சில மாதங்களுக்கு முன்னால் திருவல்லிக்கேணி விவேகானந்தர் இல்லத்தில் உள்ள கஸ்தூரி சீனுவாசன் நூலகத்தில் புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தேன். திடீரென “கிருஷ்ணன் பொம்மை” என்னும் தலைப்பில் சிறுகதை தொகுப்பொன்று கிடைத்தது. ஆசிரியர் வி.எஸ். திருமலை என்றிருந்தது. என் மாமாவின் மாப்பிள்ளைகளில் ஒருவர் பெயரும் அதேதான். பின்னட்டையில் பார்த்தால் அவரேதான், அதாவது அமரர் வி.எஸ். திருமலை.
புத்தகத்தை எடுத்துகொண்டு 12-ஆம் பஸ்ஸில் ஏறினேன். மாம்பலம் செல்வதற்குள் அத்தனை கதைகளையும் படித்துவிட்டு பிரமிப்பில் ஆழ்ந்தேன். மனிதரிடம் இவ்வளவு திறமை இருந்ததா, இது முன்னாலேயே தெரியாமல் போயிற்றே, தெரிந்திருந்தால் திருமலை அவர்களிடம் அப்போதே அவற்றை எல்லாம் விவாதித்து ஆனந்தம் அடைந்திருக்கலாமே என்ற ஏக்கம் எழுந்தது. அவரது மனைவி மும்பையில் வசிக்கிறார். அவரது தொலைபேசி எண்ணைப் பெற வேண்டி மாமா வீட்டுக்கு போன் செய்ததில் அவரே லைனுக்கு வந்தார். பழம் நழுவிப் பாலில் விழுந்தாற்போல் ஆயிற்று.
அவருடன் எல்லா கதைகளையும் டிஸ்கஸ் செய்தேன். அடுத்த முறை அவரைச் சந்தித்தபோது அப்புத்தகத்தின் ஒரு காப்பியை எனக்கு அன்புடன் தந்தார். திருமலை அவர்கள் மறைந்து 15 ஆண்டுகளுக்கு பிறகு 1997-ல் அவர் இப்புத்தகத்தை அச்சில் ஏற்றியுள்ளார். விக்ரமனின் அணிந்துரை இத்தொகுப்பில் உண்டு. இதில் உள்ள சில கதைகளை நான் ஏற்கனவேயே பத்திரிகைகளில் அவை வெளியானபோது படித்துள்ளேன். ஆனால் எழுத்தாளர் பெயரை கவனிக்கவில்லை (அப்போது அவர் இன்னும் என் மாமாவின் மாப்பிள்ளையாக இன்னும் ஆகவில்லை என நினைக்கிறேன்). ஆனால் இத்தொகுப்பில் அவற்றின் முதல் சில வரிகளை படித்ததுமே, “அடேடே இதை இவர்தான் எழுதினாரா” என்னும் வியப்பு வந்தது நிஜம்.
கதைகள் ஐம்பதுகள், அறுபதுகளில் எழுதப்பட்டவை. ஆகவே மொழிநடை சற்றே பழக்கமில்லாததாக இருக்கலாம். இருப்பினும் நான் அதை இற்றைப்படுத்தவில்லை. அவை இப்போது பலரால் படிக்கப்பட வேண்டும் என்னும் நோக்கத்திலேயே இங்கு அவற்றை தட்டச்சு செய்து வெளியிடுகிறேன். அமரர் திருமலையின் மனைவி திருமதி (ஜம்பகா) சித்ரா திருமலை அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.
இப்பதிவுக்கு நான் தேர்வு செய்த இக்கதையை தொகுப்பில்தான் படித்தேன், முன்னால் படிக்கவில்லை. இப்போது கதைக்கு போவோம்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
அன்று என்னவோ கிழவரின் சுபாவமான அமைதி அவரைக் கைவிட்டு விட்டது போலும்! காலையில் நடந்த ஒரு சம்பவம் அவர் மனத்தைச் சிறிது கலக்கி விட்டது. பகவான் நாமத்தை ஜபித்தும் மனவேதனை அடங்கவில்லை.
காயும் வயிறு கதறியது, அன்று ஒன்றும் சாப்பிட வேண்டாம் என்று அவர் கொண்டிருந்த தீர்மானம் நிலை குலைந்தது. சுவையும் பசியும் மனிதனை ஆட்டி வைக்கும் துரோகிகள் அல்லவா என்று என்ணினார்.
அவர் சிறுவனாக இருந்த காலத்தில் முதுமைக்கும் ஞானத்துக்கும் குணத்துக்கும் மரியாதையுண்டு, மதிப்புண்டு. அவர் வாழ்நாளில் உலகம் பொருளாதார உலகமாக மாறிவிட்டது. மனிதனின் முயற்சியை வெற்றி தோல்வியைக் கொண்டும், மனிதனின் தரத்தை செல்வத்தைக் கொண்டும் எடை போட்டது சமூகம். அவர் மாட்டுப் பெண் விஜயம் இப்பண்பற்ற மனப்போக்கைக் கொண்டவள். காலையில் அவள் சொன்ன வார்த்தைகள் “ அவர் வாழ்க்கையில் என்னதைச் சாதித்து விட்டார்? ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே இன்று காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா? பணம் சேர்த்து வைத்திருந்தாரானால்...”
ஆம்! அவள் சொன்னதில் உண்மை இருக்கத்தான் செய்தது. இன்று அவரிடம் பணமிருந்தால் பிள்ளை ரகு, அவன் மனைவி விஜயம் இருவரின் போக்கே வேறு மாதிரியாக இருந்திருக்கும். அவரும் பிள்ளையின் தயவை அண்டாமல் சுதந்திரமாக வாழ்ந்திருக்க முடியும்.
நாளையென்பது படைத்தவன் பொறுப்பு என்று அவர் என்றும் திண்ணமாகக் கொண்டு பணம் சேர்க்கவில்லை. அவர் சம்பாத்தியத்தில் பெரும் பங்கு ஆஸ்பத்திரிகளுக்கு அனாமதேய நன்கொடைகளாகச் சென்றது. ரகுவின் தாயார் வெகு நாள் ஆஸ்பத்திரியில் இருந்து காலமானாள். அவளுக்கு நடந்த வசதிகளுக்கோர் நன்றியாகவும், பிணியால் வாடும் சமூகத்துக்கு ஆஸ்பத்திரிகளின் அவசிய உதவியை உணர்ந்ததாலும், அவர் சம்பாதித்த காலத்தில் மேற்சொன்னவாறு செய்தது. புகழையோ பிறர் மதிப்பையோ கருதிச் செய்யும் கொடை தர்மமாகாது என்று அவர் தமது நன்கொடைகளை பெயரில்லாமல் ரகசியமாகச் செய்தார். தன் தகப்பனார் சம்பாத்யம் எல்லாம் எப்படி மறைந்தது என்று ரகு வியப்பு கொள்வான். “எனக்குச் சேர வேண்டிய அவர் பணமெல்லாம் யாருக்குப் போகிறதோ!” என்று ஆத்திரப்படுவான்.
ரகுவுக்கு உண்மையில் பணக்குறைவு ஒன்றுமில்லை. நல்ல வேலையில் இருந்தான். விஜயாவும் பணம் படைத்தவள்.செல்வந்தர் வீட்டுப் பெண். “காலணாவுக்குப் பிரயோசனம் உண்டா”? என்றல்லவா கேட்டாள். ஒரு காசுக்குப் பிரயோசனம் இல்லாவிட்டாலும் இவ்வுடலால் கூட அவர்களுக்கு ஒருவித உபயோகமும் இல்லாது போகிறதே என்று கிழவர் வருத்தப்பட்டார். ‘அவர்களுக்கு ஒரு வீண் பாரமாகத்தானே நாம் இருக்கிறோம்’ என்று தோன்றியது. வேறு போக்கிடமுமில்லை. போகுமுன் அவர் மனைவி இன்னும் ஒரு மகவைத் தந்திருந்தால்! அது அவர் பழைய குறை. போகட்டும். இன்று எவரும் லட்சியம் செய்யாத தனி ஆளாக ஆகிவிட்டோமே என்ற அவர் த்யவிப்பைத் தவிர்க்க ஒரு பேரக் குழந்தை வரக்கூடாதா? ஏதோ குடும்பக் கட்டுப்பாடு என்று இயற்கையை ஏமாற்றும் முறைகளை ரகுவும் விஜயாவும் அனுசரித்துத் தங்களையே ஏமாற்றிக் கொண்டு விட்டனர். இப்போது குழந்தை பிறக்காதா என்று ஏங்கினர் அவர்கள்.
தன் குழந்தைகளின் மூலம்தான் மனிதன் அழியா அமரத்துவம் அடிகிறான்.
தளிகை அறையினுள் சென்றார் கிழவர். க்ண் மங்கியது. காது அடைத்துக் கொண்டது. சுவரின் மேல் சாய்ந்து கீழே விழாமல் சமாளித்தார். மயக்கம் தெளிந்தது.
மேடையில் ஒரு பாத்திரத்தில் அரிசி உப்புமா செய்து வைத்திருந்தாள் விஜயம். ஷெல்பில் நெய்க் கிண்ணத்தைத் தேடினார்; காணோம். பூட்டப்பட்ட வலைபீரோவினுக்குள்ளிருந்த நெய் ஜாடியும் கிண்ணமும் கிழவரைக் கண்டு சிரித்தன. அரிசி உப்புமா என்றால் அவருக்கு அதிகம் பிடிக்கும். எதிலும் நெய் நிறைய ஊற்றிச் சாப்பிட்டே பழக்கமாகி விட்டது.
இன்று ஒரு முட்டை நெய்க்கு அவர் மருமகள் தயவை நாட வேண்டியிருந்தது. கிழவருக்கு நெய் தேவை என்பதை விஜயம் மறந்து விடவில்லை; ஆனால் கிழமாமனாருக்கு எது செய்தாலும் வியர்த்தமாகப் பட்டது.
இந்த உப்புமாவை சாப்பிட்டுத்தான் ஆகவேண்டுமா? கிழவர் தயங்கினார். காலை நிகழ்ச்சிக்கு இதுதானே காரணம்?
காலை காப்பியானவுடன், “அப்பா! இன்று நானும் விஜயமும் ஒரு கல்யாணத்துக்குப் போகிறோம். திரும்பிவர நேரமாகலாம்...” என்றான் ரகு.
“யாருக்குக் கல்யாணம்?”
“அவாளை உனக்குத் தெரியாது.”
சரியாகப் பதிலளித்தான் மேல்கொண்டு பெண்வீட்டார் யார், பிள்ளைக்கு என்ன படிப்பு, வேலை, ஆஸ்தி, சீர் என்ன செய்கிறார்கள் என்ற கேள்வி ஜாபிதா எழும் என்று என்ணினான் ரகு. தன் நண்பர்களுடன் இந்த விவரங்களை மணிக்கணக்கில் பேசுவதில் அவனுக்கு சுவாரசியம் இருந்திருக்கும். ஆனால் தன் தந்தை கிழவருடன் எந்தப் பேச்சும் அவனுக்கு அனாவஸ்யமாகப் பட்டது.
வாயில் அருகே நின்ற விஜயம் “யாராயிருந்தால் அவருக்கு என்ன இப்போ? நேரமாகிறது. போய்க் குளித்துவிட்டுக் கிளம்புங்கள். முஹூர்த்தத்துக்குப் போக வேண்டாமா?” என்றாள்.
உன் எஜமானி உத்திரவு போட்டு விட்டாளா! என்னுடன் நேரத்தை வீணாக்காதே” என்று சிரித்தார் கிழவர்.
“ராத்திரி மாதிரி உனக்கு நாலு தோசை வார்த்து வைக்கிறேன் என்கிறாள்” என்றான்.
முன்னிரவு கடனே என்று விஜயம் செய்து கொடுத்த தோசை கிழவர் நினைவிலொ இருந்தது. எண்ணெய் என்பதே காணாது சுட்டு வரண்ட தோசை.
“தோசையா?...” என்று இழுத்தார்.
“பின் என்ன வேண்டும்?” என்றான் ரகு எரிச்சலை மறைக்காமல்.
“அவருக்கு அரிசி உப்புமா வேண்டியிருக்கும். அதை நேரில் சொல்வதுதானே!” என்றாள் விஜயம், பக்கத்து வீட்டுக்கும் கேட்கும்படியான துணிவுக் குரலில்.
“தோசையே போதும்” என்றார் கிழவர்.
“உனக்கும் கோபம் வந்துவிட்டதா!” ... காலையில் பால்காரன் மேல் தன்ணீர் கலந்ததாகப் பொய்குற்றச்சாட்டு செய்து அடைந்த தோல்வி ரகுவை உறுத்திக் கொண்டிருந்தது.
“எனக்கென்னடா கோபம்? ... கடைசி காலத்தில் பிறர் தயவு வேண்டியிருக்கு. தனியாயிருக்க வழியில்லை. போக வேறு இடமுமில்லை. பகவான் எனக்கு இரண்டு குழந்தைகளாகக் கொடுத்திருக்கலாம்....”
ரகு பேசாமல் இருக்கவே விஜயம், “ஒரே பிள்ளை நீங்கள் பார்த்துக்கற அருமை அவருக்குப் போதும்னு சொல்லுங்கோ! தான் சேர்த்து வச்சிருக்கிற சொத்தையெல்லாம் அனுபவிக்க இன்னம் ஒரு பிள்ளையில்லையேன்னு போற காலத்திலே குறையாயிருக்கும்! அவர் வாழ்க்கையில் என்னத்தைச் ஆதித்து விட்டார்? எல்லாம் வீண்!... ஐநூறு ஆயிரம் என்று சம்பாதித்தாரே! இன்று காலணாவுக்குப் பிரயோசனமுண்டா?” என்று பொரிந்து கொட்டினாள்.
விஜயத்தின் இது போன்ற பிரசங்கங்கள் கிழவருக்குப் புதிதல்ல. அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளாமல் வழக்கம் போல அசட்டை செய்ய முயற்சித்தார். “சிறிசு, அறியாமையால் சொல்கிறது, எல்லாம் நாளைக்குச் சரியாகிவிடும், பெரிய புத்தி வந்துவிடும்” என்று தனக்குள் சொல்லிக் கொண்டார். ஆனால் இன்றென்னவோ இம்மொழிகள் சுய ஆறுதலை உண்டாக்கவில்லை. எழும் மனவருத்தத்தை ஏமாற்ற முடியாது போயிற்று.
இவ்வெண்ணங்களையெல்லாம் நினைவிலிருந்து அகற்ற முயன்றவாறு, இலை ஒன்றை எடுத்துக் கீழே போட்டார். மணையை எடுத்து வைத்தார். அதிக கனமாகப் பட்டது. கை நடுங்கியது. மறுபடியும் மயக்கம் வரும் போலிருந்தது. நீர்ச்சொம்பையும் லோட்டாவையும் எடுத்து வைத்தார். பாத்திரத்திலிருந்த உப்புமாவை சிறிது ருசி பார்த்தார். சுள்ளென்றது. எண்ணெயில் கையாண்ட சிக்கனத்தை விஜயம் மிளகாயில் காட்டவில்லை.
ஒரு சொட்டு நெய் இருந்தால்!
வலை பீரோவின் சாவியைத் தேடினார் கிழவர். அஞ்சறை பெட்டியில் ஒளித்து வைக்கப்பட்டிருந்தது. ஜாடியை எடுத்துக் கீழே வைத்தார். அதிலும் நெய் அதிகம் இல்லை. அதில் கொஞ்சம் எடுத்துக் கொண்டு விட்டால் விஜயம் கோபிப்பாளே என்ற பயம் கண்டது கிழவருக்கு. “நான் செய்யும் இச்செய்கையும் கேவலம்தான். விருப்பமற்றவர்கள் ஆதரவில் வாழும் நான் ஏன் ஊனை வளர்க்க வேண்டும்? ஏன் எனக்கு நப்பாசை? சீ!” என்று தன்னையே வெறுத்துக் கொண்டார். அவர் சோகம் உணர்ச்சியின் எல்லையைத் தொட்டுவிட்டது. “இருந்து எவர்க்கும் பயனில்லை. பூமிக்குப் பாரம்தான். ஏன் என்னை இருத்தி வைத்து ஆட்டுகிறாய்? கருணாமூர்த்தி என்கிறார்களே! இதுவோ உன் கருணை?” என்று அவர் மனம் அரற்றியது.
இயந்திரப் போக்கில் அவர் கை உப்புமாவை இலையில் தள்ளீயது. பசி ‘சாப்பிடு’ என்று வற்புறுத்தியது. மனக்கசப்பு ‘அதைத் தொடாதே’ என்று தடுத்தது. இப்போராட்டம் பெரிதாகாமல் குறிக்கிட்டது வாசலில் யாரோ கூப்பிட்டது. எழுந்து தள்ளாடியவாறு சென்று வாசல் கதவைத் திறந்தார் கிழவர்.
வாசற்படியில் ஒரு ஸ்வாமி உட்கார்ந்திருந்தார். அவருக்கு நிற்கக்கூட சக்தியில்லை போலும். தேசமெங்கும் சுற்றிச் சுற்றி அவர் உடல் மிகக் கறுத்துக் கிடந்தது. இடுப்பில் காவி படிந்த கிழிசல் வேஷ்டி. உடலெலும்பு தோலைப் பிய்த்து வெளிவர முயற்சி செய்தது. நெற்றியில் பளிச்சென்று பட்டை நாமம். ஆழ்ந்த கண்களில் ஒரு தனி ஒளி. வயதை மதிப்பிட முடியாது. மிக மிக வயதானவர் போல் தோன்றியது.
“இங்கே அடியேன் இங்கு அமுது செய்ய முடியுமா” என்று ஈனக்குரலில் கேட்டார் ஸ்வாமிகள்.
‘இவரை முன் எங்கு பரிச்சயம், வெகு நாட்களுக்கு முன் பார்த்த முகமாயிருக்கிறதே’ என்று யோசனையில் ஆழ்ந்திருந்தார் கிழவர்.
“இல்லையென்றால் கொஞ்சம் மோர் தீர்த்தமாவது குளிர்ந்த தீர்த்தமாவது கொடுக்க சௌகரியப்படுமா? ... இரண்டு நாட்களாக அன்னமில்லை... கேட்ட இடத்திலெல்லாம் போ போ என்று விரட்டுகிறார்கள்...”
“உள்ளே எழுந்தருளுங்கோ ஸ்வாமிகளே!” என்று கிழவர் அவரை மெல்ல அழைத்துச் சென்று, தயாராகப் போட்டிருந்த இலையில் உட்கார வைத்தார். கிழவரின் சோர்வு எங்கோ மறைந்து புதிய தெம்பு தோன்றியது. நான்கு தரம் நெய் போட்டு அதிதியை உபசரித்தார். “அமிர்தமாயிருக்கிறது” என்று ஸ்வாமிகள் உப்புமாவைக் காலி செய்தார். விஜயம் இரவுக்கென்று வைத்திருந்த தயிரை மோராக்கி, அவருக்குக் கொடுத்தார் கிழவர்.
தேவிகள் வீட்டில் இல்லையா?
“குழந்தை வெளியே போயிருக்காள். இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவாள்.”
“தயிர், நெய் ஒன்றும் ராத்திரிக்கு எஞ்சவில்லை போலிருக்கே. உங்களுக்குக்கூட ஒன்றும் வைக்கவில்லை. அபசாரம்!”
“தேவாள் அப்படிச் சொல்லக்கூடாது. எனக்குப் பசியில்லை. குழந்தை வந்தாளானால் எனக்கு வேறு செய்து போடுவாள். தாங்கள் வந்தது என் பாக்கியம். அசக்தன் நான், சரியாக உபசரிக்க முடியவில்லையே என்று குறை.. தங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு! ஸ்ரீரங்கத்தில் இருக்குமோ?”
“இருக்கலாம்” என்றார் ஸ்வாமிகள்.
கிழவரின் நினைவு திருவரங்கத்தை நாடியது. “ரங்கநாதனைச் சேவித்து ரொம்ப நாளாச்சு. இனி எப்போ அந்த பாக்கியமோ! நான் போவேன் என்று நம்பிக்கையே இல்லை”.
“நீர் போகாவிட்டால் அவன் உங்களைத் தேடி வருகிறான்” என்று ஸ்வாமிகள் சிரித்தார். “நீர் கர்ணனைப் போல” என்று விடை பெற்றுச் சென்றார்.
வாசல் கதவைக்கூட தாளிடாது சாய்வு நாற்காலியில் சாய்ந்தார் கிழவர். காதில் ஏதோ சப்தம் கேட்டது. கடலோசையின் ஓங்காரம் போல் தோன்றியது. இல்லை சாமகானமா அது? கண்ணை மூடினார். ஒரு பெரிய மனப்பாரம் நீங்கியதுபோல் ஒரு விடுதலை உணர்ச்சி ஏற்பட்டது. உடலில் பந்தமும் கனமும் மறைந்து ஆடிப்பாடி ஓடி கூத்தாடி வானவீதியில் பறந்து செல்லலாம் என்ற ஓர் உன்மத்தம் தோன்றியது. கிழவர் உள்ளத்தில் சுரந்த இந்த விவரிக்க முடியாத ஆனந்தம் உடல் பூராவும் பரவி புல்லரிக்கச் செய்தது. பூரண சந்திரனைக் கண்டு பொங்கும் கடலினைப் போல் இம்மகிழ்ச்சியால் அவர் உள்ளம் விம்மியது. திடீரென இப்பெருங்களிப்பு மறைந்து சாந்தியடைந்தார்.
“இது என்ன வாசல் கதவு திறந்தபடி கிடக்கிறதே?” என்று பட்டுப்புடவை சலசலக்க கையில் கல்யாணத் தேங்காயுடன் வீடு திரும்பினாள் விஜயம். “இந்தக் கிழத்தால் வீட்டைக்கூட ஜாக்கிரதையாகப் பார்த்துக் கொள்ள முடியாதா? நிம்மதியாகத் தூங்குகிறதைப் பாருங்கள்” என்றாள் பின்தொடர்ந்த ரகுவிடம். தளிகை அறைக் காட்சி அவளை வரவேற்றது. கோபத்தால் ஒரு கணம் சொல் எழவில்லை.
“இதோ பாருங்கோன்னா, உங்கப்பா பண்ணியிருக்கிற அக்கிரமத்தை. பூட்டி வச்சால் கூட சாமானுக்கு ஆபத்துன்னா ஒரு மனுஷி என்னதான் பன்ணமுடியும்?...இந்த மாதிரி நெய்யையும் தயிரையும் எடுத்துக் கொட்டிண்டா அவருக்குத்தான் உடம்புக்காகுமா? குடும்பம்தான் உருப்படுமா?...” என்று அடுக்கினாள்.
மனைவியின் கோபத்துக்குப் பயந்து கிழவரைக் கண்டிக்க என்ணிய ரகு, “அப்பா!” என்று கூப்பிட்டான்.
“என்ன தூக்கம்? அப்பா! அப்பா! ஐயய்யோ!” இதைக்கேட்டு விஜயம் ஓடி வந்தாள்.
“உங்கள் தயவு எனக்கு இனித் தேவையில்லை” என்று ஏளனம் செய்தது கிழவரின் முகத்தின் கடைசிப் புன்முறுவல்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
2 hours ago
8 comments:
Miga Miga azagana kathai...
1960 galil ezhuthapatta mozhi nadai pol theriyavillai.....
நல்ல, உருக்கமான கதை; இந்த 2010-களிலும் 90% வீடுகளில் தினம் தினம் நிகழும் உண்மை நடப்பு. நேரில் பார்த்தாற்போல எழுதியிருக்கிறார். பதிவிற்கு நன்றி.
Dondu,
I am Raji here. What is this u r doing? U are digging the old treasures of late. Kudos to u! I Knew that Athimber was a writer but I thought that he was writing only some columns. What a beautiful story! This is still happening in all the households even now. One cannot depend upon their children in the old days. Have ur own means for living. What touched me the most is that this old man was blessed by God himself and the way Athimber has dealt it subtly, makes my respect for him increase. Please tell Jamba to ask her children, Shanthi and Madhavan to read this.U r doing a great service to people long forgotten to come alive by ur service. May God bless u !
Raji
@ராஜி
அத்திம்பேர் எழுதிய கதைகள் 21 அப்புத்தகத்தில் உள்ளன. அவற்றில் இரண்டை நான் முன்னமேயே பத்திரிகைகளில் படித்துள்ளதையும் பதிவில் எழுதியுள்ளேன்.
எல்லாக் கதைகளையும் ஒவ்வொன்றாக போடும் உத்தேசம், கடவுள் சித்தம் எப்படியோ தெரியவில்லை.
ஜம்பகாவுக்கு அவள் தங்கை மூலம் மெசேஜ் அனுப்ப ஏற்பாடு செய்து விட்டேன். அவள் இப்போது அமெரிக்காவில் இருக்கிறாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// எல்லாக் கதைகளையும் ஒவ்வொன்றாக போடும் உத்தேசம், //
எல்லாக் கதைகளையும் படிக்க உத்தேசம்; சீக்ரம் ஒண்ணொண்ணா போடுங்கோ ஸ்வாமி, மத்ததெல்லாம் அப்றமா எழுதிக்கலாம்
தேவ்
டோண்டு சார்,
இதை படிக்கும் போது, கர்ணனின் இறுதி நிமிடங்களும், பரந்தாமன் ஆட்கொண்டதும் என் மனக்கண் முன் தோன்றிமறைகிறது.
ஒரு நல்ல கதை. மிக்க நன்றி!
எனது பள்ளித்தோழியின் தாயார். கதை நன்கு எழுதுவார்கள் எல்லாம் தன் மகளின் பழைய நோட்டுகளில். கதை முடிந்ததும் அது மகளுக்கு படிக்க கொடுத்தபின் அது பரணில் ஏறிவிடும்.
ஒரு பழைய டிரங்-பெட்டி முழுதும் பழைய நோட்டுகளில் கதைகள் இருந்ததாக என் தோழி சொன்னார்.அவர் கதை எழுதுவது
பற்றி கணவருக்கு ஏதும் தெரியாது. அவர்கள் வீடும் மாறிவிட்டார்கள்.
பலர் திறமைகள் இன்னும் பரணில்தான் தூங்குகின்றன.
நல்ல பதிவு உங்கள் பணி தொடரட்டும்
ராதாகிருஷ்ணன் மதுரை
இது மாதிரி கதைகள் இப்போ நிறையவே வருவதால் முடிவை ஓரளவு யூகிக்க முடிந்தது. 60 களில் இது பெரும் தாக்கத்தை படிப்பவரிடம் ஏற்படுத்தி இருக்க வேண்டும்.
இப்போதைய சூழ்நிலைக்கு காசு சேர்த்து வைத்துக் கொள்ளாத பெற்றோர் நிலை அதோ கதி தான் என்பதும் அது அவர்கள் தவறு என்றும் இதில் குற்ற உணர்வு கொள்ள ஒன்றும் இல்லை என்ற அளவு இதெல்லாம் பழகிப் போன விஷயங்கள் ஆகிக் கொண்டுஇருக்கிறது.
Post a Comment