1/08/2009

பார்க்கின்ஸன் விதியும் டோண்டு ராகவனும்

பார்க்கின்சன் விதி ரொம்ப பிரபலமானது. அது என்ன கூறுகிறதென்றால் ஒரு வேலைக்கு அளிக்கப்படும் முழு நேரமும் அதற்காக செலவழிந்து விடும் என்பதே. அதற்காக சில உதாரணங்களும் தந்துள்ளார். அதாவது ஒரு ரிப்போர்ட் தயார் செய்ய ஐந்து நாட்கள் தந்தால் 90% சமயங்களில் அது ஐந்தாம் நாள் முடிய சில நிமிடங்கள் இருக்கும்போதுதான் முடியும். சில சமயம் காலக்கெடுவை நீடிக்கச் செய்யும் விண்ணப்பங்களும் வரும் என்பதும் நடக்கக் கூடியதே. உண்மையில் அது ஒரே நாளில் முடித்திருக்கக் கூடியதாகவும் இருக்கலாம் என்பதை இங்கு யாரும் கவனிக்கக்கூட மாட்டார்கள். அதே ரிப்போர்ட் அன்று மாலையே தராவிட்டால் வேலைக்கு சங்குதான் என்ற நிலை வந்தால் மட்டும் அதற்குள்ளாகவே நடைபெற்றுவிடுவதையும் பார்த்தால்தான் நான் சொல்வது புரியும்.

இதையே விரிவுபடுத்தி அரசு அலுவலகங்கள் எவ்வாறு பெருகுகின்றன. என்பதையும் நகைச்சுவையுடனேயே அவர் விவரித்திருப்பார். பிரிட்டனின் காலனி விவகாரங்களை கவனிக்கும் அலுவலகம் அத்தேசம் எல்லா காலனிகளையும் இழந்த பிறகுதாம் பெரிய அளவாக உருவெடுத்தது என்பது நகை முரண்.

“அது சரி, நீ இதிலே எங்கே வரே பெரிசு” என கேலிபேசும் முரளி மனோஹருக்காக பார்கின்ஸன் விதியுடன் எனது சம்பந்தத்தையும் கூற வேண்டியுள்ளது. அதற்கு முன்னால் அதன் கராலரியையும் கூறுதல் நலம். அதாவது ஒரு வேலையை - மொழிபெயர்ப்பு வேலை என வைத்து கொள்வோமே - கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவும் நேற்றைக்கே செய்ய வேண்டும் என சில வாடிக்கையாளர்கள் கூறுவார்கள். அவ்வேலையை ஏற்று கொண்டு செய்த பல அனுபவங்கள் உண்டு (நேற்றைக்கேவா என்று கேட்காதீர்கள், வேலை மிக அவசரமானது என்பதை கூறவே அவ்வாறு குறிப்பிட்டேன்). அப்போது மட்டும் குறிப்பிட்ட காலக் கட்டத்தில் அது ரீசனபிளாக இருந்தால் வேலை முடிந்து விடும். 100 பக்கங்களை தந்து நாளைக்கே வேலை முடிய வேண்டும் என கூறுபவர்களது வேலையையெல்லாம் மரியாதையுடன் மறுத்து விடுவேன் என்பது வேறு விஷயம். நான் கூறவருவது என்னவென்றால் other things being equal, வேலைக்கு தரப்பட்ட நேரம் முழுமையாக எடுக்கப்பட்டுவிடும் என்பதே. வேறு சில நிர்ப்பந்த சூழ்நிலைகளும் வரும். எப்போதுமே ஒரு பொருள் கிடைக்கும் என்றால் அது இல்லாமலேயே கூட பல நாட்களுக்கு இருந்து விடலாம். ஆனால் இன்னும் சில நாட்களுக்குத்தான் அது கிடைக்கும் என்றால் அதனை முழுமையாக பயன்படுத்துவோம். அதுதான் எனது பங்களூர் விஜயத்தில் நடந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இம்மாதிரி ஒரேயடியாக கிட்டத்தட்ட 5 நாட்கள் சென்னையை விட்டு விலகி இருந்ததில்லை. அதன் முக்கிய காரணம் கணினி கிடைக்காது என்பதுதான். ஆகவே கோவில்களுக்கு செல்ல வெளியூர் பயணம் தேவை என்றால் என் வீட்டம்மா மிக பாடுபட்டுத்தான் என்னையும் அழைத்து செல்ல இயலும். சாதாரணமாக அவர் தனது சகோதரியின் குடும்பத்தினருடன் செல்வதே அதிகம் நடக்கும்.

இம்முறை பங்களூர் செல்லலாம் என நான் முடிவு எடுத்ததே கணினிக்கான ஏற்பாட்டை முன்கூட்டியே செய்ய முடிந்ததால்தான். எனது மைத்துனனின் மகன் ஹரீஷ் தனது கணினியை நான் உபயோகிக்க அன்புடன் சம்மதித்தான். ஆனால் அவனுக்கும் அது தேவை. ஆகவே இருவருமாக மாறி மாறி உபயோகித்தோம். இங்குதான் பார்க்கின்ஸனின் விதி நன்கு வேலை செய்தது. கணினி எப்போது கிடைக்கும் என நிச்சயமில்லாத நிலையில் அது கிடைக்கும்போதெல்லாம் வேலை செய்து பகல் தூக்கத்தையும் தியாகம் செய்தேன். இப்போது பார்த்தால் நான் சென்னையில் அதே ஐந்து நாட்களில் செய்திருக்கக் கூடியதை ஒன்றரை மடங்கு அதிகமாகவே வேலை செய்ய முடிந்திருக்கிறது. காலை ஐந்தரை மணிக்கு என் மருமான் கணினியை ஆன் செய்வித்து விடுவான். நான் பாட்டுக்கு வேலை செய்து கொண்டிருப்பேன். அவனுக்கு தேவைப்படும் நேரங்களில் நான் மற்ற வேலைகளை பார்ப்பேன்.

சென்னை என்றால், எப்போதுமே கணினி என் வசம் இருப்பதால் ஒரு வித சோம்பல் வந்து வேலையை கெடுக்கிறது. இதை எனக்கு மறக்க முடியாத அளவுக்கு உணர்த்தியதில் இந்த பெங்களூர் விஜயம் எனக்கு நல்லபடியாகவே முடிந்தது. சென்ற சனிக்கிழமை (03.01.2009) காலை 11.30 க்கு புறப்பட்டோம். ராணிப்பேட்டையில் திரும்பி கோலார் வழியாக வருமாறு பெங்களூரிலிருந்து ஆலோசனை வந்தது. ஓசூருக்கு அப்புறம் போக்குவரத்து நெரிசலில் பங்களூரில் இந்திரா நகர் வருவதற்கு கணிசமான நேரம் செலவழியும் ஆதலால் இந்த ஏற்பாடு என கூறப்பட்டது.

பங்களூருக்கு கிளம்புவதற்கு ஒரு நாள் முன்னால் பதிவர் அரவிந்தன் பேசினார். அவரை நான் வலைப்பதிவர்கள் பட்டறையில் சந்தித்திருக்கிறேன். நான் பெங்களூர் வந்தவுடன் அவருடன் தொடர்பு கொள்வதாக கூறினேன். சென்ற தடவை பங்களூர் வந்தபோது பலபதிவர்களை சந்திக்க முடிந்தது. ஆனால் இம்முறை ஏனோ தெரியவில்லை அவர்களில் யாரையுமே சந்திக்க இயலவில்லை. செந்தழல் ரவி நாட்டிலேயே இல்லை, கோபி ஹைதராபாத்தில் இருக்கிறார். ம்யூஸ் கடைசி நாளுக்கு முந்தைய இரவுதான் மின்னஞ்சல் செய்தார். அரவிந்த அவர்களை பிடிக்க இயலவில்லை.

ஆனால் இச்சமயம் புதியவர்களை சந்திக்க முடிந்தது. ஞாயிறன்று நண்பர் அருண் என்னை வந்து சந்தித்தார். பைக்கில் வந்து கொண்டிருந்தவர் நான் தங்கியிருக்கும் வீட்டுக்கு செல்போனில் வழி கேட்க எனது மைத்துனனி மனைவி அவருக்கு விளக்கம் கூறினார். இருப்பினும் சற்றே தவறாக திரும்பியதால் நேரம் கழித்து, பல் போன் கால்கள் செலவழித்த பின்னாலேதான் அவரால் வர முடிந்தது. போலி விவகாரத்தில் எனக்கு பெரிதும் உதவியவர் அவர். அவர் வந்து சில நிமிடங்களிலேயே அவரது அன்னைக்கு உடல் நலம் சரியில்ல்லை என போன் வர அவர் சீக்கிரமே கிளம்ப வேண்டியிருந்தது.

திங்கட் கிழமை பதிவர் பட்டாம்பூச்சி தன்னால் எனக்கு போன் செய்ய இயலவில்லை எனக் கூற, அவரது மின்னஞ்சலை பெற்று அவருடன் தொடர்பு கொண்டேன். அவர் தன் கணவருடன் மாலை வருவதாக கூறினார். அடுத்து லைனுக்கு வந்தவர் பதிவர் விஜய். அவரும் மாலை வருவதாக கூறினார். கடைசியாக லைனில் வந்தவர் பதிவர் அருணாசலம். அவரும் மாலை வருவதாக கூறினார்.

முதலில் வந்தது விஜய் தன் மனைவியுடன். சற்று நேரம் கழித்து அருணாசலம் வந்தார். கடைசியாக வந்தவர் பதிவர் பட்டாம்பூச்சி அவர் கணவர் லட்சுமணனுடன். தான் லேட்டாக வந்ததற்கான காரணம் போகட்டும் தன் கணவருக்கே என வேடிக்கையாக கூறினார். கல்லூரியில் படிப்பவர் போலிருக்கிறார். மென்பொருள் துறையில் வேலை செய்கிறார். பதிவர் பட்டாம்பூச்சிக்கு செந்தழல் ரவியை தெரிந்திருக்கிறது. அருணாச்சலம் ரஜினி விசிறி. விஜய் திருநெல்வேலிக்காரர். அவரிடம் தென்திருப்பெரை பற்றி கூறினேன். அவருக்கு என் மைத்துனர் ராமானுஜம் (அவர் வீட்டில்தான் மீட்டிங்) பற்றியும் தெரிந்திருக்கிறது. இருவரும் தங்கள் பொது நண்பர்கள் பற்றி பேசினர்.

எல்லோருமே இளைஞர்கள். தமிழ் எழுத ஆர்வமுடையவர்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. அருணாசலம் அதிகமாக ஆங்கிலத்தில்தான் எழுதுகிறார். அவர் அதிகம் தமிழ் பழக வேண்டும் என்பதே என் ஆசை.

என்ன பேசினோம் என்று பார்த்தால் நிறைய மொக்கை போட்டிருக்கிறோம் என்றுதான் தோன்றுகிறது. இன்னும் யோசித்து பார்த்தால் நானே அதிகம் பேசியிருக்கிறேன். ஆகவேதான் அவ்வளவு மொக்கை என்கிறான் முரளி மனோஹர். உண்மைதான். நான் ஜெர்மன், பிரெஞ்சு கற்று கொண்ட கதை, வாடிக்கையாளர்களுடன் எனது அனுபவங்கள் என்றெல்லாம் அவர்களை அறுத்து தள்ளியிருக்கிறேன். ஹைப்பர்லிங்குகள் சிலவற்றுக்கு எனது அனுபவங்களிலிருந்து சில உதாரணங்கள் தந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. சுமார் 7 மணிக்கு ஆரம்பமான சந்திப்பு இரவு 09.30 வரை போயிற்று. பட்டாம்பூச்சி தன் கணவருடன் பைக்கில் கிளம்பினார். ஹெல்மட் போடவில்லை. ஹெல்மட் போடாமல் போக வேண்டாம் என அறிவுரை கூற ஆரம்பித்த நான் இதை எனது ஆணையாகவே எடுத்து கொள்ளுமாறு கண்டிப்பாக கூறினேன். தன் தந்தையில் வயதிலிருந்த என் சொல்லை அவரும் கேட்பதாக கூறினார். வீட்டுக்கு போய் சேர்ந்ததும் பத்திரமாக வந்து சேர்ந்தது பற்றியும் எனக்கு தொலைபேசி மூலம் கூறச் சொன்னேன். அவ்வாறே செய்தார். எனக்கும் மன நிம்மதி.

நேற்று பிற்பகல் காரில் கிளம்பி சென்னை வர கிட்டத்தட்ட 6 மணி நேரம் ஆயிற்று. யோசித்து பார்த்தால் இந்திரா நகரை விட்டு நான் எங்குமே செல்லவில்லை. கணினியே கதியாக கிடந்திருக்கிறேன். பரவாயில்லை, இதுவும் நல்ல அனுபவமே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

Vijay said...

\\இன்னும் யோசித்து பார்த்தால் நானே அதிகம் பேசியிருக்கிறேன். ஆகவேதான் அவ்வளவு மொக்கை என்கிறான் முரளி மனோஹர். \\

உங்கள் பேச்சைக் கேட்கத்தானே பார்க்க வந்தோம் :-)

\\சென்னை என்றால், எப்போதுமே கணினி என் வசம் இருப்பதால் ஒரு வித சோம்பல் வந்து வேலையை கெடுக்கிறது.\\
உண்மை தான் இதை நானும் அனுபவ ரீதியாக உணர்ந்திருக்கிறேன். ஒரு பொருளின் உபயோகம் இவ்வளவு நேரம் தான் என்று தெரிந்தால் நமது வேலையில் efficiency கூடுகிறது.
சில சமயம் பணி நிமித்தமாக அயல் நாடு போகும் போது, இவ்வளவு மணிக்கு ஆபீஸை மூடிவிடுவார்கள் என்று தெரிந்ததால், வேறேங்கும் கவனம் சிதறாமல், (இந்த மாதிரி பின்னூட்டங்கள் கூட போடாமல்) வேலையே கதி என்றிருப்போம். அதே பெங்களூராக இருந்தால், வேலை தவிர மற்ற எல்லாவற்றிற்கும் மூன்னுரிமை :-) :-)

M Arunachalam said...

Dondu Sir,

I second Vijay. I came to meet you primarily to get acquainted with you & learn about your experiences in your pre-blogging as well as blogging days. Thanks for hosting us for around 2 hours or so, which seemed to have flown past in minutes.

I sincerely thank you for your complementary words by describing me as a youngster along with Vijays & Lakshmans. I am not young by age but probably by look and definitely by thoughts.

I have tried to post a couple of my posts in Tamil but Blogger's transliteration definitely tests my patience a lot. Hence, I am not getting the urge to write my posts in Tamil. However, I intend to keep trying.

I enjoy reading Tamil blogs like yours. As I told you the other day, I am very much enamored of the courage of convictions in your writings & calling a spade a spade. Hats off.

Hope to keep in touch with you.

Arun

வால்பையன் said...

பெங்களூர் பதிவர்களை நான் கேட்டதாக சொல்ல சொன்னேனே சொன்னீர்களா!

எல்லாம் ஞாபகம் இருக்கும் ஆனா இது மட்டும் மறந்திரும்!

dondu(#11168674346665545885) said...

//but Blogger's transliteration definitely tests my patience a lot. //
1. Go to http://software.nhm.in/Products/NHMWriter/tabid/55/Default.aspx
2. Download NHM writer
3. Install NHM writer
4. Alt+2 lets you phonetically type in Tamil. Again pressing Alt+2 or Alt+0 restores the English typing. Alt + 2 is used as toggling switch.

With Alt + 2 ammaa becomes அம்மா and so on.

Regards,
Dondu N. Raghavan
Blogger transliteration is a big no-no.

Anonymous said...

இவர்களில் யார் தியாகம்,இரக்க சுபாவம் மற்றும் வள்ளல் தன்மை களில் வெகுவாக மிளிர்கிறார்கள்? எந்த அடிப்படையில்?

அ)மயிலுக்குப் போர்வை கொடுத்த பேகன்

ஆ)முல்லைக்கு தேரைக் கொடுத்த பாரி

இ)கவச குண்டலத்தை தானம் கொடுத்தால் தனது உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் ஒருவன் கேட்டுவிட்டான் என கழட்டிக் கொடுத்த கர்ணன்

ஈ)புறாவுக்காக தன் தொடைச் சதையை அறுத்துக் கொடுத்த சிபிச் சக்கரவர்த்தி.

Anonymous said...

மத்திய அரசால் மிகுந்த பரபரப்புடன் அறிவிக்கப் பட்ட பயிர் இன்சூரன்ஸ் திட்டம் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு உண்மையிலே பலனளித்துள்ளதா?
தனியார் இன்சூரன்ஸ் கம்பெனிகளின் பாதிக்கப் பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகை பணப் பட்டுவாட ஒழுங்கான முறையில் நடை பெறுகிறதா?
இதில் ஏற்படும் சிக்கல்களை தீர்க்க ,காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் வழி வகைகள் செய்து உள்ளதா?
உழவர்களிடையே இது பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறதா?
இத்திட்டம் ஒழுங்காகச் செயல் பட
என்ன செய்தல் ,திட்டம் நல்ல வெற்றியைப் பெறும்.

சதுக்க பூதம் said...

Newton's fifth law-Time and Effort are inversionally propotional to each other.(When time is less, effort is more.)

பட்டாம்பூச்சி said...

உங்களை சந்தித்தது மிக்க மகிழ்ச்சி.சக பதிவர்களின் அறிமுகமும் இந்த சந்திப்பால் விளைந்ததே....நன்றி.தாமதித்து வந்ததால் பல விசயங்களை தவற விட்டுவிட்டேனோ என்று இன்றும் ஒரு சின்ன வருத்தம் உண்டு.

தங்கள் அறிவுரை இனி எப்போதும் பின்பற்றப்படும்.

எனக்கு செந்தழல் ரவி-ய தெரியும் ஆனா அவருக்கு என்ன தெரியவே தெரியாது.(விவேக் பாணியில் படிக்கவும்).சும்மா லுலுலாயிக்கு :).அவரும் நானும் ஒரே ப்ராஜெக்ட்-காக வேலை செய்திருக்கிறோம்.அவரோட "ஒரு வாசகியின் பார்வையில்" பதிவின் கதாநாயகி நான்தான் என்பதையும் இங்கே சகலமானவர்களுக்கும் தெரிவித்து கொள்கிறேன்(கண்டுக்காதீங்க ரவி..எல்லாம் ஒரு சுய விளம்பரம்தான்...கிகிகி).மனிதர் சரியான ஆளுங்க.சும்மா பேசற மாதிரி கேள்வி கேட்டு அத பதிவா போட்டுட்டார்.ச்சே! இது மட்டும் முன்னாடியே தெரிஞ்சு இருந்தா கான்டீன்-ல வச்சு பேசாம ராயல் ஒர்சிட்-ல வச்சு பேசி இன்னும் கொஞ்சம் பில்ட்-அப் குடுத்திருப்பேன் :-).

டோண்டு அவர்களுக்கு->ஆமா, ராமனுஜம் சார் தாமதித்து வந்த எங்களுக்காக இரண்டாவது முறை தேநீர் கொண்டு வந்த போது நாங்கள் வேண்டாம் என்று மறுத்ததும், "நான்தான் இருக்கேன்ல" என்று சைக்கிள் கேப்-ல் கபக்கென்று கோப்பையை எடுத்துக்கொண்டீர்களே,அன்றைக்கு அது எத்தனையாவது கோப்பை தேநீர் :-)?தேநீர் அடிக்கடி அருந்துவதை தவிர்க்கலாமே."I feel I am young enough to be your daughter to say this".(அறிவுரைகள் பெரியவர்கள்தான் தரணுமா என்ன?(அதான் young enough :))என்ன நான் சொல்றது?)

dondu(#11168674346665545885) said...

"I feel I am young enough to be your daughter to say this"
என் பெண்ணும் இது சம்பந்தமாக எனக்கு பல அறிவுரைகள் கூறி விட்டாள். நீங்களும் அதையே கூறுகிறீர்கள். தினமும் ஐந்து கப் தேநீர் அருந்துவேன். இனிமேல் அதை நான்கு கப்புகளாக மாற்றி கொள்கிறேன். :))))))

அன்புடன்,
டோண்டு ராகவன்

வால்பையன் said...

//தினமும் ஐந்து கப் தேநீர் அருந்துவேன். இனிமேல் அதை நான்கு கப்புகளாக மாற்றி கொள்கிறேன். :))))))//

உடம்புல ஓடுறது ரத்தமா இல்ல டிக்காசனா?

பட்டாம்பூச்சி said...

அறிவுரைக்கு செவி சாய்த்ததற்கு நன்றி :))).

பட்டாம்பூச்சி said...

வீட்டுக்கு போனதும் வந்து சேர்ந்து விட்டோம் என்று தொலைபேசி செய்து கூறவும் என்று கூறிய உங்கள் அக்கறை மறக்க முடியாதது.

வீட்டுக்கு போனதும் வந்து சேர்ந்து விட்டோம் என்று தொலைபேசி செய்து கூறவும் என்று கூறிய உங்கள் அக்கறை மறக்க முடியாதது.

அது சரி.5 கப்புகளை 4 கப்புகள் ஆக்கிய உங்கள் பெருந்தன்மைக்கும்(??!!??) பெரிய மனசுக்கும் நன்றி.

பாருங்க வால்,டோண்டு அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த முடிவை எடுத்து இருக்காருன்னு.இவரோட குசும்பு இருக்கே,தாங்கல போங்க :)))))!!!!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது