2/04/2009

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ

கன்னா பின்னாவென்று ஒரு மொக்கைப் பதிவு டோண்டு ராகவனிடமிருந்து என்னும் பதிவில் நான் எழுதியதிலிருந்து இப்பதிவை துவக்குகிறேன்.
ஒரு சமயம் சோழ அரசனும் கம்பனும் நந்தவனத்தில் உலவி வலம் வந்தபோது, அரசன் செருக்குடன் கூறினான், "கம்பரே இந்த நாடே எனக்கடிமை" என்று. கம்பரோ வாய்துடுக்காக "அரசே, ஆனால் நீங்களோ என்னடிமைதானே" என்று முன்னொருமுறை உபசாரமாக மன்னன் கூறியதை நினைவுபடுத்த மன்னனுக்கு சுருக்கென்றது. பல நாட்கள் இது பற்றி எண்ணி எண்ணி அவன் மனம் புழுங்கினான். அதை எப்படியோ அறிந்து கொண்டனர் அரசவையில் இருந்த மற்ற ஜால்ரா புலவர்கள். அவர்களுக்கும் சோழனுடைய அரசவையில் கம்பர் பெற்றிருந்த செல்வாக்கைக் கண்டு பொறாமைதான். நேரடியாகக் கம்பனை அவமதிக்கவோ வேறெதனையும் கெடுதலாகச் செய்யவோ முடியவில்லை. ஆகவே கம்பனுடைய பெயருக்கு இழுக்கைக் கொடுத்து, அரசனால் இன்னும் அதிகமாக வெறுத்து ஒதுக்கப்படச் செய்யவேண்டும் என்று முடிவு செய்தனர்.

கம்பனுக்கு சில பலவீனங்கள் உண்டு. அழகிய பெண்களின் அணுக்கத் தொடர்புகளும் அவற்றில் ஒன்று. அரசவையில் மிகச்சிறந்த நாட்டியக்காரி ஒருத்தி இருந்தாள். பொன்னி என்பதே அவள் பெயர். பொறாமைக்காரர்கள் அவளிடம் சென்று ஒரு சிறு திட்டத்தைக்கூறி அதற்காகக் கையூட்டும் கொடுத்தனர். அத்திட்டத்தின்படி, பொன்னி கம்பனைத் தன் வீட்டிற்கு அழைத்து, விருந்தெல்லாம் செய்வித்து மகிழ்வித்தாள். அந்த மகிழ்ச்சியின் போதையில் கம்பன் மயங்கிப்போனான். அத்தருணத்தில் பொன்னி அவனிடம் ஒரு வரம் கேட்டாள். தப்பாமல் தருவதாகக் கம்பனும் வாக்குக்கொடுத்தான்.

ஓர் ஓலை நறுக்கை எடுத்துவந்து கம்பனிடம் கொடுத்து, அதில் கம்பனுடைய கையாலேயே 'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை' என்றெழுதிக் கையெழுத்திடச் செய்தாள். அந்த ஓலை, பொறாமைக் குழுவின் கைக்குச் சென்றது.

அடுத்தநாள் அரசவையில் பலரும் கூடியிருக்கும்போது, அந்த ஓலை அரசனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அரசன் அதனைப் பார்த்து அதிர்ந்துபோனான். மனதில் சற்று மகிழ்ச்சியும் வந்தது.

'கம்பரே! இது உம் கையெழுத்துதானா, பாரும்?'

'ஆமாம். அதில் என்ன சந்தேகம்?'

'இப்படியெல்லாம் நீர் செய்வீர் என்று யாம் கனவிலும் நினைத்ததில்லை. உம்மை இந்த அரசவையில் வைத்திருப்பதேகூட எமக்குக்கேவலம்'.

'இருங்கள் அரசே! அதில் உண்மையைத்தானே எழுதியிருக்கிறேன்.'

'என்ன உண்மை?"

'தாசி பொன்னிக்குக் கம்பனடிமை என்பது உண்மை. தாயாகிய ஸ்ரீ அதாவது தாசி என்னும் பொன்னி - அதாவது பொன்மகள் - லட்சுமிக்குக்
கம்பன் அடிமை என்று எழுதியிருக்கிறேன். சாத்திரவிரோதமாய் நான் என்னத்தை இங்கு செய்தேன்?'


இதைக் கேட்ட அரசனுக்கு கோபம் தலைக்கேறியது. கம்பரை நாடுகடத்துவதாக சொன்னான். கம்பருக்கோ ஒரே கோபம். “நீ யாரடா ஜாட்டான் என்னைக் கடத்துவது, நானே உன் அண்மையை விட்டு செல்கிறேன்” எனக்கூறி விட்டு கீழ்க்கண்ட பாடலைச் சொன்னார்:

அவர் பாடியது:
`மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதோ
உன்னை அறிந்தோ தமிழை ஓதினேன்-- என்னை
விதந்தேற்றுக் கொள்ளா வேந்துண்டோ உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு'

கற்றோருக்கு சென்றவிடமெல்லாம் சிறப்பு என்பதால் அவர் தயங்கவேயில்லை. ஊரூராகச் சென்று பிறகு சேர மன்னன் அவைக்கு சென்றார். அங்கு தான் யார் என்று கூறாது அரசனிடம் அடைப்பக்காரனாக சேர்ந்தார். அரசருக்கு வெற்றிலை மடித்துத் தருவதுதான் அடைப்பக்காரனுக்கு வேலை. கம்பரும் தனது புலமையை வெளிக்காட்டாது தனக்கிடப்பட்ட வேலையை செய்து வந்தார்.

ஒரு நாள் அவையில் உள்ள புலவர்கள் கம்ப ராமாயணப் பாடல் ஒன்றை விவாதித்தனர். ஒவ்வொருவரும் வெவ்வேறுவித தவறான பொருளைத் தந்து பேச அதைப் பொறுக்க மாட்டாத கம்பர் அரசரின் அனுமதியுடன் குறுக்கிட்டு சரியான பொருளைக் கூறி தான் கூறியதை நிரூபணமும் செய்தார். அரசருக்கு மகிழ்ச்சி. ஆகவே அவரையும் புலவர்களுக்கு சமமான இடத்தில் அமரச் செய்து கௌரவித்தார்.

சோழ நாட்டு புலவர்கள் போலவே சேர நாட்டு புலவர்களுக்கும் இது பிடிக்கவில்லை. ஆகவே கம்பரை மட்டம் தட்ட சமயம் பார்த்திருந்தனர். அரசனின் நாவிதரை சரிக்கட்டி அவரை அரசவையில் அரசன் முன்னிலையில் கம்பரை வெகு நாளைக்கு முன்னால் காணாமல் போன தன் அண்ணன் என கூறச் செய்தனர். கம்பருக்கு புலவர்களின் சூழ்ச்சி புரிய அவரும் நாவிதர் தனது தம்பியே என கூறி அவரை அணைத்து கொள்ள அரசனுக்கு திகைப்பு மற்றும் கோபம். ஏனெனில் நாவிதர் அரசவையில் புலவராக அமர அக்கால சாதிச்சட்டங்கள் இடம் தரவில்லை.

நாவிதரின் வீட்டுக்கு சென்ற கம்பர் தனக்கும் அரசருக்கு முகச்சவரம் செய்யும் சந்தர்ப்பம் வேண்டும் எனக் கேட்டு அடுத்த நாள் அரசருக்கு சவரம் செய்ய சென்றார். அதற்கு முன்னால் கலைவாணியை துதித்துப் பாடி அவரை பிரத்யட்சமாக வரச் செய்து அவரிடமிருந்து ஒரு காற்சிலம்பை பெற்று கொண்டார். இப்போது கம்பர் சவரம் செய்ய செல்கிறார். அரசனுக்கோ என்ன செய்வது என்ற தர்ம சங்கடம். கம்பர் அதையெல்லாம் கண்டு கொள்ளாது, சவரத்தை ஆரம்பிக்கிறார். வேலை முடிந்த பிறகு, கலைவாணியின் ஒற்றைச் சிலம்பை அரசருக்கு தந்து அது தனது குடும்ப சொத்து என்றும், இன்னொரு சிலம்பு தன் தம்பியிடம் இருப்பதாகவும் கூறி, இந்த உசத்தியான சிலம்பு கஜானாவில்தான் இருக்க வேண்டும் என்பதால் அதை அரசருக்கு தான் தருவதாக கூறுகிறார்.

அரசனும் மகிழ்ச்சியுடன் அதை வாங்கி கொண்டு அரண்மனை நாவிதரை வரவழைத்து இன்னொரு சிலம்பையும் கொண்டு வருமாறு பணிக்கிறான். நாவிதர் பேய் முழி முழிக்கிறார். தன்னிடம் இல்லை எனக் கூற அவரை கழுவிலேற்ற ஏற்பாடு செய்யுமாறு அரசன் கூற, படேலென கம்பர் காலில் விழுந்த நாவிதர் நடந்ததையெல்லாம் கம்பருக்கும் அரசருக்கும் கூறி கதறுகிறார். கம்பரும் நாவிதருக்கு பரிந்து பேசி மன்னனது கோபத்தை தணிக்கிறார்.

கம்பர் கலைவாணியை மீண்டும் வேண்டி பாட, அவரும் அரசன் பார்க்கும்போதே கம்பர் முன்னால் தோன்றி தனது சிலம்பை திரும்பப் பெற்று மறைகிறார். பிறகு தான் யார் என்ற உண்மையையும் கம்பர் அரசனுக்கு கூறுகிறார். அரசருக்கு மகிழ்ச்சி ஒரு புறம். குற்றவுணர்ச்சி மறுபுறம். “ஐயோ தமிழ் செல்வரான உம்மைப்போய் நான் அடைப்பகாரனாக வைத்து அபசாரம் செய்தேனே, இதற்கு நான் எவ்வாறு பிராயசித்தம் செய்வது” எனக் கேட்க, கம்பர் ஒரே ஒரு வேண்டுகோளை கூறுகிறார். அது பிறகு.

இதற்கிடையில் சோழ மன்னன் கம்பரை வெளியேற்றிய தனது முட்டாள்தனத்துக்கு வருந்துகிறான். சில காலம் கழித்து கம்பர் சேர மன்னன் அவையில் இருப்பதை கேள்விப்பட்டு சகல மரியாதைகளையும் ஒரு தூதன் மூலமாக சேர மன்னனுக்கு அனுப்பி கம்பரை தனது அவைக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறான். கம்பரின் அனுமதி பெற்று சேரனும் ஒத்து கொள்கிறான். கம்பரை ஒரு பல்லக்கில் இருத்தி சோழ நாட்டு எல்லைக்கு கம்பருடன் சேரனும் ஒரு அடைப்பக்காரன் ரூபத்தில் செல்கிறான். (இதுதான் கம்பர் சேரனிடம் கேட்டு கொண்ட கோரிக்கை). ஊர் எல்லையில் கம்பர் சேரனுக்கு விடை கொடுத்து அனுப்புகிறார். அடைப்பக்காரன் தந்த வெற்றிலையை வாயில் போடாது தனது விரல்களுக்கிடையே பிடித்து வைத்திருக்கிறார். சோழன் இது என்ன சமாச்சாரம் எனக் கேட்க, அடைப்பக்காரராக வந்தது சேர மன்னன் என்றும், அப்போதும் அவன் அரசனே என்றும், தான் அந்த வெற்றிலையை வாயில் போட்டிருந்தால் அரச பதவிக்கு அது அவமானம் என கம்பர் கூறுகிறார்.

நன்றி: விநோத ரசமஞ்சரி (சமீபத்தில் 1880-களில் வீராசாமி செட்டியார் அவர்களால் தொகுக்கப் பெற்றது).

இதில் சில விஷயங்கள் கவனிக்க வேண்டும். கைவசம் வித்தை இருந்தால் எங்கு சென்றாலும் பிழைத்து கொள்ளலாம். இக்காலத்தில் கூட திறமைசாலிகள் பலர் அலட்சியமாக கைவசம் இருந்த வேலையை விட்டு விட்டு வேறு வேலை தேடி செல்கின்றனர். அதற்கு அவர்கள் தங்கள் மேல் வைத்துள்ள தன்னம்பிக்கையே காரணம். அம்மாதிரி இருப்பவர்களை கம்பெனிகளும் கௌரவமாகவே நடத்தும். எல்லாம் ஒரு quid pro quo தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

1 comment:

ENNAR said...

சார் கம்பன் ஒரு வம்பன்
கம்பங்கொல்ல காவல் காரன்தானே

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது