3/24/2010

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 54 & 55)

எபிசோடு - 54 (22.03.2010) சுட்டி - 1 & >சுட்டி - 2
(வழக்கம்போல முதல் சுட்டிதான் படுத்துகிறது என்றால், இம்முறை இரண்டாவது சுட்டியும் படுத்தியது. டெக்சதீஷ் தளமே வெகு நேரத்துக்கு செயலற்றிருந்தது).
நாதன் வீட்டுக்கு நீலகண்டனும் பர்வதமும் வந்திருக்கின்றனர். வரப்போகும் சஷ்டியப்தபூர்த்திக்கான ஏற்பாடுகள் பற்றிய பேச்சு உல்லாசமாக நடக்கிறது. நியாயமாக அசோக் கையில் எடுத்து நடத்த வேண்டிய இந்தச் விசேஷம் அவன் அதை செய்யாததால் நீலக்ண்டனும் பர்வதமும் சேர்ந்து நன்றாக நடத்தித் தருமாறு வசுமதி அவர்களை கேட்டு கொள்கிறாள். கேட்டரிங் யார், என்னென்ன சாப்பாட்டு மெனுக்கள் ஆகியவை விவாதிக்கப்படுகின்றன. கடைசியாக போகிற போக்கில் அவ்வளவு அமர்க்களமாக சமையல் செய்யும் கல்யாண சமையற்காரர்கள் என்னவோ அந்த சாப்பாட்டைத் தொடுவதே இல்லை எனவு, அவரவர் தங்கள் வீட்டிற்கு சென்று மோர் சாதம் சாப்பிடுவதோடு திருப்தி அடைகின்றனர் எனவும் கூறப்படுகிறது. இதை நானே நேரில் பார்த்துள்ளேன். அதுவும் சரிதான், எவ்வளவு நாட்கள்தான் விடாது கல்யாண சமையல் சாப்பிடுவது. இரண்டு நாள் தொடர்ச்சியாக சாப்பிட்டால் நமக்கே அலுப்பு தட்டிவிடுகிறதுதானே.

பாகவதர் வீட்டில் மணிக்கு ராஜி காப்பி கொண்டு வந்து தருகிறாள். மணி யாருக்கும் தெரியாமல் ஷேர் மார்க்கெட்டில் செயல்பட்டு பணம் சேர்த்து வங்கி கணக்கை வீட்டில் யாருக்கும் தெரியாமல் வைத்திருப்பதை எல்லோரிடமும் போட்டு உடைகிறாள். மணியின் பெயரில் தவறு இருப்பதால் அவன் முதலில் வாதிட்டாலும், கடைசியில் மௌனமாகவே இருக்கிறான்

நீலகண்டன் வீட்டுக்கு அழைக்க நாதனும் வசுமதியும் செல்கின்றனர். அவர்களுக்காக அந்த வீட்டு வாசலில் அசோக் காத்திருக்கிறான். நாதன் அசோக்கையும் வசுமதியையும் அனுப்பிவிட்டு வெளியில் காரிலேயே அமர்ந்திருக்கிறார். அதையறிந்த நீலகண்டன் அவரை உள்ளே அழைத்து வருகிறார். சஷ்டியப்தபூர்த்தியை அமர்க்களமாக கொண்டாட வேண்டும் என எல்லோரும் கூற, அது வேண்டாம் என அசோக் வாதம் புரிகிறான். வைதீக காரியங்களே அதிகமாக இருக்க வேண்டும் என அவன் கூறுகிறான்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு நாதன் சஷ்டியப்த பூர்த்தி பத்திரிகை வருகிறது. அது பற்றி அங்கு விவாதம் நடக்கிறது. சாம்பு சாஸ்திரிகளை ஏன் அதற்காக புரோகிதத்துக்கு கூப்பிடவில்லை என பேசுகின்றனர். பல நிகழ்ச்சிகள் சங்கிலித் தொடர் போல நடந்து இந்த நிகழ்வு வந்தது என அலசப்படுகிறது. சாம்புவின் மகள் ஆர்த்தி முன்னாள் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஜிம் கார்ட்டரின் வாழ்க்கையில் நடந்த சங்கிலி சம்பவங்களால் அவர் கடைசியில் அமெரிக்க ஜனாதிபதியானார் என தான் எங்கோ படித்ததை நினைவு கூறுகிறாள்.

இதே மாதிரியான இந்திய உதாரணத்தை சோ அவர்கள் தருகிறார். ஹரியானா போலீசார் தன்னை கண்காணித்ததாக நினைத்து வெகுண்ட ராஜீவ் சந்திரசேகரின் அரசுக்கான ஆதரவை நீக்கிக் கொள்ள, சந்திரசேகர் அரசு கவிழ்ந்து லோக்சபா தேர்தல் வர, ராஜீவ் ஜெயித்து விடுவாரோ என்னும் பயத்தில் புலிகள் அவரை போட்டுத்தள்ள, அனுதாப வோட்டுகளால் காங்கிரஸ் வெற்றிபெற்று, அரசு அமைக்க, அதிகம் சர்ச்சைக்குள்ளாகாத மனிதர் என்னும் ஹோதாவில் நரசிம்ம ராவ் பிரதமராக வர என்னும் பல நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக நடந்தன. இதை பகுத்தறிவின் கீழே ஆராய்தல் கடினம் என சோ கூறுகிறார்.

(தேடுவோம்)

எபிசோடு - 55 (23.03.2010) சுட்டி -1 & சுட்டி - 2
நாதன் வீட்டுக்கு அவரது சஷ்டியப்தபூர்த்தி ஏற்பாடுகள் பற்றி பேச புரோகிதர் வருகிறார். செய்ய வேண்டிய சடங்குகள் குறித்து பட்டியல் தருகிறார். இம்மாதிரி சஷ்டியப்த பூர்த்தியும் ஒரு மனிதனின் வாழ்க்கையில் செய்ய வேண்டிய நாற்பது சம்ஸ்காரங்களில் வருமா என சோவின் நண்பர் கேட்க, அப்படியெல்லாம் இல்லை என அவர் கூறுகிறார். அதே சமயம், அறுபதாம் ஆண்டு நிறைவுக்கான சடங்கின் பெயர் உக்ர ரத சாந்தி எனவும், 70 வயது பூர்த்தியாகும்போது பீமரத சாந்தி செய்வது வழக்கம் எனவும் அவர் கூறுகிறார். இம்மாதிரியான சடங்குகள் எல்லாமே எதையும் செலிப்ரேட் செய்வதில்லை. செய்த பாவங்களுக்கான சாந்தியே என அவர் கூறுகிறார். ஏழை எளியவர்களுக்கு தானம் செய்வது முக்கியம், எல்லோருடை க்ஷேமங்களுக்காகவும் பிரார்த்தனை செய்யப்படும் எனவும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டில் உமாவும் அவள் அன்னை பர்வதமும் பேசுகின்றனர். உமா தன் மாமியாருக்கு ஒரு நகை செய்து போட்டிருக்கிறாள். அவள் மாமியார் அதனால் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தது குறித்து பர்வதம் சந்தோஷமடைகிறாள்.

வேம்பு சாஸ்திரி வீட்டிலும் நாதனின் சஷ்டியப்தபூர்த்தி குறித்து பேசுகின்றனர். அவருக்கு அழைப்பு இல்லை என்பதை அவர் மனைவியும் தமக்கையும் குறை கூறுகின்றனர். வேம்பு அவர்களை சமாதானப்படுத்துகிறார். வசுமதி நகைக்கடை விளம்பரம் போல நகைகளை அணிந்து மினுக்கு காட்டுவதையும் கேலி செய்கிறார்கள்.

சாம்புவின் இரண்டாம் மகன் தான் கங்காதரன் அன்பு சுந்தரமூர்த்தி (GAS for short) ஏனும் கேட்டரரிடம் கணக்கு எழுதும் வேலைக்கு போகப்போவதாக கூறி தன் தந்தையிடம் அனுமதி பெறுகிறான். ஆர்த்திக்கும் வரன் பார்க்க வேண்டும் என சாம்புவின் மனைவி செல்லம்மா கூற, அவர் தனது சகபுரோகிதரின் பிள்ளைக்கு ஆர்த்தியை தரலாம் என கூற, தன் பெண் புரோகிதர் வீட்டில் வாழப்போக வேண்டாம் என அவர் மனைவி கூறுகிறாள்.

நாதனின் சஷ்டியப்த பூர்த்திக்கு வரும் கேட்டரரின் வீட்டில் குடியிருப்பவர் ஒரு இன்ஷ்யூரன்ஸ் ஏஜெண்ட். அவரும் அவர் மனைவியும் பிசினஸ் பிடிப்பது பற்றி பேசுகின்றனர். அவரது மனைவி அவரது அப்ப்ரோச்சை குறை கூறுகிறாள். அவரோ தன் நண்பனை விபத்துக்கான காப்பீடு செய்து கொள்ளும்படி கூறியதற்கு அவனோ தான் சிவபக்தன் எனவும், சிவன் தன்னைக் காப்பான் எனக் கூறிவிட்டதாகவும் சொல்லி அயற்ச்சி அடைகிறார்.

மார்க்கண்டேயன் சிவபக்தனல்லவா, அவன் உயிரையும் சிவன்தானே காப்பாற்றியது என சோவின் நண்பர் கேட்க, அவர் மார்க்கண்டேயனின் கதை பற்றி கூறுகிறார். அவன் சிவ பக்தன் மட்டுமல்ல, விஷ்ணு பக்தனும் எனக்கூறி அதற்கான ஆதாரங்களை அடுக்குகிறார். இம்மாதிரி பல இடங்களில் சைவ வைணவ ஒற்றுமை போற்றப்படுவதையும் அவர் எடுத்துரைக்கிறார்.

(தேடுவோம்)

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

No comments:

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது