5/22/2006

ஒரு வழிப் பாதையின் மகிழ்ச்சிப் பக்கம்

ஒரு வருடம் முன்னால் நான் போட்ட 3 பதிவுகளை ஒன்றாக்கி இங்கு தந்துள்ளேன்.

"On the sunny side of a one way street" என்னும் தலைப்பில் உள்ள இந்த ஆங்கிலப் புத்தகத்தில் இருக்கும் கவித்துவத்தைத் தமிழில் கூறும் ஒரு முயற்சியாக இதைக் கருதலாம்.

அமெரிக்காவின் இண்டியானா மாநிலத்தில் பிறந்தவர் வில்லியம் இ வில்சன். (William E. Wilson Junior) பிப்ரவரி 12, 1906-ல் பிறந்தவர். லிங்கனுடைய பிறந்த நாளும் இவர் பிறந்த நாளும் ஒன்றாக வருவதால் முன்னவர் மேல் பின்னவருக்கு ஒரு அபிமானம். அவரைப் பற்றிப் புத்தகங்களும் எழுதியுள்ளார்.

இப்போது நான் கூறிய புத்தகத்துக்கு வருகிறேன். தான் 15, 16 வயது வரை அனுபவித்த விஷயங்களை இதில் அவர் கூறுகிறார். அவர், அவருடைய அக்கா, மற்றும் அப்பா, அம்மா ஆகிய நால்வர் அடங்கியது அவரது பாசமிக்கக் குடும்பம்.

அவர் நினைவுகளை என் ஞாபகத்துக்கு எட்டிய வரை தமிழில் தர முயற்ச்சிக்கிறேன். இனிமேல் வரும் பத்திகளில் வரும் 'நான்' அவர்தான்.

என்னுடைய தந்தை மிகைபடுத்திப் பேசுவதில் வல்லவர். எங்கள் விட்டில் ஒரு பெரிய தெர்மாமீட்டர் இருந்தது அதில் அவர் பார்த்து விட்டு என் அன்னையிடம் "இன்று 85 டிகிரி (Fahrenheit) வெப்பம்" என்றுக் கூறி விட்டுப் போவார். என் அன்னை அவர் தரப்பில் பார்த்து விட்டு "இல்லை வில்லியம், இன்று வெப்பம் 90 டிக்ரீ" என்றுக் கூறுவார். அவர்கள் ரீடிங்குகள் எப்போதும் ஒத்துப் போனதேயில்லை.

ஒரு நாள் இம்மாதிரியான தருணத்தில் நான் பார்த்த போது, வெப்பம் 88 டிக்ரீ என்று காண்பித்தது. முதலில் எனக்கு ஒன்றும் புரியவில்லை. பிறகுதான் எனக்குக் காரணம் புலப்பட்டது. என் தந்தையின் உயரம் 6 அடி 2 அங்குலம். என் தாயின் உயரம் 5 அடி 4 அங்குலம். ஆனால் என்னுடைய உயரம் 5 அடி 8 அங்குலம். என் கண்கள் தெர்மாமீட்டர் ரீடிங்கின் மட்டத்தில் இருந்தது. ஆகவே நான் பார்த்ததுதான் சரியான அளவு. இது ஒரு தோற்றப் பிழை (parallellaxe error) கணக்கில் வரும்.

என் தந்தையிடம் உடனே இதை விவரிக்க முயன்றேன். அவரோ, " அதனால்தான் உன் தாய் குறிப்பிட்ட அளவு சரியில்லை என்பது எனக்கு முதலிலேயே தெரியும்" என்றுக் கூறினார்.

நான் உடனே அவரிடம் "அது உங்களுக்கும் அவ்வாறே பொருந்தும்" என்றுக் கூறினேன். அவர் கடைசி வரை ஒத்துக் கொள்ளவே இல்லை. உடனே அவருக்கு ஏதோ 'வெளி வேலை' ஞாபகத்துக்கு வர, சடுதியில் இடத்தைக் காலி செய்தர்ர்.

நான் திகைப்புடன் அம்மாவைப் பார்க்க, அவர் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, அட அசடே என்றுக் கூறிக் கட்டியணைத்து முத்தமிட முயன்றார். நான் என்னக் குழந்தையா? 12 வயது ஆகவில்லையா? என்ற என்ணத்தில் அவரை அவ்வாறு செய்ய விடவில்லை.

அம்மா சொன்னார். உன் அப்பாவுக்கு நீ கூறியது உண்மை என்றுத் தெரியும். ஆனால் அவர் இன்னும் குழந்தைப் போன்றவர்தான். ஆகவே நீ அதைக் கண்டுக் கொள்ளாதே".

அப்போது எனக்குப் புரியவில்லை. எனக்குப் புரியும் வயது வந்தப் போது இந்த நிகழ்ச்சி என் நினவில் இல்லை. இப்போது இந்த நிகழ்ச்சி நினைவுக்கு வரும்போது அப்பா அம்மா இருவரும் உயிரோடு இல்லை.

புத்தகத்தின் இன்னொரு பகுதி:

நான் சிறுவனாக இருந்தப் போது டிஃப்தீரியா வந்து செத்துப் பிழைத்தேன். ஆனால் என் அக்காவுக்கு நடந்ததைப் பார்த்தால் எனக்கு வந்தது ஒன்றுமே இல்லை என்றுதான் கூற வேண்டும்.

அவள் மெதுவாகக் குருடாகிக் கொண்டிருந்தாள்!

முதலில் எங்கள் யாருக்கும் அவள் பிரச்சினை புரியவில்லை. அவள் மார்க்குகள் குறைய ஆரம்பித்தன. என் தாய் தந்தையர் அவளை மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பிறகுதான் அவள் முழுக்கவும் பார்வை இழக்கப் போகிறாள் என்ற உண்மை அவர்களுக்குத் தெரிந்தது.

அப்போது எனக்கு 12 - 13 வயது இருக்கும். அவளுக்குப் 15 வயது.

மருத்துவரைப் பார்த்தப் பிறகு அவள் தனியே தன்னறையில் இருந்துக் கொண்டு, கண்ணை மூடிக்கொண்டு, கையை முன்னால் பரப்பிக் கொண்டு மெதுவாக நடந்துக் கொண்டிருந்தாள்.

ஒரு 12 வயதுப் பையன் தன்னுடைய அக்காவின் மேல் வைத்திருக்கும் ஒரு மையமானப் பிரியம் எனக்கும் உண்டு. அவள் ஏன் அவ்வாறு செய்கிறாள் என்று எனக்குப் புரியவில்லை. ஒரு எரிச்சல் கலந்தப் பொறுமையுடன் அவளிடம் "என்ன செய்யறே?" என்றுக் கேட்டேன். அவள் அதற்கு "குருடியாக இருக்கப் பயிற்சி செய்றேன்" என்றுக் கூறினாள்.

இப்போது தான் இவ்வரிகளை எழுதும்போது ஏதாவது அவளிடம் ஆறுதலாகக் கூறினேன் என்று சொல்ல எனக்கு ஆசையாக இருக்கிறது. ஆனால் என்ன செய்வது. ஏதோ கேலியாக அவளிடம் பேசிவிட்டு அவ்விடத்திலிருந்து ஓடிப் போனதுதான் நான் செய்தது.

அவள் முழுக் குருடியானாள். அவள் அதற்கு மனத்தளவில் தயாரானாள். அவள் கண்கள் அழகானவை. பார்வை இல்லை என்பது புதிதாகப் பார்ப்பவர்களுக்கு முதலில் புரியாது. வீட்டின் எல்லா மூலைகளும் அவளுக்கு அத்துப்படி. உடல் வலிமை அதிகம் இல்லாதவள். ஆகவே அவளால் தன்னை வழிநடத்திச் செல்ல ஒரு பார்க்கும் நாயைக் கையாள முடியாமல் போனது.

என் தந்தை எங்கு நாங்கள் வெளியே சென்றாலும் அவளுக்கு தெருக்க்காட்சிகளைப் பொறுமையாக விளக்குவார். எனக்குத்தான் மிகவும் போர் அடிக்கும்.

அவர் சளைக்காமல் பொறுமையாக அவளுக்கு எங்கள் ஊரில் (ஈவான்ஸ்வில், இந்தியானா மாநிலம்) எல்லா தெருக்கள், கட்டிடங்கள், கடைகள் முதலியவற்றை விளக்குவார். இதன் பலன் பின்னால் தெரிந்தது.

1944-ல் எங்கள் அன்னை மறைந்தார். அடுத்த 4 தனிமையான வருடங்களை ஒரு வழியாகக் கழித்து எங்கள் தந்தையும் தன் அருமை மனைவியைப் பின் தொடர்ந்தார்.

இந்த 4 வருடங்களில் என் தந்தைக்கு மறதி அதிகம் வர ஆரம்பித்தது. தெருவில் போய்க் கொண்டே இருப்பார். திடீரென்று வீட்டுக்குத் திரும்பும் வழி மறந்து விடும். ஊரில் எல்லோருக்கும் அவரைத் தெரியும். இருந்தாலும் யாரையும் போய் உதவி கேட்க அவர் தன்மானம் இடம் கொடுக்காது.

ஆகவே அருகில் உள்ள ஏதாவத் டெலிஃபோன் பூத்துக்கு வந்து வீட்டுக்கு ஃபோன் செய்து என் அக்காவைக் கூப்பிடுவார்.
"வீட்டிற்கு வரும் வழி மறுபடியும் மறந்து விட்டேன் பெண்ணே. நான் இப்போது கோல்ட்ஷ்டைன் மளிகைக் கடை வாசலில் இருக்கிறேன்" என்பார்.
அக்கா உடனே கூறுவாள்: "கவலைப் படாதீங்கப்பா. அந்த மளிகைகடையை அடுத்தக் கடை ஜானின் தையற்கடை. அதை அடுத்து ஒரு சந்து. அதில் நேரே சென்றால் அது ஒரு பெரியத் தெருவில் முடியும். வலப் பக்கம் திரும்பி வந்தால் நான்காவது கட்டிடம்தான் நம் வீடு."

இவ்வாறாக என் தந்தை முன்பு பொறுமையுடன் செய்தது அவருக்குச் சாதகமாகவே முடிந்தது.

புத்தகத்தின் வேறொரு பாகம்:

எனக்கு பதினாறு வயது நெருங்கும்போது என் தந்தை உள்ளூர் தேர்தலில் வேட்பாளராக நின்றார். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி. நான் பள்ளியிலிருந்து நேராக என் தந்தையின் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தேன். நான் உள்ளே நுழையும்போது என்னைத் தாண்டி அதுவரை நான் பார்த்திராத நால்வர் வெளியே சென்றனர். என்னுடைய ஹல்லோவை அவர்கள் சட்டை செய்யாமல் விர்ரென்று அந்த இடத்தை விட்டு அகன்றனர். நான் உள்ளே சென்று "யார் அப்பா அவர்கள்?" என்றுக் கேட்டேன். எனக்கு அவரிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை. நான் கேட்டதை கவனிக்காதது போல அவர் நான் அன்று செய்ய வேண்டிய வேலைகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் அவரை ஒன்றும் கேட்கவில்லை.
தேர்தல் நெருங்க, நெருங்க ஏதோ சரியாக இல்லாதது போன்ற உணர்வு எனக்கு வர ஆரம்பித்தது. அது வரை எங்களை கண்டதும் ஆர்வமாக வரவேற்றுப் பேசும் வாக்காளர்கள் எங்கள் பார்வையைத் தவிர்க்க ஆரம்பித்தனர். முதலில் இதை கவனிக்காத நான் மெதுவாக நிலைமையின் தீவிரத்தை உணர ஆரம்பித்தேன். தேர்தலுக்கு முந்தைய நாள் எல்லா வேலைகளையும் முடித்தப் பின்னால் நான் என் தந்தையுடன் காரின் முன்ஸீட்டில் அவருடன் அமர்ந்துக் கொள்ள அவர் காரை மெதுவாக வீட்டை நோக்கிச் செலுத்த ஆரம்பித்தார்.
அவர் ஒன்றும் பேசாமல் வண்டியை ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று என்னை நோக்கி அவர் கேட்டார்:"இந்த தேர்தலைப் பற்றி என்ன நினைக்கிறாய்?"
நான் கூறினேன்: "நிச்சயம் வெற்றி நமக்குத்தான். இந்த ஊரில் உங்களுக்கு நல்லச் செல்வாக்காயிற்றே".
அவர்: "இல்லை வில்லியம், இம்முறை தோல்விதான்"
நான்: "ஏன் அப்பா?"
அவர்: "அன்றொரு நாள் நான்கு பேர் என் தேர்தல் அலுவலகத்துக்கு வந்தனர். நான் அவர்கள் கட்சி சார்பில் நிற்க வேண்டும் என்றுக் கூறினர். அவர்கள் கூ க்ளுக்ஸ் கான் (Ku Klux Khan) என்றத் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் நீக்ரோக்களுக்கெதிராய் வன்முறை செயல்கள் நடத்துபவர்கள். நான் மறுத்து விட்டேன். அவர்களுக்கு இங்கு நல்லச் செல்வாக்கு உண்டு. என்னை ஜெயிக்க விட மாட்டார்கள்"

எனக்கு என்ன கூறுவது என்றே புரியவில்லை.

என் தந்தை தனக்குத் தானே பேசிக் கொள்ள ஆரம்பித்தார். "இந்த நாட்டில் என்ன நடக்கிறது? ஆபிரஹாம் லிங்கன் போன்ற மாமனிதர்கள் கட்டிக் காத்த இந்த நாட்டின் நிலை இப்படியா ஆக வெண்டும்?" என்றுக் கத்திக் கொண்டே தன் கார் முன் கண்ணாடியை ஒரு குத்து விட்டார். "சிலீர்" என்ற சப்தத்துடன் கண்ணாடி உடைந்து அதில் "ட" வடிவில் ஒரு ஓட்டை விழுந்தது.திடீரென்று என் தந்தையின் ஆவேசம் அடங்கியது. "என்ன இவ்வாறு ஆகி விட்டதே" என்று ஒரு குழந்தையைப் போல் என்னை நோக்கிக் கேட்டார்.

நேரே டாக்டர் வீட்டுக்குப் போய் ஒரு தையல் போட்டுக் கொண்டு வீடு போய் சேர்ந்தோம். அதற்கு முன்னால் அவர் என்னிடம் தேர்தல் பற்றி உன் அம்மாவிடம் எதுவும் கூறாதே" என்று என்னைக் கேட்டுக் கொண்டார். "நீயே ஏதாவது கதை கூறிச் சமாளி" என்றும் கூறினார். என்னுடையக் கதை கட்டும் திறமையில் அவ்வளவு நம்பிக்கை அவருக்கு. முக்கியமாகக் கார் கண்ணாடி உடைந்ததற்கு அம்மா என்ன கூறுவாரோ என்று வேறு அவருக்குப் பயம்.
வீட்டுக்குச் சென்றோம். அப்பாவின் கையில் கட்டைப் பார்த்ததும் அம்மாவுக்குக் கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. இந்த களேபரத்தில் திட்டவும் மறந்துப் போனார்.

"என்ன வில்லியம் என்ன நடந்தது" என்று அவர் தலையை கோதியபடி கேட்டார். நான் முந்திக் கொண்டு "ஒன்றும் இல்லை அம்மா, நம் ஊர் கால்பந்தாட்டக் குழு நேற்று ஒரு கோல் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்கள். அதைப் பற்றிப் பேசிக் கொண்டே அப்பா வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார். திடீரென்று நம்மூர் குழுவின் முன்னணி வீரர் எவ்வாறு தாவி பந்தை உதை விட வேண்டும் என்றுக் காண்பிக்கப் போக, அவர் கையால் முன் கண்ணாடியைக் குத்தினார்" என்று உளறினேன்.

"அப்பா, பிள்ளை இருவருக்கும் வேறு வேலையில்லை" என்று எங்களை மொத்தமாகத் திட்டி விட்டு அம்மா அடுக்களைக்குள் சென்றார். என் தந்தை என்னை நன்றியுடன் பார்த்தார். அத்தருணத்தில் நான் பையனிலிருந்து ஒரு வளர்ந்த ஆளாக மாறியதை உணர்ந்தேன். தேர்தல்? அதில் எதிர்ப்பார்த்தத் தோல்விதான். ஆனாலும் அவ்வளவு அதிர்ச்சியைத் தரவில்லை.

இப்போது பேசுவது டோண்டு ராகவன்.

வில்ஸன் பிறந்த நாள் 12 பிப்ரவரி, 1906. ஏற்கனவே கூறியது போல லிங்கனுக்கும் அவருக்கும் ஒரே நாளில் தன் பிறந்த தினம். நான் இப்புத்தகத்தைப் படித்து முடித்தது 2, பிப்ரவரி, 1968. அவருக்குப் பிறந்த தின வாழ்த்து அனுப்ப எண்ணினேன். அமெரிக்க நூலகத்துக்குச் சென்று "ஹூ ஈஸ் ஹூ இன் அமெரிக்கா"-விலிருந்து அவர் முகவரியைப் பெற்றேன். 65 பைசாவுக்கு ஒரு ஏரோக்ராம் வாங்கி அவருக்கு வாழ்த்து அனுப்பினேன். 12-ஆம் தேதிக்குள் போய் சேர்ந்து விடும் என்றுக் கணக்குப் போட்டேன். அது என்னடாவென்றால் 8-ஆம் தேதியே போய் சேர்ந்து விட்டது. அவர் உடனடியாகப் போட்ட பதில் எனக்கு 12-ஆம் தேதி வந்தது.

என் வாழ்த்துக்கு நன்றி தெரிவித்து எழுதியிருந்தார். தன் பிறந்த தினத்தன்றுத் தன் அக்கா வீட்டிற்கு செல்லப் போவதாகவும், அவரிடம் என் கடிதத்தைப் பற்றிக் கூறப்போவதாகவும் எழுதியிருந்தார். இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது.

அவர் எனக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்: " என் பிறந்ததினத்துக்கு ஈவான்ஸ்வில் செல்கிறேன். அங்கு வசிக்கும் என் அக்காவிடம் உங்கள் கடிதத்தைப் பற்றிக் கூறுவேன். அவள் மிகவும் மகிழ்ச்சியடைவாள்."

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

Muse (# 01429798200730556938) said...

>>>> இந்த அனுபவம் நான் பிற்காலங்களில் பல எழுத்தாளர்களுக்குக் கடிதம் எழுதுவதற்கு முன்னோடியாக அமைந்தது. <<<<

நான் உங்கள் பதிவுகளில் காமெண்ட்கள் எழுதுவது போல !! :-)

தாங்கள் எழுதிய ஸ்ரீ வில்ஸனின் இந்த வாழ்க்கைப் பகுதிகளை எங்கோ படித்து மனம் நெகிழ்ந்த ஞாபகம். ரீடர்ஸ் டைஜெஸ்டில் வந்திருக்கிறதா?

dondu(#11168674346665545885) said...

ரொம்ப சூட்சுமமாகத்தான் பர்த்திருக்கிறீர்கள். இது என்னுடைய மூன்று பழைய பதிவுகளை ஒன்றாக்கி நான் தந்தது. மீள் பதிவு என்று போட விட்டு விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

கதை நல்லா இருக்கு.ஏன் உங்கள் ஆர்வம் திடீரென்று 19ம் நூற்றாண்டு ஆங்கில நாவல்கள் மீது திரும்பிவிட்டது?படகில் மூவர்,இது,ரீடர்ஸ் டைஜஸ்ட் என எழுத ஆரம்பித்து விட்டீர்களே?

அன்புடன்
செல்வன்

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் செல்வன் அவர்களே. இப்பதிவில் உள்ள புத்தகம் நாவல் அல்ல. நிஜமாக நடந்தது.

படகில் மூவர் 19-ஆம் நூற்றாண்டு. மீதி விஷயங்கள் இருபதாம் நூற்றாண்டு. என்னதான் இருந்தாலும் ஓல்ட் ஈஸ் கோல்ட் இல்லையா?

அதிலும் படகில் மூவர் இப்போது படித்தாலும் சிரிப்பை வரவழைக்குமே. என்ன, இக்காலத்தில் படிப்பது குறைந்து விட்டது அவ்வளவுதான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

இப்புத்தகத்தை நான் நினைவில் வைத்திருப்பதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

நான் 22 வயது சிறுவனாக இந்தப் புத்தகத்தை சமீபத்தில் 1968-ல் படித்த போது அப்படியே உறைந்து போனேன். எனக்கும் ஒரே ஒரு அக்காதான். அண்ணா, தம்பி, தங்கை என்று யாவருமே கிடையாது. வில்சனின் அப்பா அம்மாவை என் தந்தை, தாயுடன் ஒப்பிட்டு, வில்ஸனின் அக்காவை என் அக்காவுடன் நிறுத்தி (நல்ல வேளையாக அவள் கண் பார்வைக்கு ஒன்றும் குறை இல்லை) பார்க்கும் போது நான் யாருடன் என்னை ஒப்பிட்டுக் கொண்டேன் என நினைக்கிறீர்கள்?

அதிலும் சிறுவன் வில்ஸனுக்கு சிறுவன் டோண்டு ராகவனுக்கு வரும் அதே சந்தேகங்களே வந்தன. என் அன்னை 1960-ல் இறந்ததும் என் தந்தையும் - நாங்கள் இருந்தாலும் - மனைவியில்லாத தனிமையான ஆண்டுகளை கழித்தார்.

இதெல்லாம் போதாதா என்னை ஆட்கொள்ள?

எனக்கு ஒரே வருத்தம் என்னவென்றால் இப்புத்தகம் இப்போது அச்சில் இல்லை, ஆகவே வாங்க முடியவில்லை. அமெரிக்க நூலகத்தில் அப்போது வாங்கிப் படித்தது. இப்போது அங்கும் அது இல்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது