கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?
எம்.கண்ணன்
1. ஜெயா செய்திகளில் (அல்லது பெரும்பாலான தமிழ் தனியார் சேனல் செய்திகளில்) 'பரபரப்பு' என்ற வார்த்தை ஒரு நாளைக்கு எத்தனை முறை உபயோகப்படுத்தப்படுகிறது ? எங்கு எது நடந்தாலும் இவர்களுக்கு அது பரபரப்புதானா?
பதில்: எண்பதுகளில் மகாபாரதம் தொலைகாட்சி சீரியல் ஒளிபரப்பப்பட்டபோது, விதுரராக வரும் பாத்திரம் “கிந்து” அல்லது “பரந்து” என்று அடிக்கடி கூறுவார். இரு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்: “ஆனால்”. அக்காலக் கட்டத்தில் சீரியல் நடக்கும்போது இரு கோஷ்டிகள் உருவாகும், அப்பாத்திரம் கிந்து என்னும் வார்த்தையை எத்தனை முறை கூறுகிறது? பரந்துவை எத்தனை முறை கூறுகிறது என்று ஸ்கோர்கள் வைத்து கொள்ளப்படும். இப்போதெல்லாம் அவற்றின் இடத்தை பரபரப்பு என்னும் சொல் பிடித்து கொண்டுள்ளது போலும்.
2. ஜெயேந்திரரின் சங்கரா டிவி பார்ப்பதுண்டா? நல்ல கோயில், ஹிந்து பண்பாட்டு நிகழ்ச்சிகள் வருகின்றனவே?
பதில்: இல்லை, பார்ப்பதில்லை.
3. ஹேமா ஆனந்ததீர்த்தன் எழுதிய கிளுகிளு கதைகள் படித்ததுண்டா?
பதில்: ஒன்றிரண்டு படித்துள்ளேன். கடைசியாக அவரும் கோவி மணிசேகரனும் சேர்ந்து ஒரு தொடர்கதை எழுதினார்கள். அது முடிவடையும் முன்னமேயே அவர் இறந்து விட்டார்.
4. ஒரு எடுத்துக்காட்டிற்கு, திருச்சியிலிருந்து மதுரை செல்ல (சுமார் 10 அல்லது 20 வருடங்களுக்கு) முன்பும் சுமார் 3 மணி நேரம் தான் ஆனது. தற்போது 4 வழி என்றெல்லாம் அகலப்படுத்தினாலும் எல்லா ஊர்களுக்கும் செல்ல முன்பைவிட அதிகநேரமே தேவைப்படுகிறது. புறப்படும் மற்றும் சென்றடையும் ஊரின் எல்லையிலிருந்து ஊர் நடுவில் இருக்கும் பஸ்ஸ்டாண்டை சென்றடைய ஒரே கசகசவென கூட்டம், ஊர்திகள் என பயணத்தையே வெறுப்படையச் செய்துவிடுகின்றனரே?
பதில்: சமீபத்தில் 1961-ல் முதன் முறையாக சென்னையிலிருந்து திருச்சிக்கு அப்போதுதான் அறிமுகப்படுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் பஸ்சில் சென்றேன். காலை 06.50க்கு சென்னையிலிருந்து புறப்பட்ட பஸ் திருச்சி ஜங்ஷன் அருகே அசோகா ஹோட்டலுக்கு போய் சேர்ந்தபோது மணி பிற்பகல் 2.50. அதாவது எட்டு மணி நேரம். டிக்கெட் 9 ரூபாய்கள். இப்போதெல்லாம் அதே தூரம் 5 மணி நேரத்தில் கடந்து விடுகிறார்கள். முக்கியக் காரணமே பைபாஸ் ரோடுகள்தான். திருச்சியிலிருந்து மதுரை செல்ல கார் மூலம் எனக்கு இரண்டு மணி நேரம்தான் எடுத்தது. பஸ்சில் சென்று அனுபவம் இல்லை. மற்றப்படி போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாதுதானே. ஆண்டுக்கு பல மடங்கு அளவுக்கு வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது, என்ன செய்ய. மக்கள் தொகை அதிகரிப்பு இன்னொரு பக்கத்தில். மேலும் தமிழகத்தின் பழைய ஊர்கள் எல்லாவற்றிலும் கட்டடங்கள் நெருக்கமாகவும், சாலைகள் அவ்வளவு அகலமாகவும் இல்லாத நிலை. சாலை ஆக்கிரமிப்புகள் வேறு. அவற்றில் வண்டியோட்டி செல்வது எப்போதுமே சள்ளையான காரியம்தான்.
5. பதிவர் சந்திப்புகளில் மீண்டும் போண்டா இடம் பெறவேண்டுமானால் அதற்கான சிறந்த இடம் எது (பதிவர் சந்திப்பு நடத்த)?
பதில்: திநகர் நடேசன் பூங்காவில் மீட்டிங் நடத்தினால் அருகில் இருக்கவே இருக்கிறது ரத்னா கஃபே. ஆனால் இப்போதைய டிரெண்ட் தண்ணி பார்ட்டிகள்தான். அதற்கும் திவ்யமான ஹோட்டல் திநகரிலேயே உண்டு.
6. உபன்யாசங்கள் கேட்கும் பழக்கமுண்டா? சமீபத்தில் யாருடைய உபன்யாசத்தை மிகவும் ரசித்தீர்கள்? (ஜெயாடிவியில் எங்கே பிராமணனின் சோவின் உப்யன்யாசத்தைக் கேட்கவில்லை :-))
பதில்: சமீபத்தில் 1956-57-ல் திருவல்லிக்கேணி பாண்டுரங்க மடத்தில் ராமகிருஷ்ண சாஸ்திரிகள் அவர்கள் நிகழ்த்திய உபன்யாசங்களுக்கு அடியேன் தவறாது ஆஜர். என் அப்பாவுக்கு நான் அம்மாதிரி போவது பிடிக்காது கோபப்படுவார். உபன்யாசத்தை விரும்பும் வயது எனக்கில்லை என்பது அவர் ஆட்சேபணை. அவருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு, அம்மாவை தாஜா செய்து விட்டு அவற்றுக்கு செல்வது எனது வழக்கம்.
7. குலாம் நபி ஆசாத் கிராமங்களுக்கு மின்வசதி செய்து டிவிபார்க்க வைத்தால் குடும்பம் கட்டுப்பாட்டில் முன்னேற்றம் ஆகும் என கூறியுள்ளாரே? இவருக்கெல்லாம் எதற்கு மந்திரி பதவி? நல்ல உருப்படியான யோசனைகள் தோன்றாதா? உங்கள் யோசனை என்ன? (மக்கள் தொகைப் பெருக்கம் கட்டுப்படுத்த)
பதில்: மந்திரி அவ்வாறு கூறியதை எங்காவது ஜஸ்டிஃபை செய்தாரா? எனக்கு புரியவில்லையே. ஒரு வேளை இப்படியிருக்கலாமோ? அதாவது, டிவியில் குடும்பக் கட்டுப்பாட்டு பிரசாரங்களை பார்த்து, கேட்டு மக்கள் நல்ல முடிவுக்கு வருவார்களாமா? டிவி கிடைத்தால் சீரியல்கள் பார்ப்பார்களா அல்லது இம்மாதிரியான பிரச்சார டிவி காட்சிகள் பார்ப்பார்களா? முதலில் இவரே அவற்றை பார்ப்பாராமா? மற்றப்படி மின்சார வசதி என்பது உடனடியாக நிறைவேற்ற வேண்டிய விஷயமே என்பதில் மாற்று கருத்து இருக்கக் கூடாது. சிறு குடும்பத்தின் பயன்கள், பெரிய குடும்பத்தில் தொந்திரவுகள் ஆகியவற்றை மக்களுக்கு புரிய வைக்க வேண்டியது முதலில் செய்ய வேண்டிய விஷயம்.
8. 108 திவ்யதேசங்களில் எவ்வளவு திவ்யதேசங்கள் தரிசித்துள்ளீர்கள் ? அனைத்து இடங்களுக்கும் செல்ல பிளான் உண்டா?
பதில்: சுமார் 75 முதல் 80 வரைக்கும் சென்றிருப்பேன். கேரளா, கர்நாடகாவிலுள்ள திவ்ய தேசங்களுக்கு சென்றதில்லை. வைகுண்டமும் திருப்பாற்கடலும் வைகுண்ட பதவி பெற்றதும்தான் செல்லவியலும். மீதி இருப்பவை 106 திவ்யதேசங்கள். பார்ப்போம்.
9. அரசியல் அறியா தமிழனின் விகடன் கடிதத்திற்கும் குமுதத்தில் வாலுபிரசாதின் கற்பனைக்கும் வித்தியாசம் இல்லையென்றாலும் கருணாநிதிக்கு விகடன்மீது மட்டும் கோபம் வருவது ஏனோ? கடந்த 2 ஆண்டுகளில், கருணாநிதி காழ்ப்பு கட்டுரைகளே அதிகம் இல்லையா?
பதில்: எரிச்சல் தரும் வகையில் கருணாநிதி குடும்ப அரசியல் நடத்தும்போது அவர்க்கு ஆதரவு கட்டுரைகளை எங்ஙனம் எதிர்பார்ப்பதாம்?
10. வருடம் முழுவதும் பாலாற்றில் (பெரும்பாலும்) தண்ணீரே ஓடாதபோது வெறும் மணல் திருட்டு மட்டுமே நடக்கும் ஒரு ஆற்றில் குறுக்கே ஆந்திரம் அணை கட்டினால் என்ன கட்டாவிட்டால் என்ன? பாலாற்றில் தண்ணீர் இருந்து யார் பார்த்திருக்கிறார்கள்? எதற்கு இத்தனை சலசலப்பு?
பதில்: உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணா என்று ஆகிவிட்டால் வேறு என்ன செய்வதாம்? மேலும் ஆந்திராவில் பாலாற்றில் தண்ணீர் உண்டு என்றுதான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அனானி (20.07.2009 மாலை 05.37-க்கு கேட்டவர்)
1. மொழிபெயர்க்க எப்படிப்பட்ட பிரதிகள் அதிகம் வருகின்றன? டெக்னிகல் தவிர வேறு எந்த வகையானவை?
பதில்: எல்லாமே டெக்னிகல் விஷயங்கள்தான். யாரும் இலக்கிய மொழிபெயர்ப்பு எல்லாம் கேட்பது இல்லை. அப்படியே கேட்டாலும் அடிமாட்டு விலைக்குத்தான் கேட்பார்கள். எழுத்தாளர் சமுத்திரம் ஒரு முறை என்னை அவரது ஒரு நாவலுக்கான ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அணுகினார். நான் கேட்ட தொகையில் கால் பங்கு கூட அவரால் தர இயலாத நிலை. ஆளை விடுங்கள் எனக் கூறிவிட்டேன்.
சில நேரங்களில் பேட்டண்ட்கள் வரும். மற்ற நேரங்களில் விஞ்ஞான கட்டுரைகள் வரும். இந்த வேலையில் அதுதான் சௌகரியம். காலை ஜெர்மனிலிருந்து ஆங்கிலம், மாலை ஆங்கிலத்திலிருந்து ஃபிரெஞ்சு என்ற ரேஞ்சுக்கு வேலைகள் மாறும். இன்று சட்ட சம்பந்தமான ஒரு கோப்பு, நாளை வங்கி சம்பந்தமான காகிதங்கள். நிரந்தரமான வேலை எனப் பார்த்தால் எனது வாடிக்கையாளருக்கு அவரது ஜெர்மானிய தொடர்புகளுடன் அவர் நடத்த வேண்டிய மின்னஞ்சல் மாற்றங்கள். விளையாட்டு போல ஒரு மின்னஞ்சல் ஜெர்மனில் வரும். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து இவரிடம் தந்தால், அவர் பதிலை ஆங்கிலத்தில் தருவார். அதை ஜெர்மனுக்கு மாற்றி அவருக்கே திருப்பியனுப்பினால் அவர் அதை ஜெர்மனிக்கு மேலே அனுப்புவார். ஆக ஜெர்மன்காரரை பொருத்தவரை எல்லாமே ஜெர்மனில் நடக்கிறது. வாடிக்கையாளரது வியாபாரம் செழிக்கும். என்னதும்தான்.
2. ஆங்கிலத்திலிருந்து பிற மொழிகளுக்குப் பெயர்ப்பது அதிகமா அல்லது பிற மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்குப் பெயர்ப்பது அதிகமா?
பதில்: பிற மொழிகளிலிருந்து ஆங்கிலம் மற்றும் தமிழுக்குத்தான் அதிகம்.
3. மொழிபெயர்ப்பு மூலம் வரும் வருமானத்திற்கு வரி கட்டுகிறீர்களா? இதை எப்படிக் கணக்கு வைத்துக் கொள்கிறீர்கள்? (சத்தியமா நான் வருமான வரி அதிகாரி அல்ல!)
பதில்: அது இல்லாமலா. இது பற்றி நான் இட்ட நபியில்லாமல் டோண்டு இல்லை என்னும் பதிவை பார்க்கவும்.
4. ஹோமியோபதி அனுபவம் உண்டா?
பதில்: அந்த வைத்திய முறையில் நம்பிக்கையில்லை. ஒரே ஒரு முறை Sharada Boiron என்ற கம்பெனிக்காக ஹோமியோபதி பேப்பர் ஒன்றை மொழிபெயர்த்து துட்டு சம்பாதித்தேன்.
5. சில அனானி கேள்விகள் நீங்களே எழுதிக்கொள்வது போலத் தோன்றுகிறதே!
பதில்: இந்த ஆறு கேள்விகளைக் கூடத்தான் அம்மாதிரி சிலர் சந்தேகிப்பார்கள். அதற்காகவெல்லாம் கவலைப்பட்டால் கட்டுமா?
6. போலி டோண்டு அப்படி என்னதான் செய்தார்?!
பதில்: எனது வலைப்பூவில் போலி டோண்டு என்னும் லேபலை அமுக்கி பார்க்கவும்.
அனானி (22.07.2009 பிற்பகல் 01.59-க்கு கேட்டது)
1) பலரும் தற்போதெல்லாம் உலக சினிமா என ஈரானிய, கொரிய, இஸ்ரேலிய (எஸ்.ரா - லெமன் ட்ரீ) சினிமா என பதிவுகள் எழுத ஆரம்பித்துவிட்டனரே ? பிரபல, மூத்த, இளைய பதிவர்கள் கூட இந்த உலக சினிமா விமர்சன மாயையில் விழுந்துகொண்டிருக்கின்றனரே? சொர்க்கமே என்றாலும் நம்மூரு சினிமா போல வருமா? வடிவேலின் வின்னர் படக் காமெடிக்கு ஈடாகுமா? உங்களுக்கு உலக சினிமா எல்லாம் பார்க்க ஆசையில்லையா?
பதில்: அதான் சொல்லிட்டீங்களே. நம்மூரு சினிமா மாதிரி ஆகுமா?
2) ஜெர்மனி/ஹிட்லர் யூதர்களிடம் நடந்துகொண்டதற்கும் இலங்கையில் ராஜபக்ஷே/கோத்தபாய தமிழர்களுக்கு செய்வதற்கும் என்ன வித்தியாசம் காண்கிறீர்கள்?
பதில்: இலங்கையில் நடந்தது உள்நாட்டு போர். அதில் ஒரு கட்சி ராணுவரீதியாக பின்னடைவை சந்தித்தது. இது எவ்வகையிலும் யூதர்களுக்கு நடந்ததுடன் ஒப்பீடு செய்ய முடியாதது.
3) தமிழ்498ஏ நடத்தும் வலைப்பதிவர் யார்? ஏன் அவருக்கு பெண்கள் மீது இந்த காண்டு? பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவியோ? உங்களையும் அடிக்கடி இழுக்கிறாரே? உங்களுக்குத் தெரிந்த நண்பரா? அவர் போடும் செய்திப் பதிவுகளில் உண்மை இருந்தாலும், இதையே தேடித்தேடி பதிவுகள் போடுவது விழிப்புணர்வுக்காகவா இல்லை ஆற்றாமையா?
பதில்: அவருடன் எனக்கென்ன வாய்க்கால் வரப்பு தகராறா என்ன? செக்ஷன் 498-ஏ தவறாக உபயோகம் ஆகிறது என்கிற ஆதங்கம் அவருக்கு. நியாயமான ஆதங்கமே என்பதை நான் முதற்கண் ஒத்து கொள்கிறேன். ஆனால் அதற்காக அவர் செய்யும் அலம்பல்களால் அவர் சொல்ல வருவது எல்லாமே நீர்த்து போகின்றன என்பதுதான் எனது வாதம்.
உதாரணத்துக்கு எனது ஒரு தவறு இன்னொரு தவற்றை நியாயப்படுத்தாது என்னும் தலைப்பில் நான் இட்ட இப்பதிவையே தருகிறேன்.
செக்சன் 498-A சம்பந்தமாக வரும் வழக்குகளில் பல அந்தப் பிரிவை துர் உபயோகம் செய்தே போடப்படுகின்றன என்ற கான்சப்டில் போடப்பட்ட இப்பதிவில் நான் இட்ட பின்னூட்டத்தை இங்கு இடுவதற்கு முன்னால் அப்பதிவைப் பற்றி ஒரு அறிமுகம்.
முக்கியமாக வரதட்சணைக் கொடுமை மற்றும் பெண்கள் படும் மன உளைச்சலுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட இப்பிரிவை பலர் துர் உபயோகம் செய்வதையும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அதை பற்றி எல்லோருக்கும் சரியான பிரக்ஞையையும் உருவாக்கல் வேண்டும்தான். அதிலும் மாற்று கருத்துக்கு இடம் இல்லை. ஆனால் நான் மேலே குறிப்பிட்டப் பதிவில் அந்த காரியத்தை முரட்டுத்தனமாக செய்ய நினைப்பதுதான் வெளியே தெரிகிறது.
இப்போது அப்பதிவில் கூறப்பட்ட செய்தியையும் எனது பின்னூட்டத்தையும் பார்ப்போம்.
முதலில் பதிவின் சில பகுதிகள்:
“திருநெல்வேலியைச் சேர்ந்த பவானி என்னும் 38 வயதுள்ள இந்து, தமிழ், பிராமின், ஐயர் பெண்மணிக்கு, ஜெண்டிலான, ஒத்துப் போகக்கூடிய, கடவுள் பக்தியுள்ள, அட்ஜஸ்ட் செய்யக்கூடிய, குடும்பப் பாங்கான கணவன் வேண்டுமாம். “மேரே ஜீவன் சாத்தி" என்னும் வலைத்தளத்தில் தன் ஃபோட்டோவையும் போட்டு விளம்பரம் கொடுத்துள்ளாள். அவளைப் பற்றி அந்த விளம்பரத்தில் கொடுத்துள்ள விவரத்தைக் காணுங்கள்:-
“அவளுடைய சொந்த பிசினஸ் நன்கு நடந்து வந்த வேளையில் திருமணம் நடந்தது. பிறகு மணவாழ்விலிருந்த பிரச்னையால் பிசினசைக் கவனிக்க முடியவில்லை.
விவாகரத்து பெற்ற அவள் இனி பிசினசை பெருக்கி நடத்தவோ, அல்லது வேறு வேலை பார்க்கவோ, அல்லது வீட்டு வேலை பார்த்துக்கொண்டு வீட்டோடு இருக்கவோ ரெடி. இயல்பில் அவள் மிகவும் ஒத்துப் போகக்கூடிய, புரிந்து கொண்டு அனுசரிக்கக் கூடிய,அக்கரையுடன் நலம் பேணக்கூடிய, குடும்பப் பாங்கான, கடவுள் பக்தியுள்ள, அனைத்து குடும வேலைகளும் தெரிந்த நல்ல பெண்."
சரி. அடுத்து அவள் கொடுத்திருக்கும் தன் "நல்ல குணங்களை"ப் பற்றிய சான்றுகளைப் பாருங்கள்:-
"அவளுடைய முந்தைய திருமணம் முறிந்ததற்குக் காரணம் அவளுடைய பொறுப்பற்ற, அக்கறையற்ற கணவன்தான். அவனும் அவனுடைய குடும்பத்தினரும் மிகவும் கொடுமைப் படுத்தினார்கள்.
மிகுந்த போராட்டத்திற்குப் பிறகு "இருவரும் ஒப்புதலளித்த" (Mutual consent) விவாகரத்து நிகழ்ந்தது. 2002-ல் கணவனிடமிருந்து பிரிந்தவள் 2004-ல் விவாகரத்து பெற்றாள்.
முந்தைய கணவனுக்குப் பிறந்த குழந்தையைப் பார்க்க அதன் தந்தைக்கு எந்த உரிமையும் இல்லை. அவனுடன் எந்த தொடர்பும் என் குழந்தைக்கு நான் அனுமதிக்கவில்லை. அந்தக் குழந்தையைப் பொறுத்தவரை தன் தந்தை யார் என்பதே அவளுக்குத் தெரியாது. தந்தை என்று ஒரு உறவு உள்ளது என்பதே அவளுக்குத் தெரியாமல் அவள் வளர்க்கப்பட்டுள்ளாள். ("As far as the child is concerned, she has no idea who her father is, and has never been made aware of fatherhood.")"
எப்படிப் போகிறது கதை! நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராளமான பணத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெறிருப்பாள்”.
பதிவர் வெறுமனே விளம்பரத்தைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார். ஒரு பெண்மணியை மரியாதையாகக் கூட குறிப்பிடாது அவள் என்று ஒருமையில் கூறியுள்ளார். இந்த காண்டக்ஸ்டில் அவர் என்று சொல்லக்கூட மனம் இல்லை. மேலும் அப்பதிவில் தரப்பட்டுள்ள சுட்டிக்கு போனால் இவ்வாறு கூறப்பட்டுள்ளது: “The natural father of the child does not have any visiting rights at all, nor any other contact (maintenance, alimony, or any other right over the child)”. ஆக ஜீவனாம்சமோ, பராமரிப்புக்காகவோ முந்தைய கணவனிடமிருந்து ஒரு தொகையும் பெற்றதாகத் தெரியவில்லை.
அதைவிட மோசமான விஷயம் என்னவென்றால் அப்பெண்ணின் முழு அடையாளங்களையும் தரும் சுட்டியையும் தருகிறார். இதைத்தான் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அப்பெண்மணியை பற்றி ஒருவிஷயமும் தெரியாது அனுமானங்களின் அடிப்படையில் இவர் எழுதியிருப்பது பொறுப்பற்ற அவதூறு என்பதைத் தவிர வேறு எதுவும் கூற இயலவில்லை. இப்போது எனது பின்னூட்டத்துக்கு வருவோம்:
“//நிசசயம் அவள் Sec 498A of IPC, மற்றும் என்னென்ன சட்டங்கள் உண்டோ எல்லாவற்றைய்ம் அந்தக் கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர்கள் மேல் போட்டுத் தாக்கி, ஏராள பனத்தைய்ம் கறந்து கொண்டு விவாகரத்து பெற்றிருப்பாள்//.
இதுதான் உண்மையா அல்லது உங்கள் அனுமானமா? இந்த கேஸ் பற்றி ஏதேனும் தனிப்பட்ட முறையில் தகவல் தெரியுமா? தெரியாது என்றால் இவ்வாறு எழுதுவது என்ன நியாயம் என நினைக்கிறீர்கள்”?
அதற்கு அவர் தரும் சப்பைக்கட்டு பதில்:
“ஒரு குழந்தைக்கு அதன் தகப்பனை கண்ணிலோ கருத்திலோ காண்பிக்காமல் தந்தை என்று ஒருவன் இருக்கிறான் என்பதே தெரியாமல் அவளை வளர்த்துள்ளேன் என்று ஒரு தாய் பெருமையாக அறைகூவுவது உங்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. ஆனால் அந்தப் பெண் தந்துள்ள விவரங்களின் அடிப்படையிலும், அன்றாடம் ஆயிரக்கணக்காக இது போன்று பொய் வழக்குகளைப் போட்டு காசு பிடுங்கி mutual consent divorce பெறும் நிகழ்வுகளாலும் இது ஒரு steriotype என்று உரைத்தால் "ஆதாரம் எங்கே" என்று கேட்கிறீர்கள். இதுதான் typical faminiazi attitude. இது போன்ற அணுகுமுறைதான் இப்போது நம் நாட்டு இளைஞரிடையே திருமணம் என்றாலே ஒரு வெறுப்பைத் தோற்றுவிக்கும் நிலைக்குக் கொணர்ந்துவிட்டது.
உங்களுக்கு நான் சொல்வது முழுதும் புரிய வேண்டுமெனில் ஒரு நாள் சென்னையிலுள்ள family court-க்கு சென்று பாருங்கள் அல்லது http://mynation.net/ , http://saviindianfamily.org/ போன்ற வலைத்தளங்களுக்குச் சென்று பாதிக்கப்பட் கணவர்கள் மற்றும் அவர்களுடைய வயதான தாயார் ஆகியோரது புலம்பல்களைக் கேளுங்கள்”. அதற்கு எனது பதிலை இங்கே தருகிறேன். “நீங்கள் ஆயிரம்தான் சொன்னாலும் இந்த கேஸை பொருத்தவரை உங்களுக்கு உண்மை விவரம் ஏதும் தெரியாமல் இப்படித்தான் நடந்திருக்கும் என்று எழுதுவது கண்டிப்பாக தவறுதான். பல தவறான உதாரணங்களை எவ்வளவு நீங்கள் பார்த்திருந்தாலும் இந்த ஒரு விஷயத்தில் நீங்கள் தவறியது தவறியதுதான்.
அதிலும் அவருக்கு பார்ப்பனர்களை கண்டாலே உடலில் எல்லா இடங்களிலும் எரிகின்றது. ஆனால் சம்பந்தப்பட்ட பெண் கிறித்துவராகவோ அல்லது வேறு மதத்தவராக இருந்தாலோ, அல்லது பார்ப்பனர் இல்லாத வேறு ஏதாவது சாதியாக இருந்தாலோ அப்போது மட்டும் ஒன்றுமே கண்டு கொள்ளாது கமுக்கமாக வெறுமனே பெயரை மட்டும் கூறுவார். நான்கைந்து பதிவுகளில் அவருக்கு இதை நான் சுட்டிக் காட்டிய பிறகு, மற்றவரும் என்னுடன் சேர்ந்து எழுதிய பிறகு இப்போதெல்லாம் அடக்கி வாசிக்கிறார்.
எனது ஆட்சேபணை எல்லாம் இதுதான். இந்த செக்ஷன் 498ஏ துர் உபயோகம் ஆவதை மட்டும் காட்டினாலே போதும். தேவையின்றி தனது சொந்த விருப்பு வெறுப்பையெல்லாம் திணிக்க ஆரம்பித்தால், “இது ரத்த கொதிப்பு கேஸ்” என்று எல்லோருமே அலட்சியப்படுத்துவதுதான் பலன் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். சகட்டுமேனிக்கு மனைவியின் தரப்புதான் தவறு செய்கிறது என அடிப்படையே இல்லாமல் பேசக் கூடாது.
பூனைக்கு யார் மணி கட்டுவது எனத் தெரியவில்லை. அதிருக்கட்டும், அவருக்கு நான் லேட்டஸ்டாக இப்பதிவில் பின்னூட்டமிட்டுள்ளேன். அவரது எதிர்வினை சுவாரசியமானது. நீங்களே பாருங்களேன்.
மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று விஷ்ணுபுரம் பரிசளிப்பு விழா! வருக!
-
விஷ்ணுபுரம் விருது இன்று கோவையின் பண்பாட்டு அடையாளங்களில் ஒன்றாக
ஆகியுள்ளது. தமிழின் தலைசிறந்த இலக்கிய விருதாகவும் இது கருதப்படுகிறது. இந்த
விழாவில் கலந்து...
6 hours ago
13 comments:
போனவாரம் கேட்க எண்ணிய 32 கேள்விகள்.
1.தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்?
2.இக்காலத்த்ல் பெண்களுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?
3.மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?
4.மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
5.முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது பெஸ்ட்?
6.முழுநேரச் செய்திப் பிரிவு டீவிகளில் எது ஒர்ஸ்ட்?
சென்னையில் பாடிகாட் முனீஸ்வரர் கோவில் என்று ஒன்று உள்ளது.நடிகர் விவேக் புண்ணியத்தில் தற்சமயம் தமிழகம் முழுவதும் அறிந்த முனீஸ்வரராகி விட்டார்.ஏன் அவருக்கு "பாடிகாட் முனீஸ்வரர்" என்ற பெயர் வந்தது என்று ஒரு வாசகர் திரு.டோண்டு ராகவன் அவர்களிடம் கேள்வி கேட்டு இருந்தார்.அதற்கு திரு.டோண்டு "முனீஸ்வரர்தானே நம் அனைவருக்கும் பாடிகாட்" என்று சொல்லி தனக்கு சரியான பதில் தெரியாதை அழகாக சமாளித்துவிட்டார். கூவத்தின் வடக்குக்கரை பகுதி,அண்ணா சாலையின் மேற்குப் பகுதி,பல்லவன் சாலையின் தெற்குப் பகுதி, சென்ட்ரல் ஜெயிலின் கிழக்குப் பகுதி என இந்த நான்கு எல்லைகளுக்கு இடைப்பட்ட பகுதி பிரிட்டீஷார் காலத்தில் கவர்னரின் பாதுகாப்புப் படையினர் பறிற்சி பெறும் தளமாகவும், அவர்கள் தங்கும் குடியிருப்பாகவும் பயன்படுத்தப்பட்டது. கவர்னர் பாடிகாட் ஏரியா என்று அழைக்கப்பட்ட அந்தப் பகுதியில் செட்டிலான முனீஸ்வரர் "கவர்னர் பாடிகாட் ஏரியா முனீஸ்வரர்" என்று அழைக்கப்பட்டு காலப்போக்கில் "பாடிகாட் முனீஸ்வரர்" ஆகிவிட்டார். ஹிந்து மதநம்பிக்கையாளர்களுக்கு திரு.டோண்டு சொன்ன பதிலும் பொருத்தமானதே. எல்லாம் சரி...இதை இங்கு எழுதுவதற்கு பதிலாக அப்போதே அங்கு பின்னூட்டத்தில் சொல்லி இருக்கலாமேன்னு கேக்குறீங்களா?? அவனவன் எழுத மேட்டர் கிடைக்காம அலையுற அலைச்சல் உங்களுக்கு எங்க புரியும்!
7.துன்பத்தில் பெரிய துன்பம்?
8.இன்பத்தில் பெரிய இன்பம்?
9.பேரின்பம் எது?
10.தாய், தாரம் இவர்களில் யாருடைய அன்பு நமக்கு அதிகம்?
11.பெண்களுக்கு அதிக செல்லம் கொடுப்பது சரியா?தவறா?
12.மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன வித்தியாசம் ?
13.மனிதனுக்கும் மிருகத்திற்கும் என்ன ஒற்றுமை?
14. உலகில் நிம்மதியாக இருப்பவர்களில் யாராவது குறிப்பிடுங்களேன்?
15.கோயிலே கதியென்று இருக்கும் பெண்களைப் பற்றி உங்கள் விமர்சனம்?
16.கம்யூனிஸ்டுகள் அணுஒப்பந்தத்தில் இபோதைய நிலை ?
17.சென்னையில் குடியிருப்பு என்றாலே அது குப்பைக்கூளங்களின் மேடு என்றாகி வருவது பற்றி?
18. பொதுவாய் இன்று காதலர்கள் பெருகிவிட்டார்களே?
19.நிறைவேறாத சின்ன ஆசை ஏதும்?
20.மனைவியை இழந்த ஆண்களைவிடக் கணவனை இழந்த பெண்கள் மனநிம்மதியோடு இருக்கிறார்கள் என்கிற சமீபத்திய ஆய்வு பற்றி?
//உபன்யாசத்தை விரும்பும் வயது எனக்கில்லை என்பது அவர் ஆட்சேபணை. //
உபன்யாசம் என்றால் என்ன?அதற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்!
1956-57-ல் நீங்கள் ஒன்றும் குழந்தை இல்லையே!
//போலி டோண்டு அப்படி என்னதான் செய்தார்?!//
அமைதியா இருந்த டோண்டுவ பிரபலமாக்கிவிட்டார்!
//நம்மூரு சினிமா மாதிரி ஆகுமா? //
நம்மூரில் நூத்தல ரெண்டு நல்லாயிருக்கும்!
அங்க நூத்துல ரெண்டு மொக்கையாயிருக்கும்!
என்ன ஆனாலும் நாம மொக்கைய தானே பார்ப்போம்!
சிறுசா இருக்குன்னு 489ஏ மேட்டர காப்பி பண்ணி போட்டிங்களா?
தாவூ தீருது!
/உபன்யாசம் என்றால் என்ன?/
ஒரு நம்பிக்கையை விளக்கக் கதையாகச் சொல்லப் படுவது உபன்யாசம்
/அதற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்!??/
சம்பந்தம் இல்லைதான்! ஆனால், எல்லா நேரமும் இப்படிச் சீனி வெடி,சரவெடி வெடிக்கக் கூடாது, இல்லையா:-))
///உபன்யாசம் என்றால் என்ன?/
ஒரு நம்பிக்கையை விளக்கக் கதையாகச் சொல்லப் படுவது உபன்யாசம் //
அதாவது அவரது நம்பிக்கையை நம்மை நம்ப வைப்பது! அதற்காக உணர்ச்சி பூர்வமாக கண்ணிர்விட்டு கதை அளப்பது!
அப்படித்தானே
///அதற்கும் வயதிற்கும் என்ன சம்பந்தம்!??/
சம்பந்தம் இல்லைதான்! ஆனால், எல்லா நேரமும் இப்படிச் சீனி வெடி,சரவெடி வெடிக்கக் கூடாது, இல்லையா:-)) //
இப்பவே இந்த வெடி வெடிக்கிறேனே! வயசானா அணுகுண்டு, ஆட்டாம்பாமெல்லாம் வெடிக்கமாட்டேனா!
எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க மக்களே!
21.வைகோ எப்படியிருக்கிறார்?
22.ராமதாஸின் அடுத்த மூவ் ?
23.ஒகேனக்கல் திட்டம் என்னாச்சு?
24.விஷமாய் விலைவாசி உயர்வுகளைப் பற்றி?
25.அடுத்து அ.இ.அ.தி.மு.க., ஆட்சிக்கு வருவது சாத்யமா?
26.இன்றைய காலகட்டத்தில் பத்திரிகை ஆரம்பித்தால் ?
27.கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் கவாந்த பேச்சு?
28.கலைஞரின் சமீபத்திய பேச்சில் தங்களைக் வெற்ப்பேற்றிய பேச்சு?
29.மணல் வியாபாரத்தில் தி.மு.க.வின் நிலைப்பாடு பற்றி?
30.நடுத்தரவாசிகள் நிறைய செலவு செய்வாதாய் வரும் செய்திகள் பற்றி?
31.பெட்ரோல் விலை குறைக்கப்படுமா?
32.திருவள்ளுவர் சிலை திறப்பு கர்நாடகத்தில் வெற்றி யாருக்கு?
-தொடரும்.
கேள்வி 11,12 க்குப்பதில் இந்தக் கேள்விகள்(questions repeated)
11.நடப்பதெல்லாம் நன்மைக்கே’ என்று எண்ணுபவர்கள் பற்றி?
12.தியாகராஜ பாகவதர்,என்.எஸ் க்ருஷ்ணன, இவர்களின் வீழ்ச்சி யாரால்,எதனால் ஏற்பட்டது?உண்மை என்ன?
இந்த சுட்டிக்கு தங்கள் பதில் என்ன?
http://oviya-thamarai.blogspot.com/2009/07/blog-post.html
@பிஸ்வா
ஏற்கனவே அவருக்கு எனது ஒரிஜினல் பதிவில் பதிலளித்து விட்டேன்.
அப்பதிவின் அடிநாதத்தை புரிந்து கொள்ள இயலாமல்/விரும்பாமல் இருப்பவர் போடும் எதிர்பதிவுக்கு எல்லாம் நான் எதிர்வினை தந்து கொண்டிருக்க முடியாது. அதற்கான நேரத்தை ஒதுக்கிக் கொள்ள விருப்பமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment