8/23/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 23.08.2009

டோண்டு ராகவனது அறியாமைகள்
சமீபத்தில் 1966-67 கல்வியாண்டில் நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் வகுப்பில் படித்து கொண்டிருக்கும்போது எங்களுக்கு கணக்கில் சாத்தியக்கூறு கோட்பாடு (probability theory) பற்றி சில பாடங்கள் எடுக்கப்பட்டன.

அவற்றை ஆரம்பிக்கும் முன்னால் எங்கள் கணித ஆசிரியர் வீரராஜன் அவர்கள் சொன்னது இன்னும் நினைவிலிருக்கிறது. “ஒரு குறிப்பிட்ட கணக்கை நான் உங்களுக்கு முழுக்க போட்டு காட்டியதுமே உங்களுக்கு புரிந்து விடும். அதன் முடிவுக்கான வாதங்கள் உங்களுக்கு எளிமையாகவே தோற்றமளிக்கும். ஆனால் பிரச்சினை என்ன வென்றால் நீங்களே ஒரு புதிய கணக்கில் அவற்றைத் தர நேரும்போதுதான் என்ன செய்வதென்றறியாது பலர் விழிப்பார்கள். அந்த பிரச்சினையை ஓரம் கட்டிவிட்டால் probability theory-யை ஊதித்தள்ளிவிடலாம்”.

அதில்தானே பிரச்சினையே. ஒரு முறை சீட்டுக்கட்டை வைத்து ஒரு கணக்கு கொடுத்தார். சுத்தம். ஏனெனில் எனக்கு சீட்டு விளையாடத் தெரியாது. இப்போதும் தெரியாது என்பது வேறு விஷயம். பரிதாபமாக முகத்தை வைத்து கொண்டு அவரிடம் சீட்டுக் கட்டில் என்னென்ன சீட்டுகள் எவ்வளவு எண்ணீக்கையில் உள்ளன என்பதே தெரியாத நிலையில் இக்கணக்கை எப்படிப் போடுவது என கேட்டேன். உட்காரச் சொல்லிவிட்டு அவர் சீட்டுக்கட்டுகளின் உள்ளடக்கம் பற்றி விளக்கினார். கடைசியில் சொன்னார், “என்ன ராகவன், சீட்டு விளையாடத் தெரியாதா? நானெல்லாம் ஏழாம் வகுப்பிலிருந்தே இதிலெல்லாம் தேர்ந்து விட்டேனே” என்றார். சக மாணவர்களும் ஏதோ விசித்திர ஜந்துவை பார்ப்பது போல என்னைப் பார்த்தனர். என்னைத் தவிர எல்லோருமே சீட்டு ஆடுவதில் தேர்ந்தவர்களாம்.

அதற்காகவெல்லாம் நான் அதை கற்றுக் கொண்டு விடுவேனா என்ன? இரவு பகலாக சீட்டு ஆடி குடும்ப மகிழ்ச்சியையே தொலைத்த பலரது கதைகள் அப்போதெல்லாம் கல்கி, விகடன், குமுதம் பத்திரிகைகளில் வரும். அவற்றையெல்லாம் படித்து அந்த ஆட்டத்தை கற்றுக் கொள்ளக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன், இன்னும் இருக்கிறேன்.

ஆனால் ஒன்று. அதை ஆடுபவர்களை பார்ப்பது மிகச் சிறந்த பொழுதுபோக்கு. முன்பெல்லாம் ரயிலில் இரண்டாம் வகுப்பில் மூன்றடுக்கு பெட்டிகளில்தான் பயணம். எல்லோரும் செட்டில் ஆப்னதும் திடீரென ஒருவன் சீட்டுக் கட்டை வெளியில் எடுப்பான். எதிரில் இருப்பவர்கள் கண்களில் ஒளி தெரியும். இன்னொருவன் இரண்டு சூட்கேஸ்களை சீட்டுக்கு அருகில் அடுக்குவான். அதற்குள் எங்கிருந்தோ இன்னும் சிலர் வந்து சேர்ந்து கொள்ள ஒரு சீட்டுக்கச்சேரி அமர்க்களமாக ஆரம்பிக்கும். நால்வர் ஆடினால், வேடிக்கை பார்க்க ஐந்தாறு பேர். அப்படியே கம்பார்ட்மெண்டில் நடந்தால் இம்மாதிரி நான்கைந்து சீட்டாடும் தீவுகளைப் பார்க்கலாம்.

ஒருமுறை பாண்டிச்சேரியில் அருகிலிருந்த வில்லியனூரில் ஒரு உள்ளூர் தியேட்டரில் படம் பார்க்கச் சென்றிருந்தேன். வெஸ்டர்ன் படம். டுமீல் டுமீல் என துப்பாக்கி ஓசைகள் வந்தவண்ணம் இருக்கும். அம்மாதிரி படங்களுக்கு கிராமத்து ரசிகர்கள் அடிமைகள். மொழி புரியாது. ஆனால் சண்டைகள் தமாஷாக இருக்கும். இன்னொன்று மட்டும் துல்லியமாக புரியும். அதுதான் திரைப்படத்தில் வரும் சீட்டாடும் காட்சி. அதுவும் மூன்று சீட்டு மட்டும்தான் அதிகமாக ஆடப்படும். வில்லன் தனது சீட்டுகளை காண்பிப்பான். ராஜா, ராணி, க்ளாவர் என வைத்து கொள்வோம். இப்போது கதாநாயகன் தனது சீட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து போடுவான். ஏஸ், ஏஸ் என இரண்டு சீட்டுகள் வரும். ஸ்லோ மோஷனில் மூன்றாவது சீட்டு வந்து விழும். அதுவும் ஏஸ். அவ்வளவுதான். இங்கே தியேட்டர் முழுவதும் “ஆ” என்ற சத்தம் கேட்கும். எனக்கு வேடிக்கையாக இருக்கும். உலகப் பொதுமொழி என்கிறார்களே, அது இதுதான் போலிருக்கிறது.

தன் மாப்பிள்ளைக்கு சீட்டாடவே தெரியவில்லை என குப்புசாமி ஐயங்கார் ராமகிருஷ்ணமாச்சாரியிடம் குறைபட்டுக் கொள்கிறார். “என்ன ஓய் குப்பு, சந்தோஷமான விஷயம்தானே” என ஆர்.கே. சாரி கேட்கிறார். “நீங்க வேற ஸ்வாமி. அப்படி ஆடத்தெரியாமல் சீட்டாடி பணத்தையல்லவா இந்த அபிஷ்டு தொலைச்சிட்டு வரது”? என நொடிக்கிறார், குப்புசாமி ஐயங்கார்.

ஆக, சீட்டாடத் தெரியாமல் இருந்தால் போதாது. ஆடாமலும் இருக்க வேண்டும் என்றுதான் தோன்றுகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

சிகரெட் பிடிக்கும் பழக்கம்
வாழ்க்கையில் ஒருவர் சிகரெட் பிடிக்க கற்றுக் கொள்ள பல வாய்ப்புகள் உண்டு. பள்ளீகளில், கல்லூரிகளில், ஹாஸ்டல்களில், குளிர்பிரதேசங்களில் என்றௌ அவற்றை அடுக்கிக் கொண்டே போகலாம். முக்கியமாக சக நண்பர்கள் பிடிக்க, அவர்களுக்குள் ஒரு நட்பு வட்டம் வருகிறது. அதற்கு வெளியே நிற்கக்கூடாது என்பதற்காக அந்த பழக்கத்தில் போய் விழுவதும் அதிகம் நடக்கிறது. சினிமா ஹீரோக்கள் ஸ்டைலாக புகை பிடிப்பதை பார்த்தே பலர் இந்த வழக்கதை மேற்கொண்டுள்ளனர். “திரும்பிப்பார்” என்னும் படத்தில் சிவாஜி எல்லா சீன்களிலும் சிகரெட் பிடித்து கொண்டுதான் வருவார். சிகரெட்டை தூக்கிப்போட்டு வாயில் பிடிக்கும் ரஜனி பற்றி கூறவும் வேண்டுமோ?

ஆனால் ஏனோ தெரியவில்லை, இந்த சிகரெட் பழக்கம் என்னைக் கவரவேயில்லை. அதை பிடிப்பவர்கள் அருகில் வரும்போதே ஒரு வித வியர்வை நாற்றம் சகிக்காது. அவர்கள் விடும் புகை பிடிக்காது என்பது ஒரு விஷயம். அதனால் வரும் கெடுதிகள் பற்றி பிறகுதான் படித்து அறிந்து கொண்டேன். Passive smoking விளைவிக்கும் விபரீதங்கள் வேறு.

அதற்காக சிகரெட்டே பிடிக்காமல் விட்டேனா என்ன. எனது 32-ஆம் வயதில் முதல் முறையாக பிடித்தேன். ஒரு வாடிக்கையாளரை பார்த்து மொழிபெயர்ப்பு வேலை பிடிக்க வேண்டியிருந்தது. அவர் சிகரெட் பற்ற வைத்து கொண்டு, எனக்கும் ஆஃபர் செய்ய அதை தயக்கத்துடன் பெற்று கொண்டேன். அவரே எனக்கு நெருப்பும் கொடுத்தார். ஆனால் என்ன ஆச்சரியம், உடனே ஒருவித நட்பு சூழ்நிலை உருவாயிற்று. வேலையும் பெறமுடிந்தது.

எனது புதிய பழக்கத்தை ஒரு நாள் என் தந்தை நேரிலேயே பார்த்து விட்டார். அப்போது ஒன்றும் சொல்லவில்லை. பிறகு ஒரு நாள் தனியாக அது பற்றி என்னுடன் பேசினார். தானும் சிகரெட் பிடிப்பதாக கூறினார். நான் வியப்புடன் அவரைப் பார்த்தேன். ஏனெனில் அவர் சிகரெட் பிடித்து நான் பார்த்ததேயில்லை. அவர் விளக்கினார். சில நேர்காணல்களுக்கு செல்லும்போது சம்பந்தப்பட்டவர் தான் சிகரெட்டை புகைக்க தொடங்குமுன் என் தந்தைக்கும் நீட்ட அவரும் அதை பற்று கொண்டார். நல்ல இண்டர்வ்யூ கிடைத்தது. அப்படியே எனது அனுபவம். ஆனால் ஒன்று சொன்னார். சிகரெட் நம்மை அடிமைப்படுத்த விடக்கூடாது. ஆகவே தான் வருடத்திற்கு 12 சிகரெட்டுகள் மட்டும் பிடிப்பதாகக் கூறினார். நானும் அதையே பின்பற்றத் தீர்மானித்தேன். இத்தனை ஆண்டுகளாக அவ்வாறே செய்து வருகிறேன். மாதத்துக்கு ஒன்று என்ற கணக்கில் வருகிறது. ஒரு மாதம் அதை பிடிக்காவிட்டால் அந்த கோட்டா கேரி ஓவர் ஆகாது. அம்மாதிரியே செய்வதால் ஓரிரு ஆண்டுகள் ஒரு சிகரெட் கூட இல்லாது கழிந்துள்ளன.

சிகரெட் ஏன் பாப்புலர் ஆகிறது? நிக்கோடின் போதை ஒரு காரணம். டென்ஷனாக இருக்கும்போது சிகரெட் பற்றவைத்தால் அமைதியாகிறார்கள் சிலர். அது முக்கியமாக மூச்சை இழுத்துவிடுவதால் மட்டுமே வருகிறது. அதை சுலபமாகவே வெறுமனேயே மூச்சை இழுத்துவிடுவதாலேயே செய்யலாமே? சில கிலோமீட்டர்கள் மூச்சை நன்றாக இழுத்த வண்ணம் நடந்தால் எல்லா டென்ஷன்களும் காணாமல் போகுமே.

சிகரெட் பழக்கத்தால் வரும் இழப்புகளுக்கு முன்னால் அதனால் வரும் நன்மைகளாக நாம் கற்பனை செய்து கொள்பவை ஒன்றுமே இல்லை என்பதுதான் நிஜம்.

சரியான விவரங்கள் தராது படுத்துவது
சமீபத்தில் 1978-ல் தி. நகர் ராஜகுமாரி தியேட்டரில் (இப்போது அது இடிக்கப்பட்டு விட்டது) ஒரு படம் பார்க்க எண்ணினோம். பேப்பரில் வெறுமனே தினசரி 3 காட்சிகள் என்று போட்டிருந்தார்கள். மாட்டினி ஷோ எத்தனை மணிக்கு என்ற விவரமே இல்லை. சரி தியேட்டரில் போட்டிருப்பார்களே பார்த்துக் கொள்ளலாம் சென்றால் அங்கும் அந்தத் தகவல் இல்லை. மேனேஜர் அறைக்கு சென்று என்ன விஷயம் என்று கேட்டால் "எங்கள் தியேட்டரில் மேட்டினி காட்சி 2.45 மணிக்கு என்பது எல்லோருக்கும் தெரியுமே" என்ற பொறுப்பற்ற பதில் வந்தது. ஆனால் அதே தியேட்டரில் சில நாட்கள் கழித்து இன்னொரு படத்துக்காக மேட்டினி ஷோவுக்கு 2.30 மணிக்கு சென்றால் படம் 2.15-க்கே ஆரம்பித்திருந்திருக்கிறார்கள். இது என்னப்பா புதுக்கதை என்று பார்த்தால் சம்பந்தப்பட்ட படம் (மாமன் மகள்) பெரிய படமாதலால் 2.15-க்கே ஆரம்பித்து விட்டார்களாம். ஏன் அதற்கான அறிவிப்பு இல்லை என்று பார்த்தால் அவ்வாறு அவர்கள் செய்வது எல்லோருக்குமே தெரியுமாம். எங்கு போய் அடித்துக் கொள்வது?

அண்ணா சாலையில் சிம்ப்ஸன் எதிரில் பல பஸ் ஸ்டாப்புகள் உண்டு. செல்லும் டெர்மினஸ்களை பொருத்து பஸ்கள் வேவேறு இடங்களில் நிற்கும். ஆனால் எந்த ஸ்டாப்பில் எந்த பஸ் நிற்கும் என்பதை மட்டும் போடவேயில்லை. ஒரு பஸ் கண்டக்டரிடம் கேட்டால் அவர் தனது பஸ் எந்த ஸ்டாப்பில் நிற்கும் என்பது எல்லோருக்குமே தெரியும் என சத்தியம் செய்கிறார்.

சிங்கார வேலன் படத்தில் கமல் ஆட்டோ டிரைவரிடம் கேட்பார், "என்னப்பா மனோ வீடு தெரியாதுங்கறையே, அது குழந்தைக்குக் கூடத் தெரியும் என்று மனோ சொல்லியிருக்கானே" என்று. ஆட்டோ டிரைவர் (கமல் கொண்டு வந்த கருவாட்டுக் கூடையின் வாசத்தால் பொங்கி வரும் வாந்தியை அடக்கிக் கொண்டு) கூறுவார், "நான் என்ன குழந்தையா" என்று.

ஆனால் சில சமயம் வேண்டுமென்றே சரியான செய்தியை தருவதில்லை. சமீபத்தில் 1975-ல் ரஜனிகந்தா என்ற ஹிந்தி படம் பார்ப்பதற்காக Safire group theater Emerald-ல் கியூவில் நின்று கொண்டிருந்தபோது திடிரென ட்ரன்ஸ்ஃபார்மர் அறையில் நெருப்பு பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் ஹிந்துவில் பார்த்தால் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு தியேட்டரில் என்று செய்தி போட்டிருந்தார்கள். என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது. ஆனால் அதனால் என்ன ஆயிற்றென்றால் விஷயம் தெரியாத பலருக்கு என்ன தியேட்டர் என்று தெரியவில்லை. ஆனந்தாக இருக்குமா, சாந்தியாக இருக்குமா என்றெல்லாம் வதந்திகள் பரவின.

அதே போல கையெழுத்திடும்போது வேண்டுமென்றே தேதி போடுவதில்லை, அப்படியே போட்டாலும் வெறுமனே 24/08 என்று போட்டு விடுகின்றனர் வருடம் போடுவதில்லை. இதே மாதிரி பொறுப்பின்றி வருடங்களில் இரண்டு எண்களை மட்டும் போட்டுத்தானே Y2K பிரச்சினையே வந்தது? எவ்வளவு கால மற்றும் பணவிரயங்கள்?

அன்புடன்,
டோண்டு ராகவன்

17 comments:

ராம்ஜி.யாஹூ said...

kalakkal writing. I enjoyed a lot.

அறிவிலி said...

//ஆனால் சில சமயம் வேண்டுமென்றே சரியான செய்தியை தருவதில்லை. சமீபத்தில் 1975-ல் ரஜனிகந்தா என்ற ஹிந்தி படம் பார்ப்பதற்காக கியூவில் நின்று கொண்டிருந்தபோது திடிரென ட்ரன்ஸ்ஃபார்மர் அறையில் நெருப்பு பிடித்துக் கொண்டது. அடுத்த நாள் ஹிந்துவில் பார்த்தால் சென்னை மவுண்ட் ரோட்டில் ஒரு தியேட்டரில் என்று செய்தி போட்டிருந்தார்கள். என்ன விஷயம். சம்பந்தப்பட்ட தியேட்டர் நிர்வாகம் ஹிந்துவை சரிகட்டியுள்ளது. ஆனால் அதனால் என்ன ஆயிற்றென்றால் விஷயம் தெரியாத பலருக்கு என்ன தியேட்டர் என்று தெரியவில்லை. ஆனந்தாக இருக்குமா, சாந்தியாக இருக்குமா என்றெல்லாம் வதந்திகள் பரவின//

டோண்டுவையும் சரிகட்டி விட்டார்களோ, நீங்களும் எந்த தியேட்டர்னு போடலியே :))))

dondu(#11168674346665545885) said...

@அறிவிலி
தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி. பெயரை போட்டு விட்டேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

சிகரெட்டில் முக்கியமாக இரண்டு எமன்கள் இருக்கிறார்கள். ஒன்று நிக்கோடின், இரண்டாவது தார். ரோட்டில் போடும் தார்தான்.

நிக்கோடின் மறுபடி மறுபடி புகைக்கத் தூண்டும், அடிமைப்படுத்தும் பொருள்.

தார்தான் புற்றுநோயை உருவாக்குகிறது.

இப்படி படித்ததாக ஞாபகம்.

சிகரெட் பிடிப்பதை ஊக்கப்படுத்தும் எவரும் புற்றுநோயால் சாவதுதான் தர்மம்.

கலையரசன் said...

சிங்காரவேலனில் வர்ர அந்த ஆட்டோ டிரைவர் நம்ம சேரன் தானுங்கோவ்..

நக்கீரன் பாண்டியன் said...

டோண்டுவின் இந்தப் பதிவு ஒவ்வொருவரையும் அவர்களின் பள்ளி,கல்லுரி வாழ்வில் நடந்த இது மாதிரி விஷய‌ங்களை மனதில் அசை போடச் செய்யும்.

சீட்டாடும் பழக்கம்,புகைப் பிடிக்கும் பழக்கம் பொதுவாய் மாணவப் பருவத்தில் 9 வது வகுப்பு அல்லது 10 வது வகுப்பு படிக்கும் போது ஏற்படுவது /1967/1968‍‍ / (இந்த்க் காலகட்டம் மணவர்களை அரசியல் பக்கம் அன்று நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளே தள்ளியது) களில் சகஜம்.

சீட்டாடும் பழககம்:

1967 களில் நாக்கவுட் என்பது பிரசித்தம் .இதற்கு 3 சீட்டுக்கட்டுகள் ( 156 கார்ட்ஸ்+ ஜோக்கர் கார்டு) தேவை. இது ரெம்மி எனச் சொல்லப் படும் விளயாட்டின் நீட்டிப்புத்தான். மொத்தம் 320 புள்ளி எடுத்தால் அவுட். விளையாடுபவர்கள் ஒரு குறிபிட்ட தொகையை மத்தியில் வைத்து வெற்றி பெற்றவரிடம் அளிப்பது ஒரு முறை.புள்ளிக்கு இத்தனை பைசா என கறாராய் வசூலிப்பது மற்றொரு வகை. இந்த விளையாட்டில் சொத்து சுகத்தை எல்லாம் தொலைத்த ஒருவர் தான் எனக்கு கற்றுக் கொடுத்தார். காரணம் இந்தி எதிர்ப்பு போராட்டம் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை.அவருக்கு சீட்டாட கிளப் சென்று விளையாட மனமில்லாச் சூழ்நிலை.கையில் காசில்லாவிட்டாலும் பொழுதை போக்க என் வயது சிறுவர்களை தேர்தெடுத்தார். ஒரு கண்டிஷனுடன் நாங்கள் எந்தக் காலத்திலும் காசு வைத்து இந்த விளையாட்டை விளயாடக் கூடாது ( கையில் சத்தியம் வாங்கி)
.அவர் விளையாடும் போது புல் பூஸ்ட்டில் ,கையில் சிகரெட் வாயில் ஸ்டெயில் புகையுடன்.நாட்கள் சென்றன பள்ளிகள் வழக்கம் போல் தொடரவும் இந்த விளயாட்டு நின்றுவிட்டது.( கடைவரை யாரும் காசு வைத்து விளையாடமல் குருவுக்கு நன்றிக் காணிக்கை செலுத்தினோம்)
ஆனால் எங்கள் அனைவரையும் இந்த ஸ்டெயில் புகை பிடிக்கும் பழக்கம் தொற்றிக் கொண்டது.அதுவும் மளையாள‌ வெற்றிலை+கொட்டைப் பாக்கு போட்டு பின்னர் புகை பிடித்தால் இந்த உலகம் உங்கள் காலடியில்.1971/72 களில் கல்லுரியும் படிக்கும் போது ,மாணவர்கள் ( அரசின் மது விலக்கு கொள்கை மாற்ற‌த்தால்) நட்பை பலப் படுத்துவதாய் நினைத்து மதுவினை ருசி பார்க்க ,அந்தக் கால சீட்டாட்ட குருவின் மதுப் பழக்கம் ஒரு காரணமாய் இருந்திருக்கலாம். படிப்பு முடித்து வேலையில் சேர்ந்த பிறகு இன்று வரை உள்ள நல்ல அலுவலக நண்பர்களின் பழகத்தால், உடலையும் மன‌த்தையும் கெடுக்கும் அந்த தீய பழக்கங்கள் காற்றில் கரைந்தே போயிற்று
.ஆனால் இன்றும் ஒரு சிலர் இந்தப் பாழும் கிண‌ற்றில் விழுந்தது தெரிந்தும் வெளியே வர மனமில்லாமல்/இயலாமல் தங்கள் வாழ்வினை தொலைப்ப‌தற்கு என்ன காரணம்?
( அடுத்த டோண்டுவின் கேள்வி பதிலுக்கு(03/09/2009)

1. பிரம்மன் விதித்த விதியா
2.படிப்பிருந்தும் புரியா நிலையா?
3.உங்கள் பதிவுகலக நண்பர் சுப்பையா வாத்யார் சொலவது போல அவரது ஜாதக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையா?
4.போன ஜென்மா கர்மாவா?
5.மனித குலத்தின் இருப்பினை (மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு) சம நிலை செய்ய இயற்கையின் சித்து விளையாட்டா?
6.கிருத்துவர்கள் சொலவது போல் இது சாத்தானின் சதியா?

கிருஷ்ணமூர்த்தி said...

Y2K பிரச்சினையே ஒரு அடிப்படை ஞானம் இல்லாமல் வந்தது, அல்லது பயமுறுத்திச் சம்பாதிப்பதற்காக வந்தது-உதாரணமாக, நீங்கள் உபயோகிக்கும் எ சி, ப்ரிட்ஜ்முதலானவை ஓசோன் படலத்தில் ஓட்டை போட்டு விடுகிறது, நாங்கள் ஒட்டையைத் தைத்துத் தருகிறோம் என்று புதிய மாடல்களை அதிக விலைக்குத் தள்ளின மாதிரி, இந்த பயமுறுத்தல் நிறையபேருக்கு வயிற்றில் புளியைக் கரைத்தது; கொஞ்சம் பேருக்குப் புதிய சம்பாததியத்தைத் தேடித் தந்தது! அவ்வளவுதான்! இப்போது ஒரு ரூப்பைக்குத் தினகரன், ஓசியில முழிக்க மஞ்சள் என்று விளம்பரம் வந்தவுடன் எல்லோருமே உஜாலாவுக்கு மாறுவதில்லையா, ஆப்படியே இதுவும் ஒரு உத்தி!

இரண்டாயிரம் பிறந்த போது, எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை! உலகும், கணினிகளும், நிரல்களும் எப்போதும் போலத் தான் இயங்கிக் கொண்டிருந்தன!

நீங்கள் அப்போது கேட்ட கேள்விக்கு இன்னும் யாரும் விடை சொல்லவில்லை போல் இருக்கிறதே?

இந்தச் சுட்டி விடை சொல்லக் கூடும்!


y2k பிரச்சினை (செயற்கையாக ஊதி பெரிது ஆக்கியகு, த... குப்பன்_யாூ y2k பிரச்சினை. (செயற்கையாக ...
www.tamilmanam.net/services/pdf/m_thiratti_single_pdf.php?id

Anonymous said...

//( அடுத்த டோண்டுவின் கேள்வி பதிலுக்கு(03/09/2009)

1. பிரம்மன் விதித்த விதியா
2.படிப்பிருந்தும் புரியா நிலையா?
3.உங்கள் பதிவுகலக நண்பர் சுப்பையா வாத்யார் சொலவது போல அவரது ஜாதக் கட்டத்தில் உள்ள கிரகங்களின் ஈர்ப்பு விசையா?
4.போன ஜென்மா கர்மாவா?
5.மனித குலத்தின் இருப்பினை (மக்கள் தொகை பெருக்க கட்டுப்பாடு) சம நிலை செய்ய இயற்கையின் சித்து விளையாட்டா?
6.கிருத்துவர்கள் சொலவது போல் இது சாத்தானின் சதியா?//

டோண்டுவின் கேள்விகள் 03‍.09.09 வரைவுக்கு சென்று விட்டதா?

dondu(#11168674346665545885) said...

@அனானி
ஆம் சென்று விட்டன. இப்போதே அங்கு 18 கேள்விகள் சேர்ந்து விட்டன, கடைசி 6 கேள்விகளை ஒன்றாக கணக்கெடுத்து விட்டேன்.

இன்னும் 42 கேள்விகளுக்கு இடம் உள்ளன. அவை நிரம்பினால், 10 ஆம் தேதிக்கான வரைவு திறக்கப்படும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

1. தேர்தல் முடிவுக்குப் பிறகு அசைக்க முடியாத சக்தியாக தே.மு.தி.க மாறியுள்ளதா?
2.இரட்டை இலை ஓட்டு வங்கி முரசுக்கு தாவிவிட்டதா?
3.ஜெயலலிதா இனி என்ன செய்யப் போகிறார்?
4.தொண்டர்களின் குமுறல் கேடகாத தலைமையின் பிடிவாதத்தால்தான் அதிமுகவின் நிலை தலைகீழ் சரியா?
5.கலைஞரின் அரசியல் ராஜதந்திரத்தின் முன்னால் வி.காந்த் சினிமா வீர வேஷங்கள் எடுபடுமா?
6.இனி கங்கிரசும் அடக்கி வாசிக்குமா?
7.திருமங்கல பார்முலாவின் வெற்றி தொடர்வது அரசியல் ஆரோக்கியத்திற்கு சரியில்லையே?
8.அழகிரியின் தேர்தல் மாயா ஜாலங்கள் தந்தக்கே உபதெசம் செய்யும் செயல் போலுள்ளதே?
9.ஸ்டாலின் பிடி கட்சியில் தளர்கிறதா இல்லை இறுகுகிறதா?
10.ஒரு குடும்ப ஆட்சி 2011ல் மாறும் என பலரின் நம்பிக்கை பொய்த்துவிடும் போலுள்ளதே,இதற்கு மாற்று வழி?

11.நவீன காதல் கிறுக்கன் ராகவேந்திரா பற்றி?
12.நடிகை என்றாலே கஜமுஜா ஏன்?
13.இதுவும் புஸ்வனமாய் ஆய்விடுமா?
14.சமீபத்தில் ஒபாமாவை பேட்டி எடுத்த 11 வயது வாண்டு பற்றி?
15. வருங்காலத்தில் தலைவர்கள் சிலைகள் தரும் கவலைகள் கூடும்போலுள்ளதே?
16.உலகெங்கும் வாழும் பணக்காரச் செல்லப் பிராணிகள் எவை எவை?
17.உலகத் தமிழர் பிரகடனம் நிகழ்ச்சி ‍அரசின் நடவடிக்கை பாயுமா திருமா வளவன் மீது?
18.வடிவேலுவின் காமெடி விவேக் காமெடியை பின் தள்ளிவிட்டதா?
19.இந்தியா வில் உள்ள இடதுசாரிகள் சாமனியர்களின் பிரதிந்தியாய் வலம் வரும் ஒபாமாவை வெறுப்பது ஏன்?
20.பொது உடமை கட்சிகளிம் தமிழக ஓட்டு பலம் தெரிந்துவிட்டதே இனி அவர்கள்

krishnakumar said...

1.Tell whether oats is good for health and in what way? your experience?
2.WHICH IS the best -HP OR DELL or h c l LAPTOP? why? which is your brand?
3. In the world most of the celebrities are big Hypocrites, why?
4.Is Economics a Science Subject or ?
5.It is advertised that home based net jobs pay more?is it true?
5. As told by many is musterbation bad for health?
6.The worst incident during english rule india?
7. Tell the best and useful computer course suitable for all?
8.merits and demerits about
self finance institutions ?
9.Tell any Surge in an Automobile at present?
10.Your heaven ?

dondu(#11168674346665545885) said...

@20 ஹைப்பர் லிங்குகளை தந்த அனானி

நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தில் காட்டப்பட்ட 20 லிங்குகளில் முதல் இரண்டை பார்த்தேன். ரஷ்ய மொழி போன்ற ஏதோ ஒரு மொழியில் இருந்தன. ஏன் இந்த விபரீத விளையாட்டு?

உங்கள் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

// dondu(#11168674346665545885) said...

@20 ஹைப்பர் லிங்குகளை தந்த அனானி

நீங்கள் அனுப்பிய பின்னூட்டத்தில் காட்டப்பட்ட 20 லிங்குகளில் முதல் இரண்டை பார்த்தேன். ரஷ்ய மொழி போன்ற ஏதோ ஒரு மொழியில் இருந்தன. ஏன் இந்த விபரீத விளையாட்டு?

உங்கள் பின்னூட்டம் நிராகரிக்கப்படுகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

Is this the method used by hackers to take control over others blogs?

NOWADAYS THIS TYPE OF METHOD IS BEING USED BY THESE THIEVES IN OTHERS EMAIL ACCOUNTS ALSO.

Anonymous said...

மக்களின் மறதியே துணை!

சன் டீவியை கட்டுப்படுத்த தொடங்கபட்ட அரசு டீவி என்னாச்சு?
ஜெயலலிதாவின் மீது போடப்பட்ட சொத்து குவிப்பு வழக்கு என்னாச்சு?
அதைச் செய்வேன் இதை செய்வேன் என் வீர வசனம்பேசிய வக்கில் ஜோதிக்கு என்னாச்சு?
விஜயகாந்த்/வடிவேலு மோதல் கேசு என்னாச்சு?
வக்கில் ‍போலிஸ் மோதல் விவகாரம் என்னாச்சு?
சட்டக் கல்லுரி மாணவர் மோதல் விவகாரம் என்னாச்சு?
கோகனேக்கல் குடிநீர் திட்டம் என்னாச்சு?
50 ரூபாய்க்கு மளிகை திட்டம் என்னாச்சு?
இலவச 2 ஏக்கர் நிலம் திட்டம் என்னாச்சு?
ஸ்டாலினை முதல்வராக்கும் திட்டம் எப்போது?

jackiesekar said...

தன் மாப்பிள்ளைக்கு சீட்டாடவே தெரியவில்லை என குப்புசாமி ஐயங்கார் ராமகிருஷ்ணமாச்சாரியிடம் குறைபட்டுக் கொள்கிறார். “என்ன ஓய் குப்பு, சந்தோஷமான விஷயம்தானே” என ஆர்.கே. சாரி கேட்கிறார். “நீங்க வேற ஸ்வாமி. அப்படி ஆடத்தெரியாமல் சீட்டாடி பணத்தையல்லவா இந்த அபிஷ்டு தொலைச்சிட்டு வரது”? என நொடிக்கிறார், குப்புசாமி ஐயங்கார்.


தலைவா.... மேலுள்ள வரிகள் ஒருவனின் வேதனை என்றாலும் நான் ரசித்தேன்...

வால்பையன் said...

நல்லாயிருக்கு!

dondu(#11168674346665545885) said...

@கந்தசாமி
உங்கள் 5 கேள்விகள் (தயவு செய்து நம்பர் கொடுங்கள் சாமி) அடுத்த மாதம் 10-ஆம் தேதிக்கான பதில்கள் பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.

பை தி வே, அப்பதிவுக்கு இது வரை 17 கேள்விகள் சேர்ந்து விட்டன. இன்னும் 43 கேள்விகளுக்கு இடம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது