2/21/2006

என்னைத் தொடர்ந்த கனவு ஒன்று

இது ஒரு மீள்பதிவு. பழைய இடுகைகள புரட்டும்போது இது கண்ணில் பட்டது. வகைபடுத்த முயன்றேன், ஆனால் முடியவில்லை. அதற்காகவாவது மீள்பதிவு செய்யலாம் என முடிவெடுத்தேன். இதை நான் போன வருடம் இட்ட பிறகுதான் தெரிந்தது, பலருக்கும் இதே மாதிரி கனவுகள் வருவதுண்டு என்பது.

இப்போது நங்கநல்லூரில் நான் வசிக்கும் வீட்டிற்கு 1969-ல் குடிவந்தோம். சொந்த வீடுதான். 1979-ல் குடும்பச் சூழ்நிலை காரணமாக வீட்டை வாடகைக்கு விட்டு மாம்பலத்தில் குடி புகுந்தோம். பிறகு 1981-ல் ஐ.டி.பி.எல்லில் வேலை கிடைத்து தில்லி சென்றோம். தில்லியில் 20 வருடங்கள் வாசம். அந்தக் காலக் கட்டத்தில் அடிக்கடி எனக்கு ஒரு கனவு வரும்.

கனவில் நான் திரும்பவும் நங்கநல்லூர் வீட்டிற்கே குடி வருகிறேன். எல்லா அறைகளிலும் சுற்றுகிறேன். என் தந்தையுடன் பேசிய, விவாதித்தத் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன. நீண்ட கனவுதான். திடீரென்று விழிப்பு வரும். தில்லியில்தான் இருக்கிறோம் என்பது புரிய சில நிமிடங்கள் ஆகும். அப்போது தீராத சோகம் என்னைக் கவ்வும். அடுத்த நாள் முழுக்க ஒரு வித மயக்கத்தில் கழியும்.

இதில் வேடிக்கை என்னவென்றால், சில சமயம் கனவில் எனக்கு நானே கூறிக் கொள்வேன். "இது வரை கனவாக இருந்தது, நிஜத்திலேயே நடக்கிறது" என்று. அதுவும் கனவுதான் என்றுத் தெரிய, இரட்டிப்பு ஏமாற்றம்தான்.

தில்லியில் இருந்த 20 வருடங்களில் 7 முறை வீடு மாற்ற வேண்டியிருந்தது. 2001-ல் ஏழாவது முறையும் மாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் வந்தப் போது, என் வீட்டம்மா சென்னைக்கே திரும்பலாம் என்று ஆலோசனை கூற அவ்வாறே செய்ய முடிவு செய்தோம். என்ன ஆச்சரியம் அம்முடிவு எடுத்த நொடியிலிருந்து விஷயங்கள் தன்னைப் போல விறு விறுவென்று நடந்தன. அது வரை மின்னஞ்சல் கூட வைத்துக் கொள்ளாத நான் என் வாடிக்கையாளர் கூறிய ஆலோசனை பேரில் யாஹூ அடையாளம் பெற்றுக் கொள்ள எல்லாம் நூல்பிடி கணக்காய் நடந்தன. இது எனக்கு தில்லி வேலைகளை சென்னையிலிருந்தே செய்து கொள்வதை சாத்தியமாக்கிற்று.

இரண்டு மாதங்களுக்குள் என் வீட்டில் இருந்தக் குடித்தனக்காரரை வீடு காலி செய்வித்து, மராமத்து வேலைகளை செய்து, நங்கநல்லூருக்குத் திரும்பக் குடி வந்தேன். ஒரு சிக்கலும் இல்லை. எல்லாவற்றுக்கும் என் தந்தையின் ஆசியே காரணம்.

வந்தப் புதிதில் சிறிது கலக்கம்தான், திடீரென்று விழித்துக் கொள்வேனோ தூக்கத்திலிருந்து என்று. அதிலிருந்து மீள மேலும் சில காலம் பிடித்தது. அக்கனவும் வருவதில்லை இப்போது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

ROSAVASANTH said...

நங்கநல்லூரில்தான் இருக்கிறீர்களா? இந்தியா வரும்போது தொடர்பு கொள்கிறேன்! ரங்கா தியேட்டர் பக்கமா?

dondu(#11168674346665545885) said...

எம்.ஜி.ஆர். சாலையின் வட கோடியில் உள்ள ரங்கா தியேட்டரிலிருந்து அச்சாலையிலேயே தெற்கு நோக்கி வரும் போது வலப்புறத்தில் நான்காவது தெருவில்தான் (15-வது குறுக்குத் தெரு) ஹிந்து காலனியில் புது நம்பர் 20, பழைய எண் B- 23 -ல் குடியிருக்கிறேன் (நங்கநல்லூர் புது பேருந்து நிலையம் எதிரில்). அவசியம் வீட்டுக்கு வாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Vijayakumar said...

ரோசா அண்ணாச்சி, இந்தியா செல்லும் போது டோண்டு அய்யாவை மறக்காமல் தொடர்பு கொள்ளுங்கள். நிறைய ஆர்வத்துடன் மணிக்கணக்காக பேசுவார். நேரம் பற்றாக்குறை காரணமாக அவர் சந்திக்க சென்ற போது அவருடைய ஆர்வத்துக்கு அணைப் போட்டுவிட்டு கிளம்ப வேண்டியதாகி விட்டது.

ROSAVASANTH said...

ஆஹா, இந்தியா வந்தால் நங்கநல்லூர் (துணைவி காரணமாய்) வந்து டோண்டு ஸாரை பார்த்துவிட்டு, திருநெல்வேலி வந்து (ஊரில் இருந்தால்) விஜயையும் பார்கலாம்.

நன்றி டோண்டு, விஜய்!

suratha yarlvanan said...

இதே போல் எமக்கும் கனவில் மட்டுமல்ல நினைவிலும் நாம் கடைசியாக வாழ்ந்த வீடும் வாழ்ந்தநிலையும் கூடவே வரும்.கனவில் மட்டும் ஆமிக்காரனும் கூடவே வருவான்.

enRenRum-anbudan.BALA said...

My wife is also from Nanganallur and my in-laws are still staying in the apartment (near the famous Aancheneya temple) that belongs to my wife :-)

About Mr.Dondu's mind boggling dreams, I don't have a clue :-(

enRenRum anbudan
BALA

Vijayakumar said...

ரோசா அண்ணாச்சி, இன்னிக்கு காலையிலெ தான் சிங்கைக்கு திரும்பி வந்தேன். உலகம் மிகச் சிறியது. கூடிய விரைவிலே இந்தியா அல்லது வேறு எங்காவது கூட நாம் சந்திக்கலாம்.

டோண்டு,எனக்கும் சில சமயம் இந்த கனவுகள் விசித்திரமாக படுவதுண்டு. பிறந்தது முதல் கல்லூரி செல்லும் வரை நாங்கள் பாளையங்கோட்டையில் எங்கள் பூர்வீக வீட்டில் இருந்தோம். பிறகு நெல்லையில் தியாகராஜ நகருக்கு குடிப்பெயர்ந்தோம். எனக்கு தற்கால நிகழ்வுகளை ஒட்டி கனவு வந்தாலும் அது நான் வளர்ந்த அந்த பழைய பூர்வீக வீட்டில் நடப்பது போல தான் கனவு வரும். குடிப்பெயர்ந்த வீடு ஏனோ நினைவில் ஒட்ட மறுக்கிறது. அல்லது வத்தலக்குண்டில் உள்ள என் அம்மாவழி தாத்தா வீடு தான் கனவில் வரும். மனதத்துவ ரீதியாக சிறு வயது முதல் இந்த வீடுகள் என்னுள் புதையுண்டததால் அதுவாகவே கனவில் நிலைக்கிறது என்று நினைக்கிறேன்.

dondu(#11168674346665545885) said...

ஒவ்வொரு சமயம் கனவுதான் என்பதையறிந்து அழுதுமிருக்கிறேன். நிஜமாகவே திரும்பி வந்ததில் மிக்க மகிழ்ச்சி. வாழ்க்கை அற்புதமயமானது.
சுரதா மற்ற ஈழச் சகோதரர்களை நினைத்து மனம் கனக்கிறது. அவர்கள் துயரத்துக்கெதிரில் என்னுடையத் துயரம் ஒன்றுமேயில்லை. தெனாலியில் கமல் டயலாக்கைக் கேட்டு டி.வி. கேமராமேன் முதற்கொண்டு பிரமித்து நிற்பார்கள். நானும்தான். கதையே இப்படியென்றால், நிஜ வாழ்க்கையில்? இதைத்தான் "நடுங்குதுயர் எய்த" என்றுக் கூற வேண்டும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

பினாத்தல் சுரேஷ் said...

Even my wife is from Nanganallur (Kannan Nagar)! Is Nanganallur so full of girls?

Vijayakumar said...

டோண்டு சார், உங்கள் ஜி-மெயிலை பார்க்கவும். நான் நேற்றே போட்டோ அனுப்பிவிட்டேனே? வரவில்லையெனில் இன்னொரு தடவை வேண்டுமானால் அனுப்புகிறேன். சொல்லவும்.

dondu(#11168674346665545885) said...

விஜய்,
படங்கள் கிடைத்தன. நன்றி. ரவியாவுக்கும் அனுப்பி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

Ganesh said...

Raghavan Sir
Yours sound something like premonition.
There are certain things that just can't be reasoned or explained in a normal terms.
I used to have a recurring dream about a certain US city when I was in Madras , today I am in US, working and living at that very same city.
PS I have linked your blog from mine.
Regards
KK Nagar Kirukan

தகடூர் கோபி(Gopi) said...

அல்வாசிட்டி.விஜய் சொல்வது போல எனக்கும் என் கனவிலும் அடிக்கடி வருவது நான் அதிக காலம் வசித்த பழைய வீடுதான்.

ஏனோ தெரியவில்லை அந்தப் பழைய வீட்டை இடித்து எழுப்பப்பட்ட புதிய வீடு பல வசதியுடன் இருந்தாலும் இன்னும் கூட என் கனவில் சிறு வயதில் மகிழ்ந்திருந்த பழைய வீடுதான் வருகிறது

dondu(#11168674346665545885) said...

உங்கள் அக்கனவைப் பற்றியப் பதிவுக்குப் பின்னூட்டமிட்டிருக்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்

தகடூர் கோபி(Gopi) said...

பின்னூட்டத்துக்கு நன்றி!
நீங்கள் அதில் சொல்லியது உண்மை
:-)

படம் மட்டுமல்ல! நிஜமாகவே பல ஆண்டுகளாய் "காத்திருந்த(காத்திருக்கும்) கண்கள்" தான்

:-))

dondu(#11168674346665545885) said...

"பின்னூட்டத்துக்கு நன்றி! நீங்கள் அதில் சொல்லியது உண்மை"
என் அனுபவமும் அதுதானே ஐயா. 1953-ல் உணர்ந்தது 1974-ல் நிறைவேறியது. இன்னும் உயிருடன் இருக்கிறது. வாழ்க்கை அற்புதமானது
அன்புடன்,
டோண்டு ராகவன்

Muthu said...

////ஒரு முறையேனும் கனவுகள் வந்துக் கொண்டே இருக்கின்றன. டாக்டர் சாமிநாதன் போல விஞ்ஞானிகளை கேட்க நினைத்துள்ள கேள்வி- அந்த மாமரத்தை இன்று பார்த்தால் அது என்னை அறிந்துக் கொள்ளுமா? ////
ராமச்சந்திரன்உஷா,
மரங்களும், செடிகொடிகளும் அதன் அருகில் இருக்கும்போது நாம் நினைப்பதைப் புரிந்துகொள்வது அறிவியல்பூர்வமாய் நிரூபிக்கப்பட்டுள்ளது என்று படித்திருக்கிறேன். இப்போதுகூட நீங்கள் அம்மரத்துக்கு அருகில் சென்றால் அது உங்களை இனங்காணுவது சாத்தியமென்றே நினைக்கிறேன். ஆனால் அதனால் நம்மை மாதிரி பேசத்தான் தெரியாது :-).

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது