2/08/2006

முதல் வேலை



என் இனிய நண்பர் ரவி பாலசுப்பிரமணியம் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலை இங்கு பதிவிட அன்புடன் அனுமதி அளித்துள்ளார். அவருக்கு என் நன்றி.

ரவி அவர்கள் அனுப்பிய சில மின்னஞ்சல்கள் இங்கு ஏற்கனவே பதிவாக்கப்பட்டுள்ளன.
துணைவியின் பிரிவு
மென்பொருள் நிபுணராக விஜயகாந்த்
Palindrome (இரு வழி ஒக்குஞ்சொல்)

படத்தை பதிவில் ஏற்றிவிட்டு ப்ரெவ்யூ பார்த்தால் பக்கத்தில் உள்ள எழுத்துக்கள் பார்க்க முடியாத அளவில் சிறிதாய் உள்ளன. ஆகவே அவற்றை நான் கீழே தட்டச்சு செய்கிறேன்.

முதல் வேலை
என்ன இது வேலை,
எனக்கு பிடித்தவாறு
உடையணிய உரிமைதர மறுக்கும் வேலை!!!

என் தாய்மொழி,
என் நாவில்
எட்டிப்பார்க்கக்கூட தடைபோடும் வேலை!!!

போலியான புன்னகையொன்றை,
நிரந்தரமாய் என் முகத்தில்
ஒட்டிவிட்ட வேலை!!!

சரித்திரம் படைக்கவேண்டும்!
புரட்சியாய் புறப்படவேண்டும்!
தேசத்தை நிமிர்த்தவேண்டும்!
எனும் கனவையெல்லாம்
கம்ப்யூட்டரில் கட்டிப்போட்ட
வேலை!!!

காந்தி விரட்டிய
வெள்ளையன் இரவில் நித்திரை காண,
என் நித்திரை கலைக்கும் வேலை!

குவியலாய் இறுகிப்போன
இந்த வெறுப்பையெல்லாம் சுக்குநூறாய் சிதறடித்தது,
"இரு துளி" கண்ணீர்!

"ரொம்ப சந்தோசமா இருக்குடா"
முதல் மாச சம்பளத்தை நீட்ட,
தாயின் கண்களில் தோன்றிய
ஒரு துளி!!!

"ரொம்ப கஷ்டமா இருக்குடா"
வெகுநாளாய் வேலை தேடும்,
நண்பனின் கண்களில் தோன்றிய
மற்றொரு துளி!!!

- கெ. கார்த்திக் சுப்புராஜ் அவர்கள் இட்டக் கவிதை இது

படிக்கப் படிக்க என் மனக்கஷ்டம் அதிகரித்தது.கால் செண்டர்களில் வேலை செய்வது ரொம்பக் கடினமே. அதிலும் திமிர்பிடித்த பல வெள்ளையர்கள் நம்மவர்களை தொலைபேசியில் தாறுமாறாக சாடுவதுபற்றி பல செய்திகள் வேறு வந்து விட்டன.

ஆனால் உடைவிஷயத்தில் ஏன் இந்தக் கட்டுப்பாடு வேண்டும் என்பதுதான் புரியவில்லை. அமெரிக்க மற்றும் பிரித்தானிய ஆங்கிலம் பேசவேண்டியது வேலையின் கட்டாயம். மற்றப்படி லைட்டாக பேன்ட், இன் பண்ணாத சொக்காய், டை இல்லை என்று ஏன் இருக்கக் கூடாது? வெய்யில் மிகுந்த நம்நாட்டில் சூட், கோட் மற்றும் டை கட்டி வலம் வருபவரை பார்க்கும்போதே எனக்கு வியர்வை வருகிறதே! மேலும் போனில்தானே ஆங்கிலம் பேசக்கூடாது, போன் இல்லாதபோது பக்கத்து சீட்காரனிடம் கடைசியாக போனில் வந்த வெள்ளைக்கார சாவுகிராக்கியை திட்டி நம் "சென்னைத் தமிழில்" நாம் பேசிக் கொண்டாலே பாதி டென்ஷன் குறையுமே! ஆனால் நமக்குள்ளேயே ஆங்கிலம் பேசுவதைத்தானே நாம் கௌரவம் என்று நினைக்கிறோம்?

இப்போது இப்பதிவை இடும் நான் வெறும் எட்டுமுழவேட்டியணிந்து, பனியன்கூடப் போடாமல் ஃப்ரீயாக இருக்கிறேன் என்பதையும் இங்கே கூறிவிடுகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

ILA (a) இளா said...

இன்றைய இளைஞனுக்கு தேவைப்படும் சில விஷயங்களை சீக்கிரம் கொடுத்து வருங்காலத்தை கெடுத்துவிடுகிறது இந்த பணிகள்.
1. வேலை வாய்ப்பு.
2. வேறு எந்த துறைகளிலும் கிடைக்காத அதிகப்படியான சம்பளம்.

இந்த இரண்டு மட்டுமே இருந்தால்போதும் என நினைக்கும் சமுதாயம்.
எழுத நேரமின்மையால் நானும் இந்தத் துறையில் பணியாற்றிய அனுபவத்தை ஒரு தனி பதிவாகவே நாளை போட்டு விடுகிறேன்

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி இளமுருகு அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Srikanth Meenakshi said...

நல்ல கவிதை...email forward worthy...

>>வெறும் எட்டுமுழவேட்டியணிந்து, பனியன்கூடப் போடாமல் ஃப்ரீயாக இருக்கிறேன்<<

too much detail...toooooooo much detail :-)

dondu(#11168674346665545885) said...

too much detail...toooooooo much detail :-)
இந்தப் பின்னூட்டமிடும்போதும் இதே நிலைதான். காதில் புகை வருகிறதா? : -))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

சந்திரசேகரன் அவர்கள் பதிவு ஒன்றில் நான் இட்ட இந்தப் பின்னூட்டம் மட்டுறுத்தலுக்காக காத்திருக்கிறது. பார்க்க: http://maraboorjc.blogspot.com/2006/03/blog-post_07.html
இதே கவிதையை நான் பதிவாக்கியுள்ளேன். என் மனதையும் அது தொட்டது. பார்க்க: http://dondu.blogspot.com/2006/02/blog-post_08.html

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காட்ட அதன் நகலை நான் மேலே குறிப்பிட்ட அதே பதிவில் பின்னூட்டமாக இடுவேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது