முகலாயர் வரலாற்றை விகடன் சார்பாக “வந்தார்கள் வென்றார்கள்” என்ற தலைப்பில் எழுதி பெரும் பாராட்டைப் பெற்ற மதன் அவர்களிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதாவது இதே போல அவர் ஏன் தமிழக வரலாற்றை எழுதக்கூடாது என்று.
அவர் அதற்கு பண்டைத் தமிழக வரலாற்றை எழுதத் தேவையான நூல்கள் இல்லை எனக் கூறினார். உதாரணத்துக்கு தில்லி சுல்தான்கள் பற்றி அவர் எழுதிய தொடர் பல புத்தகங்களைப் படித்து போடப்பட்டது. அதே போல தமிழில் இல்லை எனக் கூறுகிறார். உடனே அவர் பார்ப்பனர் என்பது ஞாபகத்துக்கு வந்து எல்லோரும் சாமியாடினாகள் என்பது இப்பதிவுக்கு தேவையில்லாத விஷயம். அது பற்றி பேச வேண்டுமனால பெரிசு அதற்காகப் போட்ட பிரத்தியேகப் பதிவுக்கு செல்லலாம் எனக் கூறும் முரளி மனோஹருக்கு நன்றி. நிற்க.
இப்போது எனது சொந்த அனுபவம் ஒன்றைக் கூறுகிறேன். நான் அப்போது தில்லியில் இருந்தேன். சாலமன் பாப்பையாவும் அவர் குழுவினரும் ஒரு பட்டி மன்றத்துக்காக வந்திருந்தனர். பட்டி மன்றத்தின் விவாதப் பொருள் “தமிழ் இனி மெல்லச் சாகும்”. என் மனைவியின் அத்தையன்பருக்கு சாலமன் பாப்பையாவை நன்கு தெரியும். என்னை அவரிடம் அறிமுகப்படுத்தினார். அதற்கு சற்று முன்புதான் சென்னை தொலைகாட்சியில் புகழேந்திப் புலவர் சீரியல் முடிந்திருந்தது. அதில் புகழேந்திப் புலவர் இளைஞனாக வருகிறார். ஒட்டக்கூத்தர் இருக்கிறார். ஆனால் கம்பர் இல்லை. அவர் இவர் காலத்துக்கு முந்தியவர். கதை நடக்கும்போது உயிருடன் இல்லை. ஆனால் சிவாஜி மற்றும் பானுமதி நடித்த அம்பிகாபதி படத்தில் புகழேந்திப் புலவர் மிக வயதானவர். கம்பருக்கு ஈடு. அவர் மகள் கம்பரின் தத்து புத்திரியாக வளர்கிற்தாள். சாலமன் பாப்பையாவிடம் நான் கேட்டது இதுதான். இதில் எந்த வெர்ஷன் உண்மையானது. சாலமன் பாப்பையாவோ தனக்கும் அது தெரியாது என்றே கூறிவிட்டார். மேலும் இதெல்லாம் யாரும் சரியாகக் குறிக்கவில்லை என்றும், தானும் மற்றவரும் செவிவழிச்செய்திகளை வைத்து கொண்டே ஒப்பேற்றுவதாகவும் கூறி விட்டார்.
பொதுவாகவே புலவர்கள் பரிசிலுக்காக அரசர்களை இந்திரன் சந்திரன் என்றெல்லாம் புகழ்ந்து பாடுவதுதான் நடந்திருக்கிறது. யாருக்குமே தினசரி நிகழ்ச்சிகளை குறித்து வைத்து கொள்ளும் வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை.
இதுவே அக்பர் காலத்து விஷயங்கள் பல ஆவணங்களை சரியாக வைத்ததாலேயே வெளியில் வந்துள்ளன. உதாரணத்துக்கு ரா.கி. ரங்கராஜனின் "வாளின் முத்தம்" என்ற நாவலில் அக்பர் அளித்த விருந்தில் என்னென்ன பரிமாறினார்கள் என்பது முதற்கொண்டு எழுதப்பட்டிருந்தது.
ஆனால் நம் தமிழகத்தில் இம்மாதிரி ஆவணங்கள் பராமரிக்கப்படவில்லை என்றுதான் தோன்றுகிறது. அவ்வளவு ஏன், 1949-ல் ஈவேரா அவர்கள் மணியம்மையாரை திருமணம் செய்து கொண்டது பற்றி போட்ட பதிவுக்காக அந்த ஆண்டு ஹிந்து பத்திரிகைகளை பார்க்க போன போது ரொம்பவும்தான் அலைகழித்தார்கள். அதுவும் தேதி எல்லாம் நான் சொன்னால்தான் சம்பந்தப்பட்ட பேப்பரை பார்க்க இயலும் என்றும் கூறினார்கள். அதுவே நியூ யார்க் டைம்ஸ் போன்ற பத்திரிகைகளில் தனியாக இண்டக்ஸே உண்டு. வெறுமனே பெரியார் என்ற பெயரில் தேடினாலே சம்பந்தப்பட்ட ஆண்டில் அவரைக் குறித்த அத்தனை செய்திகளை பற்றியும் குறிக்கும் களஞ்சியம் கிடைக்கும். ஹிந்துவிலும் இருந்திருக்குமாயிருக்கும் ஆனால் அதை எனக்கு தர அழும்பு செய்தனர். நான் கூற வருவது என்னவென்றால், இங்கு விஷயங்களை குறித்து வைத்து கொள்ளும் கல்சரே கிடையாது.
விதிவிலக்காக புதுவை ஆனந்தரங்கம் பிள்ளை அவர்களது நாட்குறிப்புகளை கூறலாம். அது 18 ஆம் நூற்றாண்டின் புதுவையின் நிலையை அழகாக படம் பிடித்து காட்டியது.மற்றப்படி விஷயங்களை குறித்து கொள்வதில் நமக்கு சமத்து போதாது என்றுதான் கூறவேண்டும்.
இதில் ஆனந்தரங்கம் பிள்ளையை எனக்கு பிடிக்கும். சமீபத்தில் 1958-59 கல்வியாண்டில் நான் சென்னை திருவல்லிக்கேணி ஹிந்து உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்த காலதில் எனக்கு அவரைப் பற்றி ஒரு பாடம் இருந்தது. அதில் கூட ஒரு பாட்டு வரும், “கொக்கு பறக்கும், புறா பறக்கும்” என. (முழுப்பாடல் கீழே தரப்பட்டுள்ளது). அப்போது கூட அவர் பற்றி விசேஷ அபிப்பிராயம் ஒன்றும் இருந்ததில்லை. ஆனால் 1975-க்கு பிறகு அவர் எனக்கு பிடித்து போனார். ஏனெனில் அந்த ஆண்டிலிருந்துதான் நானும் துபாஷியாக செயல்பட ஆரம்பித்தேன். என்ன, முதலில் ஜெர்மன் மொழியில்தான். பிறகுதான் ஃபிரெஞ்சிலும் ஆனேன் என்றாலும், துபாஷி என்றால் துபாஷிதானே, எந்த மொழியாக இருந்தால் என்ன? ஆனந்தரங்கம் பிள்ளை ஃபிரெஞ்சு-தமிழ் துபாஷி. இப்போது நானும்தான். ஆகவே அவர் என் சக துபாஷி என நான் பீற்றிக் கொள்வதில் எந்த ஆட்சேபமும் இருக்கலாகாதுதானே. “என்ன, இவர்கள் இருவரது காலக்கட்டங்கள் சுமார் 230 ஆண்டுகால இடைவெளியில் உள்ளன” என்று அனுகூல சத்ருவாக நக்கல் செய்யும் முரளி மனோஹரை மன்னிக்கிறேன்.
தற்சமயம் கிருஷ்ணர் வழி வந்த யாதவ சமூகம் பற்றி பதிவின் வரைவில் ஈடுபட்டுள்ளேன். சில நாட்களில் வரும். வழக்கம்போல குமுதத்தின் தயவில்தான் இது முக்கியமாக வருகிறது என்பதையும் போகிற போக்கில் கூறிவிட்டு போகிறேன். இருப்பினும் யாதவ சமூகம் பற்றி வேறு ஆதாரங்களை கூகளண்ணன் துணையுடன் தேடினதில் கிடைத்தது இரா. தமிழ்ச்செல்வன் அவர்கள் ஆறாம் திணையில் எழுதிய கட்டுரை. முதலில் கட்டுரையை பார்ப்போமா? அது தஸ்கியில் இருக்கிறது. அதன் ஒருங்குறி வடிவத்தை கீழே தந்துள்ளேன்.
நன்றி ஆறாம்திணை மற்றும் இரா. தமிழ்ச்செல்வன்
இந்தியாவில் பிரெஞ்சு காலனியம் பற்றி அறிய உதவும் அரிய ஆவணம் 'ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்பேடு' ஆகும்' ஆனந்தரங்கம் பிள்ளையில் நாட்குறிப்பேடு எவ்வளவு சுவையானதோ அவ்வளவு சுவையானது அவரது வாழ்வு. அவரது சொந்த வாழ்க்கையைப் பற்றி அறியப்படாத செய்திகள் இங்கு தொகுத்தளிக்கப்படுகின்றது.
ஆனந்தரங்கம் பிள்ளையைப் பெரும்பாலோர் புதுச்சேரிக்காரர் என்று நினைக்கின்றனர். அது தவறு. சென்னையிலுள்ள பெரம்பூர்தான் பிள்ளையின் சொந்த ஊர். 1709 ஆம் ஆண்டு பெரம்பூரில் பிறந்தார். இவர் பிரெஞ்சு அரசுக்கு துபாஷியாக மட்டுமில்லாமல் திவானாகவும் இருந்தார். திவானாகப் பதவியேற்ற ஆண்டு 1747.
பிள்ளை அவர்களுக்கு தமிழ் இலக்கியத்தில் மிகுந்த புலமை உண்டு. பல்வேறு புலவர்களையும் பேணிக் காத்தவர். இராம நாடகத்தை இயற்றிய அருணாசலக் கவிராயர், இராம நாடகத்தை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றம் செய்த பின் ஆனந்தரங்கப்பிள்ளையின் முன்பு அரங்கேற்றினார். இக் குறிப்பு அருணாசலக் கவிராயர் சரித்திரத்தில் காணப்படுகின்றது.
'இலக்கண விளக்கம்' என்ற நூலை இயற்றிய வைத்தியநாத தேசிகரின் புதல்வர் சதாசிவ தேசிகர் பிள்ளை மீது 'ஆனந்தரங்கக் கோவை' என்ற நூலை இயற்றியுள்ளார். கஸ்தூரி ரங்கய்யர் என்பவர் 'ஆனந்தரங்க சாட் சந்தமு' என்ற தெலுங்கு நூலைப் பாடியுள்ளார். 'ஆனந்தரங்க விஜயம்' என்ற நூலை சீனிவாசகவி என்பார் 1752 -ல் பாடியுள்ளார்.
புலவர் ஒருவர் பிள்ளையைக் கண்டு பரிசில் பெறச் சென்றார். பிள்ளை அவர்கள் அறுவடை செய்த தன்னுடைய நிலத்தில் சிதறிக் கிடக்கும் நெல்மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார். புலவருக்கோ பசி வயிற்றைக் கிள்ளியது. பொறுக்க முடியாமல் பிள்ளையிடம் கூறிவிட்டார். பிள்ளையோ ஏன் இப்படி பறக்கிறீர் என்று கூற புலவரின் வாயிலிருந்து கீழ்கண்ட பாடல் அரும்பியது.
''கொக்குப் பறக்கும், புறா பறக்கும்
குருவி பறக்கும், குயில் பறக்கும்
நக்குப் பொறுக்கி களும் பறப்பர்
நக்குப் பொறுக்கி களும் பறப்பர்
நானேன் பறப்பேன் நராதிபனே
திக்கு விசயற் செலுத்தி யுயர்
செங்கோல் நடத்தும் அரங்கா! நின்
பக்கம் இருக்க ஒருநாளும்
பறவேன்! பறவேன்! பறவேனே!'
பிள்ளை அவர்கள் சோதிடத்தில் வல்லவர். அவர் கணித்துக் கூறிய எதுவும் பொய்த்ததில்லை. புதுச்சேரி நகரம் ஆங்கிலேயர்களால் முற்றுகையிடப்பட்டிருந்தபோது துய்ப்ளேக்ஸ் அம் முற்றுகை சம்பந்தமாகப் பிள்ளையிடம் சோதிடம் கேட்டார். அதற்கு பிள்ளை அவர்கள் ஐப்பசி முதல் தேதியில் (1748) ஆங்கிலேயர் பின்வாங்குவர் என்று கூறினார். அவர் கூறிய தேதியை மறந்துவிட்டு துய்ப்ளேக்ஸ் இன்னும் முற்றுகை நீடித்திருக்கிறதே? என்றாராம். அதற்குப் பிள்ளை அவர்கள் ''தாம் சொன்ன நாள் அன்றைக்கு அடுத்த நாள்'' என்றாராம். அதன்படியே மறுநாள் ஆங்கிலேயச் சேனைகள் பின்வாங்கி ஓடினராம்.
ஆனந்தரங்கப் பிள்ளை பயணங்களின்போது குதிரை, யானை, பல்லக்கு முதலியவற்றில் ஏறிச் செல்வார். திருவேங்கடபுரச் சத்திரத்திற்குச் செல்லும் வழியில் ஆலமரம் ஒன்றுண்டு. அந்த வழியே குதிரை மீது செல்லும்போது விளையாட்டாக ஆலமரத்தின் விழுதைத் தாவிப் பற்றிக் குதிரையைச் செல்ல விடுத்து பின் அதனைக் கூப்பிட்டு முதுகின் மீது குதித்தேறிச் செல்வாராம்.
ஆனந்தரங்கப்பிள்ளையின் நாட்குறிப்பேடு 1846 ம் ஆண்டு 'கலுவா மொம்பிரேன்' என்பவரால் புதுச்சேரியிலுள்ள ஆனந்தரங்கப்பிள்ளையின் இல்லத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. 'எதுவா அரியேல்' என்பவரை வைத்து மொம்பிரேன் நாட்குறிப்பேட்டைப் படியெடுத்தார். அரியேல் படியெடுக்கும்போது தனக்கொரு படியையும் சேர்த்து எடுத்தார். மொப்பிரேனுடைய பிரதி புதுவை ஆவணக் காப்பத்தில் வைக்கப்பட்டது. ஆனால் தற்போது அப் பிரதி அங்கு இல்லை. அரியேல் தனக்கென எடுத்த படி தற்போது பாரீசிலுள்ள தேசிய நூல் நிலையத்தில் உள்ளது. பிள்ளை அவர்களின் மூல படி காணாமல் போய்விட்டது.
பிள்ளையின் கையெழுத்து 1940 ஆம் ஆண்டு புதுவை ஆவணக் காப்பகத்திலுள்ள ஆவணங்களிலிருந்து 'ழுவோ துய்ப்ரோய்' என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. அக் கையெழுத்து தமிழில் 'ஆனந்த ரங்கப்பன்' என இடப்பட்டுள்ளது. அதன் அருகில் பிரெஞ்சு மொழியில் துய்ப்ளேக்ஸின் கையெழுத்து உள்ளது.
பிள்ளை பிரெஞ்சு மொழியை நன்கு அறிந்திருந்தாலும் பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட ஆவணத்தில் தமிழில் கையெழுத்து இட்டிருப்பது அவருடைய மொழிப்பற்றைக் காட்டுகின்றது.
''காதால் கேட்டவைகளையும், கண்ணால் பார்த்தவைகளையும் கப்பல்கள் வருவதையும், கப்பல்கள் போவதையும் ஆச்சரியங்களும் புதுமைகளும் நிகழ்ந்தால் அவற்றையும் இத் தினசரிதையில் குறிக்க இருக்கிறேன்'' என்று நாட்டுக் குறிப்பைத் தொடங்கும் முன் பிள்ளையவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்தரங்கப் பிள்ளையின் மனைவி பெயர் 'மங்கைத் தாயம்மையார்'. இத் தம்பதிகளுக்கு அய்யாசாமி, அண்ணாசாமி என்ற இரு புதல்வர்களும், பாப்பா, காளத்தி, இலட்சுமி என்ற மூன்று புதல்வியர்களும் இருந்தனர். 1756ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18ம் தேதி மங்கைத் தாயம்மையார் இறந்துவிட்டார்.
பிள்ளை பெரும் செல்வந்தராக இருப்பினும் எளிய வாழ்க்கையையே மேற்கொண்டு ஒழுகி வந்துள்ளார். விழாக் காலங்களைத் தவிர மற்ற நாள்களில் எளிய உடைகளையே உடுத்துவார். காலையில் பழைய சோறு சாப்பிடுவது அவருடைய வழக்கம். நாட்குறிப்பு எழுதும்போது இடையில் துண்டு அணிந்துகொண்டு பிரம்பு நாற்காலியில் அமர்ந்து எழுதுவார் என அறிய முடிகின்றது.
ஆனந்தரங்கப் பிள்ளை வேளாளர் குலத்தினர் என்று பலரும் கருதுகின்றனர். இக் கருத்து தவறு. யாதவ குலத்தைச் சார்ந்தவர் அவர். வட தமிழகத்தில் யாதவ குலத்தினருக்குப் 'பிள்ளை' பட்டம் உண்டு.
1760 ஆம் ஆண்டு முதல் புதுவையை ஆங்கிலேயர் முற்றுகையிட்டுக் கொண்டிருந்தனர்.ப் ஆனந்த ரங்கப் பிள்ளையும் நோய்வாய்பட்டார். தன் குடும்பத்தினருடன் இடம் பெயர்ந்து சென்னையில் வாழ விரும்பினார். 1760 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தன் குடும்பத்தினரைச் சதுரங்கப் பட்டினத்திற்கு நகைகளுடனும் பணத்துடனும் அனுப்பிவிட்டார். நோய் அதிகரித்தபடியால் பிள்ளைக்குப் பயணம் செய்ய இயலவில்லை. இறுதியாகப் புதுவையில் 1761 ஆம் ஆண்டு சனவரி 11ம் நாள் மரணத்தைத் தழுவினார். அவர் உயிர்நீத்த 4 நாள்களுக்குப் பின்னர் புதுவை ஆங்கிலேயர் வசமாயிற்று.
ஒரு நீண்ட பெருமூச்சுடன் மீண்டும் டோண்டு ராகவன். ஆனந்தரங்கப் பிள்ளை தினசரி குறிப்புகளை வைத்து நம்ம பிரபஞ்சன் அவர்கள் “வானம் வசப்படும்”, “மானுடம் வெல்லும்” ஆகிய நூல்களை எழுதியுள்ளார். அக்குறிப்புகள் இல்லாவிட்டால் பிரபஞ்சன் அவர்கள் மிகைபடுத்தப்பட்ட செவிவழிச் செய்திகளை வைத்துத்தான் எழுதியிருக்க இயலும்.
இப்போது பதிவுலக நண்பர்களுக்கு சிறு வேண்டுகோள். யாதவ சமூகம் பற்றிய எனது பதிவு தயாரிப்பில் உள்ளது. அச்சமூகத்தை சேர்ந்தவர்கள் தங்களால் இயன்ற விஷயதானம் செய்தால் நன்றியுடன் இப்பதிவில் இணைக்கப்படும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
8 hours ago
6 comments:
டோரா சார்,(சும்மா சுருக்கிப் பார்த்தேன்,அதுவும் நன்றாக இருக்கிறது)
எனது பணிவான வேண்டுகோள்!
சாதியை வைத்து ஒரு மனிதனையோ அல்லது சமூகத்தையோ சிறப்பு செய்யவது அத்துனை அவசியமா? மறக்க வேண்டிய விசயத்தை ஏன் மனதில் ஏற்ற வேண்டும்.
டோரா சார், உங்களுக்கு இருக்கும் அறிவுக்கும், அனுபவத்துக்கும் நீங்கள் எந்த சாதியில் அல்லது எந்த மதத்தில் பிறந்தாலும் இதே நிலைய அடைந்திருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
வைரமுத்து தேவரென்பதால் கவிரென்றால், கண்ணதாசனையும் ,பாரதியயும் எங்கு சேர்ப்பது.
இளையராஜா ப்ரையரென்பதால் இசைஞானின்றால்,
ரகுமானையும்,ஹாரிஸையும் எங்கு சேர்ப்பது.
வீரபாண்டிய கட்டபொம்மன் தொட்டிய நாயக்கரென்பதால் வீரனென்றால்,
பகத் சிங்கையும்,கொடி காத்த குமரனையும் எங்கு சேர்ப்பது.
சொல்லிக் கொண்டே போகலாம்.
ஒரு தனிமனிதனின் ஒவ்வொரு செயலும் அவனைப் பொருத்த விஷயமன்றி சாதி ஒரு தூண்டுகோலாக இருக்காது என்பது திண்ணம்.
தியாகிகள் இல்லாத சாதி உண்டா?
திருடர்கள் இல்லாத சாதி உண்டா?
வேசிகள் இல்லாத சாதிகள் உண்டா?
பத்தினிகள் இல்லாத சாதிகள் உண்டா?
இப்படி ஒவ்வொரு கேள்விகள் கேட்கும் பொழுது எல்லா கேள்விகளுக்கும் பதில் ஒன்றே என்பதில் ஐயமில்லை.
அப்படி இருக்கும் பட்சத்தில் தங்களைப் போன்ற நல்லோர்கள் சாதி சார்பாக எழுதுவது நலம் பயக்குமா?
இருப்பது ஒரு பிறவி. அதில் நான் இன்ன சாதிக்காரனாக வாழ்வதை விட ஒரு நல்ல மனிதனாக வாழ்வது நலம் அல்லவா?
சாதி மறப்போம்.
சமயம் மறப்போம்.
மனிதம் பார்ப்போம்.
மனிதம் காப்போம்.
இப்படிக்கு என்றும்
தங்கள் வாசகன்
தேனியார்
@தேனியார்
மன்னிக்க வேண்டும் நமக்கு நமது வேர்கள் தெரிய வேண்டும். நல்ல பாரம்பரியங்களை தன்னுள் இருத்தியுள்ளது இந்தியா. சிலருடைய நாசுக்கான எண்ணங்களுக்காகவெல்லாம் அவற்றை மறைக்கும் உத்தேசம் எனக்கில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எனது வேண்டுகோளுக்கு மதிப்பளித்து சில தகவல்கள் அனுப்பின பாண்டிய நக்கீரன் அவர்களுக்கு என் நன்றி. அவற்றையும் என் வரைவில் சேர்க்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
The history is a Western concept. In the East we have never cared about history because history only collects facts. In the East there is no word equivalent to history, and in the East there was no tradition of writing history. In the East, instead of history we have been writing mythology.
Mythology may not be factual, but it has the truth in it. A myth may have never happened. It is not a photograph of a fact; it is a painting. And there is a difference between a photograph and a painting. A painting brings out something of you which no photograph can bring out. The photograph can only bring out your outlines.
A great painter can bring out it sadness, happyness, peacefulness. The photograph cannot catch hold of it because they are not physical things. But a great painter or a great sculptor can manage to catch hold of them.
@கரூர் டுடே
நீங்கள் சொல்வதில் விஷயம் இல்லாமல் இல்லை. ஆனால் பெயிண்டிங் மட்டுமே எப்போதுமே திருப்தி செய்வதில்லை. சீரியஸான ஆய்வுகளுக்கு போட்டோவும்தான் முக்கியம்.
இவ்வளவு நாட்கள் போனது போகட்டும். இனியாவது நாம் முடிந்தவரை எல்லாவற்றையும் எழுத்தில் வைப்போம். அந்த முயற்சியில்தான் நான் என்னால் முடிந்த அளவு செய்கிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
பதிவைக் காட்டிலும் தேனீயாரின் பின்னூட்டம் அட்டகாசம்.
Post a Comment