வாடிக்கையாளர்களை அணுகும் முறை
ரொம்ப நாளைக்கப்புறம் இந்த வாடிக்கையாளரை அணுகும் முறைகள் லேபலில் இன்னொரு பதிவு. முதலில் அதை தூண்டிய நிகழ்ச்சியை பார்ப்போம்.
சாரு நிவேதிதா தான் விஜய் டிவி-யில் ஒளிபரப்பிய நீயா நானா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டதாகவும் அதற்காக பணம் எதுவும் தராமல் ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தது பற்றி இட்லிவடையார் ஆனந்த விகடனை மேற்கோள் காட்டி இட்டிருந்த இடுகையிலிருந்துசாரு நிவேதிதா சொன்ன சில வரிகளை முதலில் பார்ப்போம்.
“விஜய் டி.வி-யின் 'நீயா நானா' நிகழ்ச்சியில் பல முறை விருந்தினராகக் கலந்து கொண்டு இருக்கிறேன். பொதுவாக, நான் டி.வி. நிகழ்ச்சிகள் பார்ப்பது இல்லை என்றாலும், சமூக அக்கறையுடன் கூடிய விஷயங்களை விவாதத்துக்கு எடுத்துக்கொள்வதால் 'நீயா நானா' நிகழ்ச்சியைப் பிடிக்கும். ஆனாலும், அதில் கலந்து கொள்வதில் எனக்கு ஒரு பிரச்னை இருந்தது. பிரதான விருந்தினராக வரவழைத்துவிட்டு, கடைசியில் காசு எதுவும் கொடுக்க மாட் டார்கள். ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.
ஆனால், ஒருமுறை 'நீயா நானா'வில் கலந்துகொள்ள அழைத்தபோது, அதே தேதியில் கேரளாவின் கொச்சியிலும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஒப்புக்கொண்டு இருந்தேன். (தமிழ்நாட்டைவிட அடியேனை கேரள மக்களுக்கு அதிகம் தெரியும்). அதனால் என் இயலாமையை 'நீயா நானா' குழுவுக்குத் தெரிவித்தபோது, அவர்கள் கொச்சிக்கு விமான டிக்கெட் எடுத்துக் கொடுப்பதாகச் சொன்னார்கள். அப்போதுதான் எனக்கே தெரியும் விமான டிக்கெட் எடுத்துக் கொடுக்கும் அளவுக்கு அவர்களால் செலவு செய்ய முடிகிறது என்று!
இன்னொரு சமயம், விஜய் டி.வி-யின் இன்னொரு நிகழ்ச்சிக்காக நளினி ஜமீலாவுடன் நானும் கலந்துகொண்டேன். அதில் கலந்து கொள்ள நளினி ஜமீலாவுக்கும், அவருடைய உதவியாளருக்கும் திருவனந்தபுரத்திலிருந்து வரவும் திரும்பவும் விமான டிக்கெட், அவர்கள் சென்னையில் இரண்டு நாட்கள் தங்க ஹோட்டல் செலவு, விலை உயர்ந்த பட்டுப் புடவை என்று மொத்தம் 30,000 ரூபாய் செலவு செய்தார்கள். ஆனால் எனக்கு என்ன என்று கேட்டபோது, 'நாளை வீட்டுக்கு அனுப்பிவைக்கிறோம்!' என்றார்கள்.
ஒன்று சொல்ல மறந்துவிட்டேன். விஜய் டி.வி-க்கும் எனக்கும் இடையே மீடியேட்டராகச் செயல்பட்டார் ஒரு நபர். அவர் சொன்னபடி அந்த 'நாளை' என்ற நாள் இன்னும் வரவே இல்லை. நானும் ஒரு போன் செய்து பார்த்தேன். 'இதோ ஒன் அவர்ல அனுப்பிவைக்கிறேன் சார்!' என்றார் எந்தப் பதற்றமும் இல்லாமல். ஆனால், அந்த 'ஒன் அவரு'ம் இன்னும் வரவில்லை. சரி, போ என்று நானும் விட்டுவிட்டேன்.
அதற்குப் பிறகும் 'நீயா நானா'வுக்காக போன் வரும். நானும் போவேன்... வருவேன். ஆனால், பைசா மட்டும் கிடையாது. 'எங்கே என் பணம்' என்று நான் கேட்பதும், 'நாளை அனுப்பிவைக்கிறேன் சார்' என்று அந்த நபர் சொல்வதும், அந்த 'நாளை' என்பது வராமலே போவதும் ஒரு சடங்காகவே நடந்துகொண்டு இருந்தது. சரி, போகாமல் இருந்துவிடலாம் என்று பார்த்தாலோ டி.வி-யில் மூஞ்சியைக் காண்பிக்கும் ஆசை அந்த எண்ணத்தைத் தடுக்கிறது. இதற்கிடையில் 'நீயா நானா' நிகழ்ச்சியின் மூளை யாகச் செயல்படும் ஆண்டனியும் எனக்கு நண்பராகிவிட்டார். அவர்தான் அந்த நிகழ்ச்சியின் பொறுப்பாளர்.
இந்த நிலையில் ஜூலை 17-ம் தேதி 'நீயா நானா' சூட்டிங்கில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்தார் அந்த மீடியேட்டர். இரண்டு காரணங்களைச் சொல்லி, அழைப்பை மறுத்தேன். ஒன்று, இலவச சேவை. அதையும் பகலில் செய்தால் பரவாயில்லை. இரவு 12 மணிக்கு மேல்தான் படப்பிடிப்பை ஆரம்பித்து இரண்டு மணிக்குத்தான் முடிப்பார்கள். அது வேறு பெரும் தொல்லையாக இருந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்களில் பலர் இளம் பெண்கள். கல்லூரி மாணவி கள். அவர்களை எல்லாம் வீட்டில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கடைசியாக என் வீடு வந்து சேர மூன்று மணிக்கு மேல் ஆகி விடும்.
'இந்த முறை அப்படி நடக்காது. 10 மணிக்கே சூட்டிங் ஆரம்பம். 12 மணிக்கு அனுப்பிவிடுவேன்!' மீடியேட்டரின் வாக்குறுதி. 'பணம்?'
'எப்போதும் கொடுப்பது போல் நிகழ்ச்சி முடிந்ததும் கை மேல் பணம்!'
'என்னது... எப்போதும் கொடுப்பது போலா? எப்போதய்யா அப்படிக் கொடுத்தீர்கள்?'
'ஐயோ சார்! நீங்கள் கேட்டு வாங்கிக்கொள்ளவில்லையா? இந்த முறை அப்படி நடக்காது. நிகழ்ச்சி முடிந்ததும் கொடுத்துவிடுவார்கள்! எட்டு மணிக்கே வண்டி வந்து விடும். கூடவே, மேடத்தையும் அழைத்து வாருங்கள்' என்றார். காரணம், நிகழ்ச்சி அப்படி. திருமணம், மறுமணம் என்பது தலைப்பு. நானும் அவந்திகாவும் மறுமணம் செய்துகொண்டவர்கள்.
சொன்ன நேரத்துக்கு வண்டி வரவில்லை. அவந்திகாவுக்கு டி.வி. என்றாலே அலர்ஜி. 'அடப் போய்யா, நீயும் உன் டி.வி-யும்!' என்று சொல்லிவிட்டு அவள் படுத்துத் தூங்கிவிட்டாள். ஒருவழியாக வண்டி வந்து சேர்ந்தது. ''12 மணிக்கு மேலதான் சார் சூட்டிங். அதனாலதான் மெதுவா கிளம்பி வந்தேன்!'' என்றார் டிரைவர்.
போய்ப் பார்த்தால் கோபிநாத் ஓய்வு எடுத்துக்கொண்டு இருந்தார். பாவம், காலையிலிருந்து இரண்டு சூட்டிங்கில் கலந்துகொண்ட களைப்பு. 'நீயா நானா' சூட்டிங் ஆரம்பித்தபோது மணி நடுநிசி ஒன்றரை. பாவம், அத்தனை பார்வையாளர்களும் 10 மணியில்இருந்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். சூட்டிங் முடியும்போது சரியாக அதிகாலை 3.45 மணி. வீட்டுக்கு வந்து சேர்ந்தபோது சுமார் நான்கரை மணி. தூக்கக் கலக்கத்தில் பணம் பற்றிக் கேட்கவில்லை. மறுநாள் கேட்டபோது அதே ஸ்டீரியோ டைப் பதில். 'நாளை கொடுத்து அனுப்புகிறேன்!' ஆனால், இந்த முறை நான் முன்பு போல் சும்மா இல்லை. மறுநாளும் மறுநாளும் போன் செய்தேன். இப்போது மீடியேட்டர் என் போனை எடுப்பதில்லை. வேறு போனிலிருந்து பேசினால் வைத்துவிடுகிறார். அவந்திகாவை விட்டுப் பேசச் சொன்னால் 'அவரோட மச்சான் பேசுகிறேன், மாமா பேசுகிறேன்' என்கிறார்.
இத்தனை அனுபவங்களுக்குப் பிறகு என் மனதில் எழும் கேள்விகள்:
பிரதான கெஸ்டாக ஒருவரை வரவழைத்துவிட்டு இப்படித்தான் நடத்துவீர்களா?
காலை நான்கு மணி வரை ஒருவரிடம் வேலை வாங்கிவிட்டு, அதற்கான சம்பளத்தைக் கொடுக்க வேண்டாமா? இதுதான் சமுதாய மறுமலர்ச்சியைப்பற்றி விவாதிக்கும் ஒரு நிகழ்ச்சிக்கு அடையாளமா?
இப்படி நடுநிசி வரை இளம் பெண்களையும் கல்லூரி மாணவிகளையும் சூட்டிங்கை முன்வைத்து காக்கச் செய்வது சித்ரவதை இல்லையா”?
மேலும் சில வரிகள்.
“சாருநிவேதிதாவின் கடிதம் கிடைக்கப் பெற்றதும் 'நீயா? நானா?' நிகழ்ச்சியின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் ஆண்டனியிடம் கடித விவரம் குறித்துக் கேட்டோம்...
''பணம் கொடுத்துப் பேச வைத்தால் செட் செய்த நாடகம் போன்றாகிவிடும் என்பதால், எங்களுடைய டாக் ஷோக்களில் கலந்துகொள்பவர்கள் யாருக்கும் நாங்கள் பணம் தருவது இல்லை. என்.டி.டி.வி. உள்ளிட்ட சேனல்களில்கூட அந்த மரபு இல்லை. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுபவர்களை அழைத்துவரும் பொறுப்பை சுந்தர்ராஜன் என்ற நபரிடம் ஒப்படைத்து இருந்தோம். அவர் எங்கள் ஊழியர் கிடையாது. பணப் பட்டுவாடா அவர் மூலமாகவே நடந்தது. இந்த விவகாரத்தில் நான் சாருவையே சப்போர்ட் செய்வேன். அவருடைய எழுத்துக்கள் எனக்குப் பிடிக்கும். ஆனால், அவரைப் போன்ற சிறு பத்திரிகையாளர்கள், நல்ல எழுத்தாளர்களின் கருத்துக்கள் மக்களிடையே சென்றடைய வேண்டும் என்பதற்காகத்தான் எங்கள் நிகழ்ச்சியில் அவர்களைப் போன்றவர்களுக்குத் தொடர்ந்து ஒரு தளம் அமைத்துக் கொடுக்கிறோம்.
நளினி ஜமீலா கலந்துகொண்ட நிகழ்ச்சிக்கான மொத்த பட்ஜெட் 35 ஆயிரம் ரூபாய்தான். ஆனால், சமூகத்தால் வஞ்சிக்கப்பட்ட நல்ல உள்ளம்கொண்ட நளினிக்கு என் சொந்தப் பணத்தில் இருந்துதான் அந்தச் செலவுகளைச் செய்தேன். படப்பிடிப்பு நடக்கும் நேரம், காலம் குறித்து சாருவிடம் சரிவரத் தெரிவிக்காததும் அந்த மீடியேட்டரின் தவறே. இனி, எங்கள் நிகழ்ச்சிக்குப் பிரபலங்களை அழைத்து வரும் பொறுப்பில் இருந்து அவரை விடுவிக்க முடிவு செய்துள்ளேன். எது எப்படியோ நடந்த சம்பவங்கள் வருத்தத்தையே தருகின்றன!'' என்கிறார் ஆண்டனி வருத்தம் தோய்ந்த குரலில்.
ஆண்டனியிடம் நாம் பேசிய சிறிது நேரத்துக்குப் பிறகு நம்மைத் தொடர்புகொண்டார் சாரு நிவேதிதா. ''இப்போதான் ஆண்டனி என்கிட்ட பேசினார். நிகழ்ந்த தவறுகளுக்கும் சிரமங்களுக்கும் வருத்தம் தெரிவித்துக்கொண்டார். இதுவரை வழங்கப்பட்டதாகச் சொல்லப்பட்டு, வழங்கப்படாமல் இருந்த தொகையையும் இரண்டொரு நாட்களில் சேர்ப்பிக்கப்படும்னு சொன்னார். அந்த மீடியேட்டருடன் இனி தொடர்புகொள்ள வேண்டாம்னும் சொன்னார்!'' என்று தெரிவித்தார்.
(நன்றி: விகடன்)”
இதெல்லாம் ஏன் நடந்தன. என்ன ஏது என்பதை முதலில் பேசிக் கொள்ளாது நிகழ்ச்சிக்கு சென்றது சாருவின் தவறு.
//ஒருவேளை அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கோபிநாத்தும் இலவச சேவையே செய்கிறார் போலிருக்கிறது என்று அதை விட்டுவிட்டேன்.//
கோபிநாத்தையும் சாரு தன்னை மாதிரி இளிச்சவாயராக நினைத்து கொண்டது முதல் தவறு. சரி, பிறகு ஏன் போனாராம்? டி.வி.யில் முகம் காட்டும் ஆசைதான் வேறென்ன? அப்ப்டியானால் அதுதான் உனக்கு கூலி என்று விஜய் டிவியினர் சொல்லாமல் சொல்லி செயலில் கட்டியுள்ளனர் என்பதே நிஜம். அப்படியே அந்த நிகழ்ச்சிக்கு போகாமல் இருந்திருந்தால் வேறு ஏதாவது படைப்புகள் செய்திருப்பாரா? இக்கேள்விக்கு சாருதான் பதில் சொல்ல வேண்டும். எனது ஊகம் முழுதும் சரியானதாக இருக்கலாம் என்றாலும் அதை நான் இங்கே கூறுவது முறையல்ல. :))
மீடியேட்டரை விடுங்கள். அவரை எல்லோருமே விட்டுக் கொடுத்து விட்டனர். அவரைக் கேட்டால் வேறு ஏதாவது கதை சொல்வாராக இருக்கும்.
தயாரிப்பாளர் ஆண்டனி கூறுவதை பார்ப்போம்.
முதலில் கூறுகிறார், பணம் தருவது இல்லை என்று. பிறகு கூறுகிறார் பணப்பட்டுவாடா சுந்தரராஜன் மூலம் நடப்பதாக. என்ன முரணான பேச்சு, ஒரே பாராவில். பிறகு கூறுகிறார் நளினி ஜமீலாவுக்கு தன் சொந்தப் பணத்திலிருந்து செலவு செய்ததாக. ஐயோ உள்ளமே உருகி விட்டது, இந்த கேழ்வரகிலிருந்து நெய் வடியும் பேச்சைக் கேட்டு. சரி ஒரு வாதத்துக்கே வைத்து கொள்வோமே, மீடியேட்டர் ஏமாற்றினார் என்று. அவரை நியமித்து, பிறகு என்ன நடக்கிறது என்ற கண்ட்ரோல் இல்லாமல் இந்த மனிதர் இருந்திருக்கிறார். இவரெல்லாம் தயாரிப்பாளராம். யார் காதில் ஐயா பூ சுற்றுகிறார் இவர்?
ஆக, மேலே உள்ள விஷயத்தில் எல்லோருமே முழு உண்மையைக் கூறவில்லை. இப்போது சாருவுக்கு பணம் வருமா என்பது என் கவலையில்லை. அது அவர் பாடு, விஜய் டி.வி.யின் பாடு. இதெல்லாம் ஏன் நடந்தன என்பதை இப்போது பார்ப்போம்.
நான் இட்ட வாடிக்கையாளரை அணுகும் முறைகள் - 10-லிருந்து சில வரிகளை முதலில் பார்ப்போம்:
“இதுதான் பிழைப்பு என்று வந்தாயிற்று. இந்த பணம் வந்துதான் உலை கொதிக்க வேண்டும் என்ற நிலையும் வந்தாயிற்று. பிறகு வர வேண்டிய தொகைகளை வசூலிப்பதில் என்ன தயக்கம்? இருந்தாலும் பலருக்கு இதில்தான் பிரச்சினை. வேலையை சூரத்தனமாக முடித்து விடுவார்கள். பில்லையும் அனுப்பி விடுவார்கள். பிறகு வசூல் செய்ய வாடிக்கையாளரிடம் தொங்க வேண்டிய நிலை.
அவ்வாறு இல்லாது கறாராக வசூல் செய்தால்தான் பிழைக்க முடியும்.
முதல் விதி: புதிய வாடிக்கையாளராக இருந்தால் முதலில் முன்பணம் பெற முயற்சிக்க வேண்டும். சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.
இப்போது குறிப்பிடும் வாடிக்கையாளர்கள் நிஜமாகவே பெரிய அளவில் வேலை வைத்திருப்பவர்கள். இதற்கு நான் கொடுக்கும் உதாரணம் தில்லியருகில் காஸியாபாத்தில் இருக்கும் ஸ்ரீராம் பிஸ்டன்ஸ். அவர்களிடம் நான் தினசரி வேலைக்கு செல்ல வேண்டியிருந்தது. 8 மணி நேரம் கொண்ட ஒரு நாளைக்கு இவ்வளவு ரூபாய் என்று பேச்சு. இங்கு நான் என்ன செய்தேன் என்றால் 10 நாட்களுக்கு ஒரு முறை பில் கொடுத்து விடுவேன். அதுவே ஒரு கணிசமான தொகை. பிறகு தொடர்ந்து வேலை செய்வேன். அவ்வப்போது இன்டெர்காம் வழியாக சம்பந்தப்பட்ட நிர்வாகப் பிரிவுகள் தலைவர்களுடன் பேசி பில்லை நகர்த்துவேன். இதற்குள் இன்னொரு 10 நாட்கள் கடந்திருக்கும். இன்னொரு பில். அதே மாதிரி செயல் முறைகள். செக்குகளை நேரடியாகவே பெற்று விடுவேன். அதிலும் தில்லி செக்குகளாகப் பெற வேண்டும். காஸியாபாத் செக்குகளுக்கு வங்கிக் கட்டணங்கள் உண்டு.
இவ்வாறு செய்யும்போது எல்லோருடனும் நல்ல நட்புறவு வைத்து கொள்வது முக்கியம். எல்லோருடனும் சுமுகமாகப் பேச வேண்டும். செக் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும். இது மிக முக்கியம். காரியம் ஆனதும் நீ யாரோ நான் யாரோ என்று சென்று விடக்கூடாது. யார் எப்போது முக்கியம் என்று இப்போதே தெரியாது.
சென்னையில் நிறுவனங்கள் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் வாடிக்கையாளர்கள் வருகின்றனர். புது வாடிக்கையாளர் என்றால் நான் ஏற்கனவே கூறியபடி முன்பணம் கேட்டு பெறுவேன். கேட்கும் முறையில் கேட்டால் கிடைக்கும். நிறுவனம் என்றால் மொழிபெயர்ப்பை மின்னஞ்சலில் இணைப்பாக அனுப்புவேன். பிறகு பில்லை கூரியர் மூலம் அனுப்புவேன். தனியாராக இருக்கும் பட்சத்தில் பணம் பெற்று கொண்டுதான் மின்னஞ்சல் அனுப்புவேன். அதற்கு சம்பந்தப்பட்டவர் என் வீட்டிற்கு வருவார். பணம் கொடுத்ததும் அவர்கள் முன்னாலேயே அவர்களுக்கு இணைப்புடன் கூடிய மின்னஞ்சலை அனுப்புவேன். பிறகு அவர்கள் என் கணியிலேயே தங்கள் முகவரிக்கு மின்னஞ்சல் வந்து சேர்ந்து விட்டதா என்பதை சரிபார்க்கச் செய்வேன். பிறகு என்ன, அவர் தன்னிடத்திற்கு சென்று ப்ரின்ட் அவுட் எடுத்து கொள்ள வேண்டியதுதான்.
அவரால் நான் இருக்கும் இடத்துக்கு வர இயலவில்லையா? அதனால் என்ன. என் பெயருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பிக் கொள்வேன். பிறகு வாடிக்கையாளர் இருக்கும் இடத்திற்கு சென்று பணம் பெற்றுக் கொண்டதும் அவர் கணினியிலேயே என் மின்னஞ்சலைத் திறந்து இணைப்பாகக் கொடுத்துள்ளக் கோப்பை அவருடைய வன்தகட்டில் இறக்கி விடுவேன்.
மறுபடியும் நிறுவனங்கள் பக்கம் வருவோம். பில்லை கூரியரில் அனுப்பிய பிறகு, அது வந்து சேர்ந்ததா என்பதை தொலைபேசியில் பேசி உறுதி செய்து கொள்ள வேண்டும். எப்போது பணம் கிடைக்கும் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு அவ்வப்போது ஞாபகப்படுத்த வேண்டும். இவை எல்லாவற்றையும் சுமுகமான தோரணையில் செய்ய வேண்டும். செக் கூரியரில் வந்தவுடன் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் தொலைபேசி மூலம் நன்றி கூற வேண்டும்.
அவ்வளவுதான் விஷயம். நான் செயல்படும் கடந்த 30 வருடங்களாக ஓரிரு முறைகள்தான் பணம் வசூல் செய்வதில் பின்னடைவு.
இன்னொரு விஷயம். வருடம் 20,000 ரூபாய்களுக்கு மேல் பில் தொகை சென்றால், வாடிக்கையாளர் எனக்கு தரும் தொகையிலிருந்து வருமானவரி பிடித்தம் செய்யவேண்டும் என்பது சட்டம். அவ்வாறே செய்தும் விடுவார்கள். அதற்கான சான்றிதழ் படிவம் 16-ஏவில் பெற்று, அதையும் நாம் வருமான வரி அதிகாரிகளிடம் நம் ரிடர்ன்ஸுடன் சமர்ப்பிக்க வேண்டும். பிடித்தம் செய்துவிடும் நிறுவனங்கள் சான்றிதழ் கொடுக்க அழும்பு செய்வார்கள். அவர்களிடம் விடாது அதைப் பெற வேண்டியதும் முக்கியம். அப்போது கூட சுமுகமாக நடந்து கொள்ள வேண்டும்.
பில் தொகையை கொடுப்பதில் சுணக்கம் காட்டும் வாடிக்கையாளர்கள் அவிழ்த்துவிடும் கதைகளைப் பற்றி இப்போது பார்ப்போமா?
மார்ச் 2001-ல் செய்த வேலைக்கு செக் நவம்பர் 2001-ல் தான் கிடைத்தது. வாடிக்கையாளர் சொன்ன காரணம்: அமெரிக்காவில் 9/11-ல் நடந்த குண்டு வீச்சினால் அவருக்கு அமெரிக்காவிலிருந்து வரும் செக்குகள் தாமதமாயினவாம், இது எப்படி இருக்கு? அதே வாடிக்கையாளர் அலுவலகத்துக்கு நான் போன் செய்து முதலாளியுடன் பேச வேண்டும் எனக் கேட்க, அவர் பாங்குக்குப் போயிருப்பதாகக் கூறப்பட்டது. அவர் மனைவி? அவரும் பாங்குக்குத்தான் அவருடன் சென்றிருக்கிறார் எனக் கூறப்பட்டது. அக்கௌண்டன்ட்? பாங்குக்குத்தான். அக்கௌண்ட்ஸ் க்ளர்க்? பாங்குக்கே. பாவம் பாங்க் மானேஜர். இத்தனை பேர் ஒன்றாக வந்தால் அவர் என்ன செய்வார்?
இம்மாதிரி புருடாக்கள் சர்வ சாதாரணம். இதையெல்லாம் மீறித்தான் நாம் குப்பை கொட்ட வேண்டும். என்ன செய்வது? அதுதான் வாழ்க்கை”.
இப்போது சாருவுக்கு பழைய பாக்கி எல்லாம் கிடைக்கும் என எண்ணுகிறீர்கள்? அந்த மீடியேட்டரை நிஜமாகவே தூக்கியிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? அப்படியெல்லாம் தூக்கிவிட்டால் பின்னால் விஷயம் அம்பலமாகும்போது தயாரிப்பாளரே அல்லவா பழி ஏற்க வேண்டும். இதெல்லாம் ஒரு ட்ரிக்தான். நம்மெதிரில் வேலையாளியை திட்டுவது போல நடிப்பது, பிறகுஅவரை திட்டியதற்காக அவருக்கு அதிக போனஸ் தருவது. மற்றப்படி மீடியேட்டர் உண்மையாகவே ஏமாற்றினார் என்றால் சாருவுக்கு தர வேண்டிய பணத்தை தயாரிப்பாளரிடமிருந்து பெற்று தானே அதை ஏப்பம் விட்டிருக்க வேண்டும். போலீசிடம் போக வேண்டிய மோசடி வழக்கு இது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
என்.கல்யாணராமனுக்கு அ.முத்துலிங்கம் விருது
-
அசோகமித்திரன், பூமணி, பெருமாள் முருகன், தேவிபாரதி ஆகியோருடைய
மொழிபெயர்ப்பாளரான என்.கல்யாணராமனுக்கு விஜயா வாசகர் வட்டம் வழங்கும்
அ.முத்துலிங்கம் விருது 2024...
5 hours ago
14 comments:
Dear Dondu Sir
I also thinking i ask with you,
you have more this type article put
you also start this vadikalarkal anugumurai
this is very useful everyday our life
Thanks for this cont. article
Thanks again
V.Ramachandran
Singapore
பணம், வசூல் - கையாளுவதைப் பற்றி அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். மிகவும் பயன்தரக்கூடிய பதிவு.
---
//சில வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் வேலை வைத்திருப்பதாக புருடா விட்டு ரேட்டை குறைக்க முயற்சி செய்வதைப் பற்றி ஏற்கனவே என் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.//
இதே பிரச்சனைதான் எனக்கு ஆரம்பத்தில் இருந்தது... இப்போது சமாளிக்கக் கற்றுக்கொண்டேன்.
”இந்த புராஜக்டோட நிக்காது சார், அடுத்தடுத்து மாசத்துக்கு ஒன்னு கொடுத்துட்டே இருப்போம்” என்று சொல்பவர்களிடம், “அப்போ ஒரு பத்தாயிரம் அட்வான்ஸா குடுத்துடுங்க, மாசாமாசம் வேலை முடிஞ்சதும் கழிச்சிக்கலாம்” அப்டின்னு சொல்லிடுவேன். இதன் பிறகு என்ன நடக்குமென்று யூகித்துக் கொள்ளுங்கள்...
எப்படியோ இட்லிவடை பதிவையும், உங்க பழைய பதிவையும் வச்சு இன்னைக்கு கதைய ஒப்பேத்திட்டிங்க!
சாரு மேட்டருக்கு வருவோம்!
பலமுறை பேசி, மோதி பார்த்து பணம் வரவில்லையென்பதால் வெளிச்சதிற்கு கொண்டு வந்திருக்கலாம்!, ஆனால் எம்முறையும் நிர்வாகத்திடம் நேரிடியாக பேசாதது தவறு! மேலும் விளம்பரத்திற்காக தான் போனேன் என்று சொல்லிவிட்டு மீண்டும் பணம் கேட்பது அதைவிட தவறு!
என்னால் தானய்யா உனக்கு விளம்பரம் நீ கொடு காசுன்னா எதை கொடுப்பார்ன்னு தெரியல!
:)))))))))))
/என்னால் தானய்யா உனக்கு விளம்பரம் நீ கொடு காசுன்னா எதை கொடுப்பார்ன்னு தெரியல!/
வால்பையனா, இவ்வளவு அப்பாவியாகக் கேட்பது:-))
சாருவிடம் கருவாட்டுக் குறிப்புக்கள் நிறைய இருக்கின்றன! இன்னமும் கூட, குறிப்பெழுத முடியும் என்கிறபோது, அவர் எதைக் கொடுப்பார் என்று இங்கு எல்லோருக்குமே தெரியும்!!
Dondu Sir,
Next time Neeya Naana should have an episode where it has People who got money from this program on one side and People who have been not been given anything (cheated ?) on the other side.
Regards.
Partha.
பழமொழிகளுக்கு டோண்டுவின் புது மொழிகள்?
1.அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
2.அற்ப அறிவு அல்லற் கிடம்
3.அறுவடை காலத்தில் எலிக்கு ஐந்து பெண்சாதி.
4.அறிவீன இடத்தில் புத்தி கேளாதே.
5.அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தொலைக்கவேண்டும்.
6.அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்
7. அறப்படித்தன் அங்காடி போனால், விற்கவும் மாட்டான் கொள்ளவும் மாட்டான்
8.அறக்கப் பறக்க பாடுபட்டாலும் படுக்க பாயில்லை.
9.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
10.அப்பன் அருமை மாண்டால் தெரியும்.
எஸ் வி சேகர் ஒரு நாடகத்தில் தனக்கு இன்ன நிறுவனம் பணம் தரவில்லை என்று பெயர் குறிப்பிட்டுக் கூறுவார்!
1.சாண்டோ சின்னப்ப தேவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்த நிலை மாறியது யாரால்,எப்போது? இப்போது அவரின் தேவர் பிலிம்ஸ்?
2.சத்யா மூவிஸ் ஆர்.எம் வீரப்பன் எப்படி உள்ளார்?அவரின் தீவிர கலைஞர் எதிர்ப்பு மாறியது எதனால்?
3.திரை உலகை கலக்கிய பாலச்சந்தர் தொடர் வெற்றிகளை சமீபகாலமாய் கொடுக்க இயலவில்லை காரணம்?ரசிப்புத்தன்மையின் மாற்றம் காரணமா?
4.பாரதிராஜவும் தோல்விச் சூழலில் சமீபகாலமாய், என்ன காரணம்?அவரின் தமிழ்ப்பற்று பற்றி?
5.பழைய நடிகைகளை வயதான தோற்றத்தில் ,சின்னத்திரையில் பார்க்கும் போது?
6.பழைய நடிகர்களின் (1980 முன்னால்)திரைப்படங்களில் யாருக்கு இன்னும் மக்களிடம் மெளசு இருக்கு?
7.யார் சூப்பர் ஜோடி?காரணம்?
எம்ஜிஆர்-ச.தேவி
ஜிவாஜி-பத்மினி
ஜெமினி-சாவித்ரி
8.விஜயின் சூப்பர் ஸ்டார் அந்தஸ்து தற்சமயம் சூரியா பக்கமா?
9.தனுஷ்-சிம்பு போட்டியில் இப்போதைய நிலவரம்? பின்தங்கியதற்கு காரணம்?
10.நாடோடி படம் எப்படி?
டோண்டு Inc. நிறுவனம் இன்று முதல் SEI CMMi லெவல் ஐந்தை அடைந்துள்ளதை தெரிவித்துக் கொள்கிறோம்.
You are having an organized, documented, repeatable and mature process. Keep it up.
ஆமா, உங்களுக்கு ஜெயா டிவியில் பணம் கொடுத்தாங்களா? டாக்ஸி வாடகை? டிபன் காபி?
//ஆமா, உங்களுக்கு ஜெயா டிவியில் பணம் கொடுத்தாங்களா? டாக்ஸி வாடகை? டிபன் காபி?//
இரு சந்தர்பங்களிலும் ஸ்வீட் பேக்கட் ஒன்று கொடுத்தார்கள், அவ்வளவுதான்.
பணம் ர்ன்று நான் எதிர்பார்க்கவில்லை, ஏனெனில் இது எனக்கு நல்ல விளம்பரமாகவே எனக்கு பட்டது/படுகிறது. இது சம்பந்தமாக எதிர்பார்ப்பு இல்லாததால் ஏமாற்றமும் இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஒரு அப்டேட்:
மீண்டும் நீயா நானா நிகழ்ச்சிக்கு சாரு செல்கிறார். பார்க்க: http://charuonline.com/Jan2010/arivippu.html
அவருக்கு நான் இட்ட மின்னஞ்சல் கீழே:
அன்புள்ள சாரு,
மகிழ்ச்சி. பேமெண்ட் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்ததா? அரியர்ஸ் கிடைத்ததா?
இது சம்பந்தமாக நான் இட்ட பதிவு இதோ: http://dondu.blogspot.com/2009/08/11.html
அன்புடன்,
டோண்டு ராகவன்
Post a Comment