பகுதி - 101
கைலாசம் சாரியார் வீட்டுக்கு வருகிறார். அவர் அப்போதுதான் கொல்லப்பட்ட பெருமாளுக்கு கடைசி காரியம் செய்து முடித்துள்ளார். அவர் சொந்த மகன் பாச்சாவுக்கு திருமணம் நடக்கவிருக்கும் நிலையில் அவர் யார் பெற்ற பிள்ளைக்கோ அவன் தன் சொந்த மகன் என்னும் நினைப்பில் கடைசி காரியம் செய்வதை அவர் சாடுகிறார். அப்போதுதான் சாரியார் நிரஞ்சன் மூலமாக முழு உண்மையை அறிந்து கொண்ட ஃபிளாஷ் பேக் கூறுகிறார். பார்வதிக்கு ரத்த புற்றுநோய் என்ற உண்மையும் வெளிவருகிறது. அதையெல்லாம் பார்வதி நிரஞ்சனுக்கு கடிதமாக எழுதியிருப்பதை நாமும் அறிகிறோம். டாக்டர் வெளிநாடு சென்ற அடுத்த நாள் இது எழுதப்பட்டுல்ளது. அதே கடிதத்தில் அவள் டாக்டர் கைலாசம் சாரியாரின் குழந்தை மாற்றப்பட்ட விவகாரத்தின் உண்மையையும் எழுதியுள்ளதால் சாரியாருக்கு கடைசியில் பாச்சாதான் தன் சொந்த பிள்ளை என்னும் தெளிவும் அதனால் மனவமைதியும் ஏற்படுகிறது. அதே நேரத்தில் பெருமாளும் வையாபுரியும் கொல்லப்பட்டதால் அவரது ஜோசியமும் சரி என்பது உறுதியானது.
பெருமாள் தன் பிள்ளையில்லை என்னும் நிலையிலும் அவர் ஏன் அவனுக்கு காரியம் செய்வதால் அவர் உயர்ந்து நிற்கிறார் என டாக்டர் அவரை விதந்தோத, அப்படியெல்லாம் இல்லை என சாரியார் மறுக்கிறார். சாதி வேற்றுமை பார்க்கக் கூடாது என வாய் வார்த்தையாக கூறிவந்த தானே இம்மாதிரி ஹரிஜன பையன் தன் வீட்டில் வளர்ந்து வருவதை நினைத்து மனம் குமைந்தது தான் சிறியவனே என்னும் எண்ணத்தை உறுதியாக்கியது எனவும், உண்மையில் பெரிய மனிதன் நிரஞ்சனே, ஏனெனில் பார்வதிக்கு ரத்த புற்றுநோய் என்னும் நிலையிலும் அவளை அவன் மணக்க உறுதியாக நினைக்கிறான் என்றும், தான் இப்போது காரியம் செய்வது கூட ஒரு வித பிராயச்சித்தமாகவே எனவும் சாரியார் கூறிவிடுகிறார்.
இருந்தாலும் சாரியார் நிஜமாகவே உயர்ந்த மனிதன் என டாக்டர் விடாப்பிடியாகக் கூறுகிறார். இது எங்ஙனம் என சோவின் ந்ண்பர் கேட்க, சாரியார் இப்போதுதான் உண்மையான ஞானப்பாதைக்குள் வந்திருக்கிறார். சமபார்வை என்பதை இப்போதுதான் இலக்காக வைத்துள்ளார். எவன் தன் மனத்தியே ஜெயிக்கிறானோ அவன் தனக்குத் தானே நண்பன் இல்லாவிடில் விரோதி என கீதை கூறுகிறது. கூடிய சீக்கிரம் சாரியார் தனது இலக்கை அடைந்து விடுவார். அதனாலேயே அவர் பெரிய மனிதருமாகிறார் என சோ கூறுகிறார்.
ரமேஷ் உமாவின் திருமணம் சாத்திர முறைப்படி நடக்கிறது. மாலை மாற்றிக் கொள்ளல், பெண்ணீன் தலைக்கு மேல் நுகத்தடி வைத்து நீர் ஊற்றல், மாலை மாற்றல், தாலி கட்டுதல், சப்தபதி நடத்தல், அருந்ததி பார்த்தல் என்னும் ஒவ்வொரு சடங்கும் நடக்க நடக்க சோவின் நண்பர் கேள்வி கேட்க, சோ அவர்கள் தனக்கே உரித்தான முறையில் விளக்கம் அளித்தல் ஆகியவற்றை வீடியோ சுட்டியிலேயே பார்க்க வேண்டும். நான் என்ன எழுதினாலும் நிறைவாக இருக்காது.
அசோக்கின் “எங்கே பிராமணன்” தேடல் தொடருகிறது. ஒவ்வொரு கோவிலாக, வீடாகப் போய் பல வைதீகர்களை இது குறித்து கேட்பது டயலாக் இன்றி காட்டப்படுகிறது. கடைசியில் டாக்டர் கைலாசத்திடம் வருகிறான். அவர் சாரியாரை விட அதிக தகுதி உடையவர்கள் தனக்கு தெரியாது எனக் கூறி தென்கலை சம்பிரதாயத்தில் அவர் ஊறியவர் என்பதையும் கூறுகிறார். தென்கலைக்கும் வடகலைக்கும் உள்ள வேற்றுமைகள் குறித்து சோவின் நண்பர் கேள்வி எழுப்ப, மொத்தம் 18 வேறுபாடுகள் உண்டு, ஆனால் அவையெல்லாம் தத்துவங்களை புரிந்து கொள்வதில் ஏற்படும் விஷயங்களே என கூறி, அவ்வாறு 18 வேறுபாடுகள் உள்ளன என்று அவற்றில் சிலவற்றைக் கூறுகிறார்.
சாரியார் அப்படி என்னதான் விசேஷமாகச் செய்தார் என அசோக் கேட்க, டாக்டர் அவர் தான் பெறாதம் பிள்ளைக்கு காரியம் செய்ததை பெருமையாகக் கூறுகிறார். அசோக்குக்கும் தனது தேடல் சாரியாரிடமே நிறைவு பெறலாம் என எண்ணம் ஏற்படுகிறது.
பகுதி - 102
சாரியாரை சந்தித்து அசோக் அவரிடம் தனது எங்கே பிராமணன் என்னும் தேடல் பற்றி கூறுகிறார். சாரியார் தான் அவ்வாறு தேடும் உண்மையான பிராமணனாக இருப்பாரா என்னும் தனது அனுமானத்தை அவரிடம் கூற, அவர் அதை திட்டவட்டமாக மறுக்கிறார். அதில் உண்மை பிராமணனுக்குரிய எல்லா கடுமையான விதிகளும் அலசப்படுகின்றன.
இவையெல்லாம் தேவையா எனக் கேட்கும் நண்பருக்கு சோ ஆம் தேவையே எனக் கூறுகிறார்.
தன் பிள்ளை எனத் தெரிந்த நிலையிலும் அவர் பெருமாளுக்கான அந்திமக் கடன்களை செய்தது மகோன்னமான செயலே, அதை வேறு யாரால் செய்திருக்க முடியும் என அசோக் கேட்க, மேலோட்டமாக பார்த்தால் அப்படித்தான் தோன்றும், ஆனால் அது உண்மையில்லை. பெர்மாளை தனது சொந்த மகன் என்னும் மயக்கத்தில் பல நாட்கள் இருந்ததனாலும், அவன் மேல் அதனால் பாசம் ஏற்பட்டதாலும், இப்போது அவனது தந்தையும் அவனுடனேடே சேர்ந்து இறக்க வேறு வழியின்றி தான் கர்மம் செய்ததாகவும், இதில் ஒன்றும் மகோன்னத விஷயம், என்றெல்லாம் இல்லை என சாரியார் கூறி, இதற்கு முன்னால் தனக்கு முன்பின் தெரியாத ஒருவனுக்காக இதையெல்லாம் தான் செய்திருந்தால்தான் அது விசேஷம் என சாரியார் கூறி, அச்சொக் தனது தேடலை வேறிடத்தில்தான் தொடர வேண்டும் என கூறுகிறார். அசோக்கும் அவரை வணங்கி விட்டு புறப்படுகிறான்.
“குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் படுதுயர் ஆயின எல்லாம் நிலம்தரம் செயும் நீள்விசும்பு அருளும் அருளொடு பெருநிலம் அளிக்கும் வலம்தரும் மற்றும் தந்திடும் பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம்” என்னும் திருமங்கையாழ்வாரின் பாடல் பின்னணியில் கம்பீரமான குரலில் ஒலிக்கிறது.
நாதன் வீட்டிற்கு டாக்டர் கைலாசம் வந்திருக்கிறார். அவருடன் நாதனும் வசுமதியும் அசோக்கின் தற்போதைய தேடல் பற்றி பேசுகிறார்கள். அசோக்குக்கு வேண்டாத வேலை இது என நாதன் கோபப்படுகிறார். “எங்கே பிராமணன்” என ஏன் தேட வேண்டும், இத்தேடலால் யாருக்கு என்ன பலன் என அவர் சீறுகிறார். அதானே என சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். அப்படி பார்த்தால் உலகில் எந்த செயலுமே தேறாது. சரித்திரம் ஏன் படிக்க வேண்டும்? சந்திராயனை விண்வெளியில் செலுத்தி ஆகப்போவது என்ன என்ற்நெல்லாம் கேள்வி கேட்டு கொண்டே போகலாம் என சோ கூறுகிறார். அசோக்கின் தேடல் வேதந்தத்தின் ஒரு முக்கியப் பகுதி. அந்த அளவில் அது முக்கியமானதே என அவர் முற்றுப் புள்ளி வைக்கிறார்.
கோவிலுக்கு நீலகண்டனும் பர்வதமும் வந்திருக்கின்றனர். அங்கு வரும் சாம்பு சாஸ்திரி அதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறார். என்ன விசேஷம் எனக் கேட்க, நீலகண்டன் தான் இத்தனை நாள் அறியாமையில் உழன்றதை ஒத்து கொள்கிறார். ஆகம விதிகளுக்குட்பட்டு இக்கோவில் கட்டப்பட்டது எனவும், பல நாத்திகர்களை தடுத்தாட்கொண்டது எனவும் சாம்பு சாஸ்திரி கூற, ஆகம விதிகள் பற்றி சோவின் நண்பர் கேள்வி எழுப்புகிறார். சோவும் அவற்றை அவருக்கு அவை பற்றி விளக்குகிறார். வைணவக் கோவில்கள், சைவ கோவில்கள் பற்றியும் அவர் கூறுகிறார்.
நீலகண்டனும் பர்வதமும் சாம்பு சாஸ்திரிகளின் காலில் விழுந்து நமஸ்கரிக்கின்றனர். “நீங்கள் பல ஆண்டு நலமாக வாழ வேண்டும்” என அவரும் ஆசி செய்கிறார். இது தவறல்லவா, கோவிலில் வைத்து மனிதர்களை வணங்கலாமா என எனது வாசகர் ஒருவர் கேட்டிருக்கிறார். எனக்கும் அது தவறுதான் எனப்படுகிறது. எனது நண்பர் டாக்டர் ராகவனைத்தான் கேட்க வேண்டும்.
அசோக் தனது கேள்வியை வேம்பு மற்றும் சாம்பு சாஸ்திரிகளிடம் வைக்கிறான். முதலில் மேம்போக்காக அவர்கள் பதில் தருகின்றனர். பிறகு அசோக் அவர்களை தனது அடுக்கடுக்கான கேள்விகளால் திணறடிக்கிறான்.
பகுதி - 103 (இறுதிப்பகுதி, 26.06.2009)
இப்பதிவு ஆரம்பித்த சில நொடிகளிலேயே நான் இதுதான் கடைசி பதிவு என்பதை புரிந்து கொண்டு விட்டேன்.
சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.
சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்
அசோக் விடை பெற்று சென்றதும் சாம்பு சாஸ்திரிகள் மனதில் போராட்டம் நிகழ்கிறது. ஒரு நிமிடம் அவர் தான் எல்லா ஆசாபாசங்களையும் விட்டு உண்மையான பிராமணனாக வாழ்ந்து விடலாமா என எண்ணுகிறார். அந்த சமயம் பார்த்து அவரது இரண்டாம் பிள்ளை அப்பாவை தேடி வருகிறான். “என்னப்பா எனது பரீட்சை கட்டணம் 2500 ரூபாய் கட்டணும்னு சொன்னேனே” என அவன் கூற, தான் எங்கிருந்து அவ்வளவு பணம் கொண்டு வரமுடியும்னு சாம்பு மலைக்கிறார். கூடவே வீட்டு வாடகை பாக்கி இருப்பதால் வீட்டுக்காரர் வீட்டை காலி செய்ய சொல்கிறார் என்னும் அடுத்த குண்டையும் பையன் போடுகிறான்.
சமய சஞ்சீவி போல வேம்பு சாஸ்திரிகள் அப்பக்கம் வந்து ஒரு பணக்காரர் வீட்டில் முக்கிய பூஜைக்காக தான் சாம்புவை சிபாரிசு செய்ததாகவும், ஐயாயிரம் ரூபாய்க்கும் மேல் கிடைக்கும் எனக் கூறிவிட்டு 500 ரூபாய் அட்வான்ஸ் தருகிறார். அதை அப்படியே பையனிடம் கொடுக்கும் சாம்பு மீதி பணத்தை பூஜை முடிந்ததும் தருவதாக பையனிடம் கூற அவனும் திருப்தியுடன் செல்கிறான். தான் பிராமணனாக இருக்க நினைத்தாலும் யாரும் தன்னை அவ்வாறு இருக்க விடவில்லையே, நான் பிராமணன் இல்லை என புலம்புகிறார் சாம்பு.
“அவர் ஏன் பிராமணனாக இருக்க முடியவில்லை? யார் அதுக்காக அவரை அடிப்பாங்க” என சோவின் நண்பர் கேட்க, “சொல்ல முடியாது அடிச்சாலும் அடிப்பாங்க” என கூறுகிறார் சோ. கர்மாக்கள் செய்யணும், அடுத்த வேளைக்கு சேமித்து வைக்கக் கூடாது என்றெல்லாம் இருந்தால் தற்காலத்தில் அதோகதிதான். வயலில் சந்தையில் கீழே கிடைக்கும் நெல் மணிகளை பொறுக்கினால் பைத்தியம் எனக்கூறி கல்லால் அடித்தாலும் அடிக்கலாம். பண்டைய காலங்களில் அவ்வாறெல்லாம் செய்தால் மதித்தார்கள். இப்போதிருக்கும் கால கட்டத்தில் அவ்வாறு இருப்பது யாருக்குமே கட்டுப்படி ஆகாது. ஏன் வெறுமனே நேர்மையான அதிகாரியாக இருந்தாலே பிழைக்கத் தெரியாதவன், தானும் வாழமாட்டான், மற்றவரையும் வாழவிடான் என தூற்றுவார்களே என்றும் சோ கூறுகிறர்.
தனது தேடல் வெற்றியடையாத நிலையில் அசோக் கடற்கரையில் சூரியன் இருக்கும் திசை நோக்கி நடக்கிறான். “என்ன சார் கதை அவ்வளவுதானா, அவன்பாட்டுக்கு கடலை நோக்கி போவதையே காட்டறீங்களே. வசிஷ்டர் அசோக்காகவே பூவுலகில் விடை கிடைக்காது நிற்க வேண்டியதுதானா? ப்ரொட்யூசர் என்ன சொல்லுவார்” என நண்பர் கேட்க, “நீங்கள்தானே ப்ரொட்யூசர். நீங்க என்ன சொல்லிடப் போறீங்க” என சோ கிண்டல் செய்கிறார். தான் ப்ரொட்யூசராக ஆக்ட் கொடுப்பவர் மட்டுமே, தான் குறிப்பிடுவதோ உண்மையான ப்ரொட்யூசரை என நண்பர் நாராயணசாமி கேட்க, “அவர் பெயர் சுந்தரம். அவரும் ரொம்ப நல்லவர், ஒண்ணும் சொல்ல மாட்டார்” என சோ கூறுகிறார்.
நண்பர் திருப்தியடையாது போகவே, “சரி நானும் வெங்கட்டுமாக சேர்ந்து இன்னொரு முடிவை யோசித்து வைத்துள்ளோம், அதையும் பாருங்கள் என்கிறார். கைலாயத்தில் நாரதர் சிவபெருமானை வணங்கி தான் ஆரம்பித்து வைத்த கலகத்தால் வசிஷ்டர் அப்படியே பூவுலகில் சிக்கி விட்டார். அவரை எப்படியாவது மேலே கொண்டு வரவேண்டும் என வேண்டுகிறார். அவரும் சம்மதிக்கிறார்.
அசோக் ஒரு சிவன் கோவிலுக்கு வருகிறான். கர்ப்பக்கிரகம் திறந்து சிவபெருமான் ஓர் அந்தணர் ரூபத்தில் அவனை நோக்கி வருகிறார். அவரைப் பார்த்ததும் உண்மையான பிராமணனை கண்ட உணர்வு அசோக்குக்கு ஏற்பட, பரமன் முதலில் கூறியபடி தான் வசிஷ்டர் என்ற நினைவு அவனுக்கு திரும்ப வருகிறது. பரவச நிலையில் இருக்கும் அவனை அந்தணர் கைலாகு கொடுத்து கர்ப்பக்கிருகம் நோக்கி அழைத்து செல்கிறார். பார்த்து கொண்டிருக்கும்போதே இருவரும் பார்வையிலிருந்து மறைகின்றனர்.
“வசிஷ்டர் தேவலோகம் திரும்பிவிட்டார். இந்த சீரியல் மூலம் தன் சொல்ல வந்தது ஒன்றேதான். எந்த விஷயத்தையும் குறை கூறலாம். அது உங்கள் உரிமை. ஆனால் அந்த விஷயம் என்னவென்பதை முதலில் அறிந்து கொள்ளுங்கள்” என்கிறார் சோ. “இன்று, அதாவது 2009 ஆண்டு ஜூன் திங்கள் 26-ஆம் நாள் வெள்ளியன்று, ஒரு சங்கல்பம் செய்வோம். அதாவது எதை குறை கூறுவதற்கும் முன்னால் அதை பற்றி நன்கு அறிந்தே பேசுவோம். இந்து மதத்தை நான் அறிந்தேன் என கூற முடியாது. அந்த மகாசமுத்திரத்தின் கரையில் அலைகளில் சற்றே கால் நனைப்பவன் நான். அவ்வளவே. மற்றவரகளையும் அவ்வாறே செய்ய வேண்டுகிறேன்” எனக் கூறிவிட்டு சீரியலை பார்த்த எல்லோருக்கும் தனது குழு சார்பில் நன்றி தெரிவிக்கிறார் சோ.
இப்போது டோண்டு ராகவன் தரப்பிலிருந்து சில வார்த்தைகள். மேலே குறிப்பிட்ட சங்கல்பம் வடமொழியில் ரொம்ப அழகாக பிரும்மாவின் தினத்திலிருந்து டிரைவ் செய்யப்பட்டு கூறப்படுகிறது. நான் சொல்வது வெறும் இண்டெர்ப்ரெடேஷன் மட்டுமே.
அசோக் தேடிய ரேஞ்சுக்கு உண்மையான, வர்ணரீதியான பிராமணன் இப்போது இல்லை என்பது நிலைநிறுத்தப்பட்டாலும், அதை அடையும் பாதையில் இருப்பதாக நான் சாரியார், சாம்பு சாஸ்திரிகள், மற்றும் சிகாமணியை அடையாளம் காண்கிறேன்.
ஆரம்பத்தில் நான் இம்மாதிரி கிட்டத்தட்ட எல்லா பகுதிகளையும் எனது வலைப்பூவில் கவர் செய்வேன் என நினைக்கவில்லை. அது தானாகவே அமைந்தது தெய்வச்செயல் என்பதுதான் என் எண்ணம். பெயரளவில் மட்டுமே இது மெகா சீரியல். ஒரு சாதாரண மெகா சீரியலில் உள்ள இழுவை இதில் சுத்தமாக இல்லை. “எங்கே பிராமணன்” புத்தகத்தில் உள்ள நிகழ்ச்சிகள் மாற்றியமைக்கப்பட்டது, அவற்றுடன் சோ அவர்கள் எழுதிய “சாத்திரம் சொன்னதில்லை” என்ற புத்தகத்தின் நிகழ்வுகள் இதில் சேர்க்கப்பட்டது ஆகிய எல்லாமே நேர்த்தியாக செய்யப்பட்டிருந்தன. இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே என ஒரு சீரியல் நம்மை நினைக்கச் செய்தாலே அது அருமையான சீரியல்தான்.
நான் இது சம்பந்தமாக இட்ட அத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து பின்னூட்டங்கள் இட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி. விட்டுப் போன பகுதிகளையும் பார்க்க வசதி செய்த techsathish & isaitamil.net ஆகிய தளங்களுக்கும் என் நன்றி. அந்தந்த பகுதிகளின் தலைப்புதான் அதற்கான வீடியோ லிங்க் என்பதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இந்துமதத்தின் அடிப்படை சாதியா?
-
சாதியை எதிர்க்கவேண்டும் என்று நாராயணகுரு சொல்லவில்லை, சாதியைப் பற்றி எண்ணவே
கூடாது என்றுதான் சொன்னார். ஏனென்றால் இந்திய மனம் சாதிதவிர எதைப்பற்றியுமே
சிந்தி...
19 hours ago
19 comments:
//நான் இது சம்பந்தமாக இட்ட அத்தனை பதிவுகளையும் பொறுமையாக படித்து பின்னூட்டங்கள் இட்ட அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.//
உங்களுக்கும் சேர்த்தே நன்றி சொல்ல வேண்டும்!
பல்வேறு சூழ்நிலைகளில் தொலைக்காட்சியில் இந்த் சீரியலைப் பார்க்க முடியாத குறையை, மறுநாளே உங்கள் பதிவில் கதைப்போக்கை வாசித்து, அந்தக் குறையைப் போக்கிக் கொண்டிருந்தேன்!
வர்ணம், சாதி முறைகளைப் பற்றித் தவறான அணுகுமுறைகளும், கண்டனங்களும் வலுத்து வரும் இந்த நேரத்தில், ஒரு தெளிவையும், புரிதலையும், சோவின் இந்த சீரியல் கொடுத்திருக்கிறது.
@கிருஷ்ணமூர்த்தி
கதைபோக்கை வாசிப்பதோடு மட்டும் ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும்? அதை மீண்டும் பார்க்கவும் செய்யலாமே.
சம்பந்தப்பட்ட பகுதியின் தலைப்பே அதன் வீடியோவுக்கான ஹைப்பர் லிங்க் ஆயிற்றே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இதுவரை நீங்கள் இட்ட பதிவுகளுக்கு மிகவும் நன்றி. உபயோகமாயிருந்தது. ஆனால், தொடர் இவ்வளவு சீக்கிரம் முடிந்துவிடும் என எதிர்பார்க்கவே இல்லை. அவிழாத முடிச்சுகள் பல இன்னும் இருக்கின்றன.
தயாரிப்பாளருக்கு என்ன பிரசினையோ, தொடரை திடீரென முடித்துவிட்டார். நல்ல தொடர்.
ராஜசுப்ரமணியம்
@ராஜசுப்ரமணியம்
கிடையவே கிடையாது. சீரியல் சரியான தருணத்தில்தான் முடிக்கப்பட்டுள்ளது.
அவிழாத முடிச்சுகள் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் கூறுங்களேன். எனது அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்துக்கும் விஷயம் கிடைத்த மாதிரி ஆயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்
உண்மையிலேயே நல்லதொரு தொடர்.. அசோக்கின் ஒவ்வொரு கேள்விகளும் மறக்க முடியாதது.. அலுவலக வேலை காரணமாக சில பகுதிகள் விட்டுப் போனபோது தங்கள் பதிவுகள் தான் உதவியாக இருந்தது சார்.. வீடியோ பார்க்க வேண்டிய அவசியமே இல்லாமல் அனைத்தையும் எழுதியிருந்தீர்கள்.. ரொம்ப நன்றி.
//கோவிலில் வைத்து மனிதர்களை வணங்கலாமா //
வணங்கக் கூடாது.. சாஷ்டாங்க நமஸ்காரம் கூட துவஜஸ்தம்பத்தின் முன்பு மட்டும் தான் செய்ய வேண்டும். பெண்கள் கையை தலைக்கு மேலே தூக்கி வழிபடக் கூடாது என்பதும் கோவில் வழிபாட்டு முறைகளில் உண்டு.
//dondu(#11168674346665545885) said...
@ராஜசுப்ரமணியம்
கிடையவே கிடையாது. சீரியல் சரியான தருணத்தில்தான் முடிக்கப்பட்டுள்ளது.
அவிழாத முடிச்சுகள் ஏதும் இருப்பதாக தோன்றவில்லை. அப்படி ஏதேனும் இருந்தால் கூறுங்களேன். எனது அடுத்த நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்துக்கும் விஷயம் கிடைத்த மாதிரி ஆயிற்று.
அன்புடன்,
டோண்டு ராகவன்//
அப்போம் இன்னும் விட்ற்தா இல்லை
நானும் இத்தொடர் ஆரம்பிக்கும் போது மனைவியிடம் சொல்லி ரிக்கார்ட் பண்ணி வைத்திருந்தேன் அதன் பிறகு உங்கள் பதிவில் லிங்க் கிடைத்ததும் விட்டுவிட்டேன்.
புத்தகம் படித்த போது(1990 களில்) ஏற்பட்ட பிரமிப்பே போகாத போது வீடியோவில் அவ்வளவாக சிரத்தை ஏற்படவில்லை எனினும் புதியவர்களுக்கு மற்றும் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு நல்ல விளக்க தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன்.
நான்கு வர்ணம் உருவாக்கிய முறையை பற்றி காஞ்சி சங்கராச்சாரியாரின் “தெய்வத்தின் குரலில்” விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
பார்த்ததை போன்றோ இல்லை அதை விடவோ சில சமயம் படிப்பது சுவையாக இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் சில விஷயங்கள் புரியாத - இல்லை கவனிக்காமல் விட்டால் கூட அவற்றின் முக்கியத்துவம் / அழகு ஆகியவற்றையும் நன்கு 'கவர்' செய்து இருந்தீர்கள். மிக்க நன்றி.வாழ்த்துக்கள்
இத்தொடர் பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளை தொகுத்து கிழக்கு பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிடலாமே
//இத்தொடர் பற்றி நீங்கள் எழுதிய பதிவுகளை தொகுத்து கிழக்கு பதிப்பகத்தில் புத்தகமாக வெளியிடலாமே//
புத்தகம் போடும் அளவுக்கு இப்பதிவுகள் விசேஷமானவை இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
appaadaa..
ippo ozinthukidanth thaliththukaL veliyee varalaam.
romba nanri saami.
you did a gr8 job sir...thank you
Dondu Sir,
Thanks for the excellent coverage and your tireless efforts in giving us updates on the serial. I do agree with you that if the serial ended when we wanted more from it, then it's an excellent serial. Great work by Cho and your contribution to the web world has been equally important.
I didn't know that Vivek Chitra Sundaram produced this serial. How can he tell anything to Cho?. I believe he still works in Thuklaq magazine.
We definitely feel that it has a great value as being published as a book. If you are against it, why don't you combine all your episode updates and send it to Cho as a start.
Regards.
Partha.
எங்கே பிராமனன் சீக்கிரத்தில் முடிந்துவிட்டது. இன்னும் தொடர்ந்திருந்தால் திரு.சோ அவர்களின் வாயிலாக இந்து மத கருத்துக்களை இன்னும் அதிகமாக கேட்டிருக்கலாம். சோ அவர்கள் இதே போல தத்துவங்களை விளக்கும் நிகழ்ச்சி மீண்டும் நடத்தினால் நன்றாக இருக்கும்.
நன்றி,
ராம்குமரன்
எங்கே பிராமனன் புத்தகத்தின் ஒலிவடிவை இங்கே கேட்கலாம்.
http://www.podbazaar.com/view/126100789566374044
நன்றி டோண்டு ஐயா, உங்களால் தான் எங்கே பிராமனன் டிவி தொடரின் இன்டெர்னெட் லிங்க் கிடைத்தது. வீடியோ இல்லத தருனங்களில் உங்களது பதிவு உதவி செய்தது
நன்றி,
ராம்குமரன்
Dondu Sir,
thanks a lot for posting the Enge Brahmanan series. Whenever we missed watching, we return to your blog for making it up. Wonderful narration and excellent work. You had done a great service by popularising this serial across the tamil netizens.
BTB, I am the person who mentioned to you about the start of this serial several months back. I never realised that such a small spark like comment would result in such a big treat. Thanks a lot.
Kannan
//I am the person who mentioned to you about the start of this serial several months back. I never realised that such a small spark like comment would result in such a big treat.//
வாழ்க்கையில் பல அற்புத விஷயங்கள் அம்மாதிரித்தான் ஜஸ்ட் லைக் தட் ஆரம்பிக்கின்றன. அதுதான் ரொம்ப சுவாரசியமான விஷயம்.
உங்களுக்கு மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
I was able to see the serial only 2-3 days in a week due to work schedule. Your coverage filled that gap.
Serial has discussed some of the interesting questions we face. Your postings invoked more curiosity.
Thanks a lot for your coverage.
SK
Post a Comment