9/05/2010

அவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா

தலைப்பு சுஜாதா கதையில் வந்த வரியிலிருந்து எடுக்கப்பட்டது. அக்கதை வந்து பல ஆண்டுகளாயின.

ஆனால் இப்போது கிட்டத்தட்ட அதே நிகழ்ச்சி நடந்தது பற்றி தினமலரில் வந்த செய்தியை முதலில் பார்ப்போம், பிறகு சுஜாதாவின் அக்கதைக்கு வருவோம். (பை தி வே நிகழ்ச்சி ப.வேலூரில் நடந்தது என குறிக்கப்பட்டுள்ளது. வேலூருக்கு எப்போ இனிஷியல் கிடைத்தது)?

பைக்கில் புகுந்து கண்ணாமூச்சி காட்டி பதற வைத்த பாம்பு
ப.வேலூர்: பைக்கினுள் பாம்பு புகுந்ததால், அந்த பைக் தனித்தனியாக பிரித்துப்போடப்பட்டது. மூன்று மணி நேரத்துக்கு பின், பைக்கின் இண்டிகேட்டரில் இருந்த பாம்பை பொதுமக்கள் அடித்துக் கொன்றனர்.
ப.வேலூரை சேர்ந்த சேகர் என்பவர் சுல்தான்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளரக பணிபுரிந்து வருகிறார். நேற்று மதியம் ஒரு மணியளவில் மருத்துவமனைக்கு சென்ற அவர், பைக்கை மருத்துவமனை முன் நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். சிறிது நேரத்துக்கு பின், அவர் பைக்கை எடுக்க வந்தபோது, அங்கிருந்தவர்கள் பைக்கினுள் சிறிய பாம்பு புகுந்துள்ளது எனத் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த சேகர் பைக்கை அப்படியும்- இப்படியும் ஆட்டி பாம்பை தேடினார். பாம்பு வெளியே வராததால், மெக்கானிக்கை வரவழைத்து பைக் பாகங்களை தனித்தனியாக பிரித்தனர். எதிலும் பாம்பு தென்படாததால், "பாம்பு வெளியேறியிருக்கும்' என, மெக்கானிக் தெரிவித்துள்ளார்.
பயத்தில் பைக்கை எடுக்க சேகர் தயக்கம் காட்டினார். அப்போது, பைக்கின் பின்பக்க இண்டிகேட்டரில் இருந்து பாம்பு எட்டிப்பார்த்தது. அங்கு நின்றிருந்தவர்கள் பாம்பை அடித்துக் கொன்றனர். பைக்கில் புகுந்து மூன்று மணிநேரம் ஆட்டம் காட்டிய பாம்பால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


இப்போது சுஜாதாவின் அக்கதைக்கு செல்வோம். கதை ஸ்ரீரங்கத்தில் நடந்ததாக எழுதியிருப்பதாக நினைவு. சுஜாதா, அவர் வீட்டில் அவரது தங்கை வத்சலா, அந்தத் தங்கையை சைட் அடிப்பதற்காகவே வரும் அவர் நண்பன் (சீமாச்சு?), கிரிக்கெட் புகழ் கே.வி., பக்கத்தாத்து எதிராத்து மாமாக்கள், சைக்கிள், சைக்கிளுக்குள் பாம்பு ஆகியவைதான் இக்கதையில் இடம் பெறும் முக்கியப் பாத்திரங்கள். நினைவிலிருந்தே கதையை கொண்டு செல்கிறேன்.

முதலில் பாம்பை பார்த்தது சீமாச்சுதான். “டேய் பாம்புடா” என அவன் கத்த, எல்லோரும் திடுக்கிட்டு அதை பார்க்க, பாம்போ இவர்கள் எல்லோரையும் பார்த்து மிக மிக அதிகமாகவே திடுக்கிட்டு விறுவிறுவென சுஜாதாவின் சைக்கிள் சீட்டுக்கடியில் போய் சுருண்டு கொண்டது.

இப்போது சீமாச்சு பாம்பை அடிக்க முஸ்தீபுகள் செய்கிறான். “வத்சலா கிட்டே வராதே, பயந்துக்கப் போறே” என அனாவஸ்யமாக கூறுகிறான். வத்சலாவோ ஆவலுடன் அருகில் வருகிறாள். சுற்று வட்டார ஆண்கள் குழுமுகின்றனர். தலைக்குத் தலை ஆலோசனை. எல்லோரும் பத்திரமாக இருக்க வேண்டும் என அறிவுறைகள் சரமாரியாக வீசப்படுகின்றன.

“அவனவன் பாம்பை பத்திரமா பாத்துக்கோங்கப்பா” என்ற ஒரு இளவட்டக் குரல் கேட்க, “எவண்டா அது செவுள் பிஞ்சிடும் பாத்துக்கோ” என ஒரு பெரிசு உறுமுகிறது. (அப்பாடி தலைப்பை ஜஸ்டிஃபை செய்தாயிற்று).

அதற்குள் பாம்பு சற்றே யோசனையுடன் சைக்கிளை விட்டு இறங்குகிறது. அச்சமயம் கிரிக்கெட் புகழ் கே.வி. (அது வேறு கதை, யாராவது பின்னூட்டத்தில் சொல்லாவிட்டால் நான் சொல்கிறேன்) வந்து சேருகிறான். விஷயம் தெரிந்து தலைமைப் பொறுப்ப ஏற்கிறான். யார் யார் எங்கே நிற்பது என்றெல்லாம் வியூகம் வகுக்கிறான். “வேண்டாம் கேவி அதை விட்டுவிடு. அது சாதாரண தண்ணிப்பாம்பு” என வத்சலா கூற அதை அலட்சியம் செய்கிறான்.

சட்டென வத்சலா ஒரு கம்பை எடுத்து பாம்பின் மேல் வைக்க அது கம்பைச் சுறிக் கொள்கிறது. அப்படியே அதை கம்புடன் எடுத்து சீமாச்சுவிடம் “இந்தா பாம்பு, அடி” என அவள் கூற சீமாச்சுவா வேட்டி அவிழ்வதுகூட உணராது அந்த இடத்தை விட்டு ஓடுகிறான். பிறகு கீழே விழுந்த பாமு சாக்கடை நோக்கி நகர, கேவி அதன் தலையில் தடியால் அடித்து கூழாக்குகிறான். ஏன் அவன் பாம்பை அடித்தான் என வத்சலா தேம்பித் தேம்பி அழுகிறாள்.

கதை முடிவில் தன் தங்கையை இன்னும் நன்றாக புரிந்து கொண்டதாக சுஜாதா கூறுகிறார். சீமாச்சு சைட் அடிக்கும் வேலையை விட்டான் என்றும் கூறுகிறார். (அவருக்கு சகோதரிகளே கிடையாது. இந்த மற்றும் ஏனைய கதைகளில் வரும் அவர் தங்கை ஒரு கற்பனை பாத்திரமே).

இந்தப் பாம்பை வைத்து பல காமெடி சீன்கள் வந்து விட்டன. அவற்றில் ஒன்றில் லிவிங்ஸ்டன் மற்றும் தேவயானி வருகின்றனர். லிவிங்ஸ்டன் வெறும் பந்தா காட்டியபடி மவுத் ஆர்கனில் படையப்பா டியூனை வாசிக்க, தேவயானி அனாயாசமாக ஒன்றுக்கு இரண்டு பாம்புகளை கையால் பிடித்து வீசுகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டது. யாராவது சொல்லுங்கப்பூ.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

சரவணகுமரன் said...

பரமத்தி வேலூராக இருக்கும்.

R. Gopi said...

சுண்டி இழுக்கும் தலைப்பைப் பதிவிற்கு வைத்து மொக்கையாகப் பதிவு போடும் பதிவரின் உத்தி பிரமிக்க வைக்கிறது!!!:)

a said...

//
சரவணகுமரன் said...
பரமத்தி வேலூராக இருக்கும்
//

நானும் அதன் நினைத்தேன்..

Anonymous said...

//அவருக்கு சகோதரிகளே கிடையாது.//

Sujatha had a sister, who passed away in the train, when his mother was compelled to travel with the sick baby. I read somewhere in Sujatha's book.

Sridhar

பெசொவி said...

//இந்தப் பாம்பை வைத்து பல காமெடி சீன்கள் வந்து விட்டன. அவற்றில் ஒன்றில் லிவிங்ஸ்டன் மற்றும் தேவயானி வருகின்றனர். லிவிங்ஸ்டன் வெறும் பந்தா காட்டியபடி மவுத் ஆர்கனில் படையப்பா டியூனை வாசிக்க, தேவயானி அனாயாசமாக ஒன்றுக்கு இரண்டு பாம்புகளை கையால் பிடித்து வீசுகிறார். படத்தின் பெயர் மறந்து விட்டது. யாராவது சொல்லுங்கப்பூ//

என் புருஷன் குழந்தை மாதிரி

வால்பையன் said...

பாம்பு பத்திரமா ஜட்டிகுள்ள ஸாரி பெட்டிகுள்ள இருக்கு!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது