வைஷ்ணவ பரிபாஷை என்று ஒருவிஷயம் உண்டு. அதில் எல்லாவற்றையும் நீட்டி முழக்கி சொல்லுவார்கள்.
காஞ்சீபுரத்தைச் சேர்ந்த உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் தனது வேலையாள் குப்பனைக் கூப்பிட்டு, “அடே குப்பா நீ உடனேயே ஸ்ரீபெரும்புதூர் திருவேங்கடாச்சாரி ஸ்வாமி வீட்டுக்கு போய் ‘திருக்குடந்தை நாராயணஸ்வாமி ஐயங்கார் திருக்கோவில் ஆராதனைக்கு போவதற்காக திருக்குளத்திற்கு சென்றபோது திருப்பாசி வழுக்கி விழுந்தார்’ என்று கூறு” என்றார். குப்பனும் ஆகட்டும் சாமி என முண்டாசைத் தலையில் கட்டிக் கொண்டு கிளம்ப ஆயத்தமானான்.
தான் கூறிய வைஷ்ணவ பரிபாஷையை குப்பன் புரிந்து கொண்டானோ இல்லையோ என மயங்கிய உபயவேதாந்த தாத்தையங்கார் ஸ்வாமிகள் “என்ன குப்பா நான் சொன்னது விளங்கியதா? என்ன சொல்வாய் அங்கே போய்?” என்று கேட்டார். அதற்கு குப்பன் “தெரியாதா சாமி, கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்” என்று சொல்வேன் என்றான்.
இதைத்தான் கல்கி சிலாகித்தார். ஒரே நிகழ்ச்சியை ஐயங்கார் சுவாமிகளும் சொன்னார். குப்பனும் சொன்னான். பளீரென நாலே வார்த்தைகளில் கூறிவிட்டான் பாருங்கள். அதுதான் சிறுகதையின் தேவை என்றார் அவர்.
(சென்னை வானொலி நிலையம் துவங்கி சில நாட்களில் கல்கி அவர்கள் அதில் சிறுகதைகள் பற்றி நிகழ்த்திய உரை. பொன்னியின் புதல்வர் பக்கம் 465).
அதுதான் கல்கி.
கல்கியின் சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு
இதிலும் ஒரு விந்தை உண்டு. பார்த்திபன் கனவுதான் முதலில் தொடர்கதையாக வந்தது. அதன் பிறகுதான் சிவகாமியின் சபதம் வந்தது. ஆனால் காலவரிசையில் இது உல்டாவாக இருக்கிறது.
கல்கி அவர்கள் சிவகாமியின் சபதம் கதை எழுதுவதற்கு முன்னால் மாமல்லபுரத்துக்கு வந்திருக்கிறார். அப்போது அவரை உள்ளூர் வழிகாட்டிகள் சூழ்ந்து கொண்டு கதைகள் விட்டதை எல்லாம் கூறியிருக்கிறார். அதன் பிறகு அவரது சிவகாமியின் சபதம் மற்றும் பார்த்திபன் கனவு ஆகியவை வெளி வந்து எல்லார் உள்ளத்தையும் கொள்ளை கொண்டன. இப்போது? மாமல்லபுரத்தில் கும்பலும் அதிகம், கைடுகளும் அதிகரித்துள்ளார்கள். இன்னும் ஒரு வித்தியாசம் என்னவென்றால் கைடுகள் இப்போதெல்லாம் “சிவகாமியின் சபதம் என்னும் கதையை கல்கி அவர்கள் எழுதினார்” என்று துவங்கி சிவகாமி, ஆயனர் ஆகியோரது கதையைக் கூறி, மீதி கதையையும் கூற ஆரம்பிக்கிறார்கள் (பொன்னியின் புதல்வர் பக்கம் 352).
அவரது பொன்னியின் செல்வன் மட்டும் சாதாரணமானதா என்ன? ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் ஆகியோரது காலத்தை பற்றி எழுதும் கிட்டத்தட்ட எல்லா தொடர்கதைகளிலும் வந்தியத்தேவனை நுழைக்காவிட்டால் வாசகர்கள் ஒத்துக்கொள்வதில்லை. அகிலன் எழுதிய வேங்கையின் மைந்தனானாலும் சரி, டாக்டர் விக்கிரமன் எழுதிய நந்திபுரத்து நாயகியானாலும் சரி, சுஜாதா எழுதிய காந்தளூர் வசந்த குமாரனானாலும் சரி வந்தியத்தேவன் தவறாமல் வருகிறார். அந்தளவுக்கு ஒரு கற்பனை பாத்திரத்துக்கு கல்கி உயிரூட்டியுள்ளார்.
நான் அவரது தொடர்கதையை வாராவாரம் ஆரம்பத்திலிருந்து படித்தது ‘அமரதாரா’தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் பாதியிலேயே இறந்து போனதால். அவரது மகள் ஆனந்தி அவர் வைத்த குறிப்புகளின் துணையுடன் கதையை முடித்தார். அதுவும் நன்றாகவே இருந்தது. இருந்தாலும் மனக்குறை இன்னும் மிச்சமிருக்கிறது.
கல்கியின் இன்னொரு கதையான தியாகபூமி பற்றி சில வரிகளைப் பார்ப்போமா.
தியாகபூமி திரைப்படமாக வந்துள்ளது. சாவித்ரியாக எஸ்.டி. சுப்புலக்ஷ்மி, சம்பு சாஸ்திரியாக பாபனாசம் சிவன், குழந்தை சாருவாக பேபி சரோஜா. டைரக்டர் கே. சுப்பிரமணியம். (பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை).
திரைக்கதை கல்கி. படப்பிடிப்பு ஸ்டில்களுடன் தொடர்கதை விகடனில் வாரா வாரம் வெளியானது. ஒவ்வொரு ஊரிலும் மக்கள் ரயில்வே ஸ்டேஷனுக்கே வந்து விகடன் இதழ் கட்டுகள் இறங்கும்போதே வந்து நின்று வாங்கிச் சென்றனர். இம்மாதிரி வரவேற்பை இக்கதைக்கு அடுத்து தில்லானா மோகனாம்பாள் கதைக்கே கிடைத்தது. அதுவும் விகடனில்தான் தொடர்கதையாக வந்தது.
கல்கியின் இப்படத்துக்கு அக்காலத்தில் மக்கள் பயங்கர ஆதரவு கொடுத்தனர். விமரிசகர்களோ கிழி கிழியெனேறு கிழித்தனர். கல்கி அதற்கு மேல் அவர்களைக் கிழித்தார். பொதுமக்கள் கடைசியில் விமரிசகர்கள் முகத்தில் கரி பூசினர். பலர் அக்காலத்தில் தங்கள் பெண்குழந்தகளுக்கு சாவித்ரி, சாரு என்றும் பிள்ளை குழந்தைகளுக்கு ஸ்ரீதரன் என்றும் பெயர் வைத்தனர். தியாகபூமி வளையல் என்றெல்லாம் பரபரப்பாக விற்பனைகள் நடந்தன.
தியாகபூமி கதை கன்னடத்தில் ஹேமாவதி என்ற பெயரில் எடுக்கப்பட்டது. உதிரிப்பூக்கள் அஸ்வினி சாவித்ரி (இங்கு ஹேமாவதி) பாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். படம் ஊற்றிக் கொண்டதால் ராசியில்லாத நடிகை என்றும் பட்டம் வாங்கினார்.
ஆனால் ஒரு விஷயம்தான் என்னை உறுத்துகிறது. சமீபத்தில் எழுபதுகளில் ஒரு திரைப்பட விழாவில் ஹேமாவதி படத்தை பார்த்தபோது அதன் கதை முப்பதுகளில் கோரூரு ராமஸ்வாமி ஐயங்காரால் கன்னடத்தில் எழுதப்பட்டதாக அப்போது தரப்பட்ட கையேடுகள் கூறியதாக நினைவு. என்ன நடந்ததென்றால் படத்தில் சில காட்சிகள் போன உடனேயே சட்டென நிமிர்ந்து உட்கார்ந்தேன், அட இது தியாகபூமியின் கதை போலிருக்கிறதே என்று. தியாகபூமியில் சம்பு சாஸ்திரிகளின் தங்கை என்றால் ஹேமாவதியில் தம்பி. மற்றப்படி சில காட்சிகள் அப்படியே இருந்தன.
சுந்தா அவர்களிடம் இது பற்றி பேச முற்பட்டபோது அவர் அப்படியெல்லாம் இருக்காது என ஒரேயடியாக தள்ளிவிட்டார். அவரது கூற்றின்படி முப்பதுகளில் தேசவிடுதலை போராட்டங்களை நிலைக்களனாக கொண்ட கதைகள் பல ஒரே மாதிரியாக இருக்கும் என்பதே. அவரை எப்படியாவது ஹேமாவதி கன்னட திரைப்படத்தை பார்க்க வைத்திருந்திருக்க வேண்டும். எனது சந்தேகம் என்னவென்றால் யார் யாரை பார்த்து எழுதியிருப்பார்கள்? கோரூரு ராமஸ்வாமி ஐயங்காரும் சரி கல்கியும் சரி பிரபல எழுத்தாளர்கள்.
எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் தமிழில் தியாகபூமி எடுப்பதற்காக ஹேமாவதி கதையின் உரிமையை வாங்கி அக்கதைக்கு தமிழ் திரைக்கதை எழுத கல்கியிடம் தந்திருக்க வேண்டும். அவ்வாறெனில் காப்பி என்றெல்லாம் கூற இயலாது. வெறும் வணிகச் செயல்பாடு அவ்வளவே. இப்பதிவை படிப்பவர்கள் யாருக்கேனும் மேல்விவரங்கள் இது பற்றி தெரிந்தால் பின்னூட்டமாக இடுமாறு கேட்டு கொள்கிறேன்.
மீண்டும் கல்கி. கல்கியின் அளவுக்கு அவர் மகன் ராஜேந்திரனும் மகள் ஆனந்தியும் சோபிக்க இயலவில்லை என்பதை பார்க்கும் போது ஓர் ஆலமரத்தின் கீழ் மற்ற மரங்கள் வளர இயலாது என்றுதான் நினைவுக்கு வருகிறது.
கல்கியின் பொருளாதார நிலை பற்றி இப்போது சில வரிகள்.
எனது வறுமையும் புலமையும் என்னும் பதிவில் நான் இவ்வாறு எழுதியுள்ளேன்.
“திருவிளையாடலில் நாகேஷ் சிவாஜியைக் கேட்பார் "பிரிக்க முடியாதது எது?" சிவாஜியின் பதில் அம்பு போல வரும் "வறுமையும் புலமையும்" என்று. சமீப காலம் வரைக்கும் அது உண்மையாகவே இருந்தது.
நிறைய பொருள் ஈட்டியப் புலவர்கள் அதிகம் இல்லை. உ.வே.சாமிநாத ஐயர் அவர்கள் தன் ஆசிரியர் பற்றி எழுதிய புத்தகத்தில் அவர் (ஆசிரியர்) பல தனவந்தர்களால் ஆதரிக்கப்பட்டதை குறிப்பிட்டுள்ளார். பொருள் ஈட்டியிருக்கிறார், ஆனால் எல்லாம் செலவழிந்து விட்டன. கடைசி காலத்தில் ரொம்ப மிஞ்சவில்லை என்றுதான் அறிந்தேன்.
இது ஓர் உதாரணம் மட்டுமே. அதாவது புலவர்களுக்கு புலமையைத் தவிர வேறு லௌகீக விஷயங்களில் தேர்ச்சியிருந்ததில்லை என்பதையே குறிப்பிட விரும்புகிறேன். இருபதாம் நூற்றாண்டில் ஐம்பதுகள் வரையிலும் கூட இதே நிலைதான் ஏறத்தாழ இருந்திருக்கிறது.
வசதியுடன் வாழ்ந்தவர்களும் மாத ஊதியத்தில்தான் இருந்திருக்கிறார்கள். கல்கி அவர்கள் இறக்கும் போது அவர் சம்பளம் 3000 ரூபாய் என்று அறிகிறேன். 1954-ல் இது ஒரு பிரமிப்பை ஊட்டியத் தொகை. வீடு, கார் என்று தன் மகனுக்கு விட்டுச் சென்றார். மேலும் தன் எழுத்துக்களுக்கான காப்பிரைட் வேறு. அதிலும் விகடனில் அவர் ஆசிரியராக இருந்த போது எழுதியதை வாசன் அவர்கள் தன் வசம் வைத்திருந்திருக்கிறார். சாவி அவர்கள் தன் எழுத்துக்களுக்காகப் போராடி வாசன் அவர்களை கன்வின்ஸ் செய்து காப்பிரைட்டைத் தன்வசப்படுத்தியவுடன் கல்கியின் மகனுக்கும் அதன் பெனிஃபிட் கிடைத்தது”.
இப்போது பொன்னியின் புதல்வர் புத்தகத்தை பார்க்கும்போது அவரது கடைசி சம்பளம் 2500 ரூபாய் என்று தெரிகிறது. மனைவிக்கு, மகளுக்கு மற்றும் மகனுக்கு அவர் விட்டுச் சென்ற தொகைகள் கணிசமானவை. இன்றைய மதிப்பில் சில நூறு மடங்குகள் அதிகமானவை. அதிலும் அவரது நூல்களுக்கான காப்பிரைட்டில் ஒரு விசேஷம் உண்டு. பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க பலமுறை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்கான காப்பிரைட்டை ஒரு தொகைக்கு தரும் ராஜேந்திரன் ஒரே ஒரு நிபந்தனைதான் வைப்பார். அதாவது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துள் திரைப்படம் வரவில்லையென்றால் காப்புரிமை ராஜேந்திரனிடமே திரும்பும். அதன்படி காப்புரிமை பல முறை மாற்றித் தரப்பட்டு திரும்பவும் ராஜேந்திரனிடமே வந்துள்ளது.
இது ராஜேந்திரனின் திறமையையே காட்டுகிறது. அதன்றி அவுட்ரைட்டாக விற்றிருந்தால் உரிமைக்கு உரிமையும் போச்சு, படமும் வெளிவந்திராது. அவ்வப்போது பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு ஆகியவை கல்கியில் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டன. இது பற்றி நான் சுந்தா அவர்களிடம் பேசிய போது அவர் ஒவ்வொரு முறையும் இதனால் கல்கியின் சந்தாக்கள் விறுவிறென ஏறுகின்றன என ராஜேந்திரன் தன்னிடம் கூறியதாக எனக்கு சொன்னார்.
ஆக, எழுதினால் மற்றும் போதாது, நன்றாக சந்தைப்படுத்துவதும் முக்கியம் என்பதைத்தான் இது சுட்டிக் காட்டுகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்
-
இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் எழுத்தாளர், கல்வியாளர், ஆசிரியர்.
தமிழிசைச் சங்கத்தின் திருமுறை இசைப் பண்களின் ஆராய்ச்சிக் குழுவில் அறுபது
ஆண்டுகள் தலைவரா...
8 hours ago
20 comments:
சூப்பர் சார்!
//கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்//
இதுக்கு மேல(கீழே) இருக்குறதெல்லாம் பயங்கர மொக்கை!
அதுனால மேல குப்பன் சொன்ன மாதிரி!
சுருக்குன்னு சொல்லுங்க யாராவது!
Doondu,
Vanthiyaththevn is not an imaginary character.
There are historical proof for his existence in history.
Meththap padiththa kuttaip paappan mathiri ezuthireer...
komanakrishnan
@கோமணகிருஷ்ணன்
பொன்னியின் செல்வன் எழுதுவதற்காக கல்கி பல புத்தகங்களை ரெஃபர் செய்துள்ளார். அவை எல்லாவற்றிலுமாக சேர்ந்து 12 வரிகளிலேயே வல்லவரையன் வந்தியத்தேவன் விஷயம் முடிவடைகிறது. அதிலும் குத்தவ்வையை மணம் புரிந்த அவன் வேங்கி நாட்டைச் சேர்ந்த கீழை சளுக்கிய மரபினன் என சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்க, அதை ஏற்க மறுத்து அவனை வாணர்குல வீரனாக சித்தரித்து அவனைப் பற்றிய 12 வரிகளை பல்லாயிரம் வரிகளாக விரித்தது கல்கிதான் (பொன்னியின் புதல்வர் பக்கங்கள் 563-566).
அன்புடன்,
டோண்டு ராகவன்
பொன்னியின் புதல்வர் யாரு?
அவர் சொல்றதை நம்புறிங்க,
கல்கி சொல்றதை நம்ப மாட்டிகிறிங்க!?
(பத்த வச்சிட்டியே பரட்ட)
//பொன்னியின் புதல்வர் யாரு? அவர் சொல்றதை நம்புறிங்க, கல்கி சொல்றதை நம்ப மாட்டிகிறிங்க!?//
இதைத்தான் சீதைக்கு ராமன் சித்தப்பா என்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//கும்பகோணத்து பாப்பான் குட்டையில் விழுந்தான்//
ரசித்தேன் சிரித்தேன்.
//வால்பையன் said...
இதுக்கு மேல(கீழே) இருக்குறதெல்லாம் பயங்கர மொக்கை!
அதுனால மேல குப்பன் சொன்ன மாதிரி!
சுருக்குன்னு சொல்லுங்க யாராவது!//
இதை கன்னா பின்னான்னு ரிப்பீட்டிக்கிறேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
bostonsriram.blogspot.com
//மீண்டும் கல்கி. கல்கியின் அளவுக்கு அவர் மகன் ராஜேந்திரனும் மகள் ஆனந்தியும் சோபிக்க இயலவில்லை என்பதை பார்க்கும் போது ஓர் ஆலமரத்தின் கீழ் மற்ற மரங்கள் வளர இயலாது என்றுதான் நினைவுக்கு வருகிறது.//
அப்படி ஒரேயடியாக சொல்லிவிடவும் முடியாது. திருமதி.ஆனந்தி செய்தது
மகள் தந்தைக்கு ஆற்றும் உதவியாய்
அமைந்தது. அமரதாரா, திடீர் சோகத்தில் பட்டென்று அறுபட்டு நின்றதும், தந்தையின் எழுத்துக் குறிப்புகளை வைத்துக் கொண்டு, மகள் தந்தையின் அருமந்த வாசகர்கள் சற்றும் முகம் சுளிக்காதவாறு (உயிரோடு இருந்து கல்கியே எழுதுவது போல) பொறுப்புடன் கதையை முடித்துக் காட்டியது பெரும் காரியம். முன்னே பின்னே கி.ரா.க்கு இருந்த எழுத்துப் பழக்கம் அக்கா ஆனந்திக்கு இல்லை என்பதால் சொல்கிறேன்.
கல்கி இருந்த பொழுதே அவர் பிள்ளை கி.ராஜேந்திரன் எழுதத் துவங்கி விட்டார். கல்கியின் எழுத்து நடையிலிருந்து விலகிய, லேசாக நகைச்சுவை கலந்த உயிருள்ள எழுத்து அவரது.. அவரது 'பொங்கி வரும் பெருநிலவு' இன்றும் எனக்குப் பிடித்த நாவல். 'எனக்குப் பிடித்த எழுத்தாளர்' என்கிற தலைப்பில் எழுதச் சொல்லி 'குமுதம்' நடத்திய ஒரு போட்டியில், கி.ராஜேந்திரனை எனக்குப் பிடித்த எழுத்தாளராய் நான் வரித்து எழுதிய கட்டுரை பரிசுக்கு உரிய கட்டுரையாய் பிரசுரமாயிற்று. 'கல்கி'யில் பொறுப்புகளை ஏற்றதும், கி.ரா.தொடர்ந்து எழுத்துப்பணியைத் தொடரவில்லையே தவிர, 'கல்கி' பத்திரிகையின் பின்புலத்தில் நிச்சயம் அவரது எழுத்துப்பணி வேறு வகைகளில் இருந்திருக்கும்.
இப்பொழுது தனது அனுபவங்களை 'கல்கி'யில் ராஜேந்திரனே எழுதி வருவதாகத் தெரிகிறது. வாய்ப்பு கிடைப்பின் படித்துப் பார்க்கவும்.
பேரி திம்மப்ப செட்டி, சுங்கராம செட்டி, பச்சையப்ப முதலி, அழக பிள்ளை, மணலி முத்துக் கிருஷ்ண முதலி, லிங்கிச் செட்டி, டோண்டு ராகவன் - இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?
- சிமுலேஷன்
//பேரி திம்மப்ப செட்டி, சுங்கராம செட்டி, பச்சையப்ப முதலி, அழக பிள்ளை, மணலி முத்துக் கிருஷ்ண முதலி, லிங்கிச் செட்டி, டோண்டு ராகவன் - இவர்களுக்கிடையேயான ஒற்றுமை என்ன?//
எல்லாருமே ஆம்பிளை!
எப்பூடி!?
//அதிலும் குத்தவ்வையை//
கல்கி அவர்கள், 'பொன்னியின் செல்வன்' பூராவும் எந்த இடத்திலும்
'குந்தவை'யை 'குந்தவ்வை' என்று எழுதியது இல்லை.
பின்னால் 'நந்திபுரத்து நாயகி' எழுதிய விக்கிரமன் அவர்கள், குந்தவையை
'குந்தவ்வை' என்று விளித்து புதினம் பூராவும் தொடர்ந்து எழுதியிருக்கிறார்.
'பொன்னியின் செல்வனி'ல், நந்தினிக்கு, குந்தவைக்கு, வானதிக்கு, பூங்குழலிக்கு, வந்தியத்தேவனுக்கு, அருள்மொழிவர்மனுக்கு, சின்ன-பெரிய பழுவேட்டயர்க்கு என்று இவர்களுக்கு மணியம் போட்ட சித்தரங்களில் மனம் மயங்கி வாழ்ந்த மனிதர்களாய் இவர்களை மதித்த வாசகர்கள், அவரவர் பெயர்களுடனும் ஒன்றிப்போனார்கள்.. இந்த நேரத்தில்,
விக்கிரமன் தனது நாவலில், புழக்கத்துக்கு கொண்டு வந்த 'குந்தவ்வை' என்னும் உச்சரிப்பு கொண்ட பெயர் ஒரு நெருடலாகவே இருந்தது.
ஆனால் விக்கிரமன் அவர்கள், குந்தவ்வை என்பது ஆந்திர உச்சரிப்பு என்றும் அப்படி எழுதுவதே சரியென்றும் வாதிட்டிருக்கிறார்.
@சிமுலேஷன்
எல்லோரும் வைணவர்கள்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
@ஜீ.வி.
நீங்கள் சொல்வதும் சரிதான். நான் அரு.ராமனாதனின் ராஜராஜ சோழன் நாடகம் பார்த்த தாக்கத்தில் எழுதிவிட்டேன். ராஜராஜ சோழனின் தமக்கை குந்தவ்வை, அவன் பெண் குந்தவி. சளுக்கிய இளவரசன் விமலாதித்தனை காதலிக்கிறாள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
\\ராஜராஜ சோழன் நாடகம் பார்த்த தாக்கத்தில்//
நல்ல வேளை, நான் கூட தற்போதய மாடர்ன் ராஜராஜ சோழன் நடாத்திக் கொண்டிருக்கும் நாடகமோ என்று பயந்து விட்டேன்.
இந்தப் பதிவில் சும்மாத் தமாஷுக்காக எழுதியிருப்பதால், பேசாமல் இருந்து விடுவோமே என்றுதான் இருந்தேன். ஆனால், வைணவ பரிவாஷை பற்றி கல்கி சொன்னதை நீங்கள் எடுத்தாண்டதும், நம்ம வால்பையன் வந்து கொடுத்த மொக்கை சர்டிபிகேட்டும், எழுதத் தூண்டுகின்றன.
நீட்டி முழக்கிச் சொல்வது வைணவ பரிபாஷை இல்லை. கல்கி அதைப் புர்ந்துகொண்டதும் நீங்கள் அதைப் புரிந்துகொண்டதும், நையாண்டி என்ற ஒரு அம்சத்தைத் தவிர, உண்மை ஏதுமில்லை. நீட்டி முழக்கிச் சொல்வதென்பது, மனித சுபாவம், வைணவன் மட்டுமே அதைச் செய்வதில்லை. Exaaggeraation இதை நாம் ஒவ்வொருவருமே, தொடர்ந்து செய்துகொண்டுதான் இருக்கிறோம். சிவாஜி, நடிப்பில் இந்த நாடகத்தன்மையை அளவுக்கு மீறித்தான் மிகைப்படுத்திக் கடைசிவரை நடத்திக் கொண்டிருந்தார்.நான் சொல்வதுதான் முதலும் கடைசியும் என்று சொல்வதற்காகவே எழுதிக் கொண்டிருக்கிற கோவி கண்ணன்களுமே இப்படி ஓவரா நீட்டி முழக்கிக் கொண்டிருப்பவர்கள் தான்.
பரிபாஷை, சங்கேதம் அல்லது குறியீடுகளாகச் சொல்வது என்பது, எங்கேயுமே உள்ள பழக்கம் தான். நவீன அறிவியலாகட்டும், ஆன்மீகமாகட்டும், சித்தர் வைத்தியம், சித்தர் பாடல்கள் என்று இப்படி எல்லாவற்றிலுமே இருப்பதும் கூட.
ஈசி! ஈசி! கிருஷ்ணமூர்த்தி அவர்களே. வைணவ பரிபாஷையை வைணவனான நானே கிண்டல் செய்வேனா?
பரிபாஷை என்பது எல்லா குழுவினருக்கும் பிரத்தியேகமாகவே உண்டு. திராவிட பேச்சாளர்கள் பேசுவதை விடவா? பின்நவீனத்துவர்களை இதில் மிஞ்சவும் இயலுமா?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//வைணவ பரிபாஷையை வைணவனான நானே கிண்டல் செய்வேனா? //
பரி என்றால் குதிரை தானே!
குதிரை பாஷை உங்களுக்கு எதுக்கு அழகு தமிழ் இருக்கும் போது!
//அந்தளவுக்கு ஒரு கற்பனை பாத்திரத்துக்கு கல்கி உயிரூட்டியுள்ளார்.
//
is vandy not real?
@வால்பையன்
அப்படி பார்த்தால் உணவு பரிமாறுதல் என்றால் உணவுக்காக குதிரை மாறும் என பொருள் வருமோ?
@சர்வேசன்
பொன்னியின் செல்வன் எழுதுவதற்காக கல்கி பல புத்தகங்களை ரெஃபர் செய்துள்ளார். அவை எல்லாவற்றிலுமாக சேர்ந்து 12 வரிகளிலேயே வல்லவரையன் வந்தியத்தேவன் விஷயம் முடிவடைகிறது. அதிலும் குத்தவ்வையை மணம் புரிந்த அவன் வேங்கி நாட்டைச் சேர்ந்த கீழை சளுக்கிய மரபினன் என சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்க, அதை ஏற்க மறுத்து அவனை வாணர்குல வீரனாக சித்தரித்து அவனைப் பற்றிய 12 வரிகளை பல்லாயிரம் வரிகளாக விரித்தது கல்கிதான் (பொன்னியின் புதல்வர் பக்கங்கள் 563-566).
@ஜீவி
ஆனந்தியோ, கி.ராஜேந்திரனோ நன்றாக எழுதவில்லை எனக்கூற மாட்டேன். ஆனால் கல்கியுடன் கம்பேர் செய்தால் ஒன்றுமேயில்லை. அவரது குழந்தைகள் என்னும் முறையில் இந்த ஒப்பிடலை அவர்களால் தவிர்க்க இயலாது.
ராஜராஜ சோழனையும் மிஞ்சினான் ராஜேந்திர சோழன். ஆனால் அவனுக்கு பிறகு மெல்லிய இறங்கு முகம்தானே சோழ நாட்டுக்கு. அது போல என வைத்து கொல்ளலாமே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
/பின்நவீனத்துவர்களை இதில் மிஞ்சவும் இயலுமா?/
பின்நவீனத்துவம் பேசின உடனேயே வால்பையன் வந்து குதித்து விட்டார்!ஆக பின் நவீனத்துவத்திற்கு, அவ்வளவு வசீகர சக்தி இருக்கிறது?!
அப்புறம், தந்தையைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கையில், கல்கியின் மகனோ, மகளோ, சரியாக நினைவுக்கு வரவில்லை.கல்கி தொடர்கதையை எப்படி எழுதுவார் என்பதைப் பற்றி ஒரு சுவையான குறிப்பு ஒன்று நினைவுக்கு வருகிறது.
மகன் மகள் இருவருக்கும் தான் எழுதிய பகுதியைப் படித்துக் காட்டி விட்டு, அவர்களுக்கு அது புரியவில்லை என்றால், கொஞ்சம் கூடத் தயங்காமல் உடனே மாற்றி எழுதுவாராம். வேறெந்த எழுத்தாளரிடத்திலும், காணமுடியாத ஒரு பண்பு இது.
கி.ராஜேந்திரன், நல்ல எழுத்தாளராக வந்திருக்கக் கூடும் என்றாலும், என்ன காரணத்தினாலோ, அவரே அதைத் தவிர்த்து விட்ட மாதிரித் தான் தோன்றுகிறது!
Post a Comment