ராமர் அயோத்திக்குத் திரும்புகிறார். பட்டாபிஷேகம் நடக்கப் போகிறது. மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. பதினான்கு ஆண்டு காலம் தங்கள் வீட்டுப் பிள்ளையாம் ராமனை காணாமல் இருந்தவர்கள் அல்லவா? ஏதோ அந்தப் பதினாலு ஆண்டுகளுக்கு ராமனுக்கு எவ்வகையிலும் குறைவில்லாத பரதாழ்வாரின் ராச்சியம் நடந்ததோ அவர்கள் பிழைத்தார்களோ. இருந்தாலும் தலைப் பிள்ளை என்பது தனிதானே. மக்களை முந்திக் கொண்டு பரதனும் அல்லவா ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறான்.
எல்லோரும் ராமனை பிரமிப்புடனேயே நோக்குகின்றனர். ஆனானப்பட்ட தசகண்டன் ராவணனை அல்லவா வெற்றி கொண்டு வந்துள்ளான் அவர்கள் வீட்டுப் பிள்ளை? ஒரு மலையையே பெயர்த்து எடுக்கக் கூடிய அனுமனே அவனைப் பணியும்போது தாங்கள் எம்மாதிரம் என திகைத்து நிற்கின்றனர்.
அப்போது கழியை ஊன்றிக் கொண்டு எல்லோரையும் விலக்கி உள்ளே ஓடி வருகிறான், அந்த வயதான தோட்டக்காரன். ராமனும் அவன் சகோதரர்களும் குழந்தைகளாக இருந்த போது ஓடி விளையாடி தூள் கிளப்பிய தோட்டத்தைப் பராமரித்தவன் அவன். அடேய் ராமா, லட்சுமணா, பரதா, சத்ருக்குனா, பூக்களை சேதப்படுத்தாது விளையாடுங்கள் என்று கூறி விட்டு அவர்களுடன் சேர்ந்து குழந்தை போல அவனும் விளையாடிய உரிமை உடையவன்.
அந்த தோட்டக்காரன் நேரே வந்து ராமரிடம் வந்து, பழக்க தோஷத்தில் "அடேய் ராமா, என்னை ஞாபகம் இருக்கிறதா" என்றுக் கூறிக் கொண்டு அவரைக் கட்டியணைத்துக் கண்ணீர் உகுக்க, பகவானும் அவனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் உகுத்தாராம். சுற்றியிருந்தவர்கள் திகைத்து நின்றனராம். அந்தத் தோட்டக்காரனைப் பொருத்தவரை ராமன் அதே பாலகனே. இந்தக் கதையை 19-ஆம் நூற்றாண்டில் வெளி வந்த "வினோத ரச மஞ்சரி" என்னும் புத்தகத்தில் சமீபத்தில் 1963-ல் முதன் முறையாகப் படித்தேன்.
இந்தக் கதை பின்னால் இந்திப் படம் "அதாலத்" பார்த்த போது ஞாபகம் வந்தது. அப்படத்தை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? அதில் அமிதாப் பச்சன் அப்பா, மகன் என்று இரு வேடங்களிலும் வருவார். அது ஒன்றும் புதிது அல்ல. அதே போல, அதில் பிள்ளை அமிதாப்பைப் பற்றியும் இங்கே நான் பேச வரவில்லை.
அப்பா அமிதாப் பச்சனைப் பற்றி மட்டும் பேசப் போகிறேன்.
முதலில் கிராமத்தானாக வருவார். எளிய போஜ்பூரியில் பேசிக் கொண்டுக் கள்ளம் கபடம் இல்லாமல் இருப்பார். வில்லன்களின் சூழ்ச்சியால் சிறைக்குச் சென்று அதன் பிறகு காலத்தின் கோலத்தால் ஒரு பெரியக் கடத்தல்காரனாக உருவெடுப்பார்.
அது வரை போஜ்பூரியில் பேசி வந்தவர் மும்பை இந்திக்குத் தாவுவார். மிக நாசுக்கானவராக மாறி எல்லோரையும் கலங்கடிப்பார்.
ஆனால் அது எல்லாம் மற்றவர்களிடம்தான். தான் உயிரையே வைத்திருக்கும் தன் மனைவி வஹீதா ரெஹ்மானிடம் மட்டும் கடைசி வரை போஜ்பூரியே பேசுவார்.
அந்தப் படம் எழுபதுகளில் வெளி வந்தது. அப்போது அப்படத்தைப் பார்த்து இந்த ஒரு விஷயத்தைக் கண்டு மிக பிரமித்தேன். படம் என்னவோ வழக்கமான அமிதாப் கதைதான். இந்த ஒரு விஷயம் மட்டும் என்னை மிகக் கவர்ந்தது. என்ன காவிய ரேஞ்சில் அன்பு?
ராமன் மாறவேயில்லை!
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
10 comments:
கேட்கிறேனே என்று தப்பாக நினைக்காதீர்கள் சார். அது எப்படி 1963-ஆம் வருடம்தான் முதன் முதலாக ராமபிரானைப் பற்றிய இக்கதையைப் படித்ததாகக் கூறுகிறீர்கள்? விளக்க இயலுமா?
கிருஷ்ணன்
அதாவது கிருஷ்ணன், அந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதியன்றுதான் எனக்கும் அன் அத்தை பிள்ளைக்கும் பூணல் போட்டார்கள். அப்போது எனக்கு பரிசாக இப்புத்தகம் கிடைத்தது.
நான் வருடங்கள் சொல்வதெல்லாம் இம்மாதிரி என் வாழ்வில் நடந்த மற்ற நிகழ்ச்சிகளை வைத்துத்தான். அந்த நிகழ்ச்சிகள் நேற்று நடந்தவைபோலத் தோற்றம் அளிப்பதால், சமீபத்தில் 1952, 1961 என்றெல்லாம் போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
"Why dint you sign as Dondu Raghavan? Is it because you were writing about Raghavan?:-D"
அதானே, எப்படி டோண்டு இல்லாமல் போவது? உடனே திருத்தி விட்டேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஊருக்கு ராஜான்னாலும் தாய்க்கு பிள்ளைதானே சார்.
அதே மாதிரி ராமர் உலகத்துக்கே கடவுளானாலும் தோட்டக்காரன் கண்ணில் அவர் இன்னமும் குழந்தையாகவே தோன்றியிருப்பார்.
ஏசுபிரானும் தன்னுடைய தாய் மரியாளுக்கும் தந்தை சூசைக்கும் தன்னுடைய பொது வாழ்க்கையைத் துவங்கும் வரை கீழ்படிந்திருந்தார் என்று பைபிள் கூறுகிறது.
நாம்தான் வளர்ந்து நாலடி உயரம் வளர்வதற்குள் தாயாவது தந்தையாவது தலை தெறிக்க ஆடுகிறோம்.. அற்ப ஆயூள் உள்ளவர்கள்தானே..
"தில்லிக்கு ராசான்னாலும் பாட்டி சொல்லைத் தட்டாதே" என்று மனோரமா அவர்கள் பாடுவது இந்த இடத்திற்கு பொருத்தமாயிருக்கும் ஜோசஃப் சார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு சார்,
ராமயணத்தை படிக்கும் போதும், சொற்பொழிவில் ஒவ்வொருமுறை கேட்கும் போதும் ராமனின் நடந்துகொள்ளுதலில் இருந்து புதிது புதிதாக இனம் கண்டு கொள்ளக் கிடைக்கும்.
இறைவனே மானுடனாக நெறி பிறழாது எவ்வாறு வாழ்வது என்பதை மனிதர்க்கு "Leadership by example" என்று வாழ்ந்து காட்டிய காவியமல்லவா?
"இறைவனே மானுடனாக நெறி பிறழாது எவ்வாறு வாழ்வது என்பதை மனிதர்க்கு "Leadership by example" என்று வாழ்ந்து காட்டிய காவியமல்லவா?"
பலர் ஏற்கனவே கூறியது போல ராமாயண மற்றும் மஹாபாரதத்தில் கூறப்படாதவை என்று கிட்டத் தட்டஒன்றும் இல்லை. இந்த இரு இடுகைகளுமே வெவ்வேறு வகைப் படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தீர்களா?
மேலும் ராமாயணக் காட்சிகள் வரும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இந்த இரு இடுகைகளுமே வெவ்வேறு வகைப் படுத்தலுக்கு உள்ளாகியிருப்பதை கவனித்தீர்களா?//
முதலாவது இடுகை ஆளும் தலைமைக்கு ஒவ்வாதவை -அரசியல்
இரண்டாவது தலைவன் தன் திறனை/ வலிவை நிரூபித்த பின்னரும் எப்படி
எளிமையாக எளியோராலும் அணுகப்படும் வண்ணம் தன்னை வைத்திருக்கவேண்டும் என்கின்ற- ஆன்மிகம்!
ஆதி கீர்த்தனாரம்பத்திலே, ஆறேழு வருடங்களுக்கு முன்பு, ஆனந்த விகடனில் ராமனை வைத்து மேனேஜ்மன்ட் பற்றிய ஒரு தொடர் வந்தது. உண்மையில் மனிதர்களை மற்றொரு மானுடன் எங்கனம் நடத்த வேண்டும் என்பதற்கு ராமன் ஒரு உதாரணம்.
ராமனின் நடத்தையையும் கண்ணனின் நடத்தையையும் கம்பேர் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். இல்லையா?
ம்யூஸ் அவர்களே, நீங்கள் சொன்னதை வைத்து இணையத்தில் தேடியபோது இந்த இடுகை தென் பட்டது. http://marchoflaw.blogspot.com/2006/07/blog-post_29.html
பிரபு ராஜதுரை அவர்கள் எழுதி நம்ம ஜயராமன் சாரும் பின்னூட்டமிட்டிருக்கிறார்.
ராமரையும் கிருஷ்ணரையும்தானே, கம்பேர் செய்தால் போயிற்று. பாகவதத்திலிருந்து ஒரு காட்சி என்ற தொடரை போட்டு விடுவோமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment