11/29/2009

சூரியின் ஜெஸ்டஸ் - வாரத்தின் எட்டாம் நாள் - 2


இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாக பிரித்தேன். மூன்று பகுதிகள் வரும் என எண்ணினேன். ஆனால் அது நான்காக வரும் போலுள்ளது


முதல் அத்தியாயம் இங்கே

இரண்டாம் அத்தியாயம் முதல் பகுதி இங்கே




அத்தியாயம் - 2
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 2)


திருடர்களில் ஒருத்தன் நீல நிற கால்சட்டை போட்டிருந்தான். இன்னொருத்தன் வெள்ளை நிறத்தில். நீலன் ஏதோ உறுமினான். பையனும் பெண்ணும் தயக்கத்துடன் தங்கள் கைக்கடிகாரங்களை தந்தனர். அவர்களது செல்பேசிகளும் பறிக்கப்பட்டன. எல்லாவற்றையும் நீலன் தான் வைத்திருந்த பையில் போட்டுக் கொண்டான்.

அடுத்தபடியாக பறிக்கப்பட்டன பர்சுகள் மற்றும் கிரெடிட் கார்டுகள். அவற்றைத் தர சற்றே சுணங்கியதால் அந்தப் பையனுக்கு நீலன் கையில் இருந்த துப்பாக்கியின் பின்கட்டையால் மோவாய் மேல் நச்சென அடி கொடுத்தான். பையன் வாயிலிருந்து ரத்தம் கொப்பளித்தது. வெள்ளையன் தன் பங்குக்கு பையனது கையில் கத்தியால் ஒரு கீறல் போட்டான். இப்போது பையன் மற்றும் பெண்ணிடமிருந்தும் எல்லா எதிர்ப்பும் சுத்தமாக அடங்கியது. பெண் மாட்டியிருந்த தோள்மாட்டிப் பையின் பட்டைகள் அறுக்கப்பட்டன. அதிலிருந்த மடிக்கணினியும் ஐபேடும் நீலனது பைக்குள் தஞ்சம் புகுந்தன. இனிமேல் திருட ஒன்றும் மிஞ்சவில்லை.

இதையெல்லாம் பார்த்து கொண்டிருந்த எனக்கு ரத்தம் கொதித்தது. உடல் கோபத்தால் நடுங்கியது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? நான் என்ன சினிமா கதாநாயகனா, திருடர்களை நான்கைந்து டிஷும் விட? நான் சுபாவத்தில் அமைதியை விரும்பும் கோழைதானே. பாகஸ் என் தோளைத் தொட்டு அமைதியாக இருக்குமாறு சைகை செய்தார்.

நீலன் தன் பையிலிருந்து நீண்ட நைலான் கயிறு ஒன்றை எடுத்தான். அதை இரண்டாக வெட்டினான். துப்பாக்கி முனையில் அப்பையனையும் பெண்ணையும் நிறுத்தி பக்கத்தில் இருந்த இரு பனைமரங்களில் அவர்களை சேர்த்து கட்டினான். பையன் கெஞ்சினான்.

“அதான் எல்லாத்தையும் எடுத்துக்கிட்டீங்களே. எங்கள போக விடுங்க”

நீலன் சிரித்தான்.
“கவலைப்படாதே கண்ணு. நாங்க இப்போ போய் ஒன்னோட அப்பாக்கு ஃபோன் போட்டு நீ இங்கே இருக்கறதை சொல்லிடறோம். ஒன்னோட அப்பனோட நம்பரைச் சொல்லு”.

திருடங்க ரெண்டு பேரும் போவதற்கான தயாரிப்பில் இருந்தனர். திடீரென வெள்ளையனுக்கு பெண்ணைப் பார்த்து ஒரு சபலம் வந்தது. நீலனைப் பார்த்து சொன்னான்,
“குட்டி ஷோக்காத்தான் இருக்கா, ஹாரி. அவளோட கொஞ்சம் விளையாடிட்டு வரேன். உனக்கு வேணாமா”? “ஒவ்வொருத்தரா செய்வோம்”
நீலன் சொன்னான், “டாஸ் போட்டு பார்ப்போம் யார் முதல்லங்கறதை”

பெண் கத்த ஆரம்பித்தாள். வன்புணர்வு என்பதே சீரியஸ். அதிலும் அதுக்கு கடுமையான தண்டனை வேறு. ஆகவே இவங்க காரியம் ஆனதும் நிச்சயமா சாட்சிங்க யாரையும் விட்டு வைக்க மாட்டாங்க. சாதாரண திருட்டாக ஆரம்பித்தது இப்போது வன்புணர்வு மற்றும் கொலையாக உருவெடுக்க ஆரம்பித்தது. பையனும் கத்த ஆரம்பித்தான். வெள்ளையன் அவன் முகத்தைக் கத்தியால் கீறினான்.

“வாயை மூடு, இல்லேன்னா சங்கை அறுத்துடுவேன்” பையனின் சட்டைக் காலரில் ரத்தம் சொட்டியது. வெள்ளையன் பெண்ணை நோக்கி நிதானமாக நடந்து வந்து, அவள் துணிமேல் கையை வைத்தான்.

இப்போது பாகஸ் வெளிப்பட்டார். அதுவும் பாடிக் கொண்டே. “புதிய வானம், புதிய பூமி” என்று அபத்தமான பாடிக்கொண்டே, மைக்கேல் ஜாக்ஸன் நடன அசைவுகள் வேறு.

திருடர்கள் தாங்கள் செய்யவிருந்த காரியத்தை சற்றே நிறுத்தி பாகஸை அதிசயத்துடன் பார்த்தனர். பாகஸோ கவலையேபடாது அவர்கள் இருக்குமிடம் நோக்கி நகர்ந்தார். நானும் வெளியே வந்து, பாகஸை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.

பாகஸ் மரத்துடன் கட்டப்பட்டிருந்த ஆணையும் பெண்ணையும் அணுகினார். “ஐ, ஒரு பொண்ணு, ஒரு பையன்” எனக்கூறிக் கொண்டே கைகளைத் தட்டியவாறு டப்பாங்குத்து போட்டார். திருடங்களை பார்த்து ”திருடங்க” என கத்திக் கொண்டே சிங்கி அடித்தார். வேகமாகத் தன்னைத் தானே சுற்றி, ஒரு குதி குதித்து உட்கார்ந்தார். திருடர்களுக்கு ஒரே குழப்பம், அது அவர்களது கண்களில் தெரிந்தது. என்னைப் பார்த்ததும் அவர்களது பார்வை கடுமையாயிற்று.

பாகஸ் சட்டென எழுந்து என்னருகில் ஓடிவந்தார். “பாத்தியா கண்ணா, இங்க ஒரு பொண்ணு, ஒரு பையன், ரெண்டு கெட்டவங்க இருக்காங்க. இவங்க எல்லோருமே என்னோட கற்பனையில் உதித்தவங்கதான்”.

நீலன் துப்பாக்கியால் என்னைக் குறிவைத்தான். “நீ யாருடா? யாரு இந்தக் கேனையன், ஒன்னோட அப்பனா”?

ஒண்ணுமே தெரியாத பாவனையில் நான் புன்னகை செய்தேன். “அவர் என்னோட அப்பா இல்லை. எனக்கு மாமா முறையாகணும். நீங்களே பாத்தீங்க இல்ல? அவர் ஒரு பைத்தியம், வீட்டை விட்டு ஓடி வந்துட்டாரு. நான் அவரை அழச்சிண்டு போகத்தான் வந்திருக்கேன்”.

அவன் என்னை நம்பவில்லை என்பது அவன் கண்களிலிருந்தே தெரிந்தது. என்னைக் காலில் சுடறதா அல்லது சங்குல சுடறதான்னு அவன் யோசிக்கிற மாதிரி எனக்கு பட்டது. எனக்கு பயத்தில் மூத்திரம் முட்டிக் கொண்டு வந்தது. பாகஸ் மறுபடியும் உரக்கச் சிரித்தார்.  அவனிடம் அவர் சொன்னார், “நீயும் என் கனவுல வர பாத்திரம்தான்”.

பிறகு பாகஸ் என்னிடம் ஒரு பேராசிரியரின் தோரணையில் ஆக்ஸ்ஃபோர்ட் உச்சரிப்புடன் பேச ஆரம்பித்தார். “தேவையில்லாம என்னை சந்தேகப்பட்டியே, இப்ப புரியறதா? இந்த நிகழ்ச்சிகள் எல்லாமே என்னுடைய கற்பனைகள்னு ஒனக்கு புலப்படலையா. நீ இப்போ நிஜம்னு நெனச்சுட்டு இருக்கிறது என்னோட கனவைத்தான்”.

எனக்கு சுத்தமா பாகஸ் என்ன சொல்லறார்னு புரியவில்லை. திருடங்களுக்கும்தான். ஆனா அவங்க கிட்டே ஆயுதம் இருந்தது. மேலும் அவங்க ராட்சசன் கணக்கா வேறு இருந்தாங்க. ஆகவே பயம் எல்லாம் அவங்களுக்கு இல்லை.

நீலன் கடுமையான தொனியில் பாகஸிடம் சொன்னான், “டேய் பைத்தியம், பேசாம ஒதுங்கிக்கோ. ஒன்னோட மருமானை சுட்டுடுவேன். என்னோட கூட்டாளி ஜக் உன் பின்னாலே கத்தியைச் சொருகி மேலே ஏத்துவான்”.

பாகஸ் மெதுவாக நகர்ந்து வெள்ளையனை நோக்கி நின்றார். ஜக் கத்தியை இங்குமங்குமாக ஆட்டினான். அவர் கேனத்தனமாக சிரித்து விட்டு சொன்னார், “நீ என்னோட கனவுல இப்போ இருக்கே. உன் கையில இருக்கறது பிளாஸ்டிக் கத்தி”. அவரது கேலிச்சிரிப்பு ஜக்கை கோபப்படுத்தியது. கத்தியை அவர் வயிற்றில் சொருகினான். படக் என ஒரு சத்தம் கேட்டது. கத்தி மூன்றாக உடைந்தது. மூன்று துண்டுகளும் பாகஸ் கைக்கு எப்படி வந்தன என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. நீலனைத் தாக்கலாமா என அபத்தமாக ஒரு கணம் யோசித்து அதை கைவிட்டேன். நம்மால் ஆகாத காரியம் என்பது வெள்ளிடைமலை. அவன் கையில் துப்பாக்கி வேறு, எப்போ சுடுவான்னும் புரியவில்லை. பாகஸ் என்னை நோக்கி ஆக்ஸ்ஃபோர்ட் பேராசிரியர் ரேஞ்சில் மேலே பேசினார்.
“எனது அருமை முட்டாள் நண்பனே, இந்த கேடுகெட்ட ஆசாமி கிட்ட இருக்கிற இரும்புக் கத்தி பிளாஸ்டிக்கால் ஆனது என கற்பனை செய்தேன். அப்படியே ஆயிற்று. பாவம் இந்தத் திருடன்”.

ஜக் தன் கரத்தை முஷ்டியாக்கி பாகஸை பார்த்து ஒரு குத்து விட்டான். பாகஸ் கேஷுவலாகச் சொன்னார், “இதப் பார்றா, இந்தாள் கை வெறும் களிமண்ணால் ஆனதுதானே, பாவம் இவனுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை”?

ஜக் வேகமாகவே குத்தினான். பிறகு ஒரு பெரிய கத்தல் அவனிடமிருந்து வந்தது. அவன் முஷ்டி உடைந்து அது முழுதும் கொழகொழவென ரத்தத்தால் நனைக்கப்பட்டது. இதற்கு நடுவில் பாகஸின் ஒரு கால் அவன் முழங்காலுக்கு கீழே உதைத்ததில் அந்தக்காலும் முறிந்தது. கீழே விழுந்த ஜக் ஒரு நிமிடம் வலியில் புழுவாய் நெளிந்தான். மயக்கமானான்.
இப்போது நீலன் பாகஸை சுட்டான். வெறுமனே கிளிக் என்னும் சப்தம் மட்டும் கேட்டது. பாகஸ் கேலியாகச் சிரித்தார், “இவ்வளவோ கற்பனை செய்யறவன் துப்பாக்கியில் குண்டு இல்லைன்னு கற்பனை பன்ண முடியாதா? இப்போ மறுபடியும் துப்பாக்கியை இயக்கினால், குண்டு எதுவும் வராது. குசுதான் வரும்” என்றார்.

ஹாரி மறுபடியும் சுட்டான். பயங்கர நாத்தத்துடன் அதிலிருந்து வாயுதான் பிரிந்தது. சகிக்க முடியாமல் அவன் மூக்கை மூடிக் கொண்டான்.
“உன் துப்பாக்கியால் இதைத்தான் செய்ய முடியும்” என பாகஸ் சீரியசாகக் கூறினார்.

இப்போது அவரது தத்துவ விவாதம் ஹார்வார்ட் உச்சரிப்புடன் தொடர்ந்தது.
“கௌபாய்ஸ் உபயோக்கிற சுருக்குக் கயிறு பற்றி உனக்குத் தெரியும்தானே. இப்போ என் கையிலே அது இருக்கு, அதை நான் இந்தத் திருடன் கழுத்தை நோக்கி வீசி அவனைப் பிடிக்க முடியும்னு கற்பனை செய்யறேன். ஸ்பெயின் தேசத்து ஜல்லிக்காளையையே இக்கயிற்றை மாட்டி இழுத்து கீழே தள்ள என்னால் முடியும்போது இவன் வெறும் சுண்டைக்காய்தானே? இப்பப் பாரு அவன் முழிக்கிறதை”?

பாகஸால் வீசப்பட்ட சுருக்குக் கயிறு திருடன் கழுத்தில் மாட்டி இழுக்கப்பட்டதில் அவன் தொபுக்கடீர் என விழுந்தான். அவன் தரையை முத்தமிடும் முன்னரே பாகஸ் அவன் மேல் சிறுத்தை போல பாய்ந்து அவன் கரங்களை அவனது முதுகுப்பக்கம் வைத்து மூட்டைக் கட்டி உருட்டிவிட்டு, எழுந்து நின்று தன் கைகளைத் தட்டிக் கொண்டார். என்னால் என் கண்களையே நம்ப முடியவில்லை! அவற்றை கசக்கிக் கொண்டேன். நான் விழித்திருக்கிறேனா, கனவு காண்கிறேனா என்றே புரியவில்லை.

தன் உள்ளங்கைகளை ஓன்றுக்கொன்றுடன் தேய்த்தவாறு பாக்ஸ்டன் ஒரு கணம் நிதானித்தார்.
“இப்போதைக்கு திருடங்க பிரச்சினை இல்லை. அந்தப் பெண்ணையும் பையனையும் பார்ப்போம்”.

இருவரது கட்டுகளையும் அவிழ்த்து அவர்களை விடுவித்தோம். நடந்த எதையும் நம்ப முடியாமல் நேரில் பார்த்துக் கொண்டிருந்த அவர்கள் முகத்தில் இப்போது நிம்மதி பரவியது.

பெண் தன்னுடன் வந்த நண்பனைப் பார்த்து கைகளை பிசைந்தவாறே கூறினாள், “இவனுக்கு பலமா அடிப்பட்டிருக்கு. டாக்டர் கிட்டே கூட்டிண்டு போகணும். நாங்க வந்த கார் ஹைவேயில் நிக்கறது”.
பாகஸ் பையனின் காயங்களைப் பரிசோதித்தார். என்னைப் பார்த்து சொன்னார், “உனக்கு நிறையா லெக்சர் பண்ணியாச்சு. இப்போ இந்தப் பையனோட முறை”

பையனைப் பார்த்து கூறினார், “புதுசுப்புதுசா புத்தகங்கள் படிக்கிறது உனக்கு பிடிக்கும் இல்லையா”. பையனுக்கு பாகஸ் சொல்வது புரியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிந்தது.
“என்ன ஜான், நேத்திக்குத்தானே விஷுவலைசேஷன் பத்தி ஒரு புத்தகம் படிச்சுட்டு, இப்போ இங்கே இருக்கிற உன் நண்பி மோனிகாவோட அது பத்திப் பேசினாய்”?
“எங்கப் பேர் ஒங்களுக்கு எப்படித் தெரியும்”?
“இப்போ அது ரொம்ப முக்கியமா? ஒன்னோட காயங்களைப் பாக்கறதுதான் முக்கியம். அந்த விஷுவலைசேஷன் முறையையே உபயோகிச்சுப் பாரேன். அதுக்கு இதை விட்டா வேற சந்தர்ப்பம் கிடைக்குமா என்ன”?

ஜான் என்ன சொல்வதென்றே தெரியாது விழித்தான். பாகஸ் அவனை விடுவதாக இல்லை.
“சரி சரி. இப்போ நான் செய்யறதைப் பார். ஒன்னோட கைக்குட்டையைத் தா”.

ஜானுக்கு குழப்பம் அதிகரிப்பது தெளிவாகப் தெரிந்தது. அவனுக்கு சற்று எரிச்சலாகவும் இருந்திருக்கும் போல. ஆனால் இந்த கிறுக்குக் கிழவர் தங்கள் உயிரைக் காப்பாற்றியவர். அவர் சொல்வதையும் செய்துத்தான் ஆக வேண்டும். மோனிகா பொறுமையின்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
பாகஸ் கைக்குட்டையை கையில் எடுத்துக் கொன்டே கூறினார், “நான் என்னோட வந்திருக்கிற இவனுக்கு பலமுறை சொன்னது போல இப்போ ஒன்னோட காயம் ரத்தம் எல்லாம் வெறும் ஜாம்தான். அவற்றைத் துடைத்து விடலாம் என நான் கற்பனை செய்யறேன். அதுங்களையெல்லாம் இப்போ துடைச்சு எடுத்துடறேன்”

பாகஸ் பையனின் கையை தன் ஒரு கையால் பிடித்து நிறுத்தி இன்னொரு கையில் இருந்த கைக்குட்டையால் அவன் காயத்தைத் துடைத்தார். வலியை எதிர்பார்த்த பையன் முகத்தை சுளித்தான். மோனிகா ஆச்சரியத்தில் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தாள். பாகஸ் இப்போது கைக்குட்டையை பையன் கைமேலிலிருந்து எடுத்து அவள் எதிரில் உதறினார். காயம் போயே போச்சு. அதற்கான ஒரு அடையாளம் கூட காயம் பட்ட இடத்தில் இல்லை.

“எவ்வளவு சுலபம் பாத்தியா”, பையனிடம் கூறிய பாகஸ் அதே கைக்குட்டையை அவன் புஜத்தில் இருந்த வெட்டுக் காயத்தின் மேல் வைத்து துடைத்தார் அதுவும் மறைந்தது.

நண்பனும் நண்பியும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.

“என்ன, நம்ப முடியல்லியா? நம்பிக்கைதான் முக்கியம். இந்தா பெண்ணே இப்ப நீயே அவன் மோவாயை துடைச்சுடு”, என்று கூறியவாறே ஜெஸ்டஸ் அவளிடம் கைக்குட்டையை கொடுத்தார். தயக்கத்துடன் அதை கையில் வாங்கிய அப்பெண் ஜானின் முகத்தை உற்று நோக்கினாள்.
“தயங்காதே”, பாகஸ் உற்சாகமளித்தார்.

மனதை திடப்படுத்திக் கொண்டு அப்பெண் மிருதுவாக பையனின் முகத்தையும் மோவாயையும் துடைத்தாள். அவ்வாறு செய்யும்போது பயத்தில் அவள் கண்கள் மூடின. ஜான் அவள் கையிலிருந்து கைக்குட்டையை எடுத்து பலமாக உதறினான். அவள் கண்ணைத் திறந்து பார்த்தாள். முகம் பழையபடி ம்ருதுவாக, அப்போதுதான் சலூனிலிருந்து ஷேவ் செய்து கொண்டு வந்தது போல மழமழவென இருந்தது.

பெண் பேசினாள், “ஒங்களுக்கு நாங்க ரொம்பவுமே கடமைப் பட்டிருக்கோம். நன்றியெல்லாம் சொல்லி மாளாது, அந்தளவுக்கு நீங்க உதவி பண்ணியிருக்கீங்க”.
ஜான் சொன்னான், “இது கலப்படமில்லாத மேஜிக் சார். எப்படி இதை செஞ்சீங்க”?

பாகஸ் என்னை சுட்டிக்கொண்டே சிரித்தார். “கற்பனைதான், வேறென்ன? இதைத்தான் நான் இன்னிக்கு முழுக்க இந்த ஆள் கிட்ட சொல்லிக்கிட்டிருந்தேன்”.
“கற்பனையா? அவ்ளோதானா”? பையனால் நம்ப முடியவில்லை. தன்னை வைத்து காமெடி செய்வதாக அவனுக்கு பட்டிருக்க வேண்டும்.

பாகஸிடமிருந்து ஒரு அவுட்டு சிரிப்பு வெளிப்பட்டது.
“வேற ஒண்ணுமே இல்லை. இந்த முழு நிகழ்ச்சியுமே என்னோட கனவுதான்.  என் பக்கத்துல இருக்கற இவனும் அதை உறுதி செய்வான். உங்க ரெண்டு பேரையும் கனவுல பார்த்தேன். கிழே விழுந்து கிடக்கும் இந்தத் திருட்டு முட்டாளகளையும்தான். உங்களை காப்பாத்தற இந்த முயற்சியும் என்னோட ஸ்கிரிப்டுதான்”.

காதலர்களுக்கு இப்போது பயம் வந்தது. காப்பாத்தினார் என்பதெல்லாம் சரிதான். ஆனாக்க இன்னும் அரைமணிநேரம் இந்த பெரிசோட இருந்தால் நமக்கும் பைத்தியம் பிடிச்சுடும், பேசாம நன்றி சொல்லிட்டு நடையை கட்டறதுதான் மேல் என அவர்களுக்கு தோன்றியதாக எனக்குப் பட்டது.

விடைபெறும் நோக்கத்தில் கால் மாற்றி கால் மாற்றி நின்றனர். நான் சொன்னேன், “கொஞ்சம் நில்லுங்கள்”. தரையில் கிடந்த திருடர்களது பையை எடுத்தேன்.
“ஒங்களோட பொருட்களை மறந்துட்டீங்களே”, என்றவாறு பையைத் திறந்தேன்.

அவசரம் அவசரமாக தங்கள் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்து கொண்டனர். பெண்ணின் தோள்மாட்டிப் பை வார்கள் அறுந்திருந்தன. அவளால் அதை மாட்டிக் கொள்ள இயலவில்லை.

பாகஸால் சும்மா இருக்க முடியவில்லை. பைஅயை கைகளில் எடுத்துக் கொண்டார். “இங்கும் கற்பனைத்தான் செய்யணும். இப்போ என் கையில ஊசி நூல் இருக்கறதா நினைச்சுக்கறேன். இதோ பையின் வார்களை தைத்து பொருத்துகிறேன் பாருங்க” தைப்பது போல அசைவுகளைத் தர, பை புதிது போல ஆயிற்று. அதை பெண்ணிடம் நீட்டினார்.

இருவரும் நன்றியை வெளிப்படுத்தினர். இருப்பினும் விசித்திரமான நிகழ்வுகளிலிருந்து அப்பால் செல்லவே விரும்பினர்.

பைத்தியக்கார கிழவருடன் கைகுலுக்கவும் அஞ்சினர். பிறகு அந்த இடத்தை விட்டு பைய அகன்றனர்.

பாகஸின் கவனம் ஜக் மற்றும் ஹாரி மேல் திரும்பியது. ஜக்குக்கு மெதுவாக நினைவு திரும்பிக் கொண்டிருந்தது. முனகிக் கொண்டே உட்கார்ந்தான். ஆனால் நிற்க முடியவில்லை. ஒரு காலும் ஒரு கையும் முறிந்த நிலை அவனுக்கு.
“இந்தப் பசங்களை என்ன செய்யலாம்”? என பாகஸ் என்னைக் கேட்டார்.
“பேசாம போலீசைக் கூப்பிட வேண்டியதுதான்”
“வேண்டாம்னு நினைக்கிறேன். ஒன்னோட கற்பனையை பயன் படுத்து. அவங்களுக்கு ஒரு பாடம் கத்துக் கொடுக்கணும்”
“அவங்க எதையும் கத்துப்பாங்கற நம்பிக்கை எனக்கு இல்லை. இதிலே கற்பனை வேறயா, என்னோட கற்பனை எனக்குள்ளேயே எழுந்து எனக்குள்ளேயே முடிஞ்சு போற விஷயம். அத்தால என்ன செய்யற்து? ஆனா ஒங்களோடதோ வெளியேயும் வந்து பல விஷயங்களை நடத்தித் தரதே”.

 பாகஸ் சிரித்தார். ஹாரி இருக்கும் இடத்துக்கு சென்று அவனது கட்டுகளை அவிழ்த்தார். அவன் கொழுத்த கழுத்திலிருந்த சுருக்கையும் நீக்கினார். ஹாரி அவர் மேல் தாவ யத்தனம் செய்தான். அவன் தலையில் டீச்சர் செய்வதுபோல ஒரு குட்டு வைத்து, அவன் காதையும் திருகினார் பாகஸ். காற்றிழந்த பலூன் கணக்காக ஹாரி தொய்ந்தான்.

சில அடிகள் பின்னால் சென்று இருவரையும் அவதானித்தார் பாகஸ். அவர்கள் அசையாமல் கிடந்தனர். இந்த கிறுக்கு பிடிச்சக் கிழவர் என்ன வேணுமானாலும் செய்வார் என்பதை உணர்ந்தது போல அவர்கள் எதிர்ப்பெல்லாம் இழந்து இருந்தனர்.

பாகஸ் அவர்களைப் பார்த்து சொன்னார், “உங்களை போலீஸ் கிட்டே பிடிச்சுக் கொடுத்து ஒண்ணூம் ஆகப்போவதில்லை. கேஸ் நடக்கும், சிறைக்கு போவீங்க, சில மாதங்கள் கழித்து வெளியே வருவீங்க. இதைவிட இன்னும் மோசமாத்தான் நடந்துப்பீங்க. இன்னி ராத்திரி முழுக்க காட்டிலேயே நீங்க கழிச்சாகணும். நீங்க அந்தப் பையனுக்கும் பெண்ணுக்கும் இழைக்க நினைச்ச தீங்குகளை பத்தி நினைச்சுப் பாருங்க, கொஞ்சம் வருந்தப் பாருங்க. அது ஒங்களோட ஆத்மாவுக்கு நல்லது. பேசாம நான் ஒங்களோட எல்லா எலும்புகளையும் முறிச்சுப் போட்டு, ராத்திரியிலே இந்தப் பக்கமா வர கழுதைப் புலிங்க கிட்ட உங்களை விட்டிருக்க முடியும். ஆனா என்ன செய்யறது, உயிர்களை எடுக்கறது எனக்கு பிடிக்காதே. அதனால உங்களை இங்கேயே முழு இரவுக்குமா விட்டுட்டு போறேன். நாளைக்கு சந்திப்போம் என்ன சொல்லறீங்க”?
திருடர்கள் முகத்தில் நிம்மதி பரவியது. பாகஸ் அந்தண்டை போனதும் பைய நழுவறதே வங்க திட்டம்னு எனக்கே புரிந்தது.
சின்னக் குழந்தை கணக்கா பாகஸ் அவங்களை கேட்டார், “என்ன சரிதானே? இங்கேயே ராத்தங்கறதுக்கு சம்மதம்தானே”?
“சரி, சரி” என அவர்கள் ஒரே குரலில் அவசரம் அவசரமாகக் கூறினர்.
எனக்கென்னவோ வேற ஏதோ செய்யப் போறார் இந்தக் கிழவர்னு பட்டது . பாகஸ் மீண்டும் அவர்களைக் கேட்டார், “இந்த காட்டுக்கு ராஜாவை உங்கள் காவலுக்கு வச்சுட்டு போறேன் சரிதானே”?
“சம்மதம், சம்மதம்” என்று போலிப் பணிவுடன் அவர்கள் கூறினார்.

பாகஸ் இரு விரல்களை தன் வாயில் வைத்து ஒரு சத்தமான சீட்டி அடித்தார். அந்த சத்தத்தால் கவரப்பட்ட பறவைகள் புதர்களிலிருந்து சடசடவெனப் பறந்தன.
தூரத்தில் இருந்த இரு மரங்களில் சலசலப்பு ஏற்பட்டது. கிளைகள் வேகமாக அசைந்தன. அந்த அசைவுகளும் நாங்கள் இருந்த இடம் நோக்கியே பரவின.

எட்டடி உயரம் உள்ள இரு ஆஜானுபாகுவான கொரில்லாக்கள் எங்கள் முன்னால் குதித்தன. இந்த ராட்சச கொரில்லாக்களை பார்த்ததுமே திருடர்களின் சப்த நாடிகளும் ஒடுங்கினது வெளிப்படையாகவே தெரிந்தது.

பாகஸ் கொரில்லாக்களை மரியாதையுடன் வணங்கி விட்டுச் சொன்னார், “இந்த காட்டின் ராஜாக்களே, இங்கே இருக்கிற இந்த ரெண்டு பசங்களுக்கும் துணையா இருக்கணும். அவங்க தனியா இருக்க பயப்படறாங்க”.


ஒரு கொரில்லா பாகஸுக்கு எதிர் வணக்கம் செய்தது. ஹாரியின் கழுத்தைப் பிடித்து தூக்கியது. அவனை மேல் நோக்கி வீசியது. அவன் ஐயோ என கத்தியவாறே இருபது அடி உயரத்துக்கு பறந்தான். மீண்டும் கீழ் நோக்கி விழுந்த அவனை ஒரு பொம்மையை பிடிப்பது போல பிடித்து தரையில் வீசியது. காரே மோரே என அவன் தரையில் கிடந்தான். இன்னொரு கொரில்லா ஜக்கை யோசனையுடன் பார்க்க, அவனோ ஒரு கத்தல் போட்டு பயத்தில் சிறுநீர் கழிந்தான். கொரில்லா முகத்தைச் சுளித்து கர்ஜனை செய்தது.

பாகஸ் திருடங்களை பார்த்து சொன்னார், “இதோ பாருங்க, இப்போ என்ன செய்யணுங்கறது உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நினைக்கிறேன். சமத்தா ராத்திரி முழுக்க இங்கேயே இருங்க. என்னோட நண்பர்களுக்கு நீங்க அசைந்தால் பிடிக்காது. ஒரு பேச்சும் கூட இருக்கக் கூடாது. வெளிக்கு போறத தவிர்த்துடுங்க, ஏன்னாக்க கால் கழுவ வழி இல்லை அப்புறம் உங்களுக்கு ஈக்களாலும் கொசுக்களாலும் பயங்கர தொல்லைதான்”.

“ஓக்கே நாளைக்கு பாக்கலாம். அதுவரைக்கும் இவங்கதான் உங்களுக்கு துணை”.
கொரில்லாக்கள் சாவகாசமா திருடர்களுக்கு அருகில் அமர்ந்தன.


பாகஸ் என்னிடம் சொன்னார், “நாம இப்போ போகலாம், ராத்திரி சாப்பாடு வேற காத்திட்டிருக்கு”. ஏதோ கனவில் நடப்பது போல நான் அவர் பின்னால் சென்றேன்.

(தொடரும்)

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/27/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 27.11.2009

பார்ப்பன வெறுப்பு
உயர் சாதீயம் என்னும் ஒருவார்த்தை இருக்கும்போது ஏனய்யா பார்ப்பனீயம் என எழுதுகிறாய் என்றால் நீட்டி முழக்கிக் கொண்டு எழுதுவார்கள்.அதற்கு டிஸ்கியெல்லாம் போடுவார்கள். உத்தபுரத்தில் பிள்ளைமார்கள் அட்டூழியமா, அவர்கள் பார்ப்பனீயத்துக்கு அடிமை. கண்டதேவி தேரில் தகராறா, தேவர்கள் ஆட்டமா, அவர்களும் பார்ப்பனீயத்துக்குஅடிமை. திண்ணீயத்தில் தலித்துகளை மலம் தின்ன வைத்தார்களா, அவ்வாறு செய்த கள்ளர் சாதியினரும் பார்ப்பனீயத்தைத்தான் கடை பிடிக்கிறார்களாம். கீழ் வெண்மணியில் கோபாலகிருஷ்ண நாயுடு செய்த கொலையை கண்டிக்காத பலீஜா நாயுடுவும் பார்ப்பனீயம்தான் செய்வார் என்று சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அவ்வப்போது பார்ப்பனர்களை கூறவில்லை என்று ஒரு டிஸ்கி. யாரை அய்யா ஏமாற்றுகிறீர்? உயர் சாதீயம் என உங்களைச் சொல்லவிடாது தடுப்பது எது? இன்னொரு மகானுபாவர் இருக்கிறார், இசுலாமியர் செய்யும் சாதிவெறி ஆட்டமும் பார்ப்பனீயமாம்.

உயர் சாதீயம் என கூறாது பார்ப்பனீயம் என தில்லாலங்கடி செய்யும் இவர்களை யார் திருத்துவது? ஆகவே அம்மாதிரி பதிவர்களையும் அவர்தம் இம்மாதிரி பார்ப்பன வெறுப்பு விஷங்களை உள்ளடக்கிய பதிவுகளையும் கொள்ளைநோய் போலக் கருதி விலக்குவதே சிறப்பாக இருக்கும்.

ஹுசைன் என்னும் சில்லுண்டிப் பயல்
ஒரே ஃபீலிங்ஸ்தான் போங்கள். கலைவாணியின் படத்தை நிர்வாணமாக வரைந்த இந்த் சில்லுண்டிப் பயலை இந்தியாவில் விடமறுக்கிறார்களாம். ஏன் வெளிநாட்டில் சௌக்கியமாகத்தானே இருக்கிறான் அவன்? ரஷ்டியைப் போல உயிருக்கு பயந்து இல்லையே. ரஷ்டிக்குஎதிராக வந்த ஃபத்வாவுக்கு இந்த ஹுசைனின் எதிர்வினை என்னவாக இருக்கும் என்றறிய ஆவலாக இருக்கிறேன். அவனுக்காக ஒப்பாரி வைத்து எழுதிய பதிவரும் நான் ரஷ்டி பற்றி எழுதியதற்கு கள்ள மௌனம் சாதிக்கிறார்.

அந்த பங்களாதேஷ் பெண்ணுக்கு வந்த கொலை மிரட்டல் வெறும் தவறாம், ஆனால் மகாத்மா ஹுசைனுக்கு எதிராக வந்தது மட்டும் குற்றமாம். அதை எவ்வாறு கண்டறிந்தார் அவர் என்பதும் பெரிய புதிர்தான். ஒருவேளை கடவுள் அவருக்கு தனியாகத் தோற்றமளித்து கூறியிருப்பாராக இருக்கும்.

ஹிட்லரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக அவனை நிர்வாணமாக வரைந்தவன் கலைவாணியையும் அவ்வாறே வரைந்திருப்பதை என்னவென்று பொருள் கொள்வது? இவனுக்கெல்லாம் கராத்தே ஹுசைனிதான் சரி. நிர்வாணமான சரஸ்வதி படத்துக்கு இரண்டே வீச்சுகளில் அழகான புடவை போட்டு மரியாதைப் படுத்திய அவர் ஹுசைனின் நிர்வாணப் படத்தை வரைந்ததுதான் அவனுக்கு சரியான தண்டனை.

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/26/2009

டோண்டு பதில்கள் - 26.11.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?


அனானி (32 கேள்விகள் கேட்பவர்)
1. பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதா என்னாச்சு?
பதில்: கிடப்பில் உள்ளது. எந்தக் கட்சியுமே அதை எதிர்க்கத் துணியாது. அதே சமயம் மனப்பூர்வமாக ஆதரிக்கவும் செய்யாது. வெறுமனே பம்மாத்து செய்து கொண்டிருக்கும். வேண்டுமென்றே உள் ஒதுக்கீடு எல்லாம் கேட்கும், தாமதமாகும்.
அப்படியே வந்தாலும் என்ன நடக்கும் என்றால் ஒப்புக்கு தம் வீட்டுப் பெண்களை நிறுத்தி ஜெயிக்க வைத்துவிட்டு ஆண் அரசியல்வாதிகளே ஆட்சியை நடத்துவார்கள். அதுதானே பல பஞ்சாயத்துகளில் நடக்கிறது? 

2. திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், ஆணின் வாழ்க்கை என்னவாகும்?

பதில்: ஆணானாலும் சரி பெண்ணானாலும் சரி காலாகாலத்தில் நடக்க வேண்டியது நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கும் பிரச்சினை, சுற்றியிருப்பவருக்கும் பிரச்சினைதான். காலம் கடந்தபிறகு பச்சாத்தாபபடுவதால் எந்தப் பயனும் இல்லை.   

3. நிரந்தரமான கொள்கை உடைய அரசியல்வாதி யாரும் உளரோ?

பதில்: நீண்டகாலம் அரசியலில் இருப்பவர்கள் கொள்கைகளை மாற்றாமல் இருக்கவியலாது என்பது ஒரு புறம் இருக்க, தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறுவதும் கேலிக்குரியதே. 

4. வாழ்வில் வெற்றி பெற படிப்பறிவு மட்டும் போதுமா?

பதில்: நிச்சயம் போதவே போதது. அதற்காக அது தேவையே இல்லை என்றும் கூறவியலாது.

5. காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எது மோசமான பலனைத்தரும்?

பதில்: இவை இ.என்.டி. (காது, மூக்கு, தொண்டை) மாதிரி ஒன்றுக்கொன்று தொடபுடையவை. தங்கை சூர்ப்பனகையின் மூக்கு அறுபட்டது குறித்து ராவணன் ஆத்திரம் கொண்டான், கரதூஷணர்களை ராமபிரான் அழித்தார் எனக் கேட்டது அது கோபமாக உருவாயிற்று. அதற்கு தூபம் போடுவது போல சீதையின் அழகை பற்றி கேட்டதும் காமமும் உருவாகியது. அவன் அழிந்தான், கூடவே இலங்கையும். 

6. வாய்விட்டு சிரித்தால் மூளை வளரும்; ஆயுள் அதிகரிக்கும் என்பது உண்மையா?

பதில்: மூளை வளருமா இல்லையா என்பது ஒருபுறம் இருக்கட்டும். வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டுப் போகும், அப்படியானால் ஆயுளும் அதிகரிக்க வேண்டியதுதானே?

7. வழக்கத்தில் இந்தியன் ஸ்டாண்டர்ட் டைம் எந்த ஊரை வைத்து சொல்லப்படுகிறது? காரணம்?

பதில்: இண்டியன் ஸ்டாண்டர்ட் டைம் என்பது 82.5° கிழக்கு தீர்க்கரேகையை வைத்து கணக்கிடப்படுகிறது. அலகாபாத் அருகே உள்ள மிர்ஜாப்பூரின் உடனடி மேற்கின் ஊடே கோடியில் இந்த தீர்க்க ரேகை செல்கிறது. எதற்கும் இங்கும் சென்று பார்க்கவும்.  
காரணம் என்று கேட்டால் என்ன சொல்வது?

8. எப்போதும் பதவி, பட்டம், புகழுக்காக அலைபவர்கள்?

பதில்: கலைஞரை கிண்டல் செய்யவும் ஒரு அளவு இல்லையா?

9. செல்வாக்கு, அந்தஸ்து, பணம் இருந்தும் அரசியலில் ஈடுபடாத மனிதர்கள்?

பதில்: பல கோடீஸ்வரர்கள் இருக்கிறார்களே?

10. எப்போதும் லொடலொடவென பேசும் ஒரு சிலரின் பழக்கம்?

பதில்: அது தொட்டில் பழக்கம்.

11. வாழும் மனிதர்களைச் சுற்றி எப்போதும், ஏதாவது பிரச்னை இருந்து கொண்டிருக்கிறதே?

பதில்: செத்தால்தான் பிரச்சினை இல்லை. அதுகூட பிரச்சினையின்மை செத்தவனுக்கு மட்டுமே பொருந்தும். சுற்றி இருப்பவர்களுக்கு அதுவும் பிரச்சினைதான்.


12. உலகில் நல்லவர் யார்? 
பதில்: வாங்கிய கடனைத் திரும்பக் கேட்காதவர், மற்றும் வடிவேலு.

13. உலகில் கெட்டவர் யார்?

பதில்: வாங்கிய கடனை கேட்பவர், வடிவேலு. ஒரு படத்தில் கரணிடம் அவருக்கு தான் கொடுத்த கடனை கேட்க, அவரால் குடிசைக்குள் இழுத்துச் செல்லப்பட்டு உதை வாங்கியவர். படத்தின் பெயரை யாராவது சொல்லுங்கப்பூ.

14. வாழும் மனிதனின் திகட்டாத விருந்தாவது யாது?

பதில்: அடுத்தவர் பற்றிய வம்பு.

15. பம்பாய் வாழ் பார்சிகள் இனத்தின் பழக்கவழக்கங்கள் தொடர்கிறதா?

பதில்: தொடர்கின்றன.

16. பொதுவாய் தற்பெருமை ஒரு மனிதனிடம் எப்போது உண்டாகிறது?

பதில்: குறைகுடமாக இருக்கையில்.


17. யாரை திருத்த(வே) முடியாது?
பதில்: முயலுக்கு மூன்றே கால் என வாதம் புரிபவரை.

18. தாராளமாக செலவு செய்வதால் ஒருவனைச்சுற்றும் நண்பர்கள்?

பதில்: அந்த ஒருவனிடம் பணம் இல்லையேன்றால் ஓடிவிடுவார்கள்.

19. நம்பிக்கையானவர்கள் கூட சில நேரங்களில் காலை வாருகின்றனரே?
பதில்: அந்த நம்பிக்கையானவரின் வெர்ஷனையும் கேட்பது நலமாக இருக்கும். ஏதாவது அன்ரீஸனபளாக எதிர்பார்ப்பதும் தவறுதானே.



20. உங்கள் ஓய்வு நேரங்களில் என்ன செய்வீர்கள்?
பதில்: மனதுக்கு ரம்மியமான விஷயங்கள் செய்வதாகக் கூறலாம். ஆனால் மொழிபெயர்ப்பே எனக்கு ரம்மியமானதுதானே, பிறகு ஏன் ஓய்வு?



21. தற்சமயம் நிறைய விஷயங்களை தெரிந்து வைத்திருக்கிறீர்கள், சமீபத்தில் டெல்லியில் இருக்கும்போது எப்படி?
பதில்: அவற்றை அறியும் முயற்சியில் இருந்தேன். அதே சமயம் பல விஷயங்கள் சென்னைக்கு வந்ததும் இர்ரெலெவெண்டாகிப் போயின. ஆகவே அவை மனதின் பின்னணிக்குப் போய் விட்டன.
மொத்ததில் புது விஷயங்களை கற்பது என்பது எப்போதுமே நடந்தது, நடக்கிறது, இனிமேலும் நடக்கும்.


22. பிற அயல்நாடுகளில் இருந்து நம் நாட்டிற்கு வந்து, வேலை செய்பவர்கள் மன நிலை?
பதில்: அது அவர்கள் இங்கு பெறும் வரவேற்பை பொருத்தது. அயல்நாட்டு நிபுணர்களுக்கு நாம் தரும் மரியாதையை கூர்க்காக்களுக்கு தருகிறோமா, இல்லையே.



23. யோகாசனப் பயிற்சி செய்தால், தொப்பை குறையுமென்ற கருத்து?
பதில்: நானும் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனால் சரியாகத் தெரியாது. என்னைப் பொருத்தவரை உண்ணும் உணவு சீரணமாக வேண்டும், தேவைக்கதிகமாக உண்ணக்லாகாது. உடற்பயிற்சி அவசியம், அவ்வளவே.



24. நிலவும் சமூக ஒழுக்கக் கேட்டுக்கு முக்கிய காரணம் ?
பதில்: மக்களும் அது பற்றி அலட்டிக் கொள்வதை நிறுத்தியதும் ஒரு முக்கியக் காரணம். உதாரணம் லஞ்சம் வாங்கி பணக்காரனாவது. 



25. தமிழ் தெரிந்தும், தமிழர்களிடையே ஆங்கிலம் பேசும் மேதாவிகள்?
பதில்: எரிச்சலை கிளப்புபவர்கள். தங்களது ஆங்கில அறிவை நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளவர்கள். அவர்கள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டால் வெள்ளைக்காரன் தூக்கில் தொங்குவான்.



26. அக்கு பஞ்சர் சிகிச்சை முறை பிரபலமாய் வருவது போலுள்ளதே? பயன் எப்படி?
பதில்: உடலில் பல இடத்தில் ஊசியைக் குத்துவாங்களாம், நினைப்பே வலியைத் தருதுங்களே. அய்யோ சாமி எனக்கு அது வேண்டாம்.



27. காதலே கதி என பார்க்கை சுற்றிக் கொண்டிருக்கும் வாலிபர்கள்?
பதில்: ஒழுங்காக வேலை செய்து மனைவியை காப்பாற்றத் துப்பில்லாத கபோதிகளும் காதல் செய்ய அலைவதால், காதலுக்கே கெட்டப் பெயர்.



28. நம் நாட்டிலும் பெண்களும் பரவலாய் மது குடிக்கின்றனர் என வரும் செய்தி?
பதில்: இதில் ஆணென்ன பெண்ணென்ன? மொத்தத்தில் மதுவரக்கன் தீங்கையே இழைப்பான்.



29. சேமிப்பே அர்த்தமற்றது என்று ஆகிவிடும் போல் தோன்றுகிறதே?
பதில்: ஐரோப்பாவில் மிகக் குறுகிய இடைவெளியில் போன நூற்றாண்டில் இருமுறை அரசுகள் திவாலாகி, பலரது சேமிப்புகள் கரைந்து போயின. ஆகவே அங்கெல்லாம் பலருக்கும் சேமிப்பு என்றாலே அலர்ஜிதான். இருக்கும்போது அனுபவிப்போம் என்ற மனப்பான்மையே அதிலிருந்துதான் உருவானது. இந்த மனப்போக்கையும் புரிந்து கொள்ள இயலுகிறது.



30. மது மயக்கம், மாது மயக்கம் - எது கொடியது?
பதில்: மது ஒரு கையில் இன்னொரு கையின் அணைப்பில் மாது என்று இருப்பதுதான் மிகவும் கொடியது.



31. விலைவாசியை கட்டுப்படுத்த முடியுமா? செய்வார்களா?
பதில்: நுகர்வோர்தான் அதை முக்கியமாகச் செய்ய வேண்டும். செய்வார்களா? சிவாஜி படத்துக்கு முதல் ஷோவில் போக ஆயிரம் ரூபாய் தர தயாராக இருக்கும் அசடுகளிடம் இந்த மனவுறுதியை எப்படி எதிர்பார்ப்பது?



32. தமிழ் எழுத்தாளர்களில் இலக்கியத் தரமாக எழுதுவதில் யார் பிரபலமாய் உள்ளார்?
பதில்: ஜெயமோகன்.


ரமணா

செல்தொலைபெசி சேவையில் “நமப்ர் போர்டபிலிட்டி” வரும் 2010 முதல் வருவதாய் செய்திகள் வருகிறதே( ட்ராயின் அறிவிப்பு)
1.யார் யாருக்கு லாபம்?
பதில்: பயனர்களுக்கு.

2. யார் யாருக்கு நட்டம்?
பதில்: மோசமான சேவை அளிக்கும் நிறுவனத்துக்கு.

3. எப்படி அமலாக்கபடுகிறது?
பதில்: நான் வெளியூர்களுக்கு செல்லும்போது எனது வோடஃபோன் நம்பருக்கான சேவை அளிப்பாளர் கார் செல்லும் இடத்தில் செயல்புரியும் இடங்களின் டவர்களுக்கு ஏற்ப ஆட்டமேட்டிக்காக மாறுகிறார். செங்கல்பட்டைத் தாண்டியதுமே எனக்கு வரவேற்பு எஸ்.எம்.எஸ். வருகிறது. அடுத்த சேவை அளிப்பாரின் ஏரியா வரும்போது அம்மாதிரியே வேறு மெசேஜ் வருகிறது.
இதையெல்லாம் செய்ய முடியும்போது நம்பர் போர்ட்டபிலிடி செய்ய முடியாதா? அதற்கெனவே மென்பொருள் நிபுணர்கள் ரூம் போட்டு யோசித்து வைத்திருக்க மாட்டார்களா?

4. பில் குழப்பம் வராதா?
பதில்: சேஞ்ச் ஓவர் காலத்தில் ஒரு பில்லில் பிரச்சினை வர வாய்ப்புண்டு. ஆனால் அதையும் தவிர்ப்பார்களாக இருக்கும், தெரியவில்லை.

5. போட்டியில் பின்தங்கும் அரசுத்துறை என்னவாகும்?

பதில்: அம்போவாகும், அதுவும் ராசா மந்திரியாக தொடர்ந்தால் அதுதான் நிச்சயம் நடக்கும்.




மீண்டும் அடுத்த வாரம் கேள்விகள் ஏதேனும் இருந்தால் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்

11/24/2009

சூரியின் ஜெஸ்டஸ் - வாரத்தின் எட்டாம் நாள் - 1

இரண்டாம் அத்தியாயம் மிகவும் பெரியதாக உள்ளதால் அதை சில பகுதிகளாக பிரிக்க எண்ணுகிறேன். மூன்று பகுதிகள் வரும் என எண்ணுகிறேன்.

முதல் அத்தியாயம் இங்கே


அத்தியாயம் - 2
வாரத்தின் எட்டாம் நாள் (பகுதி - 1)

முந்தைய அத்தியாயத்தில் நான் சொன்ன விஷயங்கள் நடந்து ஒரு மாதமாகிய நிலையில் சைபர்கஃபேயில் இருந்தேன். எனது மின்னஞல் பெட்டியைத் திறந்தால் அதில் லாஃபன்ஷ்டைன் என்பவரிடமிருந்து ஒரு அஞ்சல் வந்திருந்தது. “என்னம்மா கண்ணு, பாத்து ரொம்ப நாளேச்சே? சௌக்கியமா”? என்று அதில் கேட்டிருந்தது. முதலில் அது யார் என்பது புரியவில்லை. மறுபடி படித்தேன். அடியில் பிராந்து பிடிச்ச தொப்பிக்காரன் என்று கையெழுத்து இருந்தது. சட்டென அன்று பூங்காவில் சந்தித்த அந்த விசரர் நினைவுக்கு வந்தார். அப்புறம்தான் தனது வெவ்வேறு பெயர்களை அவர் கூறியது நினைவுக்கு வந்தது. அவற்றில் இப்பெயரும் ஒன்று என்பதும் நினைவுக்கு வந்தது.

எனக்கு ஒரே புதிராக இருந்தது. முதலில் இணைய இணைப்பை எங்கிருந்து பிடித்தார்? அப்படியே வந்தாலும்என்னுடைய மின்னஞ்சல் முகவரி அந்த திகம்பர விசரருக்கு எப்படி கிடைத்தது?

ஒரு மாதத்துக்கு முந்தைய அந்த நினைவுகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்தன. நான் வேண்டுமென சொல்லாமலேயே மறைத்த எனது பெயரை அவர் அறிந்திருந்தார். அதே கசங்கல் தத்துவப்படியே ஏன் எனது மின்னஞ்சலை அவர் அறிந்திருக்க முடியாது? ஏதோ மாயம் செய்து இரு காப்பி கோப்பைகளை வரவழைத்தவரால் இதுகூட செய்ய முடியாதா என்ன? இவ்வாறெல்லாம் யோசித்ததில் அவரால் எனக்கு மின்னஞ்சல் அனுப்ப முடிந்ததில் ஆச்சரியமே இல்லை என்ற முடிவுக்கு வந்தேன்.


லாக்-ஆஃப் செய்துவிட்டு வெளியே வந்தேன். சூரியன் பளீரென காய்ந்து கொண்டிருந்தான். மணியைப் பார்த்தேன். முற்பகல் 11 மணி. ஒரு உந்துதலில் அவரைத் தேட முடிவு செய்தேன்.

இதற்கு முன்னால் சுமார் நாற்பது முறைகள் நான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் என் கண்களில் பட்டவரை இத்தருணம் நானே தேடிப்போக வேண்டியிருக்கும் என மனதில் பட்சி சொல்லியது.

மனம் போன போக்கில் நடந்தேன். கடைகளின் கண்ணாடி ஜன்னல்கள், சாலை போக்குவரத்து ஆகியவற்றை பராக்கு பார்த்துக் கொண்டே சென்றேன். ஒரு பஸ் நிறுத்தத்தில் நின்றேன். பக்கத்திலிருந்தவர் வைத்திருந்த செய்தித் தாளில் பதினோராம் மாதம் பதினோராம் தேதி என்று இருந்தது.அப்போது சொல்லி வைத்தாற்போல 11-ஆம் எண் பஸ் வந்தது. அதில் ஏறினேன். அந்த வழித்தடத்தின் கடைசி நிறுத்தத்துக்கு டிக்கெட் வாங்கினேன்.

பஸ் நின்றதும் இறங்கினேன். சுற்றும் முற்றும் பார்த்தேன். புறநகரில் கும்பலோ அதிக கட்டிடங்களோ இல்லாத இடத்துக்கு வந்திருந்தேன். இருக்கும் கட்டிடங்களும் அங்குமிங்குமாக சிதறிக் கிடந்தன. அப்படியே தெருவோரமாக ஒரு கிலோமீட்டர் நடந்தேன். ஒரு சிறு குன்று தென்பட்டது. குன்றடிவாரத்தில் ஒரு புளியமரம் இருந்தது. அதன் கீழே ஒரு பாறை. அதன்மேல் உட்கார்ந்து சுற்றுமுற்றும் ஒரு இலக்குமில்லாமல் வேடிக்கை பார்த்தேன்.

எலும்பும் தோலுமாக இருந்த ஒரு கலப்பின நாய் தெருவின் அடுத்த பக்கத்தில் யாரையோ தேடுவது போல நின்று அங்குமிங்கும் பார்த்துக் கொண்டிருந்தது. என்னைப் பார்த்ததுமே நூல்பிடி கணக்காக என்னை நோக்கி தெருவை கிராஸ் செய்து ஓடி வந்தது. அவ்வழியே சென்ற காரை மயிரிழையில் தவிர்த்து வந்தது பற்றி அது கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. என் காலை முகர்ந்து பார்த்து என்னை சுற்றி சுற்றி வந்தது. என்னைப் பார்த்து குரைத்தது. நான் உள்ளங்கையை நீட்ட அதை நக்கியது. மறுபடியும் குலைத்தது. பிறகு மறுபடியும் தெருவை கிராஸ் செய்து எதிர்ப்பக்கத்தில் நான் அதை முதலில் பார்த்த இடத்திற்கே சென்றது. அங்கிருந்து என்னைப் பார்த்து குரைத்தது. நானும் தெருவை கடந்து அதன் அருகில் சென்றேன். உடனே ஐம்பது மீட்டர் தூரம் ஓடி அங்கிருந்து என்னைப் பார்த்து குரைத்தது. தெருவின் அப்பக்கம் அங்குமிங்குமாக செடி கொடிகள் மரங்கள் ஒரு சிறு காடுபோல இருந்தன. மனித நடமாட்டமே இல்லை. அந்த நாய் என்னை இவ்வாறே வழிநடத்திச் சென்றது. அவ்வப்போது நான் அதைத் தொடர்கிறேனா எனப்தையும் பார்த்தது. மரங்கள் அடர்த்தியாக இருந்த பகுதிக்கு இப்போது நாங்கள் வந்திருந்தோம்.

கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள் நடந்திருப்பேன் என எனக்குப் பட்டது. கடைசியில் ஒரு மூங்கில் புதர் தென்பட்டது. அங்கு வந்ததும் நாய் மூன்று முறை குரைத்தது.

நானும் நாயின் அருகாமைக்கு சென்றேன். அங்கு இருந்த ஒரு பெரிய பாறையின் மேல் அந்த விசர் கிழவர் பத்மாசனத்தில் இருந்தார். நாய் அவரை களிப்புடன் சுற்றியது, தனது சந்தோஷத்தை ப்ளொள் என்று குரைத்து வெளிக்காட்டியது. தான் ஏதோ சாதித்த திருப்தியில் அவரை வலம் வந்தது.

கிழவர் என்னைப் பார்த்தர், உரக்கச் சிரித்தார்.

நான் அபத்தமாக உணர்ந்தேன். மூங்கில்களால் சூழப்பட்ட இந்த இடத்தில் உள்ள அப்பாறையில் அமர்ந்திருந்த திகம்பரக் கிழவரிடம் எனக்கு என்ன வேலை இருக்க முடியும்? முட்டாள்தனமாக பேச்சை ஆரம்பித்தேன். “ஒங்களோட மெயில் கெடச்சுது”. சங்கடமாக உணர்ந்தேன்.

“கவலைப்படாதேடா கண்ணா, நீ இங்க இருக்கற காட்டுலே ஒன்னை யாரு பார்க்கப் போறாங்க"? என்று என் நண்பன் ராக் வேன் தூரத்திலிருந்து எனக்கு சொல்வது போல ஒரு உணர்ச்சி. நான் சொன்ன வாக்கியமும் இலக்கண சுத்தமாகத்தானே இருந்தது என மனதை தேற்றிக் கொண்டேன்.

ஒரு மாதம் முன்னால் பூங்காவில் உணர்ந்தது போலவே இங்கும் நான் நிஜத்துக்கும் மாயத் தோற்றத்தும் இருப்பதாக உணர்ந்தேன். சற்றே குமட்டியது.

எனது எண்ண ஓட்டங்களை லாஃபன்ஷ்டைன் புரிந்து கொண்டார்.

“ரொம்பக் கஷ்டப்படாதே அப்பனே. முதல் முறையா ரம் குடிப்பது போலத்தான்   இருக்கும். போகப்போக பழகிடும். கவலைப்படாதே”.

அந்த நாயை தடவிக் கொடுத்தார். மீண்டும் அது களிப்புடன் ‘ப்ளொள்’ எனக் குரைத்தது.“ஒண்ணு தெரியுமா, இவனை உன்னை அழச்சுண்டு வர அனுப்பினேன்.சூரப்பயல்,தன்னோட வேலையை சரியாத்தான் செஞ்சிருக்கான்”.

“ஓக்கே ஸராமா. உன் வேலை இப்போதைக்கு முடிஞ்சது” என்று நாயிடம் சொன்னார். அதுவும் சந்தோஷமாக வாலை ஆட்டிக் கொண்டே பிஸ்கட்டை நோக்கிப் பாய்ந்தது. கிழவர் மீண்டும் உரக்கச் சிரித்தார். அதனால்தான் அவருக்கு லாஃபன்ஷ்டைன் என்ற பெயரும் வந்தது என நினைத்து கொண்டேன். என்னை நோக்கிக் கூறினார், “சரி இங்கே வந்து என் பக்கத்திலே உட்கார். நல்ல சூரிய வெளிச்சம், நீல வானம், ஒசந்த மரங்கள், பசுமையா புற்கள், குளுமையா காத்து. வேற என்ன வேணும் ஒனக்கு? ஒக்காரு, ரிலேக்ஸ் பண்ணு”.

சங்கடமாக புன்னகை செய்தேன். அவரிடமிருந்து சில அடிதூரத்தில் அதே பாறை மேல் அமர்ந்தேன். நிஜமாகவே சுற்றிலும் எழில் நிரம்பிய காட்சிகள்தான். அவற்றை அனுபவித்தவாறு அமர்ந்தேன்.

முதலில் உணர்ந்த அன்னிய சூழ்நிலை மெதுவாக விலக ஆரம்பித்தது. வெகு தூரத்திலிருந்து ஒரு குயில் கூவியது. அவ்வளவு சிறிய பறவைக்கு அப்படி ஒரு குரலா? இவ்வளவு தூரம் தளிவாகக் கேட்கிறதே என எண்ணினேன். அக்குரல் காடு முழுவதும் பரவியது.

கிழவருடன் பேசணும், ஆனால் என்ன பேசுவது எனப் புரியவில்லை. ஒரு கிறுக்கரிடம் என்னதான் பேசுவது? சொல்லப்போனா, நானே ஒரு வகையிலே லூசுதானே. பாருங்களேன், இம்மாதிரி நார்மலான வாழ்க்கையை விட்டுவிட்டு இந்த காட்டுப் பிரதேசத்துக்கு வந்து அவர் பக்கத்துல வந்து உட்கார்ந்திருக்கிறேன். எனக்கும் வேறு வழியில்லைதான். ஒரு விதமான உந்துதல்தான் என்னை இங்கே கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. எனது பிரத்தியேக நகைச்சுவை உணர்வு என்னை இந்த இடத்தில் கட்டிப்போட்டு வைத்துள்ளது என்றும் கூறலாம்.

கிறுக்கரோ இல்லையோ, ஜெஸ்டஸ் மற்றவர்கள் உணர்வுகளை அழகாகவே புரிந்து கொண்டார். எனது நினைவுகளை அப்படியே துல்லியமாக படிக்கிறார் என்றே தோன்றியது. அவர் பேச ஆரம்பித்தார். “என்னப்ப வைட் ஹார்ட், என்னை என்ன வேணுமானாலும் கேள்வி கேள். நான் தப்பா எடுத்துக்க மாட்டேன்”

எனக்கு நிம்மதியாக இருந்தது. அவரை ஓரக்கண்ணால் பார்த்தேன். போன முறை பூங்காவில் பார்த்தபோது அவருக்கு ரொம்பத்தான் வயசான மாதிரி இருந்தது. ஆனால் இப்போதோ அவரது வயதை அறுபதுக்கு மேல் மதிப்பிட இயலாது.துணிந்து பேச ஆரம்பித்தேன். ஆனால் ஆரம்பமே செயற்கையாக இருந்தது.

“எல்லோரும் நீங்க பைத்தியம்னு சொல்றாங்க. ஆனாக்க எனக்கு அப்படித் தோணல.” கொஞ்சம் யோசித்து, தயக்கத்துடன் சொன்னேன், “கொஞ்சமா கிறுக்குன்னு சொல்லலாம்”. பிறகு, “அப்படிப் பாத்தாக்க எல்லோருமே ஒருவகையில கிறுக்குதான்”.

அவர் சிரித்தார். இந்த சிரிக்கறதை அடிக்கடி சொல்ல வேண்டியிருக்கு, ஏனென்றால் ஒவ்வொரு முறையும் அவர் உரக்கவே சிரித்தார். அதை சொல்லவில்லையென்றால் அவருக்கு அநீதி செய்தவனாவேன். அவர் சிரித்தபோது இன்னொரு ஷாக் எனக்கு. அவரோட முப்பத்திரண்டு பற்களும் பளீரென மின்னின. போன தடவை வெறுமனே ஈறுகள் மட்டும்தான். ஆக, அவர் ஒரு புது பொய்ப்பல் செட் வாங்கியிருக்கிறார், அல்லது யாராவது நல்லவர் அதை அவருக்கு வாங்கி தந்திருக்க வேண்டும்.

அவர் சொன்னார், “நீ சொல்லறதும் சரிதான். ஒரு வகையில் பாத்தாக்க நான் நெஜம்மாவே பைத்தியம், கிறுக்கு, பித்தன், விசரன்தான். அது பத்தியெல்லாம் நான் அலட்டிக்கிறதே இல்லை. என்னை பொருத்தவரைக்கும் எல்லாமே கனவுதான். அதுவும் லிமிட்டு எதுவும் இல்லாத கனவுன்னா ஜாலிதான். அப்போ யதார்த்தமும் கனவும் ஒழுங்கா ஒண்ணு சேரும். அதுங்களுக்கு முழு சுதந்திரம். ரொம்பவும் தமாஷாகத்தான் இருக்கும்!” அவர் கெக்கே கெக்கே என சிரித்தார்.

இதுதான் சான்சுன்னு நான் சீரியசாகவே சொன்னேன், “ஆனாக்க நீங்க உண்மையையும் எதார்த்தத்தையும் எப்படி கண்டுக்காம விட முடியும்? எப்பவுமே கற்பனைலே வாழ்ந்தாக்க பயித்திரக்கார ஆஸ்பத்திரிலதான் எல்லாமே முடியும். ஆனா ஒங்களை சொல்லல”.

அவர் என்னை விழித்துப் பார்த்தார். அவரது கண்கள் நெருப்புத் துண்டங்கள் போல ஜொலித்தன. திடீரென எனக்கு இரண்டடி முன்னால் ஒரு பெரிய சுவர் நிற்பதுபோல உணர்ந்தேன். அது முடிவில்லா நீண்ட சுவர். மேலேயோ, இடப்பக்கமோ, வலப்பக்கமோ அதன் முடிவைக் காண முடியாத கான்க்ரீட் சுவராக அது தென்பட்டது. எவ்வளவு காலம் அதன் முன்னாலும் நின்று முயற்சித்தாலும் அதைத் தாண்டிச் செல்ல முடியாது என்றே பட்டது.

மெதுவாக அவரது கண்கள் மிருதுவாயின, மென்மையாகவும் இரக்கம் வாய்ந்ததாகவும் மாறின. அவர் பேசியபோது தேவதைகள் பாடுவது போன்ற உணர்வு.

“கன்ணா, சீரியசா பேசிண்டிருந்தால் பேசிண்டே இருக்கலாம். அதுக்கு முடிவே கிடையாது. அதுவே போதையாயிடும். அதை ஒருபோதும் செய்யாதே. இதை ரொம்ப குறைச்சலான பேர்தான் புரிஞ்சிண்டிருக்காங்க. நீ நீயாகவே இரு, நான் செய்யறதை பார், சந்தோஷமா இருப்பே. அதில்லாம பகுத்தறிவு வாதங்களுக்கு போனாக்க உனக்குத்தான் எப்பவுமே தொல்லை”.

நான் அதை ஜீரணிக்க ஒரு நிமிடம் கொடுத்தார். பிறகு புன்னகையுடன் மேலே கூறினார், “இப்ப மட்டும் ஒரே ஒரு முறை கற்பனை பற்றிய ஒன்னோட ஆட்சேபணைக்கு பதில் சொல்லறேன். மத்தப்படி இது பத்தியெல்லாம் நான் பேசறதேயில்லைங்கறதை மட்டும் புரிஞ்சுக்கோ. கவனமாக் கேட்டுக்கோ”

மறுபடியும் கொஞ்சம் நிறுத்தினார். நான் சாவதானமாக மரங்களையும் வானத்தையும் பார்த்தவண்ணம் இருந்தேன். தனது கூவலால் குயில் மறுபடியும் காடு முழுவதையும் களிப்பில் ஆழ்த்தியது. அக்கூவலை கவனமாக கேட்டார் அவர். பிறகு இன்னொரு முறை சிரித்துவிட்டு, தான் விட்ட இடத்திலிருந்து தொடர்ந்தார்.

“இப்ப இப்படி யோசியேன். திடீர்னு ஒரு நாளைக்கு பணம் தேவைப்படறது. அன்னிக்கு பேங்குக்கு போகணும்னு ஒன்னோட மனசு நெனச்சுக்கிறது. உடனேயே பாங்குக்கு போறதுக்கு முன்னாலே என்னென்ன செய்யணும்னு மனசு ஒத்திகை பாக்கறது இல்லையா? காலைலே நேரத்துக்கு எழுந்துக்கணும், காலைக் கடன்களை முடிக்கணும். ஹோட்டல்ல போய் டிபன் பண்ணனும், பாங்கு காலை பத்து மணிக்கு திறக்கும். பெரிய கியூ வரதுக்கு முன்னாலேயே போயிடணும்னு வேறே நினைச்சுப்பே. அதுக்கு போக பஸ்ஸை வேற பிடிக்கணும். அதுக்காக பஸ் ஸ்டாப்புக்கு வரணும். பஸ்லே ஏறணும். டிக்கெட் வாங்கணும். சரியான ஸ்டாப்புல எறங்கணும்.

பாங்குலே போய் பணம் எடுக்கிற ஃபாரம் எடுத்து தொகையை நிரப்பி டெல்லர்கிட்ட தரணும். இதெல்லாம் நீ வீட்டிலே குளிக்கச்சயே நெனச்சுப்பே. அப்புறம் வீட்டுக்கு வந்ததும் பணத்தை பெட்டியில வச்சு பூட்டுவே. இப்படியே சொல்லிண்டு போகலாம், ஆனால் இது போதும்னு நினைக்கிறேன். இப்ப சொல்லு, இதெல்லாம் கற்பனை இல்லேன்னா வேற எதுதான் கற்பனை”?

ஏதோ எங்கேயோ குத்தியது போல நான் நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் சொன்னது அத்தனையும் ரெண்டு நாள் முன்னாடி சிறிதும் பிசகாம நடந்தது. கற்பனை பற்றி அவர் சொன்னதெல்லாம் இப்போது சரியாகவே பட்டன. இருந்தாலும் இன்னும் ஒரு ஆட்சேபணை என்கைவசம் இருந்தது. “ஆனாக்க மிஸ்டர் ஜெஸ்டஸ், நீங்க சொல்லறது நான் நடக்கவேண்டியதை பற்றி திட்ட்ம் போட்டது.  மனம்னு நீங்க சொன்னாலும் சரி, மூளைன்னு சொன்னாலும் சரி, அதுக்கு பிளான் போடறதில் திறமை இருக்குத்தானே”.

“இந்த மாத்ரி வார்த்தையோடல்லாம் விளையாடாதே அப்பனே. முதல்ல இந்த மிஸ்டர் போடறதை நிறுத்து. என்னை பாகஸ், ஜெஸ்டஸ், லாஃபன்ஷ்டைன், அங்கிள், அப்பச்சி அப்படீன்னு ஒனக்கு தோணற மாதிரி கூப்பிட்டுக்கோ. எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்லை.  இப்போ நீ சொல்லற திட்டம் போடறது, நினைச்சுக்கிறது, கனவு காணறது, கற்பனை செய்யறது எல்லாத்துக்குமே ஒரே அடிப்படைதான். நினைச்சுக்கறது கனவு காணறது ரெண்டுமே ஒன்ணுதான். என்ன, முதல்ல சொன்னதுக்கு நீ கண்ணை திறந்து வச்சுப்பே, ரெண்டாவதுக்கு கண்ணை மூடிப்பே, அவ்ளோதான்”.

நமது வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கத்தைப்பற்றி அவர் இவ்வாறு சொல்வது என்னை சற்றே பாதித்தது.

நான் சொன்னேன், “கனவு காணறது, கற்பன செய்யறது நினைக்கறது இவை எல்லாம் வெவ்வேறு பாகஸ். நினைக்கறதும் திட்டம் போடறதும் தினசரி வாழ்க்கையிலே இருக்கும் நிஜங்களோட தொடர்போட கூடியது. அப்படியில்லாம இங்கேயே உட்கார்ந்து கனவு கண்டுண்டிருந்தா நிஜங்கள் கடைசியா ஒங்களைத் தாக்கும். அந்த நிஜங்களிலே முதலாவதா பசியைச் சொல்லலாம். மீதி நிஜங்கள் எல்லாம் தானாகவே அது பின்னாலே வரும்”. அசைக்க முடியாமல் வாதம் செய்ததாக நான் நினைத்துக் கொண்டேன். பெருமையாக புன்னகை வேறு புரிந்தேன்.

லாஃபன்ஷ்டெஇன் கொஞ்ச நேரம் பேசாமல் இருந்தார். பிறகு சொன்னார், “நான் ஏற்கனவே ஒங்கிட்ட சொன்னாப்போல இந்த விவாதம் இப்போ முடிவடையறது. அப்படி இல்லேன்னாக்க நாம பேசிண்டே இருந்தாலும் அது முடியாது. அதனால ஒரு பிரயோசனமும் இல்லை”.

எனக்குக் கொஞம் ஏமாற்றம்தான். ஆனால் அதே சமயம் அவர் சொன்னது விசித்திரமாக இருந்தது. ஏதோ நடக்கப் போவதை சூசகமாக உணர்த்தியது.

அவர் சீரியசாகவே சொன்னார், “இந்த வாழ்க்கையே ஒரு அபத்தம்தான். இங்கே ஒன்னோட புத்தியை காப்பாத்திக்கணும்னா வாழ்க்கையை எதிர்நீச்சல் போடாம அதனோட போக்கிலேயே அபத்தமா வாழ வேண்டியதுதான்”. அவர் உரக்கச் சிரித்ததில் எனக்கு தூக்கிவாரிப் போட்டது. என்னை மேலும் மேலும் புதிரில் ஆழ்த்த விரும்புவது போல இருந்தார் இந்தப் புதிர்க் கிழவர். பகுத்தறிவோட பேச அனுமதி இல்லை, ஆகவே நல்ல பதில் இல்லாததால் பேசாமல் உட்கார வேண்டியிருந்தது.

இப்போ அவர் சொன்னார், “எப்படி அபத்தமா வாழறதுங்கறதை நான் இப்போ காண்பிக்கிறேன். ஒரு சின்ன கேம் விளையாடுவோமே”.

“என்ன பண்ணப் போறீங்க”?

“கற்பனையா விளையாடறது. இதுல எண்ணிக்கைக்கு அப்பாற்பட்ட சாத்தியக் கூறுகள் உண்டு, ரொம்பவுமே ஜாலியாகவும் இருக்கும்”.

அடப்பாவமே, இந்த மாதிரி முட்டாள்தனமா விளையாடவா இவ்வளவு தூரம் மெனக்கெட்டு வந்தேன்? அவரை கூர்ந்து பார்த்தேன். ஒன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை, சரியான கல்லுளி மங்கன்! எதையும் கண்டுக்காம மேலே பேசினார், “இப்ப நீ கொஞ்ச நேரத்துக்கு முன்னமே சொன்னதையே எடுத்துக்குவோமே. நிஜங்கள் வரும்போது பசியோடத்தான் ஆரம்பிக்கிறதுன்னு சொன்னே இல்லையா, இப்ப ஒனக்கு பசிக்கலையா”?

இதை கேட்டவுடனேதான் எனக்கும் என்னோட அகோரப் பசி உரைத்தது. பசியால் வயிறு பொருமியது நன்றாகக் கேட்டது. இப்போ சாப்பாட்டுக்காக ரொம்ப தூரம் திரும்பப் போகணுமே என்கிற எண்ணம் அலுப்பா இருந்தது. அதுக்காக கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர்கள் நடக்கணுமேன்னு நினைக்கவே அயற்சியா இருந்தது. பேசாமல் கையிலே ஏதாவது டிபன் பார்சல் பண்ணின்ண்டு வந்திருக்கலாமேன்னு கூட தோன்றியது. என்னுடைய எண்ண ஓட்டங்களை அந்தக் கிழவர் ரசித்துப் பார்த்து கொண்டிருந்தார்.

அவர் சிரித்தவாறு கூறினார், ”இப்போ நாம இங்கேயே சாப்பிடுவதாக கற்பனை செய்வோமே”, என்று. எனது முகம் போன போக்கைப் பார்த்து, “இதென்ன குழந்தைங்க சொப்பு விளையாடி சாப்பிடுவது போல பாவனை செய்யும் விஷயம்னு நினைத்தாயா”? என்று இலக்கண சுத்தமாக கேட்டார்.

பைத்தியமாவதற்கு முன்னால் ஏதோ பல்கலை கழகத்தில் இவர் பேராசிரியரா இருந்திருக்கணும். ஏனென்றால் அவர் பேச்சு தோரணை இப்போ அப்படித்தான் இருந்தது. நான் ஏதாவது சொல்வதற்கு முன்னால் அவர் அவருக்கே உரித்தான சிரிப்புடன் மேலே பேசினார், “இங்கப் பார் கண்ணா, எப்படி கற்பனை தனது உண்மையான முகத்தைக் காண்பிக்கிறதுன்னு. இதோ பார்!”

திடீரென அவர் என்னைக் கேட்டார், “உணவு எங்கேருந்து வரதுன்னு சொல்லு பார்க்கலாம்”?

“பூமிலேருந்துதான், வேறெங்கேயிருந்து வர முடியுமாம்”, என நான் பதிலளித்தேன்.

“சபாஷ். பூமிதான், அன்னை பூமிதான், பூமாதேவி. அதனால நாம இப்போ அதே அன்னையை வேண்டறதுதானே லாஜிக்கலாக இருக்கும்? அன்னையை சாப்பாடு போடுமாறு கேட்போமா”?

“லாஜிக்கல்தான், ஆனால் குழந்தைத்தனமாவும் இருக்கே” என்றேன் நான். என்னை ஆமோதிப்பது போல சிரித்து விட்டு, அதே சமயம் நான் சொல்வதை புறங்கையால் தள்ளினார்.

“நீயே பார்”, அன்னை பூமி நமது பிரார்த்தனைக்கு இரங்கிவிட்டாள்” தன் முன்னால் இருந்த வட்டமான கற்பலகையை சுட்டிக் காட்டினார். அதுவரை நான் அதை எப்படி பார்க்கத் தவறினேன் என்பது எனக்கு புரியவில்லை. “உண்மையில் இது ஒரு மூடி மட்டுமே. அதன் கீழே ஒரு ஹாட்பாக்ஸ். அதிலே நமக்கு வேண்டிய எல்லா உணவும் கிடைக்கும்.  சாப்பாடு, குடிப்பதற்கான பானங்கள், சூடாகவோ, குளிர்ச்சியாகவோ நாம் கேட்பதற்கேற்ப. முதலில் பசியை அதிகமாக்க ஏதேனும் குடிப்போம். லெமனேட் பரவாயில்லைதானே”?

நான் பேசாமல் இருந்தேன். இதற்கு பதிலளிப்பது எனக்கு கௌரவக் குறைவாய் பட்டது.

பாஃப்ளோஸ், ஜெஸ்டஸ், லாஃபன்ஷ்டைன் ஆகிய பெயர்களைத் தாங்கிய அக்கிழவர் அநாயாசமாக கற்பலகையை தள்ளினார். அதன் கீழ் ஒரு ஓட்டை தென்பட்டது. அதி அவர் கையைவிட்டு இரு லெமனேட் போத்தல்களை எடுத்தார். பனிக்கட்டியின் சில்லிப்பில் அவை இருந்தன. தனது ஆட்காட்டி விரல்களால் அவற்றின் சீல்களை உடைத்து எனக்கு ஒரு போத்தல் தந்தார், தனக்கு ஒன்று எடுத்துக் கொண்டார்.

ஆச்சரியத்தால் திறந்த எனது வாய் அப்படியே நின்றது. எனது மூளையை யாரோ எனது மண்டையோட்டிலேயே வைத்து பிசைந்தது போன்ற உணர்வு.

“ஒன்னோட திறந்த வாயைப் பாத்தா கண்டிப்பா உனக்கு தாகமா இருக்கணுமே. அதுல ஈ ஏதாவது போறதுக்கு முன்னாலே குடி அப்பனே”, என்றார் அவர்.

ஒரு ரோபோ போன்று அந்த போத்தலை உதட்டுக்கு கொண்டு சென்றேன். லெமொனேட் குளிர்ச்சியாகவும், புளிப்பாகவும் இருந்தது. சில விழுங்குகள் எடுத்துக் கொண்டேன்.

பிறகு பாறையில் இருந்த அந்த ஓட்டைக்கு சென்று பார்த்தேன். அது காலியாக இருந்தது. பேசாம திரும்ப என் இடத்திற்கே வந்து உட்கார்ந்தேன். லெமனேட் அபார சுவையுடன் இருந்தது.

“எப்படி இருக்கு”? என பாஃப்ளோஸ் கேட்டார்.

“திவ்யமா இருக்கு” என்றேன் நான்.

“கனவும் நிஜமும் ஒன்று சேரும் இடத்துல அப்படித்தான் இருக்கும்”
என்னவோ போங்க, இந்த பைத்தியத்தை என்னால் வார்த்தைகளால் வெல்லவியலாது என்பது புரிந்து விட்டது. பேசாம அவர் சொன்னபடியே நடப்பது என திடீரென தீர்மானித்தேன். விளைவுகள் நாசமா போகட்டுமே!

“வாத்து ஈரல் கறி வேணுமா”? என்று கேட்டார் அவர்.

“எனக்கு ஒண்ணூம் ஆட்சேபணை இல்லை”

கையை ஓட்டைக்குள் விட்டார். கேட்ட உணவு ஒரு தட்டில் ஸ்பூன்கள், ஃபோர்க்குகளுடன் வந்தது. எப்படி வந்ததுன்னு ஏன் கவலைப்படணும், சாப்பிட்டால் போதும் என்ற மனநிலைக்கு நான் வந்தேன்.

“எனக்கு வேண்டியது கேக்குகள், வியன்னா கட்லெட” என்று அவர் சீரியசாக கூறினார்.

மறுபடியும் கை உள்ளே சென்றது. இரண்டு தாம்பாளங்களில் அப்பொருட்களும் வந்தன. அவரும் உண்ண ஆரம்பித்தார். நான் பாதி சாப்பிட்டு முடித்தவுடன் அவர் கேட்டார், “கோழிக்கறி பற்றி நண்பர் என்ன நினைக்கிறார்?”

“இந்தப் பொருட்கள் எல்லாம் நான் புத்தகத்தில்தான் பார்த்திருக்கிறேன். ஆனாக்க இன்னிக்கு என்ன கொடுத்தாலும் சாப்பிடறேன்” என்றேன் நான்”.

மறுபடியும் கைக்கும் ஓட்டைக்கும் இடையே ஒரு சதி நடந்தது. கோழிக்கறி வந்தது. ஈரல் கறிக்கு பிறகு அதையும் ஒரு கை பார்த்தேன்.

“பயித்தியமா இருக்கறதுலேயும் ஆதாயம் உண்டு டோய்” நான் கெக்கே கெக்கே என சிரித்தேன்.

“அப்படிச் சொல்லு என் நண்பா”, அவர் நான் கூறியதை ஆமோதித்தார்.

இரு காக்கைகள் பறந்து வந்தன. சற்றே தள்ளி தரையில் வந்து உட்கார்ந்தன. அவற்றை நோக்கி சில உணவுத் துண்டுகளை பாகஸ் வீசினார். மூங்கில் புதருக்கு பின்னால் ஒரு சலசலப்பு கேட்டது. ஒரு கலைமான் காற்றை முகர்ந்து கொண்டே வந்தது. அது எங்களைப் பார்த்தது. தயக்கமேயில்லாமல் பாகஸ் அருகே வந்து அவரது தோள்களை நக்கியது. பாகஸ் ஓட்டையிலிருந்து கைநிறைய பீன்ஸ் எடுத்து பாறை மேல் பரப்பினார். கலைமான் சந்தோஷமாக பீன்ஸ்களை மேய்ந்தது. கனவு காண்கிறோமா என்ற ஐயத்தில் என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். வலித்தது. இதுதான் உண்மை என எனக்குள்ளேயே முணுமுணுத்து கொண்டேன். எனக்கே நான் என்ன சொல்லவருகிறேன் என்று புரியவில்லை.

நான் சாப்பாட்டு ராமன் அல்ல. என் வயிறு மிகவேகமாகவே நிரம்பிவிட்டது. சாப்பிடும் வேகத்தை மட்டுப்படுத்தி, கொறித்தேன். நல்ல ஏப்பமும் வந்தது. இது ஒன்றும் கனவாக இருக்க முடியாதே என்றும் எண்ணினேன்.

பாகன்ஹைமரோ தன்பங்குக்கு சூப், ஒருவகை புலவு, மட்டன் கறி, சப்பாத்தி மற்றும் ரயிதா ஆகியவற்றை உள்ளே தள்ளினார். எலும்பும் தோலுமாக இருக்கும் அவர் உடலில் இத்தனை உணவும் எங்கே போகிறது என வியப்படைந்தேன். கடைசியாக அவரும் திருப்தியாக ஏப்பம் விட்டார். (இன்னும் ஆலிலை போல ஒட்டிக் கிடந்த) தன் வயிற்றைத் தடவியவாறே அவர் சொன்னார், “முதல் ஏப்பம் சாப்பிடறதை நிறுத்தணும்னு சொல்லறது. இரண்டாம் ஏப்பமோ இன்னமும் சாப்பிட்டா சங்குதாண்டின்னு சொல்லறது. ராத்திரி சாப்பாடு வரைக்கும் நாம சாப்பிட்டது தாங்கும்னு நினைக்கிறேன்”.

ராத்திரி சாப்பாடா, சரியாப் போச்சு. இன்னும் மூணு நாளுக்கு தேவையானதை உள்ளே தள்ளியாச்சு. “கையலம்பிக்கலாமே” என்று சொல்லிக் கொண்டே ஒரு சொம்புத் தன்ணீருடன் ஓட்டையிலிருந்து வெளியே எடுத்தார். கையலம்பிய பிறகு மிகுந்த உணவை புற்கள் மேல் போட்டார். காக்கைகள் அவற்றின் மேல் பாய்ந்தன..

“இப்போ விஸ்கி”, பாஃப்ளியோஸ் ஓட்டையிலிருந்து விஸ்கி போத்தல் இரண்டு கப்புகளுடன் எடுத்தார். ஒருவருக்கொருவர் கப்புகளை உயர்த்தி அவற்றை ஒன்றையொன்று தொடச் செய்தோம்.

“உங்க ஆரோக்கியத்துக்கு”, அவர் கூறினார்.

“பைத்தியக்காரத்தனம் வாழ்க”, இது நான்.

எல்லாம் முடிந்ததும் லாஃபன்ஷ்டைன் காலி தட்டுகள், பாட்டில், கப்புகள், ஸ்பூன்கள் எல்லாவற்றையும் திரட்டி அந்த ஓட்டைக்குள் போட்டார். அதுவும் இந்த விந்தை மனிதர் போட்டது எல்லாவற்றையும் உள்வாங்கிக் கொண்டது. போகிற போக்கில் கிழவர் ஒரு யானையை உள்ளே போட்டிருந்தாலும் ஆச்சரியப் படமுடியாது என்றே எனக்குத் தோன்றியது.

ஜெஸ்டஸ் கல் மூடியால் அந்த ஓட்டையை மூடினார். போய் எழுந்து அந்த ஓட்டையின் உள்ளே பார்க்க வேண்டும் என்ற எனது ஆவலை அடக்கிக் கொண்டேன். ஆனால் அதனால் ஒரு பலனும் இருக்காது, அந்தச் சனியன் பிடித்த ஓட்டையில் ஒன்றுமே காணக்கிடைக்காது என்பதையும் உணர்ந்தேன்.

“என்ன கண்ணா திருப்தியா”, ஜெஸ்டஸ் கேட்டார்.

“இதை கேட்கவும் வேணுமா”

ஒரு மெல்லிய காற்று வீசிக் கொண்டிருந்தது. சிறிது நேரம் ஒன்றுமே பேசாமல் அமர்ந்திருந்தோம். ஒன்றையும் நினைக்கும் நிலைமையில் நான் இல்லை. தூக்கம் கண்களை சொக்கியது. திடீரென பாக்ஸ்டன் பேசுவது ஏதோ கனவு போல ஒலித்தது

“கற்பனையோட சக்தியை பாத்தே இல்லையா. பித்தனாக இருப்பதில் இதுதான் சௌகரியம். நான் சொல்லறதை நீ ஒத்துப்பேன்னு தெரியும். இனிமே மேலே பேசலாம்”.

நான்கு நொடிகளுக்கு நிசப்தம் நிலவியது. காற்று இலைகளுடன் சலசலவென ரகசியம் பேசியது.

“அந்தச் சின்னப் பறவையை பாத்தியா”, அவர் என்னைக் கேட்டார். வேண்டாவெறுப்பாக பாதி கண்ணைத் திறந்து பார்த்தேன்.

நான் முன்பின் பார்த்தறியாத ஒரு நீல வண்ணப் பறவை அது. தலையில் மஞ்சள் நிற சீப்பு மாதிரி ஒரு கொண்டை. கருஞ்சிவப்பு அலகு, நீண்ட மஞ்சள் நிற வால், வெண்மையான நகங்கள். இம்மாதிரியான பறவையை நான் பார்த்ததே இல்லை. பாக்ஸ்டெண்டினின் குரல் மந்திரம் போல ஒலித்துக் கொண்டிருந்தது.

“இந்தப் பறவையும் நான் கற்பனை செஞ்சதுதான். மந்திர உலகத்திலேருந்து வந்திருக்கு. அது ஒரு தூதன் மாதிரி. மேலும் விருந்தாளிகள் வந்திருக்கிறதா அது சொல்லறது. இந்த நிகழ்ச்சி கூட நான் இப்போ கற்பனை செய்யறதுதான், இது நினைவிருக்கட்டும்”?

“அதுக்கென்ன இப்போ”, என்று முணுமுணுத்தேன் நான்.

அந்தப் பறவை திடீரென கிறீச்சென கத்தி விட்டு படபடவென பறந்து சென்றது. அந்த கிறீச் சப்தம் என்னை தூக்கத்திலிருந்து முழுக்கவே எழுப்பியது. பாகன்ஷ்டைனை பார்த்தேன். அவரோ ஏற்கனவே எழுந்து நின்று கொண்டிருந்தார். பறவை சென்ற திக்கை சுட்டிக் காட்டினார். அது ஏற்கனவே நூறு மீட்டர்களுக்கும் அப்பால் சென்று விட்டிருந்தது. இருந்தாலும் அதன் மஞ்சள் நிற வாலை நன்கு பார்க்க முடிந்தது. ஜெஸ்டஸ் எனக்கு கைலாகு கொடுத்து எழுப்பி விட்டார்.

“அது எங்கே பறந்து போச்சுன்னு பார்த்தே இல்லை”, அவர் வேகமாகக் கூறினார், “அங்கேதான் நாம விருந்தாளிகளை பார்க்கப் போறோம்”

“விருந்தாளிகாளா”, இன்னும் என்னுடைய மயக்க நிலை தெளியவில்லை.

“அதுவும் அழையா விருந்தாளிகள்”, என்று மேலும் கூறினார்.

“வா போவோம்”, என்னைக் கைபிடித்து இழுக்காத குறை.

மூங்கில் புதரைத் தாண்டிச் சென்றோம். பறவை ஏதோ ஒருமரக்கிளையில் சென்று அமர்ந்திருக்க வேண்டும். என்னால் அதை பார்க்க முடியவில்லை. ஆனால் அது எங்கே இருக்கிறது என்பதில் பாகன்ஹைமருக்கு ஐயமே இல்லை. “அந்த வழியேப் போகணும்”, மரங்களின் ஊடே ஒரு இடைவெளியை காண்பித்தார். நாங்கள் வேகமாகச் சென்றோம். பல முட்புதர்கள் வழியில் இருந்தன. சீரற்ற தரை. ஆகவே எங்கள் முன்னேற்றமும் தடைபட்டது. திடீரென எனக்கு தோன்றிய ஒரு ஐயத்தை கேட்டேன்.

“விருந்தாளிகள் வந்திருக்காங்க சரி, ஆனா நாம ஏன் அவங்களை போய் பாக்கணும்”?

“அழையா விருந்தாளிகள்னு கூடச் சொன்னேனே” இது பாக்ஸ்டன்.

“அழையா விருந்தாளிகளா” எனக்குப் புரியவில்லை.

“நீயே பார்க்கப்போறே”, என்று கூறியவாறு வேகத்தை அதிகமாக்கினார். இருபது நிமிடங்கள் நடந்தோம். எங்கே போக வேண்டும் என்பதில் பாக்‌ஷ்டோபெருக்கு சந்தேகமே இல்லை. அடர்த்தியாக மரங்கள் இருந்த ஒரு இடத்துக்கு நாங்க்அள் வந்தோம். நிற்குமாறு பாகன்போர்க் சைகை காட்டினார். முன்னால் இருந்த இலைகளை மெதுவாக விலக்கிப் பார்த்தோம். நாங்கள் இருந்த இடம் சற்றே மேட்டுப் பகுதி. இலைகளுக்கப்பால் எழுபது மீட்டர் தூரத்துக்கு கிட்டத்தட்ட வெட்டவெளியாக இருந்தது.

ஒரு பையனும் பெண்ணும் பயத்துடன் ஒருவர் கையை ஒருவர் பிடித்து நின்று கொண்டிருந்தனர். இருவரும் ஜீன்ஸ் அணிந்திருந்தனர். இரு பெரிய தடியன்கள் அவர்கள் வழியை மறித்து நின்றிருந்தனர். ஒருவன் கையில் பிஸ்டல் இருந்தது. இன்னொருவன் கத்தி வைத்திருந்தான். அவற்றால் இந்தப் பையனையும் பெண்ணையும் பயமுறுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் உள்ளனர் என்பது வெளிப்படையாகவே தெரிந்தது

(தொடரும்)

(ஆன்லைனில் ஜெஸ்டஸ் ஆங்கில மூலத்தை வாங்க இங்கே செல்லவும்).

அன்புடன்,
டோண்டு ராகவன்

11/19/2009

பலே ஆர்வி அவர்களே

இப்போதுதான் வினவின் வன்மம் நிறைந்த பதிவைப் பார்த்தேன். அது உங்களைக் குறிவைத்து எழுதப்பட்டுள்ளது. இதுவரை உங்கள் பின்னூட்டம் அதில் இல்லை. இனிமேலும் வராது என நம்புகிறேன். அப்படியே கீப் இட் அப்.

வினவின் பதிவுக்கு பின்னூட்டம் போடுவதை விட வேறு பல நல்ல வேலைகள் உள்ளன. வேண்டுமெனவே உங்களை ப்ரவோக் செய்து எல்லோரும் எழுதுகிறார்கள். அம்மாதிரியானவர்களை இக்னோர் செய்யவும் (முக்கியமாக வினவு போன்ற மனிதர்களை). அவர்களுடன் வாதம் செய்வது முட்டாள்களுடன் பேசுவது போன்றதே. யாராவது நடுவில் வந்து பார்த்தால் யார் முட்டாள் என்பது கூட தெரியாமல் போய்விடும்.

ஒரு வேளை நீங்கள் வேறு எங்காவது பிசியாக இருந்து இதை பார்த்திருக்காமலும் இருந்திருக்கலாம். கூப்பிட்ட மரியாதைக்கு போக வேண்டும் என நீங்கள் போனால் உங்களை திட்டுவதுதான் நடக்கும். கூடவே அபத்தமான வாதங்களும் வரும். போக மாட்டீர்கள் என நம்புகிறேன்.

கள்ளர்சாதிப் பெண் கொலை பற்றிய பதிவிலேயே பார்த்தீர்கள்தானே. எப்படியெல்லாம் வார்த்தைகளை திரித்து பேசினார் என்று. முதலில் கள்ளர் சாதியை கண்டித்தவர் யாரிடம் செருப்படி பட்டாரோ தெரியவில்லை, பார்ப்பனீயம் பற்றி பேச ஆரம்பித்து, அப்பதிவையே ஒட்டு மொத்தமாக திசை திருப்பினார்.

அப்பதிவில் நான் உங்களுக்குக் கூறியதைத்தான் இங்கேயும் கூறுவேன். Avoid Vinavu like a plague. மற்றப்படி அங்கு செல்வதும் செல்லாததும் உங்கள் விருப்பம். இப்பதிவை அச்சேற்றும்வரை நீங்கள் அங்கு செல்லவில்லை என்பதை கண்டேன். அதுவே சரியான முறை.

அதையே maintain பண்ணுவீர்கள் என நம்புகிறேன். உயர் சாதீயம் என்னும் வார்த்தை இருக்க எல்லாவற்றையும் பார்ப்பனீயம் என ஜல்லியடிக்கும் வினவு, அவரோட நண்பர்கள், எதிரிகள் எல்லோரும் அடிச்சுண்டு சாகட்டும். நாம் வேடிக்கை பார்ப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

டோண்டு பதில்கள் - 19.11.2009

கேள்விகள் கேட்போருக்கு வழக்கமான ஒரு வேண்டுகோள். சில சமயம் எங்காவது இணையத்தில் படித்ததை ஆதாரமாக வைத்து கொண்டு கேள்விகள் கேட்கப்படுகின்றன. அதில் தவறில்லை. ஆனால் அப்படியே தமது கேள்விகளின் பின்புலனையும் கூறினால் சௌகரியமாக இருக்கும். நானே கூகளிட்டு பார்ப்பதுண்டு என்பது நிஜமே. ஆயினும் அந்த சுட்டி ரெடியாக கிடைத்தால் அதை தேடும் நேரம் விரயமாகாமல் பதிலில் இன்னும் அதிக முனைப்பாக இருக்கலாம் அல்லவா?


கேடியார்
1. சிங்கப்பூரில் ஆபிசில் ஆங்கிலத்தில் பேச மாட்டேன் தமிழில் மட்டுமே பேசுவேன் என்று லந்து செய்தால் எப்படி அடிப்பார்கள்?
பதில்: ரோத்தன் அடி கேள்விப்பட்டிருக்கிறீர்களா, அதை தந்து வேலையிலிருந்து கல்தா கொடுப்பார்கள், அது தர வேண்டிய தண்டனைதான்.


2. வேலை நேரத்தில் வாங்கும் சம்பளத்திற்க்கு உருப்படியாக ஏதும் செய்யாமல் கேவலமான வலைபூ எழுதிபவர்களை என்ன செய்யலாம்?
பதில்: மாட்டிக் கொள்ளாமல் செயல்படுமாறு அறிவுரை கூறலாம்.




எம்.கண்ணன்
1. கமல்ஹாசன் ஏன் விவேக்கை தன் படங்களில் சேர்ப்பதில்லை ? விவேக்கின் விவகாரங்களினாலா ? (வடிவேலுக்கு தேவர் மகனிலும் (மிக நல்ல), சிங்காரவேலனிலும் சுமாரான ரோல்)
பதில்: நீங்கள் சொன்னபிறகுதான் யோசித்து பார்த்தேன். ஒரு படம் கூடவா இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை? இருவருமே பாலசந்தரின் தயாரிப்புகள்தானே. ஏன் அப்படி? கேபிள் சங்கர், லக்கிக்லுக், உண்மைத் தமிழன் ஆகியோர் இன்னும் ஆதாரபூர்வமாக பதில் தரக்கூடும்.

கேபிளுக்கு ஆகவே ஃபோன் செய்து கேட்டேன். அவரும் என்னைப் போல இப்போதுதான் நினைத்துப் பார்க்கிறார். கமல் விவேக் நடுவில் ஏதாவது ஈகோ பிரச்சினை இருக்கலாம் என இப்போது எனக்குத் தோன்றுகிறது.

ஆனால் உண்மைத் தமிழனோ அப்படி ஒன்றும் பிரச்சினைகள் ஏதும் அவர்களுக்கிடையே இல்லை, நல்ல வாய்ப்பு அமையவில்லை அவ்வளவுதான் எனக் கூறுகிறார்.


2. எல்லா 2 வீலர் கம்பெனிகளும் ஏன் சில ஸ்டாண்டர்டைசேஷன் செய்வதில்லை? ஒரு வண்டியில் பூட்டும் போது இடது புறம் (ஹேண்டில் பார்) தலை சாய, இன்னொரு வண்டியில் வலது புறம் - பார்க்கிங் லாட்டுகளில் இடம் வேஸ்ட் ஆகிறது, வண்டி விட, எடுக்க மிக கஷ்டமாக உள்ளதே ?
பதில்: ஸ்கூட்டர் கம்பெனிகள் மட்டும்தானா இதில் குற்றவாளி? வீடுகளில் நாம் உபயோகிக்கும் ப்ளக்குகளுக்கும் ப்ளக்டாப்புகளுக்குமே பொருந்துவதில்லையே. பல நேரங்களில் பொருட்களை டிசைன் செய்பவர்கள் தமது கற்பனைத் திறமையை மூட்டை கட்டி வைத்து விடுகின்றனர் என்றுதான் கூற வேண்டும். நீங்கள் கூறிய உதாரணத்தையே எடுத்து கொள்ளுங்கள். மிகவும் உண்மையான, சீரியசான குற்றச்சாட்டு. ரொம்பவும் எளிமையாக தவிர்த்திருக்க வேண்டிய விஷயம், ஆனால் அதிலேயே கோட்டை விட்டிருக்கிறார்களே.


3. அழகிரி திருச்செந்தூர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால் தமிழ்நாட்டுக்கு 2 துணை முதல்வர்கள் அஃபிஷியலாக கிடைப்பார்களா ?
பதில்: ஏன் கூடாது? தென்மாநிலங்களுக்கு அழகிரி, வடமாநிலங்களுக்கு ஸ்டாலின்? செய்தாலும் செய்வார்கள்.


4. அதிமுகவில் உட்கட்சி தேர்தலாமே? நெசமாலுமே ஜனநாயகம் பூத்துக் குலுங்குகிறதா என்ன?
பதில்: (வ்டிவேலு குரலில்) ஆகககா, அதான் மழை இந்த போடு போட்டதா?


5. ஜெயமோகன் வசனத்தில் பழசிராஜா - மூணேகால் மணிநேரம் உட்கார்ந்து சரித்திரப் படம் பார்க்க மறத் தமிழர்களுக்கு நேரம் இருக்குமா?
பதில்: என் தந்தை நினைவுக்கு வருகிறார். ஒருமுறை லிபர்ட்டியில் வீரபாண்டிய கட்டபொம்மன் படம் போட்டிருந்தார்கள். இவரும் மாலை காட்சிக்கு சென்றிருக்கிறார். பட முடிந்ததும் கோடம்பாக்கம் ரயில் நிலையம் வந்து மீனம்பாக்கம் வருவதாக அவர் திட்டம். ஆனால் வீட்டுக்கு வர இரவு பத்தரைக்கு மேல் ஆயிற்று. “என்னடா, படம் முடியப்போகிறதா என்றே ஆகிவிட்டது. விடாமல் எல்லோரும் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்” என்ற தனது திகைப்பையும் வெளிப்படுத்தினார். பழசிராஜா வீ.பா.க.பொ. விடவா அதிக நீளமானது?.


6. 'கனகவேல் காக்க' படம் வெற்றி பெற்று விட்டால் பா.ரா முழுமூச்சில் சினிமாவில் இறங்கிவிடுவாரா?
பதில்: அவரையே கேட்டு சொன்னால் போயிற்று.
கேட்டாச்சு. தான் முதற்கண் எழுத்தாளர். தனது எழுத்துக்களுக்கு கருவிகளாகத்தான் பத்திரிகை, தொலைக்காட்சி, சினிமா ஆகிய ஊடங்களை வைத்திருப்பதாக அவர் தெளிவாகவே கூறினார். தனக்கு 25 வயதாகிய போதே திரைப்படங்களுடன் தொடர்பு உண்டென்றும், சில கதைகளில் மாறுதல்கள் செய்ய தன்னைக் கூப்பிட்டிருக்கிறார்கள் என்றும் கூறினார். பாண்டியராஜனின் “வள்ளி வரப்போறா” என்ற திரைப்படத்தில் தனக்கேற்பட்ட அனுபவங்களையும் கூறினார்.

சுஜாதா, பாலகுமாரன், இரா முருகன் ஆகியோர் பற்றியும் குறிப்பிட்ட அவர், அவர்களல் கதாசிரியனுக்கு மதிப்பு கூடியது என்றார். ”கனகவேல் காக்க” படம் பற்றியும் பேசினார். எது எப்படியானாலும் சினிமாவிலேயே முழு கவனம் செலுத்துவது என்பது இல்லை என்றும் கூறினார்.


7. சோனியா காந்தி ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியை அடக்கிவைத்த மாதிரி பிஜேபி டெல்லி தலைகளால் ரெட்டி சகோதரர்களை கர்நாடகத்தில் அடக்க முடியவில்லையே?
பதில்: சோ அவர்கள் ஒரு துக்ளக் ஆண்டுவிழாவில் கூறியது போல, “இத்தருணத்தில் அதிமுகவில் ஜெயலலிதாவின் ஆளுமை பற்றி பேச வேண்டும். ஒரு கட்சிக்கு சரியோ தவறோ அம்மாதிரி ஒரு தலைமை மட்டும் இருப்பது கட்சிக்கு நல்லதே. கட்சிக்குள் என்னதான் பேசி விவாதித்தாலும் வெளியில் வரும்போது ஒரே குரலில் பேசுவது நலம்”.
“ஆனால் பாஜகவிலோ தலைக்கு தலை தான் ஏன் தலைவராகக் கூடாது என நினைக்கிறார்கள். உள்ஜனநாயகம் உள்ள கட்சியில் இது ஒரு கஷ்டம். அதே சமயம் இரண்டாம் நிலை தலைவர்களும் இதனால் உருவாகலாம். பாஜக-வில் அவ்வகையில் பல ஆல்டெர்னேடிவ்கள் உள்ளன. அத்வானி, மோடி, ஜஸ்வந்த்சிங் என பல பேர். ஆனால் இங்கும் உமாபாரதி கலாட்டா இருப்பது வேறு விஷயம். காங்கிரசிலோ சோனியா காந்தியை விட்டால் வேறு ஆளில்லை. மிஞ்சி மிஞ்சி போனால் ராகுல் காந்தி இருப்பார். அதாவது நேரு குடும்பத்தினர் மட்டுமே”.


அவ்வளவுதான் விஷயம்.


8. அசினின் அக்குள் வியர்வை பற்றியெல்லாம் கவர் ஸ்டோரி (+ படம்) போடுமளவிற்கு விகடன் வந்துவிட்டதே? முன்பெல்லாம் விகடன் கவர் ஸ்டோரி என்றால் ஒரு நல்ல விஷயம் இருக்கும். ஆனால் கடந்த 4 மாதங்களாக அடாசு விஷயங்களை கவர் ஸ்டோரியில்? என்ன ஆயிற்று விகடன் இணை, துணை, பொறுப்பு மற்றும் முதன்மை ஆசிரியர்களுக்கு?
பதில்: என்னவா? எல்லா நிறுவனங்களிலும் வரக்கூடிய அலுப்புதான்.


9. ஜெயமோகன் ஆஸ்திரேலியா சென்றாலும் சரி, கனடா சென்றாலும் சரி, அமெரிக்கா சென்றாலும் சரி - நாடு முழுவதும் சுற்றிக் காட்ட, விருந்தோமல் செய்ய பல வாசகர்கள், நண்பர்கள் செய்கிறார்கள். ஆனால் பலமுறை கேட்டு, வேண்டுகோள் விடுத்தும் சாருவை யாரும் எங்கும் கூப்பிட்டு (வெளிநாடுகளில் வசிப்பவர்கள், தமிழகத்துக்குள்ளேயே வசிப்பவர்கள் கூட) விருந்தோம்புவது இல்லையே? ஏன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்: மடிப்பாக்கத்தில் வசிக்கும் எனது எழுத்தாளர் நண்பர் வீட்டுக்கு அமெரிக்கவாழ் பதிவர் ஒருவருடன் சென்றிருந்தேன். அப்போது அவர் சாரு பற்றி பேசும்போது, அவருடன் ஒரு அளவுக்குள் பழக வேண்டும் என கூறினார். கடன் கேட்டுவிடுவார் என்றார்.


அவருடைய வலைத்தளத்திலேயே பார்க்கலாமே, தனது வங்கிக் கணக்கு எண்ணைக் குறிப்பிட்டு அதற்கு பணம் அனுப்புமாறு கேட்டு கொள்கிறார். அப்படி பெறும் பணத்தை ரொம்ப காஸ்ட்லி பார்களில் குடிக்கத்தான் பயன்படுத்துகிறார் என்பதையும் அவ்வப்போது எழுதி வருகிறார். இந்த விஷயங்களெல்லாம் படிப்பவர் மனதில் ஓர் அவெர்ஷனை உருவாக்கிவிடுகிறது.


இவையெல்லாம் ஜெயமோகன் விஷயத்தில் மிஸ்ஸிங். தனது தினசரி தேவைகளுக்கு அவர் யாரிடமும் கையேந்துவதில்லை, அவரது புத்தகங்கள் அமோகமாக விற்பனை ஆகின்றன. அவரது எழுத்துக்களில் சுய இரக்கம் கிடையாது. ஆகவேதான் அவரை அழைக்க ஆட்கள் அனேகம் உண்டு. நன்றாக வேறு அவர் எழுதுகிறார் என்பது கூடுதல் போனஸ்.


10. ஒரு எழுத்தாளர் அல்லது படைப்பாளியின் உழைப்பிற்கு, வெற்றிக்கு பின்னால் அவரது மனைவியின் சப்போர்ட் எவ்வளவு முக்கியம் ? (அதாவது பிக்கல் பிடுங்கல்கள், நச்சுத் தொல்லைகள் இல்லாத சப்போர்ட்)
பதில்: எழுத்தாளரோ எழுத்தாளினியோ அவர்களது வெற்றிக்கு அவர்தம் வாழ்க்கைத் துணையின் பங்கு மிக அதிகம். இந்தத் தருணத்தில் பி.ஜி.வோட் அவுஸ் (P.G. Wodehouse) தனது Performing Flea என்னும் புத்தகத்தில் அதை தனது மகளுக்கு அர்ப்பணம் செய்திருப்பார். அதை இவ்வாறு குறிப்பிடுகிறார், “To my dear daughter, without whose dedicated help, this book would have been finished in half the time". (நினைவிலிருந்து மேற்கோள் காட்டுகிறேன்)




அனானி (32 கேள்விகள் கேட்டவர்)
1. தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்? ஏன்?
பதில்: இலவச டிவி திட்டம். மக்களை முழுமுட்டாளாக்கும் செயல்பாடு இது.


2. தமிழக அரசின் எந்த இலவச திட்டத்தை ஆதரிக்கிறீர்கள்? ஏன்?
பதில்: எல்லாமே மக்களை முட்டாளாக்கும் திட்டங்கள், மக்களை பிச்சைக்காரர்களாக்கும் செயல். ஆகவே அவற்றில் எவற்றையுமே ஆதரிக்கவில்லை.


3. அடுத்து என்ன திட்டம் (2011 தேர்தலில்) வரும் என் கணிக்கிறீர்கள்?
பதில்: அதான் ரூம் போட்டு யோசிச்சிட்டு இருக்காங்களே. ஏதாவது செய்வாங்க.


4. மாதம் 30,000 க்குமேல் வாங்கும் அலுவலர்களுக்கு ரேசனில் மலிவு (து.பருப்பு) பொருள் மான்ய விலையில் தேவையா? அடுக்குமா?
பதில்: தேவையில்லைதான். ஆனால் வாய்ப்பு கிடைத்தால் பயன்படுத்தாது இருப்பார்களா?


5. இன்றைய நிலவரப்படி உலகில் பெரும் செல்வந்தர் யார்?
பதில்: 40 பில்லியன்களுடன் பில் கேட்ஸ் முதலிடத்தில் நிற்கிறார்.


6. வேலை இல்லா பட்டதாரிகளுக்கு வழங்கப் படும் அரசின் உதவித் தொகை திட்டம் எப்படி உள்ளது?
பதில்: அதன் மேல் எனக்கு நல்லபிப்பிராயம் இல்லை. கிடைத்த வேலையை ஏற்காது சோம்பெறிகளாக திரிய ஊக்கமளிக்கும் திட்டம் இது.


7. வாழும் மனிதனின் அவசியத் தேவைகள் எவை எவை?
பதில்: உணவு, உடை, இருப்பிடம் என்பதை எல்லோருமே அறிவார்களே. கூடவே சுயமரியாதையும் வேண்டும். ஆகவே அவற்றை சொந்த உழைப்பால் பெற முயறசிக்க வேண்டும்.


8. இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரிந்தவன் - யார்?
பதில்: கண்ணதாசன் கூறியதுதான். 
வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில், ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும், பார்த்து நடந்தால் பயணம் தொடரும், பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும். கதவு திறந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும். கவலை தீர்ந்தால் வாழலாம்




9. இந்த பரந்த இந்த உலகில் வாழத் தெரியாதவன் யார்?
பதில்: மேலே குறிப்பிடப்பட்டுள்ள பாடலின் எளிய உண்மையை உணர்ந்து கடைபிடிக்காதவன்.


10. வி.ஆர். எஸ்., திட்டத்தால் வெளியேறியவர்கள் நிலை?
பதில்: ஒரு சீரிய நோக்கத்தை முன்னிறுத்தி வி.ஆர்.எஸ். பெற்றவர் உருப்பட்டனர். மற்றவர் சந்தியில் நின்றனர். அவ்வாறு ஆகிவிடுமோ என பயந்தவர்கள் வேலையிலேயே நின்றனர், ஆனால் அவர்களால் கம்பெனிகளுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை.


11. கல்வித்துறையின் வளர்ச்சி எப்படி உள்ளது?
பதில்: வளர்ச்சி எனக் கூற இயலாது. வீக்கம் என்று வேண்டுமானால் கூறலாம்.


12. தன்னை விட படித்த மனைவியுடன் வாழ்க்கை நடத்துவதுபவரின் மனநிலை?
பதில்: சுயபச்சாதாபம், தாழ்வுணர்ச்சி. அதனால் மனைவி மீது சந்தேகம், இருவரது வாழ்க்கையும் நரகமாகிறது பல இடங்களில்.


13. மனதறிந்து துரோகம் செய்தவர்களை/செய்பவர்களை என்ன செய்யலாம்?
பதில்: சமயம் பார்த்து காலை வாரவேண்டும்.


14. பூவுலகில் கவலையே இல்லாத மனிதர் சுயபுத்தியுடன் எவரேனும் உளரோ?
பதில்: வெகுசிலர் இருக்கலாம், நான் பார்த்ததில்லை.


15. வெளிநாட்டில் வேலை பார்க்கும் இந்தியர்கள் நிலை எப்படியுள்ளது?
பதில்: முறையாக தமது இந்தியக் கம்பெனிகளால் மாற்றம் செய்யப்பட்டு செல்பவர்களது நலன் உள்ளூர்காரர்களை நம்பில்லை. அதன்றி வேலை ஏஜென்சிகளுக்கு பணம் கட்டி போனவர்கள் பாடு திண்டாட்டம்தான். இது பற்றி நான் போட்ட பதிவில் நான் கூறிய கருத்துக்களை மாற்றிக் கொள்வதாக இல்லை.


16. பொதுவாய் கவிஞர்கள், இயல்பு நிலை தவறி இருப்பது ஏன்?
பதில்: அசாதாரண மனநிலையில் இருப்பவர்கள் கவிஞர்கள். கனவு கண்டு அதற்கு உருவம் தருபவர்கள். இப்படி அப்படி என்றுதான் இருப்பார்கள்.


17. வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே மீண்டும் வருமா?
பதில்: எப்போது அது இல்லாமல் இருந்திருக்கிறது, மீடும் அதுவருமா எனக் கேட்பதற்கு? 


18. நாட்டில் பெண் களுக்கு எதிரான, செக்ஸ் - வயலன்ஸ் கூடுவது அடிப்படை காரணம்?
பதில்: பெண்ணின் முன்னேற்றம் பல ஆண்களுக்கு கிலியை ஏற்படுத்துவதும் ஒரு காரணம்.


19. எண் கணித முறைப்படி பெயரை மாற்றும் போக்கு அதிகமாகிறதே?பலன் ?
பதில்: பலனும் ஒரு எண்தான், அதாவது பூஜ்யம்.


20. நிம்மதியான எதிர்கால வாழ்க்கைக்கு வழிகள்?
பதில்: இப்படி எல்லா கேள்வி கேட்டால் கிடைத்துவிடுமா? அவரவர் தம் சக்திக்கேற்ப உழைக்க வேண்டும். தகுதிக்கு மீறிய ஆசையை வளர்த்து கொள்ளக் கூடாது. 


21. சுகமாக வாழ விரும்புகிறர்வர்களுக்கு வழிகள்?
பதில்: நிம்மதியான வாழ்க்கையே சுகமான வாழ்க்கை.


22. நேரம் போதமாட்டேன்ங்கிறதே என்பவர்கள் பற்றி?
பதில்: அவர்களுக்கு தேவை நேர மேலாண்மை. மா. சிவகுமார் ஒரு பதிவில் எழுதியுள்ளார். அதிலுள்ள பெரிய கற்கள், சிறிய கற்கள், மணல் துகள்கள், தண்ணீர் ஆகிய விஷயங்களை கண்டு கொள்தல் நலம்..“


23. ஒருவரது குறிக்கோளை அடைய எளிய உபாயங்கள்?
பதில்: கவனம் முழுமையையும் அக்குறிக்கோளை அடைவதில் செலுத்த வேண்டும். திசை திருப்பப்படக்கூடாது.


24. உலகில் செழுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
பதில்: எப்போதும் புதுப்புது குறிக்கோள்களை அமைத்து கொள்ள வேண்டும், அதாவது ஒன்றை அடைந்ததும் அடுத்தது அதற்குப் பின் அதற்கடுத்தது என்று செல்தல் நலம்.


25. சித்த மருத்துவம் பிரபலமாய் ஆகிறதா?
பதில்: சித்தர்கள் பலவற்றை பூடகமாக சொல்லியுள்ளனர். அவற்றையெல்லாம் முதலில் ஒழுங்கு படுத்திக் கொள்ள வேண்டும். அது செய்யாதவரை சித்த மருத்துவத்தின் முன்னேற்றம் கடினமானதே.


26. மனிதனுக்கு எதற்கு பொறுமை தேவை?
பதில்: குறிக்கோள்களை அடைவதில்.


27. குடும்பத்தில் அதிகம் உழைப்பது யார்?
பதில்: குடும்பம் என்பது கூட்டு முயற்சி. அனைவருக்கும் கடமைகள் உண்டு. அவரவர் கடமையை செய்தாலே போதும் இதில் எதற்கு இம்மாதிரி ஒப்பிடுதல் எல்லாம்?


28. துரோகம் செய்தவன் எதிர்காலம்?
பதில்: தனக்கு யாராவ்து துரோகம் செய்து விடுவார்களோ என்றே அஞ்சிக் கொண்டிருப்பான்.


29. திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் ?
பதில்: கர்வபங்கம்தான், வேறென்ன?


30. ஒருவனின் தலை எழுத்து பற்றி சொல்வது உண்மையா? நம்புகிறீர்களா?
பதில்: ஜீன்களில் பொதிக்கப்பட்டுள்ள தகவல்களே அவரவரது தலையெழுத்து. அவற்றில் பல விஷயங்கள் ஒரு விதமான சாத்தியக்கூறையே கூறுகின்றன. அவற்றையும் மீறவியலும் என்பதும் சில சமயங்களில் நிறுவப்பட்டுள்ளது.


31. விதியை மதியால் வென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா?
பதில்: நான் ஐடிபிஎல்-ல் வேலை செய்தபோது என்னை மட்டம் தட்டும் எண்ணத்தில் என்னை ஒரு முக்கியமில்லாத இடத்துக்கு மாற்றினார்கள். நல்லதாய் போயிற்று என நான் அங்கேயே இருந்து கொண்டு எனது மொழிபெயர்ப்பு வேலைகளை பார்த்துக் கொண்டது நீங்கள் கேட்ட கேள்விக்கான ஒரு உதாரணமே.


32. கனமழையில் நீலகிரியில் நிலச்சரிவு மனிதனின் பேராசைக்கு இயற்கையின் சாபம் என பார்த்த பிறகும் திருந்தாத ஜென்மங்கள்?
பதில்: திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம், வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்?




கிருஷ்ணா
1. Given the string of defeats and internal issues, what would be the best plan of recovery for BJP?
பதில்: பாஜக இப்போது செல்லும் பாதை அதற்கு நாசத்தையே விளைவிக்கும். சுதாரிக்க வேண்டிய தருணம் இது. செய்வார்களா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி/



2. Reddys Vs BSY is over officially. But I guess this is just temporary fix...Do you think BJP will stay on and complete their term with such threats popping out every now and then?
பதில்: என்ன செய்வது? எடியூரப்பா மோடி இல்லையே என்றுதான் வருத்தமாக இருக்கிறது.



3. Amma is not quite aggressive as she used to be…Has she kind of given up that I may not make it or is it like I will fight it only during the election days?
பதில்: ஜே என்ன செய்யப் போகிறார் என்பது அவருக்கே தெரியாது என்றுதான் தோன்றுகிறது.



4. Given M K Alagiri is not very convenient handling his central portfolio, Will he switch to state during the next elections?
பதில்: அவ்வாறு நடந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை.




ரமணா
1. உணவுப்பொருட்களின் அதீத விலை ஏற்றத்திற்கு பதுக்கல் வாணிபம் செய்யும் கயவர்கள்தான் காரணம் எனத் தெரிந்த பிறகும் நடவடிக்கை எடுக்க தயங்கும் அரசுகள் பற்றி?
பதில்: வாய்க்கரிசி போட்டபிறகு பிணத்தால் என்ன பயன்? அதனால் என்ன செய்ய இயலும்? 



2. தங்கத்தின் விலையை ஆன்லைன் வர்த்தகம் செய்யும் சூதாடிகள்தான் விண்முட்டும் அளவுக்கு ஏற்றுகிறார்கள் எனத் தெரிந்த பிறகும் வாழா இருக்கும் அரசுகள் பற்றி?
பதில்: இல்லை. ஆன்லைன் வர்த்தகம் ஒரு அறிகுறி. உண்மையில் அரசே இப்போது தங்கம் வாங்குகிறது, டாலரின் மதிப்பு விடாமல் வீழ்ந்து கொண்டிருப்பதால்.



3. ஜீனிவிலை இருமடங்காய் உயர்ந்தபிறகும் கரும்புக்கு நியாயமான விலை விவசாயிகளுக்கு கொடுக்க தயங்கும் சர்க்கரை ஆலைகள் மீது நடவடிக்கை எடுக்கா அரசுகள் பற்றி?
பதில்: தனிப்பட்ட விவசாயிகளிடம் அரசை அசையச் செய்யும் சக்தி ஏதும் இல்லை. ஆனால் ஆலைகளிடம் உண்டு. 



4. தொலைதொடர்புத்துறை அலைவரிசை ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள வருமான இழப்பு பற்றி சிபிஐ கண்டுபிடித்தபிறகும், நிலவும் இறுக்கமான இருபக்க மெளனம் பற்றி?
பதில்: சிபிஐ கண்டுபிடிப்பு எல்லாம் ஒரு நாடகம் போலத்தான் இந்த விஷயத்தில் தோற்றமளிக்கிறது. எதையும் முதல் பார்வையில் நம்பலாகாது.



5. நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசத்துக்கு ஆப்பு வைக்கபட்டது பற்றி?தொடர்ந்து கேள்விகுறியாகியுள்ள ”நம்பர் ஒன்” ( அடுத்த சூப்பர் ஸ்டார்) பட்டம் பற்றி?
பதில்: ஒரு நேரத்தில் ஒரு சூப்பர் ஸ்டார்தான் இருக்கவியலும். இரண்டு நடிகர்கள்தான் பாப்புலராக இருக்கலாம், இது பற்றி நான் போட்ட இப்பதிவைப் பார்க்கவும்.




அனானி (17.11.2009 மாலை 05.45-க்கு கேட்டவர்)
1. வந்தே மாதரம் பாடக்கூடாது என்று பத்துவா போடும் முசுலீம் அமைப்பை இணைய திராவிட கும்பல் ஏன் ஆதரிக்கவேண்டும்? நாளை தமிழ்த் தாய் வாழ்த்து பாடுவதை பத்துவா போட்டு நிறுத்தச்சொன்னால் இதே போல் ஆதரிப்பார்களா இந்த திராவிட குஞ்சுகள்? 
பதில்: இசுலாமியர் சிறுபான்மையராக இருக்கும் வரைதான் சற்றே சகிப்புத் தன்மை உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் பெரும்பான்மையினராக ஆனதன் பிறகு அது இருக்காது. தமிழ்த்தாய் வாழ்த்தையும் தடுத்து ஃபத்வா போடுவார்கள். திராவிட கும்பல் வாயில் விரலை வைத்துக் கொண்டுதான் உட்கார வேண்டும்.


கந்தசாமி
1. மதுரை அழகிரி, தளபதி, கனிமொழி, மாறன் சகோதரர்கள் இவர்களின் மோதலில் தற்போதைய நிலை?
பதில்: அதுதான் இதயம் நனைந்து விட்டதே, கண்களும் பனித்தனவே.

2. சன் டீவி-கலைஞர் டீவி நிர்வாகங்களின் மோதல், ஆளிழுப்பு விவகாரம் -தற்போதைய நிலை?
பதில்: மேலே சொன்ன பதில்தான் இங்கும்.

3. ஜெ-நடராசன் மோதல் -தற்போதைய நிலை?
பதில்: ஒரு மாதிரியான தமாஷான நிலை. அரசியல்லே இதெல்லாம் சகஜமப்பா என கவுண்டமணி கூறுவதை நிரூபிக்கிறது.

4. தமிழக காங்கிரஸ் கோஷ்டி மோதல்கள்- தற்போதைய நிலை?
பதில்: எப்போதும் போலவே நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகத் தொடர்கிறது. திருநாவுக்கரசு கோஷ்டி என ஒன்று புதிதாக வந்தாலும் வியப்படைவதற்கில்லை.

5. வடிவேல்-விஜயகாந்த் மோதல்-தற்போதைய நிலை?
பதில்: திரைமறைவு பேரங்கள் நடந்திருக்கும் என நினைக்கிறேன். அடக்கி வாசிக்கப்படுகிறது.

6. சென்னை சட்டக்கல்லுரி மாணவர் மோதல் -வழக்கின் -தற்போதைய நிலை?
பதில்: கிணற்றில் போட்ட கல். சம்பந்தப்பட்ட மாணவர்களின் படிப்பு பாழானது பாழானதுதான்.

7. போலீஸ்-வக்கீல் மோதல் -வழக்கு-தற்போதைய நிலை?
பதில்: சோ சொன்னது போல இதில் தலைகுனிவு போலீசுக்கோ, முதல்வருக்கோ இல்லை. யாருக்கு என்பதை நானும் சோவைப் போலவே ஊகத்துக்கே விட்டுவிடுகிறேன்.

8. நடிகர்-பத்திரிக்கையாளர் மோதல் விவகாரம்-தற்போதைய நிலை?
பதில்: விவேக்குக்கு ஆப்பு வைக்கப்படுவதாக கேள்விப்பட்டேன். அவரது புகைப்படங்கள் எடுக்கப்படாமல் அவரை தவிர்க்கிறார்கள் என்றும் படித்தேன்.

9. இரு பிரபல பிளாக்கர்களின் மோதல்-தற்போதைய நிலை?
பதில்: யார் அவர்கள்?

10. டோண்டு-வினவு (பெரியார் கொள்கைகள்) கருத்து மோதல்கள்-தற்போதைய நிலை?
பதில்: ஆ ஊ என்றால் பாப்பானைத் தாக்கு என இருக்கும் வினவு கும்பல்களுடன் என்ன மண்ணாங்கட்டி கருத்து மோதல் வேண்டியிருக்கிறது? அவர்களை இக்னோர் செய்கிறேன்.

கேள்விகள் ஏதேனும் இருந்தால் மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?


அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது