6/18/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 103 & 104)

எபிசோடு - 103 (16.06.2010) சுட்டி - 2
இரவு 12 மணிவரை அசோக் வீட்டுக்கு வராததால் காதம்பரி கவலைஅடைகிறாள். அப்போதுதான் அசோக்கும் உள்ளே வர அவன் எங்கே போயிருந்தான் என அவள் கேட்கிறாள். மனம் சரியில்லாததால் பீச்சில் போய் உட்கார்ந்திருந்ததாக அவன் பதிலளிக்கிறான்.

அடுத்த நாள் காலை வையாபுரி கொலை செய்யப்பட்ட செய்தியை சிங்காரம் வந்து நாதனிடம் கூற அவர் ஸ்தம்பித்து நிற்கிறார். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என வசுமதி கவலையுடன் கேட்க, எல்லாமே தலையெழுத்து என அவர் சைகை காட்டுகிறார்.

வையாபுரி வீட்டில் அவனது பி.ஏ.வை போலீஸ் விசாரிக்க அவன் அசோக் வையாபுரியுடன் இரண்டு நாட்கள் முன்னால் சண்டை போட்டதை எடுத்துரைக்கிறான்.

இப்போ பாத்தீங்களா, போலீஸ் எல்லாரையும் முறையாகவே விசாரிக்கிறாங்க, முன்காலம் போல இல்லை என நண்பர் சிலாகிக்க, சோ அவர்களோ எவிடென்ஸ் ஆக்ட் பற்றி மனுஸ்மிருதியில் விரிவாகவே கூறப்பட்டதை எடுத்துரைக்கிறார். சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் தடுத்தாட்கொண்ட கதையை கூறுகிறார். அதில் சாட்சிகள் மூவகைப்படும், அவையாவன, ஆட்சி, ஆவணம் மற்றும் அயலார் கண்ட சாட்சி என்கிறார். அவற்றையும் ஒவ்வொன்றாக விளக்குகிறார். அப்படியே சுந்தர மூர்த்தி நாயனார் கதையையும் சுவைபடக் கூறுகிறார். அதை அனுபவிக்க வீடியோவைக் காண்க.

அசோக் வீட்டில் வந்து இன்ஸ்பெக்டர் சமையற்கார மாமி, சிங்காரம் ஆகியோரை ஒவ்வொருவராக விசாரிக்கிறார். என்ன வேண்டுமானாலும் ஆகட்டும் பார்த்துக் கொள்வோம் என விரக்தியாகப் பேசுகிறார் நாதன். அசோக் மேலுள்ள சந்தேக வலை மெதுவாக இறுகுகிறது.

(தேடுவோம்)

எபிசோடு - 104 (17.06.2010) சுட்டி - 2
சிங்காரத்தை விசாரித்ததும் காதம்பரியை விசாரிக்க ஆரம்பிக்கிறார் இன்ஸ்பெக்டர். அதற்குள் அசோக்கே வந்து விட அவனை விசாரித்து விட்டு பிறகு ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்கிறார். தன் அக்காவிடம் ஆறுதலுக்காக வருகிறாள் காதம்பரி. அசோக் இந்தக் கொலையை செய்திருக்கவே முடியாது என அவள் அக்கா உறுதியாகக் கூற, காதம்பரியோ தயங்குகிறாள்.

ஸ்டேஷனில் அசோக்கை மேலும் விசாரிக்க, அவனோ பதட்டமேயில்லாது பதிலளிக்கிறான். நடந்ததை நடந்தபடி கூறுகிறான். சம்பவம் நடந்த இரவு 9 மணிக்கு தான் பீச்சில் இருந்ததாக அவன் கூற, இன்ஸ்பெக்டர் அதை நம்ப மறுக்க, அவனோ அதற்காக தான் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறிவிடுகிறேன். பிறகு அவனை லாக்கப்பில் வைக்கிறார்கள்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரும் செல்லம்மாவும் அசோக் கேஸ் பற்றி விவாதிக்கிறார்கள். அசோக்கின் ஜாதகத்தை பார்க்கும் சாம்பு அவனுக்கு கால சர்ப்ப தோஷம் இருக்கிறது எனவும், திருநாகேஸ்வரத்துக்கு சென்று அர்ச்சனை செய்தல் நலம் என சாம்பு கூற, அது என்ன கால சர்ப்ப தோஷம் என சோவின் நண்பர் கேட்கிறார். சோ தான் இதுபற்றி பம்மல் சந்தான குருக்கள் என்ற சோதிட வல்லுனரை கேட்டதாகவும், அவர் இதற்கு சரியான பெயர் கால சர்ப்ப யோகம் என்று சொன்னதாகவும் கூறுகிறார். ராகு கேது ஆகிய இரு சர்ப்பங்களுக்கிடையில் மீதி கிரகங்களின் வீடுகள் அமைந்தால் இது நடக்கும் எனக் கூறிக்கேட்டதாகவும் அவர் கூறுகிறார். இதற்கு மேல் எனது சோதிட அறிவு போதாமையால், நண்பர்கள் சுப்பையா, சித்தூர் முருகேசன் ஆகியோர் இந்த எபிசோடுக்கான வீடியோவைப் பார்த்து விட்டு ஏதேனும் பின்னூட்டமிட்டால் நன்றாக இருக்கும்.

செல்லம்மாவிடம் சாம்பு சாஸ்திரிகள் அசோக்குக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்யுமாறு கூற, அந்த உத்தமப் பெண்மணியும் அவ்வாறே செய்வதாக மனசாரக் கூறுகிறார். அசோக்கின் நலத்தில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள இந்த எளிய தம்பதியரின் நிலைப்பாடு மனதுக்கு நிறைவாக உள்ளது.

லாக்கப்பில் அசோக்கைப் பார்த்து நாதனும் வசுமதியும் கலங்குகின்றனர். சத்தியத்துக்கு சோதனை வருவது ஒன்றும் புதிதில்லையே என அசோக் கூற, சத்தியம் என்பது அபாயகரமான விஷயம், அதனுடன் சங்காத்தம் வைத்துக் கொண்டதால்தான் அசோக்குக்கு இந்த சோதனை என நாதன் கோபப்பட்கிறார். ஒரு வேளை ஒரு நொடிநேர ஆவேசத்தில் இவனே வையாபுரியை கொலை செய்திருப்பானோ என்ற தனது ஐயத்தையும் அவர் அவனிடம் கூறுகிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

ராஜ சுப்ரமணியன் said...

செல்லம்மாவிடம் சாம்பு சாஸ்திரிகள் அசோக்குக்காக கோவிலுக்கு சென்று அர்ச்சனை எய்யுமாறு கூற அந்த உத்தமப் பெண்மணியும் அவ்வாறே செய்வதாக மனசாரக் கூறுகிறார். அசோக்கின் நலத்தில் உண்மையாகவே அக்கறை கொண்டுள்ள இந்த எளிய தம்பதியரின் நிலைப்பாடு மனதுக்கு நிறைவாக உள்ளது./////

நிஜமாகவே என் மனதிற்கும் மிக நிறைவாக இந்தக் காட்சி இருந்தது.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது