2/08/2009

எங்கே பிராமணன் - மனதை கொள்ளை கொள்ளும் மெகா தொடர்

எனது டோண்டு பதில்கள் - 05-02-2009 பதிவுக்காக எம். கண்ணன் என்பவர் இந்த கேள்வி கேட்டிருந்தார். கேள்வியும் அதற்கு நான் தந்த பதிலும் கீழே.

“1. 'எங்கே பிராமணன்' - சோவின் கதை ஜெயா டிவியில் திங்கள் முதல் தொடராக (8pm) வருகிறதே. பார்க்கிறீர்களா?
பதில்: நீங்கள் சொல்லித்தான் அதையே நான் அறிந்தேன். உங்கள் பின்னூட்டத்தை மட்டுறுத்தக்கூட செய்யாது தொலைகாட்சிப் பெட்டிக்கு ஓடினேன். மணி சரியாக எட்டாயிற்றே. பை தி வே இன்றுதானே (02.02.2009) ஆரம்பம்? உங்களுக்கு முதற்கண் நன்றி”.

உண்மைதான். முதல் எபிசோடை பார்த்து விட்டுத்தான் பின்னூட்டத்தையே மட்டுறுத்தினேன்.

சீரியலைப் பற்றி பேசும் முன்னால் கண்ணன் அவர்கள் இது சம்பந்தமாக கேட்ட மற்ற கேள்விகளையும் அவற்றுக்கான பதில்களையும் இங்கு மீண்டும் தருவேன்.

“2. ஞாயிறன்று காட்டப்பட்ட முன்னோட்டம் பார்த்தீர்களா? யாராவது கேஸ் போட்டு தடை வாங்குவார்களா? இல்லை இது பிராமணர்களை கிண்டல் செய்யும் சீரியல் என குளிர் காய்வார்களா?
பதில்: விஷயமே திங்களன்று மாலை 07.55-க்குத்தானே உங்கள் கேள்வி மூலம் அறிந்தேன். ஆகவே ஞாயிறன்று நிகழ்ச்சியை பார்க்கவில்லை. சோ அவர்களின் இக்கதையை நான் ஏற்கனவே சமீபத்தில் எழுபதுகளில் துக்ளக்கில் தொடர்கதையாக படித்துள்ளேன். பார்ப்பனரை கிண்டல் செய்து அதில் ஒன்றும் வரவில்லை. எல்லாமே யதார்த்தமாகத்தான் எழுதப்பட்டன.

3. பிராமண அசோக் வேடத்தில் (கதாநாயகன்) நடிக்கும் நடிகர் ஒரு இஸ்லாமியர். தெரியுமா?
பதில்: நடிப்புத்தானே இதில் என்ன பிரச்சினை? சோப்ராவின் மகாபாரதத்தில் அர்ஜுனனாக நடித்தது ஒரு இசுலாமியர். அதற்கென்ன இப்போது? பம்பாய் படத்தில் இசுலாமியராக கிட்டியும் இந்துவாக நாசரும் நடித்தனர். அதற்கு என்ன கூறுவீர்கள்?

5. 'எங்கே (செட்டியார் / பிள்ளைமார் / நாடார் / சைவ வேளாளர் / கவுண்டர் / தேவர்........)' என்றெல்லாம் சீரியல் எடுத்துவிடவோ தமிழ் தொலை காட்சிகளில் ஒளிபரப்பிட முடியுமா?
பதில்: அதாவது எங்கே வன்னியர் என்ற பெயரில் பாமகவின் தொலைகாட்சி சேனலில் வராது என்கிறீர்கள்?

7. சுஜாதாவின் 'சிங்கமய்யங்கார் பேரன்' நாடகம் பார்த்ததுண்டா / படித்ததுண்டா? அதில் சுஜாதா எழுப்பிய பல ஆதங்கங்கள் 'எங்கே பிராமணன்' தொடரில் சோ எழுப்பப்போவது ஏதாவது பூகம்பத்தை ஏற்படுத்துமா? (பிராமண சமூகத்தினரிடையே?)
பதில்: சுஜாதாவின் நாடகம் பார்த்ததில்லை. எங்கே பிராமணன் அற்புதமான கதை. திரைக்கதை எழுதுவது வெங்கட். ஆகவே நன்றாகவே இருக்கும்.

8. சோவின் 'எங்கே பிராமணன்' தொடர் எழுப்பும் கேள்விகள்படி - உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள குடும்பத்தினர் அல்லது நங்கநல்லூர் வாசிகளில் பலரை 'பிராமணர்' என இன்றைக்கு குறிப்பிடமுடியுமா?
பதில்: முடியவே முடியாது. யாருமே இப்போது உண்மையான பிராமணன் இல்லை”.

இப்போது பதிவின் விஷயத்துக்கு வருகிறேன். அதாவது சீரியலைப் பற்றி பேசுவேன்.

நான் ஏற்கனவே கூறியபடி இது தொடராக துக்ளக்கில் சமீபத்தில் 1972-ல் வந்த போதே படித்தவன். பிறகு அதை நான் படிக்கவில்லை. ஆனால் அதில் பல நிகழ்ச்சிகள் பசுமரத்தாணி போல மனதில் பதிந்துள்ளன.

கதை சுருக்கம்:
கைலாயத்தில் ஒரு சர்ச்சை எழுகிறது. யார் பிராமணன் என்பதே அது. அதை அறிய வசிஷ்டர் பூமியில் அவதாரம் செய்வது என தீர்மானமாகிறது. வசிஷ்டர் பிறந்து பூணூல் போட்டு காயத்ரி மந்திர உபதேசம் பெறும் வரை மிகவும் சாதாரண மனிதராகவே இருப்பார். பிறகுதான் தனது அவதார நோக்கத்தை புரிந்து நிறைவேற்றுவார் என்பதையும் கைலாயத்திலேயே முடிவு செய்து விடுகிறார்கள்.

வசிஷ்டர் அசோக் என்னும் பெயரில் தொழிலதிபர் நாதனுக்கு ஒரே மகனாகப் பிறக்கிறார். எதிலு ஆர்வமின்றி அவர் பாட்டுக்கு வளர்கிறார். நன்றாக படிப்பு எல்லாம் படிக்கிறார், இருப்பினும் ஒரு தொழிலதிபரின் ஒரே மகன் என்ற பந்தாவெல்லாம் இல்லாது, ரொம்பவுமே எளிமையாக இருக்கிறார். நாதனின் நண்பர் அவரை வேலைக்காரன் என புரிந்து கொள்ளும் அளவுக்கு இது போகிறது. பேச்செல்லாம் கூட ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. ஆகவே அவருக்கு சித்த சுவாதீனம் இல்லை என்னும் அளவுக்கு போகிறது. நாதனுக்கு ராஜகுரு மாதிரி ஒருவர் இருக்கிறார். அவர் சொல்படிதான் நாதன் நடக்கிரார். அவர் மனைவி வசுமதி லேடீஸ் க்ளப் என்றெல்லாம் சேவை செய்கிறார்.

இதற்கு மேல் கதை என கேட்கும் முரளி மனோகருக்கு, ஆசை தோசை அப்பளாம் வடை. இப்போதைக்கு இவ்வளவுதான் என கூறுவேன். சீரியலைப் பாருங்கள். ஜெயா டி.வி.யில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிறது. அவ்வப்போது சோவும் அவரை கேள்வி கேட்பவர் ஒருவருமாக வந்து கலகலப்பூட்டுகின்றனர். சீரியல் கதை முடிச்சுகளுக்கு அவ்வப்போது சோ பதில் கூறுகிறார்.

உதாரணத்துக்கு பிரும்மஸ்ரீ அமரர் சேங்காலிபுரம் அனந்தராம தீட்சிதர் அவர்கள் தனது காலட்சேபங்களுக்கு வரும் பெரிய மனிதர்களை காலட்சேபத்தின் நடுவிலேயே இந்திரன், சந்திரன் எல்லாம் புகழ்ந்து பலரை நெளிய வைத்து விடுவார். இதை நரஸ்துதி என்பார்கள். இந்த சீரியலில் வரும் நீலுவும் அதே மாதிரி காலட்சேபத்துக்கு வந்த நாதனை அப்படி புகழ்கிறார். அது பற்றி சோவை அவர் நண்பர் கேள்வி கேட்க சோ அவர்கள் அழகாக பதிலளிக்கிறார். அதாவது தரும சிந்தனை குறைந்து வரும் இந்த நாளில், தருமம் செய்பவர்களை அவ்வப்போது வெளிப்படையாக புகழ்ந்தால் மற்றும் சிலர் அதே மாதிரி தர்மம் செய்ய விழைவார்கள் என்பதே அது.

சரி, இப்போதுதான் முதல் ஐந்து எபிசோடுகள் முடிந்துள்ளன. இன்னும் வரவேண்டியவை நிறைய இருக்கின்றன.

நாதனாக வரும் டில்லி குமார், வசுமதியாக வரும் நளினி (ராமராஜன்), அசோக்காக வரும் கௌஸ், நாதனின் குருவாக வரும் நீலு ஆகிய எல்லோருமே அமர்க்களப்படுத்துகிறார்கள். பிராமணா பாஷை புகுந்து விளையாடறது. ரொம்ப பேஷா இருக்குன்னா. ரம்யமா இருக்கு.

வரும் எபிசோடுகளிலிருந்து என்னைப் பதிவு போடத் தூண்டும் விஷயங்கள் ஏதேனும் வந்தால் கண்டிப்பாக அதைச் செய்வேன். அதைவிட வேறு வேலை என்ன இருக்கும் எனக்கு?

மற்றப்படி நல்ல சீரியல். தவற விடாதீர்கள். அவ்வளவுதான் சொல்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

8 comments:

வடுவூர் குமார் said...

எங்களை மாதிரி ஆட்களுக்கு யூடூபில் கிடைக்குமா?
எனக்கும் மிகவும் படித்த புஸ்தகம் அதுவும் கடற்கரையில் சூரிய்யோதயம் போது சென்னை பாஷையில் விளக்கம் சொல்லப்படும் ஒரு பகுதி ...போதும்.

VSK said...

தகவலுக்கு நன்றி. நானும் முதலில் படித்ததுதான். பார்க்கிறேன்.

பினாத்தல் சுரேஷ் said...

அய்யா! நீங்க தெய்வம்!

45 வருஷத்துக்கு முன்ன உள்ள டெக்னாலஜி வச்சு, அப்ப (45 வருஷம் முன்ன) 80 வயசான முதியவர்களுக்கு, 5000 வருஷப் பழைய கதையை, கதாகாலட்சேபம் சொல்றதுபோல எடுத்து, கதையிலே மாறுதல் செஞ்சாலும் கன்சிஸ்டன்ஸி விடாம கடிச்சு டைரக்ட் பண்ணப்பட்ட ஒரு சீரியலை, 10 நிமிஷத்துக்கு மேலே எனக்குத் தாங்காத ஒரு சீரியல் உங்கள் மனதைக் கொள்ளை கொள்வது (என் மனதைக் கொல்வது!) எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை.. சோ மேல் மாறாக்காதல் இந்த அளவுக்கும் போகுமா என்பது மட்டுமே ஆச்சரியம் :-)

dondu(#11168674346665545885) said...

சீரியலே இப்பத்தானே ஆரம்பிச்சிருக்கு. பார்க்கலாம்.

மத்தப்படி “இந்த குடும்பத்த அழிக்காம நான் விட மாட்டேன்னு” வெள்ளிக்கிழமையும் அதுவுமா கோலங்கள் நளினி கண்ணை உருட்டி சொல்லற சீனெல்லாம் எதிர்பார்த்தா இதுல அதெல்லாம் வராதுன்னுதான் சொல்லணும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

நன்றி டோண்டு சார். என்னுடைய கேள்விகளைக் கொண்டு, அதனால் பதிவு போட்டதற்கு நன்றி.

எம்.கண்ணன்.

இந்த வாரக் கேள்விகள்

1. வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு உங்கள் ஓட்டு ? திமுக ? அதிமுக ? விஜய்காந்த் ? டி.ஆர்.பாலு ?

2. 'நான் கடவுள்' படத்திற்காக ஜெயமோகனுக்கு அரசு விருது (வசனத்திற்காக) கிடைத்துவிட்டால் சாரு நிவேதிதா என்ன செய்வார் ?
(மேலும் பல பட வாய்ப்புகள் கிடைத்து பணமும் அதிகம் ஜெமோவுக்கு கிடைக்கக் கூடும்)

3. சிவாஜி கணேசனின் படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த 10 படங்கள் யாவை ? ஏன் ?

4. எந்த ஹீரோயின்களைப் பார்த்து அதிகம் (அந்தக் காலத்தில்) ஜொள்ளு விட்டிருக்கிறீர்கள் ? எந்த அழகிற்காக ? (கண்கள், முகம்,
எடுப்பான மர்புகள், இடை, நடனம், overall சூப்பர் ஃபிகர்...)

5. மருத்துவ இன்சூரன்ஸ் பிரிமியம் மிகவும் அதிகமாகிவிட்டதே ? பல மருத்துவ மனைகளிலும் இன்சூரன்ஸ் இல்லாமல் உள்ளேயே விடுவதில்லையே ? பெரும்பாலான மிடில் கிளாஸ் எப்படி சமாளிப்பது ?

6. லக்கிலுக், அதிஷா, கேபிள் சங்கர் போன்ற பதிவர்கள் முதல் நாள் முதல் ஷோ முறையில் பெரும்பாலான படங்களை பார்த்து விமர்சமும் உடனுக்குடன் எழுதுகின்றனரே - எப்படி டிக்கெட் கட்டுப்படியாகிறது ? Free PASSசா ? வலைப் பதிவில் எழுதுவதை விட, இவர்கள், பத்திரிக்கையில் எழுதினால் பணமும் கிடைக்குமே ? இவர்களின் விமர்சனம் பத்திரிக்கைகளின் விமர்சனத்தை விட மிக நன்றாக எழுதப்படுகிறதே ? பத்திரிக்கைகள் ஏன் இவர்களை (யும் அதைப் போல நன்றாக எழுதும் பதிவர்களையும்) பயன்படுத்திக் கொள்ளவில்லை ?

7. ஜெயமோகன் வெளிநாடுகள் செல்லப் போகிறாராமே ? அவர் சென்றுவிட்டு வந்த பிறகு வாசகர்களுக்கு படிக்க நல்ல கட்டுரைகள் கிடைக்கும் தானே ? அவரது 'எனது இந்தியா' கட்டுரை பற்றி உங்கள் கருத்து என்ன ?

8. ஸ்டாலின் பதவியை வைத்து பல நல்ல காரியங்கள் செய்து வருகிறார். தன்னுடைய துறையை நன்றாகவே கையாள்கிறார். அழகிரி முதல்வரானால் தமிழ்நாட்டில் என்னவெல்லாம் நடக்கும் ?

9. (சசிகலா) நடராஜன் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறார் ? தேர்தல் நெருங்கினாலே அவர் சுறுசுறுப்பு ஆவாரே ?

10. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பில் ஒரு பிராமண அதிகாரியை (மாலதி - ஹோம் செக்ரடரி) வைத்திருப்பது கலைஞரின் சாதுரியமா ? இல்லை ராஜ தந்திரமா ? இல்லை மாலதி அவர்களின் திறமையா ?

Anonymous said...

//10. தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பொறுப்பில் ஒரு பிராமண அதிகாரியை (மாலதி - ஹோம் செக்ரடரி) வைத்திருப்பது கலைஞரின் சாதுரியமா ? இல்லை ராஜ தந்திரமா ? இல்லை மாலதி அவர்களின் திறமையா ?//

கன்னித்தமிழ் காக்கும் ராஜ ராஜ சோழனின் ம்று பிறப்பு கலைஞ‌ரின் காலமறிந்த,சம்யோசித,ராஜதந்திர,அர்த்தசாஸ்திர,சாதுரியமான, திறமையின் உச்சத்தின் ஆட்சிதான் இது.

வால்பையன் said...

//முடியவே முடியாது. யாருமே இப்போது உண்மையான பிராமணன் இல்லை”.//

அது தேவையற்றது தான்!
குறைந்தபட்சம் மனிதனாக இருந்தாலே போதுமானது!

பிராமனனை தேடுவதை விட மனிதனை தேடச்சொல்லுங்கள்

வால்பையன் said...

//தரும சிந்தனை குறைந்து வரும் இந்த நாளில், தருமம் செய்பவர்களை அவ்வப்போது வெளிப்படையாக புகழ்ந்தால் மற்றும் சிலர் அதே மாதிரி தர்மம் செய்ய விழைவார்கள் என்பதே அது.//

ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை மேலும் மேலும் புகழ்ந்து கொண்டே இருக்கிறார்களே எதற்கு?

மேலும் ஊழல் செய்யவா?

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது