4/17/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.04.2009

இஸ்ரவேல் உருவான கதை:
இது சம்பந்தமாக வாஞ்சூர் என்பவர் பா.ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” என்னும் புத்தகத்திலிருந்து தனது வலைப்பூவில் மெனக்கெட்டு அத்தனை அத்தியாயங்களையும் நகலெடுத்து ஒட்டியுள்ளார். ஆனால் வேறொன்றுமே செய்யவில்லை. அதாவது தனது கருத்தை எங்குமே கூறவில்லை. அதிலும் முக்கியமாக தம் தரப்புக்கு சங்கடம் வரும் விஷயங்களுக்கு இடிபோன்ற மௌனமே அவரது பதில். இந்த வரிசையில் அவரது கடைசி இடுகைக்கு நான் இட்ட இப்பின்னூட்டம் இதோ.

“பொறுமையாக எல்லா பதிவுகளையும் நகலெடுத்து ஒட்டியுள்ளீர்கள். அந்த பொறுமைக்கு பாராட்டு. ஆனால் அத்துடன் போதும் என இருந்து விட்டீர்களா? பலவிஷயங்களுக்கு உங்களது எதிர்வினையை எதிர்பார்த்து ஏமாந்தேன். முக்கியமாக கீழ்க்கண்டவற்றுக்கு:

1. 1948-ல் இரு தேசங்கள் உருவாக ஐ.நா. சபை வழிவகுத்தது. ஆனால் அவற்றில் இஸ்ரேல் மட்டுமே செயல்படத் துவங்கியது. பாலஸ்தீனம் செயல்படவில்லை என்பதற்கும் மேல், இஸ்ரவேலர்களை ஒழிக்கப் போவதாக அரபு தேசங்கள் தந்த பொய் உறுதிகளை நம்பி இருந்த பிரதேசங்களையும் எகிப்திடமும் ஜோர்டனிடமும் கோட்டை விட்டதுதானே நடந்தது? இதில் ஜோர்டானும் எகிப்தும் கௌரவமான முறையில் நடந்து கொண்டதாக நம்புகிறீர்களா?
2. ஜெரூசலத்தில் யூதர்களின் அழுகைச்சுவரை 1967 வரை ஜோர்டான் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்தது.
3. பாலஸ்தீனர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் அராஃபாத்தின் விதவையிடம் போய் மாட்டிக் கொண்டது”.

பின்னூட்டத்தை அவர் அனுமதிப்பார் என்றே நினைக்கிறேன்.

பாரா அவர்களிடம் இத்தொடர் சம்பந்தமாக நான் 2005-ல் பேசியபோது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினேன். அதாவது, நான் ஒரு தீவிர இஸ்ரவேல ஆதரவாளன். ஆகவே அவர் தொடரில் வரும் தகவல் பிழைகளை கண்ணில் எண்ணெய் விட்டு பார்ப்பேன் என்பதே அது. அவ்வாறே அவதானித்து அவ்வப்போது பின்னூட்டங்களும் இட்டேன்.

2. அய்யா, அம்மா, அப்பப்பா:
சமீபத்தில் எண்பதுகளின் துவக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி குழுவினரால் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. எதிர்ப்பார்க்கும் அளவிற்கு நல்ல காமெடி. இருப்பினும் இந்த பஞ்சாமிர்தத்தில் அதன் ஒரு பகுதியையே வலியுறுத்துவேன். நான் இட்ட அந்த நாளும் வந்திடாதோ என்னும் பதிவுக்கு ஆதாரங்கள் இந்த நாடகத்திலும் உள்ளன. நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி ஒரு கவலையில்லாத பிரும்மச்சாரியாக அறிமுகமாகிறார். அவரது நண்பர் டில்லி கணேஷ். தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் அவர் பல கஷ்டங்கள் பட்டு திருமணம் செய்து கொள்கிறார். புதிதாக வந்த மனைவியோ அவரது சுதந்திரங்களுக்கு தடை போடுகிறார். தனது அன்னையை வீட்டுக்கு வரவழைத்து மாமியார் மருமகள் சண்டையில் தன்னை கவனிக்காது சுதந்திரமாக இருக்க விடுவார்கள் என நம்பி அவ்வாறே செய்ய, அவர்கள் இருவரும் அனியாயத்துக்கு சேர்ந்து இழைந்து இவரை இன்னும் கட்டுப்படுத்த நொந்து போகிறார். திடீரென எதிர்பாராத தருணத்தில் நிஜமாகவே சண்டை வந்து அவர்கள் இருவருமே காத்தாடியை திராட்டில் விட்டு செல்கின்றனர். தான் ஜாலியாக பழையபடி பிரும்மச்சாரி வாழ்க்கையையே வாழ்லாம் என நினைத்து அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவருக்கெதிராக முடிந்து அவர் திண்டாடுகிறார். மீதி கதை இங்கு தேவையில்லை. நான் கூறவந்தது என்னவென்றால், எதையுமே பழைய நிலைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதே.

விஞ்ஞானத்தால் வாழ்க்கை அவசரமயமானது என்று சொல்பவர்கள் அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளின் துணையின்றி ஒரு நாள்கூட தாக்கு பிடிக்கவியலாது என்பதே நிஜம். இணையத்திலிருந்து விடுதலை பெர விரும்பி கிராமங்களுக்கு சென்றாலும் தமிழ்மணம் பார்க்காமல் விரல்கள் நடுங்கி அருகில் உள்ள சைபர் கஃபேக்கு படையெடுப்பதே நடக்கிறது.

சேனல்கள் செய்யும் கூத்து:
விடுமுறைகள் வந்தாலே கடுப்பாக இருக்கிறது. அவை வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ப்ரொக்ராம் ப்ரமோஷன்கள் நம்ம அறைகளில் உயர் டெசிபல்களில் அலறல்களை உருவாக்குகின்றன. நாம் பார்க்கும் ரெகுலர் நிகழ்ச்சிகள் காலணா பிரயோசனம் இல்லாத திரைப்படங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நேற்று (16.04.2009) ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக அதிமுகவின் எலெக்‌ஷன் பிரசார ஆரம்ப நிகழ்ச்சியின் லைவ் ரிலே காட்டப்பட்டது. நறநற.

அன்புடன்,
டோண்டு ராகவன்

6 comments:

மெனக்கெட்டு said...

//
விடுமுறைகள் வந்தாலே கடுப்பாக இருக்கிறது. அவை வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ப்ரொக்ராம் ப்ரமோஷன்கள் நம்ம அறைகளில் உயர் டெசிபல்களில் அலறல்களை உருவாக்குகின்றன. நாம் பார்க்கும் ரெகுலர் நிகழ்ச்சிகள் காலணா பிரயோசனம் இல்லாத திரைப்படங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.
//

சரியாகச் சொன்னீர்கள். இவர்கள் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

விளம்பரங்களுக்கு மட்டும் வால்யூமை ரொம்ப அதிகப்படுத்தி விடுகிறார்கள்.

டக்கென்று Quick View பட்டனை அழுத்தி அடுத்த சானலுக்கு போய்விட வேண்டியது தான்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

/இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நேற்று (16.04.2009) ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக அதிமுகவின் எலெக்‌ஷன் பிரசார ஆரம்ப நிகழ்ச்சியின் லைவ் ரிலே காட்டப்பட்டது./

:) :)

எதற்கு? இரண்டும் ஒரே வேலையைத்தானே செய்கின்றன :)

வஜ்ரா said...

இஸ்ரேல் உருவான கதை பற்றியது:
நீங்கள் ஏன் வாஞ்சூர் அவர்கள் பதிவுக்கெல்லாம் மெனக்கெட்டு போய் உங்கள் பின்னூட்டம் போடுகிறீர்கள் ?

உங்கள் தீவிர இஸ்ரேல் ஆதரவு நிலையை எப்படி மாற்ற முடியாதோ அதே போல் தான் அவரது தீவிர இஸ்ரேல் எதிர்ப்பு நிலையும் மாறாது.


அவர்களெல்லாம் உலகில் வெட்டவெளிச்சமாக இருக்கும் உண்மையைவிட அரபு நாட்டில் நிலவும் வதந்திகளை மேலாக மதித்து நம்புபவர்கள்.

Anonymous said...

1)தடித்த வார்த்தையை பிரயோகிப்பவர்களுக்கு நிதானத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு பதிவு இடுவீர்களா ?

2)ஒரு பதிவர் ( பெரியவர்)வெண்ணை என்றெல்லாம் எழுதுகிறாரே? (ஒரு அனானியை திட்டுகிறாராம்) அவரின் தரம் அவ்வளவு தானா ?


2அ)ஒருவன் குடித்து விட்டு உளறினால் அவனுடன் சண்டை போட நாமும் குடிப்பது போல இல்லையா ?

2 ஆ)வயதுக்கு தகுந்த முதிர்ச்சியை ஏன் ஆண்டவன் எல்லாருக்கும் தருவதில்லை ?

சந்துரு.

வால்பையன் said...

//எதையுமே பழைய நிலைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதே. //

ர்ரிவர்ஸபிள் என்பது இது தானே!
நான் கூட ஒரு கதை எழுதினேனே!

வால்பையன் said...

//ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக//

எல்லா பதிவிலும் இந்த ஊசிபோன சட்னியை தொடுவது என்னவோ போலிருக்கு!
அதுக்கு தனியா ஒரு பதிவு போடுறிங்கல்ல!
ஒரு நாள் மக்கள் நிம்மதியா தான் இருக்கட்டுமே!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது