பழமைபேசியின் எகத்தாளம் பற்றிய பதிவு
பழமைபேசியின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். முக்கியமாக அவர் வயல்நாய் பேச்சி பற்றி எழுதிய இப்பதிவு. மேலே குறிப்பிட்ட எகத்தாளம் பற்றிய பதிவில் குறிப்பிட்டுள்ள நிகழ்ச்சிகள் சுவாரசியமானவை. அவை என் நினைவுகளையும் தூண்டிவிட்டன.
நான் சமீபத்தில் 1956-57 கல்வியாண்டில் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படித்தபோது சாய்நாத் பிரசாத் என்னும் சிறுவன் ஒரு கேள்வி கேட்டானே பாருங்கள். எங்கள் நீதிநெறி வகுப்பில் ராமாயணக் கதையை சொல்லி வந்தார்கள். அதில் விஸ்வாமித்திரர் ராமரை தனது யாகத்தைக் காப்பதற்காக அழைத்துச் செல்லும் கட்டத்துக்கு சற்று முன்னால் கதை இருந்தது. ராமருக்கு 16 வயது முடிந்தது என ஆசிரியர் கூறினார். சாய்நாத் பிரசாத் எழுந்து நின்று பவ்வியமாக கையைக் கட்டிக் கொண்டு கீழ்க்கண்டவாறு கேட்டான்.
சாய்நாத்: சார், ராமரோட சீதை ஒரு வயது பெரியவங்கன்னு சொல்ல்றாங்களே?
ஆசிரியர்: ஆமாம் அப்படியும் சிலர் கூறுவது உண்டு.
சா: அப்படியான்னா சீதை கல்யாணத்தின்போது அவங்களுக்கு 17 வயது?
ஆ: ஆமாம்
சா: கல்யாணத்துக்கு பிறகு 12 ஆண்டுகள் அயோத்தியில் இருந்திருக்காங்க. அதுக்கப்புறம்தான் வனவாசம்.
ஆ: ஆமாம்
சா: அப்புறம் காட்டுல 13 ஆண்டுகளுக்கு அப்புறம்தான் ராவணன் வந்து சீதையை அபகரித்துச் சென்றான்.
ஆ: ஆமாம்.
சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்?
சாய்நாத் பிரச்சாத் பெஞ்சு மேல் ஏற்றப்பட்டு உதை வாங்கினது வேறு கதை.
தமிழில் இரண்டாவது புதினமான கமலாம்பாள் சரிதத்தில் ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்போம் (1880-களில் வெளிவந்த நாவல்). அதில் ஆடுதாபட்டி அம்மையப்பிள்ளை நளவெண்பா பாடம் எடுக்கிறார். அதில் நிடதநாட்டுச் சிறப்பைக் கூறும் ஒரு வெண்பாவில் பெண்கள் சந்தனம் தேய்த்து குளிக்க, சந்தனக் குழம்பு எல்லாம் தெருக்களில் ஓட அவற்றில் சென்ற யானைகளும் வழுக்கி விழுந்தன என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதை படித்த அம்மையப்பப்பிள்ளை பரவசம் அடைகிறார். “அடாடா எப்படிப்பட்ட ஊர். நம்ம ஊரும் இருக்கே”.
போக்கிரிமுத்து என்னும் மாணவன் வினயமாக கேள்வி கேட்கிறான், “ஐயா, யானைகளே அப்படி வழுக்கி வீழ்ந்தால் மனிதர்கள் கதி என்ன”?
ஆசிரியர் கூறுகிறார், “நம்ம ஊர் மாதிரி தரித்திரம் பிடிச்ச ஊரா? எல்லோரும் பல்லக்கில் அல்லவா செல்வார்கள்”?
போக்கிரிமுத்து விடவில்லை. “ஐயா, பல்லக்குதூக்கிகள் மட்டும் வழுக்கிவிழமாட்டார்களா”? என்று கேட்கிறான்.
அம்மையப்பபிள்ளை மேலே கூறுகிறார், “இப்படியெல்லாம் விதண்டாவாதம் செய்யக்கூடாது. இப்பாடலிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால், நிடதநாட்டில் சந்தன மரங்கள் அபரிதமாக இருந்தன”.
போக்கிரிமுத்துவின் முடிவுரை, “அவ்வூரிலும் பெண்கள் இருந்தார்கள். அவர்களும் குளித்தார்கள்”.
வாத்தியார்களுக்கு செல்லப் பெயர்கள் - விசு டோண்டு ராகவனை கண்டித்த கதை
எகத்தாளம் என்றதும் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் வைக்கும் நிக்நேம்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. பலருடைய உண்மைப் பெயர்களே தெரியாமல் போய்விடும். சமீபத்தில் 1998 கடைசியில் டைரக்டர் விசு அவர்கள் தயாரித்த குமுதம் இதழில் அவர் தான் திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளீயில் படித்தது பற்றி எழுதியிருந்தார். அவர் சொன்ன நிகழ்வுகளை படித்ததும் அவர் நான் படித்த நாளிலேயே அப்பள்ளிக்கூடத்தில் படித்தார் என்பதை அறிந்தேன். முக்கியமாக விசு என்னுடன் 9-ஆம் வகுப்பில் படித்த விஸ்வநாதனாக இருப்ப்பாரோ என சம்சயம். விஸ்வநாதனுக்கு பருப்புக் குசு என்ற நிக்நேமும் உண்டு.
ஆகவே 1999 ஜனவரியில் சென்னைக்கு சொந்தவேலையாக வந்தபோது அவரது டெலிஃபோன் நம்பரைக் கண்டுபிடித்து அவருடன் தொடர்பு கொண்டு அவர் எந்த ஆண்டு SSLC பாஸ் செய்தார் எனக் கேட்க அவர் 1961 என்றார். நான் 1962-ல் பாஸ் செய்ததால் அவர் பருப்புக் குசுவாக இருக்க முடியாது என முதற்கண் நிச்சயம் செய்து கொண்டேன். ஆகவே அதை குறிப்பிடாது என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு மேலே பேச ஆரம்பித்தேன். எனக்கு பள்ளியிறுதி வகுப்பில் அப்ரஹாம் லிங்கன் தமிழ் வகுப்பு எடுத்தார் எனக் கூற, விசு சீறலோடு என்னை இடைமறித்தார். “சார் அவர் பெயர் ராஜகோபால்” என்று. பிறகு ஒன்பதாம் வகுப்பில் “தோசிதான் எனக்கு சமூகவியல் பாடம் எடுத்தார்” எனக்கூற, “ஐயோ என்ன சார் இது, அவர் பெயர் பாஷ்யம் ஐயங்கார்” என்றார். பிறகு நான் மற்ற ஆசிரியர்களான பஞ்சர் (கிருஷ்ணமூர்த்தி), சித்ரா (ரகுநாதன்-ஸ்கூல் நாடகத்தில் பெண்வேஷம் போடுபவர்), பறக்கும்பாப்பா, வைஜயந்திமாலா, சீட்டா (சுப்பிரமணியம்), மசால்வடை (ஸ்ரீனிவாசன்) ஆகியோரை குறிப்பிட, “சார் ரொம்ப கெட்டுப் போயிட்டீங்க. இப்படியா ஆசிரியர்களை அழைப்பது” என நொந்து போனார். அவர்கள் உண்மையான பெயர்கள் தெரியாது என்றும், அவர்களை அவமதிக்கும் எண்ணமே எனக்கு இல்லை என்றும் அவரை சமாதானப்படுத்த வேண்டியிருந்தது. கடைசியில் தயங்கியவாறே எங்கள் டிராயிங் வாத்தியாரை செல்லப் பெயரைக் கூறி அவர் உண்மைப் பெயரைக் கேட்க, அவர் திருஞானம் என்றார் (மோசமான செல்லப் பெயர் அது; இங்கு வேண்டாம்).
திருவல்லிக்கேணியில் நான் படித்த அதே காலகட்டத்தில் இன்னும் இரு பள்ளிகள் இருந்தன. அதில் ஒன்றுதான் கெல்லட் ஹைஸ்கூல். அதன் தலைமையாசிரியர் (பிரின்ஸிபால்) பெயர் தம்புசாமி. ஆனால் அவரை பசங்கள் குள்ளன் என்றுதான் அழைப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
இவ்வளவு ஆண்டுகள் கழித்து திரும்பிப் பார்க்கும்போது அவற்றை அவமரியாதையாகக் கருதமுடியாது என்றுதான் நினைக்கிறேன்.
ஆ ஊ என்றால் விடுமுறைதானா?
ஆந்திர முதல்வர் விபத்தில் இறந்தது துரதிர்ஷ்டவசமானது. அதற்கு ஆந்திர அரசில் லீவ் விடுவதும் புரிந்து கொள்ள முடிந்ததே. மத்திய அரசுகூட ஆந்திராவில் உள்ள தமது அலுவலகத்துக்கு மட்டுமே லீவ் விட்டுள்ளது. ஆனால் தமிழக அரசு லீவ் விடுவதை புரிந்து கொள்ள முடியவில்லைதான்.
இது சம்பந்தமாக நான் இட்ட இந்தியாவுக்கு கட்டிவராத டாம்பீகம் பதிவில் எழுதியதிலிருந்து சில வரிகள்:
“எனக்கு தெரிந்து எந்த பாராளுமன்ற அல்லது சட்டசபை கூட்டத் தொடரோ அதனதன் முதல் நாளைக்கு முழுவதுமாக வேலை செய்ததில்லை. என்ன நடக்கும் என்றால், இடைகாலத்தில் யாராவது பழைய அல்லது செயலில் உள்ள அங்கத்தினர்கள் மண்டையைப் போட்டிருப்பார்கள். முதல் நாளன்று சபை கூடியதும் இறந்தவர்களை பற்றி இரங்கல் தீர்மானம் போட்டு விட்டு, சபையை அத்துடன் அன்றைக்கு ஒத்தி வைத்து விட்டு இறங்கி போய் கொண்டேயிருப்பார்கள். இதில் கட்சி வேறுபாடே கிடையாது.
நான் கேட்கிறேன், ஒரு நாளைக்கு சட்டசபை கூட்டம் நடக்க என்ன செலவாகும்? அத்தனையும் எள்ளுதானா? ஏன், இரண்டு நிமிடம் மௌனமாக இருந்து அஞ்சலி செலுத்தி விட்டு வேலையைத் தொடங்கினால் குடி முழுகி விடுமா என்ன?
இன்னொரு கொடுமை செயற்கைக்கோள் சேனல்கள் வருவதற்கு முன்னால் நடந்தது. அதாவது ஒரு தலைவர் இறந்தால் இரண்டு நாட்களுக்கும் மேல் சோக இசைதான் தொலைக் காட்சி மற்றும் ரேடியோவில். அதுவும் இந்திராகாந்தி இறந்த போது அவர் உடல் மரியாதைக்கு வைக்கப்பட்டது முழுக்க முழுக்க லைவ் ஆக ஒளிபரப்பப்பட்டது. அடுத்த நாள் சடங்குகளும் அவ்வாறே. ராஜீவ் காந்தி கோட்டின் மேல் பூணூல் போட்டுக் கொண்டு சடங்குகள் செய்ததை முழுக்கவே காண்பித்தார்கள். நல்ல வேளையாக இப்போதெல்லாம் இந்த வேலை நடக்கவியலாது என்பதற்கு நாம் உலகமயமாக்கலுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.
அதே போல பிரதம மந்திரி / குடியரசுத் தலைவர் இறந்தால் இரண்டு நாள் விடுமுறை. வெளி தேசத்து தலைவர்கள் இறந்தால் ஒரு நாள் விடுமுறை. என்ன இதெல்லாம் கூத்து? ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது”?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்றாடத்தில் இருந்து பறந்தெழுதல்…
-
நாம் இந்த ஒரு தலைமுறைக்காலமாகத்தான் அடிப்படைப் பொருளியல் விடுதலையை
அடைந்துள்ளோம். நம் முந்தைய தலைமுறைக்கு அன்றாடமே வாழ்க்கை. உழைப்பே அதன்
நடைமுறை. நிரந்தரம...
22 hours ago
37 comments:
அஃகஃகா....பலே சாய்நாத் பிரசாத்!
//அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்? //
ராவணன் ஒரு ”ஆண்டி” டெரரிஸ்ட்!
உங்களுக்கு வேற நிக்னேம் இல்லையா?
சாம்பார்வடை மாதிரி!?
@வால்பையன்
நான் வாத்தியார் இல்லையே. நண்பர்களுக்குள் என்றால், எனக்கு என் நண்பர்கள் வட்டத்தில் சகுனி என்று பெயர். தேசிகனுக்கு ஐயர் பையன் என்ற பெயர்.
மற்ற பெயர்கள்:
சுகுமாரன் --> டிங் டாங்
ஷாஹுல் ஹமீது --> துலுக்கன்
டி.பி. ராமச்சந்திரன் --> கட்டேலே போறவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் டி.நகர் ராமகிருஷ்னா ஸ்கூல் , பர்கிட் ரோட் கிளைல படிக்கும்போது, வாத்யார்களில் 2 ராமசாமி ஐயங்கார்கள் இருப்பர். ஒருவரை மாணவர்கள் குட்ராம்சாமி , நெட்ராம்சாமி ஐயங்காரக்ள் என அவர்கள் உயரத்தின் மேல் நிக்நேம்.
அப்புரம், பனகல்பார்க் எதிரில் மெயின் ஸ்கூலில், ஒரு தமிழ் வாத்யார் பெயர் செவ்வாக்கிழமை, ஏனெனில் அவர் செவ்வாக்கிழமை விரதம் இருப்பார். செவ்வாக்கிழமையின் ஒரிஜினல் பெயர் நாராயணஸ்வாமி ஐயர், அது ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்தது.
:)) சீதை வயது -- வாய் விட்டு சிரித்தேன். இப்போ சாய்நாத் என்னங்க செய்றாரு? ஆடிடிங்கா??
விதண்டாவாதம் செய்த போக்கிரியும் சூப்பர். வக்கீலா ஆயிட்டாரா??
விசுவுக்கே விளக்கெண்ணை கொடுத்த டோண்டு :)))
விடுமுறை பற்றி: அவங்க வீட்டுல இருந்தா என்ன. ஆபீசு போன என்ன. என்ன, எங்களுக்கெல்லாம் கிடைச்சிருந்தா, ஒரு long weekend கொண்டாடி இருக்கலாம்..
--வித்யா
ராவணனை aunty terrorist ஆக மாற்றிய comment terrorist வால்பையனை வன்மையாகக் கண்டிக்கிறேன்!
சிரிச்சுத்தான்!
என் பையன் அவனது வாத்தியார் ஒருவரை "பட்டாணி" என்று தான் அழைக்கிறான்.
வாத்தியாரும் அதுக்குத் தகுந்த சுண்டலாகத் தான் இருக்கிறார்!
காலங்கள் மாறினாலும் இந்தப் வைக்கிற கோலங்கள் மட்டும் சாகா வரம் பெற்றவைகளாக இருப்பது வினோதம்.
அபிரஹாம் லிங்கன் என்ற உடன் எனக்கு ஞாபகம் வந்தது காந்தி தான்.
ஒரு சில அரசியல் தலைவரகள் பெயர்கள் இப்படி ஸ்கூல் வாத்தியார்களுக்குச் செல்லப்பெயர் ஆகிவிடுவதும் அது வாழையடி வாழையாய்த் தொடர்வதும் தொன்று தொட்டு இருந்துவருகிறது என்று நினைக்கிறேன்.
1996ல் நான் பள்ளியைவிட்டு வெளியில் வரும்போது ஒரு வாத்தியாரின் செல்லப்பெயர் காந்தி, (சொட்டை தலை என்பதால் வந்திருக்கலாம், பெயர் காரணம் தெரியாது). அந்தப்பெயர் அதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருந்துவந்துள்ளது. சமீபத்தில் (2005ல்) கூட அவர் பெயர் காந்தி தான். இயற்பெயர் "ராஜேந்திரன்" அது எத்தனை பேருக்குத் தெரியும் என்று தெரியவில்லை.
In Ramayan, I never heard or read that Raam and seetha were stayed 10 years in Ayodhya after marrige. If that would have been the case Lava and kucha would have also been in forest with Raama.
I heard the couple stayed in Ayodhya after marriage for 2 or 3 months only.
I read after seetha came from Lanka and after that fire bath only they blessed with Lava kuchaa etc.
@ராம்ஜி யாஹு
நான் ஆறாவது படித்த காலகட்டத்தில் கல்கியில் ராஜாஜியின் சக்கரவர்த்தித் திருமகன் என்னும் தலைப்பில் ராமாயணத் தொடர் வந்தது.
ராமருக்கு பதினாறு பிராயம் முடிந்ததும், பரசுராம கர்வபங்கம் முடிந்து அயோத்திக்கு திரும்பிய பிறகு பத்தாண்டுகள் கழிந்ததும் ஒவ்வொரு வரியில் கூறப்பட்டன.
நான் மட்டுமல்ல எனது சக மாணவர்களும் அப்போதெல்லாம் அத்தொடரை படித்து வந்தோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Dondu sir, even I am not sure when Lava & Kucha were born.
Can you tell whether they were born before Raama & seetha's vanavasam or after the vana vaasam.
If they were born before vana vaacham where were they during that vana vaasam period.
@ராம்ஜி யாஹு
ராவணனைக் கொன்றபிறகு ராமரும் சீதையும் அயோத்திக்கு திரும்புகின்றனர். அங்கு ராமருக்கு பட்டாபிஷேகம் நடக்கிறது. சீதையும் ராமரும் சந்தோஷமாக காலம் கழிக்கின்றனர். சீதை கருவுறுகிறாள்.
அப்போதுதான் வண்ணான் ஒருவன் கூறியதை கேட்ட ராமபிரான் சீதையை வனத்துக்கு அனுப்பத் துணிகிறார். லட்சுமணர்தான் சீதையை வனத்தில் கொண்டு விடுகிறார். அங்கு வால்மீகி முனிவர் அவளை தன் மகளாக தத்தெடுத்து அவள் சீதை என்பதை யாருக்கும் கூறாது தன் ஆசிரமத்தில் வசிக்கச் செய்கிறார். அங்குதான் லவனும் குசனும் பிறக்கின்றனர்.
இதெல்லாம் உத்திர ராமாயணத்தில் வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//டி.பி. ராமச்சந்திரன் --> கட்டேலே போறவன்//
மத்தவங்கெல்லாம் காண்டஷாவுல போவாங்களா?
@வன்பாக்கம் விஜயராகவன்
ஓ.வி. கோபாலன் என்னும் ஆசிரியர் ஆர்.கே.எம். மெயினில் இருந்தார். அவர் கையெழுத்துக்குப் பதிலாக இனிஷியல் செய்தால் ஒன்றேமுக்கால் போல இருக்கும், ஆகவே அவருக்கு ஓவிஜி ஒண்ணேமுக்காலணா என்று பெயர் (சமீபத்தில் 1957-ல் பத்தாம் வகுப்பு எடுத்தார்). பை தி வே ஒண்ணேமுக்காலணா என்றால் 11 பைசா.
உங்கள் தந்தை அல்லது சித்தப்பா /பெரியப்பாக்கள் அப்பள்ளியில் அக்காலகட்டத்தில் படித்திருந்தால் கேட்கவும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
so when Rama, seetha, Lakmsnana going to the forest seetha must be 18 years or 20 years.
I checked with few of my friends, they say while going to the forest seetha was on family way.
I am confused.
This is interesting now. So Raama also blessed the child only after 10 or 20 years, so why vaalmeeki or kamban did not write about that in a big way.
@@ராம்ஜி யாஹு
சீதை வனவாசத்துக்கு ராமரோடு செல்லும்போது அவளுக்கு வயது 27.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//I read after seetha came from Lanka and after that fire bath only they blessed with Lava kuchaa etc.//
ராமாயணத்துல மாசம் வருஷம் கணக்கெல்லாம் மேலோட்டமா கேட்டா ரொம்ப டென்ஷன் ஆய்டுவீங்க வாத்யார். ராமர் 14 வருஷம் காட்டுக்கு போய்ட்டு திரும்ப வந்ததுக்கு அப்பால ஆயிரம் (ஆமாம் 1000) வருஷத்துக்கு பிறகு லவனும் குசனும் பிறக்கிறார்கள். டென்ஷன் ஆகாம இருந்தா மீதி கதையையும் சொல்றேன்!! சீதை பூமியோடு போன பிறகு பத்தாயிரம் வருஷம் ராமர் ஆட்சி பண்ணுகிறார். சரியா 11,000 வருஷம், 11 மாதம், 11 நாள், 11 மணி, 11 நாழிகை முடிஞ்சு இந்த உலகத்தை உட்டு கிளம்புறார்...(அதுக்கு தான் டென்ஷன் ஆவக்கூடாதுன்னு மொதல்லயே சொன்னேன்!!).
அடுத்த தபா, சரவணபவன்ல ஆனியன் ரவா மசாலா சாப்டுட்டு வர்ற சொல்ல அப்டியே நம்ம வாரியாரோட சிடி ஒண்ணு வாங்கி கேட்டு பாருங்க வாத்யார்!
(மஹாபாரதத்துல இந்த மாதிரி கன்ப்யூஷன் வராது. காரணம் புரீதா?)
இப்படிக்கு
ஜாம்பஜார் ஜக்கு
அட ஆமாங்க, இந்த லீவு மேட்டர நியூஸ்ல கேட்டவுடனே நானும் டென்ஷனாயிட்டேன்.
அதுவும் நான் அங்க இல்லியா, அந்த வவுத்தெரிச்சல் வேற.
கேள்வி கேட்டது சாய்நாத் பிரசாத்தா இல்லை டோண்டுவா? டோண்டு தானே இப்படியெல்லாம் ஏடாகூடமா கேக்கும்?
நானும் தி.நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் (பனகல் பார்க் எதிரில்) படிக்கும்போது ஒரு வாத்தியாருக்கு டபரா என்று பெயர் (வாய் டபரா மாதிரி இருக்கும்)! இன்னொருவருக்கு chair என்று பெயர் (அவர் தொப்பயை தள்ளிக்கொண்டு நின்றால் chair மாதிரியே இருப்பர்)! இன்னொருவருக்கு ஆட்டோ என்று பெயர் (காரணம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்)! இன்னொருத்தருக்கு “காஃபி” என்று பெயர் வைத்தோம் (ஏனென்றால் அவர் ஒரு முறை ஜப்பானுக்கு போய்வந்து எங்களிடம் கதையளக்கும்போது ‘ஜப்பானில் செக்ஸ் என்பது காஃபி குடிப்பதுபோல’ என்று எக்குத்தப்பாக சொல்ல அதற்கு ஒருவன் ‘நீங்க எத்தனை காஃபி குடிச்சீங்க சார்’ என்று கேட்க பிறகு என்ன, அவன் முதுகில் பிரம்பால் தனி ஆவர்த்தனம்)!
By the way, பனகல் பார்க் எதிரில் இன்னும் ராமகிருஷ்ணா பள்ளி இருக்கிறதா இல்லை அதை மூடி அந்த இடத்தை ஸ்வாஹா செய்துவிட்டார்களா? யாராவது சொன்னால் தன்யனாவேன்!
டோண்டு சார்
ஓவிஜி, ஓ.வி.கோவிந்தாசாரி தானே, எனக்கும் கணக்கு வாத்யார். சைக்கிளில் போவார். ஸ்ட்ரிக்ட் ஆளுன்னு புகழ். அவர் ஷேவ் பண்ணிக் கொண்டு வந்த நாளெல்லாம், ஆள் அதி ஸ்ட்ரிக்ட் என பசங்க சொல்வாஙக.
டோண்டு சார்
நீங்க ஓ.வி.கோபாலன் என்றவுடன், ஓ.வி.கோவிந்தசாரி என்பவறின் ஞாபகம் வந்துவிட்டது.
இப்பதா ஞாபகம் வருது, அவர் ஓ.வி.கோவிந்தசாரி இல்லை, எஸ்.வி.கோவிந்தசாரி.
ஓ.வி.கோபாலன் நேம் பெமிலியர் ஆக இருக்கு. என் அண்ணன் படித்த காலத்து வாத்திய்யர் என நினைக்கிறேன்.
@வன்பாக்கம் விஜயராகவன்
நான் அந்த ஸ்கூலில் படிக்கவில்லை. என் பெரியப்பா பிள்ளை அம்பி ராகவன் எனக்கு ஓ.வி. கோபாலன் அவனது வகுப்பாசிரியர் எனக் கூறியிருக்கிறான்.
மற்றப்படி ஓ.வி. கோவிந்தாச்சாரி முக்கால்வாசி வெங்கட கோவிந்தாசாரியாக இருக்கும். பழைய மாம்பலத்தில் வசித்தாரா?
அவரைப் பற்றிய ஒரு பாட்டும் கேட்டிருக்கிறேன்.
யமுனாதீர விஹாரி
வெங்கட் கோவிந்தாசாரி
ஓடை சைக்கிள் சவாரி
பழைய மாம்பலம் சஞ்சாரி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எஸ்.வி.கோவிந்தச்சாரி - பசங்கள் எஸ்விஜி என பேசுவார்கள் - ஓட்டை சைக்கிள்தான் போவார். அந்தப்பாட்டு அவருக்கு பொருத்தமாக இருக்கும். நான் அவர் மாம்பலம் ராமேஸ்வரம் ஸ்ட்ரீட் பக்கம் வாசம் என நினைத்துக் கொண்டிருந்தேன். மே.மாம்பலம் ஆகவும் இருக்கலாம்
விஜயராகவன், நீங்கள் எந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பில் இருந்தீர்கள்? எனது பெரியப்பா பிள்ளை குமாரும், அத்தை பிள்ளை ராமானுஜமும் 1967-ல் அப்பள்ளியில் பள்ளியிறுதி வகுப்பில் படித்தனர்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நான் 65-68 இருந்தேன் , ஜி செக்ஷன் என நினைக்கிறேன், கிளாஸ் வாத்தியார் பெயர் கபாலி. கபாலி ஒரு பேச்சலர், நான் படித்த காலத்தில்.
அதுக்கு முன்னாடி 62-65 பர்கிட் ரோட் சௌத் ப்ராஞ்ச்சில்.
அப்படியானால் அவர்கள் உங்களுக்கு ஒரு செட் சீனியர்கள். அவர்கள் 67-ஆம் வருடம் பாஸ் செய்தனர்.
என் அண்ணன் அம்பி ராக்வன் 1958-ஆம் வருடம் பாஸ் செய்தான். எஸ். ராகவன் என்று பெயர். அவனுடைய செட்டில்தான் மத்திய அரசு கேபினட் செக்ரட்டரி எஸ். சங்கர் படித்ததாக அவன் என்னிடம் கூறியிருக்கிறான்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அன்புடன்,
டோண்டு ராகவன்
சரி, சரி. 'முதியோர் கல்வி கூட' மீட்டிங் நடக்குது. நாம எல்லாம் அப்புறம் வரலாம்.
அந்த காலத்தில் எஸ்விஜி, குட்ராம்சாமி, ஸ்வாமிநாதய்யர் (ஹெட்மாஸ்டர்) போன்ற பிராமன வாத்யார்கள் பஞ்சகச்சம் உடுத்திண்டுதான் வருவார்கள். இப்போ வாத்யார்கள் பஞ்சகச்சம் போடுகிறர்களா?
DEAR RAVISHA AVARKALUKKU
T.NAGAR பனகல் பார்க் எதிரில் இன்னும் ராமகிருஷ்ணா பள்ளி
IRUKKIRATHU AND BRANCH SCHOOL ALSO
IRUKKIRATHU
KARUNAJI
/
சா: ஆக அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்?
/
ராவணனுக்கு 'ஆண்ட்டி'ங்களைத்தான் பிடிக்குமோ???
அருமையான கேள்வி
/
சாய்நாத் பிரச்சாத் பெஞ்சு மேல் ஏற்றப்பட்டு உதை வாங்கினது வேறு கதை.
/
அக்கிரமம்
:))))))))
/
ஸ்டாலின் இறந்த போது இந்திய அரசு லீவ் விட, சோவியத் யூனியனிலோ லீவே கிடையாது. எங்கு போய் அடித்து கொள்வது”?
/
எது எப்பிடியோ மங்களூரிலும் எங்கவீட்டம்மிணிக்கு காலேஜ் லீவ் விட்டாங்க வாழ்க சனநாயகம்.
//அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது//
Look at the questions again, the numbers mentioned there are 17,10 and 13. So it must be 17+10+13 = 40
@அனானி
தட்டச்சுப் பிழை. 12 ஆண்டுகள் என்றிருக்க வேண்டும். சரி செய்து விட்டேன். நன்றி.
அன்புடன்,
டோண்டு ராகவ்ன்
அப்போ சீதைக்கு 17 + 12 + 13 = 42 வயது. ஏன் சார் ராவணன் போயும் போயும் 42 வயசுக்காரங்களையா அழைத்துச் சென்றான்
can any one tell what is the age of draupadi when she disrobed by dushashan ?
4. சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் ஞாயிறு மாலை 4 அல்லது 4.30 மணிக்கு ஒரு சமையல் நிகழ்ச்சி வருமே? (பெயர் மறந்துவிட்டது) அந்த நிகழ்ச்சியின் சிடி/டிவிடி கிடைக்குமா?
பதில்: சன் டிவியின் ஆரம்பம் எண்பதுகளில் என நினைக்கிறேன். அப்போது தில்லியில் இருந்தோம். கேபிள் சேனல் எங்கள் வீட்டில் அப்போதெல்லாம் கிடையாது. ஆகவே நீங்கள் குறிப்பிடும் நிகழ்ச்சி பற்றி ஒன்றும் தெரியாது. (பிறகு நன்கு தேடி பார்த்ததில் சன் டி.வி. 1992-ல் தான் வந்தது என அறிந்தேன். தவறை சுட்டிக்காட்டிய அருணாசலம் அவர்களுக்கு நன்றி. எங்கள் வீட்டுக்கு கேபிள் 1994-ல்தான் வந்தது).
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
எம்.கண்ணன்
அந்த நிகழ்ச்சி நடத்தியவர் - சாந்தி பலராமன் - தற்போது பொதிகையில் ஞாயிறு மதியம் 3.10 முதல் 3.45 வரை "பாரி ப்யூர்" தித்திக்கும் நேரம் என இனிப்புகள் செய்யும் நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அவர் சன் டிவியின் ஆரம்ப வருடங்களில் நடத்திய ஞாயிறு மாலை நிகழ்ச்சி மிகப் பிரபலம். பெரும்பாலும் பிராமண வீட்டு உணவு வகைகளையே வழங்குவார். சிம்பிளாக நன்றாக வழங்குவார்.
- காணவும் ஞாயிறு மதியம் 3.10 மணி - பொதிகை
http://sitagita.com/counsellor.php?ExpId=32
http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=2&url=http%3A%2F%2Fwww.flipkart.com%2Fdakshin-bhog-santhi-balaraman%2F0009107147-7kw3flehpf&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNGRo_FINnHB9qOWaZT7L9tlaq5LJQ
http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=6&url=http%3A%2F%2Fwww.facebook.com%2Fpeople%2FShanthi-Balaraman%2F835873986&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNH29WoAOCEFLw6PUZlkshgxzb95Kw
http://www.google.co.in/url?sa=t&source=web&ct=res&cd=9&url=http%3A%2F%2Fwww.rupapublications.com%2Fclient%2FBook%2FDAKSHIN-BHOG.aspx&ei=dpykStWIFJCpkAXB15XTDw&rct=j&q=shanthi+balaraman&usg=AFQjCNEoWyQ8G7_bdjLJCkxI-JDJYl0kng
//ராவணன் ஒரு ”ஆண்டி” டெரரிஸ்ட்!// வால் யு ஆர் ய ஹியூமர் டெரரிஸ்ட். நல்ல ஹியூமர் ஸென்ஸ், என்ன மாதிரியே இருக்கீங்க!
Post a Comment