சமீபத்தில் 1982ல் நான் ஐ.டி.பி.எல்லில் வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு நாள் என் மேஜைக்கு ஒரு கடிதம் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்ப்பதற்காக அனுப்பப்பட்டது. கடிதம் ரோமிலிருந்து வந்திருந்தது, இத்தாலிய மொழியில் இருந்தது. 4 வரிகள்தான்.
விளையாட்டாக எடுத்துப் பார்த்தேன். இத்தாலிய மொழியில் இருந்தாலும் அது என்ன கூற வருகிறது என்பதைப் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்போதுதான் அம்மொழிக்கும் ஃபிரெஞ்சுக்கும் இடையில் உள்ள உறவை நேரில் பார்த்தேன். பேசாமல் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தேன். ஆனால் கூடவே ஒரு குறிப்பையும் வைத்தேன்.
அதாவது எனக்கு ஃபிரெஞ்சு நன்றாக வருவதால் இத்தாலிய மொழி கடிதத்தை மொழி பெயர்க்க முடிந்தது, ஆனால் பதில் கடிதம் ஆங்கிலத்தில் கொடுத்தால் அதை இத்தாலிய மொழிக்கு மாற்றுவது என்னால் இயலாது என்பதை அதில் குறிப்பிட்டிருந்தேன். உடனே திரு ஜலானி அவர்கள் என்னைக் கூப்பிட்டு "என்ன செய்யலாம் ராகவன்?" என்றுக் கேட்டார். நான் அவரிடம் "சார், எனக்கு இத்தாலிய மொழி புரிந்தது போல ஒரு இத்தாலியனுக்கு ஃபிரெஞ்சு மொழி புரிவதில் அவ்வளவு பிரச்சினை இருக்கக் கூடாது" என்றேன். "நீங்கள் என்ன கூற வருகிறீர்கள் என்பது புரிந்தது" என்று அவர் சொன்னார். அவ்வாறே நான் பதிலை பிரெஞ்சில் போட்டு, இங்கு நடந்ததையும் மொழிபெயர்ப்பாளர் குறிப்பில் எழுதி அனுப்பி வைத்தேன். அதன் பிறகு அந்த குறிப்பிட்ட கம்பெனியிலிருந்து பிரெஞ்சிலேயே கடிதம் எழுத ஆரம்பித்தனர்.
வருடம் 1983. பெல்ஜியத்திலிருந்து ஒரு பெரிய கோப்பு (காகிதத்தில்தான்) சி.பி.ஐ.க்கு வந்தது. பெல்ஜியத்தில் வைத்து தன் மனைவியை கொலை செய்த் இந்திய டாக்டர் இந்தியாவுக்கு ஓடி வந்து விட, அவனை எக்ஸ்ட்ராடைட் செய்து பெல்ஜியத்துக்கு அழைத்து போவதற்காக பெல்ஜிய உள்துறை அமைச்சகம் தில்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தது. அக்கோப்பு கிட்டத்தட்ட முழுமையாக ஃபிரெஞ்சில் இருந்தது. அது ஆங்கிலத்தில் மொழி பெயர்ப்பதற்காக இன்ஸ்டாக்கிற்கு அனுப்பப்பட்டது. இன்ஸ்டாக் எனக்கு அந்த வேலையைக் கொடுத்தது. சுமார் 100 பக்கங்கள். அவற்றில் இரண்டு மட்டும் டச்சு மொழியில்! ஆனால் என்ன ஆச்சரியம்! அவற்றைப் படிப்பதில் எனக்கு அவ்வளவு சிரமம் இல்லை. எப்படி? டச்சுக்கும் ஜெர்மனுக்கும் இடையில் மிக அதிகமான ஒற்றுமை உண்டு. கோப்பின் கான்டக்ஸ்டும் எனக்குத் தெரியும். ஆகவே இதையும் மொழி பெயர்த்து இன்ஸ்டாகிற்குக் குறிப்பெழுத, அந்த மொழிபெயர்ப்பும் ஏற்றுக் கொள்ளப் பட்டது.
ஆனால் நிஜமாகவே இத்தாலியன் கற்க முயற்சி செய்தப் போது ஃபிரெஞ்சுக்கும் அதற்கும் இருந்த அதே ஒற்றுமை நான் இத்தாலிய மொழியை சரியாக கற்க முடியாதக் காரணங்களில் ஒன்றாயிற்று. அது பற்றி இப்போது கூறுவேன்.
பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் அந்தந்த மொழிகளிலேயே கற்று கொடுக்கப்பட்டன. அதாவது ஒரு குழந்தை தன் தாய்மொழியை கற்றுக் கொள்வது போல என்று வைத்துக் கொள்ளுங்களேன். இதுதான் நவீன முறை. இதை பற்றி நான் இந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.
ஆனால் இத்தாலியன் விஷயத்தில் மட்டும் "Italian for foreigners" என்ற ஒரு கேனத்தனமான புத்தகத்தை வைத்து சொல்லிக் கொடுத்தனர். பாடம் மட்டும் இத்தாலியனில், ஆனால் பயிற்சி விளக்கங்கள் எல்லாம் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருக்கும். ரொம்ப கண்றாவியாக இருந்தது. இந்த அழகில் இத்தாலியனுக்கும் பிரெஞ்சுக்கும் இடையில் இருந்த ஒற்றுமை வேறு நடுவில் வந்து காரியத்தைக் கெடுத்தது. இத்தாலியில் ஏதாவது கூற வரும்போது பிரெஞ்சு உள்ளே புகுந்து குழப்பம் செய்ய ஆரம்பித்தது. கோர்ஸ் கண்டெண்டும் ரொம்ப குறைபாட்டுடன் இருந்தது. இரண்டு பரீட்சைகள் மட்டுமே. வெறும் இலக்கணம் கற்றுக் கொடுத்து விட்டு அம்போ என்று விட்டு விட்டார்கள். ஆக நடந்தது என்னவென்றால் இத்தாலியனில் பேசத் திணற வேண்டும். மொழிபெயர்ப்பும் இத்தாலியனிலிருந்து ஆங்கிலத்துக்கு செய்ய முடியும் அதன் எதிர் திசையில் முடியாது. இம்மாதிரி அரைகுறை நிலையில் எங்களை விட்டதில் எங்களுக்குத்தான் நஷ்டம். கொடுமை என்னவென்றால் இத்தாலியில் பெரூஜா என்ற இடத்தில் இத்தாலிய மொழி சொல்லிக் கொடுக்கும் பெரிய மையம் உண்டு. அவர்கள் அருமையான இத்தாலிய பாடபுத்தகங்களை வெளியிட்டிருக்கின்றனர். அவை ஒரு மொழி புத்தகங்கள். அதாவது முழுக்க முழுக்க இத்தாலியனில் மட்டும்.
ஒரு மொழியை எப்படி கற்க வேண்டும் என்பதற்கு நான் ஜெர்மன் மற்றும் பிரெஞ்சு கற்று கொண்டது சிறந்த உதாரணங்கள் என்றால், அதை எப்படி கற்கக் கூடாது என்பதற்கு நான் இத்தாலியனை அரைகுறையாய் கற்றதே பொருத்தமான உதாரணமாகும். இத்தருணத்தில் ப்ளஸ் டூவில் நிறைய மதிப்பெண்கள் பெறுவதற்காக மாணவர்கள் ஜெர்மன், பிரெஞ்சு ஆகிய மொழிகளை எடுத்துக் கொள்கின்றனர். அவர்கள் பாடப் புத்தகத்தைப் பார்க்கும்போது மிக வருத்தமாக இருக்கிறது. மாணவ மாணவிகள் பரீட்சை முடிந்ததும் இம்மொழிகளை அப்படியே அம்போ என்று விட்டு விடுகின்றனர். எடுத்த முயற்சிகள் வீணாகின்றன. இதை பற்றி யாரும் அக்கறைப் படுவதாகத் தெரியவில்லை. இது சம்பந்தமாக் செய்த முயற்சிகளை மேன் அவரில் (manhours) கணக்கிட்டுப் பார்த்தால் தலை சுற்றும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
12 comments:
Raghavan,
It is astonishing that you have so much energy and enthusiasm to create and publish posts on so many varied topics !!!
Good Work!! Good Blog!!
கலக்குறீங்க டோண்டு சார். ஒரு வருசத்திலே இந்தி கத்துக்கிடனும்னு சபதம் எடுத்து 4 மாதங்கள் முடிந்து விட்டது. ஏக், தோ, தீன், சார், பாஞ் வரைக்கும்தான் கத்துக்கிட்டு இருக்கேன். நேரங்கிடைக்க மாட்டேங்குதுன்னு சொல்லி சமாதானப் படுத்திக்க வேண்டியதுதான்.
நன்றி பாலா, சிவபாலன் மற்றும் மகேஸ் அவர்களே. இனிமையான இத்தாலிய மொழியை முழுமையாகக் கற்காது அரைகுறையாய் கற்றதை என்னுடைய ஒரு மிகப் பெரிய தோல்வியாகப் பார்க்கிறேன்.
அதை எழுத்தில் வர்ணிக்கும்போது மிகுந்த வலியை அளித்தது. அக்காலக் கட்டத்தில் ஏதேனும் செய்திருக்க முடியுமோ என்று தலையை பிய்த்துக் கொண்டு யோசித்தேன். இப்போது கூட ஆசை உண்டு, இங்கு யாராவது இத்தாலிய மொழியை அதே மொழியில் வைத்து கற்றுத் தந்தால் மறுபடி முதலிலிருந்தே கற்க வேண்டுமென்று. இங்கும் நிலைமை மோசம் என்றுதான் கூறுகிறார்கள். தெரியவில்லை. இத்தாலிய கல்சுரல் மையம் சென்று பார்க்க வேண்டும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
வெளிநாட்டு மொழிகளை விடுங்க தெழுங்கு கூட கத்துக்க முடியலைங்க. எவ்வளவோ முயற்சி பண்ணினேன். அதே மாதிரி தான் இந்தியும். என்னோட நண்பர் ஒருவர் மொழி விசயத்தில் கில்லாடி கப்புன்னு புரிஞ்சுக்குவார் கொஞ்ச நாளில் பேசவே செய்வார்.
பிற மொழிகள் கற்பதற்கு ஒருவித attitude தேவை. அதை டெவலப் செய்தால் நிச்சயம் சுலபமாகக் கற்கலாம்.
முக்கியமாக ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளலாம், அதாவது ரொம்பக் கடினம் என்று நாம் கருதும் எந்த மொழியையுமே, அதைத் தாய்மொழியாக கொண்டுள்ள எந்த குழந்தையுமே சுலபமாகத்தானே பேசுகிறது? குழந்தையால் முடிவது நம்மால் முடியாதா என்று நினைத்துப் பாருங்களேன், விளையாட்டாகக் கற்றுக் கொள்ளலாம்.
இது பற்றி தனிப்பதிவே போடுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி மனசாட்சி அவர்களே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//ரொம்பக் கடினம் என்று நாம் கருதும் எந்த மொழியையுமே, அதைத் தாய்மொழியாக கொண்டுள்ள எந்த குழந்தையுமே சுலபமாகத்தானே பேசுகிறது? குழந்தையால் முடிவது நம்மால் முடியாதா//
சரியாய் சொன்னீர்கள் அய்யா. இன்னும் சொல்லப்போனால், தமிழைத் தாய்மொழியாய்க் கொண்ட என் 5 வயது மகன், காப்பகம் செல்ல ஆரம்பித்த இரண்டே மாதத்தில், அவர்கள் நடையிலேயே ஜப்பானிய மொழி பேசக் கற்றுக் கொண்டுவிட்டான். ஆக, எம் மொழியும் பயிலக் கடினமில்லாதது எனப் புரிகிறது. ஆனால், கவனம் செலுத்திப் படிக்க ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி மனம் ஒத்திப் போட்டுக் கொண்டேயிருக்கிறது...
பாலா சொல்வது போல, உங்கள் ஆர்வமும், உழைப்பும் பிரமிக்க வைக்கிறது (பதிவுகள் விஷயத்தில் மட்டுமல்ல, உங்கள் அலுவலக, மொழி விஷயங்களிலும் தான்). முக வின் உழைப்பை ஞாபகப்படுத்தும் உழைப்பு தங்களுடையது - கோபித்துக் கொள்ளமாட்டீர்கள்தானே - தாங்கள் மிகவும் மதிக்கும் சோவே பாராட்டும் விஷயம்தானே இது...
"முக வின் உழைப்பை ஞாபகப்படுத்தும் உழைப்பு தங்களுடையது - கோபித்துக் கொள்ளமாட்டீர்கள்தானே - தாங்கள் மிகவும் மதிக்கும் சோவே பாராட்டும் விஷயம்தானே இது..."
கோபிப்பதா? இல்லவே இல்லை. 80 வயது தாண்டிய நிலையிலும் கலைஞர் அவர்களின் சுறுசுறுப்பு எல்லோரையும் பிரமிக்க வைக்கிறதே. நான் அவரது இப்போதைய வயதை எட்டும்போது அதே அளவு மனத்திடத்துடன் இருக்க வேண்டுமென என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதனை பிரார்த்திக்கிறேன்.
நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்ட 19 மாதங்களில் அவர் காட்டிய மனதைரியத்தை போற்றுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
தங்களின் மொழிப்பெயர்ப்பு அநுபவங்கள் எனக்கும் ரஷிய மொழியைக் கற்கும் ஆசையைத் தூண்டுகிறது. இங்கு(பாஸ்டன்) பொது நூலகத்தில் ஒரு தளம் முழுக்க ரஷிய மொழி புத்தகங்கள் மட்டுமே. அதைப் படிப்பதற்காகவே கற்கலாம் என்று நினைத்துள்ளேன்.
தங்களின் அநுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கு நன்றி.
ராஜேஷ்
நன்றி ராஜேஷ் அவர்களே,
அதுவரை அவர்கள் அன்னியர்கள், நம்மவர் அல்ல என்ற உணர்வு நாம் அவர்தம் மொழியை கற்கும்போது ஓடியே போகிறது.
ஜெர்மன் கற்கும் வரை இரண்டாம் உலக யுத்த சம்பந்தமான ஆங்கிலப் படங்களை பார்க்கும்போது ஜெர்மானியர் தோற்று ஓடுவது எனக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆனால் அம்மொழியை கற்றபின்னால் அதே காட்சிகள் வருத்தத்தை உண்டு பண்ணின.
அந்தந்த மொழிகளில் புத்தகம் படித்து அவரவர் தினசரி வாழ்க்கையை பார்க்கும்போது நம்மைப் போன்றவர்களதானே இவர்களும் எனத் தோன்றுவது தவிர்க்க முடியாதது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி உள்ளூர் அன்னியன் அவர்களே. ரொம்ப பெரிய ஆசைதான். ஆனால், என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் அருளிருந்தால் எதுவும் நடக்கலாம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment