எபிசோடு - 58 (29.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
நாதனின் சஷ்டியப்தபூர்த்தி காட்சிகளை டிவிடியில் பார்த்து எல்லோரும் குதூகலத்துடன் ஒருவரை ஒருவர் கலாய்க்கிறார்கள். அசோக் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்வதை பார்த்த சோவின் நண்பர் அதென்ன சாஷ்டாங்க நமஸ்காரம் என கேட்க, சோ விடை கூற ஆரம்பிக்கிறார்.
அஷ்டாங்க நமஸ்காரம்: தலை, காதுகள், கைகள், தோள்கள், முகவாய்க்கட்டை ஆகிய எட்டு உறுப்புக்களும் பூமியில் படும்படி வணங்குதல். "என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை. எல்லாம் உன் செயல்” என்று இறைவனை சரணாகதி அடைவதே சாஷ்டாங்க நமஸ்காரத்தின் நோக்கமாகும்.
பஞ்சஅங்க நமஸ்காரம்: தலை, கைகள், முழந்தாள் ஆகிய அங்கங்கள் மட்டும் தரையில் படும் விதத்தில் வழிபாடு செய்வது (முக்கியமாக பெண்களுக்கு, ஆனால் ஆண்களும் செய்யலாம் என சோ கூறுகிறார்). இந்த நமஸ்காரத்தை சுந்தரமூர்த்தி நாயனார் செய்ததாக சேக்கிழாரின் பெரிய புராணத்தில் வருவதாக மாஹாபெரியவா கூறியுள்ளார் என்றும் சோ சொல்கிறார்.
வேம்பு சாஸ்திரிகளை பார்க்க அவரது சம்பந்தி சிகாமணி முதலியார் வருகிறார். வேம்பு வீட்டை காலி செய்ய வேண்டிய நிலையில் இருப்பதால் தன் வீட்டுக்கே வேம்புவின் குடும்பத்தினர் வரலாமென்று அவர் சொல்கிறார். ஆஃபருக்கு நன்றி தெரிவித்த வேம்பு அது சரியாக வராது எனவும், வேறு வீடு பார்க்க தாங்கள் முயற்சிப்பதாகவும் அப்படி ஒன்றும் தகையவில்லை என்றால் அவரை தொடர்பு கொள்வதாகவும் கூற அவரும் விடை பெற்று செல்கிறாள். அதற்குள் வேம்புவின் மனைவி சுப்புலட்சுமிக்கு மகள் ஜயந்தியிடமிருந்து ஃபோன் வருகிறது. தன் மாமனார் சொன்னதற்காகவெல்லாம் வேம்பு குடும்பத்தினர் அங்கு வரவேண்டாமென அவள் கறாராக கூறி விடுகிறாள். “நம்ம பொண்ணு சுபாவத்தை புரிஞ்சுக்காம இந்த சம்பந்தி வெகுளியாக இருக்கிறாரே என சுப்புலட்சுமி அங்கலாய்க்கிறாள். வேம்பு தன் பெண்ணை ஃபோனில் கூப்பிட்டு அவளை ஒரு பிடி பிடிக்கிறார். என்ன ஆனாலும் தாங்கள் அவள் வீட்டுக்கு வரமாட்டோம் என்று வேறு சூளுரைக்கிறார்.
சாம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு போகலாம் என வேம்புவுக்கு அவர் தமக்கை ஆலோசனை சொல்ல, அவர் அதையும் நிராகரிக்கிறார்.
கைலாசபுரி தொகுதிக்கு இடைதேர்தல் வர காலஞ்சென்ற வையாபுரியின் சகோதரர் (இருவரும் இரட்டை பிறவிகள், ஆகவே அதே ஆக்டர்) தான் அங்கு நிற்க கட்சியின் டிக்கெட்டை பெறுகிறார். அந்த கட்சி அத்தொகுதியில் எப்போதுமே ஜெயித்ததில்லை என்றும், அப்படி ஜெயிக்க வேண்டுமானால் அங்கு பெரும்பான்மையில் இருக்கும் பிராமணர்கள் ஆதரவு வேண்டுமென்றும் அங்கு வரும் சிங்காரம் ஒரு பிட்டையை போட அந்த அரசியல்வாதி கலக்கமடைகிறார். மேலும் அசோக் தனது செயல்பாடுகளால் அங்கு நல்ல பெயர் பெற்றிருப்பதாகவும், அவன் சொன்னால் பிராமணர்கள் ஆதரவு கிடைக்கும் என இன்னொரு திரியை அவன் கொளுத்திப்போட அரசியல்வாதி மேலும் ஆர்வமாகிறார். அவனுக்கான விலையை கொடுத்து அவனை வாங்குவதாக கூற, சிங்காரமோ அசோகரை எல்லாம் விலைக்கு வாங்க முடியாது எனக்கூறுகிறான்.
கிருபாவின் தம்பி ஜட்ஜ் வீட்டுக்கு போய் தன் வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டிருக்கிறான். அதை அறிந்த கிருபா தன் மாமனாரிடம் செல்லும் முன்னால் தன்னை கேட்டிருக்க வேண்டும் என கோபப்படுகிறான். சாம்புவும் செல்லம்மாவும் வந்து கிருபாவை சமாதானம் செய்தாலும் அவன் கேட்கவில்லை. பிரியாவின் சீமந்தத்தை அவர்கள்தான் நடத்தியிருக்க வேண்டும் என்பதையும், ஆனால் அதை ஜ்ட்ஜ் வீட்டினர்தான் செய்ததையும் சுட்டிக் காட்டி அதனால் தன் மானமே போய் விட்டது என கோபப்படுகிறான். சாம்பு மனம் கலங்குகிறார்.
(தேடுவோம்)
எபிசோடு - 59 (30.03.2010) சுட்டி - 1 & சுட்டி - 2
ாதன் சஷ்டியப்த பூர்த்தி டிவிடியை அவருக்கு திருப்பிக் கொடுக்க அசோக் வீட்டுக்கு வருகிறான். பேச்சுவாக்கில் நந்தவனத்தில் ஓர் ஆண்டி என்னும் சித்தர் பாடல் பற்றி பேச்சு வருகிறது. அப்பாட்டின் உண்மையான பொருளை சோ விளக்குகிறார்.
கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் பாடிய பாடல் இது.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல்தான். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக கூறுகிறார் என சோ எடுத்துரைக்கிறார்.
மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது. இங்கே படைக்கும் கடவுள் குயவன் என்று அழைக்கப்படுகிறான். ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று "நா + லாறு மாதமாய்க்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான்.
இப்போது ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில்தான் குயவன் அதை செய்து கொடுத்த்திருக்கிறான்.
ஆனால் அது கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்கிறான்? கண் மண் தெரியாமல் கூத்தாடுகிறான், தோண்டியை போட்டு உடைக்கிறான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறவில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.
ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது. அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர். ஆனால் சாமான்யமாக பார்த்தால் அது ஒரு நையாண்டிப் பாடலே. இம்மாதிரி பல சித்தர்கள் உண்டு. அதே போல திருமூலரும் பாடியுள்ளார்:
பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டு மேய்ப்பாருமின்றி வெறித்துத் திரிவன மேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால் பார்ப்பான்பசு ஐந்தும் பாலாய்ச் சொரியுமே! இதில் பசு என நேரடியாக பொருள் கொள்ளலாகாது. அவை ஐம்புலன்கள். அவற்றை அடக்குவது பற்றித்தான் பேச்சு.
அசோக் நாதனுக்கு உடல் குளிர்ச்சிக்கு ஸ்படிக மாலை தருகிறான். அவரும் நன்றியுடன் வாங்கிக் கொள்கிறார்.
சாரியாரும் அசோக்கும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அசோக்கிடம் சாரியார் அவனது தந்தையின் உடல்நலம் பற்றி விசாரிக்கிறார். பிறகு கைலாஷ் நகர் வாசிகள் அசோக்குக்கு அவன் வேதபாடசாலை உருவாக்கியதை பாராட்டும் வகையில் அவனுக்கு வேதபுருஷ் என்னும் பட்டம் தருவதாக உத்தேசித்ததை கூறுகிறார். மரியாதையுடன், அதே சமயம் உறுதியுடன் அசோக் அவரிடம் இந்த பட்டம் தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என கூறிவிட்டு செல்கிறான்.
இங்கு டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வார்த்தைகள். அசோக்கின் முன்னேற்றம் பிரமிக்க வைப்பதாக இருக்கிறது. என்னதான் இருந்தாலும் அவன் வசிஷ்டர் அல்லவா? முழு ஈஸ்வர கிருபை அவனுக்கு உண்டல்லவா? வேறு என்னத்தான் இங்கு எதிர்பார்க்க முடியும். பாராட்டுகளையும் வசைகளையும் அவன் ஒரே பாவத்தில் எதிர்கொள்கிறான். விளாம்பழ ஓட்டில் உள்ள பழம், தாமரை இலைத் தண்ணீர் ஆகியவற்றுடன் அவனை ஒப்பிட முடியும்.
வசுமதியின் உறவினன் பிச்சுமணி இப்போதெல்லாம் நாதன் வீட்டுக்கு அடிக்கடி சென்று அவருக்காக வேலைகள் பல செய்து கொடுக்கிறான். அதற்காக அவனது அக்காவும் அத்திம்பேரும் அவனை குறை கூறுகின்றனர்.
பர்வதத்துக்கு உமா பற்றி திடீரென ஒரு கெட்ட கனவு வருகிறது. அவள் அழுதுக் கொண்டே தன்னிடம் வருவதாக அவள் கனவு காண அலறி அடித்துக் கொண்டு எழுந்திருக்கிறாள். நீலகண்டன் அவளுக்கு ஆறுதல் சொல்லி நெற்றியில் விபூதி பூசுகிறார்.
(தேடுவோம்)
சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் வியாழன் முடிய ஜெயா டிவியில் இரவு எட்டு முதல் எட்டரை வரை ஒளிபரப்பப்படுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஐந்து முகங்கள் – கடிதம்
-
அன்புள்ள ஆசிரியருக்கு , வணக்கம். உலகப் பேரிலக்கியங்களில் ஒன்றான வெண்முரசு
– பிரயாகையுடனான எனது முதல் பயணம் இன்றுடன் இனிதே நிறைவுற்றது. வெண்முரசு
தாங்கள்...
11 hours ago
3 comments:
//கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் பாடிய பாடல் இது.//
அவர் கடுவெளிச் சித்தர் ஐயா. (`வளி' அன்று; `வெளி'!)
இந்த வார துக்ளக் பார்தீர்களா... எனது இந்த பதிவை பற்றி உங்கள் கருத்து என்ன ?
http://pichaikaaran.blogspot.com/2010/03/blog-post_31.html
நீங்க சங்கத்துல்ல இருக்கீங்களா இல்லையா?
Post a Comment