நேற்று நடந்தது போலவே என் பல ஞாபகங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சமீபத்தில் 1958-ல் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த அந்த நிகழ்ச்சி. அதாவது சரியாக 48 வருடங்களுக்கு முன்னால்.
அப்போது நான் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து கொண்டிருந்தேன். அந்தக் காலக்கட்டத்தில் ஒவ்வொரு ஜனவரி 30 அன்றும் 11 மணிக்கு பள்ளியில் ஒரு பெல் ஒலிக்கும். வகுப்பில் இருக்கும் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிட நேரம் மௌன அஞ்சலி செலுத்த வேண்டும். சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான அஞ்சலி. மகாத்மா காந்தி அவர்கள் சுடப்பட்ட தினம் அல்லவா? (இப்போதும் அவ்வாறுதானே?)
அன்று பார்த்து எதுவும் சரியாக அமையவில்லை. பெல் அடித்தது. நாங்கள் எழுந்து நின்றோம். பத்து நொடிக்கு ஒரே அமைதி. திடீரென்று சடகோப ராமானுஜம் களுக் என்று ஒரு சிரிப்பை விட்டான்.
ஹிந்தி ஆசிரியர் V.G. சேஷாத்ரி ஐயங்கார் "உஷ்" என்று ஒரு எச்சரிக்கை ஒலி எழுப்பினார். மிகவும் கோபக்காரர். அன்றைக்கென்று முகச் சவரம் செய்திருந்தார்.
அறிவு கெட்ட இன்னொரு மாணவன் "குபுக்" என்று சிரித்துத் தொலைத்தான். ஜி. ஜயராமனுக்கு அன்று நல்ல ஜலதோஷம். அவனாவது சும்மா இருந்திருக்கலாம். சனியன் பிடித்தவன் சளியுடன் கூடியத் தொண்டையில் "ஹள் ஹள் ஹள்" என்ற சிரிப்பை விட்டான். அவ்வளவுதான் எல்லா கட்டுப்பாட்டையும் இழந்து எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தோம்.
இந்தக் கூத்தில் இரண்டு நிமிடம் கழித்து அடிக்கும் பெல் ஒலித்தது. சேஷாத்ரி சார் எங்கள் எல்லோரையும் அப்படியே நிற்கச் சொல்லி விட்டார். வகுப்பு மானீட்டராகிய என்னை "ராகவையங்கார் முன்னால் வந்து நில்லும்" என்றார். (அவருக்கு கோபம் வரும்போது என்னை ஐயங்கார் என்றுதான் கூப்பிடுவார். அப்போது நல்ல உதை நிச்சயம்). பிறகு பெஞ்ச் பெஞ்சாக வந்து ஒவ்வொருவருக்கும் உள்ளங்கையில் பிரம்பால் அடி கொடுத்தார். ஜி. ஜயராமனுக்கு இரண்டு அடிகள். வகுப்பின் துரதிர்ஷ்ட மானீட்டராகிய எனக்கு மூன்று அடிகள்.
இப்போது நினைத்தாலும் சுரீர் என்ற அவ்வலியை உணர்கிறேன். கூடவே வெட்கம் கலந்த சிரிப்பும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பின் குறிப்பு: இது ஒரு மறு பதிவு.
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
1 day ago
7 comments:
இது இதுதான் இலக்கியம். அருமையான பதிவு, படிக்கும்போதே, வாழ்ந்த்துப்போல் ஒரு உணர்வு. ஏதாவது ஒரு பீரியட் படத்துல இத ஒரு சீனா வைக்கலாம் (மன்னிக்கவும். என்னத்தான் அடக்குனாலும் என்க்குள்ள இருக்கற ஒரு சினிமாகாரன் அடங்க மாட்டேங்கறான்)
//ஜி. ஜயராமனுக்கு அன்று நல்ல ஜலதோஷம். அவனாவது சும்மா இருந்திருக்கலாம். சனியன் பிடித்தவன் சளியுடன் கூடியத் தொண்டையில் "ஹள் ஹள் ஹள்" என்ற சிரிப்பை விட்டான். அவ்வளவுதான் எல்லா கட்டுப்பாட்டையும் இழந்து எல்லாரும் சிரிக்க ஆரம்பித்தோம்//
இந்த லைன் ரொம்ப நேச்சுரல இருக்கு. ஸ்கூல்ல இது ரொம்ப சகஜம். நானும் இந்த மாதிரி நிறைய சிரிச்சிருக்கேன்.
அரியலூரில் சிவன் கோவிலில் பஜனை முடித்த பின் ஒரு நிமிடம் தியான நிலையில் எல்லோரும் அமைதியாக இருக்கும் போது, நானும் என் சகோதரனும் விவஸ்தை இல்லாமல் சிரித்து, என் தந்தையிடம் குட்டு அல்லது கிள்ளு வாங்கி அந்த வலியுடன் சிரிக்கவும் செய்வோம்.
ஒரு முறை அந்த மௌனத்தில் ஒரு பக்தர் பட்டென்று தன் முதுகில் அடித்துக் கொள்ள(கொசுத் தொல்லை!), நாங்கள் சிரிப்பாய் சிரித்ததில் சிவபெருமானும் கலந்துக் கொண்டதைப் போல பிரமை :).
நன்றி ராஜ் சந்திரா அவர்களே,
உங்கள் விஷயத்தில் சிவ பெருமான் சிரித்தார், ஆனால் அந்தோ எங்கள் சேஷாத்ரி ஐயங்காருக்கு சிரிப்பு வரவில்லையே!!!!
அன்புடன்,
டோண்டு ராகவன்
நீங்கள் எல்லோருமே அந்தக் காலத்தில் மிகவும் குறும்பான மாணவர்களாக இருந்திருக்கிறீர்களே. மற்ற மாணவர்களோடு நீங்கள் இன்னமும் தொடர்பு கொண்டிருந்தால், அனைவரும் கூடும் பொழுது பேசி சிரிப்பதற்கு நிறைய விஷயங்கள் இருக்குமே? வகுப்புத் தலைவனாக இருந்ததற்காக உங்களுக்கு ஒரு அடி அதிகமா? நன்றாக இருக்கிறதே!
நானும் சமீபத்தில் அதே போல அடி வாங்கியிருக்கிறேன். புத்தகத்தில் உள்ள ஒரு பயிற்சியை எவ்வாறு செய்வதென ஆசிரியர் கூறிக்கொண்டிருந்தார். அப்பொழுது அதற்கான விடையையும் கூறினார். அவர் சொன்ன விடையை நாங்கள் பாடப்புத்தகத்தில் விறு விறுவென்று எழுதத் துவங்கினோம். வீட்டுக்குச் சென்று நோட்டுப் புத்தகத்தில் அதையே பார்த்து எழுதுமாறு கூறினால், அதையே காப்பியடித்து எழுதி விடலாம் அல்லவா?
எல்லாம் சொல்லி முடித்ததும் தான் அவர் எங்கள் தலையில் ஒரு குண்டை தூக்கிப் போட்டார். "புத்தகத்தில் விடை எழுதிய அனைவரும் நாற்காலி மீது எழுந்து நில்லுங்கள்!" என கர்ஜித்தார், கையில் பிரம்போடு. அனைவரும் பயத்தோடு எழுந்தோம். பிறகு என்ன, நீட்டப்பட்ட ஒவ்வொரு கைக்கும் தலா ஒரு பிரம்படியை கொடுத்துக்கொண்டே அவர் சென்றார். இன்னமும் மறக்க முடியவில்லை, முதன் முதலாக அடி வாங்கிய அந்த நாளை.
நானும் அந்தக் காலத்தில் உங்களைப் போலவே குறும்புக்கார மாணவன் தான் டோண்டு சார்!
அந்த நாளில் அடிவாங்கினாலும் இப்போது நினைக்கும்போது இனிமையாகத்தான் உள்ளது. அதுதான் ஆட்டோகிராஃப்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இப்போதெல்லாம் அப்படி இல்லை! அந்த நாளை ப்பற்றிய எண்ணமே இல்லாதவர்கள் தான் உள்ளனர்!
Post a Comment