நவீன இலக்கியம் ஏன் புரிவதில்லை என்ற கேள்விக்கு ஜெயமோகன் அளித்த பதில்களும் அவற்றின் நீட்சியும் சுவாரசியமானவை.
ஜெயமோகன் ஒரு தமாஷான ஒப்பிடுதலுடன் ஆரம்பிக்கிறார்.
நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் என்ன வேறுபாடு? பழைய ஒரு நகைச்சுவை உண்டு. ஓட்டலில் சாப்பிடச்சென்றவர் கேட்கிறார் ‘தோசைக்கு தொட்டுக்கொள்ள என்ன இருக்கிறது?’ பரிமாறுபவர் பதில் சொல்கிறார், ‘கெட்டிச்சட்னி இருக்கிறது, துவையல் இருக்கிறது’
கேட்பவருக்கு கொஞ்சம் குழப்பம். ‘இரண்டுக்கும் நடுவே என்ன வேறுபாடு?’ பரிமாறுபவர் யதார்த்தமாகப் பதில் சொல்கிறார் ‘இரண்டு நாள் வேறுபாடு’
ஆம், நவீன இலக்கியத்திற்கும் மரபிலக்கியத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு இரண்டாயிரம் வருடம்தான். நவீன இலக்கியத்தின் தலை இந்த நூற்றாண்டில் உள்ளது. வால் மரபிலக்கியத்தில் விழுந்து கிடக்கிறது. மரபிலக்கியத்தின் தலை ஈராயிரம் வருடம் முன்பு நம் வரலாற்றின் தொடக்கப்புள்ளியில் கிடக்கிறது. வால் இந்தக்காலத்தில் விழுந்து அசைந்துகொண்டிருக்கிறது. இரு பாம்புகளும் ஒன்றை ஒன்று விழுங்க முயல்கின்றன. ஒயாத ஒரு சுழல் உருவாகிறது.
வழக்கமாக நான் சந்திக்கும் ஒரு கொந்தளிப்பான குரல் ஒன்றுண்டு. ஒரு தேவதேவன் கவிதையை வாசித்துவிட்டு ஒரு பெரியவர் கேட்டார். ‘ஐயா நான் நாற்பதாண்டுக்காலமாக தமிழிலக்கியம் வாசிக்கிறேன். நற்றிணை முதல் பாரதிவரை கற்றிருக்கிறேன். எனக்கே இந்த கவிதை புரியவில்லை. அப்படியானால் இவை யாருக்காக எழுதப்படுகின்றன?’
இப்படி கேட்ட பெரியவரிடம் நான் சொன்னேன்,’ஐயா நற்றிணையோ பாரதியோ படித்தால் புரிந்துகொள்ள முடியாத, தமிழே படிக்காத இந்த இளைஞருக்கு இந்தக்கவிதை எளிதாகப் புரிகிறதே, எப்படி என்று யோசித்தீர்களா? யோசித்தால் எது நவீன இலக்கியம் என்று எளிதில் புரிந்துகொள்ள முடியும்’
ஆனால் பெரியவர் அந்தக் கேள்வியைச் சந்திக்க தயாராக இருக்கவில்லை. மீண்டும் ‘எனக்கே புரியவில்லையே’ என்ற குரலை எழுப்பினார். நான் சொன்னேன், ‘ஐயா இப்போது சிக்கல் நவீன இலக்கியத்தை புரிந்துகொள்வதல்ல, உங்களைப் புரிந்துகொள்வதுதான்’
இலக்கியம் மொழியில் எழுதப்படுவதில்லை என்று சொன்னால் ஆச்சரியப்பட மாட்டீர்கள்தானே? தமிழ்க்கவிதை தமிழில் மட்டும் அமைந்திருந்தால் தமிழ் தெரிந்த அனைவருக்கும் அது புரிந்துவிடும் அல்லவா? ஓர் அகராதியை வைத்துக்கொண்டு அதை எவரும் புரிந்துகொள்ள முடியும் அல்லவா?
அப்படியானால் தமிழ்க்கவிதை எதில் அமைந்திருக்கிறது? தமிழ் மொழிக்குள் நுண்மையாக அமைந்துள்ள இன்னொரு குறியீட்டு மொழியில் அமைந்துள்ளது. அதை மீமொழி [meta language] என்று நவீன மொழியியலில் சொல்கிறார்கள். அது மொழியின் இரண்டாவது அடுக்கு. இப்படி பல அடுக்குகளை உருவாக்கிக்கொண்டுதான் எந்தமொழியும் செயல்பட முடியும். நம்மை அறியாமலேயே இப்படி பல அடுக்குகள் நம் மொழியில் உள்ளன.
மொழியையே குறியீட்டுஒழுங்கு [symbolic order] என்று மொழியியலாளர்கள் சொல்கிறார்கள். ஒர் ஒலிக்குறிப்பு ஒரு பொருளை அல்லது நிகழ்ச்சியை அல்லது உணர்ச்சியை சுட்டிக்காட்டுவதுதான் மொழியின் ஒழுங்கு இல்லையா? படி என்றதுமே உங்களுக்கு ஒரு பொருள் நினைவுக்கு வருகிறது. படி என்ற ஒலி அந்த பொருளுக்கான ஒலி அடையாளம். இறங்குதல் என்ற ஒலி ஒரு செயலுக்கான ஒலிக்குறியீடு.
இரண்டையும் இணைத்து படி இறங்குதல் என்று சொன்னால் ஒரு நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது. இதுதான் மொழியின் செயல்பாட்டுக்கான அடிப்படை. இவ்வாறு நாம் மொழிக்குறியீடுகளை இணைத்து இணைத்து மொழி என்ற அமைப்பை விரிவாக்கிக்கொண்டே செல்கிறோம். இதைத்தான் பேச்சு என்றும் எழுத்து என்றும் சொல்கிறோம். இதையே மொழியின் முதல் குறியீட்டு ஒழுங்கு என்கிறோம்.
மொழிக்குள் இன்னொரு குறியீட்டு ஒழுங்கு இருக்க முடியும். படி என்ற பொருளையே இன்னொன்றுக்கு குறியீடாக ஆக்க முடியும் அல்லவா? அப்போது படி என்னும்போது அது அந்தபொருளைச் சுட்டிக்காட்டி கூடவே அந்தப்பொருள் எதற்கு குறியீடோ அதையும் சுட்டிக்காட்டுகிறது அல்லவா?
ஒரு கவிதையில் ‘படி இறங்குதல்’ என்று வந்தால் அது ஒரு வீழ்ச்சியை குறிக்கலாம். ஒரு தரம் இறங்குவதை குறிக்கலாம். இதற்கு இரண்டாம் கட்ட குறியீட்டு ஒழுங்கு என்று பெயர் [secondary symbolic order]. அது மொழிக்குள் செயல்படும் இன்னொரு மொழி. அதில்தான் இலக்கியம் எழுதப்படுகிறது. உங்களுக்கு தமிழ் மட்டும் தெரிந்தால் இலக்கியத்தை புரிந்துகொள்ள முடியாது. தமிழுக்குள் செயல்படும் அந்த இரண்டாவது தமிழை அறிந்திருந்தால் மட்டுமே இலக்கியம் புரிய ஆரம்பிக்கும்.
ஒரே கவிதை பலருக்கு பல எண்ணங்களைத் தருகிறது.
உதாரணத்துக்கு பிரமிளின் இக்கவிதையை பாருங்கள்.
சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று
காற்றின் தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை எழுதி செல்கிறது.
இக்கவிதையை நான் முதன்முதலாக சமீபத்தில் 1979-ல் கேட்டேன். அல்லயன்ஸ் ஃப்ரான்சேஸ் ஸ்ரீராம் அவர்கள் எனக்கு இதை முதன்முதலாக அறிமுகப்படுத்தினார். அக்கவிதையின் வரிகளுக்குள் போவதற்குள் இன்னொரு விஷயத்தையும் கூறிவிடுகிறேன்.
ஸ்ரீராம் அவர்கள் இக்கவிதையை 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து Henri Quiqueré என்னும் பிரெஞ்சுக்காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ழாக் ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர்தான் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:
"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"
பிரமிளின் இக்கவிதையை பதிவர் ரோசாவசந்த் தனது ஒரு பதிவில் குறிப்பிட்டதற்கு பின்னூட்டமாக நான் ஸ்ரீராம் செய்ததை எழுத, ரோசாவின் பதிலையும் ஒரு காரணத்துடனேயே இங்கே தருகிறேன்.
இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?)
அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரியமானது.
பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.
இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.
அதற்கு நான் ஒரு திடுக்கிடலுடன் எழுதியது:
மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05-2005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.
ஸ்ரீராம் (நீங்கள் சொன்ன அதே ஸ்ரீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு ஸ்ரீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கப்பட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.
"pages vides" என்பதற்கு பதில் "pages inépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை கூறியதற்கு சிறீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.
மீண்டும் ரோசா வசந்த்:
விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.
மேலே உள்ளதையெல்லாம் நான் எழுதிய முக்கியக் காரணமே, ஒரே விஷயம் - அது சிறியதோ அல்லது பெரியதோ - எவ்வாறு வெவ்வேறுவிதமாக புரிந்து கொள்ளப்படுகிறது என்பதை எடுத்துக் காட்டவே.
ஜெயமோகனது அப்பதிவிலிருந்து மேலும் சில வரிகள்:
ஏன் அந்தப்பெரியவருக்கு மரபான கவிதை புரிகிறது? அவர் உரைகள் மூலம் ஆசிரியர்கள் மூலம் மரபுக்கவிதையின் மீமொழியை கற்றிருக்கிறார். நவீனக் கவிதையின் மீமொழியை அவர் கற்கவில்லை. அதை அவர் பொருட்படுத்தவில்லை. எனக்கு பாட்டு தெரியுமே ஆகவே நான் ஏன் பரதம் ஆடமுடியாது என்று கேட்கிரார். நண்பர்களே, அவை இரண்டும் வேறு வேறு.
மரபுஇலக்கிய வாசிப்புக்கும் நவீன இலக்கிய வாசிப்புக்கும் இடையே முக்கியமான ஒரு வேறுபாடு உள்ளது, அதையும் இங்கே குறிப்பிட வேண்டும். எப்போதுமே நம் மரபு இலக்கிய வாசகர்கள் சொல்லும் சில வரிகள் உண்டு. ‘இந்தப் படைப்பில் சொல்லவந்ததை தெள்ளத்தெளிவாக வெள்ளிடைமலையாக சொல்லியிருக்கிறார் ஆசிரியர்’
இதே நோக்கில்தான் நம் கல்வித்துறை இலக்கியம் கற்றுக்கொடுக்கிறது. ‘இந்தக்கவிதையின் திரண்ட பொருள் யாது, நான்கு பக்கங்களுக்கு மிகாமல் விளக்குக’
இந்த மனநிலை கவிதையை, இலக்கியத்தை அறிவதற்கு மிகமிக எதிரானது. ஒரு ஆக்கத்தில் ஆசிரியர் ‘சொல்லவந்த கருத்து’ என்ன என்று தேடுவதும் அதை அவர் ‘ஐயம்திரிபற’ சொல்லியிருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதும்தான் உண்மையில் நவீன இலக்கியத்தில் இருந்தே மரபான வாசகர்களை பிரிக்கிறது.
பிரமிளின் அக்கவிதையையே எடுத்து கொள்ளுங்கள். எனது முதல் பரிச்சயமே அதன் பிரெஞ்சு வடிவத்திலிருந்துதான். பிறகுதான் தமிழ் மூலத்துக்கு வந்தேன். ரோசாவசந்த் நான் கூறியதை முதலில் பிரமிள் காப்பி அடித்திருப்பார் என்ற மாதிரி புரிந்து கொண்டார். இல்லை என நான் விளக்க வேண்டியிருந்தது. பிரெஞ்சுக்காரருக்கோ முதல் பார்வையில் அது ப்ரெவரின் கவிதையாக பட்டுள்ளது.
பிரமிளுக்கும் ப்ரெவருக்கும் என்ன சம்பந்தம்? இருப்பினும் ஒரு தளத்தில் ஒன்றுபட்டது நான் சொன்ன இடத்தில்தான். ஒரு விதத்தில் பார்த்தால் இலக்கியம் என்பதே பல பார்வைகளின் கூட்டுவினை என்றும் எனக்கு படுகிறது.
மீண்டும் ஜெயமோகன்:
முக்கியமான இலக்கிய ஆக்கங்கள் முழுமையாக எல்லாவற்றையும் சொல்வதில்லை. எவ்வளவு குறைவாகச் சொல்ல முடியுமோ அவ்வளவு குறைவாகச் சொல்லி மிச்சத்தை வாசகக் கற்பனைக்கே விட்டுவிடுகின்ரன. அதிகமாக கற்பனைசெய்ய வைக்கும் இலக்கியம் அதிகநேரம் நம்முடன் இருக்கிறது. நம்மை அதிகமாக பயணம் செய்ய வைக்கிறது.
ஆகவே பொருள்மயக்கம் என்பது இலக்கியத்தின் முக்கியமான அழகியல் உத்தி. தெள்ளத்தெளிவாக இருப்பது இலக்கியத்தின் பலவீனம். நீதிநூல்கள் தெளிவாக இருக்கலாம். ஆனால் அதை இலக்கியத்தில் எதிர்பார்க்கக் கூடாது. கொன்றை வேந்தன் வாசிப்பது போல பிரமிள் புதுக்கவிதையை வாசித்தால் ‘என்ன இது ஒண்ணுமே புரியலை, என்னதான் சொல்லவரார்?’ என்ற குழப்பமே எஞ்சும்
வில்லியம் எம்ப்சன் என்ற விமர்சகர் ஏழுவகை பொருள்மயக்கங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். அந்த பொருள்மயக்கங்கள் இலக்கியத்துக்கு ஆழத்தையும் அழகையும் அளிப்பவை. இன்றுவரை பாடத்திட்டத்தில் உள்ள நூல் அது.
பொருள்மயக்கம் என்பது இன்றுள்ல ஓர் இயல்பு அல்ல, எல்லா காலத்திலும் இலக்கியத்தின் அழகியலாகவே உள்ளது. குறுந்தொகை நற்றிணை பாடல்கள் குறள்பாடல்கள் பல அற்புதமான பொருள்மயக்கங்களுடன் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக அவற்றுக்கு மீண்டும் மீண்டும் உரைகள் எழுதப்படுகின்றன. எவ்வளவு உரைகள் எழுதப்பட்டபின்னரும் அவற்றின் பொருள்மயக்கம் புதிய சிந்தனைகளை உருவாக்கியபடி நீடிக்கத்தான் செய்கிறது
அறத்தாறிதுவென வேண்டா சிவிகை பொறுத்தானோடு
ஊர்ந்தான் இடை
இந்த ஒரு குறளுக்கு மட்டும் எத்தனை வகையாக பொருள் கொள்ளப்பட்டுள்ளது என்று நோக்கினால் எம்ப்சன் என்ன சொல்கிரார் என்று புரியும். ‘பல்லக்கில் செல்பவன் சுமப்பவன் இருவரையும் வைத்து அறத்தின் வழி இதுவே என நினைக்கவேண்டாம்’ இவ்வளவுதான் குறள். இது முற்பிறப்பின் வினைப்பயனைச் சொல்வது என்பது பரிமேலழகர் கூற்று. சமண ஊழ்வினையைச் சொல்கிறது என்பது நச்சினார்க்கினியர் உரை
இப்போதுள்ள இதுவே அறத்தின் எப்போதுமுள்ள வழி என்று நினைக்காதே வண்டியும் ஓர்நாள் ஓடத்தில் ஏறும் என்றுதான் வள்ளுவர் சொல்கிறார் என்றே நான் வாசிக்கிறேன். இன்னும் பல வாசிப்புகளுக்கு இதிலே இடமுள்ளது. இன்னும் இன்னும் சிந்திக்கச் செய்கிரது இந்தக்குறள்.
ஆகவே பொருள்மயக்கம் எப்போதும் இலக்கியத்தில் உள்ளது. அதுவே அதன் வழி. ஆனால் மரபிலக்கியம் உரைகள் உரைகள்மீது உரைகள் என எழுதப்பட்டு விளக்கப்பட்டுள்ளது. ஆகவே பலர் பொருள்மயக்கம் பற்றி யோசிக்காமலேயே மரபிலக்கியத்தை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு நவீன இலக்கியம் சிக்கலாக இருக்கிரது, காரணம் இங்கே உரை இல்லை. பொருள்மயக்கம் முகத்தில் அறைகிறது.
பிரமிளின் அக்கவிதை பற்றி சில ஞாபகங்களை புதுப்பித்துக் கொள்ள இப்போதுதான் ஸ்ரீராம் அவர்களுடன் தொலைபேசினேன். அவரும் மேலும் புது விஷயங்களை தந்தார். அவரும் François Gros என்னும் பிரெஞ்சுக்காரருமாக சேர்ந்து பிரமிளின் மேலே குறிப்பிடப்பட்டுள்ள கவிதையையும் சேர்த்து இன்னும் பல கவிதைகள் ஃபிரெஞ்சில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும், பதிப்புக்காக அப்புத்தகம் காத்திருக்கிறது என்றும் கூறினார்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நமது தேவைகள், நமது பாவனைகள்
-
அன்புள்ள ஜெ, இதை எழுதும்போதே பெரும் சோர்வொன்று வந்து ஆட்கொண்டுவிடுகிறது.
வாழ்வின் எல்லா பக்கங்களும் சலிப்பையே ஏற்படுத்துகின்றன. இலட்சியக் கனவுகளோடு
பேரிய...
10 hours ago