நான் 1963-ல் முதல் ஆண்டில் இக்கல்லூரியில் சேர்ந்தேன். அப்போது தமிழ் நாட்டில் (அண்ணாமலை சர்வகலாசாலை நீங்கலாக) மொத்தம் 6 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே. ஆறு கல்லூரிகளுக்கும் ஒரே நேர்காணல்தான். பி.யு.சி.யில் வாங்கிய மதிப்பெண்களின் அடிப்படையில் நேர்காணலுக்கு கூப்பிடுவார்கள். மொத்தம் 1500 மாணவர்கள் ஆறு கல்லூரிகளுக்கு என்றுதான் ஞாபகம். நேர்காணலில் கிடைத்த மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் விரும்பித் தேர்ந்தெடுத்த கல்லூரி கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம். எனக்கு கிடைத்தது. நேர்காணலில் மூன்று மாணவர்கள் அடங்கிய குழுவை பேட்டி கண்டனர். வினாடி வினா மாதிரி இருந்தது.
நாங்கள் மூன்று விண்ணப்பதாரர்கள் சேர்ந்த குழு மாதிரி, நேர்காணலும் மூன்று கட்டங்களில் மூன்று நிபுணர்களால் நடத்தப்பட்டது. முதல் நிலையில் நேர்காணலை நடத்தியவர் ப்ரொஃபசர் ஸ்ரீனிவாசன் அவர்கள். அவர் கணக்கு சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டார். அதற்கு அடுத்து வந்தவர் திரு. மணிசுந்தரம் அவர்கள். இவர்தான் 1964-ல் ஆரம்பிக்கப்பட்ட திருச்சி ஆர்.இ.சி.க்கு முதல்வராக வரப்போகிறவர். மனிதன் சிரித்த முகமாக இருந்து கேள்விகள் கேட்டார். நாங்கள் மூவரில் ஒருவன் பெயர் எம்.கே. காந்தி. அவனைத் தான் முதல் கேள்வியைக் கேட்டார் மணிசுந்தரம் அவர்கள், "Mr. M.K. Gandhi, why were you so named?" என்று. அவன் நெர்வஸாகி தன் தாத்தாவுக்கு காந்தி பிடிக்கும் என்று உளற ஆரம்பித்தான். பிறகு பொது அறிவு பற்றி கேள்விகள் கேட்டார். அக்கட்டம் முடிந்ததும் நான் அவனைக் கேட்டபோது அவன் அழாக்குறையாக தான் அக்டோபர் இரண்டில் பிறந்ததைக் கூற, நாங்கள் இருவரும் "அட அசடே, இதை சொல்லித் தொலைப்பதுதானே என்று கேட்க தன் தந்தை பிறந்த தேதியை ஸ்கூலில் மாற்றிக் கொடுத்து விட்டதாகவும், இப்போது அதைக் கூறியிருந்தால் மணிசுந்தரம் அவர்கள் ரிகார்டைப் பார்த்து உடனே கண்டு கொண்டிருப்பார்" என்றும் கூறினான். விவரமான பையன்தான்.
கடைசியாக எங்களை நேர்கண்டது திரு முத்தையன் அவர்கள். அவர் தொழில் நுட்பக் கேள்விகள் கேட்டார். எல்லாம் முடிந்ததும் என்னை மட்டும் ஒரு கேள்வி கேட்டார். அதை பற்றி நான் இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
அக்காலக் கட்டத்தில் பார்ப்பனர்களுக்கு சீட்டுகள் கொடுக்க மாட்டார்கள் என்றெல்லாம் பயமுறுத்தினார்கள். ஆனால் அதெல்லாம் மிகைபடுத்தப்பட்டக் கருத்துக்களே. உதாரணத்துக்கு கிண்டி பொறியியல் கல்லூரியில் அவ்வருடம் 280 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 150க்கும் மேல் பார்ப்பனர்கள்தான். இதை நான் இங்கு குறிப்பிடுவதன் ஒரே காரணம், நான் பார்த்தவரை பார்ப்பனவிரோத நடவடிக்கை ஏதுமில்லை என்பதுதான். இதன் க்ரெடிட் அப்போதைய தமிழக அரசுக்கே போக வேண்டும்.
அக்கால செலக்ஷன் முறை இக்காலத்திய மாணவர்களுக்கு மிகப் புதிதாக இருக்கும் என்பதற்காகவே இங்கு விலாவாரியாகக் குறிப்பிட்டேன்.
நான் படித்தது 5-வருட இண்டெக்ரேடட் கோர்ஸ். இப்போதுள்ளது போல செமஸ்டர் முறை இல்லை. ஜூன் மத்தியில் ஆரம்பிக்கும் வகுப்புகள், மார்ச்சில் முடிவடைந்து, ஒரு மாத ஸ்டடி விடுமுறைக்குப் பிறகு ஏப்ரலில் பரீட்சைகள் நடக்கும். வகுப்பறை வேலைகளுக்காக ரொம்ப மதிப்பெண்கள் (செஷனல் மதிப்பெண்கள்) எல்லாம் இல்லை. இப்போது பாதிக்கு பாதி என்று கேள்விப்படுகிறேன். அப்போதெல்லாம் 10 அல்லது 20 மார்க்குகள் இருந்தால் அதிகம். அதுவும் எல்லா பாடங்களுக்கும் இல்லை. அதனால் என்னவாயிற்றென்றால், பல மாணவர்கள் வருடம் பூரா ஊர் சுற்றிவிட்டு ஸ்டடி லீவில் அவதிப்படுவர். ஊர் சுற்றிய சமயம் நான் நண்பர்களுக்கு கதையெல்லாம் சொல்லி படுத்துவேன். அக்கதைகளில் ஒன்று பற்றியும் பதிவு போட்டுள்ளேன். அப்போது பிரசவ வைராக்யம் போல அடுத்த ஆண்டிலிருந்தாவது ஒழுங்காகப் படிக்க வேண்டும் என்றெல்லாம் முடிவெடுப்போம். ஆனால் நிறைவேற்ற மாட்டோம்.
இப்போது வகுப்புகளில் அசைன்மெண்ட் கொடுத்தே கொன்று விடுவதாகக் கேள்விப்படுகிறேன். ஆனால் இதில் சௌகரியம் என்னவென்றால், வகுப்புகளில் சின்ஸியராக இருப்பவர்கள் பாஸ் ஆவது விளையாட்டு போல ஆகிவிடும். ஆனால் எங்கள் முறையிலோ ஒவ்வொரு பரீட்சையும் தொந்திரவுதான்.
இன்னொரு சள்ளை பிடித்த விஷயம் அடுத்த வகுப்புக்கு போவதற்கான விதி முறைகள். முதலாம் ஆண்டு 9 பேப்பர்கள், அதில் ஒன்று மட்டும் பெயிலாகலாம். அடுத்த வகுப்புக்கு செல்லலாம். இரண்டு பெயிலானால் ஒரு வருடம் வீட்டில் உட்கார வேண்டும். இதில் சில கிளை விதிகள் உண்டு. கணக்கு - IA & IB என்று உண்டு. அதில் இரண்டிலும் பெயிலானாலும் ஒரு சப்ஜக்டாகத்தான் கருதப்படும். இரண்டாம் வருட வகுப்புக்கு செல்லலாம். அதே போல பிஸிக்ஸ் மற்றும் பிஸிக்ஸ் லேப் ஒரு ஜோடி, கெமிஸ்ட்ரி மற்றும் கெமிஸ்ட்ரி லேப் இன்னொரு ஜோடி. பிஸிக்ஸ் லேப் மற்றும் கெமிஸ்ட்ரி லேப்பில் ஃபெயிலானால் சங்குதான். ஒரு வருடம் காலி. இன்னொரு கொடுமை என்னவென்றால் அர்ரியர்ஸ்களை அடுத்த வருடம் முடிவதற்குள் க்ளியர் செய்ய வேண்டும். ஒரு சப்ஜெக்டில் அடுத்த வருடம் கண்டின்யூ செய்பவர்கள் அதை செப்டம்பரிலேயே முடிக்க வேண்டும். இல்லாவிட்டால் வீட்டிற்கு அனுப்பப்படுவர். முதலாம் ஆண்டை அடுத்த வருடத்துக்குள் முடிக்கவில்லையென்றால் கோர்ஸை விட்டே அனுப்பப்படுவர்.
இரண்டாம் வருடம் பத்து பேப்பர்கள். அதில் ஒன்று காலி என்றாலும் ஒரு வருடம் வீட்டில் உட்கார வேண்டும். முதல் வருடம் அத்தனை தேர்விலும் பாஸான நான் இரண்டாம் வருடத்தில் மூன்று சப்ஜெக்டில் காலி. முக்கியமாக கணக்கில். அது எனக்கு பெரிய ஷாக். ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்த 1965-ல் பலரது வாழ்க்கை போராட்டத்தால் பாதிக்கப் பட்டது. அப்போது எடுத்த ஒரு முடிவில் நான் பிரதிக்ஞை எடுத்து கோர்ஸ் முடியும் வரை சினிமா பார்க்காமலேயே இருந்ததைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவு போட்டுள்ளேன். மூன்றாம் வருடம் செல்வதற்கு முன்னால் இரண்டாம் வருட பேப்பர்ஸ் எல்லாம் க்ளியர் செய்ய வேண்டும். சிலர் இன்னொரு வருடம் கூட எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். நல்ல வேளையாக நான் அடுத்த செப்டம்பரிலேயே பாசாகி விட்டேன்.
முதல் இரண்டு வருடம் எல்லோருக்கும் பொது. மூன்றாம் வருடம் பிராஞ்சு அலாட் செய்வார்கள். எனக்கு எலெக்ட்ரிகல் பிரிவு கிடைத்தது. அப்போது இருந்த பிரிவுகள் சிவில், எலெக்ட்ரிகல், மெக்கானிகல், எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் மைனிங்க் அவ்வளவுதான். மூன்றாம் வருடம் 11 பேப்பர்கள். அத்தனையிலும் பெயிலானாலும் நான்காம் வருடம் செல்லலாம். ஆகவே 3-ஆம் வருடம் பல பேப்பர்களை பாக்கி வைப்பவர்கள் ஏராளம். என்ன ஆச்சரியம், அவ்வருடம் நான் ஃபுல் பாஸ். நான்காம் வருடம் 9 பேப்பர்கள், அவற்றில் இரண்டு பேப்பர்கள் வரை ஃபெயிலாகலாம், ஐந்தாம் வருடத்துக்கு அனுப்பப்படுவோம். அவ்வருடம் நான் இரண்டு பேப்பரில் ஃபெயில். ஐந்தாம் வருடம் செல்ல முடிந்தது. சாதாரணமாக மூன்றாம் வருடத்தின் அத்தனை பேப்பர்களும் க்ளியர் செய்திருந்தால்தான் இந்த இரண்டு பேப்பர் சலுகையை உபயோகிக்க இயலும். இதனால் என்ன ஆகும் சென்றால் சிலர் ஐந்து வருடங்களுக்கு பதில் 10 வருடங்கள் கூட எடுத்துக் கொள்வர்.
ஆனால் நான் நான்காம் வருடத் தேர்வுகளை எழுதின 1968-ல் ஒரு விஷயம் நடந்தது. 1969-ஆம் ஆண்டு செமஸ்டர் முறை படிப்புகளை அறிமுகப்படுத்தவிருந்தனர். ஆகவே இண்டெக்ரேடட் கோர்ஸ் மாணவர்கள் எல்லோரையும் முடிந்த அளவு சீக்கிரம் வெளியேற்ற நினைத்தனர். ஒருவரையும் நிறுத்தவில்லை. 1968-ல் முதல் வருட வகுப்புகளில் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் இரண்டாம் வருடம் கண்டின்யூ செய்தாலும் அத்தனை பேப்பர்களையும் இரண்டாம் வருடத்திற்குள் க்ளியர் செய்தாக வேண்டும் இல்லாவிட்டால் கோர்ஸை விட்டே அனுப்பப்படுவார்கள் என்றக் கட்டுப்பாட்டைத் தவிர்த்து மீதி எல்லா கட்டுப்பாட்டையும் நீக்கினர். ஆக, 1968-ல் சேர்ந்த மாணவர்கள் 1973-ல் கல்லூரியை விட்டு வெளியேற முடிந்தது. வீட்டில் பழையக் கட்டுப்பாடுகளினால் அமர்ந்திருந்த மாணவர்களுக்கு கடிதம் எழுதி கல்லூரிக்கு வரவழைத்தனர்.
என்னால் நான்காம் ஆண்டில் மிச்சம் வைத்திருந்த பேப்பர்களை செப்டம்பரில் க்ளியர் செய்ய முடிந்தது. கடைசி வருடப் பரீட்சை 1969-ஆம் வருடம் நடந்தது. இரண்டு சப்ஜெக்டில் காலி (மொத்தம் 10 பேப்பர்கள்). நான் அதுவரை முதல் வகுப்பு மார்க்குகள் எடுத்து வந்திருந்தாலும் இந்த மாதிரி கடைசி வருடப் பரீட்ட்சையில் கோட்டை விட்டதில் என் கனவுகள் பொய்த்தன. மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். என் தந்தை ஆறுதல் அளித்து என்னை அடுத்த தேர்வுகள் நவம்பர் 1969-ல் நடத்தப்படும் வரை மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் வகுப்பில் சேரச் சொன்னார். என் வாழ்க்கையே திசை மாறியது. இன்று வரை அதன் நல்ல பலனை அனுபவிக்கிறேன். இதைப் பற்றி ஏற்கனவே பதிவு போட்டு விட்டேன்.
என் ஆசிரியர்கள், ஆறு (5+1) வருட அனுபவங்கள் ஆகியவற்றைப் பற்றி அடுத்தப் பதிவுகளில் எழுதுவேன். என் கல்லூரி நினைவுகளை எழுதவும் எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த என்றென்றும் அன்புடன் பாலா அவ்ர்களுக்கும் நன்றி. அவர் எழுதிய திருவல்லிக்கேணி அனுபவங்கள்தான் நான் வலைப்பூ துவங்கவே என்னை ஊக்குவித்தன. ஆகவே டோண்டு ராகவனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பாலா அவர்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீனத் தமிழிலக்கியத்தை உலகுக்குக் கொண்டுசெல்லுதல்
-
என் நூல்கள் அமெரிக்கவெளியீடாக… அன்புள்ள ஜெ மொழிபெயர்ப்பாளர் கல்யாணராமன்
அவர்கள் தமிழிலக்கியத்தை உலக அரங்குக்குக் கொண்டுசெல்வதில்
மொழிபெயர்ப்பாளர்களுக்கும் ...
2 hours ago
15 comments:
Sir,
As AU alumni, I welcome this post.
Please put some photos if you have.
நீங்கள் எந்த வருடம் பாஸ் செய்தீர்கள் சிவபாலன் அவர்களே? இப்போதெல்லாம் நான்கு வருட கோர்ஸ்தானாமே, உண்மையா?
என்னைப் பொருத்தவரைக்கும் அண்ணா யூனிவெர்சிடி என்று கூறுவதை விட கிண்டி பொறியியல் கல்லூரி என்றுதான் கூற ஆசைப்படுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Yes Sir. I do agree. Even my prof. do like to tell as College of Engg Guindy.
Sir, I did my PG in AU (Sorry, I like this) 1996-1999.
It is now (UG) 4 years only. The B-Arch is 5 years sir.
ஆகவே நீங்கள் 77 அல்லது 78 ஆம் ஆண்டில் பிறந்திருக்க வேண்டும். பி.ஆர்க்.-ஆ படித்தீர்கள்? என் க்ளாஸ்மேட் டாக்டர் ஜயபிரகாஷ் நாராயணன் அந்த காலக் கட்டத்தில் சிவில் துறையில் ஆசிரியராக இருந்தார் என நினைக்கிறேன். இப்போது டீச்சர்ஸ் ட்ரெய்னிங் கல்லூரி டீன் (தற்சமயம் அக்கல்லூரிக்கு பேர் மாற்றி விட்டார்கள் என அவர் சொன்னார். அது தரமணியில் உள்ளது). அவர் உங்களுக்கு ஏதேனும் பாடம் எடுத்தாரா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சமீபத்தில் 1963 ல்!! என்று உங்க ஸ்டைலில் ஆரம்பிக்கவில்லையே? ஏன்?
ஷங்கர்.
"சமீபத்தில் 1963 ல்!! என்று உங்க ஸ்டைலில் ஆரம்பிக்கவில்லையே? ஏன்?"
எல்லாம் குறைந்த பட்சம் இம்மாதிரி ஒரு பின்னூட்டத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளத்தான், ஹி ஹி ஹி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//சமீபத்தில் 1963 ல்!! என்று உங்க ஸ்டைலில் ஆரம்பிக்கவில்லையே? ஏன்?//
அவர் எப்படிங்க சொல்வார்? அந்த வருடங்களிலெல்லாம் டோண்டு சார் பிறந்திருக்கவே மாட்டார்?
(கரெக்ட்தானே சார்?)
சமீபத்தில் 1963-ல் எனக்கு 17 வயதாக்கும். இப்போது? 25.
அன்புடன்,
டோண்டு ராகவன்
// எல்லாம் குறைந்த பட்சம் இம்மாதிரி ஒரு பின்னூட்டத்தை ஊர்ஜிதப் படுத்திக் கொள்ளத்தான் //
It shows you are still marketable!!
(Why I am telling this, my uncle always tells, " I am still marketable", whenever he cracks some one's comment.
Yes sir, I heard about Mr.Jeyaprakash Narayanan, but he did not take any class to me.
Mr.Shanthakumar was the dean, when I did my course.
சமீபத்தில் 1967-ல் ஸ்ட்ரக்ட்சுரல் இஞினியரிங்க் துறையில் சாந்தகுமார் என்ற பெயரில் ஒரு ஆசிரியர் இருந்தார். அவராக இருக்குமோ, நீங்கள் குறிப்பிடும் சாந்தகுமார்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
சமீபத்தில் 1967-ல் ???
Yes sir, the same Dr.Shantha Kumar.
நான் எலெக்ட்ரிகல் பிரிவில் இருந்தாலும் அப்ப்ளைட் மெகானிக்ஸ், க்ராஃபிக் ஸ்டாடிக்ஸ் மற்றும் ஸ்ட்ரெந்த் ஆஃப் மெடீரியல்ஸ் ஆகியவை எனக்கு பிடித்த பாடங்கள். அவை எடுக்கப்படும்போதே சுலபமாகப் புரிந்தன.
எனக்குப் பாடம் எடுத்தவர்கள் ஆரோக்கியசாமி மற்றும் குமரேசன்.
சாந்தகுமார் அவர்கள் அப்போது எஸ்.எம். லேப்பில் இருந்தார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி அமுதன் அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சற்று நீண்ட, நல்ல பதிவு !
//எனக்கு இன்ஸ்பிரேஷனாக இருந்த என்றென்றும் அன்புடன் பாலா அவ்ர்களுக்கும் நன்றி. அவர் எழுதிய திருவல்லிக்கேணி அனுபவங்கள்தான் நான் வலைப்பூ துவங்கவே என்னை ஊக்குவித்தன. ஆகவே டோண்டு ராகவனை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள் பாலா அவர்களை பிடித்துக் கொள்ளுங்கள்.
//
நன்றி !
அதெல்லாம் சரி.
எதுக்கு சார் என்னை மாட்டி விடறீங்க ???
பாலா அவர்களே,
நீங்கள் ஜி.சி.டி. பற்றி எழுதியதால் சி.யி.ஜி.யைப் பற்றி நான் எழுதது துணிந்தேன். அதற்கும் முன்னால் வலைப்பதிவும் உங்கள் வலைப்பூவைப் பார்த்துத்தான் ஆரம்பித்தேன்.
எந்தப் பிரச்சினைக்கும் மூல காரணம் யார் என்பது தெரிய வேண்டியது முக்கியம் இல்லையா? ஹி ஹி ஹி!
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment