2/19/2009

எங்கே பிராமணன் மெகா சீரியல் - பகுதிகள் 13 & 14

13-ஆம் பகுதி:
நாதன் கிளப் தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் ஒரு பார்ட்டி தர வேண்டும் என வசுமதி அபிப்பிராயப்பட, எதற்கு அதெல்லாம் என ஆரம்பத்தில் தயங்கிய நாதன் வழக்கம்போல வீட்டம்மா பேச்சைக் கேட்கிறார். ஆனால் பார்ட்டி வீட்டில் வேண்டாம் என்றும் 5-நட்சத்திர விடுதியில் வைத்து கொள்ளலாம் என்பதில் மட்டும் நாதன் உறுதியாக உள்ளார்.

இப்போது திரைக்கு சோவும் அவரது நண்பரும் வருகின்றனர். தேவர்களே சோமபானம் சாப்பிடலாமா என்னும் கேள்விக்கு சோ அவர்கள் ஏற்கனவேயே பல இடங்களில் அளித்த பதிலையே இங்கும் அளிக்கிறார்.

அதாவது, ஸோமபானம் என்பது போதை ஏற்றுவது அல்ல. "ஸுரா பானம்' என்பதுதான் அப்படிப்பட்ட பானம்; இதுவே "பானம்' என்றும் இலக்கியங்களில் குறிப்பிடப்படுவதுண்டு.

ஸோம என்பது ஒரு கொடி – ஸோமலதை; அதன் ரஸம் ஸோம ரஸம்; இது தேவர்களுக்கு உரியதாகவும், அமிர்தத்திற்கு ஒப்பானதாகவும் குறிப்பிடப்படுகிறது. இது யாகங்களில் முக்கிய இடம் பெறுகிறது. இது போதை தருகிற விஷயம் அல்ல.

ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.

அதுகூடத் தெரியாமல் பலர் உளறுவதுதான் வேடிக்கை.

அதே போல நாதன் பார்ப்பனராக இருந்தாலும் அசைவம் சாப்பிடலாமா என கேள்வி எழ சோ அவர்கள் இது விஷயமாக அகத்திய முனிவர் கூறியதை எடுத்துரைக்கிறார். ஒரு காலத்தில் எல்லோருமே அசைவ உணவு உண்டவர்களே, பார்ப்பனர்கள் உட்பட. அகத்தியர் காலத்தில் வாதாபி, இல்வலன் என இரு அரக்கர்கள் இருந்தனர். வாதாபிக்கு ஒரு வரம். அதன்படி அவனை கொன்று சமைத்தாலும் அவனால் உயிர்பெற்று வரவியலும். ஆகவே அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு காரியம் செய்து வந்தனர். அதாகப்பட்டது வாதாபி ஓர் ஆடாக உருவெடுக்க. வில்வலன் அவனை வெட்டி கறி சமைப்பான். ஏதேனும் முனிவரை அழைத்து அவனை சமைத்த உணவை கொடுப்பான். முனிவரும் உண்டவுடன் இல்வலன் வாதாபி வெளியே வா எனக் கூற வாதாபியும் முனிவரின் வயிற்றைக் கிழித்து வெளியே வருவான். முனிவரும் மரிப்பார்.

இதே தந்திரத்தை அகத்தியரிடமும் முயற்சி செய்ய அவரோ கணபதியை துதித்து “வாதாபி ஜீரணமாகக் கடவது” என்று கூற அவனும் அழிந்தான். அது தெரியாத இல்வலனோ வாதாபியை வெளியே வருமாறு பலமுறை கூப்பிட்டும் வரவில்லை. அதன் பிறகுதான் பார்ப்பனர்கள் அசைவம் உண்ணக்கூடாது என்ற கட்டுதிட்டத்தை அகத்தியர் கொண்டு வந்தார். ஆனால் நாதன் போன்றவர்களோ மறுபடியும் அகத்தியரது முந்தின காலக்கட்டத்துக்கு சென்றுவிட்டனர் என சோ சீரியசாகவே கூறினார்.

இப்போது காட்சி கிருபா வீட்டுக்கு செல்கிறது. ஜ்ட்ஜாத்து மாமியை கொலுவுக்கு அழைத்தது பற்றி பேச்சு வருகிறது. அடுத்த நாள் மாமி மட்டும் வருவார், பிரியா வரமாட்டாள் என்பதை அறிந்த கிருபா ஆர்வம் இழந்தவனாக போகிறான். அதற்குள் பிரியாவிடமிருந்து ஃபோன் வருகிறது. அவன் தங்கள் வீட்டிற்கு வரும்போது ஹெல்மெட்டை அங்கேயே மறந்து வைத்து விட்டதாகவும் அதை ஆள்மூலம் கொடுத்தனுப்பி அவன் அப்பாவிடம் சேர்ப்பித்து விட்டதாகவும் அவள் கூறிவிட்டு ஒரு கடிதமும் அதில் வைத்திருப்பதாக கூறுகிறாள். அதை எடுத்து அவன் படிக்க, அவளுக்கும் தன்மேல் ஒரு அபிப்பிராயம் விழுந்திருப்பதை அறிந்து மகிழ்ச்சி கொள்கிறான்.

நாதனுக்கு சொந்தமான ஒரு அபர்ட்மெண்டில் பாகவதர் தங்கியிருக்கிறார். அவருக்கு நாதன் சாப்பாடு எடுத்து வந்து அவருடன் பழைய கதைகளை நாதன் பேசுகிறார். அவரை பற்றிய சுவையான ஃப்ளாஷ் பேக் வருகிறது. பாகவதரை தனது friend, philosopher & guide என நாதன் அழுத்தம் திருத்தமாகக் கூறி அவரை நெகிழ வைக்கிறார். அசோக் தனக்கு மகனாக பிறந்ததே பாகவதர் சொற்படி தான் யாகம் செய்ததே காரணம் என்பதை நாதன் திடமாக நம்புகிறார்.

அசோக்கை பற்றி கவலைப்பட வேண்டாம் என பாகவதர் கூறுகிறார். அசோக் உள்ளே ஒரு பெரிய யக்யமே நடக்கிறது என்றும் அவர் கூறுகிறார். அவன் சித்தம் போக்கு சிவன் போக்கு என வாழ்வதாகக் கூறுகிறார். இப்போது அசோக் இருக்கும் கவலைக்கிடமான நிலைகூட வெண்ணெயை காய்ச்சும்போது அது நெய்யாக மாறும் முன்னால் வரும் துர்க்கந்தத்துக்கு சமம் எனவும் அவர் கூறுகிறார்.

பாகவதரின் பேரனுக்கு உடம்புக்கு முடியாமல் போக, அவர்து மகன் தனது அவரிடம் பேரனைப் போய் பார்க்குமாறு கூற அவரும் செல்கிறார். தாத்தா கையால் மந்திரித்து விபூதி இட்டால் தனக்கு குணமாகும் என அவர் பேரன் கூறியதாக அவன் நண்பன் கூற பாகவதர் நெகிழ்ந்து போகிறார்.

சோவும் அவர் நண்பரும் மீண்டும் திரையில். மந்திரிப்பதால் குணமாகுமா என நண்பர் சந்தேகத்தை கிளப்ப, எல்லாவற்றுக்குமே நம்பிக்கைதான் மூலாதாரம் என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். டாக்டர் உண்மையிலேயே டாக்டர்தானா என்பதை கூட விசாரிக்காது அவர் கொடுக்கும் மருந்துகளை உட்கொள்கிறோம். மருந்துகளால் பக்கவிளைவுகள் வரலாம். ஆனால் மந்திரத்தால் அப்படி ஒன்றும் நேராது. இருப்பினும் மருந்துகளையே நம்புகிறோம் ஏன் என சோ அவர்கள் கேள்வி எழுப்புகிறார்.

14-ஆம் பகுதி
அசோக்கும் பாகவதரும் ஹிந்து சட்டம் பற்றி பேசுகிறார்கள். அதில் மனுவின் சட்டம் பற்றியும் பேச்சு வருகிறது. அது பார்ப்பனருக்கு சாதகமாக இருக்கிறது என்பதை பாகவதர் ஆணித்தரமாக மறுக்கிறார். உடனே சோவும் நண்பரும் திரைக்கு வருகின்றனர். மனுஸ்ம்ருதிப்படி ஒரே குற்றத்துக்கு வர்ணப்படி வெவ்வேறு அளவில் தண்டனைகள் இருப்பது பற்றி சோ அவர்கள் உதாரணங்களுடன் விள்ச்க்குகிறார். எல்லோரையும் விட அதிக த்ண்டனை பார்ப்பனருக்கே. அதே சமயம் அவர்களுக்கிரிய நியமங்களும் கடுமையானவையே. உண்மை கூறப்போனால் தனது தர்மத்தை கைவிட்ட பார்ப்பனனுக்கு ஒரு சலுகையும் தரக்கூடாது என்பதையும் மனுஸ்ம்ருதி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறது. உண்மையில் அரசனுக்குத்தான் அத்தனை பெருமைகளும் சேருகின்றன.

கொலுவுக்கு வர ஏதுவாக பிரியா கேஷுவலாக தனது க்ளாசை கேன்சல் செய்து அன்னையுடன் கிருபா வீட்டுக்கு செல்கிறாள். அவள் வருகிறாள் என்பதை உணர்ந்த கிருபாவின் அர்ஜெண்ட் வேலைகள் எல்லாம் மாயமாக மறைகின்றன. கண்ணாலேயே பேச்சு நடப்பதை சுவைபட காட்டினார்கள். அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே என கிண்டல் செய்யும் முரளி மனோகர் அமைதி காக்க வேண்டும். இங்கு நான் சீரியல் பற்றி பேசுகிறேன், நீ என்ன வேறு கதையெல்லாம் பேசுகிறாய், பிச்சுடுவேன் பிச்சு.

பார்ட்டிக்கு செல்ல நாதனும் வசுமதியும் தயாராகிறார்கள். அசோக் வீட்டிலேயே இருக்கிறான். தோட்டத்தில் அமர்ந்து படிக்கிறான். இரவு 11 மணியளவில் அந்த பக்கமாக வந்த பாகவதர் வேலிக்கு வெளியிலிருந்தபடியே பேசுகிறார். உள்ளே வர மறுக்கிறார். அசோக் பார்ட்டிக்கு போகாதது குறித்து அவனை சீண்டும் வகையில் பல கேள்விகள் கேட்கிறார். பிறகு தான் அவன் ஸ்திதப்பிரக்ஞைனனா என்பதை சோதிக்கவே அவ்வாறு கேள்விகள் கேட்டதாகவும் அவர் கூறுகிறார். கடைசியில், தான் வெகுதூரம் செல்ல வேண்டும் அதற்கு முன்னால் அசோக்கை பார்க்கவே அங்கு வந்ததாக கூறியபோதே, எனக்கு வித்தியாசமாக பட்டது. நான் மட்டும் நாவலை படிக்காதிருந்தால் பாகவதர் அடுத்த எபிசோடில் காலி என முடிவு செய்திருப்பேன். பாகவதர் சென்றதும் உள்ளே வரும் அசோக்குக்கு பாகவதரிடமிருந்தே ஃபோன் வருகிறது. தான் காஞ்சீபுரத்திலிருந்து பேசுவதாக பாகவதர் கூற அசோக் திகைக்கிறான்.

மேலே நடப்பதை பார்க்க நாளைவரை காத்திருக்க வேண்டியதுதான்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

வால்பையன் said...

//ஆகையால் ஸோமபானம் அருந்துவது என்பது சடங்குகளுடன் கூடிய, புனிதமுடைய ரஸத்தை அருந்துவதே தவிர – போதை ஏற்றிக்கொள்கிற விஷயம் அல்ல. ஸுராபானம் என்பதுதான், குடி; போதை பானம்.//

உங்களுக்கு ”சோ”ம பானம் யார் கொடுத்தது?

வஜ்ரா said...

கடந்த சில எபிசோடுகளில் எனக்கு சில ஜியாகிரபி இடித்தது போல் தோன்றியது.

முந்தய காட்சியில் ஜட்ஜ் வீடருகே அபார்ட்மெண்டில் இருந்த பாகவதர் திடீர் என்று காஞ்சிபுரத்தில் உள்ள அவருடைய வீட்டில் இருந்து செல் பேசியில் பேரனுக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தைக் கேட்டு ஹாஸ்டலுக்குச் சென்று பார்க்கிறார். பின்னர் திரும்பவும் ஜட்ஜ் வீட்டருகே உள்ள அபார்ட்மெண்டில் பாட்டு படிக்கிறார்.

Anonymous said...

//கண்ணாலேயே பேச்சு நடப்பதை சுவைபட காட்டினார்கள். அந்த நாள் ஞாபகம் வந்ததே நண்பனே என கிண்டல் செய்யும் முரளி மனோகர் அமைதி காக்க வேண்டும். இங்கு நான் சீரியல் பற்றி பேசுகிறேன், நீ என்ன வேறு கதையெல்லாம் பேசுகிறாய், பிச்சுடுவேன் பிச்சு. //


malarum ninaivukala?

dondu(#11168674346665545885) said...

@வஜ்ரா
இதில் குழப்பமே இல்லை. பாகவதர் எப்போதாவதுதான் சென்னை வருகிறார், ஏதேனும் பிரவசனம் இருக்கும் பட்சத்தில். அப்போது ஓரிரு நாட்கள் மட்டும் சென்னையில் தங்க வேண்டியதாக நேரிடும். அதற்காக நாதன் ஒரு முழு அபார்ட்மெண்டையே பாகவதருக்காக ஒழித்து கொடுக்கிறார். பாகவதர் சென்னையில் இல்லாத நேரத்தில் அது பூட்டியே கிடக்கும்.

இந்த விஷயம் முதல் எபிசோட்லேயே க்ளியர் செய்யப்பட்டாலும் நேற்றைய எபிசோடில் பாகவதரே இது பற்றி பேசுகிறார். தான் ஒருவன் அவ்வப்போது வருவதற்காக முழு அபார்ட்மெண்டையும் ஏன் காலியாக வைத்திருக்க வேண்டும், வாடகைக்கு விடலாமே எனவும் ஆலோசனை கூறுகிறார். நாதன் கேட்பதாக இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

Dondu Sir,

You are doing a great job.

I found a link to see this TV Serial, telecasted from 16t Feb. onwards.

http://www.blog.isaitamil.net/?s=enge+brahman

Have a nice day,

Krishnan

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது