9/19/2010

நக்கீரனிடம் திணறிய விஞ்ஞானி! - விஷயம் சீரியஸ் ஆகவேதான் காப்பி பேஸ்ட்

நக்கீரனிடம் திணறிய விஞ்ஞானி! என்னும் தலைப்பில் பதிவர் ஷொக்கன் இட்ட பதிவு மிக சீரியசான விஷயத்தைக் கூறுவதாகவே நான் கருதுகிறேன். மேலும் அவரது அப்பதிவில் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படவில்லை. இதை பலரும் விவாதிக்க வேண்டும் எனவும் விரும்புகிறேன். அத்துடன் அந்த வலைப்பூவில் ஒருவேளை ஏதேனும் சூழ்நிலையில் அந்த இடுகை நீக்கப்பட்டால் நான் வெறுமனே சுட்டி கொடுப்பதில் பலனிருக்காது. ஆகவே இந்த காப்பி பேஸ்ட். நன்றி ஷொக்கன் அவர்களே. இப்போது அப்பதிவுக்குப் போகலாம்.

இந்தியாவுக்கு வந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டினர்களை அந்தந்த நாட்டின் விமான நிலையத்திலேயே பரிசோதனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். குறிப்பாக சென்னையிலிருந்து செல்லும் வெளிநாட்டினருக்கு கொஞ்சம் கூடுதலாகவே பரிசோதனை செய்யப்பட்டு வருகிறதாம்.

காரணம்? வேறென்ன... தமிழக விஞ்ஞானி கே.கார்த்தி கேயன் குமாரசாமியுடன் இணைந்து லண்டன் விஞ்ஞானிகள் செய்த ஆராய்ச்சியில் எந்த மருந்துக்கும் கட்டுப்படாத "சூப்பர் பக்' கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள் உலகத்திலேயே இந்தியாவில் -அதுவும் சென்னையில்தான் அதிகமாக (44 பேர்) இருக்கிறார்கள். மேலும்... இந்தியாவிலிருந்துதான் இந்த பாக்டீரியா கிருமி உலகம் முழுக்க பரவுகிறது. அதனால், இந்தியாவுக்கு போய் சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு ஆபத்து என்றெல்லாம் பிரபல பிரிட்டிஷ் மெடிக்கல் ஜர்னலான "தி லான்செட்' இதழில் இந்த விஞ்ஞானிகள் வெளியிட்ட செய்திதான் இந்தளவுக்கு பரபரப்பையும் சர்ச்சையையும் உருவாக்கியிருக்கிறது.

இந்த சூப்பர் பக் ஆராய்ச்சியின் முடிவு குறிப்பிட்ட மல்ட்டி நேஷனல் மருந்து கம்பெனியின் மருந்துக்கு (ஆன்டிபயாடிக்) விளம்பரமாகவே அமைந்திருக்கலாமோ? என்ற கேள்வியை கடந்த ஆகஸ்ட் 18-ந் தேதி நக்கீரனில் "திக் திக் சூப்பர் பக்' என்ற கட்டுரையில் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தோம்.

இந்த நிலையில்தான்... "யாரிடம் அனுமதி பெற்று "சூப்பர் பக்' ஆராய்ச்சியைச் செய்தீர்கள்? இதற்கான பதிலை 14 நாட்களுக்குள் தெரியப்படுத்த வேண்டும்' என்று தமிழக விஞ்ஞானிகள் உட்பட இந்த ஆராய்ச்சியில் சம்பந்தப்பட்ட அனைத்து இந்திய விஞ்ஞானிகளுக்கும் கெடு விதித்து அதிரடி நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது மத்திய மருந்துக் கட்டுப்பாட்டுத் துறை. இன்னும் பலவித சந்தேகக் கேள்விகள் நம் இதயத்தில் பக்பக்கை உண்டாக்க... "சூப்பர் பக்' சர்ச்சையை கிளப்பிய சென்னை தரமணியிலுள்ள மைக்ரோபயாலஜி துறையின் விஞ்ஞானியான கே.கார்த்திகேயன் குமாரசாமியிடமே கேட்டோம். பலவித தயக்கத்திற்குப் பிறகே நம்மிடம் பேச ஆரம்பித்தார்.

உலகம் முழுக்க இந்த பாக்டீரியா கிருமி இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்க இந்தியாவிலிருந்துதான் பரவுகிறது என்று எப்படி சொல்ல முடியும்? உலகத்திலேயே சென்னையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக எதை வைத்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதினீர்கள்?

உலகம் முழுக்க இந்தக் கிருமி இருப்பது உண்மைதான். ஆனால் இந்தியாவிலிருந்து சிகிச்சை பெற்றுச் செல்லும் வெளிநாட்டுக்காரர்களை இந்த நோய் தொற்றியிருப்பதால் லண்டன் விஞ்ஞானியான திமோதி ஆர்.வால்ஷும், டேவிட் எம்.லிவர்மோரும் அப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்.

சென்னையிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனைகளிலும், மூன்று அரசு மருத்துவமனைகளிலும் உள்ள நோயாளிகளிடம் செய்த ஆய்வில்தான் 44 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

சரி... எத்தனை நோயாளிகளிடம் செய்த ஆய்வில் 44 பேருக்கு இந்த சூப்பர் பக் கிருமி தொற்றியிருக்கிறது?

அது வந்து... (நா தடுமாறுகிறது) சரியான புள்ளிவிபரத்தை பார்த்துவிட்டுச் சொல்றேங்க. (இதழ் அச்சாகும் வரை சொல்லவில்லை).

சூப்பர் பக் நோய்க்கிருமி "பாசிட்டிவ்' ஆனவர்கள் எந்த மாதிரியான அறிகுறிகளோடு வந்திருந்தார்கள்? எந்தெந்த மருத்துவமனையில் எடுத்தீர்கள் என்கிற விபரங்களை (ப்ரஃபோர்மா) தர முடியுமா?

ஸாரி... மருத்துவ எத்திக்ஸ்படி அந்த விபரங்களை தரக்கூடாது.

எந்த பரிசோதனை மையத்தில் ஆய்வு செய்து 44 பேருக்கு நோய் தொற்றி யிருப்பதை உறுதி செய்தீர்கள்?

நம்ம தரமணியில் இருக்கிற "லேப்'லதான்.

இல்லையே.. நீங்க லண்டனுக்கு அனுப்பி ஆய்வு செய்ததாகத்தானே எங்களுக்குத் தகவல் கிடைத்தது?

ஆ... ஆமாம்.... இந்த லேப்ல கன்ஃபார்ம் பண்ணிட்டு அதுக்கப்புறம்தான் லண்டனுக்கு நோயாளிகளிடம் எடுக்கப்பட்ட ஸாம்பிளை அனுப்பி வெச்சேன்.

லண்டனில் ஆய்வு செய்த லேப் தரச்சான்று பெற்ற லேப்தானா?

நிச்சயமாக... லண்டனில் உள்ள பிரபல கார்டிஃப் பல்கலைக்கழகத்தின் மிகப்பெரிய தரச்சான்று பெற்ற லேப்லதான் சோதிக்கப்பட்டது.

நோயாளிகளின் உடம்பிலிருந்து எடுக்கப்பட்ட ஸாம்பிள்களை அவ்வளவு எளிதாக வெளிநாட்டுக்கு அனுப்ப முடியாதே? ஐ.சி.எம்.ஆர். உள்ளிட்ட அரசு சார்ந்த அனுமதிகள் வாங்கணுமே?

சிறு அமைதிக்குப் பிறகு... ""ஸார்... எங்களோட நோக்கம் இந்தியாவில் (சென்னையில்) பாதிக்கப்பட்டவர் களுக்கு எந்த மருந்தைக் கொடுத்தா குணமாக்கலாம்? 44 எண்ணிக்கையை படிப்படியாக எப்படி குறைப்பதுங்கிறதாத்தான் இருந்தது. அதனால அவசரத்துல முழுமையான அனுமதி பெற முடியல.

இப்போ அந்த 44 பேஷன்டுகளின் நிலைமை?

அது... அந்தந்த மருத்துவமனையின் டாக்டர்கள் பார்த்துப்பாங்க சார். நாம தலையிட முடியாது. (அய்யய்யோ!)

முதன் முதலில் இந்த நோய்க்கிருமியை யார் கண்டுபிடிச்சது?

ஸ்வீடன் நாட்டில் வாழும் இந்தியருக்கு இந்தக் கிருமி தொற்றியிருப்பது தெரிஞ்சுதான் 2008-ல் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானிகள் இதற்கு "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1' என்று பெயர் வெச்சாங்க.
அப்புறம் எப்படி "மெட்டல்லோ பீ-லேக்டமஸ் 1'-ங்கிற பெயருக்கு முன்னால, நியூ டெல்லிங்கிற பெயர் வந்தது?

ஆன்டிபயாடிக் மருந்தையே எதிர்க்கும் திறன்கொண்ட இந்த கிருமி குறித்து லண்டன் விஞ்ஞானிகளான திமோதி ஆர். வால்ஷ், டேவிட் எம்.லிவர்மோர் என்கிற இரண்டு பேரும்தான் நோய் பாதிக்கப்பட்ட ஸ்வீடன் நாட்டுக்காரர் இந்தியர் என்பதால் அப்படி ஒரு பெயரை சூட்டிட்டாங்க. அதுக்கப்புறம்தான் நக்கீரனில் குறிப்பிட்டிருந்த மாதிரி மும்பை பி.டி.ஹிந்துஜா மருத்துவ ஆராய்ச்சி மைய டாக்டர்கள்... முதன் முதலில் "ஜர்னல் ஆஃப் தி அசோசியேஷன் ஆஃப் ஃபிஸிஷியன் இன் இண்டியா' (ஜே.ஏ.பி.ஐ.) இதழில் மூணு மாசத்துக்கு முன்னால கட்டுரை எழுதினார்கள். அந்தக் கட்டுரையைத்தான் அப்பல்லோ மருத்துவமனை யின் மைக்ரோ பயாலஜி துறையின் தலைவர் டாக்டர் அப்துல் கஃபூரும் ஆதரிச்சு எழுதினாரு. அதுக்கப்புறம்தான் உலகளாவிய ஆய்வில் சென்னையில் அதிகமா இருக்குன்னு "லான் செட்' இதழில் வெளியிட்டோம்.

உங்களின் ஆராய்ச்சிக்கு பண உதவி செய்த "வைத்' என்கிற மல்டி நேஷனல் மருந்துக் கம்பெனியின் மருந்துதான் இந்த நோய்க்கு சரியான மருந்து என்று பரிந்துரை செய்திருக்கிறீர்களே? இது வியாபார நோக்கமாக இல்லையா?

வைத் கம்பெனி எனக்கு லண்டன் போறதுக்கு ஃப்ளைட் சார்ஜ் மட்டும்தான் பண்ணினது. ஆனா, மீதியெல்லாம் எங்க நிலம், சொத்து பத்தெல்லாம் விற்று ஏழு லட்சம் செலவு பண்ணி (?) இந்த ஆய்வை பண்ணி யிருக்கேங்க.

ஐரோப்பிய யூனியனும், வெல்கம் ட்ரஸ்ட்டும் லண்டன் விஞ்ஞானிகளின் ஆய்வுக்குத்தான் பணம் கொடுத்தாங்க. இந்தியாவுல எந்தத் தொண்டு நிறுவனமும் பணம் கொடுத்து எனக்கு உதவலைங்க..

அப்படீன்னா வெளிநாட்டு தொண்டு நிறுவனங்கள்+ஆன்டிபயாடிக் மருந்து கம்பெனிகள், வெளிநாட்டு விஞ்ஞானிகள் உங்கள் திறமையையும், வறுமையையும் பயன் படுத்திக்கிட்டு இந்தியாவின் பொருளாதாரத்தை சீர் குலைக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கு உங்களையும்... அப்பல்லோ மருத்துவமனையின் டாக்டர் அப்துல் கஃபூரையும் கருவியா பயன்படுத்தியிருக்காங்க இல்லையா?

அமைதியாக இருக்கிறார்... பதில் இல்லை.

இதுவே லண்டனிலிருந்து தான் சூப்பர் பக் கிருமி பரவுதுன்னு லண்டன் விஞ்ஞானி இந்திய விஞ்ஞானியோடு சேர்ந்து ஜர்னலில் செய்தி வெளியிட்டா... லண்டன்காரன் அந்த லண்டன் விஞ்ஞானியை சும்மா விட்டுருவானா? என்றபோது...

""இதுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பலைங்க'' என்று பேச்சை முடித்துக்கொண்டார்.

சரி... இந்த நோய்க்கிருமி தொற்றாமல் பாதுகாத்துக்கொள்வது எப்படி? பி.டி.கத்திரிக்காய்க்கு தடை விதிக்கப் போராடிய பிரபல விஞ்ஞானி பார்கவா, "எவ்வளவு பெரிய நோய்க்கிருமியா இருந்தாலும் நமது செல்லுக்குள் நுழைந்து பாதிப்பை ஏற்படுத்தாமல் பாதுகாக்கும் தன்மை (Membrance Stabilizing effect) நம் ஊரிலுள்ள மஞ்சளுக்கு இருக்கிறது.

இதை ஆய்வு செய்தால் இந்த சூப்பர் பக் கிருமிக்கு நமது நாட்டிலேயே மருந்து கண்டுபிடித்து விடலாம்' என்றிருக்கிறார். இதைச் சுட்டிக்காட்டும் டாக்டர் அபிராமியோ, ""மருந்து கண்டுபிடிக்கும்வரை தினமும் சமையலில் மஞ்சள் பொடியை 1/4 டீஸ்பூன் அளவு பயன்படுத்தினாலே போதும்... மஞ்சளை தனியாக சாப்பிட வேண்டாம். அப்படியே பாலில் கலந்து சாப்பிட வேண்டும் என்றால் கூட 2 பல் பூண்டை நசுக்கி கொதிக்கிற பாலில் போட்டு ஒரு சிட்டிகை அளவு (ஒரு கிளாஸ் பாலுக்கு) பயன்படுத்தினாலே போதும். பெரும்பாலும் கசப்பு, துவர்ப்பு சுவை உணவுகளை சாப்பிடுவது நல்லது. வயிற்றைச் சுத்தமாக வைத்துக் கொண்டு இயற்கையான உணவு வகைகளைச் சாப்பிட்டாலே சூப்பர் பக் என்ன... சூப்பர் கிக்கு, சூப்பர் கொக்கு... என எந்த நோய்க்கிருமியும் அண்டாது'' என்கிறார் ஆலோசனையாக.

ஒவ்வொரு வருடமும் உலக சுகாதாரத்தினத்தன்று பரபரப்பு நோய் குறித்து அலசப்படும். இந்த வருட (2011 ஏப்ரல்) உலக சுகாதார மையத்தின் (WHO) ஹாட் டாபிக்கே "சூப்பர் பக்' பற்றிதான். ஆக... உண்மையிலேயே மக்களுக்கு நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தால் தமிழக விஞ்ஞானி கே.கார்த்திகேயனை இந்திய அரசு பாராட்டி கௌரவிக்க வேண்டும். வீண் வதந்தியையும் பீதியையும் பரப்பியிருந்தால் தண்டிக்க வேண்டும்.


இதில் முக்கியமாகத் தெரிவது நம்மவர்களின் அடிமை புத்திதான். வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. வெகு நாட்களுக்கு முன்னால் ஒளிபரப்பப்பட்ட ஹிந்தி சீரியல் “ஜுனூனில்” ஒரு காட்சியில் ஹோட்டல் ரிசப்ஷனிஸ்டுக்கும் வெள்ளைக்கார விருந்தாளிக்கும் விவாதம் ஏற்பட அங்கு வந்த மேலாளர் என்ன ஏது என்றுகூட விசாரியாது “வெளிநாட்டினர் பொய் சொல்லவே மாட்டார்கள்” எனத் திருவாய் மலர்ந்தருளுகிறார். அந்த புத்திதான் தரமணி விஞ்ஞானியையும் பீடித்துள்ளது என நினைக்கிறேன்.

//வைத் கம்பெனி எனக்கு லண்டன் போறதுக்கு ஃப்ளைட் சார்ஜ் மட்டும்தான் பண்ணினது. ஆனா, மீதியெல்லாம் எங்க நிலம், சொத்து பத்தெல்லாம் விற்று ஏழு லட்சம் செலவு பண்ணி (?) இந்த ஆய்வை பண்ணி யிருக்கேங்க.//
ஆமாங்க, ஆனால் இது என்னவோ அப்பா குதிருக்குள்ள இல்லைங்கற மாதிரியாகத்தானே இருக்கு. ஏழு லட்சம் செலவழிக்கிற அளவுக்கு இவருக்கு என்ன மோட்டிவேஷன் ஐயா? அது உண்மையாகவே இருக்கும் பட்சத்தில் இவர் ஏமாளியாகத்தான் இருக்க வேண்டும். வைத் கம்பெனியிடமிருந்து எல்லா செலவுகளையும் அதட்டிக் கேட்டு ஈடு செய்து கொண்டிருக்க வேண்டாமோ?

எனக்கென்னவோ இது முழுக்க பனிக்கட்டியின் மேலே தெரியும் பகுதி மட்டுமே எனத் தோன்றுகிறது. அடியில் கிளறினால் இன்னும் என்னென்ன வருமோ? லண்டன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு பலர் வைத்தியத்துக்காக வந்து போவதைக் கண்ட வயிற்றெரிச்சலில் இதையெல்லாம் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது. வயிற்றெரிச்சல் எல்லாம் படாமல் இருக்க வெள்ளைக்காரன்கள் எல்லாம் புத்தர்களா என்ன?

அன்புடன்,
டோண்டு ராகவன்

10 comments:

Anonymous said...

<<<< லண்டன் நிறுவனங்கள் இந்தியாவுக்கு பலர் வைத்தியத்துக்காக வந்து போவதைக் கண்ட வயிற்றெரிச்சலில் இதையெல்லாம் செய்கிறார்கள் எனத் தோன்றுகிறது. வயிற்றெரிச்சல் எல்லாம் படாமல் இருக்க வெள்ளைக்காரன்கள் எல்லாம் புத்தர்களா என்ன >>>

சென்ற ஆண்டு (2009) எத்தனை “வெள்ளைக்காரன்கள்” இந்தியாவிற்கு / சென்னைக்கு வந்து வைத்தியம் செய்து கொண்டனர்? இந்த ஆண்டு இன்றுவரை (19-09-2010) எத்தனை“வெள்ளைக்காரன்கள்” வந்துள்ளனர்? உங்களிடம் விவரம் இருந்தால் வெளியிடுங்களேன்.

வைத்தியத்திற்காக வெளிநாடுகளிலிருந்து இந்தியா வருபவர்கள் முக்கியமாக பங்களாதேஷ், நேபாள், பூடான், ஸ்ரீலங்கா என ஹிந்துவில் வந்த புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

வஜ்ரா said...

முதலில் கார்த்திகேயன் இதை தான் எழுதாமல் துரைமார்கள் எழுதியது என்று மழுப்பினார்.
பின்னர் வேறு வழியில்லாமல் ஒத்துக்கொண்டார்.

மெட்ராஸ் பல்கலைக்கழகத்திலிருந்தே சாம்பிள்கள் அரசு அனுமதியில்லாமல் அனுப்ப முடிகிறது பெற முடிகிறது என்றால் இன்னும் சிறு சிறு பல்கலைக்கழகங்களில் இவரைப்போன்ற மனநிலையுடன் ஆராய்ச்சி செய்யும் ஆய்வாளர்கள் என்னென்னா சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ. நுணிக்கிளையில் அமர்ந்துகொண்டு அடிக்கிளையை வெட்டும் அறிவுஜீவிகளால் தான் இந்திய அறிவியலே நடத்தப்படுகிறது போல் உள்ளது.

இந்த வெள்ளைத்தோல் பார்த்து சலாம் போடும் வியாதி மனநிலை இருப்பதால் தான் இத்தாலிய ரப்ரிதேவி சோனியாவினால் இந்தியாவை ஆட்சி செய்ய முடிகிறது.

Venkat said...

"வெகு நாட்களுக்கு" முன்னால் ஒளிபரப்பப்பட்ட ஹிந்தி சீரியல் “ஜுனூனில்”

Sameebathil illaiyaa :)

அருள் said...

வஜ்ரா said...

// //இந்த வெள்ளைத்தோல் பார்த்து சலாம் போடும் வியாதி மனநிலை இருப்பதால் தான் இத்தாலிய ரப்ரிதேவி சோனியாவினால் இந்தியாவை ஆட்சி செய்ய முடிகிறது.// //

1. வெள்ளைத் தோல்காரர்கள் ரொம்ப 'நல்லவர்கள்' என்கிற மனோபாவம் முற்றிலும் ஒழியவேண்டும் (உள்நாட்டு வெள்ளைக்காரர்கள் + பசுமாடு உட்பட).

2. ரப்ரிதேவி வெள்ளைத் தோல் கொண்டவர் அல்ல. மோசமானவரும் அல்ல.

Anonymous said...

//இந்த வெள்ளைத்தோல் பார்த்து சலாம் போடும் வியாதி மனநிலை இருப்பதால் தான் இத்தாலிய ரப்ரிதேவி சோனியாவினால் இந்தியாவை ஆட்சி செய்ய முடிகிறது//

அப்ப அத்வானி என்ன கருப்பு தோலா??? இந்த வாரம் தெரிந்துவிடும்... அத்வானியின் யோக்கிதை

Anonymous said...

/ (உள்நாட்டு வெள்ளைக்காரர்கள் + பசுமாடு உட்பட).//

வந்துட்டான்யா வந்துட்டான்யா !!

நீங்க வேணா உங்க வீட்டு மாட்டுக்கு கருப்பு பெயின்ட் அடிச்சு வச்சுக்கங்க..
ஹி...ஹி... கருப்பு தான் எனக்கு புடிச்ச கலரு

hayyram said...

/இதில் முக்கியமாகத் தெரிவது நம்மவர்களின் அடிமை புத்திதான். வெள்ளைக்காரன் எது சொன்னாலும் அது உண்மையாகத்தான் இருக்கும் என்ற குருட்டு நம்பிக்கை. // முற்றிலும் உண்மை. இதைக்கிண்டல் செய்வது போல தான் வடிவேலு காமெடி ஒன்றில் வெள்ளையா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்யா என்பார்கள். நம்மக்களின் அடிமை புத்தியால் இன்றைக்கு மருத்துவம் ப்ளாக் மெயில் வியாபாரம் ஆகி விட்டது. நீ செத்துடுவன்னு பயமுறுத்தியே கோடிக்கனக்காக சம்பாதிக்கும் ஃப்ராடு தொழிலாகி விட்டது. எனக்குத் தெரிந்த நன்பன் மெடிகல் ரெப். அவன் ஹார்ட் சர்ஜரி செய்யும் வால்வு ஒன்றுக்கு இரண்டாயிரம் கமிஷனாக டாக்டருக்கு கொடுக்கிறானாம். ஒவ்வொரு ஆப்பரேஷன் முடிந்தவுடன் டாக்டர்கள் ஃபோன் செய்து இன்னைக்கு ரெண்டு வால்வ் யூஸ் பன்னிருக்கேன்னு கணக்கு சொல்லி கமிஷன்வாங்குவார்கள் என்றும் கூறுகிறான். நல்லா இருக்கறவங்களுக்கும் வால்வு பொருத்த மாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? நம்மை காப்பாற்ற யாருளர்?

hayyram said...

முக்கியமா திராவிட மாயை கொண்டவர்கள் அதிலும் எம் ஆர் ராதா போன்றவர்கள் தான் 'நம்மை விட வெள்ளைக்காரன் தான் புத்திசாலி, நீங்கள்லாம் முட்டாள்' என்று தனது எல்லா சினிமாவிலும் நம்மக்களை மட்டம் தட்டுவதையே வேலையாக கொண்டிருப்பார்கள். அதன் கூலியை இன்றைய தமிழர்கள் அனுபவிக்கிறார்கள். ராபின்குக் கதை தான் ஞாபகம் வருகிறது. தானே நோய்க்கிருமியை உண்டாக்கி பரப்பி விட்டு, தன்னிடம் தான் அதற்கும் மருந்திருக்கிறது என்று கூறி கோடீஸ்வரனாகி மாட்டிக்கொள்ளும் டாக்டரின்கதை தான் இந்தியாவில் இப்போது நடைமுறைப் படுத்தப்படுகிறது. ஆண்களுக்கும் மெனோபாஸ் இருக்கிறது என்று கிளப்பி விட்டு அதற்கும் மருந்தும் கொடுக்க முயற்சித்த அயோக்கிய டாக்டர்களை என்னவென்று சொல்ல? ராமதாஸின் மகன் அன்புமனி கூட அவர் பதவியில் இருக்கும் போது குழந்தைகளுக்கு இலவசமாக போடப்படும் வேக்ஸின் மருந்து தயாரிக்கும் அரசுக்குச் சொந்தமான இந்தியாவின் மூன்று நிறுவனங்களை வலுக்கட்டாயமாக மூடி அரசை தனியாரிடம் வாங்கச் செய்தார். இது போன்று ஏழைகளின் உயிரோடு விளையாடும் டாக்டர்களை உயிரோடு விட்டுவைப்பது தான் ஆபத்தாக இருக்கிறது. சைனா மாதிரி தூக்கில் போட்டு விட வேண்டும்!

Anonymous said...

இந்த‌ விச‌ய‌த்துக்கு இவ்வ‌ள‌வு முக்கிய‌த்துவ‌ம் கொடுத்த‌து, ஊட‌க‌ங்க‌ளின் த‌வ‌று. ஒரு குறிப்பிட்ட‌ ப‌குதியில் உள்ள‌ நோய் கிருமி அது ஏற்ப‌டுத்தும் பாதிப்பு ப‌ற்றி அப்ப‌குதியில் உள்ள‌ விஞ்ஞானிக‌ள் ஆராய்ச்சி செய்து ஆய்வுக்க‌ட்டுரை எழுதுவ‌து சாதார‌ண‌மாக‌ ந‌ட‌க்க‌க் கூடிய‌து. இதை ஊதிப் பெரிய‌தாக்கி, இந்த‌ ஆராய்ச்சியில் ஏன் ஈடுப‌ட்டாய் என‌ கேள்வி எழுப்புவ‌து ந‌கைச்சுவையின் உச்ச‌ம். இந்தியாவில் ப‌ல்க‌லைக‌ழ‌க‌ங்க‌ள் ம‌ற்றும் தேசிய‌ ஆய்வ‌க‌ங்க‌ளில் வேலை செய்யும் விஞ்ஞானிக‌ள் என்ன‌ ஆராய்ச்சியில் ஈடுப‌டுவ‌து என்ப‌தை அந்த‌ விஞ்ஞானி தான் தீர்மானிக்கிறார். சில‌ நேர‌ங்க‌ளில், அர‌சு குறிப்பிட்ட‌ ஆராய்ச்சியில் ஈடுப‌ட‌ கேட்டுக்கொள்ளும். அத்த‌கைய ஆராய்ச்சியில் ஈடுப‌ட‌ விருப்ப‌ம் இருந்தால் ஈடுப‌ட‌லாம், இல்லையென்றால் ம‌றுத்துவிட‌லாம். நான் என்ன‌ ஆர‌ய்ச்சியில் ஈடுப‌டுகிறேன் என்ற‌ முழுவிவ‌ர‌ங்க‌ளும் என‌து ஆய்வ‌க‌ இய‌க்குன‌ருக்கு தெரியாது. இது உல‌க‌ அள‌வில் உண்மை.
-krishnamoorthy

Anonymous said...

http://www.sciencedaily.com/releases/2009/04/090420121425.htm

Instead of questioning the scientist, the Indian government should spend some money and paint our hospitals with this kind of paints. Representatives from Sherwin-Williams, second largest paint producer in the world, will be meeting us on Tuesday to see the possibility of licensing the antimicrobial-paint developed in our lab. Please read the comments by the US scientists about the "superbugs" in US. The US government didn't question the scientists, instead provided funding to develop paints to circumvent the problem.
-krishnamoorthy

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது