இன்று Tamilcnn-னிடமிருந்து வந்த ஒரு மின்னஞ்சலை உண்மை என எடுத்துக் கொள்வதா, அல்லது பொய்யெனக் கொள்வதா என்று புரியவில்லை.
முதலில் அது என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம். பிறகு டோண்டு ராகவன் வருவான்.
பெண்கள் கவர்ச்சிகரமான ஆடைகள் அணிவதாலும், கவர்ச்சிப் பதுமைகளாக வலம் வருவதாலும் ஆண்களின் ஆண்மை பாதிக்கப்படுவதாய் ஒரு புதிய ஆராய்ச்சி தனது முடிவை வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ஆராய்ச்சியாளர்களின் இந்த ஆராய்ச்சி நீண்ட நெடிய முப்பது வருடங்கள் நடத்தப்பட்ட ஆய்வு என்பது குறிப்பிடத் தக்கது.
அறுபது வயதுக்கு மேலான ஆண்களில் 60 விழுக்காடு பேர் புரோஸ்ட்ரேட் புற்று நோயால் தாக்கப்படுவதும், முப்பது வயதுக்கு மேற்பட்ட 35 விழுக்காடு ஆண்களிடம் இந்த புற்றுநோய் அறிகுறி மற்றும் ஆண்மைக்குறைவு இருப்பதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
ரஷ்யாவின் லீனாய்ட் எனும் மருத்துவர் இது குறித்து கூறுகையில், நவீனப் பெண்களின் இத்தகைய ஆடைக் கலாச்சாரமும், வசீகரிக்கும் வனப்பை வெளிக்காட்டும் மோகமும், ஆண்களின் மனதில் பல்வேறு கிளர்ச்சிகளை ஏற்படுத்துவதாகவும், அவர்களுடைய ஏக்கங்களை அதிகரிப்பதாகவும், தாம்பத்திய வாழ்வின் திருப்தியைத் திருடிக் கொள்வதாகவும் பல்வேறு காரணங்களை அடுக்குகிறார்.
இப்படி பாலியல் ரீதியான கிளர்ச்சிக்கு ஆண்களை இட்டுச்செல்லும் பெண்களின் ஆடைப் பழக்கம் ஆண்களிடம் கனவுகளை வளர்த்தும், நிஜத்தை ஏற்றுக் கொள்ள முடியாத மனநிலைக்குத் தள்ளியும் அவர்களை மனம் மற்றும் உடல் சார்ந்த பல்வேறு நோய்களுக்கு இட்டுச் செல்கிறதாம். அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் மிகவும் குறைவு.
முதலில் இதற்கு கால நிலையும், உணவுப் பழக்கவழக்கங்களே காரணம் என கருதப்பட்டது. ஆனால் அதே காலநிலை, உணவுப் பழக்கத்தில் மேலை நாட்டினரால் அரேபிய ஆண்களைப் போல இருக்க முடியவில்லை. இது ஆராய்ச்சியாளர்களை வெகுவாகக் குழப்பியிருக்கிறது. அந்த குழப்பம் அவர்களுடைய கவனத்தை பிற காரணிகளின் மேல் திரும்பியிருக்கிறது.
உடலை முழுதும் மறைக்கும் ஆடை அணியும் கலாச்சாரத்தைக் கொண்டுள்ள பெண்கள் வாழும் அரேபிய நாடுகளில் இத்தகைய சிக்கல்கள் பெரும்பாலும் இல்லை என்பதனால் இதற்கும் ஆடைக்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா எனும் யோசனை முளைத்திருக்கிறது.
அதன் பின்பே பெண்களின் ஆடைக்கும் ஆண்களின் ஆரோக்கியத்துக்கும் இடையேயான இந்த தொடர்பு தெரியவந்திருக்கிறது. தெருவிலும், பணித்தளங்களிலும், பொது இடங்களிலும் சந்திக்கும் பெண்களின் வசீகரிக்கும் தோற்றமும், உடைகள் மறைக்காத உடலின் பாகங்கள் தூண்டிவிடும் பாலியல் சிந்தனைகளும், ஆண்களின் மனதில் பதிந்து அவர்களுடைய ஏக்கங்களை விரிவடைய வைத்து ஏமாற்றத்தை அதிகரிப்பதே இந்த ஆண்மைக்குறைவு மற்றும் புரோஸ்ட்ரேட் புற்று நோய் இவற்றின் மூல காரணம் என்று இந்த ஆராய்ச்சி தனது முடிவை ஆதாரங்களுடன் வரையறை செய்திருக்கிறது. முக்கால்வாசி ஆண்மைக்குறைபாடுகளும் இத்தகையதே என்பது இந்த ஆராய்ச்சியின் தீர்க்கமான முடிவாகும்.
பெண்களின் கவர்ச்சிகரமான நடைபாதைகளில் ஆண்களின் ஆரோக்கியத்தைப் புதைக்கும் கல்லறைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன என்பது அதிர்ச்சியூட்டும் செய்தியாக இருக்கும் அதே வேளையில், தேவையற்ற பாலியல் கனவுகளை வளர்க்காமல் நட்புணர்வுடன் அடுத்த பாலினரை நோக்கும் மனநிலையை ஆண்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.
இப்போது டோண்டு ராகவன்.
பெண்கள் கவர்ச்சிகரமாக உடையணிந்தால் ஆணுக்கு என்ன பிரச்சினை இருக்கும்? எதிர் பாலினரைக் கவர்வது எல்லா உயிர்களுக்கும் பொதுவான உணர்வுதானே? இதில் என்ன சந்தேகம் வந்தது? அரேபிய தேசங்களில் பெண்கள் எல்லாவற்றையும் மூடியிருப்பதால் அங்கு இப்பிரச்சினை அவ்வளவாக இல்லை என்கிறார்களே? இதற்கு ஏதேனும் புள்ளிவிவரக்கணக்கு இருக்கிறதாமா?
இந்த ஆய்வின் உண்மையான நோக்கம் என்ன என்பதைக் கண்டுணற முடிந்தால் சுவாரசியமாக இருக்கும். எனக்கென்னவோ இது பெண்களை உடைவிஷயத்தில் மேலும் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தும் முயற்சியாகவே படுகிறது. அவரவருக்கு இருக்கும் வேலை மற்றும் கவலைகளில் இந்த விஷயத்தை வேறு பெண்கள் அவதானிக்க வேண்டுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
முப்பட்டைக்கண்ணாடியினூடே —2
-
( 2 ) ஓர் இளம் படைப்பாளி எண்பதுகளில் தமிழில் நுழையும்போது நவீனத்துவத்தால்
உருவாக்கப்பட்டு அன்று புழக்கத்திலிருந்த செறிவு, அடக்கம், சுருக்கம், மையம்
ஆகிய ...
16 hours ago
1 comment:
அமேரிக்கா, ஐரோப்பா போல் அரேபியாவில் புராஸ்டேட் புற்று நோய் இல்லை என்பதற்கு எந்த புள்ளிவிபரமும் தமிழ் சி.என்.என் கொடுக்கவில்லை. அவர்கள் அனேகமாக இந்த சுட்டியிலிருந்து விசயத்தை எடுத்திருக்கலாம்.
கூகிளிட்டுப்பார்த்தால் ஒரு சவுதி அரேபியா ஆஸ்பத்திரியிலிருந்து வெளியிடப்பட்ட ஆராய்ச்சில் புள்ளிவிபரங்கள் சேகரிக்கப்படவேண்டும் என்ற முடிவைச் சொல்வதாக உள்ளது. அவர்களே புள்ளிவிபரங்கள் இல்லாததால் தற்போது புராஸ்டேட் புற்று நோய் மிகவும் குறைவாக உள்ளது போல் தோற்றம் அளிப்பதாக உள்ளது என்றும் முடிவு கூறுகின்றனர். ஆனால், பெண்கள் புர்கா அணிவதால் ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வராது என்று சொல்வதற்கு எந்த ஆதாரமும் அதில் இல்லை.
இஸ்லாமிய அடிப்படைவாதிகளைத் தவிற இத்தகய பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கும் சிந்தனையை யாரும் விதைக்க முடியாது.
Post a Comment