ஒரு வடிவேலு படத்தில் கீழ்க்கண்ட காட்சி வரும்.
வெளியூர்க்காரரான அவர் டீக்கடையில் உட்கார்ந்து டீ குடித்து கொண்டிருப்பார். அவர் பக்கத்தில் வஸ்தாது போன்ற தோரணையில் ஒருவர் உட்கார்ந்திருந்து டீ குடித்து கொண்டிருப்பார். வஸ்தாதை ஒரு விடலைப்பையன் நாக்கூசும் வார்த்தைகளால் அர்ச்சித்து கொண்டிருப்பான். ஆண்பிள்ளையாக இருந்தால் தன்னுடன் ச்ண்டைக்கு வருமாறு சீண்டுவான்.
வஸ்தாதோ அவனைப் பொருட்படுத்தாது டீ குடித்து கொண்டிருப்பார். வடிவேலுவுக்கோ திகைப்பு. “என்ன சார் அந்தப் பையன் இப்படி சீண்டறான், வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க” என்று அவரைத் திகைப்புடன் கேட்பார். வஸ்தாது அவரிடம் சாடையாக பேசாமல் இருக்கச் சொல்வார். பையனும் விடாமல் சீண்டுவான். வடிவேலு கோபம் தாளாது பையனைத் துரத்த, அவன் போக்குக் காட்டிக் கொண்டே போய் ஒரு வேனில் ஏற, இவரும் பின்னாலேயே போய் ஏற, கதவை சாத்திவிட்டு அவரது ஒரு கிட்னியை எடுத்து அனுப்புவார்கள்.
முனகிக் கொண்டே வந்த வடிவேலுவை அந்த வஸ்தாது துக்கம் விசாரிப்பார். பிறகு முந்தைய வாரம்தான் தனது ஒரு கிட்னியை இதே மாதிரி பறிகொடுத்ததாகவும், அந்த புரோக்கர் பையன் அடுத்த கிட்னிக்கு குறிவைத்து வந்ததாகவும் கூறுவார். டீக்கடைக்காரரை வடிவேலு ஆதங்கத்துடன் இது பற்றி கேட்க அவரும் தனது கிட்னியை முந்தைய மாதம் எடுத்தார்கள் எனக் கூறுவார்.
அப்போதுதான் வடிவேலு “மதுரை சட்னிக்குத்தான் ஃபேமசுன்னு சொன்னாங்க, கிட்னிக்குமாஆஆ”! எனப் புலம்புவார்.
பை தி வே யாராவது படத்தின் பெயரை எடுத்து கூறினால் தன்யனாவேன்.
ஏன் இதை டோண்டு ராகவன் கூறுகிறான் என திகைப்படையும் வாசகர்கள் மற்றும் முரளி மனோகருக்காக மேலும் விளக்குவேன்.
எளிதில் உணர்ச்சிவசப்படும் மாணவர்கள் இளங்கன்று பயமறியாது எனச் செயல்பட்டு அவதிக்குள்ளாகப் போகிறார்களே என்று பயந்து நான் இட்ட இப்பதிவுக்கு என்னென்ன எதிர்வினைகள் வந்தன? அடேங்கப்பா!
மாணவர்கள் வடிவேலு ரேஞ்சுக்கு அவதிப்படக்கூடாது என்பது மட்டுமே என் நோக்கம். அதனால்தான் அந்த டீக்கடை வஸ்தாது போல இல்லாமல் நேரடியாகவே கூறினேன். ஏனெனில் இதே மாதிரி ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தால் ஒரு கல்வியாண்டை இழந்தவன் நான். அதன் பிறகு சுதாரித்து கொண்டேன், வேறு வகையில் முன்னுக்கு வந்தேன் என்பதெல்லாம் வேறு விஷயம். ஏதோ அதிர்ஷ்டம், மேலே வரமுடிந்தது அவ்வளவுதான்.
சில உதாரண பின்னூட்டங்கள்:
1. இடஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராடியபோது கூட அவர்களை போராட வேண்டாம் என்றும் படிக்க மட்டும் செய்தால் போதும் என்றும் நீங்கள் கூறினீர்களா ஐயா?
மாணவர்களை பார்த்து பயந்து போயுள்ளதில் நீங்கள் கலைஞர் கட்சி.
2. மனிதாபிமானமே இல்லாம அப்படி என்னத்த படிச்சு சாதிக்கப் போறோம்? அப்படி படிச்சு வர்ற தலைமுறையால என்ன பிரயோசனம்?
3. அதெல்லாம் சரி நோண்டு, இந்திய சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகிட்ட எல்லாரையுமே முட்டாள்ன்னு சொல்றியா! பகத்சிங்க், வாஞ்சிநாதன் இன்னும் பலரெல்லாம் எதுக்கு ராசா உயிர விட்டாங்க? சுதந்திர போராட்டத்துல லட்சகணக்கான பேர் பங்கெடுத்தும் காந்தி மட்டும் ஏன் ராசா தேசத் தந்தைன்னு சொல்லராங்க ?
இத பாரு நோண்டு பேசாம அமைதியா வீட்ல உக்காந்து டிவி சீரியல் பாரு இதெல்லாம் உனக்கு வேண்டாத வேலை.
ஆமா பசங்ச படிப்பு கேட்டுபோகும்னு நீ அக்கறைப்படும்போது தமிழன் கொல்லப்படுவது தடுக்கணும்னு நாங்க அக்கறைப்படுறது என்ன தப்பு?
4. இப்போ கஷ்டப்படுறவனுக்காக போராடணும்னு யாருக்குத் தோணுதோ, அதிகாரம் பண்றவன் தன்னோட நாட்டுக்காரனா இருந்தாலும் தப்புன்னு சொல்ற மனசு யாருக்கு இருக்கோ, அவனை மாதிரி மனசு உள்ளவந்தான் போன நூற்றாண்டுலயும் சரி, இன்னைக்கும் சரி போராடி தீமையை ஒழிக்கிறவன்.
இன்னைக்கு பாதுகாப்பா இருந்துகிட்டு, நாளைக்குப் பணக்காரனா ஆனாப் போதும்னு நினைக்கிற நாய்கள், அதிகாரத்துக்கு அடிதாங்கும் கூட்டத்திலதான், அன்னைக்கும், இன்னைக்கும், என்னைக்கும்.
இப்படியே போனால் எல்லா பின்னூட்டங்களும் வந்து விடும். ஆகவே இத்துடன் நிறுத்தி கொள்கிறேன். ஆதரித்து வந்த பின்னூட்டங்களை இங்கு சேர்க்கவில்லை.
இப்போது ஒன்று புரிகிறது. டீக்கடையில் வடிவேலுவிடம் ஐயா சாமி போகாதே, உன் கிட்னியை பிடுங்கிட்டுத்தான் விடுவாங்கன்னு யாராவது சொல்லியிருந்தால் கூட சிலர் அங்கே வந்து, தன்மானத்துடன் சீறும் வடிவேலுவை ஏன் தடுக்கறே பெரிசுன்னு கேட்பாங்க போலிருக்கு. அது சரி, அப்படியே விட்டால் வடிவேலு மாதிரி காரியம் கை மிஞ்சியதும் “மதுரை சட்னிக்குத்தான் ஃபேமசுன்னு சொன்னாங்க, கிட்னிக்குமாஆஆ”! என்று கத்தி சிலர் டரியல் ஆனால்தான் பலருக்கு ஜன்மசாபல்யம் கிட்டும் போலிருக்கிறது.
ஊத வேண்டிய சங்கை இன்னொரு முறை ஊதியாகி விட்டது. வரட்டுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
9 comments:
காரசாரமாக கருத்து எழுதுகிற பல பதிவர்களின் பதிவுகளில் எழுத்துப் பிழைகள் மலிந்துள்ளதே!. கருத்து தான் முக்கியம், எழுத்து முக்கியமல்ல என்றிருக்கிறார்களா ?
(கருத்தும் கூட உப்புக்கு கூட பெறாதவை தான்)
தமிழன் தமிழன் என்று உயிரை விடுகிற தற்குறிகள் தமிழை இப்படிக் கிள்ளுக் கீரையாய் நினப்பது சரியா ?
இவ்வளவு தப்பும் தவறுமாய் பதிவிடுவது பற்றி வெட்கப்படவே மாட்டார்களா ? தமிழ் தானே என்ற அலட்சியமா ! இந்த மாதிரி மொழிக் கொலைகாரர்களுக்கு முழுசா ”பன்” திங்கறதுக்கு வாயக் காணோம், ஆனா பலாப் பழத்தை உரிக்காம அப்படியே முழுங்க ஆசை.
விதியை நொந்தவன்
நல்ல உதாரணம்.
ஆனால் நமக்கு இழப்பு கண்டிப்பாக உண்டு என்று தெரிந்தும் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் கண்டிப்பாக வேறு காரணம் வைத்திருப்பார்கள்.
மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவேண்டும் என்பதில் நான் உடன்படுகிறேன், அதற்காக நாட்டில் நடக்கும் எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது மடத்தனம்.
உணர்வுகள் அப்படித்தான்
அழுகை வந்தால் அழவேண்டும்
கோபம் வந்தால் கோபப்படவேண்டும்.
சிலருக்கு சிரிப்பு வருகிறது சிரிக்கிறார்கள்
விதியை நொந்தவருக்கு,
நீங்கள் என்னை தான் சொல்கிறீர்கள் என்று எனக்கு தெரியும், எனது பதிவில் நீங்கள் இட்ட பின்னூட்டதிற்கு நான் அளித்த பதிலை இங்கேயும் அளிக்கிறேன்
*********************
கடைசியாக பின்னூட்டம் இட்ட அனானிக்கு!
நான் தமிழில் எழுதவே லாயக்கற்றவன்!
பள்ளி வகுப்பறையில் கடைசி இருக்கை மாணவன் நான், சரியாக படிப்பு வராததால் ஒன்பதாம் வகுப்போடு நிறுத்தி கொண்டேன்.
மாறி வரும் கணிணி உலகில் கடிதம் எழுதும் முறை அழிந்து வருகிறது, அதனால் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். படிக்கும் காலத்திலேயே ஒழுங்காக படித்திருந்தால் குறைந்தபட்சம் பிழை இல்லாமல் எழுதவாவது தெரிந்திருக்கும். ஆனால் பாருங்கள் எனது அப்பாவுக்கு படிக்ககூட தெரியாது,
அவருக்கு ஹிந்தி எதிர்ப்பு போராட்டமெல்லாம் தெரிந்திருக்கிறது.
நமக்காக தான் எதோ செய்கிறார்கள் என்று இன்று வரை கழக ஆதரவாளராக இருக்கிறார். அந்த மட்டில் பிழையாக எழுதுவதால் தமிழின உணர்வு அற்று இருக்கவேண்டும் என்ற உங்களின் கருத்தில் இருந்து விலகி நிற்கிறேன்.
//தப்பும் தவறுமாக சொன்னாலும் கருத்திலும் தெளிவு இல்லை. பதிவுல ஒன்னு பின்னூட்டத்தில் வேற.//
நான் பிடித்த முயலுக்கு மூணு கால் என்று சொல்லும் மூட கருத்துகள் உடையவனல்ல நான்,
எனது கருத்து தவறென்று யாராவது ஆதரத்துடன் நிறுபித்தால் எனது தோல்வியை ஒப்புகொண்டு சமரசம் செய்து கொள்வது எனக்கு பழக்கம்.
இது போல் நிறைய தடவை எனது வலைப்பூவில் நடந்திருக்கிறது.
ஒன்றை முழுவதுமாக தெரிந்து கொண்ட பிறகு தான் பதிவெழுத வேண்டுமென்றால் என்னால் முடியாது.
காரணம் அந்த ஒன்றை நான் தெரிந்து கொள்வதே தவறான பதிவில் வரும் பின்னூட்டத்தில் தான்.
வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி
என்னால் நொந்துபோனதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்
//கடைசியாக பின்னூட்டம் இட்ட அனானிக்கு!//
இதென்ன புதுக்கதை. அந்த அனானி உங்களையா சொன்னார்? தெரிந்திருந்தால் நானே அவரை கும்மியிருப்பேனே.
கர்த்துத்தான் முக்கியம். மொழி ஒரு தகவல் தொடர்பு சாதனம் மட்டுமே. விடுங்கள். இதையெல்லாம் லூஸ்ல விடவும்
அன்புடன்,
டோண்டு ராகவன்
வால்,
உங்கள் பதிலை இங்கே தான் பார்த்தேன்.
கருத்துக்களை மாற்றிக் கொள்வதை பற்றி எழுதியதற்கு நன்றி. ஏற்புடையதே.
ஆனால் தமிழ் தகராறாய் எழுதுவதற்கு சொன்னவை வெறும் காரணங்களே.
தன்னைத் தானே பார்த்துப் பரிதாபப் படுவதை முதலில் விடுங்கள்.
கடைசி பெஞ்ச் நடு பெஞ்ச் எல்லாம் கணக்கே இல்லை. முதல் ராங்க் வாங்கிய பெரும்பாலானோர் வாழ்வில் பிரகாசிக்கவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் 11 வயதில் இருந்து பனிபுரிகிறார். எனக்கு முறைப்படி பள்ளி செல்ல முடியலை என்று சொல்லிக் கொண்டிருந்தால் இப்போதும் கூட சராசரி கீ போர்ட் ஆர்டிஸ்டாக இருந்திருப்பார்.
நானும் உங்களைப் போல தான். ஆனால் +2 வரைப் படித்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு வரை எனக்கு வாய்ப்பாடே தெரியாது. வங்கி வட்டி எப்படி கணக்கிடுகிறார்கள் என்று தொழில் தொடங்கும் வரை தெரியாது. தொழில் தொடங்கிய பிறகும் கற்றுக் கொள்ளாவிட்டால் ஆப்பு கிடைத்திருக்கும்.
பூக்களில் இருந்து எக்ஸ்டாராக்ட் எடுத்து பிரான்ஸ், நெதர்லாந்து, சீனா போன்ற நாடுகளுக்கு அனுப்பவது என் தொழில். ஒரளவுக்கே ஆங்கிலம். ஆனாலும் குறையொன்றுமில்லை.
மனிதர்கள் உலகின் பல பாகங்களில் கஷ்டப்படுகிறார்கள். திபேத், பாலஸ்தீன் என பல இடங்களில் துயரம் தொடர்கதை தான். அதைப் பற்றி யாரும் இங்கே பேசுவதில்லை. ஆனால் சிலோன் விஷயத்தில் உங்களை ஈர்ப்பது அந்த so called தகவல் தொடர்பு சாதனம் தானே . அதை கொஞ்சம் சிரத்தை எடுத்து கற்றுக் கொள்வது தானே முறை.
வள்ளுவர் சொல்லியது போல, உங்களுடைய தவறைத் தவறு என்று சுட்டுபவனே நல்ல நண்பன். தவறு செய்யும் போது உங்களை ஆதரிப்பவன், உங்களின் முன்னேற்றத்தில் சிறிதும் அக்கறை இல்லாதவன்.
நன்றி.
விதியை நொந்தவன்
திரு அனானி.
க்ணினி தமிழ் பதிப்பில் எழுத்து பிழி என்பது தவிற்க முடியாத ஒன்று.
ஏன் திரு.டோண்டு சார், திரு ஜெய மோகன் சார் பதிவுகளிலும் பல பிழைகளைக் கண்டுள்ளேன்.
அதற்காக அவர்களை தமிழ் கொலையாளிகள் என்று சொல்லலாகுமா?
தங்கள் கோபத்தை நல்ல விதமாகக் காட்டினால் அதுவும் பெயரிட்டு காட்டினால் எல்லோரும் நண்பர்களாகலாமே.
"வால் பையன்" உண்மையிலே என் மனம் கவர்ந்த நடுநிலையாளர்.
"படிக்காதவனுக்கு ஒரு
இடத்துல ஆய்,
படிச்சவனுக்கு
முகமெல்லாம் ஆய்"
என்ற கிராமத்து மொழி தெரியுமா?
//
"வால் பையன்" உண்மையிலே என் மனம் கவர்ந்த நடுநிலையாளர்.//
இந்த வார்த்தையை கேட்கும் போது மிக்க மகிழ்ச்சி.
உங்களின் சரியான புரிதலுக்கு நன்றி நண்பரே!
என்ன சொல்றது இதுக்கு.
டோண்டு மற்றும் ஜெயமோகன் பதிவில் தவறுகள் உண்டு என்று நியாயப்படுத்தல் வேறு. இவர்கள் பதிவில் இருப்பதற்கு பெயர் வெறும் தவறுகள். தவறுகள் தவிர்க்க முடியாதவை. ஆனால் வால் போன்றோர் காட்டுவது அலட்சியம். கண்டிக்கத்தக்கது.
வால்-ஐ சொல்கிறேன் என்றால் டோண்டு பாய்ந்து வந்திருப்பாராம் ஆனால் அதுவே வேறு யாரோ என்றால் சும்மா குந்திக்கினு இருப்பாராம். என்ன அழகு. என்ன ஞானம்.
கருத்தைப் பார்க்காமல் யார் யாரைச் சொல்கிறார் என்று பார்கிற குனம் தமிழர்களின் சொத்து தான் போலிருக்கிறது. நடுநிலயாளர் என்றால் தான் பிடிக்கும் , விமர்சனம் என்றாலே அது தனிப்பட்ட தாக்குதலாகவே கருதுகிற பச்சக் குழந்தைத் தனத்தின் வெளிப்பாடு தான் இது.
கருத்துக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம் ஒருவர் இவ்வாறு தான் சிந்திக்கனும் பேசனும் என்றால் அது தவறு. ஆனால் மொழியை ஒழுங்க கையாளு என்றால் அதில நூறு சப்பைக் கட்டு கட்ட வருகிறீர்கள்.
ஆங்கிலத்தை தவறாக புரிந்து கொண்டவரைப் பார்த்து உனக்கு ஆங்கிலமே தகராறா என்று எள்ளி நகையாடுவாராம். ஆனால் அதே இது தமிழுக்கு என்றால் மொழி ஜஸ்ட் ஒரு மீடியம் தான் என்பாராம். டோண்டுவின் பல்வேறு பதிவுகளில் இது போன்ற நய்யாண்டியைப் பார்க்கலாம்.
மொழியை மீடியமாகப் பார்த்திருந்தால் இந்த நய்யாண்டி தேவைப் பட்டிருக்காது.
டோண்டு-வை ST.டோண்டு ஆக்க வேண்டாம். அவரே கூட அதே ஒப்புக்க மாட்டார்.
எழுத்துபிழையுடன் எழுதுவதாலேயே பதிவு பண்னாடை என்று நான் குப்பை கொட்டுவதில்லை.கம்யூட்டர் ஒரு கருவி, அதில் ஒழுங்காய் தட்டச்சு செய்ய துப்பில்லை என்றால் என்ன எழுதிக் கிழிக்கிறீர்கள் என்பதே என் கேள்வி.
ஒரு தட்டச்சுப் பலகையின் விதிமுறையக் கூட சரிவர பின்பற்ற முடியாத ஆட்கள் ஊருக்கு நாட்டுக்கு உபதேசம் செய்ய வரவேண்டாம்.
தேனியார், +2 வே உமக்கு மெத்தப் படிச்ச படிப்பா! கடைசி பெஞ்ச், ஒம்பதாம் வகுப்புக்கு மேல எல்லாமே உயர்கல்வி தானோ.
என் நன்பர் இட்லிவடை பதிவில் இவ்வாறு பின்னூட்டம் இட்டிருந்தார்.
நான் ஏற்கனவே நிரப்பப்பட்ட கோப்பையில் ஊற்றும் பழக்கமில்லாதவன்.
ஆக இதற்கு மறுமொழியாக எதேனும் ஒரு பழமொழியை பிடித்து வந்தாலும், என்னிடமிருந்து வருகிற கடைசி பதில் இதுவே.
விதியை (கடுமையாக) நொந்தவன்.
//என் நன்பர்//
இதே மாதிரி தவறுகளைத் தான் நானும் செய்திருக்கிறேன்.
உங்கள் கோபம் புரிகிறது, திருத்தி கொள்ள வாய்ப்பு மட்டுமே நான் கேட்டேன். திருந்தவே மாட்டேன் என்று சொல்லவில்லை.
டோண்டு எனக்கு ஆதரவாய் இருப்பதில் எனக்கு எந்த ஆச்சர்யமும் இல்லை. அவர் எனக்கு தந்தை மாதிரி
Post a Comment