அமரர் திருமலை உருக்கமான கதைகள் மட்டும்தான் எழுதுவாரா என்ற தயக்கமே வேண்டாம். நகைச்சுவையிலும் பின்னி எடுப்பார். உதாரணம் இப்பதிவுக்கான கதை.
நினைவிருக்கட்டும். கதை எழுதிய காலகட்டம் ஐம்பதுகளில். அப்போதெல்லாம் ட்ரங்க் காலில்தான் உரக்கக் கத்திக் கத்தித்தான் பேச வேண்டும். செல்பேசி பற்றி யாருக்கும் கனவுகூட இருந்திருக்க முடியாது. மேலும், அப்போதெல்லாம் 200 ரூபாய் சம்பள உயர்வெல்லாம் பெரிய உயர்வுதான். இப்போது ஓவர் டு திருமலை.
வீட்டிலிருந்து வரும் கடிதங்கள் வழக்கமாக, “உன் கடிதம் கிடைத்தது. க்ஷேமம். க்ஷேமத்திற்கு எழுதவும். இங்கு நாங்கள் எல்லோரும் சௌக்கியம். நீ சௌக்கியமா? இரண்டு நாட்களாக சிரஞ்சீவி கண்ணனுக்கு சற்று இருமல். வேறு விசேஷமில்லை. உன் உடம்பை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள். உடனே பதில். ஆசீர்வாதம்...” என்ற ரீதியில் அமைந்திருக்கும். என் குடும்பத்தினர் கடிதம் எழுதும் கலையைப் பயிலாதவர்கள்.
ஆனால் அந்த சனிக்கிழமையன்று வந்த கடிதத்தில் அதிகப்படியாக சில வரிகள் இருந்தன. தற்செயலாக எழுதப்பட்ட வரிகள். அடுத்த வீட்டுப் பெண் அகல்யாவுக்கு வரன் அநேகமாக நிச்சயமாகி விட்டது. போன வருஷம் உன்னைக் கேட்டார்கள். நீதான் என்னவோ, கல்யாணமே பண்ணிக் கொள்ளப் போவதில்லை என்று நிராகரித்தாய். பிள்ளை வீட்டார் வரும் ஞாயிறன்று முடிவு சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனார்கள். பிள்ளை உன்னைப் போல வெளுப்பு இல்லை. அட்டைக்கரி! ரதி மாதிரி இவள் கிடைக்க அவன் கொடுத்துத்தான் வைத்திருக்க வேண்டும்...”
அதற்கு மேல் என்னால் படிக்க முடியவில்லை. அம்மாவின் கடிதம் கையிலிருந்து நழுவித் தரையில் விழுந்தது.
ஏன்தான் நான் மாட்டேன் என்று சொன்னேனோ! எதையாவது மனதில் நினைத்துக் கொண்டு தீர்மானமாக ஒரு வார்த்தை சொல்லி விடுகிறோம்; பிறகு வருந்த நேரிடுகிறது. போன வருஷம் நான் ஒரு மாதம் லீவில் ஊருக்குப் போனேன். அப்பொழுது அகல்யாவை எனக்குக் கொடுப்பதாகப் பேச்சு வந்தது. என் நண்பர்கள் பலர், உறவினர் பலர் எல்லோரும் சம்சார சாகரத்தில் மாட்டிக் கொண்டு தவிப்பதாக என் புத்திக்கு அப்போது பட்டது. குழந்தைகள் அமளி, ரேஷன் தொல்லை, டாக்டர் “பில்” இதெல்லாமல்லவா பெண்டாட்டியைப் பின்பற்றி வரும் என்று பயந்தேன். தவிர, என் அப்பொழுதைய வருமானம் எனக்கே போதாததாக இருந்தது. அவசரப்பட்டுக் கல்யாணம் செய்து கொண்டு ஒரு பெண்ணையும் வறுமையில் இழுப்பானேன் என்றும் பட்டது.
விடுமுறை கழித்து கல்கத்தா திரும்பிய பின் என் நிலை மாறி விட்டது. வைரத்தைப் போல் கடின நெஞ்சுடையவர் என்று நான் என் எஜமானரைப் பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயம் தவறாகி விட்டது. அவர் எனக்கு இருநூறு ரூபாய் சம்பள உயர்வு கொடுத்தார். கூலியைக் கருதாது ஏழு வருஷம் உழைத்ததற்கு முதல் பலன் கிடைத்து விட்டது.
கலிகாலமாச்சே என்று வியக்காதீர்கள்! இது உண்மை! விவாகத்திற்கு ஒரு தடை அகன்றது. என் மனம் மாற இன்னொரு முக்கியக் காரணம் வைத்தா ஹோட்டல் சாப்பாடுதான். வைத்தா நளபாகமே செய்து போட்டாலும் வீட்டுச் சாப்பாட்டுக்கு ஈடாகுமா! ஹோட்டல் சாப்பாட்டினால் நாக்கு செத்தே விட்டது. தினம் கங்கைக் கரையில் அமர்ந்து சூரிய அஸ்தமனத்தின் ஜாலத்தைக் காணுகையில் என்னுள் தவிர்க்க முடியாத தனிமையுணர்ச்சி தோன்றும்; அதைத் தொடர்ந்து அகக்கண் முன் அகல்யாவின் மதிமுகம் எழுந்து என்னை வேதனை செய்யும்.
என் மன மாறுதலைப் பற்றி என் தாய் தந்தையருக்கு எழுத வகை தெரியாது சும்மா இருந்தேன். அவர்கள்தான் ஆகட்டும், கல்யாண விஷயமாக முதலில் எழுதக் கூடாதோ? இப்போதோ மேற்சொன்ன கடிதம் கோடையிடி போல் வந்து என்னைத் தாக்கியது.
நான் என்ன செய்வது? அகல்யா மாதிரி வேறு பெண் கிடைப்பாளா? எப்படியாவது...
வீட்டிற்குத் தந்தியடித்தால்? குறுகிய என் தந்தியில் என் மனப்போக்கையும் விருப்பத்தையும் முழுமையாக விளக்கிச் சொல்ல முடியுமா? தந்திக்காக அடுத்த வீட்டார் கல்யாணப் பேச்சை நிறுத்துவார்களா?
திடீரென தோன்றிய அதியற்புத யோசனையால் துள்ளிக் குதித்தேன்.
டெலிஃபோனை எடுத்த கால் மணிக்கெல்லாம் ‘ஆபரேட்டர்’ குரல் கேட்டது. என் அதிருஷ்டம்! ஏனெனில் கல்கத்தாவில் ஒரு தரம் டெலிஃபோன் செய்வதற்குக் குறைந்தது ஒரு மணி நேரம். ‘ட்ரங்க்’ என்றேன். ‘ட்ரங்க’ கிடைத்ததும் ‘மதராஸ் இன்ன நம்பர், அவசரக் கூப்பாடு, குறித்த நபருடன் பேச வேண்டும். அந்த நபர் பெயர் மிஸ்டர் வரதராஜன். டெலிஃபோன் இருக்குமிடத்துக்கு பக்கத்து வீட்டிலிருக்கிறார்’ என்று விளக்கம் சொல்லி ரிசீவரைக் கீழே வைத்தேன்.
மதராஸ் எண் எப்பொழுதடா கிடைக்கும் என்று ஆவல்டன் தவம் செய்தேன்.
என் சிந்தனையில் உருவெடுத்து அகல்யா என்னை ஏசல் செய்தாள். நான் அவளை எவ்வாறு வர்ணிப்பேன்! அன்றலர்ந்த மலரென மிளிரும் வதனம், அதில் பளிச்சென்று கதுப்புக் கன்னங்களில் குழி விழச் செய்யும் வெற்றிப் புன்னகை; பிறையைப் போல இயங்கும் அவள் நுதலில் திகழ்ந்தது ஒரு திலகம்; கருமை தீட்டிய அகன்ற விழிகள்; எப்பொழுதும் இயற்கையோ என்று கண்டவர் ஐயுறும் புதுமைப் பொலிவு; நாளுக்கு நாள் அதிக எழிலோங்கும் சருமம்; பிரகாசமாகச் சலவை செய்யப்பட்டுள்ள வாயில் புடவை, மல் ரவிக்கை (ஆம், வாசகர்கள் பலர் ஊகித்த மாதிரி என் வேலை விளம்பர சம்பந்தமுடையதுதான்).
மாதமிருமுறையாவது நான் வேலை நிமித்தமாக என் காரியாலயத்தாருடன் ‘ட்ரங்க்’ டெலிஃபோனில் பேசுவதுண்டு. ஆனால் என் வீட்டில் யாருமே அது மாதிரி தூரதேசப் பேச்சுப் பேசினதே இல்லை. அப்பாவுக்குக் கூட இதுதான் முதல் அனுபவமாக இருக்கும். பக்கத்து வீட்டு அம்பி போய், “கல்கத்தாவிலிருந்து டெலிஃபோன் வந்திருக்கு மாமா” என்று சொன்னவுடன் அப்பா மட்டுமென்ன, வீட்டில் எல்லோருமே அப்படியே எல்லாவற்றையும் தூக்கிப் போட்டுவிட்டு டெலிஃபோனுக்கு ஓடுவார்கள் என்று எண்ணினேன். இந்த எண்ணம் எனக்கு அடக்கமுடியாத சிரிப்பை உண்டாக்க்கியது. அது நிஜமாகவே நடந்து விட்டபோது சிரிப்புக்கு பதில் கண்ணீர்தான் உண்டாயிற்று.
அப்பாவிடம் என்ன சொல்வது, எப்படிச் சொல்வது என்ற பிரச்சினை.
நான் ஏன் பயந்து தயங்க வேண்டும்? நான் என்ன குழந்தையில்லையே? மீசை வைத்துக் கொண்டிருக்கிறேன்! (ஊருக்குப் போகுமுன் அதை எடுத்து விடுவது வழக்கம். அதனால் என்ன?) நிதானமா, அழுத்தமா பேச வேண்டும் என்று என் மனதைத் திடம் செய்து கொண்டேன்.
டெலிஃபோன் மணி நீண்டு கதறிற்று. ரிசீவரை எடுத்துக் காதில் வைத்தேன். மார்பு படபடத்தது; உடல் முழுவதும் குப் என வியர்த்து விட்டது.அப்பாவுடன் பேசுவது ஆபீசுடன் பேசுவது போலாகுமா?
ஆயிரம் மைல்களுக்கு அப்பாலிலிருந்து கிணற்றிலிருந்து பேசுவது போல் குரல் கேட்டது.
“ஹல்லோ! நான்தான் முரளி பேசறது! ஹல்லோ நான் சொல்வது காதில் விழுகிறதா?” என்று கத்தினேன்.
“யாருடா, முரளியா? உன் குரல் மாதிரியே கேட்கவில்லையே? என்னடா விசேஷம்? ஏதாவது உடம்பு சரியில்லையா? ஏதாவது ஆபத்தில் மாட்டிக் கொண்டு விட்டாயா?...” பேசியது என் தாய். அப்பாவுக்கு முந்தி ஓடிவந்து டெலிஃபோனை எடுத்துக் கொண்டுவிட்டாள் என்பதை பின்னர் அறிந்தேன்.
“உடம்பெல்லாம் சரிதான் அம்மா. ஆபத்து ஒன்றுமில்லை. சும்மாத்தான் கூப்பிட்டேன்.”
சும்மாவா கூப்பிட்டாய்? டெலிஃபோன்காரன் சும்மா விட மாட்டானே?” ஏகப்பட்டப் பணம் செலவழியுமே? நல்ல பிள்ளையடா நீ!”
“இல்லைம்மா, அடுத்தவீட்டுப் பெண்...” என்று நான் சொல்லிக் கொண்டிருக்கையில் அம்மாவிடமிருந்து அப்பா டெலிஃபோனைப் பிடுங்கிக் கொண்டு விட்டார்.
“என்னடா முரளி! கல்கத்தாவிலே ராத்தூக்கம் இல்லாம ஊர் சுத்துகிறாயாமே?” என்று அதட்டினார் அப்பா.
“நான் சொல்வதைத் தயவு செய்து கேளேன் அப்பா!” அடுத்த வீட்டுப் பெண்...”
“அடுத்த வீட்டுப் பெண் கிடக்கிறாளடா! உன்னை இரவு பன்னிரண்டு மணிக்கு சௌரங்கியில் பார்த்தேன் என்று கோண்டு கடிதாசு எழுதியிருக்கிறான்... அங்கு கண்டிக்க ஆளில்லை போலிருக்கு!... ஒழுங்காக இருப்பதாக உத்தேசம் ஏதாவது உண்டா காவாலிப் பயலே!”
“ஒழுங்காத்தான் இருக்கேம்பா! வந்து... அடுத்த வீட்டுப் பெண்...”
“ஆமாண்டா அவளுக்குக் கல்யாணம் அநேகமா நிச்சயமாயிடுத்து. முகூர்த்தத்தேதி வைக்க வேண்டியதுதான் பாக்கி! ... இதோ சரோ பேசணும் என்கிறாள்” என்று சொல்லி அப்பா டெலிஃபோனை சரோவிடம் கொடுத்து விட்டார்.
“நான்தான் சரோ பேசறது! டேய் முரளி, எனக்கு நீ பெங்கால் சில்க் புடவை வாங்கி அனுப்பறேன்னு சொன்னியேடா! சொல்லி ஒரு வருஷமாச்சு!”
“அதுக்கென்ன பிரமாதம் சரோ. அடுத்த மாதம் கட்டாயம் வாங்கி அனுப்பிச்சுடறேன். அப்பாவிடம் கொடு. அடுத்தவீட்டுப் பெண்...”
“ஆமாம் அகல்யாவுடைய பெங்கால் சில்க் புடவை மாதிரியேதான் எனக்கும் வேணும். மஞ்சளிலே கறுப்புப் பொட்டு போட்டு, அஜந்தா பார்டரோட...இந்தாடீ அங்கச்சீ, நீ பேசு!” என்று சரோ, டெலிஃபோனை அங்கச்சியிடம் கொடுத்து விட்டாள். அங்கச்சிக்குத்தான் வீட்டில் அதிகாரம் ஜாஸ்தி.
“முரளி! உன் பிராமிஸை தண்ணீலேதாண்டா எழுதணும். ரிஸ்ட் வாட்ச் வாங்கித் தரேன்னு எவ்வளவு நாளா ஏமாத்திண்டிருக்கே!”
“வாட்ச் கிடக்கட்டும். அப்பாகிட்டே ஃபோனைக் கொடம்மா தயவு செய்து”
“வாட்ச் கிடக்கட்டுமா? நன்னாயிருக்கு! என் கிளாசிலே என்னைத் தவிர ஒருத்தியாவது வாட்ச் இல்லாமல் மூளிக் கையோட வரதில்லை. நீ வாட்ச் சீக்கிரம் அனுப்பலைன்னா நான் காலேஜ் போவதையே நிறுத்தி விடுவேன்”.
“அடுத்த மாதம் நல்ல வாட்சா அனுப்பறேன் அங்கச்சி. அடுத்த வீட்டுப் பெண்ணைப் பற்றி அப்பாவிடம்...”
“அகல்யாவா! ஐய, அதுக்கு இருக்கிற மண்டை கர்வத்தைப் பாரேன்! என்கூட பேச மாட்டென் என்கிறது! தான் ரதி என்கிற என்ணம்டா அதுக்கு!”
“அப்பாவிடம் ஃபோனைக் கொடேன் அங்கச்சி, நேரமாச்சு” என்று கத்தினேன். அங்கச்சி இதற்கெல்லாம் பயப்படுவாளா?
“அப்பாகிட்டேதான் பேசியாச்சேடா? இந்தா குழந்தை கிட்டே பேசுடா!” என்று கடைக்குட்டி கன்ணனிடம் கொடுத்து விட்டாள்.
“கண்ணன் பேசறேண்டா, தெரியறதா முரளி? நான் ரொம்பப் பெரியவனாப் போயிட்டேன்! ரசகுல்லா அனுப்பவே மாட்டேங்கறயே!”
“நாலு டப்பா அனுப்பறேண்டா கண்ணா! நாளைக்கே அனுப்பறேன்.”
கூட ஒரு ட்ரைசைக்கிளும் அனுப்பு!”
“சரி”
“அப்புறம் இரண்டு கிரிக்கெட் பேட் வேணும்”
“சரி. அப்பாவிடம் டெலிஃபோனைக் கொடுடா ராஜா!”
“என்ன முரளி...” என்றார் அப்பா.
“அப்பா! வந்து அடுத்த வீட்டில்” என்று நான் சொல்ல ஆரம்பிக்கையில் ஆப்பரேடர் இடை மறித்து “மூன்று நிமிஷம்” ஆகிவிட்டது!” என்றார். அப்பா டெலிஃபோனை அதன் தொட்டியில் வைத்து, தொடர்பை அறுத்து விட்டார்.
எனக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. இதுமாதிரி ஒரு குடும்பத்தில் பிறந்த எனக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும் என்று எண்ணிக் கசந்தேன். என்ன வாழ்க்கையிது, ஏமாற்றம் நிறைந்த வாழ்க்கை! சீ! இன்று மாலை அகல்யாவுக்கு எல்லாம் நிச்சயமாகிவிடும். இப்பொழுது வேறு ஒருவன் அந்தக் கிளியை கவ்விக் கொண்டு போய்விடப் போகிறான்.
சனி இரவு தூக்கம் கொள்ளவில்லை. ஞாயிறன்று பூராவும் ரூமில் தங்காது ஸிட்பூர் பொட்டானிகல் கார்டனில் போய் அலைந்தேன். சுற்றிச் சுற்றிக் கால்கள் இரண்டும் சளைத்துப் போய் விட்டன. பெரும் களைப்பினால் ஞாயிறு இரவு நல்ல நித்திரை.
திங்களன்று காலை அம்மாவிடமிருந்து கடிதம் வந்தது.
“...நீ ஏதோ டெலிஃபோனில் எல்லாரிடமும் ‘அடுத்த வீட்டுப் பெண்’, ‘அடுத்த வீட்டுப் பெண்’ என்று உளறினாயாம்! சொல்வதைச் சரியாக சொல்ல வயசாகவில்லையா என்று அப்பா கோபிக்கிறார்... ஒருவேளை, கல்யாண விஷயமாக உன் மனது மாறியிருக்கலாம் என்று எனக்குத் தோன்றிற்று.... அடுத்த வீட்டார் மற்ற வரன் பேச்சை புதன் வரை ஒத்திப்போட ஒப்புக் கொண்டார்கள்... அகல்யா நம் வீட்டில் வாழ்க்கைப்பட வேண்டும்னு எனக்கு நெடுநாளாக ஆசை. நீதான் குரங்கு புத்தி படைத்தவன்!...உன் அபிப்பிராயத்தைத் தந்தி மூலம் தெரிவிக்கவும். ‘ட்ரங்க்’ டெலிஃபோன் செய்யாதே. உனக்கு டெலிஃபோனில் பேசவே தெரியவில்லை....”
என் குடும்பத்தாரைப் பற்றி சற்று முன் நானா குறை சொன்னேன்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
‘உங்க கருத்தோட முரண்படுறேன், ஆனா…”
-
அன்புள்ள ஜெ அண்மையில் ஒரு கடிதத்தில் உறுதியான கருத்துக்கள்
கொண்டிருக்கக்கூடாது என்று சொல்லியிருந்தீர்கள். இளம்வாசகர்கள் உடனடியாக
உறுதியான கருத்துக்கள் கொண்...
7 hours ago
12 comments:
// //உன்னை இரவு பன்னிரண்டு மணிக்கு சௌரங்கியில் பார்த்தேன் என்று "கோண்டு" கடிதாசு எழுதியிருக்கிறான்... அங்கு கண்டிக்க ஆளில்லை போலிருக்கு!... //
அட அது நீங்கதானா? போட்டுக்குடுக்குறது கெட்ட பழக்கமில்லையா?
‘ட்ரங்க்’ டெலிஃபோன் செய்யாதே. உனக்கு டெலிஃபோனில் பேசவே தெரியவில்லை....”//
இதுதான் உச்சக்கட்ட காமெடி!!
Romba nalla iruku
அருள்,
அது கோண்டு டோண்டு இல்லை. எனக்கு தெரிந்து டோண்டு கல்கத்தா பக்கம் தலைவேயத்துகூட படுத்ததில்லை.
கதை மிக அருமை.
ஈஸ்வரன்
கதை நல்லா இருக்கு.அதே காலத்தை சேர்ந்த எஸ்.வி.வி. என்பவர் இந்த வகையில் நிறைய ஹாஸ்ய கதைகள் எழுதுவார்.
ரசித்தேன்.
கதை மிக அருமை. அதிலும் கடைசி பத்தி க்ளைமாக்ஸ் நல்லாவே இருந்தது.
பின் வரும் கதைகள் படித்தது நினைவிருக்கிறதா?
1. கட்டப்பிரபா அணைக்கட்டுக்குக் காதலியோடு வந்தவன்
2. இரவில் வாங்கிய பால்
3. குட்டி டாக்டர்
4. வீட்டில் மணி அரிசி இல்லை
@அனானி
நீங்கள் சொன்ன கதைகள் திருமலை அவர்கள் எழுதியனவையா? என் கைவசம் உள்ள புத்தகத்தில் அவை இல்லை.
“கட்டப்பிரபா அணைக்கட்டுக்குக் காதலியோடு வந்தவன்” என்னும் க தை பற்றி:
காதலியைக் கொலை செய்யும் நோக்குடன் அணைக்கட்டின் மேலேயிருந்து அவளைத் தள்ளிவிட, அவள் நீச்சல் தெரிந்தவளாதலால் நீந்தி வந்து, தள்ளுவதற்கு முன்னால் தனக்கு நீச்சல் தெரியுமா என்பதைக் கூட கேட்காத அவனது அறியாமையை சாடி விட்டுச் செல்கிறாளே, அந்தக் கதையையா கூறுகிறீர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
இல்லை. வெவ்வேறு ஆசிரியர்கள். முதல் மூன்றும் குமுதம், கடைசி மட்டும் விகடன்.
கட்டப்பிரபா... கிரைம் கதை என்று மட்டுமே நினைவில் உள்ளது. கதை மறந்துவிட்டது. சிரிப்புக்கதை அல்ல.
இரவில் வாங்கிய... பேய்க்கதை. அகாலத்தில் பால்காரன் குரல். போய் வாங்கிவந்த பெண் அது இரத்தமாக இருக்கக் கான்கிறாள்.
குட்டி டாக்டர் குரூரமான வக்கிரமான கதை. ஒரு சிறுவனை வருங்கால டாக்டர் என்று கூறி வளர்க்கிறார்கள். இப்போதே குட்டி டாக்டர் என்று கொஞ்சுகிறார்கள். ஒரு நாள் வீட்டில் யாரும் இல்லாதபோது தங்கச்சிப் பாப்பா அழ, வயிற்று வலியால் அவள் அழுவதாக எண்ணிய குட்டி டாக்டர், ஆபரேஷன் செய்யக் கத்தியை எடுத்து... இதற்குமேல் சொல்ல தைரியம் இல்லை.
வீட்டில் மணி அரிசி... வறுமையை உருக்கமாகக் காட்டும் சோகக் கதை.
ஞாபக சக்தியில் நீங்கள் யானை என்பதால் இவற்றைக் குறிப்பிட்டேன்!
கட்டப்பிரபா கதை நான் சொன்னதுதான் என நினைக்கிறேன். அது நகைச்சுவை கதை அல்ல. எண்டிங்தான் அப்படி தோற்றம் தருகிறது.
குட்டி டாக்டர் கதை நினைவுக்கு வந்து விட்டது. சுஜாதாவின் கதை என ஞாபகம். மீதிக்கதைகள் பற்றித் தெரியவில்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி! கண்டிப்பாக இவை எதுவும் சுஜாதா எழுதியவை அல்ல! சர்வ நிச்சயம்.
டோண்டு, சிறுகதையை ரசித்தேன். அதைப் பற்றி ஒரு பதிவும் எழுதிவிட்டேன் - http://siliconshelf.wordpress.com/2010/09/23/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88/
Post a Comment