என் தந்தை அமரர் நரசிம்மன் அவர்களுக்கு சிறுகதை எழுத வேண்டுமென ஓர் ஆசை வெகு நாட்களாக இருந்து வந்திருக்கிறது. நான், என் அக்கா, என் பெரியப்பாவின் குழந்தைகள் ஆகியோருக்கு அவர் சொல்லும் கதைகள் மிகவும் பிடிக்கும். பீமன் துரியோதனனின் சண்டையை வர்ணித்த அவர் சமீபத்தில் 1952-ல் துரியோதனனின் மரணாவஸ்தையை அபிநயத்துடன் கூறியதை நான் பயத்துடனும் அதே சமயம் ஆர்வத்துடனும் கேட்டுள்ளேன்.
ஹெலன், பாரீஸ், யுலிஸெஸ், அகில்லீஸ், ஹெக்டார் ஆகிய பாத்திரங்களின் இரு கதைகளையும் மிக தத்ரூபமாக கூறியிருக்கிறார். ஆகவேதான் ஹெலன் ஆஃப் ட்ராய் மர்றும் யுலிஸெஸ் திரைப்படங்களை என்னால் மனம் ஒன்றிப் பார்க்க முடிந்தது. பத்துக்கட்டளைகள் நிகழ்வு பற்றி ஏற்கனவேயே எழுதிவிட்டேன்.
அவர் கையெழுத்தில் எழுதி என்னிடம் ஒரு கதையை படிக்கக் கொடுத்தார். அதன் பிறகு சில நாட்களிலேயே உடம்புக்கு வந்து மறைந்து போனார் (செப்டம்பர் 1979). அதை உடனுக்குடனேயே படித்தவனே, தந்தையுடனும் விவாதித்திருக்கிறேன். பிறகு வந்த வீடு மாற்றங்களில் கண் பார்வையிலிருந்து மறைந்து போனது அது. இத்தனை நாட்கள் கழித்து அக்கதை நேற்று எதேச்சையாக என்னிடம் கிடைத்தது. அதை நான் இங்கு தருவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அக்கதையின் தலைப்புதான் இப்பதிவுக்கும் தலைப்பாகும். ஓவர் டு ஆர். நரசிம்மன்.
நடுப்பகல், ஆனால் வானம் இருண்டிருந்தது. கடல் பக்கமிருந்து ஊதல் காற்று பலமாக வீசியது. எங்கும் கடும் புயலின் சின்னங்கள், செடிகள், பிரவாகமெடுத்தோடும் அருவிகள், மின்னல்கள், இடி.
அடையாற்றின் கரையில் ஒரு சிறிய மேடு. அதில் ஒரு பாறை மீது வீற்றிருந்த அந்த முதியவர் சொட்டச் சொட்ட நனைந்து விட்டார். நீண்ட வெள்ளை கலந்த தாடி மீசை. தீட்சண்யமான பார்வை, கூரிய வளைந்த மூக்கு, மாநிறம். முதியவர் ஆளைத் தள்ளும் மழையையும் காற்றையும் கவனித்ததாகத் தெரியவில்லை.
“சாமீ, சாமீ, இப்படி திறந்த வெளியில் கொட்டும் மழையில் ஒக்கார்ந்திருக்கீங்களே. குடிசைக்குள்ள போலாம், வாங்க” என்றான் ஒரு இளைஞன். மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க வந்த அவன் அப்போதுதான் வந்த அவன் அரையில் ஒரு வேட்டி மட்டும் கட்டியிருந்தான். தலையில் ஒரு சிறு முண்டாசு. அவன் பேசி முடிக்கவில்லை, அப்போதுதான் காதைப் பிளக்கும் சத்தத்துடன் அவர்கள் அருகாமையில் ஒரு இடி நெடிய பனைமரம் ஒன்றைத் தாக்கி, அதன் முடியை வீழ்த்தியது.
முதியவர் அதைப் பொருட்படுத்தவில்லை. கனிவு கலந்த குரலில் “குள்ளா, நீ கூடத்தான் நனைந்து விட்டாய். இது உனக்கும் எனக்கும் ஒரு ஞான ஸ்நானம். நம் பாபங்கள் கரைகின்றன”. இந்த வேதாந்தம் குள்ளனுக்கு அவ்வளவாகப் புரியவில்லைதான். அவ்வளவு பெரியவரை, மதிப்புக்குரியவரை எப்படி உள்ளே போகச் சொல்வது என்று அவன் தயங்கினான்.
அவன் கண்கள் நாலாபுறமும் சுழன்றன. கீழே அடையாறு ஹோவென்று வெள்ளமெடுத்து ஓடியது. சுற்றிலும் சுள்ளி, சப்பாத்தி, ஏனைய முட்செடிகள், புதர்கள், சிறிய மரங்கள், நீண்ட பனைமரங்கள் தெரிந்தன. பார்வைக்கு சுற்றிலும் அமானுஷ்யமான பிரதேசமாக இருந்த பொழுதிலும் நடுநடுவே சிறிய கிராமங்கள் இருந்தன. சிலவற்றின் இருப்பிடத்திற்கான அறிகுறிகள் கூர்ந்து கவனிப்போர்க்கு மழை சற்று தணிந்த நேரங்களில் தென்பட்டன.
காலம் கடந்தது. முதியவர் என்ன நினைத்தாரோ, பிறகு தானே அருகாமையிலுள்ள குடிசிக்குள் சென்றார். சிறிய குடிசைதான், ஆனால் சாந்தம் தவழும் தூய ஆசிரமம். முதியவர் மண்டியிட்டு பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.
அவர் மண்டியிட்டபொழுதுது, குள்ளன் - தாய் தந்தையர் இட்ட பெயர் சாத்தன் என்பது - ஆச்சரியத்தில் ஆழ்ந்தான். சுமார் நான்கு கல் தூரத்திலுள்ள மயிலை - திருவல்லிக்கேணியிலே உள்ள ஜனங்கள், ஏன் அவனும்தான், ஆண்டவனை சாஷ்டாங்கமாக நிலம் தோய விழுந்து அஞ்சலி செலுத்துவர். கடந்த சிலகாலமாக, தாடி சாமியார் இங்கு வந்த காலத்திற்கு பின்பு, அவனும் இப்போதெல்லாம் அவருடன் கூடி மண்டியிட்டுத்தான் பிரார்த்தனை செய்கின்றான் என்றாலும், இன்னமும் அவ்வாறு மண்டி போடுவதின் புதுமை அவனை அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்தத் தவறுவதில்லை. ஓரோர் தடவை அவன் பழையபடியே கீழே விழுந்து நமஸ்கரிப்பதுண்டு. பிறகுதான் ஞாபகம் வரும்.
“யப்பா” என்ற ஒரு மழலைக்குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது. ஒரு மூன்று வயதுப் பெண்குழந்தை ஓடிவந்து அவன் கால்களைக் கட்டிக் கொண்டது. கூடவே வந்த மனைவியையும் கண்டான். ஒதுக்குப்புறமாக மறுபடியும் வலுக்கத் தொடங்கியிருந்த மழையில் சற்றுத் தள்ளி, ஒரு சிறிய மரத்தடியில் ஒதுங்கியிருந்தவளைப் பார்த்து, “மங்கா ஏன் வந்த? நான் பெரியவருடன் இருப்பதை கிராமத்துலதான் தடுக்கற.இங்குமா வரணும்”? என்று சற்று தணிந்த குரலில் ஆனால் உஷ்ணத்துடன் கேட்டான்.
ஒரு கணம் அவள் பதில் பேசவில்லை. அவள் முகம் பயத்தால் வெளிறியிருப்பதையும், அவள் கெஞ்சும் கண்களையும் பார்த்த பிறகு, அவன் சற்று பரிவுடன் அவளை நோக்கி ஓரடி வைத்தான். அவள் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு, “சீக்கிரம், சீக்கிரம், நாம் ஓடிப்போகணும் மச்சான். எதிர்க்கரை ஊர்க்காரர்கள் திரண்டு வருகிறார்கள். அவரோடு உன்னையும் கொன்று விடுவார்கள்”, என்றாள். அவள் கண்கள், சுழித்துக் கொண்டு, சிறிய மரங்களையும், செடி, கொடிகளையும் அடித்துக் கொண்டு விரைந்தோடும் ஆற்றிற்கப்பால் பார்வையைச் செலுத்தி, குறிப்பாக உணர்த்தின.
பிரம்மாண்டமான அரச மரத்துக்கருகில் ஒரு சிறிய இடைவெளியில், மழை நடுவே வேல்கம்புகளும், ஈட்டிகளும் கொண்டிருந்த சில மனிதர்கள் தென்பட்டனர்.
ஒரு கணத்தில் நிலைமையைக் குள்ளன் ஊகித்தான். வருபவர்களில் சிலர் அவன் நண்பர்களாக, சமுத்திரத்தில் அவன் மீன் பிடிக்கச் செல்லும்போதெல்லாம் அவனுடன் கூடவே தாங்களும் அதே பரம்பரைத் தொழிலைச் செய்து வந்தனர். அந்தக் காலம் போய் விட்டது. இப்பொழுது அவர்கள் அவனை நஞ்சைப் போல வெறுத்தனர். சாமியார், மேற்கே ஏதோ கடல் இருக்கிறதாமே, அந்தப் பக்கத்திலிருந்து இங்கு வந்ததிலிருந்து ஏற்பட்டப் பிளவின் காரணமாகத்தான் அந்த விரோதம் ஏற்பட்டது. இப்பொழுது அவன் தன் மனைவியின் கிராமத்தில்தான் வசிக்கிறான்.
அவன் மனைவியைப் பார்த்து, “சரி, சரி நீ போ. குழந்தையை பத்திரமாக எடுத்துப் போ” என்றான். மங்காவும் வேறொரு பக்கமாக விரைந்து சென்று, புதர்களிடையில் மறைந்தாள்.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
அந்தச் சிறியகும்பல் அடையாற்றங்கரையை அடைந்தபோது சூரியன் உச்சியைக் கடந்து மேற்கே சிறிது தூரம் சென்றுவிட்டிருந்தது. ஐப்பசி மாதம், வடகிழக்குப் பருவ மழை. கூடவே பெரும்புயல் வேறு. ஓரிரண்டு வாரங்களாக அவர்களில் யாருமே கடலுக்குப் போகவில்லை. காரணம் கடல் கொந்தளிப்பு. அதற்கு சில மாதங்களுக்கு முன்பு கடற்காற்று அடிக்கடி தவறிவிட்டது.
சாதாரணமாக மீனவர்கள் காலை வேளையில் நிலக்காற்றின் உதவியோடு கடலுக்குள் வெகுதூரம் சென்று - அதாவது இக்காலக் கணக்குப்படி பத்து, பதினைந்து மைல், கரை மறையும் அளவுக்கு - மீன் பிடிப்பார்கள். ஜூன் ஜூலை மாதங்களில் கோலா மீன் கும்பல்கள் வரும். நீண்ட தூரத்துக்கு நீண்ட தூரம் என்ற பரப்பளவில் தெற்கிலிருந்து வடக்கு நோக்கிச் சென்று கொண்டேயிருக்கும். கைகளால் கூட மீன்களைப் பிடித்து விடலாம் போல தோன்றும். அந்த மீன்களைத்தான் செம்படவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பிடிப்பார்கள். அவர்றுக்கு சுற்று வட்டாரத்தில் நல்ல கிராக்கி வேறு.
ஆனால் கடற்காற்று - கடலிலிருந்து நிலத்தை நோக்கி வீசுவது - தவறியதால் அவ்வாண்டு மீனவர்கள் வழக்கம்போல பாய் விரித்து கரையை நோக்கி வர இயலவில்லை. திசை தவறி தவிக்கவும் நேரிட்டது. சிலர் கரைக்குத் திரும்பவேயில்லை. இதற்கெல்லாம் காரணமே அந்தச் சாமியார்தான் என அவர் தலையில் பழியைச் சுமத்தினர். மேலும், அவர் கொண்டு வந்த புதிய மதம் ஏழை எளியவர்களுக்கும், இன்னம் மிகுந்த பாபம் செய்தவர்களுக்கும் அவர்கள் மனம் திருந்தி மன்னிப்பு கேட்டுக் கொண்டால் அவருக்கும் விமோசனம் உண்டு என்றெல்லாம் போதித்ததை புரிந்து கொள்ளாதவர்களே பெரும்பான்மையினராக இருந்தனர். அவர்களுக்கு இம்மதம் ஒரு புரியாத புதிராகவே ஆயிற்று.
நிற்க. தங்கள் தொழிலைப் புயல் காரணமாக செய்ய முடியாத மீனவர்கள் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து இப்போது ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பெற்று வந்து விட்டனர். மயிலை - திருவல்லிக்கேணி கடற்கரை எங்கே, இன்றைய சைதாப்பேட்டை - கிண்டி பக்தி எங்கே, அங்கேயே வந்து விட்டனர், நடுவே இருந்த அடர்ந்த முட்காட்டையும் பொருட்படுத்தாமல்.
ஆனால் அடையாறு பயங்கர வெள்ளத்தால் அல்லவா பீடிக்கப்பட்டிருக்கிறது? புயல் வேறு, கேட்க வேண்டுமா?.
ஆற்றங்கரையில் அவர்களில் பலர் திடுக்கிட்டு நின்றனர். அவர்களின் தலைவன் போன்றிருந்த ஒருவன் “ஏன், என்ன பயம்? கடலில் அலைகள் மத்தியில் போகும் எனக்கு இதைக் கண்டு ஏன் பயம் வரவேண்டும்? நான் முன்னேறுகிறேன், தைரியமுள்ளவர்கள் என்னோடு வரட்டும்” என்றான். அவனுக்கு நல்ல கட்டுமஸ்தான தேகம், அகன்ற மார்பு, நல்ல கறுப்பு நிறம், நீளக்கைகள், குட்டையான கால்கள். கையில் ஓர் எரி ஈட்டி வைத்திருந்தான்.
அவன் தைரியம் சொன்னாலும் பலர் பின்தங்கினர். அவர்களில் ஆறுபேர் மட்டும், “மஞ்சனி நாங்கள் உன்னுடன் வருகிறோம்” என்றனர். அவர்களில் இருவர் மஞ்சனியின் தம்பிகள், மீன் குஞ்சு மாதிரி நீந்துபவர்கள். மூன்றாமவனுக்கும் நீச்சல் தெரியும். எஞ்சிய இருவருக்குத் தெரியாது. நீந்தத் தெரிந்தவர்கள் அவர்களை ஒவ்வொருவராக அக்கரையில் சேர்ப்பதில் முனைந்தனர்.
குள்ளனுக்கு சற்றுக் களைப்புதான். மிகுந்த பிரயாசையுடன் சாமியாரைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு வந்து விட்டான். அவர்கள் சின்ன மலையை விட்டு நீங்கி மூன்று நாழிகையாகியிருக்கும்.
சாமியார் முதலில் அவனுடன் வரச்சம்மதிக்கவில்லைதான். ஆனாலும் தான் உயிருடன் இருந்தால்தான் மேலும் பலரைப் புது மார்க்கத்தில் ஈடுபடுத்த முடியும் என்ற காரணத்தால் அவனுடன் செல்லச் சம்மதித்தார். அவர் சாவதானமாகவே இருந்தார். அவரிடம் சிறிதும் பரபரப்பில்லை. இதோ அவர்கள் இப்போது ஒரு சிறிய குன்றை நெருங்கிக் கொண்டிருக்கின்றனர். காலில் செருப்பில்லாவிடினும் குள்ளன் மிகுந்த லாவகமாக முட்செடிகளின் ஊடே விரைவாக நடந்தான், பயம் அவனை உந்த. செருப்பணிந்த சாமியாரின் கால்களோ அவரது பழக்கமின்மையைப் பறைசாற்றின. முட்கள் கீறி, முழந்தாள்கள் மற்றும் தொடைப்பகுதிகளில் ஆடை கிழிந்து இருந்தது, ரத்தம் வழிந்தோடியது. அவரது நினைவுகள் பின்னோக்கி விரைந்தன. எரூசலத்திலும், காலிலீ கடல் பிராந்தியத்திலும், நாஜரெத்திலும் இப்படியான முட்செடி, மர வளர்த்தி உண்டா? அங்கிருந்த பாலைவனங்களையும், நடுவே ஓடும் ஜோர்டான் நதியையும், புனித நகரமாகிய எரூசலத்தையும் நினைத்தபொழுது அவருக்கு ஓர் ஏக்கம் ஏற்பட்டது. அது ஓரிரு நிமிடங்கள்தான் நீடித்தது. இப்போது அடர்ந்த தாவர வளர்ச்சியூடே அவர் மலை ஏறி, மறுபக்கம் இறங்க வேண்டும்.
மறுபக்கம் இறங்கியதும் என்னாகும்? குள்ளன் கூறியது ஞாபகம் வந்தது.
“சாமி, மலையோட அப்பக்கச் சரிவுல ஒரு குகை இருக்கு. சற்றே சீக்கிரம் நடங்க. நாம அங்கே போயி ஒளிஞ்சிக்கிட்டா யாராலயும் நம்மள சட்டுனு கண்டு பிடிக்க முடியாது. நாளைக்கி காலையோ அல்லது இந்த விரோதிப்பசங்க திரும்பிப் போனப்புறமோ நாம அந்த இடத்திலேருந்து ரண்டு கல் தூரத்துல இருக்கற பெரிய மலைக்குப் போயிடலாம் (இக்காலத்திய பல்லாவரம் மலை). அதனோட அடிவாரத்துல என் மாமன் வீடு இருக்கு. அவரோ மணிமங்கலம் பிரபுவோட ஆள். இந்த ஊர்க்காரர்கள் பாச்சா அங்கே பலிக்காது. ஒங்களை எப்படியும் காப்பாதிடுவோம்”.
“காப்பாதிடுவோம்”, இச்சொல் அவர் காதுகளில் பெரும் ஓசையுடன் ஒலித்தது நெடுநேரம் வரை. கல்லிலும் செடிகளிலும் தான் இடறி வீழ்ந்து சென்றதை அவர் உணரவே இல்லை. அவர் எண்ணங்களோ கட்டுக்கடங்காமல் ஓடின.
“ஆம், நான் ஓடுகிறேன், ஓடிக்கொண்டே இருக்கிறேன். அமலன், பரமபிதாவின் குமாரனைச் சிலுவையில் அறைந்த காலத்திலிருந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. இன்னும் எனக்கு ஆத்மசாந்தி கிடைக்கவில்லை. நிலையான இருப்பிடமும் கிடைக்கவில்லை.
“பரமபிதாவே, உம்குமரன் மூலம் உம்மைச் சரணடைந்தேன். சாந்தி அளிப்பீராக.”
அவர் எண்ணங்கள் இவ்வாறு ஓடும்போது அவரையும் அறியாமல் அவர் கால்கள் மடிந்தன. மண்டியிட்டு அமர்ந்தார். அவர் பிரார்த்தனையை ஆரம்பித்தது. குள்ளனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை. அவனைப் பொருத்தவரை தெய்வாம்சம் நிறைந்த சாமியார், ஆச்சு கிட்டத்தட்ட மலையுச்சியை அடைந்த இத்தருணத்தில் இப்படிக் காலதமதம் செய்வதை எவ்வாறு தடுப்பது?
இன்னும் பத்தடி நடந்தால் போதும் மலையுச்சி வந்து விடும். இந்த இடத்தில் மரங்களோ முட்செடிகளோ அவ்வளவாக இல்லை. பெரியதாகவும் சிறியதாகவும் பாறைகள் மட்டுமே இந்த உச்சிப் பகுதியில் இருந்தன.
“சாமீ, சாமீ நடங்க, நடங்க” என அவன் கெஞ்சியது அவர் காதுகளில் விழவே இல்லை. அவர் கண்கள் உச்சி மேலிருந்த ஒரு பெரிய பாறையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
அப்போது ஒரு வேங்கையின் உறுமல் கேட்டது. நெருப்பு போல ஜொலிக்கும் அதன் கண்களைப் பார்த்ததும் “ஐயோ” என அலறியவண்ணம் குள்ளன் மலைச்சரிவில் ஒரு பக்கமாக குள்ளன் ஓடினான். அச்சமயத்தில் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் மட்டுமே அவன் உள்ளத்தில் இருந்தது.
அவன் ஓடியதை சாமியார் அறியவில்லை. அந்த பயங்கரமான வேங்கையையும் அவர் பார்க்கவில்லை. வேங்கை மறுபடியும் உறுமிற்று. வலை இப்பக்கமும் அப்பக்கமும் சுழற்றி அடித்தது. அப்போழுதும் தன் சூழ்நிலையின் பிரக்ஞையே இல்லாமல், சிந்த்னையிலாழ்ந்திருந்த அந்த வணக்கத்துக்குரிய மனிதர் வேங்கைக்கு ஒரு விளங்காப்புதிராகவே இருந்திருக்க வேண்டும்.
சிறிது தொலைவில் மனிதர்கள் வரும் சப்தம் கேட்டது. கூடவே கானகத்தின் சிறுபிராணிகளும் சப்தம் செய்தும், பறவைகளும் மேலே பறந்தும் பிறகு மறைவிடம் தேடுவதும் வேங்கைக்கு புலனாயின. ஆகா இதென்ன? சற்றே கீழே கிறீச், கிறீச் என்னும் சப்தம்? ஆகா ஒரு குரங்குக் கூட்டம். நல்ல வேட்டைதான் என வேங்கை நினைத்தாற்போல சரேலென கீழே நோக்கி ஓடி, அந்தக் காட்டினூடே மறைந்தது.
+ + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + + +
அடையாற்றை சிரமப்பட்டு கடந்து வந்த அந்த அறுவரும் முதலில் சற்றே திகைத்து நின்றனர். ஏனெனில் சாமியார் அந்தச் சின்னமலைமீது இல்லை. ஆனால் அவர் அணிந்திருந்த அன்னிய நாட்டுக்காலணிகளின் சுவட்டைப் பின்பற்றி விரைந்தே பின்தொடர்ந்தனர். ஏனெனில் அவர்களில் ஓரிருவர் மிருக வேட்டையாடுவதில் வல்லவர்கள். பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீர் குட்டைகளால் அவர்களது முன்னேர்றம் அவ்வப்போது தடைபட்டது, ஏனெனில் சுவடுகள் அவற்றில் மறைந்தன. ஆனாலும் சாமியாரின் உடைத்துண்டுகள் முட்செடிகளில் மாட்டியிருந்தது அவர்களது வேலையைச் சுலபமாக்கியதும் நிஜமே. ஆனால் மொத்தத்தில் அவர்களது முன்னேர்றம் தாமதப்பட்டதைத் தவிர்க்கவியலவில்லை. கடைசியில் அவர்கள் சாமியார் அச்சமயம் இருந்த குன்றின் அடிவாரத்துக்கு வந்து விட்டிருந்தனர். அடையாற்றைவிட்டு அவர்கள் காட்டுப் பகுதிக்குள் வந்து இரண்டு நாழிகைகளாகியிருக்கும். இப்போது மலைச்சரிவில் அவர்களது தடையங்களை கண்டுகொள்வது கடினமாக இருந்தது.
அவர்களில் ஒருவன், சிகப்பன், சொன்னான், “மஞ்சனி, இப்போ என்ன பண்ணறது? இன்னும் ஒரு நாழிகையிலே கும்மிருட்டாகிவிடும். இந்தக்கட்டின் மத்தியிலே அப்போ அதிகத் தொல்லையாயிடும். பேசாம இப்போ திரும்பிப்போவோம், இன்னொரு நாள் பாத்துக்கலாம்” என்றான்.
மஞ்சனி முடியாது என தலையை அசைத்தான். “சிகப்பா, இந்த மஞ்சனி முன்வச்சக் கால பின்னால வைக்க மாட்டான். யாருக்கு இஷ்டமிருக்கோ அவங்க மட்டும் என்னோட வரட்டும்” என்றான். கூடவே தன் கையிலிருந்த எரியீட்டியை குத்தும்பாவனையில் தூக்கிப் பிடித்தான்.
அப்போது “ஐயோ” எனக்கத்தியக் குள்ளனின் குரல் கேட்டது. அவர்கள் பார்வில் மலைச்சரிவை நோக்க அங்கு தூரத்தில் பாதிரியாரின் முள்ளில் மாட்டிய அங்கி தெரிந்தது.
கோபமும் ஆத்திரமும் வெறியும் அவர்களை ஆட்கொள்ள, அந்த அறுவரும் மேல்நோக்கி விரைந்தனர்.
சிறிது நேரத்தில் மழை விட்டுவிட்டது. வெளியில் சூந்திருந்த இருட்டும் சற்றே குறைந்தது. வெளிச்சம் வரவர குள்ளனின் மனதிலும் தைரியம் மீண்டும் பிறந்தது.
“ஐயோ என்னக் காரியம் செஞ்சேன்? செய்யாகூடாத காரிமாச்சே அது” என பச்சாதாபத்துடன் அவன் திரும்ப பாதிரியாரின் இடம் நோக்கி ஓடினான். அந்த வேங்கை அவரை என்ன செய்ததோ தெரியவில்லையே. எனக்கு என்ன ஆனாலும் சரி, முதல்ல அவரோட சௌகரியத்தை பார்க்கோணும்” என புலம்பியவாறே அவன் விரைந்தான்.
மலை உச்சிக்கருகில் சாமியார் அதே மண்டியிட்ட நிலையில் இருந்ததைப் பார்த்த அவன் மனம் நிம்மதியால் நிரம்பியது. பொல்லாத வேங்கையையும் காணோம்.
குள்ளனின் கண்களிலிருந்து பொலபொலவென கண்ணீர் பெருகிற்று. கூடவே அவமான உணர்ச்சியும் தோன்றிற்று. அவன் வாய் புலம்பியது, “சாமீ என்னப்போல ஒரு பதரும் இருக்க முடியுமா? ஆபத்துக் காலத்தில் பறந்து விட்டேனே”!
சாமியார் அருகே இருந்த பாறைமீது அமர்ந்து அருளுடன் அவனை நோக்கினார். “மகனே வீண்கவலை வேண்டாம். என் ஆசான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பல வருஷங்களாச்சு. நானும் யூததேசத்தை விட்டு வந்து பலதேசங்களாக சுற்றிவிட்டு இங்கே வந்துள்ளேன். எங்குமே நான் தேடிய அமைதி கிடைக்கவில்லை. அதே சமயம் சிலுவையில் கொடூரமாக அறையப்பட்ட நிலையிலும் தேவகுமாரனது முகத்தில் இருந்த அந்த சாந்தமும் கருணையும் என் மனக்கண் முன்னே அப்படியே உள்ளன.
இத்தருணத்தில் நானும் இப்பூவுலகை விட்டு விலக வேண்டும் என்றே என் குருநாதரின் கட்டளை வந்ததாகவே உணர்கிறேன். என் காலமும் முடியப்போகிறது. அதை முடிக்க வைக்கும் தூதுவர்கள் இதோ மலைமேல் ஏறிவருவதை நான் இப்போது உணர்கிறேன்” என்று அவர் கூறி முடித்தார்.
குள்ளனும் இப்போது கூர்ந்து கவனிக்க, தங்கள் வழியை மறித்து நிற்கும் மூங்கில்களை பின் தொடர்பவர்கள் வெட்டுவது அவனுக்கும் துல்லியமாகக் கேட்டது.
“சாமீ, வரமாட்டீங்களா” என தீனமாக அவன் கேட்க, மாட்டேன் எனத் தலைய்சைத்தார் அவர்.
“குள்ளா வருத்தப்படாதே. நீ என் பிரிய சிஷ்யனாக இருந்தாய். நீ என்னை விட்டு ஓடியது குறித்து வருந்தாதே. பல ஆண்டுகளுக்கு முன்னால் என் ரட்சகரை சிலுவையில் அறைவதற்காக அவரைக் காவலர்கள் கைது செய்தபோது அவர் சீடர்கள் நாங்கள் எல்லாம் இப்படித்தான் ஓடினோம். கடைசி சாப்பாட்டின்போது அவரே தனது பிரதமச் சீடனான பெட்ருவிடம் சொன்னார், ‘நாளைக்காலை சேவல் கூவும் முன்னால் நீ என்னைத் தெரியவே தெரியாது என மூன்றுமுறை மறுப்பாய்’ என. அப்படியேதான் நடந்தது.
இதற்கு முன்னால் என் எஜமானிடம் பலரும் முழுநம்பிக்கையும் வைத்திருந்தனர். நான் மட்டும் அவரைப் பரிசோதித்த வண்ணமே இருந்தேன். அவரைப் புதைத்த இடத்திலிருந்து அவர் மீண்டு வந்தாலும் அதனால் உடனே மகிழ்ச்சியடையாது அவர்தான் உண்மையான ஏசுவா என்பதை நான் அவர் காயங்களைத் தொட்டுப்பார்த்து உறுதி செய்து கொண்டவன். அவ்வளவு நம்பிக்கையின்மை என்னிடம் அப்போது இருந்திருக்கிறது. அவர் என்னை மந்தஹாசத்துடன் நோக்கிக் கூறினார், “தோமா, எல்லோரும் கேள்வியே கேட்காது நம்பினர். ஆனால் நீ மட்டும் என்னைச் சோதித்தாய். நீ அற்புதங்களைப் பார்த்து சரிசெய்த பிறகே என்னை நம்பினாய். ஆனால் அவற்றைக் காணாதவர்கள், என்னை ஒருபோதும் காணாதவர்கள் கூட என் மேல் நம்பிக்கை வைத்தனர். என்றும் அவர்களுக்கு மேன்மை உண்டாவதாகுக” என்றார்.
இப்போ என்ன ஆகி விட்டது? வேங்கையைக் கண்டு ஓடினாய். அது மனித இயற்கைதானே. பயப்பட வேண்டியதற்கு பயப்படாதவன் முழுமூடன். என்னை விடு, நான் வந்த காரியம் முடிந்து விட்டது. போகும் நேரமும் வந்து விட்டது. நான் சாகவும் துணிந்து விட்டேன். அத்ற்காக என் ஆண்டையின் உத்திரவும் கிடைத்து விட்டது.
குள்ளன் அவரை வணங்கிக் கூறினான். “சாமீ இப்போதும் கூட கடற்கரை கிராமங்களில் நம் மதத்தவர்கள் உள்ளனர் நூற்றுக் கணக்கில். ஆனால் அவர்கள் செம்படவர்கள், பள்ளர், பறையர் ஆகிய எளிய சாதியினரே. ஏழைகள். மற்றப்படி உயர் சாதியினர், பணக்காரர்கள், அதிகாரிகள் ஆகியோர் எப்போது நம் மதத்துக்கு வருவார்கள்” என ஏக்கத்துடன் கேட்டான்.
“ஏழைகளே எண்ணத்தால் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள். ஏனெனில் விண்ணுலகின் அரசு அவர்களுடையதே” என ஏசுவே தனது மலைப்பிரசங்கத்தில் கூறிவிட்டார். நீ கவலை கொள்ளாதே. நான் உனக்கு போதித்ததை நீ மற்றவருக்கும் பரப்புவாயாக. ஒரு தானியம் பூமியில் விழுந்து மன்ணானால் என்ன அதிலிருந்து பல்லாயிரக்கணக்கான தானியங்கள் வரும் அல்லவா? அதுதான் ஆண்டவன் கட்டளை. நீ தப்பித்துச் செல் எனக்கூறிவிட்டு அவர் மீண்டும் தியானத்தில் ஆழ்ந்தார்.
குள்ளன் மனமின்றி அங்கிருந்து சென்றான். சற்று நேரம் கழித்து திரும்பிப் பார்த்தான். மற்றவர்களால் சூழப்பட்ட தோமாவுக்கு என்ன நடக்கிறது என்பதை அவனால் பார்க்கவியலவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
7 hours ago
16 comments:
//“மகனே வீண்கவலை வேண்டாம். என் ஆசான் சிலுவையில் அறையப்பட்டு இறந்த பல வருஷங்களாச்சு. நானும் யூததேசத்தை விட்டு வந்து பலதேசங்களாக சுற்றிவிட்டு இங்கே வந்துள்ளேன். எங்குமே நான் தேடிய அமைதி கிடைக்கவில்லை. அதே சமயம் சிலுவையில் கொடூரமாக அறையப்பட்ட நிலையிலும் தேவகுமாரனது முகத்தில் இருந்த அந்த சாந்தமும் கருணையும் என் மனக்கண் முன்னே அப்படியே உள்ளன.//
அற்புதமான கதை. நடை வியக்க வைக்கிறது. நீளமாக இருந்தாலும் , விடாமல் படிக்க தோன்றுகிறது. வாழ்த்துக்கள்
Our CM and his friends will love this story.
// //மயிலை - திருவல்லிக்கேணியிலே உள்ள ஜனங்கள், ஏன் அவனும்தான், ஆண்டவனை சாஷ்டாங்கமாக நிலம் தோய விழுந்து அஞ்சலி செலுத்துவர்.// //
ஏசு சிலுவையில் அறையப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றிய "பழைய" மதம் குறித்து இக்கதையில் எந்த தகவலும் இல்லை.
அப்போது இங்கிருந்த மதம் என்னவாக இருந்திருக்குமோ?
அது போகட்டும், இப்போது புனித தாமஸ் மலைமீது 'கார்த்திகை தீபம்' ஏற்றிப் போராடாமல் விட்டவரைக்கும் மகிழ்ச்சிதான்.
@அருள்
கதை குள்ளனின் பார்வையில் எழுதப்பட்டது. அவனுக்கு புரிந்த அளவுக்கு மேல் இதில் எழுதினால் தாங்காது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஏசுவின் சீடர் தாமஸ் சென்னை வந்தது நல்ல கதைக்கு உரம் கொடுக்கலாம், ஆனால் அவர் சென்னை வந்ததே கதைதான்.
http://en.wikipedia.org/wiki/Thomas_the_Apostle
"There is disagreement and uncertainty as to the identity of Saint Thomas. "
தாமஸ் ஜெரூசலத்திலேயே புதைக்கப்பட்டதாக சமீப தொல்லியல் ஆராய்ச்சி சொல்கிரது
தாமச் என்பது ஹீப்ரூ மொழியின் இரட்டையர்-ட்வின் என்பதின் திரிபு. அதனால் ஆளின் அடையாலமே குழப்பத்தில் இருக்கு.
http://en.wikipedia.org/wiki/Talpiot_Tomb
அவர் சிரியாவில் புதைக்கப் பட்டதாகவும் ஐதீகம் உண்டு
பாரசீக நாட்டில் மரணித்ததாகவும் ஐதீகம் உண்டு.
அதனால் சென்னை பக்கம் வந்து இறந்தார் என்ப்தை சிட்டிக்கை உப்போடு எடுத்துக் கொள்ள வேன்டும்
எனக்கு இந்த கதையில் மிகவும் பிடித்த அம்சம் எவ்வளவு அழகாக சுவாரஸ்யமாக அவர் கதையை நகர்த்திக் கொண்டு போகிறார் என்பதே. கான்வர்சேஷனுக்கு இடையிட்டு இடையிட்டு வேண்டிய இடத்தில் வரும் ஒரு வர்ணனையோ, கதாபாத்திரங்களின் செய்கைகளோ, அதை வார்த்தைகளில் சொல்லும் விதமோ--எல்லாமே ஒன்றுக்கு ஒன்று ஈடுகொடுத்துக் கொண்டு அற்புதமாக இருக்கிறது. ஒரு தேர்ந்த எழுத்தாளரின் எழுத்தின் லாகவம் அங்கங்கே பளிச்சிடுகிறது. கதைகள் படிப்பதை விட்டுத் தள்ளுங்கள், அதை எப்படி எழுதுவது என்பதை க்ளோஸாக அப்ஸர்வ் பண்ணியிருக்கிறார் என்று நன்றாகத் தெரிகிறது. அதுவும், 1979-க்கு முன்னால் என்றால்.. ஒண்டர்புல்!
இதை ஏதாவது பத்திரிகைக்கு அனுப்பி வைத்திருந்தார் என்றால், நிச்சயம் பிரசுரமாகி இருக்கும். அதுவே அவருக்கு மேலும் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தி நிறைய எழுதியிருப்பார் என்றும் தோன்றுகிறது.
Raji
Dondu, Thanks for giving our father's story in ur blog. It is a beautiful and touching one. His style is amazing. Of course I do remember his telling us all the stories u mentioned. I wish I knew about this when he was alive. Once again thank u for the trouble u have taken to type this. Why not try to publish this in a good Tamil magazine? I have emailed it to my friend in Chennai. I am sure she will like it.God bless you!
ராஜி
நம் அப்பா எழுதிய கதை பற்றி நீ எழுதியது மனத்துக்கு நிறைவாகவே உள்ளது.
நீ, நான், பெரியப்பாவின் குழந்தைகள் எல்லோரும் அப்பாவோடு அவ்வப்போது பெரிய வாக் போவது உனக்கு நினைவு இருக்கிறதல்லவா?
வெங்கடநாராயணா சாலை, நந்தனம், அண்ணா சாலை, அடையாறு பாலம் முழுக்க நடந்து, திரும்ப சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மாம்பலத்துக்கு மின்ரயிலில் வருவோம், நினைவு இருக்கிறதா? எனக்கு அப்போது ஆறுவயது.
போகும்போதெல்லாம் அப்பாவிடம் எவ்வளவு கேள்விகள் கேட்டிருப்போம்?
அன்புடன்,
டோண்டு
டோண்டு ராகவன் Said...
// //வெங்கடநாராயணா சாலை, நந்தனம், அண்ணா சாலை, அடையாறு பாலம் முழுக்க நடந்து, திரும்ப சைதாப்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்து அங்கிருந்து மாம்பலத்துக்கு மின்ரயிலில் வருவோம்// //
நிச்சயம் பொறாமையாக இருக்கிறது.
இப்போது இதில் ஒரு சாலையில் கூட ஒருமுனையிலிருந்து மறுமுனை வரை நடக்க முடியாது. அந்த அளவுக்கு நடைபாதை சாலையாலும், வாகனங்களாலும், மின்சார பெட்டி போன்ற தடைகளாலும் அபகரிக்கப்பட்டிருக்கிறது.
பொதுமக்களுக்கான பொது இடங்கள் (public spaces) காணாமல் போவது பற்றி எவரும் கவலைப்படவே இல்லையே?
கதை ஒரு தேர்ந்த எழுத்தாளர் எழுதுவது போலவே இருக்கு.
ஆனால் கதை ஒரு வரலாறை முன் வைப்பதால் அவருக்கு இந்த கதைக்கான inspiration எது என்பது பற்றி ஏதாவது தெரியுமா?
@விருட்சம்
அபோஸ்தலர் தோமா சென்னை பறங்கிமலையில் வைத்து கொலை செய்யப்பாட்டார் என்பது தமிழகத்தில் பரவலாக அறியப்பட்ட கர்ணபரம்பரை கதை. ஆகவேதான் அந்த மலைக்கு புனித தோமையார் மலை என்று பெயர்.
என் அப்பா அப்புனிதரின் கடைசி தினத்தையே எழுத முற்பட்டார்.
முதலில் குள்ளன் பேச்சுக்கு மதிப்பளித்து கிளம்பினாலும் மெதுவாக அவருக்கு அன்றுதான் தனது கடைசி நாள் என்ற நிச்சயம் மனதில் ஏற்பட்டது.
அதே போல புனித பீட்டரும் ரோம் நகரை விட்டு வெளியேற முயற்சிக்க அவர் எதிரில் ஒரு மனிதர் செல்கிறார். அவர் எங்கு செல்கிறார் என இவர் கேட்க, சிலுவையில் அறையப்பட என்று அந்த மனிதர் கூறியதை புனிதர் பீட்டர் தமக்கிடப்பட்ட ஆக்ஞையாக எடுத்துக் கொண்டு ரோமுக்கே திரும்ப வந்து சிலுவையில் தலைகீழாக வைத்து அறையப்படுகிறார்.
இந்த நிகழ்வு பற்றி புனிதர் பாலுக்கு புனிதர் லூக்காஸ் தெரிவிப்பதாக நான் ஒரு நாவலில் படித்துள்ளேன். என் தந்தையும் அதே நாவலை படித்துள்ளார். ஆகவே பீட்டர் வாழ்வில் நடந்தது போல தோமாவின் வாழ்விலும் இவர் எழுதியிருக்கலாம் என்பது எனது அபிப்பிராயம்.
இதே துணிபை என் தந்தையிடம் கூறியபோது, அவர் புன்முறுவல் பூத்தார். “பேஷ் இவ்வாறே எண்ணங்களை செலுத்தினால் நீ கூட ஒரு கதை எழுத இயலும்” எனக் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
நல்லா இருக்கு உங்க அப்பா எழுதிய சிறுகதை! இன்னும் சில இது போன்று இருந்தாலும் பதிவிடவும். படிக்க ஆவல்!
நன்றி!
சினிமா விரும்பி
http://cinemavirumbi.blogspot.com
//
பொதுமக்களுக்கான பொது இடங்கள் (public spaces) காணாமல் போவது பற்றி எவரும் கவலைப்படவே இல்லையே?
//
எல்லாத்தையும் கொண்டு போயி சென்னையிலேயே போட்டால் எப்படி அங்கே இடம் கிடைக்கும். ஒரே கக்கூஸில் 4 பேர் ஒரே நேரத்தில் போகவேண்டிய நிலை வந்தால் கூட திருந்தாமல் சென்னையிலேயே அனைத்தும் கொண்டு போடுகிறார்கள்.
கிரவுண்டு விலையும் ஏறிக்கொண்டே போகும்.
தென்மாவட்டங்களில் சில கார் தயாரிப்பு நிறுவனங்கள், அனுமின் நிலையம் போன்றவற்றை கொண்டு வந்தால் தான் சென்னையில் மக்கள் தொகை குறையும்.
Anonymous said...
// //எல்லாத்தையும் கொண்டு போயி சென்னையிலேயே போட்டால் எப்படி அங்கே இடம் கிடைக்கும்.// //
நகரமயமாதல் குறித்த "வினவு" தளத்தில் நடக்கும் விவாத பின்னூட்டங்களை காணவும்: http://www.vinavu.com/2010/09/13/urbanization-1/#comments
டோண்டு சார்,
உங்களை எப்படித் தொடர்பு கொள்வது?
நன்றி.
மிக அருமை. முதலில் கதை சாதாரணமாக ஆரம்பித்து திடீர்ன்று ஒரு வரலாற்று நிகழ்வையும் சேர்த்து விறு விறுப்பாக பயணிக்கிறது. ஒரு வேளை எல்லா தமிழரின்/இந்தியரின் தாய் மதமும் எது என்றும் சூசகமாக கூற முற்படுவதாகவும் தோன்றுகிறது.
=சுவாமி
Post a Comment