களின் முதல் பேச்சு என்னவாய் இருக்கும்?
/
அவ்வாறு கூறும் குழந்தைகள் பெண் குழந்தைகளாக இருந்தால் கண்டிப்பாக பிரச்சினை இராது என நினைக்கிறேன். :))))
/
:))))))))))))
இந்த பழமொழிகளுக்கு டோண்டு பாணியில் நக்கலாய் கலாய்க்கவும்.
1.கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
2.பாம்பு கடிச்சி படக்குன்னு போக.
3.அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்
4.அருக்கமாட்டாதான் கையில் 58 அருவாளாம்.
5.மயிரை கட்டி மலையை இழு. வந்தால் மலை போனால் மயிர்.
6.காவிரி ஆறு கஞ்சியாப் போனாலும் நாய்க்கு நக்கித்தான் குடிக்கணும்.
7.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்
8.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்
9.அன்று குடிக்கத் தண்ணீர் இல்லை ஆனைமேல் அம்பாரி வேணுமாம்.
10.ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
11.
ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
12.ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
13.ஆனை படுத்தால் ஆள் மட்டம்
14.இட்டார் பெரியோர் இடாதார் இழி குலத்தோர்.
15.இராகு திசையில் வாழ்ந்தவனும் இல்லை
இராச திசையில் கெட்டவணுமில்லை
16.இருவர் நட்பு ஒருவர் பொறை.
17.இறைக்க ஊறும் மணற்கேணி, ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்
18.இனம் இனத்தோடே வெள்ளாடு தன்னோடே
19.இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
20இன்றைக்கு இலை அறுத்தவன் நாளைக்கு குலை அறுப்பான்.
//கலைஞர் அச்சமயம் ஆட்சியாளராக இருந்தார் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?//
கலைஞர் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரை புகழ்வதை வைரமுத்து நிறுத்துவதில்லை. மற்றவர்களை இகழ்ந்தும் பேசுவதில்லை, புரட்சித் தலைவி உட்பட. கலைஞருடன் இருந்த நெருக்கத்தால், புரட்சித் தலைவருடன் பழகும் வாய்ப்பை இழந்தேன் என்று சமீபத்தில் (இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு) சொல்லி இருந்தார். அதே போல, வளர்ப்பு மகன் திருமணத்திற்கு அழைப்பு வந்ததால் வைரமுத்து அந்த நிகழ்சியில் கலந்துகொண்டார். நானறிந்த வரையில், யாரிடமும் காழ்ப்புணர்சியில்லாமல் பழகுபவர் வைரமுத்து. வைரமுத்து மற்றும் கண்ணதாசன், இருவருமே சிறந்த படைப்பாளிகள் என்பதில் எந்த விவாதமும் தேவையில்லை என்பதே என் கருத்து. வைரமுத்துவின் கள்ளிக்காட்டு இதிகாசமும், கருவாச்சி காவியமும் தமிழின் மிகச்சிறந்த படைப்புகள். அக்கதைகளில் வரும் கதைமாந்தர்களைப் போன்றவர்களை சந்தித்தவன் என்கிற அடிப்படையில் இக்கருத்தை சொல்கிறேன். அதே போல, இளையராஜாவிற்கு இசைஞானி, கமலுக்கு கலைஞானி, வாலிக்கு காவியக் கவிஞன் என கலைஞர் பட்டங்களை வழங்கி, பட்டம் வழங்குவதிலும் தானே முதல்வன் என நிருவி இருக்கிறார்! எனவே கவிப்பேரரசு என்ற பட்டத்தில் குற்றம் இருப்பின், அது கலைஞரின் குற்றமே!
பதில்களுக்கு நன்றி
கேள்விகள்
1. ஏன் உங்கள் வாழ்க்கை அனுபவ தொடர்களை தொடராமல் நிறுத்தி விட்டீர்கள்?
2. விடுதலைபுலிகள் இனி இல்லை என்ற இந்த நேரத்தில் நமது நாடு இலங்கை பிரச்சனையில் எப்படி செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?
3.இஸ்ரேல் மீது உங்கள் பாசம் ஒரு பக்கம் இருக்கட்டும், பாலஸ்தீன பிரச்சனைக்கு எந்த பக்கமும் சாயாமல் உங்கள் தீர்வு என்ன? ( நான் தீர்வு சொல்லும் நிலையில் இல்லை என்று ஜல்லி அடிக்க கூடாது)
4.இந்த கேள்வியை உங்களை தவிர வேறு யாரிடம் கேட்க முடியாது..
தினமும் காலை 4:30 முதல் இரவு 11 30 வரை வேலை செய்கிறீர்கள். இதை போல கடின உழைப்பை செய்ய உங்களுக்கு ஊந்து கோல் எது?
5. உங்களின் போடா ஜாட்டன் பிரபலமானது.. இப்படி சொல்ல தன்னபிக்கை தேவையா அல்லது நிஜமாகவே இருதயத்தில் மாஜ்ன்சா சோறு இருக்கனுமா?
please answer the following questios with valid reason or living example
1.In tamilnadu do parents worry more about their daughters than sons?
2.Do you believe in Capital punishment?
3.LCD/plasama tv which is better?
4.what do you think about Michael Jackson death conspiracy?
5.In birth chart -if Lagna is out side then rest of planet in between rahu and ketu then it's Kalsharp or not?
1.ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தப்பித்தவர் நீதிபதியை மிரட்டிய பிரச்சனையில்?
2.இந்தத் தடவையாவது மன்மோகன்சிங்?
3.ஸோனியா அம்மையாரின் கலைஞர் மேல் உள்ள மதிப்பு இன்னும் எத்தனை தர்ம சங்கடங்களுக்கு வானவேடிக்கை காட்டி விளையாடும்?
4.கலைஞரின் அளவுக்கதிகமான இவர் மேல் கரிசனம் என்ன காரணம்?
5.மீண்டும் தயாநிதி வசம் தகவல் துறை கை மாறுமா?
6.பெட்ரோல் விலை உயர்வு எதிர்ப்பு புஸ்வானமாய்?
7.மக்களும் வாய் மூடி மெளனமாய்?
8.கேஸ்விலையை ஆயில் கம்பெனிகள் தானே உயர்த்திக்கொண்டதை பார்த்தால்?
9.கனிமொழியின் நடுவண் அமைச்சர் கனவு?
10.லாலுவுக்கு தேர்தலில் ஆப்பூ,மாயவதிக்கு சிலை வடிவில் சிக்கல்,பாஜகவில் குழப்பமோ குழப்பம்,இடது வலது இடையே குடுமிப் பிடி சண்டை வருங்கால இந்தியாவை, பண்டிட் ஜவஹர்லால் போல், எதிர்ப்பே இல்லாமல், ராகுல் வசம் அனைவரும் ஒப்ப டைப்பார்களா?
-muralikrishana
5.In birth chart -if Lagna is out side then rest of planet in between rahu and ketu then it's Kalsharp or not?
முழுமையான தெளிவான விளக்கதிற்கு திருமிகு சுப்பையா அவர்களின் ஜோதிடம் சார்ந்த பதிவுக்கு செல்ல இங்கே கிளிக் செய்யவும்
http://classroom2007.blogspot.com/
today is 06-7-2009 .after 2-07-2009 dondu's answers ?
@அனானி
இதென்ன குழந்தைத்தனமான கேள்வி. அக்கேள்விகள் 09.07.2009 தேதியிட்ட டோண்டு பதில்களில் விடையளிக்கப்படும். இதுவரை 2-ஆம் தேதிக்கு பிறகு வந்த எல்லா கேள்விகளுமே அப்பதிவில் விடையளிக்கப்பட்டு 09.07.2009 காலை சரியாக ஐந்து மணிக்கு வெளியாகும்படி முன் அமைவுகள் செய்யப்பட்டுள்ளன. அப்பதிவு தானே அச்சமயத்தில் வெளியாகும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment