4/12/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 12.04.2009

தேவரகசியம்:
அதிசயப்பிறவி என்னும் படத்தில் ரஜனிகாந்தின் உயிரை எம கிங்கரர்கள் தவறாக யமலோகம் கொண்டு வந்து விடுவார்கள். வினுச்சக்கரவர்த்தி (யமன்), வி.கே. ராமசாமி (சித்திரகுப்தன்) மற்றும் சோ (விசித்திரகுப்தன்) ஆகியோர் ரஜனிகாந்தின் உயிரை அவர் போலவே தோற்றமளிக்கும் இன்னொருவர் உடலில் பொருத்த முயற்சிப்பார்கள். ரஜனிகாந்த் நடித்த பலபடங்களிலிருந்து காட்சிகள் திரையில் வர ஒவ்வொரு முறையும் ரஜனி சரி எனச்சொல்லும் மனநிலைக்கு வர, சோ அவர் காதோடு அந்தந்த ரஜனிகாந்த் கேரக்டர்கள் சீக்கிரமே சாகப்போகும் செய்தியை கூறுவார் (உதாரணம் ‘புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் வரும் ரஜனிக்கு வயிற்றில் புற்று நோய்). ரஜனியும் இதையெல்லாம் கூறி பிறகு ரிஜெக்ட் செய்வார். அப்போது வினுச்சக்கரவர்த்தி வி.கே.ஆரிடம் கேட்பார், இந்த மானிடனுக்கு தேவ ரகசியங்கள் எப்படி தெரிந்தன என்று. அவரும் கூறுவார், இந்த சோதான் போட்டு கொடுக்கிறார் என்று. மேலே கதை செல்கிறது, ஆனால் அது இப்பதிவுக்கு வேண்டாம்.

நாம் தேவ ரகசியம் என்னும் கான்சப்டை எடுத்து கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் ரகசியத் தன்மை பாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காரியமாற்ற இயலும். இதைத்தான் ஐ.எஸ்.ஓ.-9000 கோட்பாட்டில் தகவல் அறியும் தேவையின் அடிப்படை (need to know basis) என்பார்கள். இதை நான் வேடிக்கையாக need not know basis எனக் குறிப்பிட்டதுண்டு.

இந்த மாதிரி பல ரகசியங்களை காப்பாற்றுதல் முக்கியம், அவை தேவ ரகசியம் என கூறமுடியாவிட்டாலும். எனது மொழிபெயர்ப்பு வாழ்க்கையிலும் இது உண்டு. வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 7 பதிவில் நான் எழுதியதை இங்கு மீண்டும் தருகிறேன்.

“தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

ஐ.எஸ்.ஓ. 9001 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தகவல் மேலாண்மை ஆகும். கம்பெனியில் ஒருவரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ வேலை கொடுக்கும்போது அவ்வேலைக்குத் தேவையான எல்லா தகவல்களையும் தர் வேண்டும் ஆனால் தேவைப்படாத தகவல்கள்? மூச், தரவே கூடாது. இது என்னப் புதுக் கதை என்று வியப்பவர்களுக்கு: தகவல் என்பது சக்தி. தேவையற்றவருக்கு கொடுத்தால் கெட்டது குடி. இதில் மொழிபெயர்ப்பாளர் எங்கு வருகிறார் என்று கேட்கிறீர்களா? மேலே கூறிய சினேரியோவைப் பாருங்கள்.

உங்களிடம் உள்ள தகவல்கள் என்னென்ன?

நீங்கள் பொறியாளர். எவ்வளவு வருட அனுபவம்? உங்களுக்குத் தெரிந்த மொழிகள் என்னென்ன? ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம்? எவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க இயலும்? ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது முடித்து கொடுக்க தோதுப்படும்?

இவையெல்லாம் வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டுமா? கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அவையும் உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும்?

கொடுக்கக்கூடாத தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நான் மேலே கூறியபடி நீங்கள் முழுநேர வேலையிலும் இருக்கிறீர்கள். எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள பல வாடிக்கையாளர்கள் முயலுவர். இதைத் தெரிந்து என்ன நல்லது ஆகப் போகிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.

என்ன கெட்டது ஆகப் போகிறது என்ற கேள்விக்கோ அனேக பதில்கள் உள்ளன. ஒரு தகவலைக் கொடுத்தபிறகு அது உங்கள் கட்டுப்பாட்டில் இனிமேல் இருக்காது. அதற்கு மாறாக உங்கள் தலை மேல் தொங்கும் கத்தியாகிவிடும். வாடிக்கையாளர் உங்களை பயமுறுத்த ஓர் ஆயுதத்தைத் தேவையில்லாமல் நீங்களே அவர் கையில் கொடுக்கிறீர்கள். வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ கூட உங்கள் முழுநேர வேலை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் செய்யும் சைட் பிசினெஸ் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்புமளவுக்கு அது போய் விடலாம். அப்படித்தான் என் கம்பெனியில் ஒரு ஆடிட்டருக்கு வேலை போயிற்று”.

அதே சமயம் தெரிவிக்க வேண்டியத் தகவல்கள், தெரிவிக்கக் கூடாதத் தகவல்கள் ஆகியவை அதே கேடகரியில் இருப்பதில்லை; அவை மாறக்கூடியவை. இப்போதெல்லாம் நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக இருந்ததை சொல்வது மிக முக்கியம். புது வாடிக்கையாளருக்கு அதனால் நம் மேல் அதிக நம்பிக்கை வரும்.

நல்ல சீரியல்கள்:
தற்சமயம் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு வரும் ‘எங்கே பிராமணன்’ சீரியலில் வரும் எபிசோடுகளை எனது இந்த வலைப்பூவில் கவர் செய்து வருவதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அது பற்றி பின்னால் சொல்கிறேன். முதலில் சீரியல்கள் என்ற கான்சப்டைப் பார்ப்போம்.

மெகா சீரியல்கள் என்னும் விஷயம் நம்மூருக்கு மட்டுமே உரித்தானதில்லை. இவற்றை அமெரிக்காவில் soap opera என அழைப்பார்கள். ஒவ்வொரு சீரியலுக்கும் ஒரு டெம்பிளேட் உண்டு. உதாரணத்துக்கு Dennis the menace என்னும் சீரியலை எடுத்து கொள்வோம். அதில் டென்னிஸ், அவன் தாய், தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்சன், மிசஸ் வில்சன், டென்னிஸின் நண்பன் ஜோயீ, தொந்தரவு தரும் நண்பி மார்க்கரெட் ஆகியோர் திரும்பத் திரும்ப வருவார்கள். 1959 முதல் 1963 வரை வந்த டெலிவிஷன் சீரியலை மறுபடியும் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் ஒளிபரப்பினார்கள். இன்றைக்கும் அது பலரால் விரும்பப்படுகிறது.

டென்னிஸ் தொடரில் ஒரு எளிமையான டெம்பிளேட் உண்டு. அதை வைத்து வெவ்வேறு கதைகள் புனையலாம், அவ்வாறே செய்தார்கள். ஆனால் ஒரு தொடர்ச்சியான கதையாக வரும் மெகாசீரியலில் என்ன நடக்கிறதென்றால் கதையின் ஆரம்ப போக்கே மாறி, அங்கும் இங்குமாக அலைந்து. ஒரு கட்டத்தில் டைரக்டருக்கே புரியாமல் போகிறது, தான் என்ன சொல்லப்போகிறோம் என. ஆகவே தேவையின்றி கதையை வளைத்து, நம்பகத்தன்மையே குலைந்து போகிறது. அதிலும் மற்றவர்கள் கதறக்கதற நல்லது செய்வதையே காரியமாக வைத்திருக்கும் அபி, தொல்காப்பியன் (கோலங்கள்) ஆகியோர் எரிச்சலையே கிளப்புகின்றனர். போன ஆண்டு டெலிஃபோன் நேர்க்கணல் ஒன்று கோலங்கள் டைரக்டர் திருச்செல்வனுடன் (தொல்காப்பியன்) லைவாக ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் சீரியல் ஓரிரு மாதங்களில் (செப்டம்பர் 2008) முடிந்து விடும், தன் மனதில் கடைசி எபிசோட் வரைக்கான சீன்கள் தெளிவாகவே உள்ளன எனக்கூறினார். அப்படியே முடிந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் என்னாயிற்று என்றால் சன் டிவியில் சீரியலுக்கு எக்ஸ்டென்ஷன் தந்து விட்டார்கள் என நினைக்கிறேன். இன்னமும் போய்க்கொண்டிருக்கிறது. முடிவது போல தெரிவதில்லை. மே மாதம் முடியும் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் எந்த ஆண்டின் மே மாதம் எனக்க்கூறவில்லை.:))

கோலங்கள் போலவே கஸ்தூரியும் (கோபுரங்கள் சாய்வதில்லை என்னும் திரைப்படமாக தொண்ணூறுகளில் ஏற்கனவே வந்தது) எக்ஸ்டென்ஷன்கள் தரப்பட்டு இடியாப்பச்சுருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் இவ்விரண்டு சீரியல்களும் சிறப்பாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. ஆர்டிஸ்டுகளும் நன்றாகவே வேலை செய்கின்றனர். ஆனால் என்ன பயன்? எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போகின்றனவே!

இங்குதான் ஒரு விதிவிலக்காக வந்திருக்கும் நல்ல சீரியலான ‘எங்கே பிராமணன்’ பற்றி கூறுவேன். இதுவரை 50 எபிசோடுகள் முடிந்து விட்டன. ஏற்கனவே இது புத்தகமாக எழுபதுகளில் வந்திருக்கிறது. சீரியல் புத்தகத்திலிருந்து பல வகைகளில் மாறுபடுகிறது. அதிக பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், காட்சிகளின் வரிசைகள் மாறியுள்ளன. ஆனால், இதுவரை நான் பார்த்த எல்லா மாறுதல்களுமே திரைக்கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

ஆகவேதான் இதன் எபிசோடுகள் எல்லாவற்றுக்கும் அவை வரவர மதிப்புரை தருவது என தீர்மானித்து அவ்வாறே தந்து வருகிறேன். இது மற்ற பதிவர்களின் தகவலுக்கு மட்டுமே.

பை தி வே, இதிலும் நான் மேலே சொன்ன தேவ ரகசியம் வருகிறது. அதாவது வசிஷ்ட முனிவர்தான் அசோக்காக அவதரித்திருக்கிறார் என்பதே. இந்த தேவ ரகசியத்தை பார்வையாளருக்கும் இப்போது தந்து விட்டார்கள், ஆனால் அசோக், நாதன் ஆகியோருக்கு தெரியாது. ஏன் தெரியக்கூடாது என்பதை நாமே கூறிவிட இயலும். அதாகப்பட்டது, அவ்வாறு தெரிந்து விட்டால் இக்கதையே இருக்காது, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

13 comments:

மணிகண்டன் said...

அது தான் "எங்கே பிராமணன்" சீரியல் பத்தி டெய்லி எழுதறீங்களே ? அத தவிர, இந்த பதிவுலயும் அதே கொடுமையா !

மணிகண்டன் said...

me was the first !

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல சீரியலா எங்கே பிராமணன் வந்திருக்கு. அதைக்கூட சொல்லக்கூடாது என்றால் எப்படி சார்? மேலும் தேவ ரகசியம் ப்ற்றி எழுதும்போது இதிலும் அதுதானே சீரியலின் அடிப்படை நாதம்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Rajaraman said...

தமிழ் கண்மணிகளுக்கு என் உளம்கனிந்த தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த இனிய தமிழ் புத்தாண்டு நன்னாளில் இல்லல் நீக்கி, மகிழ்ச்சி பெருக்கி, வாழ்வில் வளம் சேர்க்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்.

Vijay said...

என்ன சார், யாருக்கும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சொல்லலியா????

/விஜய்

dondu(#11168674346665545885) said...

@விஜய்
நாளைக்குத்தானே தமிழ்ப்புத்தாண்டு? பிறகு ஏன் எல்லோரும் இன்றே வாழ்த்து சொல்கிறார்கள் என விசாரித்தால் இன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கிறது என அறிந்தேன்.

எல்லோருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நல்லதந்தி said...

//இன்று இரவு புத்தாண்டு ஆரம்பிக்கிறது என அறிந்தேன்.//

தமிழ்புத்தாண்டு இரவில் ஆரம்பிக்கின்றதா?. என்னங்க சார் இது!.இந்தியாவில் நாள் பிறக்கிறது காலை சூரியன் உதிக்கும் போது தானே!. வெள்ளைக்காரன் பாலிஸிதான் இரவு 12 மணிக்கு நாள் பிறக்கிறதெல்லாம். நமக்கு காலையில்தான் நாள் பிறக்கிறது. ஆகவே ஜனங்களே!. புத்தாண்டு வாழ்த்துகளை காலையில் சூரிய உதயத்துக்கு பிறகு சொல்லுங்க!(முன்னாடியே வாழ்த்து சொல்றவங்களுக்கு இது பொருந்தாது!)

வால்பையன் said...

//நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்//

நங்கநல்லூர் தேவலோகம் ஆகிருச்சா!

ஆரம்பமே தேவ ரகசியமா இருக்குது!

வால்பையன் said...

இந்த பதிவுக்கும் எங்கே பிராமணம்னு பேர் வச்சிருக்கலாம்!

மணிகண்டன் said...

***
ஏதோ ஒண்ணே ஒண்ணு கண்ணே கண்ணுன்னு ஒரு நல்ல சீரியலா எங்கே பிராமணன் வந்திருக்கு. அதைக்கூட சொல்லக்கூடாது என்றால் எப்படி சார்?
***

உங்க பதிவு படிச்சிச்கிட்டு வரேன். சரி, மெகா சீரியல் மட்டும் ஸ்கிப் பண்ணிட்டு மிச்சம் எல்லாம் படிக்கலாம்ன்னா அதுலயும் இதையே எழுதிட்டு என்கிட்டயே கேள்வி கேக்கறீங்களா ? !!!! நியாயம் இல்ல சொல்லிட்டேன்.

பட்டாம்பூச்சி said...

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

dondu(#11168674346665545885) said...

@மணிகண்டன்
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரியலில் தொடப்பட்டுள்ளன. நான் ரெகுலராக ஒவ்வொரு எபிசோடுக்கும் எழுதும் மதிப்புரை வேறுதளத்தில். இது வேறு தளத்தில். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மணிகண்டன் said...

***
இப்பதிவில் உள்ள இருவிஷயஙளுமே இந்த சீரியலில் தொடப்பட்டுள்ளன. நான் ரெகுலராக ஒவ்வொரு எபிசோடுக்கும் எழுதும் மதிப்புரை வேறுதளத்தில். இது வேறு தளத்தில். இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ளலாகாது.
***

Ok sir.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது