சற்றே தாமதமாக இரண்டாம் பகுதியை போடுகிறேன். முதல் பகுதி இதோ.
எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 10.08.2009 பதிவில் கூறியது போல கல்கி அவர்களது வாழ்க்கை சரிதமான பொன்னியின் புதல்வர் புத்தகத்தை படித்து கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவேயே கல்கியில் வாராவாரம் வெளியான போது படித்தவன் என்றாலும், இப்புத்தகத்தில் பல இற்றைப்படுதல்கள், திருத்தங்கள் ஆகியவற்றை செய்துள்ளதாக சுந்தா இப்புத்தகத்தின் முன்னுரையில் கோடி காட்டியுள்ளார். தொடர் கல்கியில் ஆரம்பித்த சமயம் நான் சுந்தா அவர்களை திநகர் பிஞ்சால சுப்பிரமணியன் தெருவில் அவர் வீட்டில் வைத்து சந்தித்தேன். இது பற்றி நான் படகில் மூவர், அதில் நாயை மறக்கலாகுமா? - 1 என்னும் பதிவில் குறிப்பிட்டுள்ளேன். அதிலிருந்து சில வரிகள்:
“சுந்தா அவர்கள் சமீபத்தில் ஜூலை 1974-ல் துவங்கி கல்கி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை கல்கியில் "பொன்னியின் புதல்வர்" என்ற பெயரில் தொடராக வாரா வாரம் 1976 வரை எழுதி வந்தார். அவரிடம் நான் "Three men in a boat, to say nothing of the dog" என்ற இந்த புத்தகத்தை எடுத்துச் சென்று ஒரு குறிப்பிட்டப் பகுதியைக் காட்டினேன். அது தனக்கும் தெரியும் என்றும் வாழ்க்கை வரலாற்றில் தான் கண்டிப்பாக அதைப் போடுவதாகக் கூறினார். அதை உன்னிப்பாகவும் கவலையாகவும் எதிர்பார்ப்பேன் என்று கூறி விட்டு வந்தேன். அவரும் சொன்னபடியே செய்தார். ரொம்ப நல்ல மனிதர்”.
இப்பதிவின் முதல் பகுதியிலிருந்து சில வரிகள்:
“அவருடன் நான் மேலே கூறிய தருணத்தில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் அவருக்கும் சிட்டி, கு.ப.ரா. மற்றும் தி.ஜானகிராமனிடம் ஏற்பட்ட விவாதங்கள் "சிறிது வெளிச்சம்" என்ற வாசகர் வட்ட வெளியீட்டு புத்தகத்தில் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறேன். இரண்டு நாட்களுக்கு பிறகு தனது அடுத்த வீட்டுக்காரரிடம் போய் என்னை தருவிக்குமாறு கேட்டிருக்கிறார். அந்த மனிதரும் எனக்கு தகவல் அனுப்பி உடனே அவர் வீட்டிற்கு வரச் சொன்னார். என்னவோ ஏதோ என்று நானும் பதறி ஓடி வந்தேன். இருக்காதா பின்னே, அந்த பக்கத்து வீட்டுக்காரர் என் சொந்த பெரியப்பாவாயிற்றே. அவர் வீட்டிற்கு போனால் சுந்தா அவர்கள் முன்னறையில் அமர்ந்திருக்கிறார். என்ன விஷயம் என்று கேட்ட போது என்னிடம் சிறிது வெளிச்சம் புத்தக விவரம் கேட்டிருக்கிறார். அதாவது புத்தகப் பெயர் சட்டென்று நினைவுக்கு வர மறுத்திருக்கிறது. அதற்காகத்தான் நான் வரவழைக்கப்பட்டேன். விஷயத்தை நான் மறுபடி கூற, உடனே கி.ராஜேந்திரனுக்கு ஃபோன் போட, அன்று இரவே புத்தகம் அவர் வீட்டிற்கு வந்து விட்டது. இதை எதற்கு சொல்கிறேன் என்றால் கல்கியின் வாழ்க்கை வரலாறுக்காக அவரும் கி.ராஜேந்திரனும் என்ன செலவை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இருந்திருக்கிறார்கள்”. இப்புத்தகத்துக்காக ஏதோ என்னால் ஆன காணிக்கை.
அப்புத்தகத்தில் நான் ரசித்த சில இடங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணுகிறேன். தற்சமயம் கதையின் கடைசி கால் பாகத்தில் உள்ளேன். அதில் பார்த்த ஒரு நிகழ்ச்சிதான் இப்போது கூறுவேன்.
கல்கியின் அருமந்த புதல்வர் கி.ராஜேந்திரன். அவர் மருத்துவ கல்லூரியில் சேர்ந்து டாக்டர் படிப்பு படிக்க ஆசைப்பட்டிருக்கிறார். வைத்தியக் கல்லூரியில் இடம் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல என கல்கி சுட்டிக் காட்டியிருக்கிறார். அப்போது சென்னை முதன்மந்திரியான ராஜாஜியிடம் சிபாரிசு கேட்டு போகலாமே என ராஜேந்திரன் ஆலோசனை கூற கல்கி அதை சிறிதும் தயக்கமின்றி நிராகரித்திருக்கிறார். பிறகு பிஃபார்ம் கோர்சில் ராஜேந்திரன் சேர்ந்திருக்கிறார். கல்கியை பொருத்தவரை இது சிறிய நிகழ்ச்சியே. ஆனாலும் தன் சொந்த காரியத்துக்காக அழுகிணி சிபாரிசு வேலைகள் செய்வித்து கொள்வது என்பது கல்கி அவர்களுக்கு சிறிது ஏற்புடையதல்ல என்ற விஷயம் மிகவும் பெரிது. கல்கிக்கும் ராஜாஜிக்கும் இடையில் நிலவிய உறவு எவ்வளவு அற்புதமயமானது? ஆனாலும் அதை தனது சுயநலத்துக்கு பயன் படுத்தி கொள்ளாதது என்னும் செயல்பாடு அவரை மாமனிதர் ராஜாஜியின் சீடர் என்னும் நிலைக்கு மிகவும் ஏற்றவர் என்றுதானே காட்டுகிறது?
விஷயம் தெரியாதவர்கள் பலர் கல்கி பிழைக்கத் தெரியாதவர் என கூறலாம். சில சமயங்களில் அது உண்மையாகவே கூட இருக்கலாம். ஆனாலும் அதனால் எல்லாம் அவர் எப்போதுமே மனம் மாறியதில்லை என்பதைத்தான் நான் இங்கு காட்ட எண்ணிய விஷயம்.
இத்தொடரின் அடுத்த பகுதிகள் மேலும் கூறுவேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
1 hour ago
13 comments:
கல்கியின் வாழ்க்கைச் சரிதத்தைக் கல்கியில் தொடராக வந்தபோது படித்தது. நீங்கள் குறிப்பிட்டிருப்பது போலவே, கடுமையான உழைப்பு, ஆராய்ச்சியுடன், அந்தநாளில் தமிழில் முதன் முதலாக எழுதப்பட்ட வாழ்க்கைச் சரிதை பொன்னியின் புதல்வராகத் தான் இருக்க முடியும்!
ஆனால், காலம், இப்படிப்பட்ட நல்ல விஷயங்களைக் காதில் வாங்கிக் கொள்வதிலிருந்து கவனத்தைச் சிதற அடிப்பதாகவே இருந்ததையும், இந்த நூல், இன்றைக்கும் கூட அதற்குரிய இடத்தை வாசகர்கள் மத்தியில் பிடிக்க முடியாமலேயே போய்விட்டதையும் வருத்தத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.
//“அவருடன் நான் மேலே கூறிய தருணத்தில் பேசிக் கொண்டிருந்த போது பேச்சுவாக்கில் அவருக்கும் சிட்டி, கு.ப.ரா. மற்றும் தி.ஜானகிராமனிடம் ஏற்பட்ட விவாதங்கள் "சிறிது வெளிச்சம்" என்ற வாசகர் வட்ட வெளியீட்டு புத்தகத்தில் வந்திருப்பதாகக் கூறியிருக்கிறேன்.//
முழுப் புத்தகத்தையும் படித்து விட்டு, அதுபற்றி நீங்கள் எழுதப்போவதைப்
படிக்கக் காத்திருக்கிறேன்.
இடையே ஒரு சின்ன தகவல் மட்டும்:
ஜானகிராமனின் தந்தையாருக்கு நல்ல சங்கீத ஞானமுண்டு. அவர் ராமாயணம் சொல்லும் முறையே வெகு அபூர்வமாய் இருக்கும் என்று கரிச்சான் குஞ்சு சார் எழுதியிருக்கிறார்.
ஜானகிராமனின் கதைகள் குறித்து
அவர் தந்தையாருக்கு வேறுபட்ட அபிப்ராயங்கள் உண்டு; நிறைய வருத்தமும் உண்டு. கு.ப.ரா.வுடன்
ஜானகிராமன் பழகுவது கூட, தரித்திரத்தைத் தழுவும் முயற்சி என்று ஜானகியின் தந்தையார் கசந்து கொண்டதுண்டு. கு.ப.ரா. இறந்த பிறகு, அவர் தன் மகனிடம் தன் ஆதங்கத்தைச் சொன்னாராம்:
"கதை எழுதுவது என்றால் கார் வைத்துக் கொண்டிருக்கும், கல்கி மாதிரி ஆக முயலுதல் வேண்டும்.
பணமும் இல்லை; புகழும் இல்லை.
இதென்ன தரித்திர கும்பல்" என்ற அளவுக்குப் போய்விட்டார் அவர்--
என்று ஜானகிராமனின் நினைவு மலரில் ("யாத்ரா" வெளியிட்டது) கரிச்சான் குஞ்சு சார் எழுதியிருக்கிறார்.
ஜானகிராமன், கு.ப.ராவுடன் தனக்கிருந்த பழக்கத்தை நீங்கள் குறிப்பிட்டிருக்கும் "சிறிது வெளிச்சம்" புத்தகத்தின் பின்னுரையில் எழுதி இருப்பதாக கரிச்சான் குஞ்சு சாரே குறிப்பிட்டிருக்கிறார். அந்த புத்தகத்தைப் பற்றி எழுதும் போது அதுபற்றியும் தாங்கள் எழுத வேண்டுகிறேன்.
பி.கு: கல்கி வசமிருந்த கார் வெகு பிரசித்தம். அந்தக் காலத்தில் கார் வைத்துக் கொண்டிருந்த எழுத்தாளர் அவராகத் தான் இருக்கும். இந்தக் கார் பற்றி சின்ன அண்ணாமலையும் எழுதியிருப்பதைப் படித்த நினைவும் இருக்கிறது.
Dear Dondu,
I am shocked to note that the great 'Kalki'copied from Jerome K Jerome, however much we try to polish the issue!Would you kindly post here what Mr.Sunda has written about this in his book?
Thanks
1.Does the Indian govt do enough to stop swine flu?
2,.Is there any difference between swine flue and bird flue?
3. What is a true government.?
4.Which is your favouite video clipping in youtube?
5.who is the best Spiritual Motivatator in india/world?
டோண்டுவின் புதுமொழிகள்?
1அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
2 அழுகிற ஆணையும், சிரிக்கிற பெண்ணையும் நம்பக்கூடாது.
3.அழுத பிள்ளை பால் குடிக்கும்.
4.அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்
5.அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
6. அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
7.அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன
8.அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான்
9.அறிவு இல்லார் தமக்கு ஆண்மையுமில்லை.
10. அறிவுடையாரை அரசனும் விரும்புவான்.
//டோண்டுவின் புதுமொழிகள்?//
கேள்விகள் 27.08.2009-க்கான பதில்கள் பதிவின் வரைவுக்கு சென்று விட்டன.
20-ஆம்தேதிக்கான கேள்விகள் அறுபதை தாண்டி விட்டன.
அன்புடன்,
டோண்டு ராகவன்
kalki had very good marketing machinery.
புத்தகத்தை மொழிபெயர்த்து முடித்துவிட்டீர்களா? "படகில் மூன்று பேர், நாயை சேர்க்காமல்" என்று சொல்ல வேண்டுமோ?
வலைஞன் சொன்னது:
/I am shocked to note that the great 'Kalki'copied from Jerome K ஜெரோம்/
இப்படி எடுத்ததற்கெல்லாம் ஷாக் ஆகிற நீங்கள் இதுக்கு என்ன ஆவீங்களோ?
எங்க அப்பா, அவரோட அம்மாவ அம்மான்னு தான் கூப்பிட்டார். நானும் என் அம்மாவை 'அம்மா'ன்னு தான் கொப்பிட்டேன். இப்ப என் மகனும்கூட, அவனோட அம்மாவை அம்மான்னுதான் கூப்பிடுகிறான்.
பல நேரங்களில், நம்மை எது அதிகமாக வசீகரித்திருக்கிறதோ, பாதிப்பை உண்டுபண்ணியிருக்கிறதோ, அதைப் போலவே நம்மையறியாமலேயே ஆகிவிடுவது, நடந்துகொள்வது உண்டு! இதைக் காப்பியடிப்பது என்று சொல்வதற்கில்லை, just a passing mood அவ்வளவுதான்!
சந்தேகம் இருந்தால் பொன்னியின் செல்வனில் வந்தியத்தேவனும், குடந்தை ஜோதிடரும் 'கற்பனாசக்தி'யைப் பற்றிப் பேசுவதை படித்துவிட்டுச் சொல்லுங்கள்! கல்கி ஒரிஜினல் தான்!
/பெங்களூர் புதியவன் said...
kalki had very good marketing machinery. /
நீங்கள் பெங்களூருவுக்கு மட்டும் அல்ல, எல்லாவற்றிற்குமே புதியவர் தான் என்று தெரிகிறது.அதனால் தெரிந்துகொள்வதற்காக:
ஆனந்த விகடன் ஆசிரியர் பொறுப்பில் இருந்து கொண்டே கல்கி சுதந்திரப் போராட்டங்களில் ஈடுபட்டதும், சிறைக்குச் சென்று வருவதுமாக இருந்தது ஆனந்த விகடன் உரிமையாளர் வாசனுக்குப் பிடிக்கவில்லை. அங்கே நிர்வாகியாகப் பணிபுரிந்து கொண்டிருந்த நண்பர் திரு சதாசிவமும், கல்கியும் விகடனை விட்டு வெளியேறினார்கள். கல்கி பத்திரிகையை ஆரம்பிப்பதற்கான மூலதனத்தின் பெரும் பகுதியை திருமதி எம் எஸ் சுப்புலக்ஷ்மி அவர்களுடைய கச்சேரி திரட்டித் தந்தது.
கல்கியின் எழுத்தில் மிளிரும் மெல்லிய நகைச்சுவையே வாசகர்களுடைய ஏகோபித்த ஆதரவிற்குக் காரணம். மலிவான விளம்பர உத்திகள் அல்ல. தவிரவும், அவருடைய நாட்களில், அந்த மாதிரி உத்திகள் பெரிதாகச் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.
எந்த ஒரு எழுத்தாளனுடைய படைப்புமே, re-run ஆக மறுபடி மறுபடி பிரசுரிக்கப் பட்டதும், அப்போதெல்லாம் பத்திரிகையின் விற்பனை கிண்ணென்று ஏறியதும்
கல்கியைத் தவிர வேறு எவருக்கும், வேறு ஒரு பத்திரிகைக்கும், இது வரை நடந்ததில்லை.
ஆனந்த விகடன், கல்கி இரண்டையும் சமாளித்துத் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள, மலிவான விளம்பர உத்திகள், மட்டமான கதைகள், கிசு கிசுக்கள் சினிமா என்று ஆரம்பித்து, சர்குலேஷனில் சிகரத்தைத் தொட்ட பத்திரிக்கை குமுதம் தான்.
அப்படி வெறுமனே மார்க்கெட்டிங் உத்திகளைப் பயன்படுத்துவதில் கில்லாடியான குமுதமே, இன்றைக்கு அடுத்தவன் காசில் மஞ்சக் குளிக்கும் புதுசு கண்ணா புதுசு, ஓசி கண்ணா ஓசி ரகப் பத்திரிகைகள் வந்தவுடன் குனிந்தே நிற்கிறது!
1.சரித்திர நாவல்களில் சாண்டில்யன் பாணி/கல்கி பாணி/கோவி மணிசேகரன் பாணி என்ன என்ன வேறுபாடுகள் விளக்குக?
2.தற்சமயம் யாருடைய சரித்திர நாவல்களுக்கு மக்களிடம் அமோக வரவேற்பு?
3.வைமுகோதை நாயகி,லட்சுமி போன்ற பழைய நாவலாசிரியர்கள் போல் தற்சமயம் யார் பிரபலம்?
4.தமிழ்வாணன் துப்பறியும் நாவல்கள்( சங்கர்லால்,மாது,கத்திரிக்காய்) மாணவப் பருவத்தில் படித்தது உண்டா?
5.மந்திரஜாலக் கதைகள் ,அம்புலிமாமா கதைகள் வாசிப்பதில் சிறுவயதில் ஆர்வம் இருந்ததா?அனுபவம் எப்படி?
சுந்தாவின் பொன்னியின் புதல்வரை நான் படித்திருக்கிறேன். இதை நேர்மையான biography என்று சொல்ல முடியாது.
தமிழ் ஓவியா பெரியார் மீது பக்தி கொண்டிருப்பதை போலத்தான் சுந்தாவும் கல்கி மீது பக்தி வைத்திருந்தார் என்று நினைக்கிறேன். மேலும் இது தொடராக கல்கியில் வந்தது. கல்கி பத்திரிகையில் கல்கியின் குறைகளை, தவறுகளை பற்றி எழுதுவது கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். மேலும் வழக்கமான chronological விவரிப்பு கிடையாது, ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு அதை பூரா விளக்குவார். எனக்கு இதெல்லாம் சேர்த்து புத்தகம் கொஞ்சம் அமெச்சூர்தனமாகத்தான் பட்டது.
ஆனால் இந்த புத்தகம் ஒரு தகவல் களஞ்சியம். சுந்தாவின் உழைப்பு அற்புதமானது. ஒரு flawed, but admirable attempt என்று சொல்லலாம்.
கல்கி பற்றி நான் எழுதிய பதிவுகள் சிலருக்கு சுவாரசியமாக இருக்கலாம்.
http://koottanchoru.wordpress.com/2009/03/23/கல்கி-ஒரு-மதிப்பீடு/
http://koottanchoru.wordpress.com/2009/03/22/கல்கி-பற்றி-எஸ்எஸ்-வாசன்/
http://koottanchoru.wordpress.com/2008/09/29/ராஜாஜி-கல்கி-மதுவிலக்கு/
/தமிழ் ஓவியா பெரியார் மீது பக்தி கொண்டிருப்பதை போலத்தான் சுந்தாவும் கல்கி மீது பக்தி வைத்திருந்தார் என்று நினைக்கிறேன்/
கடவுளே! சுந்தாவைக் கேலி செய்வதற்கோ, அசிங்கப் படுத்துவதற்கோ வேறு வழியே கிடைக்கவில்லையா, ஆர்வி?
Post a Comment