3/01/2010

புது மொழிபெயர்ப்பு அனுபவம்

யாழ்தேவி நட்சத்திர பதிவராக இது எனது இரண்டாவது பதிவு. ஏற்கனவேயே இட்ட பதிவுதான். ஆயினும் இச்சந்தர்ப்பத்துக்காக மீள்பதிவு செய்யப்படுகிறது. யாழ்தேவியில் இது திரட்டப்படுவது முதல் முறையாக.

ஈழம் பற்றிய எனது சிந்தனைகள் பல ஈழசகோதரர்களுக்கு பிடிக்காது என்பதை நான் அறிவேன். இருப்பினும் கீழே சித்தரிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சியை பதிவு செய்தபோது எனது மனதில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரின் துயரம்தான் தெரிந்தது. நேரிடையாக பாதிக்கப்பட்டவரை கண்டதும் எனது தர்க்கங்கள் எங்கோ ஒளிந்தன. இப்போது பதிவுக்கு போகிறேன்.

இன்று (ஈழ நாட்காட்டியின்படி புரட்டாசி 3, 2007) காலை ஒரு சஷ்டியப்தபூர்த்தி (அறுபதாம் பிறந்த நாள்) நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தேன். அப்போது செல்பேசி திடீரென soulful ரிங் ஓசையை எழுப்பியது. எடுத்து கேட்டால் இலங்கைத் தமிழில் ஒருவர் பேசினார். அவருக்கு ஸ்விட்சர்லேந்திலிருந்து ஒரு ஆவணம் வந்திருக்கிறது என்றார். என்ன மொழி என்று கேட்க, தெரியாதென்றார் (அந்த நாட்டில் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன், கூடவே இத்தாலிய மொழியும் உண்டு. நான்காம் மொழி சிறிய அளவினரே பேசும் மொழி). நேரே வீட்டுக்கே வரச்சொன்னேன். பிற்பகல் 3 மணிக்கு கையில் ஆவணத்துடன் வந்தார். இளம்வயதுக்காரர், சுமார் 25 வயதிருக்கும். கூடவே அவர் மனைவி, கையில் பொம்மை போல் ஒரு குட்டிப் பெண் குழந்தை. 11 மாதம் இருக்கும்.

ஆவணத்தை பார்த்தேன். சுவிஸ் ஜெர்மன் மொழியில் இருந்தது. 6 பக்கங்கள், மிக நெருக்கமாக தட்டச்சிடப்பட்டிருந்தது. பார்த்த உடனேயே கூறி விட்டேன். இது நிறைய வேலை எடுக்கும், எனக்கு நேரமே இல்லையென்று. அத்துடன் சாதாரணமாக கதை முடிந்திருக்கும். நான் வீட்டுக்கு வரும் வாடிக்கையாளர் யாரையும் சாதாரணமாக தேவைக்கதிகமாக காக்க வைப்பதில்லை. சட்டு புட்டென்று பேசி அனுப்பிவிடுவேன். வந்தவர் சற்றே தயங்கினார். மென்று விழுங்கினார். சாதாரணமாக அதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டார். ஆவணத்தைப் பார்த்தேன். பக்கங்களைப் புரட்ட ஆரம்பித்தேன். அவர் ஸ்விட்சர்லாந்திற்கு அகதியாக வர விண்ணப்பித்திருந்தார். அவருடை கேஸ் விவரம் இருந்தது. என்னையறியாமலேயே படிக்க ஆரம்பித்தேன்.

இவர் வட இலங்கையில் வசிப்பவர். அவரது பிராந்தியத்தில் அவரால் பாதுகாப்பாக இருக்க இயலவில்லை. அவரது அன்னை துப்பாக்கி குண்டால் அடிப்பட்டவர். என்றெல்லாம் அதில் இருந்தது. தங்களுக்கே உரித்தான நேர்த்தியுடன் ஸ்விஸ் ஜெர்மனில் அவை விவரிக்கப்பட்டிருந்தன. இப்போதுதான் என்னை அறியாமலேயே நான் இதுவரை செய்யாததைச் செய்தேன்.

அவரிடம், பேசாமல் என்ன இருக்கிறது இதில் என்பதை வேகமாகப் படித்து கூறுகிறேன் என சொல்ல. அவரும் ஒத்துக் கொண்டார். அவருடைய கஷ்டங்கள் எல்லாவற்றையும் பட்டியலிட்டுவிட்டு அவரது விண்ணப்பத்தை பைசல் செய்யும் வாக்கியங்கள் வந்தன.

இந்தக் கஷ்டமெல்லாம் இருக்கின்றன என்பதில் ஐயமில்லை என்றாலும், ஸ்விஸ் சட்டத்தின் பலான, பலான பிரிவு, உப-பிரிவு ஆகியவற்றின்படி அவருக்கு அடைக்கலம் அளிக்க ஏலாது என திட்டவட்டமாக எழுதப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறிவிட்டு மேலே பார்த்தால், அப்பீல் செய்ய 30 நாட்கள் அவகாசம் தரப்பட்டிருந்தது. அதை அவரிடம் கூறினேன். அவருக்கும் அவர் மனைவிக்கும் மிகுந்த ஏமாற்றம். அவர்களது முகத்திலேயே அது தெரிந்தது. அந்த 11 மாதக் குழந்தை இஃதொன்றும் அறியாது என் வீட்டம்மாவுடன் விளையாடிக் கொண்டிருந்தது. இதிலேயே கிட்டத்த ஒரு மணி நேரம் போய்விட்டது. அவர்களுக்கு என் வீட்டம்மா டீ மற்றும் ஸ்நேக்ஸ் கொண்டு வந்தார் அவர். மிகுந்த கூச்சத்துடன் எடுத்து கொண்டனர்.

கடைசியில் அவர்கள் கிளம்பினர். அவர் தன் பாக்கெட்டிலிருந்து பணம் எடுத்து எனக்கு எவ்வளவு தரவேண்டும் எனக் கேட்டார். இப்போது டோண்டு ராகவன் இதுவரை செய்யாத இன்னொரு காரியம் செய்தான். "பணமா, மூச்" என்றான். அது என்னையறியாமலேயே வந்தது. வாடிக்கையாளரை அணுகும் முறைகளைப் பற்றி பத்து பதிவுகள் போட்டு, வசூல் எல்லாம் எப்படி உறுதியாக செய்ய வேண்டும் என பல இடங்களில் கூறிவரும் அவன் இங்கு இவ்வாறு நடந்து கொண்டான். அவர் விடவில்லை. கிட்டத்தட்ட உங்களது நேரம் ஒரு மணி எடுத்துக் கொண்டேன், ஏதேனும் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார். ஒரு வார்த்தை பேசாது கைகூப்பினேன் (தொண்டை அடைத்ததால் ஒன்றும் பேச இயலவில்லை). போய் விட்டார்கள். சிறிது நேரம் அப்படியே பிரமித்துப் போய் அமர்ந்திருந்தேன். நாம் எல்லாம் பத்திரமாக தாய்நாட்டில் இருக்கும்போது இம்மாதிரி நாடுவிட்டு நாடு வந்து கஷ்டப்படுபவர்களின் துயரம் என்னை மிகவும் பாதித்தது.

சற்று நேரம் கழித்து அப்பக்கம் வந்த என் வீட்டம்மா கேட்டார், "ஏன் அழுகிறீர்கள்" என.

அன்புடன்,
டோண்டு ராகவன்

23 comments:

Anonymous said...

என்னங்க சார்! வேறு மாற்று வழி இருந்தால் சொல்லியிருக்கக்கூடாதா?
இன்னும் புண்ணியமாக போயிருக்கும்.
நெகிழ்வான நிகழ்ச்சி.

dondu(#11168674346665545885) said...

ஒரு வழியும் எனக்கு புலப்படவில்லை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

சென்டிமென்டலா ஒரு பதிவ போட்டு பீலிங் பண்ண வச்சுட்டிங்களே

PPattian said...

//நாம் எல்லாம் பத்திரமாக தாய்நாட்டில் இருக்கும்போது இம்மாதிரி நாடுவிட்டு நாடு வந்து கஷ்டப்படுபவர்களின் துயரம்//

உண்மைதான்.. :(

dondu(#11168674346665545885) said...

தெனாலி படத்தில் ராஜ் டிவி-காரர்களிடம் கமலஹாசன் தன் அன்னை கொல்லப்பட்ட செய்தியைக் கூறும்போது எல்லோரும் உறைந்து போய் நிற்பார்கள். அந்த ஃபீலிங்தான் இன்றும் வந்தது.

பை தி வே தெனாலியில் கமல் பேசும் இலங்கைத் தமிழில் பிழைகள் இருந்தன என்பதையும் நான் வந்தவரிடம் கேட்ட போது கூறினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

//இத மட்டும் ரீலீஸ் பன்ன மாட்டீங்க..
என்ன பந்தயம்//
ஒரு மண்ணாங்கட்டிப் பந்தயமும் இல்லை. வேண்டுமென்றே சீண்டும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும். அவ்வளவுதான். அது நெகிழ்ச்சியான இப்பதிவில் சத்தியமாக அவை அனுமதிக்கப்பட மாட்டா.

டோண்டு ராகவன்

அரவிந்தன் said...

மிகவும் நெகிழ்ச்சியான பதிவு.

உங்களுக்கும் இத்துனை மெல்லிய உணர்வா..

அன்புடன்
அரவிந்தன்

Aani Pidunganum said...

Dondu sir
parandha manasu thaan oye ummaku...

I remember sometime back there was a post and some comments about ethics of your translation job (a client called you and made you to wait for sometime, by the way you had time pass with the urudu lady/girl ;) )Few bloggers were firing at you, that you charged, though you didnt do the work etc etc and topic about ethic came out...i think this post too answers it

dondu(#11168674346665545885) said...

வாருங்கள் அரவிந்தன். நேரம் கிடைக்கும்போது இப்பதிவையும் பார்க்கவும்.
http://dondu.blogspot.com/2005/11/blog-post_19.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

வருக ஆணிபிடுங்கி அவர்களே,

நீங்கள் குறிப்பிடும் பதிவின் சுட்டி இதோ.

http://dondu.blogspot.com/2007/02/blog-post_06.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தையா வாருங்கள்
ஆஞ்சனேயா வாருங்கள் ராம் அனுமந்தையா வாருங்கள்
அராஜகம் ஒழித்திட லங்காபுரிக்கு விரைந்து வாருங்கள்
அறமதி தழைத்திட லங்காபுரிக்கு மீண்டும் வாருங்கள்.


அன்பு நிறைந்த நல் இதயங்களே!
உங்களால் இயன்ற அளவு இப்பிரார்தனையை செய்யுங்கள்.
மிக்க நன்றி.

இவ்விடத்தில் இதை எழுதவேண்டும் போல் இருந்ததனால் எழுதியுள்ளேன்.

Anonymous said...

"கல்லுக்குள் ஈரம்". ஒவ்வொரு தொழிலும் கருணை கலந்திருக்க வேண்டும். உங்கள் ஈரம் என்னைக் கவர்ந்துவிட்டது.

ஒரு ஈழத் தமிழன்

Anonymous said...

Dondu Sir

Thank you for your kindness

God bless you and your Wife

Thanks

Eela tamilan

RamaniKandiah said...

டோண்டு அவர்கள் ஈழத்தமிழரிலே கருணை காட்டுகிறாரா? அய்யா சாமிகளே அவரின் பதிவை மொத்தமாக ஆதியிலிருந்து வாசித்துவிட்டு வாருங்களய்யா :-(

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

<-- வாடிக்கையாளரை அணுகும் முறைகளைப் பற்றி பத்து பதிவுகள் போட்டவன் --->
வாடிக்கயாளர் புலம் பெயர்பவர் என்று தெரியாததால்.

Anonymous said...

this is unbelivable and it is a dondu" drama, i think he got some advice from so or supramaniyasa(asa)my, eela tamizan

வலைஞன் said...

உங்கள் பதிவில் உள்ள ஈரத்தை அனைவரும் புகழ்கிறார்கள்
அதைவிட அதில் உள்ள நேர்மை என்னை ஈர்க்கிறது
பொதுவாக உங்கள் பதிவுகள் அனைத்திலும் ஒரு அபூர்வமான Frankness எனக்கு தென்படுகிறது
வாழ்த்துக்கள்

மரா said...

அவ்ளோ நல்லவரு நீங்கன்னு எனக்கு மட்டும் தெரியும் சார்.வாழ்க...வளர்க.. ”பரோபகரார்தம் இடம் ஷரீரம்”

Anonymous said...

Dondu Sir

Appreciate your kindness.

-Venkat

Jawahar said...

உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏன் இலங்கையில் மட்டும் இவ்வளவு பிரச்சினை!

http://kgjawarlal.wordpress.com

Anonymous said...

I know so many Tamil people here in Europe/swiss. There's such a tragic story behind each of those.

They live a very good life here, but they all surely miss and cry for their homeland in their hearts.

hayyram said...

ஜவர்லால் சார்..

//உலகெங்கிலும் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஏன் இலங்கையில் மட்டும் இவ்வளவு பிரச்சினை!//

ஏன்னா..இலங்கையில் மட்டும் தான் நம் அரசியல் வாதிகள் தலையிடுகிறார்கள்.

Subramanian Vallinayagam said...

Dondu Sir

Appreciate your kindness.

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது