2/05/2009

கிருஷ்ணர் வழி வந்த யாதவ சமூகம்

பெருமதிப்புக்குரிய செட்டியார் சமூகம், ஆதரிசமாக கொள்ளவேண்டிய நாடார் சமூகம், பாரம்பரியம் மிக்க பிள்ளைமார் சமூகம் என்று வந்த பதிவுகளின் வரிசையில் இப்போது வரும் பதிவு கிருஷ்ணர் வழி வந்த யாதவ சமூகம் பற்றியது.

சாதிகள் பற்றி பேசுவது அரசியல் ரீதியாக சரியில்லை என்ற மேம்போக்கான மனோபாவம் இங்கு தமிழுலகில் மிகுந்து விட்டது. நமது வேர்களை பழித்து எழுதுவது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இது சம்பந்தமாக ஜெயமோகன் எழுதுவதை இங்கு சற்றே கோடி காட்ட எண்ணுகிறேன். அவர் எழுதுகிறார், “இன்று மேலைநாடுகள் நம்முடைய எல்லா வரலாற்று அடையாளங்களையும் நிராகரிக்கவும், நம்முடைய பெருமிதங்களை எல்லாம் முற்றாக மறுக்கவும் விரும்புகின்றன. நம்மை இருண்ட , பண்பாடற்ற மனிதர்களாகச் சித்தரிக்கவும் மேலைநாட்டுத்தொடர்பால்தான் நமக்கு நாகரீகம் வந்தது என்றும் சொல்ல விரும்புகின்றன. அதாவது காலனியாதிக்க வரலாற்று எழுத்தை மீண்டும் நம் மீது திணிக்கின்றன. நீண்டகால பண்பாட்டுப் படையெடுப்பு ஒன்று இப்போது நம் மீது நடத்தப்படுகிறது.
அதற்கு ஏகாதிபத்திய சக்திகள் நம்மையே பயன்படுத்துகின்றன. பெரும் நிதியுதவியுடன் அவை அமைப்புகளை உருவாக்கி அங்கே ஆய்வாளர்களை அமர்த்தி இத்தகைய ஆய்வுகளை நூற்றுக்கணக்கில் உருவாக்குகின்றன.
இந்த கூலி வரலாற்றாசிரியர்கள் தங்களை தலித் சார்பானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானவர்கள் என்றும் பாதுகாப்பான முகமூடிகளைப் போட்டபடி நம் நாகரீகம் ஒட்டுமொத்தமாகவே ஒரு இனவெறி-மதவெறி நாகரீகம்தான் என்றும், நமக்கு பண்பாடென்றே ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள். மிக நுட்பமாகவும் பூடகமாகவும் நீண்டகால அடிப்படையிலும் இந்த திரிபு வேலை நடந்துவருகிறது.
இவர்கள் காலனியாதிக்க வரலாற்றாசிரியர்களை ‘மறுவாசிப்பு’ செய்கிறார்கள். அவர்களை ‘மீட்டு’ எடுக்கிறார்கள். தேசிய வரலாற்றாசிரியர்களை சாதியவாதிகள்,ஆதிக்கவாதிகள் என்று முத்திரை குத்தி நிராகரிக்கிறார்கள். மூன்றாம் கட்ட மறுபரிசீலனை வரலாற்றாசிரியர்களையும் தேசிய வரலாற்றாசிரியர்களின் வரிசையில் சேர்த்து விடுகிறார்கள். இந்திய– தமிழ்ச் சூழலில் உள்ள முரண்பாடுகளை மேலும் அழுத்திக் காட்டுகிறார்கள். இங்கிருந்த சுரண்டலையும் அடிமைத்தனத்தையும் மிகைப்படுத்தி பூதாகரமாகக் காட்டுகிறார்கள். இங்குள்ள எல்லா சாதக அம்சங்களையும் அந்தச் சுரண்டலுக்கான உத்திகளாக மட்டும் சுருக்கிக் காட்டுகிறார்கள். சிறந்த உதாரணம் எம்.எஸ்.எஸ்.பண்டியன் போன்றவர்கள்.
இந்த நான்காவது கட்ட வரலாற்றையே நாம் இன்று அதிகமாக வாசிக்க முடிகிறது. அதைப்பற்றிப் பேசினால் நமக்கு முற்போக்கு முகமூடியும் கிடைக்கும். ஆனால் இதன்பின் உள்ள ஏகாதிபத்தியச் சதி நம்மை நெடுங்காலத்து அடிமைத்தனத்துக்குக் கொண்டு செல்வது என நாம் உணரவேண்டும். பாரபட்சம் இல்லாமல் முன்னோடி எழுத்துக்களை வாசித்து நம்முடைய சொந்தவரலாற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும். அதுவே இன்றைய தேவையாகும்.
இந்த அடிப்படையில் நாம் நம்முடைய வரலாற்று நூல்களை வாசிக்க வேண்டியிருக்கிறது. இந்த நான்கு அடுக்குகளிலும் உள்ள வரலாற்று நூல்களை வாசிப்பது அவசியம். ஒவ்வொன்றையும் அதனதன் இடத்தில் அமர்த்தவும் வேண்டும்”.


இப்போது இந்தப் பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். இங்கும் முந்தைய இரு பதிவுகளைப் போல குமுதம் பத்திரிகைதான் முக்கிய ஆதாரம். அதன் 04.02.2009 மற்றும் 11.02.2009 இதழ்களில் வந்தனவற்றை முதலில் பார்ப்போம். பிறகு டோண்டு ராகவன் வருவான். நன்றி இரா. மணிகண்டன் மற்றும் குமுதம். ஓவர் டு குமுதம்:

தாய் மண்ணின் உரிமைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் போராடிய மாவீரன் அழகுமுத்துக்கோனை நேருக்கு நேர் சந்திக்க பயந்த கும்பினியப்படை அவரது கைகளிலும் கால்களிலும் விலங்குகளைப் பூட்டி பீரங்கிக்கு முன்னால் நிறுத்தியது. அவரைப் போலவே கைகளில் பூட்டப்பட்ட விலங்குகளோடு அவரது ஆறு துணைத் தளபதிகளும் நிறுத்தப்பட்டார்கள்.

“எங்களை எதிர்ப்போருக்கு இதுதான் கதி” என்று கும்பினிப்படை எக்காளமிட்டபடி அவர்களை சுற்றிச்சுற்றி வந்தது. ‘ம்’ என்றால் பீரங்கிகள் முழங்கும். அழகுமுத்துக்கோனும் அவரது வீரர்களும் உடல் சிதறிப் போவார்கள். அதைப் பொறுக்கமாட்டாமல்தான் அன்றைய நடுக்காட்டுச் சீமை பாளம்பாளமாய் வெடித்து சுட்டு எரிந்து கொண்டிருந்தது.

“மன்னிப்புக் கேட்டால் இக்கணமே விடுதலை; வரி கொடுக்க சம்மதித்தால் மட்டுமே உயிர் மிஞ்சும்” என்று கும்பினிப்படை எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் “தாய் நாட்டின் மானத்துக்காக மரணத்தை முத்தமிடவும் நாங்கள் தயார்” என்ற அழகுமுத்துக்கோனின் கர்ஜனையைக் கேட்டு கும்பினிப்படை அதிர்ந்தது. ஆத்திரம் கொண்டது.

248 வீரர்களின் தோள்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டன. நிறுத்தி வைக்கப்பட்ட ஏழு பீரங்கிகளின் வாயில் இடப்பக்கம் 3 தளபதிகளையும் வலப்பக்கம் 3 தளபதிகளையும் நடுவில் வீரன் அழகுமுத்துக் கோனையும் நிறுத்தினார்கள்.

பீரங்கிகள் வெடித்துச் சிதறின. வீர மைந்தர்களின் ரத்தத்தால் நனைந்தது நடுக்காட்டுச் சீமை. இந்தியாவின் விடுதலைக்காக தன் இன்னுயிரை முதல் காணிக்கையாக்கி இந்திய விடுதலை வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம்பிடித்துக் கொண்டார் அழகுமுத்துக்கோன்.

தாய் மண்ணை அடிமைப்படுத்த நினைத்த ஆதிக்க சக்திகளுக்கு எதிராக சுதந்திர முழக்கமிட்ட வீரனைத் தந்து யாதவ சமூகம் பெருமை கொண்டது.

தமிழ்நாட்டின் மிகப் பழமை வாய்ந்த சமூகங்களுள் ஒன்று யாதவர் சமூகம். இவர்கள் இடையர்கள். ஆயர்கள். கோனார் என்றே தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றனர். வட இந்தியாவில் யாதவ் என்று அழைக்கப்படுவோருக்கும் தமிழகத்தின் யாதவர்களுக்கும் கலாச்சார பண்பாட்டு ரீதியில் எந்தத் தொடர்பும் கிடையாது. ஆனாலும் ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது. தமிழகத்தில் தமிழே இவர்களது மொழி.

‘இடை’ (நடு) என்றத் தமிழ்ச் சொல்லில் இருந்து ‘இடையர்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது. ஐவகை நிலங்களில் ‘முல்லை’ என்ற நடுக்காட்டில் புல்வெளி நிலத்தில் அவர்கள் வாழ்ந்து வந்ததையே இது எடுத்துக் காட்டுகிறது. “விவசாயிகள், வியாபாரிகள் என்ற இரு பிரிவினர்களுக்குன் இடையே ஒரு தொடர் கண்ணியாக இடையர்கள் இருந்ததால் அவர்களுக்கு அப்பெயர் ஏற்பட்டது” என பூஜ்யர் போப் தஞ்சாவூர் பற்றிய தகவல் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த இடையர்கள்தான் தங்கள் பெயர்களுடன் பிற்காலத்தில் கோனார் அல்லது கோன் (அரசன்) என்ற பட்டப்பெயரைச் சேர்த்து கொண்டுள்ளனர். 1891-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணிப்பு அறிக்கையில் ‘பிள்ளை, கரையாளர்’ என்ற பட்டப் பெயர்களையும் இவர்கள் பயன்படுத்திக்கொண்டது பதிவாகியுள்ளது. இவர்கள் தம்மைப் பற்றிக் கூறும் பொதுப்படையான அம்சம், தாங்கள் கிருஷ்ணரின் வம்சத்தைச் சேர்ந்தவர்கள் என்பதே.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இவர்கள் பரவி இருக்கிறார்கள். மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் அதிகமாக வசிக்கிறார்கள். தர்மபுரி, வேலூர் மாவட்டங்களில் குறும்படை என்ற பெயரில் அதிகளவு இருப்பதாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணர் பரம்பரையைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களில் அநேகர் வைணவ வழியைப் பின்பற்றுகின்றனர்.

இவர்களுக்கென நீண்ட பாரம்பரியம் இருக்கிறது. ரிக் வேதத்தில் குறிப்பிடப்படும் பல ரிஷிகள் யாதவர்களே என்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கண்ணகிக்கு அடைக்கலம் கொடுத்துக் காத்த ஆயர்கள் பற்றிக் குறிப்பிடுகிறார். அந்த ஆயர்கள்தான் யாதவர்கள் என சொல்லப்படுகிறது.

அரசியலிலும் இலக்கியத்திலும் இச்சமூகத்தினருக்கு அதிக ஈடுபாடு உண்டு. தமிழகத்தில் பதிப்புத் துறை பெரிதும் வளர்ச்சியடையாத காலத்திலேயே மதுரையில் பதிப்புத் துறையில் ஈடுபட்ட இ.மா. கோபாலகிருஷ்ணக் கோனார், பொன்னையக் கோனார் போன்றவர்கள் குறிப்பிடத் தக்கவர்கள்.

தமிழன்னை ஈன்ற தனிப்பெருந்தமிழறிஞர் கார்மேகக் கோனார் நல்லிசைப் புலவர்கள், கண்ணகி தேவி, ஆபுத்திரன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு ஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிட்டவர். பள்ளி, கல்லூரிகளில் தமிழையும் தமிழாசிரியர்களையும் துச்சமாக மதித்து வந்தவர்கள் மத்தியில் தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய மரியாதையை வாங்கிக் கொடுத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர். பள்ளி, கல்லூரிகளுக்கு உரிய நூல்களை வெளியிட்டு சிறப்பு செய்தவர். மாணவர்களிடையே தமிழார்வத்தை வளர்க்கவும் நூல்களை மலிவுவிலையில் கிடைக்கவும் செய்தவர். கோனார் நோட்ஸ் வெளியிட்டு தமிழகம் முழுதும் கல்வியில் புதுவடிவத்தையும் எளிமையையும் ஏற்படுத்தியவர் இவரே.

பதினெட்டாம் நூற்றாண்டில் தென்னிந்திய வரலாற்றை உலகுக்கு எடுத்துக் கூறிய ஒரு அரசியல் ஞானியை ஈன்று உதவியதும் இந்த சமூகம்தான். வரலாறு எழுதுவது என்பது வேறு. வரலாறாக வாழ்வது என்பது வேறு. இந்த இரண்டையுமே செய்தவர்தான் புதுச்சேரியை சேர்ந்த நாட்குறிப்பு வேந்தர் ஆனந்தரங்கர் (அதாவது டோண்டு ராகவனது சக ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி).

அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.

சென்னை-பெரம்பூரில் பிறந்த ஆனந்தரங்கர், ஒரு சாதாரண பாக்குக் கிடங்கு ஒன்றின் உரிமையாளராகத்தான் தன் வாழ்க்கையைத் துவங்கினார். புதுச்சேரி பிரெஞ்சு ஆளுநர் ட்யூப்ளேயின் மொழி பெயர்ப்பாளராகி (துபாஷி) அரசியல் உலகில் முதன்மையும் முன்னுரிமையையும் பெற்றார். இந்தக் காலத்தில் அவர் எழுதிய நாட்குறிப்புகள்தான் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

ஆனந்த ரங்கராட் சந்தமு, ஆனந்தரங்கக் கோவை, ஆனந்தரங்கன் பிள்ளைத் தமிழ் என்று இவர் குறித்துப் பல இலக்கியங்கள் உருவாகும் அளவுக்கு அவர் வரலாற்று நாயகராக விளங்கியவர். அந்தப் பெருமை யாதவர்குல சமூகத்துக்கே.

யாதவ சமூகத்தார் இந்திய சுதந்திரத்துக்கு ஆற்றிய பணி குறிப்பிடத் தக்கது.

மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் இந்திய நாட்டின் விடுதலைக்காகப் போராடியவர் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் பிள்ளை. 33 வயதில் சென்னை மக்களுக்கு பல வழிகளில் உயர்வு கொடுத்தவர் இவரே. இவர் மேயராக இருந்த காலத்தில்தான் சென்னை தமிழ் நாட்டுக்கே சொந்தம் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை சென்னை மாநகராட்சி நிறைவேற்றி அதில் வெற்றியும் கண்டது. இவரது காலத்தைத்தான் ‘மாநகராட்சியின் பொற்காலம்’ என போற்றுகிறார்கள்.

‘தமிழர் வீரம்’’தமிழ் வளர்த்த கோயில்கள்’, ‘போர்க்காவியம்’ உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதி தமிழ் இலக்கிய உலகுக்கு அணி சேர்த்தவர் மேயர் ராதாகிருஷ்ணப்பிள்ளை.

யாதவர்கள் வைஷ்ணவ சமயத்தைச் சார்ந்தவர்கள். கிருஷ்ண பகவானைப் பல்வேறு பெயர்களால் வழிபடுகின்றனர். அவர்கள் சனிக் கிழமையைப் புனித நாளாகக் கருதுகின்றனர். ‘கோகுலாஷ்டமி’தான் அவர்களுக்கு மிக முக்கியமான திருநாள். அதற்கு மறுநாள் நடக்கும் உறியடி உதசவத்தின்போதுகிருஷ்ணரின் குழந்தைப்பருவ லீலைகளாகிய வெண்ணெய் திருடுதல், வெண்ணெய் மற்றும் தயிர்ப்பானைகளை உடைத்தல் முதலியவற்றில் அவர்கள் ஈடுபடுகின்றனர். கிருஷ்ணர்’ அவர்களுடைய குலத்தில் வளர்ந்தவர் என்பதால், யாதவர்களை மற்ற சமூகத்தார் அன்பு பாராட்டி நடத்துவதாகக் கூறப்படுகிறது.

முன்பு, கிருஷ்ண ஜெயந்தியின் போது மஞ்சத் தண்ணீர் ஊற்றுவது இவர்களிடையே பிரசித்தம். முறை மாப்பிள்ளை, மாமன், மச்சான், முறைப்பெண் ஆகியோட் மீது மஞ்சள் தண்ணீர் ஊற்றி மகிழ்கிறார்கள். தென்மாவட்டங்களில் இன்றைக்கும் யாதவர் இனமக்கள் இந்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.

இரவு நேரங்களில் விளைச்சல் நிலங்களில் ஆடுகளை நிறுத்தி ‘கிடை’ போடும் வழக்கம் சிலரிடம் இன்றைக்கும் உண்டு. இதனால் நிலத்திற்கு மிகப்பெரிய சத்துக்களை வழங்குகிறார்கள். யாதவர்களில் சிலர் நிலச்சுவான்தார்களாக இருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் எருதுகளை அடக்கி வீரத்தைக் காட்டிய்பின்பே, மணமகன் மணமகளை மணக்க முடியும் என்ற நிலை இருந்தது. இன்று அது வழக்கொழிந்து போய்விட்டது.

முன்பு வயதுக்கு வந்த பெண்கள் பல்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. சீக்கிரமே திருமணம் செய்து கொடுக்கப்பட்டனர். இப்போது அந்தக் கட்டுப்பாடு வேகமாக மறைந்து வருகிறது.

சிலர் அக்காள் மகளைத் த்ருமணம் செய்கின்றனர். சில பகுதிகளில் வாழும் யாதவர்கள் அத்தை மகள், மாமன் மகளை மட்டுமே மணக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர்.

மணமக்கள் கலந்து பழகுவதற்காகவும், மணமகளின் வெட்கத்தை மாற்றும் பொருட்டும் திருமணத்தின்போது சில கேலி விளையாட்டுகள் நிகழ்த்தப்படுகின்ரன. தன்ணீர் நிறைந்த பானையில் ஒரு த்ங்க மோதிரத்தைப் போட்டு, அதை மணமக்களை எடுக்கச் சொல்கிறார்கள்.

மணமக்கள் வீட்டிற்குள் நுழையும்போது மணமகனின் சகோதரி, அவர்களைத் தடுத்து நிறுத்தி, ‘ஆண் குழந்தை வேண்டுமா, பெண்குழந்தை வேண்டுமா’ என்று கேட்கிறாள். அதற்கு பதில் சொன்னபிறகே வழி விடுகிறாள். இது போன்ற பல சடங்கு சம்பிரதாயங்கள் இன்று இவர்களிடையே வழக்கொழிந்து போய்விட்டன.

தொழில் துறையில் ரோஜா தீப்பெட்டி அதிபர் கோபால் கிருஷ்ண யாதவர் பங்கு மகத்தானது. அதேபோல், மதுரை யாதவர் கல்லூரிகள் உள்ளிட்ட பல கல்விப் பணிகளை இச்சமூகத்தினர் செய்து வருகின்றனர் என்றாலும், யாதவ சமுதாய மக்களில் பெரும்பாலானோர் இப்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளனர். அவர்களை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

யாதவ நட்சத்திரங்கள் சிலர்:
வீரன் அழகுமுத்துக்கோன்: 18-ஆம் நூற்றாண்டிலேயே இந்திய சுதந்திரத்துக்காக குரல் கொடுத்த வீரர். 37 ஊர்களுக்கு நடுநாயகமாக அமைந்திருந்த கட்டலங்குளத்தைத் தலைநகராகக் கொண்டு ஆண்டவர். வெள்ளையருக்கு கப்பம் கட்ட மாட்டோம் என்று முதன் முதலாக வீரமுழக்கமிட்டவர்.

கவியரசு வேகடாசலம் பிள்ளை: தமிழகத்தின் பெரும்புலவர். கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் காவலராக இருந்து இவர் ஆற்றிய பெரும்பணி மறக்க முடியாதது.

மே.வீ. வேணுகோபாலப்பிள்ளை: இளைய தலைமுறையினரால் இலக்கணத் தாத்தா என்று அழைக்கப்பட்டவர். சங்க இலக்கியங்களிலும் காப்பியங்களிலும் இலக்கணங்களிலும் வித்தகராக விளங்கியவ்ர்.

கார்மேகக் கோனார்: மதுரை அமெரிக்கன் கல்லூரித் தலைமத் தமிழ்ப்பேராசிரியர். தமிழுக்கும் தமிழாசிரியர்களுக்கும் உரிய அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தவர். பதிப்புச் செம்மல். செந்நாப்புலவர். கோனார் நோட்ஸ் மூலம் தமிழ் மாணவர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

ம. ராதாகிருஷ்ணன்: சென்னை நகரத்தின் மேயராக இருந்து அரும்பணி ஆற்றிய அரசியல் அறிஞர்.

ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன்: காலத்தை வென்ற வரலாற்று பொக்கிஷங்களான செஞ்சிக்கோட்டையையும், கிருஷ்ணகிரி கோட்டையையும் கட்டிய ஆனந்தக்கோன், கிருஷ்ணக்கோன் என்ற சிற்றரசர்களைத் தந்து யாதவர் சமூகம் அரசர்கள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது.

ஆனந்தரங்கம் பிள்ளை: 18-ஆம் நூற்றாண்டு தென்னிந்திய வரலாற்றை முழுமையாகப் பதிவு செய்தவர். பிரெஞ்சு ஆளுநரின் துபாஷியாக இருந்து அரசியல் சதுரங்கக்காய்களை நகர்த்தியவர். தமிழ், பிரெஞ்சு, தெலுங்கு, ஆங்கிலம், பெர்ஷியன் என்று பன்மொழிப் புலமை பெற்றிருந்தும், தமிழிலேயே ‘ரங்கப்பன்’ என கையெழுத்திட்டு தமிழ் உணர்வை வெளிப்படுத்தியவர். ஆளுநருக்கு இணையாக கையெழுத்து இடும்போதும் தமிழிலேயே கையெழுத்திட்டது குறிப்பிடத்தக்கது.

சட்டநாதக் கரையாளர்: காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர். சட்டநாதக் கமிஷனை அரசியல் வரலாறு மறக்காது. (அவரைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கீழே பார்க்கலாம் நண்பர் நக்கீரன் பாண்டியன் தயவில்)

தமிழ்க்குடிமகன்: திமுக ஆட்சியில் சபாநாயகராகவும், அமைச்சராகவும் இருந்தவர். மதுரை யாதவர் கல்லூரி முதல்வராக இருந்து கல்விப் பணியாற்றியவர். சிறந்த மேடைப்பேச்சாளர்.

கொங்கு மண்டல வரலாறு எழுதிய முத்துசாமிக் கோனார், அண்ணாவின் நண்பரும் குடிசை மாற்று வாரியத் தலைவராகவும் இருந்து ஏழைகளுக்கு உதவிய அரங்கண்ணல். ‘கோனார் உரை’யை உருவாக்கித் தந்து தமிழக மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் கல்வியில் பேருதவியாக இருந்த அய்யம்பெருமாள் கோனார். தமிழ்நாட்டில் கூட்டுறவு இயக்கத்தில் முக்கிய பங்காற்றிய முள்ளிக்குளம் ராமசாமிக் கோனார். கல்வித் தொண்டாற்றிய இராஜம்மாள் தேவதாஸ், கவிக்கொண்டல் கவிஞர் வாணிதாசன், பொதுத் தொண்டர் கா.வே. திருவேங்கடம் பிள்ளை, நகைச்சுவையாக இலக்கியம் படைக்கும் பேரா.தி.அ. சொக்கலிங்கம், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சோ.ப., அதிமுக அமைச்சரவையில் இருந்த கண்ணப்பன், முன்னாள் இந்திய வங்கித் தலைவர் கோபாலகிருஷ்ணன் என்று எண்ணற்றவர்களித் தந்து பெருமை தேடிக் கொண்ட சமூகம் யாதவர் சமூகம்.



மீண்டும் டோண்டு ராகவன். கடைசியாக குறிப்பிட்ட இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன் மேலே சொன்ன மேயர் ராதாகிருஷ்ணபிள்ளையின் புதல்வர். இவர் எனது திருமண ரிசப்ஷனுக்கு வந்து வாழ்த்தி ஒரு சீலிங் ஃபேன் பரிசாகத் தந்தார். விஷயம் என்னவென்றால் சமீபத்தில் 1974-ல் எனது திருமணம் நடந்தபோது என் வீட்டம்மா இந்தியன் வங்கியில் பணிபுரிந்து வந்தார். அவர் வேலை செய்த கிளையின் மேலாளர்தான் கோபால கிருஷ்ணன். அவரது தந்தை திடீரென நோய்வாய்ப்பட்டு சீரியசான போது அவர் வங்கியில்தான் இருந்திருக்கிறார். போன் வந்ததும் அப்படியே வீட்டுக்கு போயிருக்கிறார். அவசர செலவுக்காக அவர் வித்ட்ராயல் ஸ்லிப்பில் நிரப்பிய பணத்தைக் கூட அவர் எடுக்க நேரமின்றி வீட்டுக்கு பறந்திருக்கிறார். அங்கிருந்து போனில் என் வீட்டமாவை அழைத்து, தன் தந்தை இறந்துவிட்டதால் திரும்ப வங்கிக்கு வரவியலாது என்று கூறி, தான் கேட்டிருந்த பணத்தை தன் சார்பில் வாங்கி, வங்கி வண்டியில் வந்து தன்னிடம் பணத்தை ஒப்படைக்குமாறு கேட்டுள்ளார். என் வீட்டம்மாவும் மற்ற வங்கிப் பணியாளர்கள் எல்லோரையும் ஏற்றிச் சென்ற வேனில் அவர் வீட்டுக்கு சென்று அவரை துக்கம் விசாரித்து விட்டு பணத்தையும் கொடுத்து விட்டு வீடு திரும்பினார். சாவு வீட்டிற்கு போனதால் வீட்டில் தலைக்கு தண்ணீர் விட்டு குளிக்க நேர்ந்தது. எனது தந்தை தன் மருமகளிடத்தில் விவரம் கேட்க அவரும் மேயர் ராதாகிருஷ்ண பிள்ளை இறந்ததை கூறியிருக்கிறார். “அடேடே, அப்படியா. அவரை நான் நன்கு அறிவேனே. அவரை மில்க் மேயர் என அழைப்பார்களே” என வருந்தியிருக்கிறார் இந்து பத்திரிகை நிருபரான எனது தந்தை ராகவாச்சாரி நரசிம்மன் அவர்கள். மாநகராட்சி பள்ளிகளில் குழந்தைகளுக்கு பால் வழங்க ஏற்பாடு செய்ததால் அவருக்கு அந்தப் பெயர்.


இந்த இடத்தில் டோண்டு ராகவன் ஒன்று கூற ஆசைப்படுவான். ஒவ்வொரு சாதியின் பாரம்பரியத்தையும் வெளிக்கொணர நிறைய உழைப்பு மற்றும் காலம் தேவைப்படும். அவ்வாறு செய்து முனைவர் பட்டங்கள் வாங்கியவர்களும் உள்ளனர். அவையெல்லாம் எனது சக்திக்கு அப்பாற்பட்டவை. ஆகவே அவன் பதிவுல நண்பர்களின் உதவியை தனது ஆனந்தரங்கப் பிள்ளை பற்றிய பதிவில் கோரியிருந்தான். முதலில் கரம் நீட்டியவர் நக்கீரன் பாண்டியன். அவர் கூறியவை கீழே.

“தென்காசிக்கு பக்கத்தில் உள்ள அழகிய ஊர் செங்கோட்டை.முன்பு இது திருவதாங்கூர் சம்ஸ்தானத்தில் இருந்தது பின்னர் தேவி குளம் பீர்மேடு பரிவர்த்தனையில் தமிழகத்தோடு இணைந்தது.
இங்கு தூத்துக்குடி-கொச்சின் பிரதானசாலையில் வீடுகள் எல்லாம் பிரமாண்டம்.இவையெல்லம் கரையாளர் வகுப்பை சேர்ந்தவ்ர்களின் சொத்து.பெரிய நிலச் சுவான்தார்கள்.இவர்கள் யதவ வகுப்பில் மேல்தட்டு மக்கள் எனச் சொல்லவார்கள்.
இந்த சமூகத்தில் சட்டநாதக் கரையாளர் பெரிய முக்கிய பிரமுகர்.இவர் பெயரில் ஒரு ஆண்கள் கல்லுரி 1968 களில் இங்குள்ள ஏழை மாணவ்ர்களின் கல்லுரிக் கனவை நனவாக்கியது.இவர் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்.காங்கிரஸ் தியாகி.

செங்கோட்டையில் கரையாளர் பூங்காவில் வாஞ்சிநாதனுக்குமணிமண்டபம் கட்ட பெருந்தலைவர் காமராஜர் முயற்சிகள் எடுத்தார்.

கரையாளரென்னுந் நாமத்தை ஆங்கிலேயத்தில் பாஷாந்தரஞ் செய்யுங்கால் Naval Forces என்ற அருத்தத்தைத் தரும். மஹா வித்துவான் சைமன் காசிச் செட்டி (Simon Cassie Chetty) அவர்களரங்கேற்றிய அரிய பிரபந்தத்தில், கரையாளர், சத்திரிய வருணத்தைச் சார்ந்தவர்கள்; நாடு நகர்களை யாண்டு பரிபாலனஞ் செய்தவர்களென அவர் கூறியிருக்கின்றனர். ஆனது பற்றி யிவர்கள் குருகுல வமிசத்தவர்கள். "கண்ணுடையரென்பவர் கற்றோர் முகத்திரண்டு புண்ணுடையர் கல்லாதவர்." தாஸ் பூஸ் தஞ்சாவூர் ஈஸ்பூ சென்று இதிகாசங்களைக் கற்றுணரா மாந்தரினிரு விழிகளிரு புண்களாம். இப் புண்களையுடையோர், குரங்குக்குந் தன்குட்டி பொன்குட்டி (The monkey praises its own tail) யென்றவாறாய் இதிகாசங்களை வேற்றுமைப் படுத்துவர். சம்பூரண கல்விக் கண்களையுடையோர், யாது மரபினராயினும் சத்தியந் தவறாதவர். இவ்வகுப்பினருள், தெல்லிப்பளை வாசியும் ஞானாந்த புராண ஆசிரியருமாகிய மஹா வித்துவான் தொன்பிலிப்பு அவர்களொருவர். யாழ்ப்பாணக் கௌரவ அல்லது கரையாளர் மரபுதித்த தொதியோகு முதலியாரைக் குறித்து, அவ்வித்துவான் வசனித்த குறிப்பு யாதெனில்:-

"அல்லலுறு மஞ்ஞானத் திமிரந்தேய வருண்ஞான விசுவாச விளக்க முன்னூற்,
புல்லிய சொற் சிறிதெடுத்து விருத்தப் பாவாய் போர்ந்தவு ரோமாபுரியின் சங்கத்தேற, தொல்லுலகிலுயர்ந்தகுரு குலத்துமன்னன் தொன்தியோ கெனுமுதலி முயற்சியாலே, தெல்லிநகர் வேளாளன் தொம்பிலிப்புச் செந்தமிழிற் காப்பியமாய்ச் செய்தான் மன்னோ."


விருப்பமுள்ள பதிவர்கள் தத்தம் சாதி சமூகம் பற்றிய தகவல்களை பின்னூட்டமாக அளித்தால். அவை சரியான தருணத்தில் எனது பின்னால் வரப்போகும் பதிவுகளில் சேர்க்கபடும். நன்றி கூறி விடை பெறுவது டோண்டு ராகவன் மற்றும் முரளி மனோகர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

14 comments:

Anonymous said...

இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக்காளாகி, பல அரசியல்வாதிகள் அவரைக்காப்பாற்றக் கைகொடுத்தும், அவர் தூக்கிவீசப்ப்ட்டார். அவர் விலகும்போது, வங்கி திவாலாகும் நிலையில் இருந்தது. பின்னர் வந்த இராகவனால் (தொண்டு அல்ல) சீர் சரிசெய்யப்பட்டது.

கோணார்களைத் தலைகுனிய வைத்தவர் இவர்.

Anonymous said...

Hi

We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.

Please check your blog post link here

If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

Sincerely Yours

Valaipookkal Team

வெற்றி said...

தாங்கள் சொல்லும் சாதியின் வரலாற்று வேர்களில் ஆணி வேர் போல் பல ஐயங்கள் எழுகிறது.

//இந்த கூலி வரலாற்றாசிரியர்கள் தங்களை தலித் சார்பானவர்கள் என்றும், ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பானவர்கள் என்றும் பாதுகாப்பான முகமூடிகளைப் போட்டபடி நம் நாகரீகம் ஒட்டுமொத்தமாகவே ஒரு இனவெறி-மதவெறி நாகரீகம்தான் என்றும், நமக்கு பண்பாடென்றே ஏதும் இல்லை என்றும் சொல்கிறார்கள்.//

வரலாறு என்பது மன்னர்களின் வெற்றி,தோல்வி,கோயில்,நூல்கள் பற்றி எழுதும் அரண்மனை புராணம் மட்டுமா? அல்லது அந்த கால கட்டங்களில் வாழ்ந்து நொந்து நூலாகிப் போன சமூகத்தை சேர்த்துமா?

//பாரபட்சம் இல்லாமல் முன்னோடி எழுத்துக்களை வாசித்து நம்முடைய சொந்தவரலாற்றை உருவாக்கிக் கொள்ளவேண்டும்.//

ஆக கீழே தள்ளப்பட்ட மக்களைப் பற்றி எழுதாமல் வெறும் அரண்மனைப் புராணம் பாடினால் தான் வரலாறோ?

நல்லது.

வெள்ளையர்கள் வந்தார்கள்.வென்றார்கள்.ஆண்டார்கள்.
எத்தனை ஆயிரம் பேர்.லட்சம்...?
ஆக அவர்கள் மட்டும் நம்மை ஆள முடியாது. நம்முடன் பிறந்த பல இந்திய/தமிழகத் திருடர்கள் அந்த வெள்ளையர்களுக்கு போர்த் தளபதியாக, போர் வீரனாக,மொழி பெயர்ப்பாலானாக, அதிகாரியாக,ஏன் காட்டிக் கொடுப்பவனாக பணி புரிந்திருக்க வேண்டும். இல்லையா?

அவர்கள் பெருமதிப்பிற்குரிய எந்த சமூகத்தவர்கள் என்ற புள்ளி விவரம் தங்களுக்கு தெரியுமானால், என்னைப் போன்றவர்களுக்கு கொடுத்தால் ஐயம் தீரும்.

அழகு முத்து கோனை சிறை பிடிக்க சொன்னது வெள்ளையானாக் இருக்கலாம். ஆனால் அவனை போரிட்டு கொன்ற அந்த வெள்ளையர் படையில் வேலை செய்தது எந்தெந்த பெருமதிப்பிற்குறிய சமுதாய மக்களோ? குறிப்புகள் ஏதாவது கிடைத்தால் தங்களுக்கு கோடி நன்றி.

//ஆடு மாடு மேய்ப்பதையும், அவற்றில் இருந்து கிடைக்கும் பாலைக் கலந்து விற்பதுமே இவர்கள் இருவரின் தொழிலாகவும் இன்றும் இருக்கிறது//

ஆடு, மாடு மேய்த்ததால் இடயர் ஆனார்களா இல்லை கிருஷ்ணர் வழி வந்ததால் ஆடு,மாடு மேய்த்தார்களா?

சாதி காரணப் பெயரா இல்லை சாதியால் காரணம் உண்டானதா?

//அவர் மட்டும் நமக்கு கிடைக்காமல் போயிருந்தால் 18-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு முழுமையான தமிழக வரலாறு நமக்குக் கிடைக்காமலே போயிருந்திருக்கும்.//

ஆக மக்கள் வாழ்க்கைத் தரம் பற்றியும் எழுதி இருப்பார். இருப்பின் தாங்கள் அது பற்றி ஒரு பதிவு போட்டால் நல்லது . இல்லையெனில் அது முழுமையான வரலாறாக இருப்பது ஐயமே.

நான் கேட்பது எல்லாமே என் ஐயம் தீர்க்க மட்டுந்தான்.

வரலாற்றை ஊன்றி கவனிக்கும் போது, ந்ம்மில் சில "கருப்பு ஆடுகளே" வெள்ளையர்களிடம் மோசம் போயிருக்கின்றன்.

அந்த கருப்பாடுகள் எந்தெந்த சமூகப் பாரம்பரியம் என்று புட்டு புட்டு வைத்தால் அந்த சமூகத்தை வேர்களையும் வரலாற்றில் மறைக்காமல் நம் வலையுலக நண்பர்கள் தெரிந்து கொள்ளலாம்.

நன்றி.

வால்பையன் said...

உங்களை எழுதவேணாம்னு சொன்னா, ஜெயமோகனே ஆதரிக்கிறார்ன்னு ஸ்கூல் பையன்னாட்டம் சொல்றிங்க,

எதை வேண்டுமானாலும் எழுதுவது உங்கள் உரிமை, அதை விடுங்க

எனக்கு வேறு ஒரு உதவி வேணும்.
எப்படியும் குமுதத்தில் இருந்து உங்களுக்கு எதோ ஒரு நண்பர் அனுப்பி விடுறார், எனக்காக ஞாநியின் ஓ பக்கங்களை வாங்கி தரமுடியுமா?

எனது மெயில் முகவரி
arunero@gmail.com

அதை படித்து தான் அரசியலை தெரிந்து கொள்கிறேன்

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
ஞாநியின் வலைப்பூவில் அது கிடைக்கும். பார்க்க: http://www.gnani.net/

ஜெயமோகன் எழுதியதை நான் மேற்கோள் காட்டினேன் அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
குமுதம் பத்திரிகையிலிருந்து நானே கை ஒடிய தட்டச்சு செய்துதான் பதிவு போடுகிறேன். போன மாதம் அதன் இணைய காப்பி கட்டணச் சேவையாக போனதால், காப்பி பேஸ்ட் எல்லாம் செய்ய இயலாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//dondu(#11168674346665545885) said...

@வால்பையன்
குமுதம் பத்திரிகையிலிருந்து நானே கை ஒடிய தட்டச்சு செய்துதான் பதிவு போடுகிறேன். போன மாதம் அதன் இணைய காப்பி கட்டணச் சேவையாக போனதால், காப்பி பேஸ்ட் எல்லாம் செய்ய இயலாது.//

உங்க சாதி பற்று புல்லரிக்கவைக்குது!


யார் பிராமணனில். வேதத்தை தவிர மற்றதை படிப்பவன், படித்தவன் பிரமனன் அல்ல என்று சோ சொன்னாராமே! அப்போ இங்கே யாருமே பிராமனன் இல்லையா?

Anonymous said...

Jeyamohan and You need not worry about the manipulated history by anti-brahmins.

In the schools run by RSS in Maharastra, Rajasthan, MP and HP, and in the miltary Bonsole College in Nasik, the history books for children upto 9th Std. were written by Sangh-parivaar historians. What the book teach is exactly what you and Jeyamohan will approve.

If BJP comes to power, then, we can ask them to prescribe only such books throughout India!

Anonymous said...

//
இந்தியன் வங்கி கோபாலகிருஷ்ணன், ஊழல் குற்றச்சாட்டுக்காளாகி, பல அரசியல்வாதிகள் அவரைக்காப்பாற்றக் கைகொடுத்தும், அவர் தூக்கிவீசப்ப்ட்டார். அவர் விலகும்போது, வங்கி திவாலாகும் நிலையில் இருந்தது. பின்னர் வந்த இராகவனால் (தொண்டு அல்ல) சீர் சரிசெய்யப்பட்டது.

கோணார்களைத் தலைகுனிய வைத்தவர் இவர்.
//

Lalu Yadav..Maulana Mulayam Singh Yadav may be added your list.

வஜ்ரா said...

//
Jeyamohan and You need not worry about the manipulated history by anti-brahmins.

In the schools run by RSS in Maharastra, Rajasthan, MP and HP, and in the miltary Bonsole College in Nasik, the history books for children upto 9th Std. were written by Sangh-parivaar historians. What the book teach is exactly what you and Jeyamohan will approve.

If BJP comes to power, then, we can ask them to prescribe only such books throughout India!
//

We have been reading History written by Marxist nut cases for so long. All we studied is class struggle in ancient,medieval and modern india. These acorn head could not think anything other than class struggle.

If an alternate narrative might correct the course and bring history back to comman man and you would call that RSS doctored. Then you must join the asylum.

Please read Arun Shourie's Eminent Historians

Anonymous said...

I think most of Parpanan's skin colour is white. But your skin colour is black!

What is the wrong? Are you a mixer? Please tell me.

Thanks

Anonymous said...

// Anonymous said...

I think most of Parpanan's skin colour is white. But your skin colour is black!

What is the wrong? Are you a mixer? Please tell me.

Thanks//

THIS IS TOO MUCH.

ரவிசந்திரன்.S said...

'கோனார்'சமுதாயத்தை பற்றி அறியவைத்தமைக்கு நனறி! பசுவை போன்று அமைதியானவர்கள் யாதவர்கள்! அவர்கள் கூற்றில் அர்த்தம் இருக்கலாம்!!எனது நண்பர் ஒருவர் யாதவ்தான் ஆனால் சாதி வெறி இல்லாத அமைதியானவர்.

malarvizhi said...

நல்ல பதிவு .எங்கள் சமுதாயத்தைப் பற்றி ஏற்கனவே குமுதத்தில் படித்தேன். இப்போது உங்கள் பதிவின் மூலம் மீண்டும் படிக்கச் எனக்கு ஒரு வாய்ப்பு.நன்றி.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது