5/10/2006

ஹிந்தி மொழி கற்றுக் கொண்ட கதை

சமீபத்தில் 1968 நவம்பரில் கடைசி வருடம் பொறியியல் வகுப்பில் இருந்த போது கல்விசார் சுற்றுப் பயணமாக பம்பாய் சென்றிருந்தோம். நாங்கள் நால்வர், பிரகாசம், டி.பி.ராமச்சந்திரன், சம்பத் மற்றும் நான் ஒரு குழுவாக விஹார் மற்றும் பவாய் ஏரிகளைக் காணலாம் என்று போனோம். கையில் மேப், வாயில் (என்) ஹிந்தி என்ற தைரியத்தில் கிளம்பி விட்டோம். வழி தெரியாத இடங்களில் நான் எதிர்ப்பட்டவர்களை விசாரிக்க (ஹிந்தியில்தான்) மெதுவாக முன்னேறினோம். என் நண்பர்கள் அவ்வப்போது என்னை சற்று வித்தியாசமாக நோக்க அவர்களிடம் காரணம் கேட்டேன். ராமசந்திரன் என்னிடம், "அதெல்லாம் ஒண்ணுமில்லேடா, நாம இவ்வளவு வருஷம் ஒண்ணா பழகியிருக்கோம், இப்போ உன்னை நீ ஹிந்தி பேசறச்செ பார்க்கும்போது ஏதோ புது ஆளை பார்க்கிறாப் போல இருக்குடா, அதனால்தான்.." என்று இழுத்தான்.

அதுதான் விஷயம். நமக்கு ஒரு மொழி தெரியவில்லையென்றால் அதைப் பேசுபவர்கள் நமக்கு அன்னியமாகவே தெரிவார்கள். ஆனால் என்னைப் பொருத்தவரை ஹிந்தி பேசப் பேசத்தான் நம் நாட்டின் நீள அகலங்கள் என் உணர்வுக்கு நன்றாகப் பட்டன. நான் ஏற்கனவே ஜெர்மன் பற்றி எழுதும்போது கூறியதுதான், அதாவது ஓர் அன்னிய மொழியைக் கற்கும்போது அம்மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் நமக்கு இனிமேல் அன்னியமில்லை. அவர்களின் சுக துக்கங்கள் நம்மையும் பாதிக்கின்றன.

என் முதல் ஹிந்தி ஆசிரியை என் தாயார்தான். அவர் எனக்கும் என் அக்காவுக்கும் ஹிந்தி மற்றும் ஆங்கில இலக்கணங்களின் அடிப்படையைக் கற்றுத் தந்தார். ஹிந்தியில் அவர் மூன்று தேர்வுகள் மற்றும் பாஸ் செய்திருந்தார், இருப்பினும் விசாரத் (5வது தேர்வு) அளவுக்கு எழுதும் தேர்ச்சி பெற்றவர். ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் எங்கள் பாடத் திட்டத்தில் உண்டு. ஹிந்தியும் ஆரம்பித்தனர். அதற்கு முன்பே என் அன்னை எங்களை அம்மொழிகளைப் படிக்கச் செய்து விட்டார். பிறகு ஒன்பதாம் வகுப்பில் நானே பிராதமிக் என்னும் முதல் தேர்விலிருந்து ஆரம்பித்து மத்யமா மற்றும் ராஷ்ட்ரபாஷா என்று மூன்று தேர்வுகளை பாஸ் செய்தேன். மத்யமா வரைக்கும் என்னுடன் இருந்த என் அருமை அன்னை காலமாக அவர் எனக்கு விட்டுச் சென்ற நோட்ஸ்கள் மற்றும் என் மாமா பிள்ளையின் ஆதரவுடன் மத்யமா எழுதி பாஸ் செய்தேன். அதற்கு ஹிந்தி பிரசார சபையில் சேர்ந்து ராஷ்ட்ரபாஷா பாஸ் செய்தேன்.

மெதுவாக ஹிந்திப்படங்கள் ஹிந்தியில் செய்திகள் கேட்டல் என்று ஆரம்பித்து பேச்சு ஹிந்தியையும் பலப்படுத்திக் கொண்டேன். அதுதான் நான் இப்பதிவின் ஆரம்பத்தில் கூறியதற்கான பின்புலம். மூன்றரை வருடங்கள் நான் பம்பாயில் இருந்தபோது என் பேச்சு ஹிந்தி இன்னும் பலப்பட்டது. பிறகு ஏழு வருடங்கள் சென்னை வாசம். அதன் பிறகு 20 ஆண்டுகள் தில்லியில். இங்குதான் என் ஹிந்தியில் அபார முன்னேற்றம். ஹிந்தியில் ஜோக்குகள் (முக்கியமாக அசைவ கோக்குகள்) சொல்வதில் நான் மிகப் பிரசித்தம். நான் தமிழ், ஆங்கிலம், பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிகளில் படித்ததையெல்லாம் ஹிந்தி உருதுவில் கூற ஆரம்பிக்க, ஒரே ஜாலிதான். அதுவும் உருதுவுடன் அதிகத் தொடர்பு இக்காலக் கட்டத்தில்தான் ஏற்பட்டது.

தில்லியில் இருந்தபோது நான் எந்த சந்தர்ப்பத்திலும் பேசுவதற்காக மொழிகளை இம்முறையில் தேர்ந்தெடுத்தேன். தமிழர்களைப் பார்த்தால் தமிழில். அவர் ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில்தான் பேசுவேன். அவரே சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக (கூட இருப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பது போன்ற காரணங்கள்) என்னையும் ஆங்கிலத்தில் பேசச் சொன்னால்தான் அவ்வாறு செய்வேன். அதே போல தமிழர் அல்லாத சக இந்தியரிடம் பேசும்போது என்னையறியாமலேயே ஹிந்தியில் பேசுவேன். அவர் ஆங்கிலத்தில் பேசினாலும் ஹிந்தியில்தான் பேசுவேன். சான்ஸ் கிடைத்தால் அவர் ஆங்கிலத்தில் பேசியதற்காக மிருதுவாக அவரைக் கலாய்ப்பேன். ஆங்கிலம் மூன்றாம் சாய்ஸ்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11 comments:

டிபிஆர்.ஜோசப் said...

தமிழர்களைப் பார்த்தால் தமிழில். அவர் ஆங்கிலத்தில் பேசினாலும் தமிழில்தான் பேசுவேன். அவரே சில தவிர்க்க முடியாத காரணங்களுக்காக (கூட இருப்பவர்களுக்கு புரிய வேண்டும் என்பது போன்ற காரணங்கள்) என்னையும் ஆங்கிலத்தில் பேசச் சொன்னால்தான் அவ்வாறு செய்வேன்.//

அப்படித்தான் இருக்கவேண்டும். நாம் எத்தனை மொழிகள் கற்றாலும் நம் தாய் மொழியில் பேசுவதைப் போன்ற சுகம் கிடைக்காது. இதை நான் மும்பையில் பெரும்பாலும் மராத்தியர்கள் குடியிருந்த குடியிருப்பில் வசித்தபோது புரிந்துக்கொண்டேன்.

dondu(#11168674346665545885) said...

பலர் ஆங்கிலத்தில் பேசுவது தாழ்வு மனப்பான்மையில்தான். என்னமோ ஆங்கிலம் தெரிந்தவனே அறிவாளி என்ற ரேஞ்சில் நினைப்பவர்கள் அவர்கள். மேலும் தங்கள் ஆங்கில அறிவை நிரூபிக்க வேண்டியக் கட்டாயம் அவர்களுக்கிருந்திருக்க வேண்டும். எனது ஆங்கில அறிவில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இர்ந்தாதால் அதை நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

மிக்க உண்மை மனசாட்சி அவர்களே. நீங்கள் இப்போது உபயோகிக்கும் கணினியில் தமிழ் எழுத்துருக்கள் இருந்திருக்காது, ஆகவே நீங்கள் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள் என நினைக்கிறேன். தமிழை ஆங்கில எழுத்துக்களை எழுதுவதை விட இது ரொம்ப நல்லது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

//
பலர் ஆங்கிலத்தில் பேசுவது தாழ்வு மனப்பான்மையில்தான். என்னமோ ஆங்கிலம் தெரிந்தவனே அறிவாளி என்ற ரேஞ்சில் நினைப்பவர்கள் அவர்கள்.
//

சரியாகவே சொன்னீர்கள்.

அவர்கள் மட்டுமா நினைக்கிறார்கள், சில ஆங்கிலம் பேசத் தெரிந்த "அறிவு ஜீவிக்களும்" அதைத் தான் நினைக்க விரும்புகிறார்கள்.

அவர்களைச் சொல்லிக் குற்றமில்லை. "பீட்டர்" விடுபவர்களுக்குத் தான் தமிழ் நாட்டில் அதிக மவுசு!!

ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

நன்றி ஷங்கர் அவர்களே. நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

எங்கள் அலுவலகத்தில் ( LG - பெங்களூர்) உடன் பணிபுரியும் பஞ்சாபி தேழியிடம் கடந்த 2 மாதங்களாக நானும் என் நன்பர் பாலு (தமிழர்தான்) என்பவரும் தினமும் ஹிந்தி படித்து வருகிரோம்..

( சில வெளிநாட்டு பயணங்களால் அவ்வப்போது தடைபட்டாலும்)

..காலையில் பத்து நிமிடம் ஒதுக்கி...

(5 நிமிடம் சில வழியல்கள் போக)

இப்போது நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது...எதில் என்று கேட்கவேண்டாம்..எங்கள் ஹிந்தியில்தான்...

எங்களுக்கு தெரிந்தது / தெரியவந்தது ஒருசில வார்த்தைகளே...:)

ஏதோ சமாளிச்சிக்கிட்டு இருக்கோம்...

ஆனால் எங்கள் தோழி கடைசியாக கூறுவது என்ன என்றால், உலகத்தில எது வேண்டுமானாலும் எளிது, அரியது தமிழருக்கு ஹிந்தி பயிற்றுவிப்பது என்று....

dondu(#11168674346665545885) said...

"ஆனால் எங்கள் தோழி கடைசியாக கூறுவது என்ன என்றால், உலகத்தில எது வேண்டுமானாலும் எளிது, அரியது தமிழருக்கு ஹிந்தி பயிற்றுவிப்பது என்று...."

அப்ப்டியெல்லாம் ஒண்ணும் இல்லீங்கோ. தமிழர்கள் அன்னிய மொழி கற்பதில் மிக வேகமானவ்ர்கள்.

நீங்கள் செய்யும் தவறுகள்:
1. ஹிந்தியை ஒரு பஞ்சாபியிடம் போய் கற்பது. அவர்களுக்கே ஹிந்தி சரியாக வராது.
2. பத்து நிமிடங்கள் (அதிலும் ஐந்து நிமிடம் வழிசல்கள்) போதவே போதாது.

ஆலோசனைகள்:
1. உள்ளூர் ஹிந்தி பிரசார சபையில் முறையான ஹிந்தி வகுப்பில் சேரவும். மற்ற மாணவர்களுடன் போட்டி போட்டு அதிக மதிப்பெண்கள் எடுப்பதால் ஹிந்தி சீக்கிரம் கற்றுக் கொள்ளலாம்.
2. பிரைவேட் டியூஷன் என்றால் உ.பி. காரர் யாரையாவது அணுகவும்.
3. தோழியிடம் ரொம்ப வழிந்தால் பஞ்சாபியில் பல வசவுகளைக் கேட்க நேரிடலாம். ஜாக்கிரதை!!!!!

அன்புடன்,
டோண்டு ராகவன்

வஜ்ரா said...

பாத்து செந்தழல் ரவி அவர்களே,

"மவுன ராகம்" சர்தார் தமிழ் கற்றுக் கொண்ட ரேஞ்சில், நீங்கள் ஹிந்தி கத்துக்கப் போறீங்க போலத் தெரியுது. 10 நிமிஷத்தில் அது தான் நடக்கும்.

விளையாட்டாகத் தான் சொல்கிறேன், discourage செய்வதாக எண்ணவேண்டாம்!! :-))

ஹிந்தி கற்க வேண்டும் என்கிற உங்கள் ஆர்வம் பாராட்டுக்குறியது. (எந்த மொழியும் கற்கும் ஆர்வம்..)

வஜ்ரா ஷங்கர்.

dondu(#11168674346665545885) said...

ஷங்கரும் நானும் பயப்பட்டது போல நடக்காமலிருக்க ஆண்டவன் துணை புரியட்டும். :-))

அன்புடன்,
டோண்டு ராகவன்

ரவி said...

இன்று தான் உங்கள் மறுமொழிகளை பார்க்க நேர்ந்தது டோண்டு சார் மற்றும் ஷங்கர்..

மிக்க நன்று...இப்போது ஹிந்தியில் பாதிக்கிணறு தாண்டி விட்டோம்...

ஆனால் புதியதாக சைனீஸ் டீச்சர் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார்..பெங்களூரில்...ஹி ஹி

dondu(#11168674346665545885) said...

"ஆனால் புதியதாக சைனீஸ் டீச்சர் ஒருவர் அறிமுகம் ஆகி உள்ளார்..பெங்களூரில்...ஹி ஹி"

சைனீஸ் டீச்சர் ஆணா பெண்ணா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது