4/30/2009

டோண்டு பதில்கள் 30.04.2009

போன வார பதில்களை (23.04.2009) நான் திங்களன்றே (20.04.2009) முடிவாக எழுதி அடுத்த வியாழனன்று வருமாறு செய்தேன். ஏனெனில் அப்போது வெளியூர் செல்ல வேண்டிய நிலை, வியாழனுக்குள் திரும்புவேனா என சொல்லவியலாத நிலை. அது மிகவும் சௌகரியமாக அமைந்தது. இந்த வாரம் அப்படி ஏதும் இல்லாவிட்டாலும், அதே மாதிரி திங்களன்றே செய்து வைத்து விட்டேன். இனிமேல் நான் ஒன்றும் செய்யாமல் போனாலும், ஒரேயடியாக இல்லாமலே போனாலும் பதில்கள் வரும் வியாழனன்று காலை 5 மணிக்கு பிரசுரமாகும். ஒரே ஒரு மாறுதல் என்னவென்றால், ஏதேனும் சேர்க்க வேண்டியிருந்தால் அதற்கும் தடை இராது. அவ்வாறு ஒவ்வொரு முறை செய்யும்போதும் அதை கடைசியில் நேரத்துடன் குறிப்பிடுவேன்.

எம்.கண்ணன்:
1. சில தினங்களுக்கு முன் மதுரையிலிருந்து போன் செய்த நண்பர், மதுரையில் இரண்டு கண்டெயினர் லாரிகளில் வைடமின் 'ப' வந்து இறங்கி நின்றுகொண்டிருப்பதாகவும், இது அங்குள்ள வருமானவரி அலுவலகத்திற்கும் தெரியும் என்றும் நடவடிக்கை எடுக்க ஆரம்பித்தால் ஆட்டம் கிளோஸ் என்பதால் மௌனமாக உள்ளனர் என்றார். ஒரு கண்டெயினரில் சுமாராக எவ்வளவு இருக்கும்? எங்கிருந்து வரும் இவ்வளவு?
பதில்: என்ன சார் இது? எனக்கெப்படி தெரியும்? முன்னே பின்னே கண்டைனரில் ரூபாயெல்லாம் நிரப்பி அனுப்பிய அனுபவம் எல்லாம் எனக்கு மட்டும் இருக்கிறதா என்ன? சரி கேட்டுவிட்டீர்கள். ஒரு ஆயிரம் ரூபாய் செக்‌ஷன் (ஒரு லட்சம் மதிப்புடையது) சில கன செண்டிமீட்டர்கள் (x) கொள்ளளவு எடுக்கும். ஒரு கண்டைனரின் கொள்ளளவு (Y) கன செண்டி மீட்டர்கள். ஆக கண்டைனரில் Y/x ஆயிரம் ரூபாய் செக்‌ஷன்கள், அதாவது அத்தனை லட்ச்ங்கள்.

2. நாகர்கோவில், நெல்லை, சங்கரன் கோவில், தூத்துக்குடி என எல்லா மேடைகளிலும் ஜெ. ஒரே பேப்பரையே திரும்பப்படித்து பேசுகிறாரே? அவருக்கே போரடிக்கவில்லையா? அதே வார்த்தைகள், சொற்றொடர்கள், கேள்விகள். மூச்சுக்கு முன்னூறு தடவை கருணாநிதி? ஏன் இந்தக் கத்தல் கத்துகிறார்? துளிக்கூட ஒரு நகைச்சுவையோ, மக்களை தொண்டர்களை ஊக்குவிக்கும் விதத்தில் பேச்சு இல்லையே?
பதில்: அதுதான் ஜெயலலிதாவின் பலவீனம். பேச்சு திறமை எதுவும் கிடையாது. நன்றாக ஆங்கிலம் அறிந்தவர் என்ற பெத்த பெருமையை வைத்திருக்கிறார் அவ்வளவே. ஆனால் அவற்றையும் ரசிக்கும் தொண்டர்களை வைத்திருக்கிறார். அதுதான் அவர் பலம். கூடவே தகவல்களை கோர்வையாகக் கூறுவார். தமிழில் எல்லாம் சீப்பாக விளையாட மாட்டார். அவையும் அவரது பலமே.

3. தயாநிதி மாறன் - வைரமுத்து - காபி வித் அனு - விஜய் டிவி பார்த்தீர்களா? மிகவும் இயல்பாகவும், நன்றாகவும் இருந்தது.
பதில்: நான் சாதாரணமாக விஜய் டிவி பார்ப்பதில்லை. ஆகவே இந்த நிகழ்ச்சியும் பார்க்கவில்லை. இனிமேல் பார்க்க முயற்சி செய்கிறேன்.

4. கவுதம் வாசுதேவ மேனன் - இவரின் 'வேட்டையாடு விளையாடு' படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. இவரை நம்பி எப்படி க்ளவுட் நயன் பிக்சர்ஸ் என அழகிரியின் மகன் தயாநிதி படக் கம்பெனியை ஆரம்பித்து படம் வெளியிட்டார்? வாரணம் ஆயிரம் - அதுவும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியான ஸ்லோ மூவிங் படம். சைக்கோத்தனம், மனப் பிறழ்வு, செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயம் - இதைத்தான் இவரால் எடுக்க முடியுமா? சைக்கோத்தனமான த்ரில்லர் ஒன்று எடுக்கப் போகிறாராமே ?
பதில்: கமல் நடித்த வேட்டையாடு விளையாடு படத்தையா குறிப்பிடுகிறீர்கள்? நான் பார்த்தேனே. எனக்கு பிடித்தது, ஆனால் மறுமுறை பார்க்க இயலாது. ரொம்பவுமே அதிகமாக வன்முறை. ஆனால் அதெல்லாம் பிடிக்கும் ஆட்கள் நிறைய இருக்கிறார்களே.

5. கருணாநிதியின் பிரபாகரன் பற்றிய பல்டி பற்றி தங்கள் கருத்து என்ன ? NDTVயில் பேட்டியில் அவர் சொன்னது முழுவதும் பதிவாகியிருக்கிறதே? ஒளிபரப்பினரே? பின்பு எப்படி பல்டி அடிக்கிறார்?
பதில்: எத்தைத் தின்னால் பித்தம் தெளியும் என்னும் நிலையில் அவர் மட்டுமல்ல, எல்லா தமிழக அரசியல்வாதிகளுமே உள்ளனர். ஸ்ரீலங்கா நிகழ்வுகள் கொடூரமானவை. ஈழத் தமிழர்கள் நிலை பரிதாபத்துக்குரியதே. எல்லாம் சரிதான். ஆனால் அவை தமிழக தேர்தலில் வாக்காளர்களுக்கு முக்கிய இஷ்யூவாக இல்லை. அதை வெளிப்படையாக சொல்ல யாருக்கும் துணிவு இல்லை. அவ்வளவுதான் ஆளை விடுங்கள்.

6. காதலிக்க நேரமில்லை, சாந்தி நிலையம் பட நாயகி 'காஞ்சனா' பற்றி உங்கள் கருத்து - சுமார் 4 - 5 வரிகளில்? அவரின் தற்போதைய தோற்றத்தை ஜெயா டிவியில் பார்த்தீரா? (திரும்பிப் பார்க்கிறேன்)
பதில்: புதுமுகம் காஞ்சனா என சமீபத்தில் அவர் 1964-ல் வந்த காதலிக்க நேரமில்லை படத்தில் அறிமுகமானார். அப்போதிலிருந்தே அவர் நடித்த எல்லா படங்களையும் அவதானித்திருக்கிறேன். எனக்கு பிடித்த நடிகை. ஆனால் தன் குடும்பத்தினரால் வஞ்சிக்கப்பட்ட துரதிர்ஷ்டசாலி. பணத்தை தனது கட்டுப்பாட்டிலேயே வைத்து கொள்ளத் தவறியதால் வந்த வினை. இப்போதைய தோற்றத்தில் கண்ணியமாகவே இருக்கிறார்.

7. தற்போதைய டாப் 10 வலைப்பதிவர்கள் யார் யார்? உங்கள் ரேட்டிங்கில்? ஏன்?
பதில்: இந்த ரேட்டிங்ஸ் எல்லாம் எனக்கு ஒத்து வராது ஸ்வாமி. மன்னித்து கொள்ளுங்கள். எனக்கு பிடித்த பிளாக்குகள் எனது ப்ளாக் ரோலில் உள்ளன.

8. சுஜாதாவின் இளவல் போல எழுதும் இரா.முருகனை விகடன், குமுதத்தில் ஏன் பயன் படுத்திக் கொள்வதில்லை? குங்குமத்தில் 'அற்ப விஷயம்' என்ற வாரப் பத்தி எழுதுகிறார்). லக்கிலுக் சொன்னது போல் இலக்கியவாதி என முத்திரை குத்திவிட்டனரோ?
பதில்: இக்கேள்விக்கு பதிலளிக்க இரா முருகன் அவர்களுடன் தொலைபேசினேன். சுஜாதா குமுதம் ஆசிரியர் பொறுப்பில் இருந்தபோது தான் எழுதியதாகவும், அவர் இறந்ததும் அவரைப் பற்றி எழுத குமுதம் ரிப்போர்டரில் கேட்டார்கள் எனவும் கூறினார். இப்போது ஸ்பெஷலாக ஏதும் அமையாததால் மட்டும் குமுதத்தில் தான் எழுதுவதில்லை என்றார். குங்குமத்தை பொருத்தவரை அவரது தொடர் 30 பகுதிக்குத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்றும் இப்போது முடிந்து விட்டதாகவும் கூறினார். என்னைப் பொருத்தவரை, இதெல்லாம் சப்ளை அண்ட் டிமாண்ட், மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் மனநிலை ஆகியவற்றை பொருத்து உள்ளது. மற்றப்படி இரா முருகனின் எழுத்துக்கள் அபாரமாக உள்ளன. அவருக்கான டிமாண்ட் பல இடங்களில் அப்படியே உள்ளது.

9. எந்த நாளிதழின் தேர்தல் கவரேஜ் நன்றாக இருக்கிறது? த ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ், தினகரன், தினமலர், தினமணி, தினத்தந்தி, மாலை மலர்? டைம்ஸ் ஆப் இண்டியா, டெக்கான் கிரோனிகிள்?
பதில்: நான் ஹிந்து மட்டும்தான் வாங்குகிறேன். அதையே சரியாக படிப்பதில்லை. ஆகவே இக்கேள்விக்கு என்னிடம் பதில் இல்லை.

10. சன் டிவியில் இன்னமும் ஜெயலலிதா பேச்செல்லாம் ஒளிபரப்புகிறார்களே? டபுள் கேமா?
பதில்: அப்படியா, எனக்கு தெரியவில்லையே. எது எப்படியானாலும் மாறன் சகோதரர்கள் மனத்தால் முகவிடமிருந்து பிரிந்தாகி விட்டது. இப்போது ஒட்டியது காரியத்துக்குத்தான். பழைய ஒற்றுமையின் பலம் இனி திரும்ப வராது.


கிருஷ்ணன்:
1. Do you read Justice Krishna Iyer's articles in The Hindu? If so, your comments on his writing style please.
பதில்: இல்லை ரெகுலராக படித்ததில்லை. படித்த அளவில் அவரது ஆங்கில நடை நன்றாகவே உள்ளது. ஆனால் ஒன்று மட்டும் சொல்ல வேண்டும். 1975-ல் இந்திரா காந்தி பதவி இழப்பு வழக்கில் அவர் இந்திரா காந்திக்கு எதிரான தீர்ப்பை நிறுத்திவைத்து அவசர நிலையை இந்திரா கொண்டு வருவதற்கு ஒரு காரணமாகி விட்டார். அதற்கான விலை அடுத்த 19 மாதங்களுக்கு ஜனநாயக படுகொலை.

2. Can Chiranjeevi do a NTR in Andhra Pradesh this time?
பதில்: எல்லோருமே என்.டி.ஆர். அல்லது எம்.ஜி.ஆர் ஆகமுடியுமா?

3. Comedian Janakaraj is no longer seen on screen nowadays, any idea of his whereabouts?
பதில்: நான் விசாரித்த அளவில் அவருக்கு இப்போது மார்க்கெட் இல்லை என்றுதான் அறிகிறேன். பை தி வே, ஜனகராஜ் பற்றி பேசும்போது ஒரு டிராமாவில் எஸ்.வி.சேகர் சொன்னது நினைவுக்கு வருகிறது.

அதில் சேகரிடம், தான் மணக்க விரும்பும் பெண் எப்படி எல்லாம் இருக்க வேண்டும் என்பதை ஒருவன் கூறுவான். மூக்கு இந்த நடிகை போல, கண்கள் இந்த நடிகை போல என ஒரு லிஸ்டே அடுக்குவான். எஸ்.வி.சேகர் இதையெல்லாம் பொறுமையாக கேட்டு விட்டு, “ நீ சொல்லறதையெல்லாம் பொருத்தி பார்த்தால் லேசா ஜனகராஜுக்கு பொம்பளை வேஷம் போட்டா மாதிரி இருக்கு” என்று கூறுவார். அந்த நாடகத்தின் பெயரை மறந்து விட்டேன். யாரேனும் கூறினால் தன்யனாவேன்.


சேதுராமன்: (29.04.2009)
1. நடந்து கொண்டிருக்கும் கோடை நாடக விழாவில் உங்களுக்கு மிகவும் பிடித்தது (அ) மெரினா மேடையில் மு.க. (ஆ) மதுரையிலே இளவல் குழு (இ) ஜெ.ஜெ.அம்மா குழு (ஈ) தோட்டத்திலே மருத்துவரய்யா (உ) சிவகங்கை சிதம்பரம் குழு?
பதில்: இசுடாலினை விட்டு விட்டீர்களே. கோபித்து கொள்ள போகிறார். மற்றப்படி போட்டியெல்லாம் பலமாகவே உள்ளது. ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல.

2. க்வாட்ரோச்சிக்கு அடுத்தது 'பத்மஸ்ரீ' தானா? மனுஷனுக்கு சரியான மச்சம்!! தொட்டதெல்லாம் கரைந்து போகிறதே?
பதில்: செய்தாலும் செய்வார்கள். இத்தாலிக்காரர்கள் காலில் விழுந்து கிடக்கும் காங்கிரசார்கள் இருக்கும் வரை எது வேண்டுமானாலும் நடக்கும். இத்தனை பணத்தை முடக்கி வைத்ததற்கு அந்த மனிதருக்கு நஷ்ட ஈடு தந்தாலும் தருவார்கள்.

3. இந்திய சட்ட அமைச்சர் பாரத்வாஜ் பேசியதைக்கேட்டீர்களா? இந்தியா அட்டார்னி ஜெனரல் மிலான் பானர்ஜி கொடுத்த கருத்தின் பேரில் தான் இந்த நடவடிக்கை என்று! அட்டார்னி ஜெனரல்கள் யார் - அந்தந்த அரசுகளால் நியமிக்கப் பட்டவர்கள்தானே?
பதில்: தியரிட்டல்லாக அந்த பதவிக்கு அடானமி உண்டு.

4. சிறுபான்மைப் பிரதிநிதியொருவர், மு.க.வுக்கு மஞ்சத்துண்டு போர்த்தியதைக் கண்டீர்களா? ரிசர்வேஷனுக்கு என்னவெல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது?
பதில்: அதையெல்லாம் செய்து ரிசர்வேஷன் பெற்று, பின்னால் கட்சிக்கு ஆதரவு தருவார்கள். இதற்கு பெயர்தான் quid pro quo.


அனானி (30.04.2009, அதிகாலை 01.25-க்கு கேட்டவர்):
1. ஜெயலலிதா வெற்றிக்காக இவ்வளவு துரம் தரம் தாழ்ந்து(புலிகளின் தனி ஈழத்துக்கு ஆதரவு) போவார் என்று நீங்கள் நினைத்திருந்தீர்களா?
பதில்: ஜெயலலிதா ஒரு பக்கா அரசியல்வாதி. வேறென்ன அவரிடமிருந்து எதிர்பார்க்கிறீர்கள்?


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/29/2009

எங்கே பிராமணன் - பகுதி - 59 & 60

பகுதி - 59 (27.04.2009):
பாகவதரை தான் சொல்வதை ஏற்கச் செய்ய இயலாத சோர்வில் வசுமதி திரும்புகிறாள். நாதனிடம் பாகவதர் பற்றி ஆத்திரமாக பேசுகிறாள். இப்படி பாகவதர் சொல்வதையெல்லாம் கேட்டுத்தான் தீர வேண்டுமா என கேட்கிறாள். அவர் தனது குரு அவர் சொல்படித்தான் தான் நடக்கப் போவதாகவும் நாதன் திட்டவட்டமாகக் கூறுகிறார்.

சோவின் நண்பர், குரு கிணற்றில் விழச்சொன்னாலும் விழ வேண்டுமா என கேட்கிறார். ஆம் என சோ அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார். அதே சமயம் குருவுக்கும் தரக்கட்டுப்பாடு எல்லாம் உண்டு எனவும் கூறுகிறார். ஒரு சீடன் நிஜமாகவே குருவின் பேச்சைக் கேட்டு கிணற்றில் விழுந்த கதையையும் கூறுகிறார். மாடுகளை அவன் மேய்க்க அழைத்து சென்று மாலை திரும்புகிறான். குரு அவனுக்கு ஆகாரம் ஏதும் தராவிட்டாலும் அவன் தென்பாகவே இருக்கிறான். விசாரித்ததில் அவன் மாட்டுப் பாலை கறந்து உண்டிருக்கிறான். குரு அவன் அதைச் செய்யலாகாது என கூறுகிறார். அடுத்த முறை பசுங்கன்றின் வாயில் இருக்கும் பால் நுரையை வழித்து உண்டிருக்கிறான். அதையும் குரு தடுக்கிறார். மூன்றாம் நாள் பிட்சை எடுத்து சாப்பிட்டுள்ளான். அதற்கும் தடா. அன்று மாலை அவன் திரும்பவில்லை. குரு போய்ப் பார்க்க, அவன் கிணற்றிலிருந்து குரல் தருகிறான். குரு நடந்ததை விசாரிக்க, ஒன்றுமே சாப்பிடக் கிடைக்காததால் எருக்கம்பூவை உண்டதாகவும் கண்பார்வை பறிபோனதில் கிணற்றில் தவறி விழுந்ததாகவும் கூறுகிறான். குரு அஸ்வினி தேவதைகளை வேண்ட சீடனுக்கு கண்பார்வை கிடைக்கிறது. அவனது விடாத குரு பக்தியை மெச்சி அவனுக்கு நல்ல கல்வியளித்து அவனை ஞானவான் ஆக்குகிறார்.

இன்னொரு சீடன் குரு ஆக்ஞையை ஏற்று வெள்ளத்தைத் தடுத்து அணைபோட தன் உடலையே நீர் செல்லும் வழியில் கிடத்துகிறான். அவனுக்கும் குருவருள் பின்பு கிட்டுகிறது. இதையெல்லாம் கூறிய சோ, குருவும் இதற்கெல்லாம் தகுதியானவராக இருக்க வேண்டும் என்பதையும் மறுபடியும் வலியுறுத்துகிறார். காலேஜ், ஸ்கூல் வாத்தியார் எல்லாம் குருவாக இயலாது எனவும் தெளிவுபடுத்துகிறார்.

மாதா, பிதா, குரு என மூன்றாம் இடத்தில் குருவை வைத்தாலும், மாணாக்கனுக்கு ஞானம் அளிக்க தேவையாக இருப்பது கட்டுப்பாடு, அதை குருவால்தான் அளிக்க முடியும், என்றும் அவர் கூறுகிறார்.

ஆகவே குருதான் சரணம் என நாதன் முத்தாய்ப்பாகக் கூற, இப்போதைய தேவை குரு அல்ல என வசுமதி நொடிக்க்கிறாள். இவர்கள் பேசுவதை கேட்டபடி வரும் சாம்பு சாஸ்திரி அவர்களுக்கு பூஜை பிரசாதங்கள் தந்து ஆறுதல் கூறுகிறார்.

பர்வதம் வீட்டுக்கு வசுமதி வருகிறாள். உமா “அசோக்கை ஏன் அழைத்து வரவில்லை” என கேட்க, வசுமதி அலுத்து கொள்கிறாள். பிறகு அவர்கள் வீட்டை சுற்றிப் பார்க்கிறாள். உமாவின் அறையில் அசோக்கின் பல ஃபோட்டோக்களைப் பார்த்து திகைக்கிறாள்.

நாதன் வீட்டு வராந்தாவில் இரவு மேலும் கீழுமாக நடக்க, அசோக் வந்து விசாரிக்கிறான். நாதன் அவனிடம் கோபமாக பேசுகிறார்.

சாம்பு வீட்டில் பசுவுக்கு உபசாரங்கள் நடக்கின்றன. அவரும் செல்லம்மாவும் அசோக் பற்றி பேசுகின்றனர். யார் சொல்லியும் அசோக் கேட்க மறுக்கிறான் என்னும் நிலையில் நீலகண்டன் மகள் உமாவின் உதவியை நாடலாம் என செல்லம்மா கூறுகிறாள். இம்மாதிரி நாசுக்கான விஷயங்களில் பெண்கள் மூலம் அறிவுரை கூறவைப்பதை ‘காந்தா சம்ஹிதை’ எனக் கூறுவார்கள் என சாம்பு கூறுகிறார். “அது யார் காந்தா”? என நண்பர் கேட்க, சோ அவரிடம் ரத்தக் கண்ணீரில் வரும் “அடி காந்தா நிச்சயமாக இல்லை” எனக்கூறிவிட்டு அது பற்றி விளக்கத் துவங்குகிறார். அறிவுறைகள் மூவகைப்படும். அவை 1. பிரபு சம்ஹிதை (வேதம், அரசக் கட்டளைகளுக்கு சமம்); 2. சுஹுருத் சம்ஹிதை (நண்பன் அறிவுரை கூறுவது போன்றது, புராணங்கள் அப்படிப்பட்டவை) மற்றும் 3. காந்தா சம்ஹிதை (பிரியமாக சொல்லப்படுவை, காப்பியங்கள்). ஆக, பொம்மனாட்டிகள் பேசினால் சில சமயங்களில் காரியம் நடக்கும் என சாம்பு கூறுகிறார். அதனால்தானே கம்பெனிகளில் ரிசப்ஷனிஸ்டாகவும், டெலிமார்க்கெட்டிங்கிற்கும் பெண்கள் நியமிக்கப் படுகின்றனர் என செல்லம்மா கூறுகிறார்.

சாம்பு இதையே நாதன் வீட்டில் கூற அவர் வசுமதியை இது சம்பந்தமாக பர்வதத்தைப் பார்த்து பேசச் சொல்கிறார். அவளும் முதலில் மறுத்தவள், கடைசியில் அரை மனதுடன் சம்மதிக்கிறாள்.

பகுதி - 60 (27.04.2009):
கிருபா வீட்டில் அவன், வேம்பு மற்றும் சாம்பு ஜயந்திக்கு வந்த வரன் பற்றி விவாதிக்கின்றனர். பையனின் அப்பா பிராமணர் இல்லை என்பதை வேம்பு கூற, அது தனக்கு சரிப்படாது என வேம்பு முதலிலேயே எண்ணி ஒதுங்கியிருக்க வேண்டுமென சாம்பு முதற்கண் கூறுகிறார். பிறகு வேம்புவுக்கு இந்த சம்பந்தத்தில் ருசி இருக்கிறதென அறிந்து சற்றே சுதாரிக்கிறார். வேம்பு வீட்டில் தனது மனைவிக்கும், அக்காவுக்கும் இதில் இஷ்டம் இல்லை என்பதையும் பார்க்க வேண்டியிருக்கிறது என வேம்பு கூறுகிறார். ஆக டெஸ்ட் கிரிக்கெட் பந்தயத்தில் தன்னை மூன்றாவது நடுவராக செயல்படும்படி வேம்பு எதிர்பார்க்கிறாரா என சாம்பு நகைச்சுவையுடன் கேட்கிறார். தான் வேம்பு வீட்டுக்கு வந்து சாதக பாதகங்களை கூறப்போவதாகவும், ஆனால் முடிவை வேம்புவின் குடும்பத்தினரே எடுக்க வேண்டும் என்றும் சாம்பு திட்டவட்டமாக கூறுகிறார். இருட்டில் தான் வெறுமனே டார்ச் அடிப்பவர் என்றும், கீழே கிடப்பது பாம்பா கயிறா என்பதை வேம்பு குடும்பத்தினர்தான் பார்த்து கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறுகிறார்.

நீலகண்டன் வீட்டில் பர்வதத்திடம் வசுமதி பேசுகிறாள். அசோக் மனோதத்துவ நிபுணரிடம் வர மறுப்பதால், உமா அவனுடன் இது சம்பந்தமாக பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என தனது ஆசையை கூறுகிறாள். உமாவை அழைத்து பர்வதம் இதை சொல்ல உமா இதை முதலில் ஏற்க மறுக்கிறாள். மனதில் ஒரு கோளாறும் இல்லாத அசோக்கை டாக்டரிடம் அழைத்து செல்வது என்பது பெற்றோர்கள் ஏனும் நிலையில் நாதனும் வசுமதியும் செய்யும் தவறு என உமா கூறுகிறாள். பாகவதரும் இதைத்தான் கூறுகிறார் என வசுமதி திகைப்புடன் கூறுகிறாள். இருப்பினும் வசுமதி மேலும் ஒன்று கூறுகிறாள். அதாவது நாம் மெடிகல் செக்கப்புக்கு போவதில்லையா. அது போல இதையும் ஏன் வைத்து கொள்ளக்கூடாது? மனமும் உடலின் ஒரு உறுப்புதானே, அதுவும் சூட்சுமமான உறுப்பு. வசுமதி சொல்வது ஏற்றுக் கொள்ளத் தக்கதாகவே இருப்பதாக உமா கூறுகிறாள்.

வேம்பு வீட்டில் அவர், அவரது மனைவி மற்றும் தமக்கை மற்றும் சாம்பு அமர்ந்திருக்கின்றனர். விஷயத்தை வேம்பு மறுபடி பிரஸ்தாபிக்கிறார். சாம்பு இதற்கு இரண்டு பதில்கள் இருப்பதாக கூறுகிறார்.

“அது என்ன சார் இரண்டு பதில்கள்? நீங்க ஒரு சமயம் சொன்னேளே எட்டுவகை திருமணங்கள் அது மாதிரியா”? என சோவின் நண்பர் கேட்கிறார். “சாம்பு சொல்லறது இரண்டு பார்வைக் கோணங்கள் பற்றி, இருவகை மணங்கள் அல்ல” என சோ திட்டவட்டமாகக் கூறுகிறார். அந்த எண்வகை மணங்களை பட்டியலிடுமாறு கூற, அவற்றையும் சோ உன்னதத்தின் இறங்கு வரிசையில் பட்டியலிடுகிறார். கடைசியில் எட்டாவதாக வருவது திருட்டுத் தாலி. ஆனால் எங்குமே தற்காலத்தில் பெண்வீட்டாரிடம் வரதட்சிணை வாங்கி மணம் செய்யும் முறையில்லை என்பதையும் அவர் வலியுறுத்துகிறார்.

முதல் பதில் இந்தத் திருமணம் கூடாது என சாம்பு திட்டவட்டமாக கூறுகிறார். வேம்பு வீட்டு பெண்மணிகளுக்கு சந்தோஷம், சாம்பு தங்கள் தரப்பைப் பேசுவதில். காரணங்களை அடுக்கிறார். ஜெயந்திக்கு ப்ரபோஸ் செய்யப்பட்ட பிள்ளையின் தாயாருக்கு கோத்திரம் உண்டு, ஆனால் தந்தைக்கு இல்லை. ஆக திருமணம் செய்து கொண்டதும் ஜெயந்தி என்ன கோத்திரம் என்ற கேள்வி எழுகிறது என சாம்பு கூறுகிறார். அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கு என்ன கோத்திரம் என்பதும் இங்கு வருகிறது. அக்குழந்தை வளர்ந்து அதற்கு திருமணம் செய்விக்கும்போது கிரியின் தாயார் சந்திக்கும் சங்கடத்தை ஜெயந்தியும் சந்திக்க வேண்டியிருக்கும்.

இரண்டாவது பதில், தாராளமா இந்தத் திருமணத்தை செய்யலாம். வேம்பு வீட்டு பெண்கள் திகைக்கின்றனர். சாம்பு மேலே பேசுகிறார். இப்போது ஜெயந்திக்கு நல்ல குலம் கோத்திரம் எல்லாம் பார்த்து மணம் செய்த பிறகு அந்த மாப்பிள்ளை கெட்ட பழக்கங்களுடன் இருந்தால் என்ன செய்வது? அதனால் விவாகரத்து ஏற்பட்டால் அப்போது மட்டும் ஜெயந்தியின் கோத்திரம் என்ன? அவளே பின்னால் இது குறித்து வருந்த மாட்டாளா? கிரிக்கு கெட்ட பழக்கம் ஏதும் இல்லை. நல்ல பிராமணனாகவே வளர்க்கப்பட்டுள்ளான். பிறப்பால் பிராமணனை விட இந்த வளர்ப்பால் பிராமணன் மேல் என ஜெயந்தி நினைக்கலாம் அல்லவா என்றும் சாம்பு கூறுகிறார். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக இன்னொன்றும் அவர் கூறுகிறார். அதாவது கிரிக்கு ஜெயந்தியை கொடுத்தால் அது ஒரு புண்ணிய காரியம் என்று கூறுகிறார். கிரியின் அன்னைக்கு இருக்கும் மாஜி பிராமணத்தி என்ற பெயர் நீங்கும் என கூறுகிறார். எது எப்படியாயினும் முடிவு என்னவோ வேம்பு குடும்பத்தினர் கைகளில்தான் எனவும் கூறுகிறார்.

வையாபுரி வீட்டுக்கு சிங்காரம் வருகிறான். வையாபுரி அவனைப் பார்த்து கலங்குகிறார். சிங்காரம் முதலில் சாதாரணமாகவே தன்னைக் காட்டிக் கொள்கிறான். தனக்காக வையாபுரி செய்த காரியங்களை மனநெகிழ்வுடன் பட்டியலிடுகிறான். தான் எப்போதுமே அவரது தொண்டன் மட்டுமே எனவும் கூறுகிறான். மெதுவாக அவன் துக்கம் அழுகையாக வெளியாகிறது. வையாபுரியும் தன்னை மறந்து அவனைக் கட்டிப் பிடித்து அழுகிறார். சிங்காரமாக வரும் கவிதாலயா கிருஷ்ணனும், வையாபுரியாக வரும் கிருஷ்ணராஜும் போட்டி போட்டுக் கொண்டு இந்த சீனில் நடித்திருக்கிறார்கள். இந்த எபிசோடின் மகுடமே இந்த காட்சிதான். மேலே உள்ள சுட்டியை சொடுக்கி, வீடியோவில் அதைப் பார்ப்பதே நலம். கவனம் இருக்கட்டும், ஃபைர்காக்ஸை பாவிக்கவும். கூகள் குரோம் வேண்டாம்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/27/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 56, 57 & 58

பகுதி - 56 (22.04.2009):
நீலகண்டன் வீட்டுக்கு சாம்பு வருகிறார். நாதன் வீட்டுக்கு போய் வெறுமனே பூஜை செய்யாது, தேவையின்றி அசோக்குடன் பேசுவதாகவும் அப்படியெல்லாம் அனாவசியமாக பேச்சு வைத்து கொள்ள வேண்டாம் எனவும் நீலகண்டன் அவரை எச்சரிக்கிறார். சாம்பு விடை பெற்று கிளம்பும் நேரத்தில் வீட்டின் புறக்கடையிலிருந்து மாடு கத்தும் சத்தம் கேட்க, சாம்பு விவரம் கேட்கிறார். நீலகண்டன் தனபாலிடமிருந்து மாட்டை சீஸ் செய்த கதையைக் கூறுகிறார். பிறகு அது வியாதியுள்ள மாடாகியதால், அதை அடிமாடாக விற்கப் போவதாகவும் கூற, சாம்பு அவருடன் பேசி பசுவை தானே எடுத்து கொள்வதாக கூறுகிறார். பசுவை பராமரிப்பது புண்ணியம் என்றும் கூறுகிறார். இப்போது திரையில் வரும் சோவின் நண்பர் மற்ற மிருகங்களைக் காட்டிலும் பசுவுக்கு அப்படி என்ன சிறப்பு எனக் கேட்க, சோ அவர்கள் அதை பல புராணங்களிலிருந்து உதாரணங்களைத் தந்து விளக்குகிறார்.

கிருபா வீட்டில் வேம்பு சாஸ்திரியின் மகள் ஜயந்தியை பெண் பார்த்துவிட்டு வந்த கிரி அவனுடன் பேசிக் கொண்டிருக்கிறான். பெண் தனக்கு பிடித்திருப்பதாகக் கூறுகிறான். அவனது மற்றும் ஜயந்தியின் ஜாதகத்தைப் பார்த்த கிருபா, நல்ல பொருத்தம் இருப்பதாகக் கூறுகிறான். அதே சமயம் பிராப்தம் என்றும் இருக்கிறது என பூடகமாகக் கூறுகிறான். பிறகு கிரி விடைபெற்று சென்றபிறகு இது பற்றி பிரியா அவனை விளக்கம் கேட்க, அவளிடம் சில விஷயங்களை கூறும்போது பேசுவது காதில் விழாமலிருக்க வாய்ஸ் ஓவர் செய்யபடுகிறது. இவனுக்கு இவ்வளவு விஷயம் தெரிந்திருக்கிறதா என ஆச்சரியப்படுகிறாள் பிரியா. ஒரு வேளை கிரியே அவனிடம் சொல்லியிருப்பானோ என்ற சந்தேகம் வேறு அவளுக்கு. அப்படியெல்லாம் இல்லை என கிருபா கூறிவிடுகிறான்.

வையாபுரி வீட்டுக்கு வரும் அவரது கட்சிக்காரன் சிங்காரத்தின் மனைவி பிரசவத்தில் இறந்தது பற்றி கூற, வையாபுரி பாதி சாப்பாட்டை அப்படியே விட்டுவிட்டு இறந்தவருக்கான அந்திமக்கிரியைகளை செய்விக்க விரைகிறார். சிங்காரத்திடம் இப்போதைக்கு அவன் மனைவி இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் எனவும் முடிவு செய்கிறார். சிங்காரத்தின் பையனை தன் வீட்டிற்கு கொண்டு வருகிறார். இது ஒன்றும் அவரது மனைவிக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. வையாபுரி பாத்திரத்துக்கு இன்னொரு பிளஸ் இந்த காட்சியில்.

நாதன் வீட்டில் சாம்பு சாஸ்திரிகள் பசுமாட்டை நீலகண்டன் அடிமாடாக விற்கப்போவது பற்றி கூறி அதை தான் பராமரிக்க முயற்சி செய்யப்போவதாக கூறி, அதற்காக நாதனிடம் 5000 ரூபாய் கடனாக கேட்கிறார். நாதனோ அப்பணத்தை தானமாகவே தருகிறார்.

வேம்பு கிரியின் வீட்டுக்கு வருகிறார். அவன் தந்தை அப்போது வெளியில் கிளம்பி கொண்டிருக்கிறார். அவன் தாய் வேம்புவை வரவேற்று, தான் பார்ப்பனத்தி என்றும் ஆனால் தன் கணவர் பார்ப்பனர் இல்லை என்ற உண்மையை கூறுகிறார். தான் 28 ஆண்டுகளுக்கு முன்னால் காதல் வசப்பட்டு தன் கணவரை மணந்ததாகவும், அப்போது தெரியாத சுயஜாதி அபிமானம், இப்போது தன் மகனது திருமணம் நடக்கவேண்டிய தருணத்தில் ரொம்பவும் தன்னை பாதிப்பதாகவும் அவள் கூறுகிறாள். தன் மகனை பிராமணனாகவே வளர்த்திருப்பதாகவும், மூன்று வேளை சந்தியாவந்தனம் எல்லாம் அவன் செய்வதாகவும் அவள் கூறுகிறாள். தன் மகன் ஒரு பிராமணப் பெண்ணையே மணக்க வேண்டும் என தான் இப்போது ஆசைப்படுவதாக அவள் கூறுகிறாள்.

சோவும் அவர் நண்பரும் இப்போது திரையில் வருகின்றனர். பழங்காலத்தில் பிராமணன் யார் என்பதில் தெளிவான நிலை இருந்ததாகவும், இப்போதுதான் குழப்பங்கள் எனவும் சோ கூறுகிறார். அதற்கு இரு கதைகள் கூறுகிறார். ஜபலா என்னும் பெண்மணியின் புத்திரன் சத்யகாமன். கௌதம மகரிஷியிடம் வந்து தன்னை மாணாக்கனாக ஏற்குமாறு கேட்க அவர் அவனது தந்தையின் பெயரை கேட்கிறார். அதற்கு அவன் தந்தையின் பெயர் தனக்கோ தன் தாய்க்கோ கூட தெரியாது என்றும், ஜபலாவின் மகனான தான் சத்யகாம ஜாபாலி என்று கூறி அவரை வணங்குகிறான். தைரியமாக அவன் உண்மையே பேசுவதால் அவன் பிராமணனே என முனிவர் முடிவு செய்து அவனை ஏற்று கொள்கிறார்.

இன்னொரு கதையில் ஒரு பிராமண ரிஷி வருகிறார். அவரது கோபம் பதிக்கு சேவை செய்யும் ஒரு பெண்ணிடம் பலிக்கவில்லை. பிறகு அப்பெண் காட்டிய தர்மவியாதர் என்ற கசாப்பு கடைக்காரனிடம் அவர் செல்கிறார். தர்மவியாதரோ தனது தாய் தந்தையர் சேவையில் ஈடுபட்டவர். அவரிடமிருந்து கடமையாற்றுவதின் முக்கியத்துவம் பற்றிய உபதேசத்தை இவர் பெறுகிறார். ஆக, தர்மவியாதர் ஒரு பிராமணர் என சோ கூறுகிறார்.

பகுதி - 57 (23.04.2009):
கிரியின் தாயார் தொடர்ந்து வேம்புவிடம் பேசுகிறார். பெரிய மனது பண்ணி அவர் பெண்ணை தனக்கு மாட்டு பெண்ணாகத் தரவேண்டும் என அவரை வேண்டுகிறாள். தன் வீட்டில் கேட்டுவிட்டு சொல்வதாகக் கூறிவிட்டு வேம்பு கிளம்புகிறார்.

நீலகண்டனுக்கு பணம் கொடுத்துவிட்டு சாம்பு மாட்டை தன் வீட்டுக்கு ஓட்டிச் செல்கிறார். அவர் மனைவிக்கு ரொம்ப சந்தோஷம். அதற்கு லட்சுமி என பெயர் வைக்கிறாள்.

நாதன் வீட்டுக்கு வரும் நீலகண்டன் அவரிடம் அசோக்கை ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அழைத்து செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். நாதனும் ஒத்து கொள்கிறார். தானே அசோக்குக்காக ஒரு மனோதத்துவ நிபுணரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவதாக கூறி விட்டு செல்கிறார். நீலகண்டன் டாக்டர் மார்க்கபந்துவிடம் அசோக் பற்றி பேசிவிட்டு வரும் சனியன்று மாலை 6 மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் பெறுகிறார்.

சோவின் நண்பர் இதே மாதிரி ராமருக்கு குழப்பம் ஏற்பட்டபோது அதை வசிஷ்டர் எவ்வாறு தீர்த்துவைத்தார் என கேட்கிறார். சோ அவர்கள் இதற்கு பதிலாக வசிஷ்டர் முயற்சியின் முக்கியத்துவத்தை ராமருக்கு எடுத்துரைத்ததை கூறினார். அப்படியானால் எல்லாமே முயற்சியாலேயே நிறைவேறி விடுமா என ராமர் சந்தேகப்ப்பட, வசிஷ்டர் இத்தருணத்தில் பூர்வ ஜன்ம வினைகளின் அளவும் அதன் பங்கை வகிப்பதாகக் கூறுகிறார்.

கிருபா வீட்டில் அவனும் பிரியாவும் வேம்பு சாஸ்திரிகளுடன் அவர் கிரிவீட்டில் கண்டறிந்த உண்மை பற்றி பேசுகின்றனர். இப்போது என்ன செய்வது என வேம்பு கேட்க, அது அவரது குடும்ப விஷயம் என கிருபா கூறிவிடுகிறான். கிரியின் தந்தை பார்ப்பனர் இல்லை என்பது கிருபாவுக்கு நிச்சயமாகவே தெரியாதா என வேம்பு அவனை கேட்க, கிருபா கோபப்பட்டு பேசுகிறான். ஆனால் வேம்பு அந்தண்டை போனதும் தன் மனைவியிடம் இந்த விஷயம் தனக்கு ஏற்கனவே கிரியின் அன்னையின் தந்தை மூலமாகத் தெரியும் என ஒத்து கொள்கிறான். வீட்டுக்கு போன வேம்பு தன் மனைவியிடமும் அக்காவிடமும் இது பற்றி கூற அவர்கள் காரசாரமாக விவாதிக்கின்றனர். அவர்கள் பேசுவது வாய்ஸ் ஓவரில் மூடப்படுகிறது. கடைசியில் வேம்பு இனிமேல் இந்த வரன் வேண்டாம் என முடிவு எடுப்பது போன்ற தோற்றம் தரப்படுகிறது.

பகுதி - 58 (24.04.2009):
நாதனும் வசுமதியும் அசோக்கிடம் மனத்தத்துவ நிபுணரை பார்க்க வரும்படி கூற அவன் ஒட்டுமொத்தமாக மறுத்து விடுகிறான். நாதன் கோபப்பட்டு அவனை வீட்டை விட்டு வெளியே கொட்டும் மழையில் தள்ளிவிடுகிறார். பிறகு வசுமதி அவரிடம் மன்றாட மனமிரங்கி மீண்டும் அசோக்கை உள்ளே அழைத்து கொள்கிறார்.

அடுத்த நாள் சமையற்கார மாமியிடம் இது குறித்து அவன் பேச நேர்ந்தபோது தான் மனநிலை குன்றியவன் என்பதைக் காட்ட தான் ஏதேனும் பைத்தியக்காரத்தனமான வேலை எல்லாம் செய்யவில்லையே என அவன் கூறுகிறான். அப்படியானா அவன் பசுவிடம் பேசிய விஷயம் என அந்த மாமி கேட்க, மாமி கடவுள் படத்துக்கு முன்னால் நின்று வாய்விட்டு பிரார்த்தனை செய்வது போலத்தான் அது என விளக்குகிறான். சமையற்கார மாமி என்ன பதில் சொல்வது எனத் தெரியாது திகைக்கிறார். பாகவதர் அசோக்குக்கு நலா பேச கற்று தந்துவிட்டதாய் வசுமதி நொடிக்கிறாள். சமையற்கார மாமி அப்படியானால் பாகவதரை விட்டு பேசச் சொல்லி அசோக்கை சம்மதிக்க வைக்கலாமே என ஆலோசனை கூற வசுமதி ஏற்று கொள்கிறாள்.

வையாபுரி வீட்டில் அவர் தன் மனைவியிடம் சிங்காரத்தின் மகனைக் காணாமல் விசாரிக்க அவன் ஓடிப் போய்விட்டான் என அவள் கூறுகிறாள். வையாபுரி மிகவும் கோபப்படுகிறார்.

தன் வீட்டுக்கு வந்த பாகவதரிடம் நாதன் எல்லாவற்றையும் விளக்க அவர் அசோக்குக்கு மனோதத்துவ நிபுணரின் அனுமதி தேவைப்படவில்லை என அழுத்தம் திருத்தமாகக் கூறிவிடுகிறார். ஆகவே தான் இது சம்பந்தமாக அசோக்குடன் பேசுவதற்கில்லை என தெளிவும்படுத்திவிடுகிறார். கோபம் வந்தாலும் அதை அடக்கிக் கொண்டு நாதன் வந்துவிட, வசுமதி தானே பாகவதரை தேடி வருகிறாள். அவளிடமும் பாகவதர் அதையே கூறுகிறார்.

“இப்படி ஏன் சார் எல்லோருக்கும் சந்தோஷம் தராது எரிச்சல் அளிக்கும் வகையில் இவர் பேசுகிறார்” என நண்பர் கேட்க, சோ நோயாளிக்கு மனம் குளிரும் வகையில் அவனுக்கு ஒரு தொந்திரவும் இல்லை என பொய் கூறும் மருத்துவர் நல்லவரா அல்லது நோயாளிக்கு பிடிக்காத கசப்பு மருந்து அல்லது வலிகொடுக்கும் ஊசி போடும் மருத்துவர் நல்லவரா என கேட்கிறார். மேலும், விபீஷணன் ராவணனுக்கு அறிவுரை தந்த போது ராவணன் அவன்மேல் கோபப்பட்டபோது விபீஷணன், சிரிக்க சிரிக்க பேசும் நண்பனை விட மனம் விரும்பாத நல்ல அறிவுரைகள் தருபவனே சிறந்தவன் என கூறியது பற்றியும் சோ பேசுகிறார்.

வசுமதி பாகவதர் மனம் நோக மேலும் பேசிவிட்டு அப்பால் செல்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/25/2009

சென்னை வலைப்பதிவர் சந்திப்பு - 25.04.2009

சாதாரணமாக எடுத்து செல்லும் நோட்புக்கை மறந்ததால் போகும் வழியில் இருந்த உறவினர் வீட்டில் இறங்கி ஒரு நோட்புக் அங்கிருந்து எடுத்து கொண்டு பதிவர் சந்திப்பு நடக்கும் காந்திசிலைக்கு விரைந்தேன். எனது கார் அவ்விடத்தை அடையும் போது கிட்டத்தட்ட ஆறு மணி ஆகிவிட்டது.

மெரினா பீச்சில் உள்ள செர்வீஸ் ரோடை பிடித்து காந்தி சிலைக்கருகில் வர நினைத்தால் போலிசார் விடவில்லை. முந்தைய சிலைக்கருகிலேயே நிறுத்தி விட்டனர். அங்கிருந்து கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரம் நடை. எனக்கு ஒன்றும் பிரச்சினை இல்லை. ஆனால் அதே நேரத்தில் இன்னொரு காரில் வந்து இறங்கிய பதிவர் சிவஞானம்ஜி அவர்கள் பாடுத்தான் திண்டாட்டம் ஆயிற்று. இவ்வளவு தூரம் தான் நடந்து மாதக்கணக்கில் ஆகிவிட்டது என கூறினார். மனிதர் சமீபத்தில்தான் ஆசுபத்திரியிலிருந்து டிஸ்சார்ஜ் ஆகி வந்திருக்கிறார். மெதுவாக அவர் கையை பிடித்து மீட்டிங் நடக்கும் இடத்துக்கு அழைத்து வந்தேன்.

சந்திப்பு ஏற்கனவேயே களை கட்டியிருந்தது. போன முறை செய்தது போல இம்முறையும் எனது நோட்புக்கை பாஸ் செய்து எல்லோரையும் அவரவர் பெயரை எழுதும்படி கேட்டு கொண்டேன்.

நோட்புக்கிலிருந்து பார்த்த பெயர்கள்: 1. கேபிள் சங்கர்; 2. காவேரி கணேஷ்; 3. மருத்துவர் ப்ரூனோ; 4. ஹசன் ராஜா (ஏற்கனவேயே பதிவர் சந்திப்பு பற்றி பதிவிட்டு விட்டார்); 5. இராமகி ஐயா; 6. நர்சிம்; 7. அக்னி பார்வை; 8. தமிழ் குரல்; 9. ஜாக்கி சேகர்; 10. செல்வமுத்து குப்புசாமி;
11. எஸ். பாலபாரதி; 12. சிவஞானம்ஜி; 13. வால்பையன்; 14. ரௌத்ரன்; 15. வினோத் (கார்க்கியின் நண்பர்); 16. கார்க்கி 17. ஆசிஃப் மீரான் (முக்கிய விருந்தினர்); 18. தண்டோரா; 19. பைத்தியக்காரன்; 20. ஜ்யோவ்ராம் சுந்தர்; 21. ரமேஷ் வைத்யா; 22. லக்கிலுக்; 23. செல்வேந்திரன்; 24. ஊர்சுற்றி (பேனாவை ஒரு தினுசாக பிடித்து எழுதினார். என்னவென்று கேட்டதற்கு, சிறுவயதில் நண்பனது செயலை நகலெடுத்ததே காரணம் என கூறினார். பை தி வே அவரது சுட்டி சரியானதுதானா என்பதை அவர் உறுதி செய்தால் நலம்); 25. அதிஷா 26. ஸ்ரீவத்சன் (ஸ்ரீ); 27. இளவஞ்சி; 28. நிசார்; 29. புதுகை அப்துல்லா; 30. கே. மாணிக்கராஜா; 31. வெய்யிலான்; 32. தேவராஜன் (வெய்யிலானின் நண்பர்); 33. தாமிரா (ஆதிமூல கிருஷ்ணன்); 34. ஆனந்தகுமார்;

யாராவது விட்டுப்போயிருந்தால் பின்னூட்டமிடவும், பட்டியலில் சேர்த்து விடுகிறேன்.

எல்லோரும் வழமைபோல சுய அறிமுகம் செய்து கொண்டோம். “இப்போது மொக்கையை ஆரம்பியுங்கள்” என பாலபாரதி கூறினார்.

பீச் மணலுக்கு நல்லவேளையாக கூட்டம் இடம் பெயரவில்லை. சிவஞானம்ஜியும் நானும் டி.பி.ஆர். ஜோசஃபை பார்த்து ரொம்ப நாளாயிற்று எனப் பேசிக்கொண்டோம். ஜாக்கி சேகரிடம் காசி தியேட்டரின் ஓனர் பற்றி விசாரித்தேன். பதிவர் பட்டறை தேவைதானா என ஊர்சுற்றி பாலபாரதியை கேட்டு வைக்க, மனிதர் அதன் அவசியத்தை விலாவாரியாக விளக்கினார். அவர் மேலும் பேசுகையில் முரசு அஞ்சல் என்பது கீமேன் என்னும் வெளி நாட்டு கம்பெனியின் சப்போர்ட்டுடன் இயங்குகிறது என்றும், அதிக காசு செலவழிகிறது என்றும் கூறினார். அந்த வகையில் NHM ம் சரி அழகி மென்பொருளும் சரி உள்ளூர் தயாரிப்பு என்ற தகவலையும் அவர் தந்தார்.

காவேரி கணேஷ் என்பவர் தான் சைனாவுக்கு வணிகத்தை விஸ்தரிக்க உத்தேசித்திருப்பதை கூற, இம்மாதிரி விஷயங்களில் சுகுராக செயல்படும் நான் ஜெர்மன், ஃபிரெஞ்ச் மொழித் தேவைகளுக்காக எனது கார்டை ப்ராம்ப்டாக கொடுத்தேன். சீன மொழிபெயர்ப்பாளர் பற்றி பேச்சு வரும்போது எங்கள் பேச்சு மா. சிவகுமார் பற்றி திரும்பியது. எதற்கும் எந்த சீன மொழி என்பதையும் (கேண்டனீஸ் அல்லது மேண்டரீன்) நிச்சயப்படுத்தி கொள்ளுமாறு ஆலோசனை தந்தேன்.

அக்னிபார்வையின் பின்னூட்டத்தைப் பார்த்ததும்தான் நினைவுக்கு வந்தது. ஒரு பதிவருடன் எங்கே பிராமணன் சீரியல் பற்றி பேசினேன். அவர் பெயர் மறந்துவிட்டது. ஒரே மெலோட்ராமாவகப் போகும் மெகாசீரியல்கள் மத்தியில் இம்மாதிரி ஒரு புது காற்றுபோல வந்துள்ள இந்த சீரியல் பற்றி அவரிடம் சில தகவல்கள் தந்தேன். நேற்றைய (24.04.2009) ஹிந்து பத்திரிகையிலும் இந்த சீரியல் பற்றி ஒரு முழுபக்க கட்டுரை வந்துள்ளது பற்றி அவருக்கு எடுத்துரைத்தேன். ஒவ்வொரு எபிசோடிலும் சோவும் அவர் நண்பரும் வருவது மிகவும் புதுமையாக இருக்கிறது என அவர் சொன்னார். ஆனால் இதை அவர் ஏற்கனவேயே சமீபத்தில் 1972-ல் நான் பம்பாயில் வைத்து பார்த்த “சரஸ்வதியின் சபதம்” நாடகத்தில் செய்துள்ளதையும் சுட்டிக் காட்டினேன். (பை தி வே அவ்வாறு என்னுடன் டிஸ்கஸ் செய்தது தானே என நண்பர் ஹஸன் ராஜா கூறியுள்ளார். நினைவுபடுத்தியதுக்கு நன்றி).

தமிழ்க்குரல் என்னும் பெயரில் அறிமுகமான நண்பர் ஈழத்தமிழர்களது துயரத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். அது பற்றி பேசிக்கொண்டிருந்தவர் திடீரென பார்ப்பனர்கள் ஈழத்தமிழ் நலத்திற்கு எதிரானவர்கள் என ஒரு ஒட்டுமொத்த ஸ்டேட்மெண்டை விட, நீங்கள் எதிர்ப்பார்த்ததுதான் நடந்தது. டோண்டு ராகவன் வீறுகொண்டெழுந்தான். நல்லவேளையாக வால்பையன் சரியான சமயத்தில் உள்ளே புகுந்து சமாளித்தார்.

இருட்டு பரவியதால் எல்லோரும் கலங்கரைவிளக்கத்தை தாண்டி இருக்கும் ஆஸ்தான டீக்கடைக்கு சென்றோம். ஜேஜே என கல்யாணக்கூடமாக இருந்தது. தமிழ்க்குரல் யாரும் ஓட்டுபோடாமல் இருப்பதே நலம் என அபிப்பிராயப்பட்டார். கருணாநிதி, விஜயகாந்த், ஜெயலலிதா ஆகிய யாவருமே அவருக்கு சரிப்படவில்லை. ரொம்பவுமே டென்ஷன் ஆன தமிழ்க்குரலை டைவர்ட் செய்யும் நல்ல எண்ணத்தில் இஸ்ரேல் பற்றி அவர் கருத்தை கேட்க, பக்கத்திலிருந்த வேறொரு பதிவர் ஓடத் தயாரானார். நல்லவேளையாக இஸ்ரேல் பற்றி தனக்கு ஒரு கருத்தும் இல்லை என கூறிவிட்டு தமிழ்குரல் எஸ்ஸானார். இஸ்ரேலுக்கு எதிராக எதுவும் பேசவில்லை. ஆக, டோண்டு ராகவனுக்கு இஸ்ரேல் புகழ் பாடும் ஒரு சான்ஸ் போயிற்று.

இதற்குள் மணி எட்டுக்கு மேல் ஆகிவிட, எனது கார் டிரைவருக்கு ஃபோன் செய்து வண்டியை கொண்டுவரச்சொன்னேன். போகும் வழியில் சூர்யாவில் கறிகாய் வாங்கி சென்றேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

எங்கே பிராமணன் - பகுதிகள் 54 & 55

மூச்சுத் திணற 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் கார்ப்பயணம் போனதில் ஒரு மைனஸ் பாயிண்ட் இந்த எங்கே பிராமணன் சீரியலை பார்க்க முடியாமல் போனதே. ஆனால் என்ன எபிசோடுகளின் வீடியோ கிடைக்கும் சுட்டிதான் தெரியுமே. கீழே வரும் இரு எபிசோடுகளும் அம்முறையில் காணப்பட்டவையே. இம்மாதிரி செய்யும்போது இன்னொரு விஷயத்தையும் கண்டறிந்தேன். அதாவது கூகள் குரோம் உலாவியை விட நெருப்பு நரியை பாவிப்பதே சிறந்தது. முன்னதில் பாதி பிரேம்தான் தெரிகிறது. புதன் மாலைக்குள் வீட்டுக்கு வந்து விட்டதால் நேரடியாகவே அன்றைய எபிசோடை ஜெயா டிவியில் பார்க்க முடிந்தது. புதன், வியாழன், வெள்ளி எபிசோடுகள் பற்றிய வர்ணனை பிறகு தருவேன்.

பகுதி - 54 (20.04.2009):
நீலகண்டன் நாதன் வீட்டருகே குடியிருக்கும் பால்கார தனபாலை தேடிவருகிறார். தனபால் வீட்டில் இல்லை. நீலகண்டன் சிபாரிசில் தனபால் மாடு வாங்க கடன் வாங்கி, டியூ கட்டாததால் அவருக்கு அலுவலகத்தில் பிரச்சினை. அப்போது வாசலுக்கு வந்த வசுமதி அவரை தங்கள் வீட்டுக்கும் வருமாறு அழைக்கிறாள். மாட்டுக்காரர் விஷயத்தை வசுமதியிடம் கூற, வசுமதி அசோக் அந்த மாட்டோடு பேசிய விஷயத்தை நீலகண்டனிடம் கூறுகிறாள். அதற்குள் தனபாலே அங்கு வந்துவிட அவரை பார்த்து பேசிவிட்டு பிறகு நாதன் வீட்டுக்கு வருவதாக நீலகண்டன் கூறுகிறார்.

தனபாலிடம் பேசும்போதுதான் மாட்டுக்கு ஏதோ வியாதி என்றும், பால் கறப்பதில்லை என்றும் தெரிகிறது. ஆகவே டியூ கட்டவியலாது என தனபால் கூறிவிடுகிறார். அப்போது நீலகண்டன் அசோக் அவரது மாட்டுடன் பேசியது பற்றி கேட்க தனபாலும் அதை உறுதி செய்கிறார். கடைசியில் நீலகண்டன் மாட்டை தன் வீட்டில் வந்து கட்டுமாறு கூறிவிட்டு நாதன் வீட்டுக்கு செல்கிறார்.

வசுமதியிடம் இந்த அசோக் மற்றும் மாட்டு விஷயத்தை பற்றி விவாதித்து அசோக்கை ஒரு நல்ல மனோதத்துவ நிபுணரை பார்க்க செய்ய வேண்டும் என்று நீலகண்டன் கூற வசுமதியும் ஆமோதிக்கிறாள். ஆனால் நீலகண்டன் நாதனிடம் இது பற்றி பேசி அவரையும் இதற்கு ஒத்து கொள்ள வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறாள்.

வையாபுரியும் அவர் மனைவியும் சினிமாவுக்கு கிளம்பும் ஆயத்தங்களில் இருக்கின்றனர். அப்போது அங்கு அவசரமாக ஓடிவந்த சிங்காரத்தின் மகன் தனது அன்னைக்கு பிரசவ வலி எடுத்திருப்பதாக கூற, வையாபுரி தனது மனைவியின் ஆட்சேபணைகளை அலட்சியம் செய்து சிங்காரத்தின் மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார். ஒரு அடாவடி அரசியல்வாதிக்குள்ளும் ஒரு மனித இதயம் இருக்கும் இக்காட்சி மனதுக்கு நிறைவை அளிக்கிறது.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரிடம் சௌந்தர்யலஹரியும் கனகதாரா ஸ்தோத்திரமும் பாடம் கேட்ட பக்கத்தாத்து மாமி அவருக்கு நன்றி சொல்கிறாள். அந்த ஸ்லோகங்களின் பெருமை பற்றி பேசுகிறார் சாம்பு அவர்கள்.

“இது என்ன சார், சௌந்தர்ய லஹரி மற்றும் கனகதாரா ஸ்தோத்திரம்? இதெல்லாம் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன், இதென்ன விவகாரம்” என நண்பர் கேட்க, அந்த ஸ்லோகங்களை விவகாரம் எனக் கூறியதற்காக சோ அவரை செல்லமாக கண்டித்துவிட்டு அவற்றின் பெருமைகள் பற்றி பேசுகிறார். சௌந்தர்ய லஹரி என்பது 100 ஸ்லோகங்கள் அடங்கிய தொகுப்பு. ஈசனால் அம்பிகையின் புகழை பாடுவதாக அவை அமையப்பட்டுள்ளன. அவற்றை சிவபெருமான் சங்கரருக்கு அளிக்க அவரும் அத்தொகுப்பை பெற்று செல்லும்போது நந்திதேவரால் வழிமறிக்கப்பெற்று அதிலிருந்து 59 ஸ்லோகங்களை பறித்து செல்கிறார். பார்வதி தேவி அந்த 59 ஸ்லோகங்களை சங்கரரே இயற்றும்படி அருள் பாலிக்கிறார்.

கனகதாரா ஸ்லோகமானது ஒரு ஏழையின் குடும்பத்துக்கு சங்கரர் மனமிறங்கி லட்சுமி தேவியை ஆராதித்து ஸ்லோகங்கள் பாடி தங்க மழை பொழிய வைக்கும் நிகழ்ச்சியை உள்ளடக்கியது.

சாம்பு சாஸ்திரிகளிடம் பக்கத்தாத்து பெண்மணி தனது வேண்டுகோளுக்கு இணங்கி பாடம் சொன்னதற்கு தான் அவருக்கு என்ன கைம்மாறு செய்ய வேண்டும் எனக் கேட்க, அவர் அடுத்த ஆண்டு தனது மகனுக்கு திருமணம் செய்விக்கும்போது வரதட்சிணை ஏதும் வாங்கலாகாது என கேட்டு கொள்கிறாள். அப்பெண்மணியும் அதற்கு ஒப்புகிறார்.

சாம்பு சாஸ்திரிகளது மனைவி செல்லம்மாள் தான் இனி பட்டு உடுத்தப்போவதில்லை என தான் நிர்ணயம் செய்ததைக் கூற, வரதட்சிணை வாங்குவது மற்றும் பட்டைத் தவிர்ப்பது ஆகிய சம்பந்தமாக பரமாச்சார்யாள் ‘தெய்வத்தின் குரலில்’ எழுதியபடி இங்கு நடப்பது குறித்து மகிழ்கிறார்.

பகுதி - 55 (21.04.2009):
நீலகண்டன் வீட்டில் அவரும் பர்வதமும் அசோக் பசுமாட்டுடன் பேசியது பற்றி விவாதிக்கிறார்கள். அப்போது சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். நாதன் வீட்டுக்கு போய் தினசரி பூஜை செய்யவியலுமா என பர்வதம் கேட்க சாம்புவும் சம்மதிக்கிறார். அப்போது நீலகண்டன் அவரிடம் அசோக் பசுவுடன் “பேசிய” விவரத்தைக் கூறி அம்மாதிரி பசுமாட்டுடன் பேச இயலுமா என்று கிண்டலாக கேட்கிறார். சாம்புவோ துளியும் அசராமல் “தாராளமாக பேசலாமே” எனக் கூறிவிடுகிறார். நீலகண்டன் திகைக்கிறார். பிறகு இது சம்பந்தமாக பல விளக்கங்கள் சாம்பு தருகிறார். நீலகண்டன் ஏற்க மறுக்கிறார்.

இது பற்றி சோவின் நண்பர் மேலும் விவரங்கள் கேட்க, சோ ராமாயணத்தில் கைகேயியின் தந்தை மிருக பாஷைகளை அறிந்தவர் எனக்கூறி அது சம்பந்தமான நிகழ்ச்சியையும் கூறுகிறார். ஜனஸ்ருதி என்னும் மன்னனின் கதையையும் கூறுகிறார்.

இங்கே நீலகண்டன் சாம்பு வெறுமனே போய் நாதன் வீட்டில் பூஜை செய்தால் போதும் என்றும், பாகவதர் அசோக்கை கெடுத்தது போல அவரும் செய்ய வேண்டாம் என்றும் கூறுகிறார்.

வேம்பு வீட்டில் அவர் மகளை பெண்பார்க்க கிரியும் அவன் அன்னையும் வருகின்றனர். பரஸ்பர விசாரணைகள். கிரியின் அப்பா ஏன் வரவில்லை என்பதை கேட்க, அவன் தாயார் அவர் காலேஜ் ப்ரொஃபசர் என்றும், அன்று ஏதோ ஸ்பெஷல் கிளாஸ் எனவும் கூறுகிறாள்.

நாதன் வீட்டிற்கு சாம்பு வந்து நீலகண்டன் மனைவி பர்வதம் தன்னை அங்கு அனுப்பியது பற்றி கூற, நாதனுக்கும் சந்தோஷம். அவர் பூஜை அறைக்கு செல்ல, நாதன் வசுமதியிடம் சாம்பு பற்றி கூறுகிறார். முக்கியமாக அசோக்குக்கு திருவண்ணாமலையில் சாப்பாடு போட்டு இடம் கொடுத்தது சாம்புவின் தங்கை என்றும் கூறுகிறார்.

வேம்பு வீட்டில் அவர் தனக்கு கிரியின் வரன் பிடித்திருக்கிறது எனக்கூற, அவர் மனைவியும் தமக்கையும் அவசரப்படவேண்டாம் என அவரை எச்சரிக்கிறார்கள். பையனின் தந்தையை பார்த்து பேச வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள். இந்த வரனில் ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அவ்விரு பெண்மணிகளும் அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்கள்.

பாகவதர் வீட்டில் அவர் மூத்த மகனும் மருமகளும் வந்திருக்கிறார்கள். வீட்டில் சுமுகமான சூழ்நிலை நிலவுகிறது. அப்போது சாப்பாடு நேரம். எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடலாம் என மருமகள் கூற அன்று ஏகாதசி ஆதலால் பட்டினி என பாகவதரின் மனைவி கூறுகிறார். “ஏகாதசிக்கு இரண்டு சாப்பாடு” என தான் கேள்விபட்டிருப்பதாக மருமகள் கூற, பாகவதர் அதற்கு விளக்கம் சொல்ல ஆரம்பிக்கிறார்.

சோவிடம் அவர் நண்பர் இது பற்றி கேட்க, அவர் “தெய்வத்தின் குரலில்” பரமாச்சார்யார் கூறியதை இங்கு மேற்கோள் காட்டுகிறார். இவ்வாறான தவறான பொருள் வருவதற்கு சுலோகத்தை பாதியில் விடுவதே காரணம் என்பதை எடுத்துரைக்கிறார். ஏகாதசி அன்று செய்ய வேண்டியவை இரு விஷயங்கள், அதாவது உடல் சுத்தம் மற்றும் மனச்சுத்தம் என்றுதான் அதற்கு பொருள் என்பதையும் முழு சுலோகத்தையும் கூறி அவர் விளக்குகிறார்.

நாதன் வீட்டில் சாம்பு பூஜை முடிந்து கற்பூரம் காட்ட, அசோக் அதை கண்ணில் ஒத்தி கொள்கிறான். அவர் தன் வீட்டுக்கு வந்து பூஜை செய்வது தனக்கு பிடித்தமாக உள்ளது என்றும் கோவிலில் இருப்பது போன்ற உணர்வு வருகிறது எனவும் கூறுகிறான். மேலே அவன் பேசப்பேச சாம்பு அவனை சிலாகிக்கிறார்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/24/2009

மூச்சுத் திணற வெயிலில் 1000 கிலோமீட்டர்களுக்கு மேல் கார்ப்பயணம்

கடந்த திங்களன்று (20.04.2009) காலை என் மனைவியும் மகளும் மிக விரும்பி கேட்டு கொண்டதில் ஒரு கார்ப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தேன். அதன்படி காலை ஒன்பதரை வாக்கில் எனது காரில் புறப்பட்டோம். அதற்கு முன்னால் வியாழனன்று வரவேண்டிய டோண்டு பதில்கள் பதிவை முடிவாக எழுதி, வியாழன் காலை 5 மணிக்கு பப்ளிஷ் ஆகுமாறு முன்னமைவு (presetting) செய்து வைத்தேன்.

நேராக நாமக்கல் செல்ல முடிவு செய்தோம். இதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் அங்கே பகல் 12 மணியளவில் சென்றபோது நரசிம்மர் கோவிலில் நடை சாத்தியிருந்தார்கள். அங்கு பிற்பகல் 4.30 வரை காத்திருக்க இயலாததால், மனமின்றி திருச்சி திரும்பியிருந்தோம். இது ரொம்ப நாளாக எங்களை உறுத்திய விஷயம். ஆகவே இம்முறை நேராகவே அங்கு சென்றோம். அங்கு போய் சேரும்போது மாலை ஐந்து மணி. பகல் முழுக்க அக்கினிக் காற்று. நாமக்கல்லில் காரிலிருந்து இறங்கி ஆஞ்சனேயர் கோவிலுக்கு வெறுங்காலுடன் சில நூறு அடிகள் சென்றதில் கால்கள் கொப்பளித்து விட்டன. பிறகு நரசிம்மர் சன்னிதிக்கு சென்று ஆசைதீர சேவித்து வந்தோம். கோவிலை விட்டு வரும்போது புழுதிக்காற்று ஆரம்பித்து தூறல்கள் விழுந்தன. அங்கிருந்து கிளம்பி கரூர் சென்றோம். அங்குள்ள பெருமாள் கோவிலுக்கு செல்லும் போது மணி ஏழடிக்க சில நிமிடங்கள் இருந்தன. காரிலிருந்து இறங்கி நான் பல படிகள் எறிச்செல்வதற்கும் உள்ளே அன்றைய தினத்திற்காக திரையை சாத்துவதற்கும் சரியாக இருந்தது. அக்கோவிலில் ஏழுமணிக்கே நடை சாத்துவார்கள் என்பது எனக்கு அப்போதுதான் தெரிந்தது. ஒரே ஏமாற்றம்.

அங்கேயே ரூம் போட்டு தங்கி அடுத்த நாள் காலை திரும்ப முயற்சி செய்யலாம் என நினைக்கையில் சொல்லி வைத்தாற்போல் மின்சாரம் கட். உள்ளூர்க்காரர்கள் சொற்படி திரும்ப எப்போது மின்சாரம் வரும் எனச்சொல்ல இயலாத நிலை. ஆகவே நேரே திருச்சிக்கே வண்டியை விடச்சொன்னேன். கரூர் ஊரெல்லை தாண்டியதும் பயங்கர சூறாவளி மழை. வழியில் எந்த ஊரிலும் மின்சாரம் இல்லை. மரங்கள் காற்றில் பேயாட்டம் போடுகின்றன. நடுவில் குளித்தலையில் ஒரு டிபன் ஹோட்டலில் இன்வெர்டர் மூலம் விளக்கு எரிந்தது. அங்கு லைட்டாக டிபன். திருச்சி செல்லும்போது இரவு பத்துக்கு மேல் ஆகிவிட்டது. அஜந்தா ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு அருகில் இருந்த ப்ரௌசிங் கஃபேக்கு சென்று எனது மின்னஞ்சல்களை பார்த்தேன். நல்ல வேளையாக மொழிபெயர்ப்பு வேலைகள் எதுவும் காத்திருக்கவில்லை.

அடுத்த நாள் காலை ஸ்ரீரங்கம் சென்று ரங்கநாதரை திருப்தியாக சேவித்தோம். திருச்சி தொகுதியில் வேட்பாளராக அன்று விண்ணப்பிருந்த அதிமுகவின் குமார் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கோவிலில் வந்து பூஜை செய்ததில் பொதுமக்களுக்கு சிறிது தாமதம் ஏற்பட்டது. திருச்சிக்கு திரும்பும்போது மணி 11.30 ஆகிவிட்டது. குடும்பத்தை ரூமுக்கு அனுப்பிவிட்டு ப்ரௌசிங் மையத்துக்கு சென்றேன். வாடிக்கையாள் ஒரு பெரிய மின்னஞ்சலை அனுப்பியிருந்தார். அதை ஜெர்மனில் மொழிமாற்றம் செய்து அவருக்கு அனுப்ப சரியாக ஒரு மணி நேரம் ஆயிற்று. (840 ரூபாய்க்கு பில்).

அஜந்தா ஹோட்டலிலேயே சாப்பிட்டு விட்டு அங்கிருந்து நாகைக்கு புறப்பட்டோம். நடுவழியில் எதிர்ப்பாராத நிலையில் தஞ்சை மாரியம்மன் கோவில் தரிசனம் கிடைத்தது. நாகைக்கு செல்லும்போது மாலை ஐந்தரை போல ஆகிவிட்டது. சௌந்திரராஜ பெருமாள் கோவிலுக்கு சென்று சேவித்தோம். நான் சமீபத்தில் 1953-ல் அக்கோவிலை பார்த்ததற்கும் இப்போது பார்ப்பதற்கும் இடையில் பல மாறுதல்கள். உள்ளூர் பட்டாசாரியாரிடம் (30 வயது இளைஞர்) இது பற்றி பேசும்போது அவரிடம் இதைக்குறிப்பிட்டேன். எப்போது நான் கடைசியாக அங்கு வந்தேன் என அவர் கேட்டதற்கு சமீபத்தில் 1953-ல் என்று கூற, அவர் ஒருமாதிரி என்னைப் பார்த்தவாறு ஜாக்கிரதையாக ஆனால் வேகமாக் அந்த இடத்தை விட்டு அகன்றார்.

மறு நாள் காலை சென்னைக்கு புறப்பட்டோம். காரைக்கால் வழியாக செல்வதுதான் குறுக்கு வழி, ஆனால் எனது காருக்கு பாண்டிச்சேரிக்கான பெர்மிட் இல்லை. அது வேண்டுமென்றால் திண்டிவனத்துக்கு அருகில்தான் போட்டு கொள்ள வேண்டுமாம். பாண்டி அரசின் இந்தப் போக்கு புரிந்து கொள்ள இயலவில்லை. இது சம்பந்தமாக நான் சில ஆண்டுகளுக்கு முன்னால் அப்போதைய பாண்டி முதல்வரிடமே பல இடங்களில் பெர்மிட் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டு கொண்டேன். அவரும் ஆவன செய்வதாக உறுதியளித்தார். இப்போது அவர் பதவியே காலி. இங்கும் அது பற்றிய எனது புகாரை மறுபடி பதிவுசெய்வேன்.

சுண்டைக்காய் அளவுள்ள இந்த மாநிலத்துக்கு இதில் என்ன காண்டு இருக்க முடியும்? பண வரவுதானே. வாங்கித் தொலைக்காமல் என்ன பிடுங்குகிறார்கள்? திருச்சி செல்ல வேண்டிய நான் இதற்காக திண்டிவனத்தில் டைவர்ட் ஆகி பாண்டி தரப்பாக சென்று பெர்மிட் போட்டு கொண்டு பிறகு திரும்பவந்து திருச்சி செல்வது என்பது நடக்கக்கூடிய காரியமா? அல்ல்து தஞ்சையிலிருந்து ஒருவர் காரைக்கால் செல்ல வேண்டுமானால் அவர் திண்டிவனத்துக்கு வந்து சுற்றி செல்லவியலுமா? யாராவது இது சம்பந்தமாக அவர்கள் கையை முறுக்கினால் தேவலை.

நாகையிலிருந்து நாகூர், சன்னா நல்லூர் என்றெல்லாம் சென்று மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், பண்ருட்டி என்ற ரூட்டில் பயணித்து சென்னை திரும்பும்போது புதன் மாலை.

நடுவில் எதிர்பாராத போனசாக கூதனூர் சரஸ்வதி கோவிலிலும், திருமீயச்சூர் லலிதாம்பிகை கோவிலிலும் சென்று சேவித்தோம். இந்த லலிதாம்பிகை கோவிலில் அம்பிகைக்கு தங்க கொலுசு போட்டிருக்கிறார்கள். பங்களூருவை சார்த்த மைதிலி ராஜகோபாலாச்சாரி அவர்கள் கனவில் இந்த அம்பிகை வந்து தனக்கு தங்கக் கொலுசு போடும்படி அவரிடம் கேட்டிருக்கிறார். ஒரு ஆசாரமான வைணவக் குடும்பத்தை சார்ந்த மைதிலி அவர்களுக்கு ஒரே ஆச்சரியம். முதல் எந்த ஊர்கோவிலில் உள்ள அம்மன் என்பது அவருக்கு தெரியவில்லை. பிறகு எதேச்சையாக ஒரு பத்திரிகையில் பல அம்பிகைக் கோவில்களில் உள்ள அம்பாள்கள் படங்களைப் பார்த்திருக்கிறார். அவற்றில் திருமீயச்சூர் லலிதாம்பிகையின் அம்மனை பார்த்ததுமே அவருக்கு விளங்கி விட்டது, கனவில் வந்தது இந்த அம்மனே என்று. ஆகவே அக்கோவிலுக்கு சென்று தனது ஆசையை வெளிப்படுத்தியிருக்கிறார். கோவிலை சார்ந்தவர்கள் முதலில் அவர் சொன்னதை நம்பவில்லை. கொலுசு போடும்வசதிகள் சிலையின் கால்களில் இல்லை என ம்றுத்துள்ளனர். ஆனால் இப்பெண்மனி பிடிவாதமாக இருக்க, அவர்கள் சிலையின் கணுக்காலை ஆராய்ந்ததில் கொலுசு போடும் அளவுக்கு அதில் துவாரங்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பிறகு அப்பெண்மணி தான் கொண்டு சென்ற கொலுசை அணிவித்தார்.

கடந்த பிப்ரவரி மாதம் இக்கோவிலுக்கு சென்றிருந்தோம். அன்று விசேட நாளாகையால் ஒரே கும்பல். அம்மனை அருகிலிருந்து தரிசிக்க இயலவில்லை. பிறகு காரில் கும்பகோணம் திரும்பும் சமயம் கோவிலின் இந்த கதையை அதன் தலப்புராணத்தில் கண்டதும் துள்ளி குதித்தேன். வீட்டம்மாவிடம் சந்தேகத்துடன் கேட்டபோது இந்த மைதிலி ராஜகோபாலாச்சாரி தனது ஒன்றுவிட்ட சித்தி என்று கூறினார். அடடா இது தெரிந்திருந்தால் அந்த கொலுசையும் பார்த்திருந்திருக்கலாமே என அங்கலாய்ப்பு ஏற்பட்டது. அடுத்த முறை பார்த்து கொள்ளலாம் என அப்போது விட்டிருந்தோம்.

இப்பயணத்தில் நாங்கள் எதிர்ப்பாராத தருணத்தில் இந்த கோவில் எங்கள் பாதையில் வந்தது அம்பிகையின் அருளே. இம்முறை கோவில் அர்ச்சகரிடம் இது பற்றி கூறி இந்த மைதிலி அவர்கள் எனது சின்ன மாமியார் என கூறினேன். அவர்களும் சந்தோஷமாக எங்களுக்கு தீபாராதனை வெளிச்சத்தில் அக்கொலுசுகளை நன்கு காட்டினார்.

சும்மா சொல்லப்படாது. பயணம் முழுக்க அனல் காற்றுதான். மூச்சு திணறியது. இருந்தாலும் எல்லாம் நல்லபடியாக முடிந்தது என்பது லலிதாம்பிகையின் ஆசிகளால்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/23/2009

டோண்டு பதில்கள் - 23.04.2009

[திங்கள் முதல் வியாழன் வரை நான் தொடர்பயணத்தில் இருக்கப் போவதால், இந்த வாரத்து பதில்களை திங்கள் காலையே முடித்து வரும் வியாழன் காலை 5 மணிக்கு வெளியாகுமாறு செட் செய்துள்ளேன். இது நண்பர்களின் தகவலுக்கு மட்டுமே. நான் திங்கள் காலை புறப்பட்டதற்கு பின் வரும் கேள்விகள் எனது டோண்டு பதில்கள் 30.04.2009 பதிவில் பதிலளிக்கப்படுவதற்காக மேலே எடுத்து செல்லப்படும்].

டி.வி. ராதாகிருஷ்னன்:
1. நிருமலன் என்ற பெயர் சிவனைக் குறிக்கும் பெயர்களில் ஒன்று ஆயினும் வடமொழிச் சொல்லான அதற்கு சரியான தமிழ் அர்த்தம் என்ன? (நடராஜர் என்றால் நடனத்தின் அதிபதி; சுயம்புலிங்கம் என்றால் தானாக தோன்றிய லிங்கம் என்பது போன்ற சரியான அர்த்தம்)
பதில்: நிர்மலன் என்றால் மாசில்லாதவன் என்று தமிழில் பொருள். நம்மிடம் உள்ள ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை நாம் முயற்சி செய்து நீக்கினால் மனிதன் நிர்மலன் ஆகின்றான். இவ்வாறு ஆணவத்தை தொலைத்தால் சீவனில் உள்ள ஆணவமாகிய சுழி இறங்கும்போது சீவன் சிவன் ஆகிறான் (எனது நண்பரும் சென்னை பல்கலைக்கழக் வைணவத்துறை முன்னாள் தலைவருமான டாக்டர் வி.கே.எஸ்.என். ராகவன் அளித்த இந்த விளக்கத்துக்கு நன்றி).


மெனக்கெட்டு:
1. 1971 ல் இருந்து மூன்றரைஆண்டுகள் பம்பாயில் அடுத்த 7 ஆண்டுகள் சென்னையில், 1981 – 2001 தில்லியில், தற்பொழுது சென்னையில். பல ஊர்கள் சென்றிருக்கிறீர்கள். எந்த ஊர் உங்களுக்குப் பிடித்தது? ஏன்?
பதில்: இது என்ன குழந்தைத்தனமான கேள்வி, சென்னையை மிஞ்சும் அளவுக்கு ஏதேனும் ஊர் உண்டா என்ன? டென்னிஸ் கிருஷ்ணன் பற்றி ஒரு கதை சொல்வார்கள். அவர் டென்னிஸ் டோர்னமெண்டுகளில் கலந்து கொள்ள பல கண்டங்களுக்கு சென்றிருக்கிறாராம். எந்த ஊருக்கு சென்றாலும் அவர் செய்யும் முதல் வேலை அங்கிருந்து சென்னைக்கு ஷார்டஸ்ட் ரூட் என்னவென்பதை பார்த்து வைத்து கொள்வாராம். அவர் மாதிரித்தான் நானும்.

2. வெளிநாடு(கள்) சென்றதுண்டா? அதைப் பற்றி ஏதாவது?
பதில்: என்னைப் பற்றி இவ்வளவு புள்ளிவிவரங்கள் தெரிந்து வைத்துள்ள நீங்கள் என்னிடம் பாஸ்போர்ட்டே கிடையாது என்பதையும் அறிந்திருப்பீர்கள்தானே?

3. தென் திருப்பேரை எங்கிருக்கிறது? அதற்கு தங்களது தனிக்கவனம் வரக்காரணம்?
பதில்: திருச்செந்தூர்-திருநெல்வேலி பாதையில் திருச்செந்தூரிலிருந்து ஐந்து கிலோமீட்டர்கள் தூரத்தில் தென்திருப்பேரை உள்ளது. தாமிரபரணி கரையில் அழகு கொஞ்சும் கிராமம் அது. அவ்வூர் மக்கள் மற்றும் அவரை தரிசிக்க வரும் பக்தர்களின் உள்ளம் கவர் கள்வனாம் மகரநெடுங்குழைகாதனைக் காண ஆயிரம் கோடிக் கண் வேண்டும் என்றால் மிகையாகாது. தலப் புராணத்தின்படி வேதவித்துக்களின் வேதபாராயணம் மற்றும் குழந்தைகளின் விளையாடும் ஒலிகளைக் கேட்பதற்காக பகவான் கருடனிடம் சற்றே விலகி அமரும்படிக் கூறினாராம். இதைக் கூறுகையில் நம்மாழ்வார் எழுதுகிறார்:

"வெள்ளைச் சுரிசங்கொடு ஆழியேந்தி தாமரைக் கண்ணன் என்னெஞ்சினூடே
புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர் என் சொல்லிச் சொல்கேன் அன்னைமீர் காள்
வெள்ளச் சுகமன் வீற்றிருந்த வேதவொலியும் விழா வொலியும்,
பிள்ளைக் குழாவிளை யாட்டொலியும் அறாத் திருப்பேரையில் சேர்வன் நானே"

அவனை நான் முதலில் கண்டது 2005-ல். அப்போதிலிருந்தே என் மனதைக் கவர்ந்தான் அவன்.

4. ‘இடிபோன்ற மௌனம்’ என்றால் என்ன?
பதில்: இதை விளக்க ஒரு கதை சொல்ல வேண்டும்.
ராமநாதனின் வீடு ரயில்வே லைனுக்கு பக்கத்தில். அதில் தினமும் இரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு வண்டி செல்லும். அது ஒரு தொழிற்சாலை சைடிங். ஆகவேதான் இவ்வளவு குறைச்சலான போக்குவரத்து. அச்சமயம் ராமநாதனின் வீடே ஆடும். இருந்தாலும் அவனது தூக்கத்துக்கு ஒரு பங்கமும் இல்லை, ஏனெனில் பழகி விட்டது. அன்று ஒரு நாள் மட்டும் ரயில் வரவில்லை. ஒரே நிசப்தம். சரியாக இரவு 12 மணிக்கு ராமநாதன் அலறி புடைத்து எழுந்தான். "அது என்ன சப்தம்" என்று குழறினான். விஷயம் என்னவென்றால் அவனது உடல் அந்த சத்தத்துக்கு பழகி விட்டது. அன்று இல்லாமல் போனதை அவன் உடல் ஏற்றுக் கொள்ளாது அவனை எழுப்பி விட்டு விட்டது. சில சமயங்களில் பதில்களிலிருந்தும் உண்மையைக் கண்டறியலாம். பதில்கள் இல்லாமல் போவதிலிருந்தும் பல உண்மைகளை கண்டறியலாம். ஆக அம்மாதிரியான தருணங்களில் உண்மைகள்தான் இடிபோன்றவை. மௌனம் அவற்றுக்கு ஆகுபெயர் அவ்வளவே.

5. ‘ஜாட்டான்’ என்றால் என்ன?
பதில்: எடுபட்ட பயல், உபயோகமத்த பயல், வெத்துவேட்டு பயல், ஜாட்டான் என்றெல்லாம் சிலரைப் பற்றி பலர் கூறுவர்.

6. இதுவரை எவ்வளவு சினிமா (தியேட்டரில்) பார்த்திருப்பீர்கள்?
பதில்: அது இருக்கும் நூற்றுக்கணக்கில். யார் அதையெல்லாம் கணக்கில் வைத்து கொள்வது? நான் கடைசியாக கணக்கு வைத்துக் கொண்டது சமீபத்தில் 1964-ல், அந்த ஆண்டு 40 படங்கள்.

7. சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் செய்வீர்களா?
பதில்: இது என்ன மெனக்கெட்டு ஒரு கொடுமையான கற்பனை? வால்பையன் மெரண்டிட்டாருல்ல.

8. ஆல் இண்டியா ரேடியோ வெளிநாட்டு சேவையில் பிரெஞ்சு ஒலிபரப்புகள் செய்துள்ளீர்கள், ஜெயா டீவி நேர்காணலில் வந்துள்ளீர்கள், FM ரெயின்போ நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறீர்கள். அப்பொழுதெல்லாம் எப்படி உணர்ந்தீர்கள்?
பதில்: ஃபிரெஞ்சு ஒலிபரப்பின்போது என் தந்தை இல்லையே இதையெல்லாம் பார்க்க என வருந்தினேன். அதுவும் ஒய் டூ கே பற்றிய செய்தி படிக்கும் விஷயத்தில் நான் செய்த சமயோசித மாற்றத்தை அவர் நிஜமாகவே ரசித்திருப்பார். ஜெயா டிவி நிகழ்ச்சிக்கும் மகிழ்ந்திருப்பார். முக்கியமாக அவர் ஸ்டைலிலேயே செயல்பட்டு துக்ளக் ஆண்டுவிழா மீட்டிங்குகளை கவர் செய்வதை பாராட்டியிருப்பார். மொழி பெயர்ப்பாளர் தலைவாசலாம் ப்ரோஸ்.காமில் என்னை நரசிம்மன் என்றுதான் அழைக்கின்றனர். அது என் தந்தையின் பெயர் எனக்கூறி அவர்களை திருத்துவதில்லை. ஏதோ எனது தந்தை இன்னமும் உயிருடன் எனக்குள்ளிருந்து செயல்பட்டு என்னை வழிநடத்துகிறார் என்ற எண்ணம் எனக்கு ஒருவித மனநிறைவையே தருகிறது.

9. முரளி மனோகர் தற்பொழுது என்ன செய்கிறார்?
பதில்: மீண்டும் ஒரு முறை “எங்கே பிராமணன்” பதிவை போடுவதாக அடம் பிடிக்கிறான். என்ன, அவனுக்கு இன்னொரு சான்ஸ் தரலாமா?

10. இந்த 63 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்புடன் இருப்பதற்கு காரணம் என்ன?
மனத்தளவில் எனக்கு 26 வயதுதானே ஆகிறது. சில நாட்களுக்கு முன்னால்ஃபிக்சட் டெபாசிட் சம்பந்தமாக வங்கி ஆஃபீசர் சீனியர் சிடிசன்களுக்கான அதிக வட்டி பற்றி என்னிடம் கூற, நானோ அவர் வேறு யாருக்கோ கூறுகிறார் என நினைத்து சுற்றும் முற்றும் பார்க்க ஒரே சிரிப்புதான் போங்கள்.

வலைப்பதிவுகள் :
1. தமிழில் 740 க்கு மேற்பட்ட பதிவுகள் போட்டிருக்கிறீர்கள், புதிதாக வருபவர்களுக்கு என்ன ஆலோசனைகள் தருவீர்கள்?
பதில்: சமீபத்தில் 1978-ல் Diplôme supérieur ஃபிரெஞ்சு பரீட்சை எழுதிய போது எங்கள் ஆசிரியர் லாற்டே கூறியது நினைவுக்கு வருகிறது. ஒரு வாக்கியத்தை எடுத்து கொள்ள வேண்டும், அதன் எழுவாய், பயனிலை மற்றும் செயப்படு பொருளை சரியான வரிசையில் வைக்க வேண்டும். வேற்றுமை உருபுகளில் கவனம் தேவை. அந்த வாக்கியம் முடிந்ததும், அடுத்த வாக்கியத்துக்கு செல்ல வேண்டும், இப்படியே வாக்கியங்களை அமைத்தால் ஒரு கட்டுரை ஆகிவிடும். பிறகு அடுத்த கட்டுரையை எடுக்க வேண்டும். அது போல ஒவ்வொரு பதிவாக போட்டு கொண்டே வந்தால் கூடிய சீக்கிரம் 740 பதிவுகளை தாண்டலாம். நமக்கென்ன கவலை? கஷ்டமெல்லாம் படிப்பவர்களுக்குத்தானே, இஃகிஃகிஃகி.

2. சொந்த காசு கொடுத்து டொமைன் வாங்கிக் கொள்ள என்ன செய்ய வேண்டும்? எவ்வளவு செலவாகும்?
பதில்: எனது மொழி பெயர்ப்பு வெப்சைட்டுக்கு நான் ஆண்டுக்கு 3000 ரூபாய் தருகிறேன். இந்த வெப்சைட் இலவசமே. மற்றப்படி பிளாக்கர் பாவிப்பதால் வலைப்பூ உரலும் இலவசமே.

3. பதிவர் சந்திப்புக்கள் யாரால், எப்படி ஒருங்கிணைக்கப்படுகிறது?
பதில்: நீங்கள் கூட சந்திப்புக்கு அழைப்பு விடுக்கலாம். நான் விட்டிருக்கிறேன். அவற்றில் ஒன்று பற்றி இங்கே பார்க்கலாம்.

4. திரட்டிகளில் இணைப்பது எப்படி?
பதில்: அந்தந்த திரட்டிகளிலேயே அதற்கான வழிமுறைகளை எளிமையாக கூறியுள்ளனர். அங்கே பார்த்து கொள்ளலாம்.

5. தமிழில் எழுத என்ன எழுத்துரு, மென்பொருள் பயன்படுத்துகிறீர்கள் எது எளிதாக இருக்கும்?
பதில்: ஒருங்குறி எழுத்துக்கள். மென்பொருள் NHM தமிழ் எழுத்தி. என்னைப் பொருத்தவரை இது அபாரமாக இருக்கிறது. அழகி மென்பொருள் மற்றும் இகலப்பை ஆகியவையும் இருக்கவே இருக்கின்றன.

6. RSS, feeds, twitter என்றெல்லாம் சொல்கிறார்களே அதைப் பற்றி?
பதில்: சத்தியமாகவே எனக்கு அவை பற்றியெல்லாம் ஒன்றும் தெரியாது.

7. தங்களது top 10 catagory ல் தங்களது favorite எது?
1. விவாத மேடை 221; 2. டோண்டுவின் அனுபவங்கள் 93; 3. பதிவர் வட்டம் 87; 4. அரசியல் 69; 5. டோண்டு பதில்கள் 62; 6. மொழிபெயர்ப்பு 52; 7. சோ 50; 8. தன்னம்பிக்கை 45; 9. மொக்கை 38; 10. பொருளாதாரம் 37

பதில்: தன்னம்பிக்கை

8. Google Adsense என்கிறார்களே, அப்படியெல்லாம் கூட வருமானம் வருமா?
பதில்: எனக்கு தெரிந்து ஓசை செல்லாவுக்குத்தான் வந்திருக்கிறது.

9. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தானே அச்சுக்கு செல்லுமாறு பிளாக்கரில் முன்அமைவு செய்வது எப்படி?
பதில்: பதிவு போடும் பெட்டியின் கீழே இடது பக்கத்தில் Post Options என உள்ளது. அதை க்ளிக் செய்யவும். கீழே வலது பக்கத்தில் Post date and time என இரு தனி பெட்டிகள் திறக்கும். தேதிக்கு கீழே தேதியும், நேரத்துக்கு கீழே நேரமும் செட் செய்ய வேண்டும். சில நாட்களுக்கு பிறகு வருவது போல செட் செய்து பப்ளிஷ் பட்டனை அழுத்தினால், தீர்ந்தது வேலை. இவ்வாறுதான் எனது டோண்டு பதில்கள் பதிவு வியாழனன்று காலை 5 மணிக்கு கில்லி மாதிரி பப்ளிஷ் ஆகிறது. அந்த செட்டிங்கை நான் புதன் இரவிலேயே செய்து விட்டு தூங்கப் போய் விடுவேன். காலையில் 6 மணிவாக்கில் கண்விழித்து கணினியை ஆன்செய்து பிளாக்கரில் உள்நுழைந்து பார்த்தால் டோண்டு பதில்கள் பப்ளிஷ் ஆகியிருந்திருக்கும்.

10. பதிவுகளுக்கு கவர்ச்சிகரமாக பெயர் வைப்பது எப்படி? (உ.தா. “பணவீக்கத்தின் கொட்டைகளை பிடித்த ஹேயக்”)
பதில்: ஹேயக் விஷயத்தில் எனது இந்த ஆங்கில வலைப்பூவின் தலைப்புதான் தமிழில் லோகலைஸ் செய்யப்பட்டது. மற்றப்படி மனதைக் கவரும் வண்ணம் தலைப்பு வைப்பது என் மாதிரி மொழியையே வைத்து பிழைப்பவனுக்கு பெரிய விஷயமே அல்ல.

தேர்தல் :
1. தேர்தல் பிரச்சாரங்களுக்கு இன்னமும் சினிமா கவர்ச்சி பயன்படுவது பற்றி?
பதில்: கசப்பு மருந்தை தர சர்க்கரை தருவார்கள், ருசியை மாற்ற. அது போலத்தான் இது. ஆனால் என்ன, பல சமயம் மருந்துக்கு பதில் விஷத்தைத் தந்து விடுகிறார்கள்.

2. தன் தலைவர் முதல்வராக நாக்கை அறுத்து காணிக்கை செலுத்தும் தொண்டர் பற்றி?
பதில்: அப்படிப்பட்ட முட்டாள்கள் பேசாமல் இருத்தலே நலம்.

3. வேட்புமனு தாக்கல் செய்யும் போது குறிப்பிடப்படும் கோடிக் கணக்கான சொத்துக்கள் பற்றி?
பதில்: அவற்றை ஒருமுறை பார்க்கும் நமக்கே கேறிட்டு வரும்போது, பாவம் வேட்பு மனு பெறும் அதிகாரி.

4. அரசியல் வாதிகளின் சுவிஸ் வங்கி கணக்குகள் பற்றி?
பதில்: அதையும் டிக்ளேர் செய்கிறார்களா என்ன?

5. அரசியல் வாதிகளின் மேல் செருப்பு வீச்சுக்கள் பற்றி?
பதில்: இவர்களுக்கெல்லாம் பெரியார் மாதிரி மனவுறுதி பெற்ற தலைவர்களே சரி. அவர் மேல் ஒரு செருப்பு விழ, இன்னொரு செருப்பும் வராதா எனப் பார்த்து, இரண்டையும் சேர்த்து எடுத்து வந்ததாகப் படித்திருக்கிறேன்.

6. தேர்தல் அறிக்கைகளில் இலவச அறிவிப்புகள் பற்றி?
பதில்; யார் அப்பன் வீட்டு துட்டை யார் இலவச அறிவிப்பாக தருவது என்ற விவஸ்தையேயில்லாது போயிற்றே.

7. தேர்தலுக்கு தேர்தல் கூட்டணி மாறும் கட்சிகள் பற்றி?
பதில்: எல்லா கட்சிகளுமே அதைத்தானே செய்கின்றன? ஊரே சிரிச்சா கல்யாணம்னு சொல்லுவாங்களே.

8. நக்ஸலைட்டுகள் தேர்தல் காலங்களில் மட்டும் உத்வேகம் பெறுவது பற்றி?
பதில்: அவர்களது சீன எஜமானர்கள் சொல்வதைத்தானே அவர்கள் கேட்க வேண்டும்?

9. நவீன முறை தேர்தலிலும் கள்ள ஓட்டு புகார் வருவது பற்றி?
பதில்: மனித மன்ம் விசித்திரமானது, எந்த நிலையிலும் மோசடி வேலைகளை செய்ய வழிகள் கண்டுபிடிக்கும்.

10. வாக்குச்சாவடி என்ற பெயர் ஏன்? ‘சாவடி!’ தவிர வேறு நல்ல தமிழ்ச்சொல் ஏதாவது?
பதில்: வாக்களிப்பு மையம்?


சந்துரு:
1) தடித்த வார்த்தையை பிரயோகிப்பவர்களுக்கு நிதானத்தையும் அதன் சிறப்புகளையும் விளக்கி ஒரு பதிவு இடுவீர்களா?
பதில்: தடித்த வார்த்தைகளை உபயோகிப்பவர் முதலில் எவ்வளவு சீண்டப்பட்டார் என்பதையும் பார்க்க வேண்டும். எது எப்படியாயினும் ஒவ்வொருவரும் தத்தம் செயலுக்கு பொறுப்பு. இன்னிலையில் நான் ஏன் அதையெல்லாம் வலியுறுத்தி பதிவிட வேண்டும்?

2) ஒரு பதிவர் (பெரியவர்)வெண்ணை என்றெல்லாம் எழுதுகிறாரே? (ஒரு அனானியை திட்டுகிறாராம்) அவரின் தரம் அவ்வளவுதானா?
பதில்: வெண்ணை மாதிரி நடப்பவனை வெண்ணை என்றுதான் கூறவேண்டும். இதில் பெரியவர் என்ன, சிறியவர் என்ன?

2அ) ஒருவன் குடித்து விட்டு உளறினால் அவனுடன் சண்டை போட நாமும் குடிப்பது போல இல்லையா?
பதில்: இது கேஸ் பை கேஸ் பார்க்க வேண்டிய விஷயம். பொதுவான கருத்தாக கூறவியலாது. இது சற்றே நீட்டிக்கப்பட்டு வேறு மாதிரி உருவெடுக்கும் அபாயம் உண்டு. இருவர் சண்டை போடும்போது, சுற்றிலும் இருப்பவர்கள் கட்டிப்பிடித்து தடுப்பது அவர்களில் பலவீனமாக இருப்பவனையே. அவனை அவர்கள் பிடிக்க பலமானவன் வந்து இன்னும் சில குத்துகள் விடுவான். நான் என்ன கூறுகிறேன் என்றால், முடிந்தால் இருவரையும் பிடி. இல்லாவிட்டால் வேடிக்கை பார்.

2ஆ) வயதுக்கு தகுந்த முதிர்ச்சியை ஏன் ஆண்டவன் எல்லாருக்கும் தருவதில்லை?
பதில்: வயதுக்கும் முதிர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்? அவரவர் நடத்தைக்கு அவரவரே பொறுப்பு.

மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/17/2009

எங்கே பிராமணன் - பகுதிகள் - 51, 52 & 53

பகுதி - 51 (13.04.2009):
நாதன் தன் வீட்டு கேட் அருகில் பாகவதருக்காக பொறுமையின்றி காத்திருக்கிறார். வசுமதி அதற்காக அவருடன் வாதம் செய்கிறாள். அதற்குள் பாகவதர் வந்துவிட, அவரை இருவருமே வரவேற்று உள்ளே அழைத்து செல்கின்றனர். நாதன் பாகவதருக்கு தான் அனுப்பிய கடிதம் பற்றி பேச ஆரம்பிக்கிறார். அசோக் செய்த புண்ணியத்தால்தான் பாம்பு அவனைத் தீண்டவில்லை என அவர் கூற, பாகவதரோ பாம்பு வந்ததே அசோக் செய்த புண்ணியமே என ஏன் கூறக்கூடாது என கேட்கிறார்.

பேசாமல் அசோக்கை சன்னியாசியாக்கி விடலாமா என நாதன் கேட்க, சன்னியாசம் என்பது தானே வரவேண்டியது என்றும், பழம் பழுத்தவுடன் தானே விழுவது போல எனக் கூறுகிறார்.

பழம் பழுத்தால் விழவேண்டியதுதான் என்பதில் என்ன புதுமை என சோவின் நண்பர் கேட்க, பல தெரியாத விஷயங்களை இவ்வாறுதான் கூறி விளக்க முடியும் என சோ கூறி, கூடவே மேலும் சொல்கிறார், “இம்மாதிரி விஷயங்களை மோட்சத்துக்குத்தான் சாதாரணமாக கூறுவார்கள்” என்றும் கூறுகிறார். மோட்சத்துக்கும் சொர்க்கத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு பற்றியும் பேசுகிறார்.

நாதனுடன் மேலே பேசும்போது அசோக் ரமண மகரிஷி ஆசிரமத்து விஷயங்களை பற்றி கூறியது சம்பந்தமாக நாதன் பாகவதரிடம் கூற, அவரோ சித்தபுருஷர்கள் ரமண மகரிஷி ஆஸ்ரமத்துக்கு புலி ரூபத்தில் வந்தது போலவே, அசோக்கிடம் வந்த பாம்பும் ஏன் ஒரு சித்த புருஷனாக இருக்கக்கூடாது என கேட்கிறார். அதே சித்த புருஷனே தன் ரூபத்தில் வந்து அசோக்கிடம் பேசியிருக்கலாம் என்றும், திருவண்ணாமலையில் அசோக்கை சந்தித்த பைராகியாகவும் இருந்திருக்கலாம் என்றும், அசோக்கின் ஜாதகம் அடங்கிய சுவட்டினை தட்டிப் பறித்த சூறாவளிக் காற்றாகவும் இருந்திருக்கலாம் எனவும் கூறுகிறார். (பை தி வே, அவ்வாறு வந்தது நாரத மகரிஷியே என்பதை அவரே சிவபெருமானிடம் கூறியதைக் கேட்டுள்ளோம் நாம் என்பதை இங்கு நினைவுபடுத்துகிறேன்). எது எப்படியானாலும் அசோக் ஒரு தெய்வப்பிறவி என்பதில் சந்தேகமில்லை எனவும் பாகவதர் கூறுகிறார்.

வேம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவர் பெண்ணின் திருமணத்துக்காக வரும் ஜாதகங்களை அவர் குடும்பம் ஆய்வு செய்கிறது. ஒவ்வொரு ஜாதகமாக ஆராயப்பட்டு ஒவ்வொரு காரணத்துக்காக ரிஜக்ட் செய்யப்படுகிறது. ஐயர்களுக்கும் பிரிவுகளான வடமா, பிருகசரணம், அஷ்ட சஹஸ்ரம் மற்றும் வாத்திமா பிரிவுகள் எவ்வாறு உண்டாயின என சோ அவர்கள் விளக்குகிறார்.

வழியில் பாகவதரை சந்தித்த நீலகண்டனின் மனைவி பர்வதம் அவரை தன் வீட்டிற்கு வருமாறு அழைக்க அவரும் வருகிறார். நீலகண்டன் பாகவதர் பற்றி பல கடுமையான சொற்கள் கூறியதற்கு பர்வதம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்க, பாகவதர் அதையெல்லாம் தான் மனதில் வைத்து கொள்ளவில்லை எனக் கூறிவிடுகிறார். தன் கணவன் இம்மாதிரி நாத்திகனாக இருப்பதற்காக வருந்தும் பர்வதத்திடம் பாகவதர் நாத்திக வாதம் என்பது அனாதி காலமாக இருப்பதையும் கூறுகிறார்.

சோ அவர்களும் இதை தன் நண்பரிடம் உறுதிபடுத்துகிறார். ஜாபாலி முனிவர் பேசிய சார்வாக வாதங்கள் மிகக்கடுமையாகவே ஆத்திகரை சாடியதை அவர் எடுத்து கூருகிறார். ஆக இவையெல்லாம் ஏற்கனவேயே இருந்து வரும் வாதங்களே, இவற்றையெல்லாம் எந்த பகுத்தறிவு வாதியும் கண்டு பிடிக்கவில்லை என்றும் கூறுகிறார்.

பகுதி - 52 (15.04.2009):
பாகவதர் மற்றும் பர்வதத்தின் பேச்சு தொடர்கிறது. துர்யோதனாதிகள் எல்லா யுகங்களில்மே இருந்து வந்துள்ளனர். ஆண்டவன் அருள் அவர்களுக்கு கிடைக்க அவர்களுக்கு கொடுத்து வைக்கவில்லை. ஆண்டவனது அருளை அவர்கள் பார்க்க மறுப்பதில் கடவுளின் குற்றமேதும் இல்லை எனவும் பாகவதர் கூறுகிறார். அதே நேரத்தில் விஞ்ஞானம் என்ற பெயரில் என்ன கூறினாலும் அதே பகுத்தறிவுவாதிகள் நம்பத் தயாராக இருந்துள்ளனர் என்றும் பாகவதர் கூறுகிறார்.

இப்போது சீனில் வரும் சோ பாகவதர் கூறியதை உறுதிப்படுத்துகிறார். அமெரிக்கா சந்திரனில் மனிதனை இறக்கியது குறித்து பல புத்திசாலித்தனமான கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கு பதில்களும் அளிக்கப்பட்டன என்பது வேறு விஷயம், ஆனால் அதே சமயம் விஞ்ஞானம் என மயங்காது கேள்வி கேட்பதற்கே மிகுந்த பகுத்தறிவு தேவைப்படும் என்றும், அவ்வாறு கேள்வி கேட்டவர்களில் நமது பகுத்தறிவுவாதிகள் யாரும் இல்லையெனவும் சோ சுட்டிக்காட்டினார். விஞ்ஞானம் பற்றி ஒன்றும் தெரியாது, ஆனால் அது சொல்வதை நம்புகிறார்கள். அதே சமயம் ஜோசியம் பற்றியும் ஒன்றும் தெரியாது, இருந்தாலும் அதை நம்ப மாட்டேன் என்பது என்ன பகுத்தறிவுவாதம் எனவும் சோ கேட்கிறார். ஆனால் இந்து மதத்தில் எல்லாமே கேள்விகள் ரூபத்திலேயே வருகின்றன. அருச்சுனனே கிருஷ்ணனிடம் பெரிய வார்த்தைகள் எல்லாம் போட்டு தன்னை குழப்ப வேண்டாம் என கூறிவிடுகிறான் என்பதையும் சோ கூறுகிறார்.

சீன் மீண்டும் நீலகண்டன் வீட்டுக்கு செல்கிறது. பகவானே சங்கு சக்கிரம் ஏற்று வந்தால்தான் தன் கணவர் நம்புவாரா என பர்வதம் கேட்க, கொள்ளைக்காரனாக இருந்த வேடனே பிற்காலத்தில் வால்மீகியாக மாறியது போல நீலகண்டனும் மாறுவார் என தனது நம்பிக்கையை பாகவதர் தெரிவிக்கிறார்.

சாம்பு சாஸ்திரிகள் வீட்டில் அவரும் அவர் மனைவியும் வேம்பு சாஸ்திரிகளும் இந்த கர்மபூமியாம் பாரதவர்ஷத்தை விட்டு செல்ல தமக்கு மனமில்லை என்பதை பல உதாரணங்களுடன் விளக்குகின்றனர். அதுவும் தாங்கள் குடியிருக்கும் திருமயிலையின் பெருமைகளை ஒவ்வொருவராக கூறுகின்றனர். ஏதோ கச்சேரியில் தனி ஆவர்த்தனம் பார்த்து, கேட்ட எஃபெக்ட்.

சோ அவர்களும் தன் பங்குக்கு இந்த மயிலையில் திருஞான சம்பந்தர் நிகழ்த்திய அற்புதம் பற்றி பேசுகிறார். அரவம் தீண்டியதால் மரணமுற்ற பூம்பாவாய் என்னும் பெண்ணை உயிர்ப்பிக்க அவர் பாடிய பாசுரங்களில் ஒன்றை இங்கு கூறுகிறார்.

மட்டிட்ட புன்னையங் கானன் மடமயிலைக்
கட்டிட்டங் கொண்டான் கபாலீச் சரமமர்ந்தான்
ஒட்டிட்ட பண்பி னுருத்திர பல்கணத்தார்க்
கட்டிட்டல் காணாதே போதியோ பூம்பாவாய்.

அசோக் காதில் ஒரு பசுமாடு கத்தும் ஒலி கேட்டு கீழே ஓடி வருகிறான். தெருவில் ஒருவன் பசு ஒன்றை கயிற்றால் கட்டி அழைத்து சென்று கொண்டிருக்கிறான். பசுவைப் பார்த்து அசோக் குழப்பத்துடன் கேட்கிறான், “நீ நந்தினிதானே” என்று. மாட்டுக்காரன் திகைக்கிறான். இந்த நிகழ்ச்சியை பார்த்த சமையற்கார மாமி பதறிப்போய் நாதன் மற்றும் வசுமதியிடம் இது பற்றி கூற, அவர்கள் அசோக்கை இது சம்பந்தமாக கேட்கின்றனர். அவனோ தான் பசுவிடம் கேள்வி கேட்டதை உறுதி செய்கிறான். அவள் நந்தினியா என தான் கேட்டதாகவும் கூறிவிட்டு, அவள் நந்தினியாக இருந்திருந்தால் தன்னிடம் பேசியிருப்பாள் எனவும் சொல்கிறான். “யார் அந்த நந்தினி, உன் சினேகிதியா” என நாதன் கேட்க, இவனுக்கு ஃப்ரெண்டே கிடையாது, இதிலே கேர்ள் ஃபிரெண்ட் என்ங்கேயிருந்து வந்தா என வசுமதி நொடிக்க, அசோக்கோ அஷ்டவசுக்கள் பற்றி ஏதோ முணுமுணுக்கிறான்.

“யார் சார் அஷ்டவசுக்கள், ஒரே கஷ்டமா இருக்கே எனக் கூறுகிறார்”? என சோவின் நண்பர் கேட்கிறார்.

பகுதி - 53 (15.04.2009):
உண்மை கூறப்போனால் கஷ்டம் தீரத்தான் வசுக்களை பிரார்த்திக்கிறார்கள் என சோ புன்னகையுடன் பதிலளிக்கிறார். மேலும் கூறுவதாவது. தட்சனின் மகள் வசு தர்மதேவதையை மணக்கிறாள். அவளுக்கு எட்டு பிள்ளைகள். அவர்களுக்கு அஷ்டவசுக்கள் என பெயர். வசிஷ்டரிடம் காததேனுவை நிகர்த்த பசு ஒன்று இருந்தது. அதற்கு பெயர் சுரபி அல்லது நந்தினி. அப்பசுவை அஷ்டவசுக்கள் திருட அவர்களுக்கு மானிட உலகில் பிறக்கும்படி சாபம் வர, அவர்களில் ஒருவரான பிரபாசன் என்பவர் மட்டுமே பீஷ்மராக நீண்ட காலம் பூமியில் இருந்தது பற்றி சுருக்கமாகக் கூறுகிறார். (இதே நந்தினியை வைத்துத்தான் கௌசிகன் என்னும் அரசனுக்கும் வசிஷ்டருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அரசன் தாக்க அவன் நந்தினி மற்றும் வசிஷ்டரால் அனாயாசமாக முறியடிக்கப்பட, தானும் பிரும்மரிஷி ஆக நிச்சயித்து பல சறுக்கல்களுக்கு பிறகு அதே அரசனான கௌசிகன் பிரும்மரிஷி விஸ்வாமித்திரராக ஆவதையும் இங்கு சோ கூறுகிறார்).

இங்கு நாதனிடம் அசோக் அதே கதையை (அஷ்டவசுக்கள் நந்தினியைத் திருடியது) உணர்ச்சியுடன் கூறும்போது பாதியில் உணர்ச்சி பிரவாகத்தில் மூழ்கி, அதைத் தாங்காமல் மயக்கம் அடைகிறான்.

நீலகண்டன் வீட்டில் பர்வதம் தன் மகன் ராம்ஜியிடம் பாகவதர் தங்கள் வீட்டுக்கு வந்து போனதை கூறவேண்டாம் என கேட்டுகொள்ள, அவனும் அப்பா வரும் நேரத்தில் இருக்கவேண்டாம் என வெளியில் செல்ல முயல வசமாக நீலகண்டனிடம் மாட்டி கொள்கிறான். கடைசியில் பார்த்தால் நீலகண்டனுக்கு ஏற்கனவேயே விஷயம் நாதன் மூலமாக தெரிந்திருக்கிறது. சுவாரசியமான சண்டையாக உருவெடுக்கும், வேடிக்கை பார்க்கலாம் என ஆவலுடன் காத்திருந்த உமா செல்லமாக இது சம்பந்தமாக தனது ஏமாற்றத்தைத் தெரிவிக்கிறாள்).

பாகவதர், வால்மீகி முதலில் கொள்ளையராக இருந்து பிறகு மகரிஷியானதாகச் சொன்ன கதையைச் சொன்னது பற்றி பர்வதத்தின் வாயால் கூறக்கேட்டு, நீலகண்டனுக்கு கோபம் தலைக்கேறுகிறது. அப்போ தான் தற்சமயம் கொள்ளைக்காரனா என ஆவேசப்படுகிறார். “கொஞ்ச நாள் பொறுத்துக்கோங்கோன்னா, நீங்க வால்மீகியா மாறி ராமாயணம் போன்ற காவியம் எழுதுவேள்” என பர்வதம் கூறி அவரை இன்னும் டென்ஷனாக்குகிறாள். நமக்கோ டென்ஷன் குறைந்து சற்றே புன்னகையை வரவழைத்த இடம் இது.

கிருபா வீட்டிற்கு வரும் வேம்பு சாஸ்திரிகள் கிருபாவின் ஆஃபீசிலேயே வேலை செய்யும் கிரி என்பவனை பற்றி விசாரிக்கிறார். தன் மகள் ஜயந்திக்கு அவனைப் பார்க்க இருப்பதாகக் கூற, கிருபா அவனுக்கு முழு சிபாரிசு செய்கிறான். ஜயந்திக்கு மிகவும் பொருத்தமானவன் என்று வேறு கூறுகிறான். தான் வந்து கிரியை பற்றி விசாரித்த விஷயத்தை அவனிடம் கூற வேண்டாம் என வேம்பு சாஸ்திரிகள் கிருபாவை வேண்டி கொள்ள, அவன் சிரித்து கொண்டே அப்படியே கூறினாலும் வேம்பு அவர்கள் வீட்டு மாப்பிள்ளையாவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றுதான் தான் கிரியிடம் கூறப்போவதாக சொல்கிறான்.

அசோக் தூங்கி கொண்டிருக்க, உபநிஷதம், புராணங்கள், வாசிஷ்ட யோகம் போன்ற அவனது பலபுத்தகங்களை வசுமதி வெளியில் தூக்கி எறிகிறாள். அவற்றாலேயே அவன் கெட்டுப் போவதாக எண்ணி அவள் கோபப்பட்டதால் வந்த விளைவு அது. அசோக் அதற்காக அவளிடம் வாக்குவாதம் செய்கிறான். எப்படி அதிக பணம் உள்ளது லட்சுமி கடாட்சம் எனக் கருதப்படுகிரதோ, அதே போல இந்த புத்தகங்கள் எல்லாம் சரஸ்வதி கடாட்சம் எனக் கூறுகிறான். பிறகு புத்தகங்களை திரும்ப எடுத்து செல்கிறான். வசுமதியும் அவனுக்கு உதவி செய்கிறாள்.

எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 17.04.2009

இஸ்ரவேல் உருவான கதை:
இது சம்பந்தமாக வாஞ்சூர் என்பவர் பா.ராகவனின் “நிலமெல்லாம் ரத்தம்” என்னும் புத்தகத்திலிருந்து தனது வலைப்பூவில் மெனக்கெட்டு அத்தனை அத்தியாயங்களையும் நகலெடுத்து ஒட்டியுள்ளார். ஆனால் வேறொன்றுமே செய்யவில்லை. அதாவது தனது கருத்தை எங்குமே கூறவில்லை. அதிலும் முக்கியமாக தம் தரப்புக்கு சங்கடம் வரும் விஷயங்களுக்கு இடிபோன்ற மௌனமே அவரது பதில். இந்த வரிசையில் அவரது கடைசி இடுகைக்கு நான் இட்ட இப்பின்னூட்டம் இதோ.

“பொறுமையாக எல்லா பதிவுகளையும் நகலெடுத்து ஒட்டியுள்ளீர்கள். அந்த பொறுமைக்கு பாராட்டு. ஆனால் அத்துடன் போதும் என இருந்து விட்டீர்களா? பலவிஷயங்களுக்கு உங்களது எதிர்வினையை எதிர்பார்த்து ஏமாந்தேன். முக்கியமாக கீழ்க்கண்டவற்றுக்கு:

1. 1948-ல் இரு தேசங்கள் உருவாக ஐ.நா. சபை வழிவகுத்தது. ஆனால் அவற்றில் இஸ்ரேல் மட்டுமே செயல்படத் துவங்கியது. பாலஸ்தீனம் செயல்படவில்லை என்பதற்கும் மேல், இஸ்ரவேலர்களை ஒழிக்கப் போவதாக அரபு தேசங்கள் தந்த பொய் உறுதிகளை நம்பி இருந்த பிரதேசங்களையும் எகிப்திடமும் ஜோர்டனிடமும் கோட்டை விட்டதுதானே நடந்தது? இதில் ஜோர்டானும் எகிப்தும் கௌரவமான முறையில் நடந்து கொண்டதாக நம்புகிறீர்களா?
2. ஜெரூசலத்தில் யூதர்களின் அழுகைச்சுவரை 1967 வரை ஜோர்டான் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்தது.
3. பாலஸ்தீனர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் அராஃபாத்தின் விதவையிடம் போய் மாட்டிக் கொண்டது”.

பின்னூட்டத்தை அவர் அனுமதிப்பார் என்றே நினைக்கிறேன்.

பாரா அவர்களிடம் இத்தொடர் சம்பந்தமாக நான் 2005-ல் பேசியபோது ஒரு விஷயத்தை தெளிவுபடுத்தினேன். அதாவது, நான் ஒரு தீவிர இஸ்ரவேல ஆதரவாளன். ஆகவே அவர் தொடரில் வரும் தகவல் பிழைகளை கண்ணில் எண்ணெய் விட்டு பார்ப்பேன் என்பதே அது. அவ்வாறே அவதானித்து அவ்வப்போது பின்னூட்டங்களும் இட்டேன்.

2. அய்யா, அம்மா, அப்பப்பா:
சமீபத்தில் எண்பதுகளின் துவக்கத்தில் காத்தாடி ராமமூர்த்தி குழுவினரால் இந்த நாடகம் மேடையேற்றப்பட்டது. எதிர்ப்பார்க்கும் அளவிற்கு நல்ல காமெடி. இருப்பினும் இந்த பஞ்சாமிர்தத்தில் அதன் ஒரு பகுதியையே வலியுறுத்துவேன். நான் இட்ட அந்த நாளும் வந்திடாதோ என்னும் பதிவுக்கு ஆதாரங்கள் இந்த நாடகத்திலும் உள்ளன. நாடகத்தில் காத்தாடி ராமமூர்த்தி ஒரு கவலையில்லாத பிரும்மச்சாரியாக அறிமுகமாகிறார். அவரது நண்பர் டில்லி கணேஷ். தனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை என்ற ஏக்கத்தில் அவர் பல கஷ்டங்கள் பட்டு திருமணம் செய்து கொள்கிறார். புதிதாக வந்த மனைவியோ அவரது சுதந்திரங்களுக்கு தடை போடுகிறார். தனது அன்னையை வீட்டுக்கு வரவழைத்து மாமியார் மருமகள் சண்டையில் தன்னை கவனிக்காது சுதந்திரமாக இருக்க விடுவார்கள் என நம்பி அவ்வாறே செய்ய, அவர்கள் இருவரும் அனியாயத்துக்கு சேர்ந்து இழைந்து இவரை இன்னும் கட்டுப்படுத்த நொந்து போகிறார். திடீரென எதிர்பாராத தருணத்தில் நிஜமாகவே சண்டை வந்து அவர்கள் இருவருமே காத்தாடியை திராட்டில் விட்டு செல்கின்றனர். தான் ஜாலியாக பழையபடி பிரும்மச்சாரி வாழ்க்கையையே வாழ்லாம் என நினைத்து அவர் செய்யும் ஒவ்வொரு விஷயமும் அவருக்கெதிராக முடிந்து அவர் திண்டாடுகிறார். மீதி கதை இங்கு தேவையில்லை. நான் கூறவந்தது என்னவென்றால், எதையுமே பழைய நிலைக்கு கொண்டு செல்ல இயலாது என்பதே.

விஞ்ஞானத்தால் வாழ்க்கை அவசரமயமானது என்று சொல்பவர்கள் அதனால் விளைந்த கண்டுபிடிப்புகளின் துணையின்றி ஒரு நாள்கூட தாக்கு பிடிக்கவியலாது என்பதே நிஜம். இணையத்திலிருந்து விடுதலை பெர விரும்பி கிராமங்களுக்கு சென்றாலும் தமிழ்மணம் பார்க்காமல் விரல்கள் நடுங்கி அருகில் உள்ள சைபர் கஃபேக்கு படையெடுப்பதே நடக்கிறது.

சேனல்கள் செய்யும் கூத்து:
விடுமுறைகள் வந்தாலே கடுப்பாக இருக்கிறது. அவை வருவதற்கு சில நாட்களுக்கு முன்பிலிருந்தே ப்ரொக்ராம் ப்ரமோஷன்கள் நம்ம அறைகளில் உயர் டெசிபல்களில் அலறல்களை உருவாக்குகின்றன. நாம் பார்க்கும் ரெகுலர் நிகழ்ச்சிகள் காலணா பிரயோசனம் இல்லாத திரைப்படங்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல நேற்று (16.04.2009) ஜெயா டிவியில் இரவு எட்டு மணிக்கு ஒளிபரப்பாகவிருந்த “எங்கே பிராமணன்” நிகழ்ச்சிக்கு பதிலாக அதிமுகவின் எலெக்‌ஷன் பிரசார ஆரம்ப நிகழ்ச்சியின் லைவ் ரிலே காட்டப்பட்டது. நறநற.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/16/2009

டோண்டு பதில்கள் 16.04.2009

சங்கர பாண்டிய ராசா:
1. புலிகளுக்கு பின் இலங்கை பிரச்சனை சரியாகி விடுமா?
பதில்: ஆட்டமேட்டிக்காகவெல்லாம் சரியாகி விடாது. அதற்கெல்லாம் நிறையவே பாடுபட வேண்டியிருக்கும். ஆனால் அதே சமயம் புலிகள் ஆட்டம் போடும் நிலை அப்படியே இருந்தால் நிலைமை சரியாக ஆகவே ஆகாது என்று மட்டும் கூறவியலும்.

2. இலங்கை பிரச்சனை முக்கியமான தேர்தல் பிரச்சனையா?
பதில்: இப்போது வரும் லோக்சபா தேர்தலில் அது முக்கிய பிரச்சினை இல்லைதான். ஆனால் வெளிப்படையாக அதை கூறமாட்டார்கள்.

3.பிரபாகரனின் உற்ற சகாக்கள் பல பேரை இலங்கை ராணுவம் அழித்து விட்டதே, இனி புலிகள் தலை எடுப்பது சாத்தியமா?
பதில்: இம்மாதிரி பல தோல்விகளை புலிகள் சந்தித்துள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் மீண்டும் தலையெடுத்துள்ளனர். இம்முறை எப்படி எனத் தெரியவில்லை. காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

4. அமெரிக்காவில் சூப்பராக செட்டில் ஆனவர்கள் ஆன NRIகள் இந்தியாவை திட்டுவதே வேலையாக வைத்து இருக்கிறார்களே ( உதா- xxxx) இவர்கள் ஏதாவது மன நோயால் பாதிக்கபட்டு உள்ளனரா?
பதில்: பெயரெல்லாம் வேண்டாமே. நீங்கள் குறிப்பிடுபவர் யார் என்றுகூட எனக்கு தெரியாது. ஆகவே பொதுவாகவே பதிலளிக்கிறேன். இப்போதிருக்கும் நிலையில் யாருமே சூப்பராக செட்டில் ஆனவர்கள் எனக்கூறவியலாது. அப்புறம் என்ன இந்தியாவை திட்டுவது?

5. கருணாநிதிக்கு பார்பனர் ஓட்டு இந்த தேர்தலிலாவது விழுமா?
பதில்: தெரியாது, ஆனால் நான் திமுகவுக்கு ஓட்டு போட மாட்டேன்.

அனானி அனுப்பிய அந்துமணி கேள்விகள்:
1. முன்பெல்லாம் பயணம், யாத்திரை போகிறவர்கள், தாகம் தீர்க்க கையோடு ஒரு கூஜாவில் தண்ணீர் கொண்டு போவர்... இப்போது யாரும் கூஜா பயன்படுத்துவது இல்லையே, ஏன்?
பதில்: காலத்தின் கோலம். முன்பெல்லாம் சாதாரணமாக வெளியில் சாப்பிட மாட்டார்கள். பிரயாணம் முழுதுக்கும் கட்டுச்சாதம் எடுத்து செல்வர். தண்ணீரும் அப்படித்தான். பிரயாணங்களும் அவ்வளவு சுலபத்தில் மேற்கொள்ள மாட்டார்கள். இப்போது எல்லாமே மாறிவிட்டன. பயணச்சீட்டுகளை வீட்டிலிருந்தே ஆன்லைனில் பெற்று கொள்ளலாம். நல்ல தண்ணீர், சாப்பாடு எல்லாம் வழியிலேயே வாங்கி கொள்ளலாம். யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள் வேறு வந்து விட்டன. பிறகு ஏன் இந்த அலம்பல்கள் எல்லாம்?

2. முன்பெல்லாம் எழுத்தாளர், கவிஞர் என்றால், அவர்கள் ஜிப்பாதான் அணிவர்; இப்போது ஜிப்பா அணிவதில்லையே, ஏன்?
பதில்: இப்போதெல்லாம் ஜீன்ஸ் அணிகின்றனர். தோளில் அழுக்காக ஒரு ஜோல்னாப்பை இருக்கிறது. ஆனால் சில கவிஞர்கள் ட்ரிம்மாக விளம்பர மாடல்கள் போல உள்ளனர், பதிவர் வளர்மதி போல.

3. முன்பெல்லாம், "பாத்திரத்திற்கு பெயர் வெட்டறது...' என்று கூவியபடி ஒருவர் தெருவுக்குத் தெரு வருவார்; இப்போது அப்படி யாரையும் காணோமே, ஏன்?
பதில்: அவர் மட்டும்தானா, இன்னும் பல தெருவியாபாரிகளை காணவில்லைதான். சமீபத்தில் 1950-களில் “ஊஊ” என கத்திய வண்ணம் ஒருவர் வருவார். அது “பெருகூ” என்ற கன்னடச் சொல்லாம். அப்படி என்றால் தயிர் எனப் பொருளாம். சமீபத்தில் 1957-ல் விகடனில் டாக்டர் கீதா என்னும் தலைப்பில் சித்திரக்கதை வந்தது. அதில் வரும் கிராமத்தார் அப்பளக்குடுமியார் சாட்டை என்பவர் திண்ணையில் படுத்துறங்க விடியர்காலையில் ஊஊ என கத்திக்கொண்டே தயிர்க்காரன் செல்ல, ஐயோ செத்தேன் என படுக்கையை சுருட்டிக் கொண்டு சட்டை திண்ணையிலிருந்து ரேழிக்கு வருவதைக் கண்டு அக்காலக்கட்டத்தில் வயிறு நோவ சிரித்திருக்கிறேன். இப்போது திண்ணை ஏது, ரேழி ஏது? எல்லாம் காலவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. அவையெல்லாம் இன்னும் பசுமையாக எனது நினைவில் உள்ளதால்தான் சமீபத்தில் 1957-ல் என்றெல்லாம் போட்டு திரிகிறேன் என்பதைக் கூறவும் வேண்டுமோ?

4. முன்பெல்லாம் ஒவ்வொரு ஆரம்பப்பள்ளிக்கூட வாசலிலும் ஒரு கிழவி, அழுகியும், அழுகாத சின்னச் சின்ன மாம்பழங்களை வைத்து, ஈ ஓட்டிக் கொண்டே விற்றுக் கொண்டிருப்பாளே... அந்த மாதிரி கிழவிகளே இப்போது காணோமே, ஏன்?
பதில்: எனது குடும்ப நண்பரின் மனைவி ஆசிரியையாக நங்கநல்லூர் மாடர்ன் பள்ளியில் பணிபுரிகிறார். அவருக்கு போன் போட்டு கேட்டேன். இப்போதெல்லாம் இடைவேளைகளில் பள்ளி கேட்டுகளை பூட்டியே வைக்கிறார்களாம். வீட்டுக்கு போய் சாப்பிட்டு வருவது டிஸ்கரேஜ் செய்யப்படுகிறது என அறிகிறேன். அதே சமயம் கார்ப்பரேஷன் மற்றும் அரசு பள்ளிகளில் என்னமோ அதே நிலைதான் என அம்மாதிரி ஒரு பள்ளியிலிருந்து போன ஆண்டுதான் ப்ளஸ் 2 தேர்வு பெற்று சென்ற ஒரு மாணவி கூறுகிறார். எது எப்படியானாலும் சுகாதாரக் குறைவான அக்கடைகள் இல்லாதிருப்பதே நலம்.

5. முன்பெல்லாம் திருமணம் போன்ற விழாக்களுக்கு பெரியவர்கள் வரும் போது, பட்டு சரிகை வைத்த அங்கவஸ்திரம் போட்டு வருவர்; இப்போது அப்படி யாரும் அணிந்து வருவதில்லையே, ஏன்?
வேட்டி திடீரென அவிழும் அபாயம் இருக்கிறதே, ஏனெனில் பழக்கம் விட்டுவிட்டதல்லவா? ஆகவே நான் நினைக்கிறேன், ப. சிதம்பரம் தவிர யாருமே வேட்டி அணிந்து வருவதில்லை என.

6. முன்பெல்லாம் சாயங்கால வேளையில் வீட்டு வெளிச் சுவரில் உள்ள மாடத்தில் விளக்கேற்றி வைப்பர்; இப்போது செய்வதில்லையே, ஏன்?
பதில்: அம்மாதிரி இப்போதெல்லாம் விளக்கு ஏற்றி வைத்தால் அவை அரைமணிக்குள் திருட்டு போய்விடும் அபாயம் உண்டு. பை தி வே முதற்கண் மாடங்கள் எங்கே?

7. முன்பெல்லாம் சினிமாவில் கதாநாயகனும், வில்லனும் சண்டை போட, முடிவில் ஜீப்பில் போலீஸ் வந்து திபுதிபுவென்று இறங்குவரே... இப்போது அப்படி வருவதில்லையே, ஏன்?
பதில்: பலபடங்களில் இம்மாதிரி காட்சிகளையே பார்த்து மக்கள் மனம் நொந்த நிலையில் கடைசியாக ஒரு டைரக்டர் அம்மாதிரி காட்சியை வைத்து பார்வையாளர்களால் நையப்புடைக்கப்பட்டதாக நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன. அதிலிருந்து இக்காட்சிக்கு தடா என அறிவிக்கப்பட்டுள்ள ரேஞ்சுக்கு விஷயம் இருக்கிறது என்றும் அதே நம்பத்தகாத வட்டாரங்கள் கூறுகின்றன.

சேதுராமன்:
1. வாதி, பிரதிவாதி இருவருக்கும் வழக்குகளில் ஆஜராக முடியாதென்ற அடிப்படை கொள்கை கூடத் தெரியாத அஞ்சலியை எப்படி முதலில் நியமித்தார்கள்?
பதில்: ரொம்பவும் மோசமாகத்தான் இருக்கிறது வக்கீல்களின் சட்ட அறிவு. இப்போது வரும் சில கதைகளில் கோர்ட்டு சீன்கள் வரும். அதிலுள்ளது போல பிராசிக்யூட்டரோ டிஃபன்ஸ் தரப்பு வக்கீலோ நடந்து கொண்டால் சன்னது பிடுங்கப்படுவது உறுதி என நான் படித்தது நினைவுக்கு வருகிறது.

2. செருப்பு எறியும் பண்பு இந்தியக் கலாசாரத்திலும் அதுவும் தேசீய காங்கிரஸ் சூரத் கூட்டத்திலும், இருந்திருக்கிறது என்பதைப் படித்தீர்களா? (எஸ்.முத்தையா ஹிந்துவில் திங்கள் தோறும் எழுதும் மதராஸ் மிஸ்செல்லனி 13-4-09)
பதில்: சூரத் கூட்டத்தில்தான் காங்கிரஸ் இரண்டாக பிளந்தது என கேள்விப்பட்டேன். இதற்கு அக்காலம் என்ன, இக்காலம் என்ன. மனிதர்கள் எப்போதுமே ஒரே மாதிரித்தான் இருந்து வந்துள்ளனர். பை தி வே நீங்கள் சொல்லித்தான் முத்தையாவின் அக்கட்டுரையை தேடி படித்தேன். உங்களுக்கு என் நன்றி.

3. அத்வானி, மன்மோஹன் பேச்சுக்கள் இடையே ராஹுல் புகுந்து தனது ரத்தினக் கருத்துக்களைத் தெரிவிப்பது சரியா? இதில் இவர் வருங்கால பிரதமர் என்று வேறு கூறிக்கொள்கிறார்கள்?
பதில்: தேர்தல் பரபரப்பில் அப்படித்தான் பேச்சுகள் இருக்கும் கண்டுக்கப்படாது.

வெங்கி என்னும் பாபா:
1) தமிழ்நாடு கேரளா தவிர மற்ற அனைத்து மாநிலங்களிலும் பாஜகா- வுக்கு நல்ல ஓட்டு வங்கி தற்பொழுது உள்ளது. இந்திய அளவிலான கூட்டணியிலும் காங்கிரசை விட பாஜகா முந்துகிறது. ஒருவேளை பாஜகா ஆட்சி அமைத்தால் அந்த ஆட்சி, இந்தியா இதுவரை கண்ட ஆட்சிகளை விட ஒரு சிறந்த ஆட்சியை அளிக்கும் என எதிர்பாக்கலாமா?
பதில்: ஜனநாயகம் சீராக செயல்பட ஆட்சி மாற்றங்கள் அவசியம். அப்படி பாஜக ஆட்சி அமைத்தால் முக்கியமாக பார்க்க வேண்டியது அதற்கு போதுமான பெரும்பான்மை இருக்கிறதா என்பதுதான். அது இல்லை என்றால் கூட்டணி கட்சிகளின் இழுப்புக்கு ஏற்றபடி ஆட வேண்டியிருக்கும். மக்கள் யாருக்கு ஓட்டு போட்டாலும் தொங்கும் பாராளுமன்றம் வராது பார்த்து கொள்ள வேண்டும். நமது கையில்தான் இப்போது எல்லாமே இருக்கிறது.

2) அனைத்து காங்கிரஸ்காரர்களும் இப்பொழுதும் எப்பொழுதும் (ஒரு 50 வருடங்களாக) ஒரு குடும்பத்தின் தலைமையையே சாடி இருந்திருகிறார்கள். இந்தியா சுதந்திர போராட்டத்தில் தொண்டாற்றி பல நல்ல தலைவர்களை கொண்டிருந்தவர்களுக்கு ஏன் இந்த நிலைமை?
பதில்: ஆனாலும் காங்கிரஸ் ஒரே ஒரு குடும்பத்தின் மேல் இவ்வளவு நம்பிக்கை வைப்பது அதற்கு நல்லதல்ல. போகிறபோக்கில் ஒசாமா பின் லேடனின் மகளை ராகுல் மணக்கிறார் என வைத்து கொண்டால், அப்பெண்ணும் பிற்காலத்தில் காங்கிரசின் பிரதம மந்திரி வேட்பாளராகிவிடலாம் போலிருக்கிறதே. இது என்னடா இந்தியாவுக்கு வந்த சோதனை?

3) என் நண்பன் ஈரோடு தொகுதியை சேர்ந்தவன். அத்தொகுதியில் காங்கிரஸ் மற்றும் மதிமுக இடையேதான் போட்டி நிலவுகிறது. பாஜக போட்டியிட்டாலும் அது டெபாசிட்கூட பெறாது என்று என் நண்பன் உறுதியாக கூறுகிறான். யாருக்கு ஓட்டுப் போடுவது என்று அவன் குழப்பத்தில் உள்ளான். இப்படி ஒரு சூழ்நிலையில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
பதில்: நான் வசிக்கும் தொகுதியில் பாஜக நின்றால் அதற்குத்தான் எனது ஓட்டு. நமது ஓட்டை ஜெயிக்கும் கட்சிக்குத்தான் போட வேண்டும் என்று நினைத்தால் அது முட்டள்தானம். நாம் மந்தையில் இருக்கும் ஆடுகள் இல்லையே. நம் கடமையை நாம் செய்வோம், மீதி ஆண்டவன் விட்ட வழி.


மீண்டும் அடுத்த வாரம் சந்திப்போமா?

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/14/2009

மோடி மாதிரியான தலைவர்தான் நாட்டுக்கு தேவை - அவர் தில்லிக்கு வருவாரா?

நண்பர் சந்திரசேகர் எனக்கு மோடியின் இந்த நேர்காணலை மின்னஞ்சல் செய்துள்ளார். பார்க்க நம்ம நரேந்திர மோடியுடன் ஒரு நேர்காணல். சந்திரசேகரனுக்கு மிக்க நன்றி. முதலில் நேர்காணலுக்கு செல்வோம். பிறகு இருக்கவே இருக்கிறது டோண்டு ராகவன் கருத்து கூறுவது. கேள்விகள் தடித்த சாய்வெழுத்துகளில் உள்ளன.

வழக்கம்போல இப்பதிவை முதலில் எனது ஆங்கில வலைப்பூவில் இட்டுள்ளேன்.

இப்போது நேர்காணல். அதற்கு முன்னால் ஒரு சிறு அறிமுகம்.

இன்னும் எவ்வளவு காலம்தான் மோடி குஜராத்திலேயே இருப்பார்? பிரதமராக ஆகும் ஆசை அவருக்கில்லையா? பாஜக கூட்டணி பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால், அவர் மத்திய அரசில் பங்கு பெறுவாரா? 2002-ல் குஜராத்தை உலுக்கிய இசுலாமியர் எதிர்ப்புகளுக்கும் தீவிரவாதத்துக்கும் இடையே அவர் ஏதேனும் சம்பந்தத்தை உணர்கிறாரா?

Rediff.com சார்பாக சாய்சுரேஷ் சிவஸ்வாமியும் நிகில் லட்சுமணனும் மோடியை காந்திநகரில் அவரது அலுவலகத்தில் வைத்து நேர்காணல் செய்துள்ளனர். கீழே 70 நிமிடங்கள் நடந்த அதன் முதல் பகுதி தரப்பட்டுள்ளது.

மன்மோகன் சிங்கை விட அத்வானியே மேல் என எவ்வாறு நினைக்கிறீர்கள்?
இதற்கு பதில் மிகவும் எளிமையானது. மன்மோகன் சிங் ஒரு தலைவர் அல்ல. தான் தலைவர் அல்ல என்பதை அவரே ஒப்பு கொண்டுள்ளார். நாட்டை ஆள ஒரு தலைவரால்தான் முடியும், வெறும் ஏட்டறிவு பெற்றவர்களால் அது இயலாது. இந்திரா காந்தியின் படிப்பு என்பது சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்றாலும் அவர் ஒரு தலைவர். பி.வி நரசிம்மராவும் தலைவர். நாட்டின் நாடியை பிடித்து பார்க்க முடிந்தவர்கள் மட்டுமே நாட்டை ஆளவியலும்.
லால் பகதூர் சாஸ்திரியால் நாட்டின் நாடியை நன்றாகவே பிடித்து பார்ர்க முடிந்தது. ஆகவேதான் குறைந்த ஆண்டுகளே ஆண்டாலும் அவர் தனது முத்திரையை பதித்து செல்ல முடிந்தது. அடல் பிஹாரி வாஜ்பேயியும் அப்படித்தான். மொராஜி தேசாயையும் மறக்கவியலாது. சந்திரசேகர், ஏன் தேவகௌடா கூடத்தான் இதில் அடங்குவர். நல்ல வேளையாக ஐ.கே.குஜ்ராலே இவ்வாறெல்லாம் தன்னைப் பற்றி கூறிக்கொள்வதில்லை. மன்மோகன் சிங்கை எடுத்துக் கொண்டால், கடந்த ஐந்து ஆண்டுகளில் அவர் நாடு முழுவதுமாக ஒரு முறை கூட பயணம் செய்ததில்லை. அதே நேரத்தில் அத்வானி நாடு முழுவதையும் அறிந்தவர். அப்பழுக்கற்ற அரசியல்வாதி. அரசின் பல துறைகளில் மந்திரியாக இருந்து ஆட்சியனுபவம் பெற்றிருக்கிறார். மன்மோகனுக்கும் அத்வானிக்குமிடையில் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசங்கள் உண்டு.
அத்வானி படிப்படியாக வெவ்வேறு தளங்களில் செயல்பட்டு இப்போதைய நிலைக்கு வந்துள்ளவர்.

தற்சமயம் நாட்டில் 30 வயதுக்கும் குறைந்தவர்கள் 54 கோடி இருக்கின்றனர். அவர்களுக்கும் அத்வானிக்கும் ஒத்து போகுமா? அவர்களுக்கு நரேந்திர மோடி போன்ற தலைவர்தானே தேவை?
அப்படியே வயதை வைத்து பார்த்தாலும் அத்வானி மற்றும் மன்மோகன் சிங் இடையில் அப்படி ஒன்றும் பெரிய வேறுபாடு இல்லையே? மன்மோகன் சிங்கை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததற்கு நான் காங்கிரசுக்கு நன்றி கூறத்தான் வேண்டும். இப்போது மக்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். மூன்றாவதாக ஒரு தெரிவு வர இடம் இல்லை. அப்போது வயது ஒரு காரணியாக இருக்க முடியாது அல்லவா. இருவருமே வயதானவர்கள்தானே. என்ன பிரச்சினை?

நாட்டின் வருங்கால பிரதமராக உங்களை பலர் குறிப்பிடுகிறார்கள். அது பற்றி உங்கள் கருத்து என்ன?
அப்படி யாரும் என்னிடம் சொல்லவில்லையே!

தொழிலதிர்பர்கள் உங்களை ஆதரித்து பேசியது...
அவர்கள் அறிக்கையை சரியாக படியுங்கள். யாரும் பிரதம மந்திரி என்றெல்லாம் சொல்லவில்லை.

rediff message board-களில் இந்திய அரசியல் பற்றி வரும் பல மன்ற இடுகைகளில் குறைந்த பட்சமாக 50 சதவிகித வாசகர்கள் நரேந்திர மோடி நாட்டுக்கு பிரதமராவதுதான் முக்கியத் தேவை என்று கூறுகின்றனர்..
அப்படியா, ஏதேனும் குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இது நிகழ வேண்டும் என வைத்துள்ளார்களா? (சிரிக்கிறர்) அது பற்றியும் அவர்களிடம் கேளுங்களேன்.

காலம் உங்கள் கைகளில்தான் உள்ளது என்பது வெள்ளிடைமலை.
இல்லை, காலம் மக்கள் கைகளில்தான் உள்ளது.
எது எப்படியானாலும் இது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது. நான் போகும் இடங்களிலெல்லாம் அத்வானிஜிதான் அடுத்த பிரதம மந்திரி என்கிறேன். எல்லோருமே மகிழ்ச்சியாக கரவொலி எழுப்புகிறார்கள். இதுதான் எனக்கு கேட்கிறது.

தேசீய ஜனநாயக கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்றால் நீங்கள் ஏற்கப் போகும் பாத்திரம் என்ன?
நான் குஜராத்தின் முதல்வர். அப்பதவியிலிருந்து யாரும் என்னை தூக்க மாட்டார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் இன்னும் எவ்வளவு காலம்தான் குஜராத்திலேயே இருக்க போகிறீர்கள்? நீங்கள் ஏற்கனவே தில்லியில்தான் இருந்தீர்கள் அங்கிருந்துதானே குஜராத் சென்றீர்கள்...
இன்று மாலை எனக்கு என்ன நடக்கும் என்பது பற்றி கூட நான் கவலைப்பட்டதில்லை. நீங்கள் சொல்வதெல்லாம் எனது நிகழ்ச்சி நிரலில் இல்லை.

நாட்டின் முன்னேற்றத்தை பற்றி காட்டப்படும் போஸ்டர்களில் உங்கள் படம்தானே இருக்கிறது.
அதென்ன போஸ்டர்களில் என் படம் இருக்கிறது என்கிறீர்கள், எனக்கு புரியவில்லையே. நான் கூலிக்காரன் மாதிரி உழைக்கிறேன். நான் விளம்பர மாடல் இல்லை. தினமும் 24 மணி நேர வேலை. 15 நிமிடம் கூட விடுமுறை எடுத்து கொண்டது இல்லை.

இந்தியா பற்றி உங்கள் கனவு என்ன??
இப்போது உலகம் இருக்கும் நிலையில் இந்தியா சக்திமிக்க நாடாக உருவாகும் வாய்ப்புகள் அதிகம். இந்தியர்களாகிய நாம் எல்லோரும் ஒன்றாக உழைத்தால் இந்த 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவுக்கே உரியதாகும்

முன்னேற்றம் என்பது ஒட்டுமொத்தமாக வரவேண்டிய இயக்கம் என்பது எனது நம்பிக்கை. இந்தியாவின் 100 கோடி மக்களும் நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல விரும்ப வேண்டும். அதற்கான சூழலை நாம் உருவாக்க வேண்டும். ஊடகங்களும் இதில் தமது பங்கை ஆற்ற வேண்டும். அப்துல் கலாம் அவர்களும் முன்னேற்றத்தில் ஊடகங்களின் பங்கேற்பின் முக்கியத்துவம் பற்றி கூறியுள்ளார்.

மேலாண்மைக்காக உங்கள் மந்திரச்சொல் என்ன?
சொல்லப்போனால் நான் நிர்வாகி எல்லாம் இல்லை. நான் வெறுமனே ஒரு ஒருங்கிணைப்பாளன். சிறுவயதிலிருந்தே நான் ஆர்.எஸ்.எஸ்-ல் ஈடுபட்டவன். ஆகவே மனித வள்ம் என்றால் என்ன, அதன் பயன் என்ன, குழுக்களாக எப்படி செயல்படுவது என்னும் விஷயங்கள் பற்றி நான் அறிவேன். இதில்தான் நான் பயிற்சி பெற்றேன். ஆகவேதான் முதல்வராக அமர்ந்ததும் என்னால் வெற்றிக்கனியை ருசிக்க முடிந்தது..

இதற்கு முன்னால் ஒரு மாநிலத்தை நிர்வகிக்க எந்தவித அனுபவமும் இல்லாத நீங்கள் உங்கள் மாநிலத்தை நடத்தி சென்றவிதம் மற்ற எல்லா முதல்வர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக அமைந்து விட்டதே. எல்லோருமே இன்னொரு மோடியாக விரும்புகிறார்கள்.
அப்படியெல்லாம் நான் சொல்லிக்கொள்வதில்லை. நரேந்திர மோடியாகிய என்னை பொருத்தவரை அது எனது கடமை. குஜராத் மக்களுக்கு எனது சேவை அளிக்கப்பட வேண்டும் அவ்வளவே. இந்த முயற்சியில் நான் ஏதேனும் புதிதாகக் கற்க வேண்டுமென்றால் அதையும் செய்து விட்டு போகிறேன். நான் வெறும் மாணவன் மட்டுமே

நீங்கள் தினமும் அதிகாலையில் எழுந்து இணையத்தை மேய்ந்து அதில் உள்ள பத்திரிகைகளை படித்து, நாட்டில் என்னென்ன நடக்கிறது என்பதை கண்டு அதற்கேற்ப புதிது புதிதாக செயல்படுகிறீர்கள் என அறிகிறேன்...
உண்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் அரசியல் மாணாக்கன். ஆகவே இதெல்லாம் எனக்கு இயல்பாகவே வருகிறது. தில்லியில் பல ஆண்டுகள் இருந்த போதும் அதைத்தான் செய்தேன். எல்லா குஜராத்தி பத்திரிகைகளையும் இணையத்திலேயே மேய்ந்து விடுவேன். இப்போது குஜராத்துக்கு வந்ததும் தில்லி பேப்பர்களை படிக்கிறேன். அதற்காகத்தான் இணையத்தையே பாவிக்கிறேன்.

தகவலுக்கான பல வழிகள் ஒருவரிடம் இருக்கவேண்டும். அப்போதுதான் அவரால் அறிவார்ந்த முடிவுகள் எடுத்து, மக்களை வழிநடத்தவியலும், நிலைமையை அவதானிக்கவியலும். இதில் எனக்கு உதவி செய்வது இணையமே. மக்களுடன் எனக்கு தொடர்புகளை பெற்று தருகிறது. செல்பேசி எனக்கு தகவல்கள் தந்து மக்களுடன் என்னை இணைக்கிறது. ஆகவே என்னால் நல்ல முடிவுகள் எடுக்க முடிகிறது.

அரசியல் மாணாக்கராக வரப்போகும் தேர்தலை எவ்வாறு நோக்குகிறீர்கள்?
இதில் மூன்று குழுக்கள் உள்ளன. ஒன்று பாஜக தலைமையில் உள்ள தேசீய ஜனநாயக முன்னணி, இன்னொன்று காங்கிரசின் UPA. கடைசியாக இருப்பது UPA வை விட்டு விலகியவர்கள், இதுவரை ஒருவரையும் ஏற்று கொள்ளாதவர்கள், தங்களுக்கென்று எதையோ தேடுபவர்கள், அவரவர் பிரச்சினைகளுடன் உள்ளவர்கள் என பலர் கதம்பமாக ஒன்று சேர்ந்து அமைத்த மூன்றாம் அணி.
ஒரு பக்கம் குடும்ப அரசியல் செய்யும் காங்கிரசின் கொள்கையு, மற்றொரு பக்கம் பணபலமும் உள்ளன. இவற்றுக்கு மாற்றாக உள்ளது பாஜகவின் தேசீய கொள்கை. இது தவிர்க்க முடியாதது.
தேர்தல் நெருங்க நெருங்க சக்திகள் பிரியும், சில காங்கிரஸ் முகாமுக்கு, சில பாஜக தரப்புக்கு. மிஞ்சி இருப்பவை முக்கியம் அற்றவை. அவற்றால் ஒன்றும் நடக்காது.
நாட்டுக்கு பலமான அரசு தேவை. சக்திசாலியான, அனுபவம் மிக்க தலைவர் தேவை.
இக்காரணங்கள்... கூடவே இப்போதுள்ள அரசின் சொதப்பல்கள், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், பொய் வாக்குறுதிகள் ஆகியவையும் (கவனித்து முடிவு எடுக்கப்பட வேண்டியவை).
நாட்டின் எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறாமல் போனதை கூட புரிந்து கொள்ளலாம். ஆனால் நிறைவேறாத அரசின் வாக்குறுதிகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
முதலில் சொன்னார்கள், ஒன்றரை கோடி பேருக்கு வேலை தருவோம் என. இப்போதென்னவோ ஐந்து லட்சம் பேருக்கு வேலை பறிபோகப் போவதாக கூறுகின்றனர். என்ன ஒரு முரண்பாடு! இதுன் சாதாரண பொதுமக்களுக்கான அரசு என கூறுகின்றனர். ஆனால் விலையேற்றத்தை அவர்களால் தடுக்கவியலவில்லை. வாஜ்பேயியின் அரசு விலகியபோது வெங்காயம் கிலோ எட்டு ரூபாய்க்கு விற்றது. இப்போது அது 16 ரூஒபாய். எரிவாயு சிலிண்டரின் விலை அப்போது 270 ரூபாய்கள், இப்போது அதன் விலை 370 ரூபாய்கள். இப்போதைய அரசின் தோல்விகள் சாதாரண பொது மக்களை பாதிக்கின்றன.
பாதுகாப்பு இன்னொரு பிரச்சினை பாகிஸ்தான் முழுமையாகவே தாலிபான்வசம் செல்ல உள்ளது. கராச்சிக்கு அது வந்து விட்டது. ஆகவே நம் மக்களுக்கு பாதுகாப்பு குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து என்ன செய்வது? இது போல பல காரணங்கள் உள்ளன, UPA-வையோ மன்மோகன் சிங்கையோ நிராகரிக்க.

கூட்டணி கட்சிகள் மூலம் ஆட்சி என்பது இங்கு சீக்கிரம் முடிவுக்கு வருமா?
கூட்டணி ஆட்சிகள் தொடரும். ஆனால் அதிலும் தேசீய கட்சி வலுவுள்ளதாகவும் பிராந்திய கட்சிகள் அவ்வலுவுக்கு வலு சேர்ப்பதாகவும் இருத்தல் நல்லது. இதுதான் மிகச்சிறந்த படிவமாக இருக்கும்.
அம்மாதிரி படிவத்தைத்தான் அடல்ஜி தந்தார். முதலில் காபினெட்டில் கூடி விவாதித்து பிறகு முடிவெடுப்பதுதான் சிறந்த மாடல்.

ஆனால் குஜராத் மற்றும் உ.பி.யில் மட்டும் நிலையான ஒரு கட்சி ஆட்சிமுறை அமைந்தது?
அது வேறு, இது வேறு. பிரதேசம் சார்ந்த விருப்பங்கள் அங்கு ஆட்சி செய்கின்றன. தேசீய கட்சிகள் இதை உணர வேண்டும். எல்லோரையும் அரவணைத்து செல வேண்டும். அப்போதுதான் சிறு மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்படும்.

நமது ஜனநாயகத்தின் குறைபாடுகள் என நீங்கள் எதை கருதுகிறீர்கள், அதற்காக என்ன செய்ய வேண்டும்
சுதந்திரத்துக்கு பிறகு நாம் உரிமைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளோம். கடமைகளை அலட்சியப்படுத்துகிறோம். இதை நாம் மாற்றுவதே நல்லது.
குஜராத்தையே எடுத்து கொள்வோம். நான் அரசு-மக்கள் கூட்டுமுயற்சியை ஆதரிப்பவன். மழைநீர் சேமிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம். இம்மாதிரி முயற்சிகளில் பொது மக்களையும் ஈடுபடுத்துகிறேன். கோடிக்கணக்கானவர் சேர்ந்து செய்யும் இக்காரியத்தால் மழைநீர் சேமிப்பு திட்டம் வெற்றி பெற்றுள்ளது. மக்களின் கடமை உணர்ச்சிகளை தூண்டியுள்ளேன். இதையே நாடு முழுவதற்கும் நீட்டிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
வெறுமனே ஓட்டு போடுவது மட்டுமே ஜனநாயகம் என நாம் நினைக்கிறோம். ஒரு கட்சிக்கு ஓட்டு போட்டு ஐந்தாண்டு கால காண்ட்ராக்டில் அதனிடம் ஆட்சியை ஒப்படைக்கிறோம். ஐந்து ஆண்டுக்கு பிறகுதான் கணக்கு கேட்கிறோம். இம்முறையில் நாம் ஜனநாயகத்திடமிருந்து மிகக் குறைந்த அளவே பலன் பெறுகிறோம். அதற்கு மாறாக நாம் செய்யும் எல்லா விஷயங்களிலும் மக்களின் பங்கு இருக்க வேண்டும்.
ஒட்டு போட்டதும் மக்களும் அரசும் வேவ்வேறு பாதைகளில் போவது ஒத்துக் கொள்ளக்கூடியதல்ல. குஜராத் இதற்கு மாறாக என்ன செய்யலாம் எனக் காட்டியுள்ளது. எல்லாவற்றிலும் மக்களுக்கும் பங்கு இருக்க வேண்டும்.

மீண்டும் டோண்டு ராகவன். மோடி உண்மையாகவே மிக வெளிப்படையாக பேசி விட்டார். மோடி அத்வானி போன்ற தலைவர்கள்தான் நாட்டுக்கு தேவை. தேசீய ஜனநாயக கூட்டணிக்கு சந்தேகத்துக்கிடமின்றி மக்கள் வெற்றிக்கனியை தருவதுதான் நாட்டுக்கு நல்லது. நாட்டின் அரசை நடத்த தினசரி சில்லறைக் கட்சிகளின் தயவில் கப்பரை ஏந்திய நிலை போக வேண்டும். ஆனால் என்ன, அவர் பிரதமராவாரா என்ற கேள்விக்கு சிக்காமல் விலாங்கு மீனாக வழுக்கி சென்று விட்டார்.

இந்த நேர்காணலின் முதல் பகுதி மட்டும்தான் இது. இரண்டாம் பகுதி இன்னும் வரவில்லை. அது வந்ததும் இப்பதிவை இடலாம் என சில நாட்கள் காத்திருந்து, பிறகு அது வரும்போது வரட்டும் என இப்போது துணிந்தேன். அது தமிழ் புத்தாண்டு தினத்தில் நிகழ்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

எல்லோருக்கும் எனது இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

4/12/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 12.04.2009

தேவரகசியம்:
அதிசயப்பிறவி என்னும் படத்தில் ரஜனிகாந்தின் உயிரை எம கிங்கரர்கள் தவறாக யமலோகம் கொண்டு வந்து விடுவார்கள். வினுச்சக்கரவர்த்தி (யமன்), வி.கே. ராமசாமி (சித்திரகுப்தன்) மற்றும் சோ (விசித்திரகுப்தன்) ஆகியோர் ரஜனிகாந்தின் உயிரை அவர் போலவே தோற்றமளிக்கும் இன்னொருவர் உடலில் பொருத்த முயற்சிப்பார்கள். ரஜனிகாந்த் நடித்த பலபடங்களிலிருந்து காட்சிகள் திரையில் வர ஒவ்வொரு முறையும் ரஜனி சரி எனச்சொல்லும் மனநிலைக்கு வர, சோ அவர் காதோடு அந்தந்த ரஜனிகாந்த் கேரக்டர்கள் சீக்கிரமே சாகப்போகும் செய்தியை கூறுவார் (உதாரணம் ‘புவனா ஒரு கேள்விக்குறி” படத்தில் வரும் ரஜனிக்கு வயிற்றில் புற்று நோய்). ரஜனியும் இதையெல்லாம் கூறி பிறகு ரிஜெக்ட் செய்வார். அப்போது வினுச்சக்கரவர்த்தி வி.கே.ஆரிடம் கேட்பார், இந்த மானிடனுக்கு தேவ ரகசியங்கள் எப்படி தெரிந்தன என்று. அவரும் கூறுவார், இந்த சோதான் போட்டு கொடுக்கிறார் என்று. மேலே கதை செல்கிறது, ஆனால் அது இப்பதிவுக்கு வேண்டாம்.

நாம் தேவ ரகசியம் என்னும் கான்சப்டை எடுத்து கொள்வோம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் ரகசியத் தன்மை பாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் காரியமாற்ற இயலும். இதைத்தான் ஐ.எஸ்.ஓ.-9000 கோட்பாட்டில் தகவல் அறியும் தேவையின் அடிப்படை (need to know basis) என்பார்கள். இதை நான் வேடிக்கையாக need not know basis எனக் குறிப்பிட்டதுண்டு.

இந்த மாதிரி பல ரகசியங்களை காப்பாற்றுதல் முக்கியம், அவை தேவ ரகசியம் என கூறமுடியாவிட்டாலும். எனது மொழிபெயர்ப்பு வாழ்க்கையிலும் இது உண்டு. வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 7 பதிவில் நான் எழுதியதை இங்கு மீண்டும் தருகிறேன்.

“தேவையில்லாத விவரங்கள் கொடுக்காதீர்கள். உதாரணத்துக்கு நீங்கள் ஒரு முழு நேர வேலை வைத்திருக்கிறீர்கள். மொழிபெயர்ப்பு என்பது பகுதிநேரவேலை. அவ்வேலைக்கான வாடிக்கையாளரிடம் நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை ஒரு போதும் கூறக்கூடாது. அவர்களும் சும்மா இருக்க மாட்டார்கள். நீங்கள் எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதை அடிக்கடி கேட்பார்கள். மரியாதையுடன் அதே நேரத்தில் உறுதியுடன் தகவல் தர மறுத்து விடவும். இது பற்றி நான் சந்தித்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பிறகு கூறுகிறேன்.

ஐ.எஸ்.ஓ. 9001 பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்தானே. அதில் கூறப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று தகவல் மேலாண்மை ஆகும். கம்பெனியில் ஒருவரிடமோ அல்லது ஒரு குழுவிடமோ வேலை கொடுக்கும்போது அவ்வேலைக்குத் தேவையான எல்லா தகவல்களையும் தர் வேண்டும் ஆனால் தேவைப்படாத தகவல்கள்? மூச், தரவே கூடாது. இது என்னப் புதுக் கதை என்று வியப்பவர்களுக்கு: தகவல் என்பது சக்தி. தேவையற்றவருக்கு கொடுத்தால் கெட்டது குடி. இதில் மொழிபெயர்ப்பாளர் எங்கு வருகிறார் என்று கேட்கிறீர்களா? மேலே கூறிய சினேரியோவைப் பாருங்கள்.

உங்களிடம் உள்ள தகவல்கள் என்னென்ன?

நீங்கள் பொறியாளர். எவ்வளவு வருட அனுபவம்? உங்களுக்குத் தெரிந்த மொழிகள் என்னென்ன? ஒவ்வொன்றிலும் எவ்வளவு ஆண்டுகள் அனுபவம்? எவ்வளவு வேகமாக மொழிபெயர்க்க இயலும்? ஒரு குறிப்பிட்ட வேலையை எப்போது முடித்து கொடுக்க தோதுப்படும்?

இவையெல்லாம் வாடிக்கையாளரிடம் கொடுக்க வேண்டுமா? கண்டிப்பாகக் கொடுக்க வேண்டும். அவையும் உண்மையான தகவல்களாக இருக்க வேண்டும்?

கொடுக்கக்கூடாத தகவல்கள் என்ன என்பதைப் பார்ப்போம். நான் மேலே கூறியபடி நீங்கள் முழுநேர வேலையிலும் இருக்கிறீர்கள். எங்கு வேலை செய்கிறீர்கள் என்பதைத் தெரிந்துக் கொள்ள பல வாடிக்கையாளர்கள் முயலுவர். இதைத் தெரிந்து என்ன நல்லது ஆகப் போகிறது? ஒன்றுமேயில்லை என்பதுதான் பதில்.

என்ன கெட்டது ஆகப் போகிறது என்ற கேள்விக்கோ அனேக பதில்கள் உள்ளன. ஒரு தகவலைக் கொடுத்தபிறகு அது உங்கள் கட்டுப்பாட்டில் இனிமேல் இருக்காது. அதற்கு மாறாக உங்கள் தலை மேல் தொங்கும் கத்தியாகிவிடும். வாடிக்கையாளர் உங்களை பயமுறுத்த ஓர் ஆயுதத்தைத் தேவையில்லாமல் நீங்களே அவர் கையில் கொடுக்கிறீர்கள். வேண்டுமென்றோ அல்லது எதேச்சையாகவோ கூட உங்கள் முழுநேர வேலை கொடுத்த முதலாளிக்கு நீங்கள் செய்யும் சைட் பிசினெஸ் தெரிய வந்தால் வீட்டிற்கு அனுப்புமளவுக்கு அது போய் விடலாம். அப்படித்தான் என் கம்பெனியில் ஒரு ஆடிட்டருக்கு வேலை போயிற்று”.

அதே சமயம் தெரிவிக்க வேண்டியத் தகவல்கள், தெரிவிக்கக் கூடாதத் தகவல்கள் ஆகியவை அதே கேடகரியில் இருப்பதில்லை; அவை மாறக்கூடியவை. இப்போதெல்லாம் நான் ஐ.டி.பி.எல்லில் முழுநேர மொழிபெயர்ப்பாளராக இருந்ததை சொல்வது மிக முக்கியம். புது வாடிக்கையாளருக்கு அதனால் நம் மேல் அதிக நம்பிக்கை வரும்.

நல்ல சீரியல்கள்:
தற்சமயம் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு வரும் ‘எங்கே பிராமணன்’ சீரியலில் வரும் எபிசோடுகளை எனது இந்த வலைப்பூவில் கவர் செய்து வருவதை பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். அது பற்றி பின்னால் சொல்கிறேன். முதலில் சீரியல்கள் என்ற கான்சப்டைப் பார்ப்போம்.

மெகா சீரியல்கள் என்னும் விஷயம் நம்மூருக்கு மட்டுமே உரித்தானதில்லை. இவற்றை அமெரிக்காவில் soap opera என அழைப்பார்கள். ஒவ்வொரு சீரியலுக்கும் ஒரு டெம்பிளேட் உண்டு. உதாரணத்துக்கு Dennis the menace என்னும் சீரியலை எடுத்து கொள்வோம். அதில் டென்னிஸ், அவன் தாய், தந்தை, பக்கத்து வீட்டுக்காரர் மிஸ்டர் வில்சன், மிசஸ் வில்சன், டென்னிஸின் நண்பன் ஜோயீ, தொந்தரவு தரும் நண்பி மார்க்கரெட் ஆகியோர் திரும்பத் திரும்ப வருவார்கள். 1959 முதல் 1963 வரை வந்த டெலிவிஷன் சீரியலை மறுபடியும் தொண்ணூறுகளின் இறுதிப்பகுதியில் ஒளிபரப்பினார்கள். இன்றைக்கும் அது பலரால் விரும்பப்படுகிறது.

டென்னிஸ் தொடரில் ஒரு எளிமையான டெம்பிளேட் உண்டு. அதை வைத்து வெவ்வேறு கதைகள் புனையலாம், அவ்வாறே செய்தார்கள். ஆனால் ஒரு தொடர்ச்சியான கதையாக வரும் மெகாசீரியலில் என்ன நடக்கிறதென்றால் கதையின் ஆரம்ப போக்கே மாறி, அங்கும் இங்குமாக அலைந்து. ஒரு கட்டத்தில் டைரக்டருக்கே புரியாமல் போகிறது, தான் என்ன சொல்லப்போகிறோம் என. ஆகவே தேவையின்றி கதையை வளைத்து, நம்பகத்தன்மையே குலைந்து போகிறது. அதிலும் மற்றவர்கள் கதறக்கதற நல்லது செய்வதையே காரியமாக வைத்திருக்கும் அபி, தொல்காப்பியன் (கோலங்கள்) ஆகியோர் எரிச்சலையே கிளப்புகின்றனர். போன ஆண்டு டெலிஃபோன் நேர்க்கணல் ஒன்று கோலங்கள் டைரக்டர் திருச்செல்வனுடன் (தொல்காப்பியன்) லைவாக ஒளிபரப்பப்பட்டது. அதில் அவர் சீரியல் ஓரிரு மாதங்களில் (செப்டம்பர் 2008) முடிந்து விடும், தன் மனதில் கடைசி எபிசோட் வரைக்கான சீன்கள் தெளிவாகவே உள்ளன எனக்கூறினார். அப்படியே முடிந்திருந்தால் நன்றாகவே இருந்திருக்கும். ஆனால் என்னாயிற்று என்றால் சன் டிவியில் சீரியலுக்கு எக்ஸ்டென்ஷன் தந்து விட்டார்கள் என நினைக்கிறேன். இன்னமும் போய்க்கொண்டிருக்கிறது. முடிவது போல தெரிவதில்லை. மே மாதம் முடியும் என்று யாரோ சொன்னார்கள். ஆனால் எந்த ஆண்டின் மே மாதம் எனக்க்கூறவில்லை.:))

கோலங்கள் போலவே கஸ்தூரியும் (கோபுரங்கள் சாய்வதில்லை என்னும் திரைப்படமாக தொண்ணூறுகளில் ஏற்கனவே வந்தது) எக்ஸ்டென்ஷன்கள் தரப்பட்டு இடியாப்பச்சுருளாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் இவ்விரண்டு சீரியல்களும் சிறப்பாகவே எடுக்கப்பட்டு வருகின்றன. ஆர்டிஸ்டுகளும் நன்றாகவே வேலை செய்கின்றனர். ஆனால் என்ன பயன்? எல்லாமே விழலுக்கு இறைத்த நீராகப் போகின்றனவே!

இங்குதான் ஒரு விதிவிலக்காக வந்திருக்கும் நல்ல சீரியலான ‘எங்கே பிராமணன்’ பற்றி கூறுவேன். இதுவரை 50 எபிசோடுகள் முடிந்து விட்டன. ஏற்கனவே இது புத்தகமாக எழுபதுகளில் வந்திருக்கிறது. சீரியல் புத்தகத்திலிருந்து பல வகைகளில் மாறுபடுகிறது. அதிக பாத்திரங்கள் சேர்க்கப்பட்டுள்ளனர், காட்சிகளின் வரிசைகள் மாறியுள்ளன. ஆனால், இதுவரை நான் பார்த்த எல்லா மாறுதல்களுமே திரைக்கதைக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

ஆகவேதான் இதன் எபிசோடுகள் எல்லாவற்றுக்கும் அவை வரவர மதிப்புரை தருவது என தீர்மானித்து அவ்வாறே தந்து வருகிறேன். இது மற்ற பதிவர்களின் தகவலுக்கு மட்டுமே.

பை தி வே, இதிலும் நான் மேலே சொன்ன தேவ ரகசியம் வருகிறது. அதாவது வசிஷ்ட முனிவர்தான் அசோக்காக அவதரித்திருக்கிறார் என்பதே. இந்த தேவ ரகசியத்தை பார்வையாளருக்கும் இப்போது தந்து விட்டார்கள், ஆனால் அசோக், நாதன் ஆகியோருக்கு தெரியாது. ஏன் தெரியக்கூடாது என்பதை நாமே கூறிவிட இயலும். அதாகப்பட்டது, அவ்வாறு தெரிந்து விட்டால் இக்கதையே இருக்காது, அவ்வளவே.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது