பகுதி - 88 (05.06.2009)
நாதனும் நீலகண்டனும் பேசுகின்றனர். மாப்பிள்ளைப் பையனை அவன் இங்கு வரும்போது தன்னைப் பார்க்க அழைத்து வருமாறு நாதன் கூற, நீலகண்டனும் ஒத்து கொள்கிறார். ரிஜிஸ்டர் கல்யாணம் முடிந்ததுமே மாப்பிள்ளை பையன் கிளம்பி விடுவான் அல்லவா என வசுமதி கேட்க, ஆமாம் என்கிறார் நீலகண்டன். வைதீக திருமணம் கிரமமாக நடந்த பிறகுதானே சாந்தி முகூர்த்தம் என விடாமல் வசுமதி கேட்கிறாள். நீலக்ண்டன் விடைபெற்று சென்றதும் நாதனிடம் வசுமதி இதில் ஒன்றும் ரிஸ்க் இல்லையே என கேட்கிறாள். ஒரு ரிஸ்கும் இல்லை, எது எப்படியிருந்தாலும் வசுமதியின் ரிஸ்க் தீர்ந்தது என நாதன் கூறிவிடுகிறார். அவளும் தனது லேடீஸ் கிளப் தோழி மைதிலியைப் பார்க்க விரைகிறாள்.
நர்ஸ் பார்வதியும் அவளது வட இந்திய சேட்டு காதலனும் வருகின்றனர். அவனுக்கு வ சொல்ல வராது அதை ப என்று கூறியே படுத்துகிறான். இந்தக் காட்சி காமெடி ரிலீஃபாக இருந்தாலும் ஒரு வித அன்புடன் கூடிய கலாய்ப்பாகவே பார்வதியால் கையாளப்படுகிறது.
வேதபாடசாலையில் அசோக்கும் அவன் நண்பன் சங்கரனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். தன் மகன் சங்கரனை வேதபாடசாலையில் படிக்க அனுப்பிய அவனது தந்தையை நினைத்தால் பெருமையாக இருக்கிறது எனக் கூறும் அசோக், அவனிடம் மேலும் கேட்கிறான், சங்கரன் உலகவாழ்க்கையை விட்டு வெகுதூரம் விலகியதாகத் தோன்றவில்லையா என, அதற்கு சங்கரன் உலகில் நடக்கும் பல அற்புத விஷயங்களை விட்டு மக்கள்தான் விலகுவதாக தனக்கு தோன்றுகிறது என சிறிது தயக்கமின்றி கூறுகிறான். பிறகு அவன் அசோக்கிடம் விடை பெற்று வேதபாடசாலைக்குள் செல்கிறான்.
அப்பக்கமாக சாம்பு சாஸ்திரிகள் வருகிறார். அவரிடம் வணக்கத்துடன் பேசுகிறான் அசோக். அங்கு தான் ஒருவரை பார்க்க வந்ததாகக் கூறிவிட்டு அவரும் உள்ளே செல்கிறார். அப்போது அங்கு வரும் அக்கௌண்டண்ட் சோபனா சாம்பு சாஸ்திரி ஒரு ஏழைமாணவன் வேதம் படிக்க உதவி செய்ததாக கூறிவிட்டு செல்கிறாள். திரும்பவரும் சாம்பு அவர்களிடம் அசோக் இது பற்றி சிலாகித்து பேச, அவரும் ஏதோ தன்னாலானது என அடக்கத்துடன் கூறுகிறார். தான் மேலெ போய் சேரும் முன்னால் குறைந்தபட்சம் 50 குழந்தைகளுக்காவது அவ்வாறு உதவி செய்ய வேண்டும் என்னும் தனது விருப்பத்தைக் கூற, பிரமித்து போய் நிற்கிறான் அசோக். “வேதகோஷம், வேதகோஷம் சொல்லும் பொருள் என்னவோ” என்னும் டைட்டில்சாங் பின்னணியில் கம்பீரமாக ஒலிக்கிறது.
வையாபுரியை பார்க்க சாரியார் வந்திருக்கிறார். வையாபுரி தன் மகன் பெருமாளை அழைத்து சாரியார் சொல்வதுபோல அவன் ஒரு பெண்ணை விரும்புகிறானா எனக் கேட்க அவனும் ஆமோதிக்கிறான். அதே சமயம் தந்தையின் சொல்லை தான் மீறப்போவதில்லை எனவும் கூறிவிடுகிறான். வையாபுரி இப்போது பேச ஆரம்பிக்கிறார். வேறு சாதியில் கல்யாணம் கட்டுவது கூட்டணிக் கட்சிகளுடன் ஒப்பந்தம் வைத்துக் கொள்வது போல என்றும், அக்கல்யாணம் தோற்றால் பிரச்சினை என அவர் கூற, கூட்டணியில் ஆட்சி அமைந்தால் அக்கூட்டணி நிலைக்கும், கலப்பு மணத்தில் குழந்தை பிறந்து விட்டால் எல்லாமே சரியாகிவிடும் என சாரியார் பதிலளிக்கிறார். வையாபுரியோ நடேச முதலியார் இது சம்பந்தமாக என்ன கூறுகிறார் என்பதை பார்த்துத்தான் தானும் பேச முடியும் என்றும், தான் சரி என சொன்னபிறகு நடேச முதலியார் மாட்டேன் என்றால் தனக்கு அவமானம் என்றும், தான் மதிப்புக்குரிய எம்.எல்.ஏ. என்றும் அவர் கூறுகிறார். சாரியாரும் நடேச முதலியாரிடம் தான் முதலில் வையாபுரியை அணுகியது பற்றி கூறாமல் அவருடன் பேசப்போவதாக கூறுகிறார்.
வையாபுரியின் மகனது ஜாதகம் கிடைத்தால் தான் அதையும் பார்க்க விரும்புவதாக அவர் கூற, ஜாதகம் எதுவும் குறித்து வைக்கவில்லை எனவும் பிறந்த தேதி, இடம், நேரம் ஆகியவற்றை மட்டும் குறித்துள்ளதாகக் கூறி விவரங்களை தருகிறார். அவற்றைப் பார்த்த சாரியார் அவரது மகனும் தனது மகனும் டாக்டர் கைலாசத்தின் கிளினிக்கிலேயே ஒரே நாளில் பிறந்ததாகவும் தன் மகன் காலையில் பிறந்திருக்க அவர் மகன் மாலையில் பிறந்ததாக கூறுகிறார். ஜாதகத்தை தானே கணித்து கொள்வதாகக் கூறுகிறார்.
அசோக்கை பார்க்க வந்த உமா தனது திருமணம் நிச்சயம் ஆனது குறித்து அவன் வாழ்த்து தெரிவிக்கவில்லை என குறைபடுகிறாள். தான் அதை கேள்விப்பட்டதாகவும், மிக்க மகிழ்ச்சி அடைந்ததாகவும் அவன் கூறுகிறான். அடுத்த நாள் அமெரிக்காவிலிருந்து ரமேஷ் வரப்போவதாகவும், அதற்கடுத்த நாள் பதிவுத் திருமணம் என்றும் உமா கூறுகிறாள். வைதீகத் திருமணமும் உண்டல்லவா என அசோக் கேட்க, அது இல்லாமலா என உமா கூறுகிறாள். எல்லாமே தலைகீழாக மாறிண்டு வரது, கல்யாணத்துக்கு முந்தைய நாள் ரிசப்ஷன் வச்சுக்கிறா, இப்படித்தான் சம்பிரதாயங்களை வளைக்கிறார்கள் என அசோக் ஆதங்கத்துடன் கூற, காலத்துடன் தாங்களும் மாறவேண்டியதன் அவசியத்தை உமா எடுத்துரைக்கிறாள். எது எப்படி இருந்தாலும் தன்னைப் பொருத்தவரை ட்ரடிஷனே முக்கியம் என அசோக் கூறுகிறான். தனது பதிவுத் திருமணத்துக்கு அசோக் தன் தரப்பில் சாட்சிக் கையெழுத்து போட வேண்டும் எனக் கூற அசோக்கும் மனப்பூர்வமாக சம்மதிக்கிறான். உமா உடனே இச்செய்தியை செல்பேசி மூலம் தன் அன்னையிடம் கூற, பர்வதம் மறு பக்கத்திலிருந்து ஏதோ கூற, “சீ, பாவம் அம்மா” எனக் கூறி பேச்சை கட் செய்கிறாள் உமா. “என்ன, இந்த அசடுக்கு கையெழுத்தெல்லாம் போடத் தெரியுமா என உன் அம்மா கேட்டார்களா” என அசோக் சரியாக ஊகித்து கேட்க, உமா திகைக்கிறாள்.
தான் அவனுடன் நட்பு கொண்டு பழகியதை அவளால் மறக்க இயலாது எனவும், அவனும் தன்னை மறக்கமாட்டான்தானே எனக் கேட்கிறாள். அசோக்கும் அதை ஆமோதித்து அவள் எப்போதுமே தனது ஆத்மார்த்தமான தோழி என்கிறான். தான் அவனிடம் பழகிய அளவுக்கு வேறு எந்த இளைஞனிடம் பழகியிருந்தாலும் அவன் தனது பலவீனத்தை பயன்படுத்தியிருப்பான் என அவள் கண்கலங்குகிறாள்.
“இது என்ன சார் என்ன சொல்றாங்க இங்கே, பெண்கள் என்றாலே பலவீனம்தானா” என கேட்கிறார் சோவின் நண்பர். மனித இயற்கையைத்தான் இங்கு குறிப்பிடுகிறார்கள் என சொன்ன சோ, சாந்தி பர்வத்தில் பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு ராஜ்ய பரிபாலனம் சம்பந்தமாக பல அறிவுரைகள் கூறும் போது சொன்ன ஒரு கதையை இப்போது சோ கூறுகிறார்.
தேவசர்மா என்னும் முனிவர், அவரது மனைவி ருசி மிக அழகு. சிஷ்யர் பெயர் விபுலர். ஒரு யாகம் நடத்த முனிவர் வெளியே செல்ல வேண்டியிருந்தது. தான் இல்லாத சமயம் பார்த்து இந்திரன் ருசியின் மனதை கலைத்து விஷமம் செய்யக்கூடும் எனத் தோன்றுவதால் தன் மனைவியை இந்திரனிடமிருந்து காப்பாற்றுவது விபுலனின் கடமை எனக்கூறி விட்டு செல்கிறார். பல உபாயங்களை யோசித்து திருப்தியடையாத விபுலர் தன் உடலை ஓரிடத்தில் கிடத்திவிட்டு, தன் உயிரை குரு பத்தினியின் உடலில் புகுத்துகிறார். இந்திரன் வந்து முயற்சி செய்ய, “என்ன காரியம் செய்யத் துணிந்தாய் இந்திரனே, எனது குரு உன்னைப் பார்த்தால் பஸ்மமாகி விடுவாய், ஓடிப்போ” என ருசியின் குரலில் விபுலர் கூறுகிறார். விபுலனே தன் குருபத்தினியின் உடலில் புகுந்து கொண்டதை உணர்ந்த இந்திரன் பதறிப்போய் அவ்விடத்தை விட்டு ஓடிப்போனான்.
குரு திரும்பி வந்ததும் ஏதேனு விஷயம் நடந்ததா எனக் கேட்க, இந்திரனிடமிருந்து அவர் மனைவியை காப்பாற்றியதாக பொதுப்படையாக பதில் கூறிவிடுகிறார். பிறகு வேறொரு தருணத்தில் தன் மனைவி ஆசைப்பட்டு கேட்டாள் என்பதற்காக ஒரு அரிய மலரை பறித்து வருமாறு விபுலரை குரு அனுப்புகிறார். அவரும் மலருடன் திரும்பும்போது இருவர் சண்டையிடுவதைப் பார்க்கிறார். அவர்கள் இருவரும் ஒருவரை மற்றொருவர் குற்றம் சாட்டுகின்றனர். தம்மிருவரில் பொய் சொல்பவனுக்கு விபுலனுக்கு ஏற்படும் கதி கிட்டும் எனக் கூற, அதைக் கேட்ட விபுலர் திகைக்கிறார். பிறகு மேலே செல்கிறார். ஆறுபேர் ஒருவரை இன்னொருவரை ஏமாற்று பேர்வழி என குற்றம் சாட்டி, அவ்வாறு ஏமாற்றுபவன் விபுலனின் கதியை அடைவான் எனக்கூற. விபுலர் மீண்டும் திகைக்கிறார். முக வாட்டத்துடன் வந்த விபுலரை பார்த்து குரு “என்ன அந்த இருவர் மற்றும் அறுவர் சொன்னதைக் கேட்டு திகைத்தாயா” என அவரிடம் வினவ, சிஷ்யரின் மனம் மேலும் திகைக்கிறது. அந்த இருவர் இரவும் பகலும் என்றும், அறுவர் ஆறு பருவங்கள் எனவும் கூறிய முனிவர், விபுலன் குரு மனைவியின் உடலில் புகுந்து காத்ததைத் தவிர வேறு எந்த உபாயமும் செய்திருக்க முடியாது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்றாலும், தன்னிடம் அதை கூறாது மறைத்ததுதான் தவறு, என்றும் யார் என்ன காரியம் எவ்வளவு ரகசியமாகச் செய்தாலும் அதை இரவு பகல், ஆறு பருவங்கல் ஆகியவற்றிடமிருந்து மறைக்க இயலாது, அதை அவருக்கு உணர்த்தவே இந்த நிகழ்வுகள் நடக்கின்றன. இந்தக் கதையில் பெண்ணைக் காப்பாற்றுவதின் முக்கியத்துவம் உணர்த்தப்படுகிறது. அதற்காக பெண்ணை குறை செல்வதும் தவறு எனவும் சோ கூறுகிறார்.
உமா மேலே பேசுகிறாள். “நீ ஒரு gentleman" எனக் கூறியவள் சற்றே தாமதித்து அந்தப் பதமும் அசோக்கை முழுக்க விவரிக்கவில்லை, அவன் அதற்கெல்லாம் மேலே எனக்கூறி நெகிழ்கிறாள். அசோக் மந்தகாச புன்னகையுடன் அவளைப் பார்த்த வண்ணம் நிற்கிறான்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
11 hours ago
5 comments:
//அவற்றைப் பார்த்த சாரியார் அவரது மகனும் தனது மகனும் டாக்டர் கைலாசத்தின் கிளினிக்கிலேயே ஒரே நாளில் பிறந்ததாகவும் தன் மகன் காலையில் பிறந்திருக்க அவர் மகன் மாலையில் பிறந்ததாக கூறுகிறார். ஜாதகத்தை தானே கணித்து கொள்வதாகக் கூறுகிறார்.//
இது என்ன... சோவின் 'சாத்திரம் சொன்னதில்லை' நாடகத்தை இதில் நுழைப்பது மாதிரி இருக்கிறது?!!! மெகா சீரியலாக இழுக்கும் உத்தியா?
@டோண்டு ரசிகன்
இருக்கட்டுமே? நீங்கள் எங்கே பிராமணன் கதையை பார்த்தால், அது இத்தனை நேரத்துக்கு முடிந்திருக்க வேண்டும். அதே சமயம் கதை வெளியான சமயத்தில் அதை அந்தரத்தில் தொங்க விட்டிருந்தார்.
இப்போது அதை மாற்றி விட்டுப் போனவற்றை நிரப்ப வேண்டிய அவசியம் இருக்கிறது.
சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தை நான் படித்ததில்லை. ஆனால் குன்ஸாக கேள்விப்பட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகத்தை விலைக்கு வாங்கியோ, நூலகத்திலிருந்து எடுத்தோ படிக்கிறேன். ஒரு வேளை வையாபுரியின் குழந்தையும் சாரியாரின் குழந்தையும் பிறந்ததுமே கைமாறி விட்டன என்று கதை போகும் என நினைக்கிறேன்.
அப்படியே இழுத்தால்தான் என்ன? அதை இதுவரையில் சுவாரசியம் குன்றாமல்தான் செய்து வருகிறார். ஓரிடத்திலும் மெலோட்ராமா என்பதே இல்லை.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//
வணக்கம்.
கீழே உள்ளது போல எனது பதிவின் கடைசியில் போடலாமென நினைக்கிறேன், போடலாமா?
---------
எனது மதிப்பிற்குறிய டோண்டு ராகவன் அவர்களிடம் கேட்க விரும்பும் கேள்விகள்:
1. கெசட்டில் பெயர் மாற்றுவது என்றால் என்ன?
2. அதைச் செய்வது எப்படி?
3. அப்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன?
4. பெயர், தந்தை பெயர் என வழக்கில் இருக்கும் நமக்கு, படிவங்களில் First Name, Middle Name, Last Name, Surname என்றெல்லாம் இருப்பது ஏன்?
வியாழக்கிழமை இதற்கான பதில்களை எதிர்பார்க்கிறேன். யாரிடமாவது கேட்டாவது சொல்லுங்கள்.
--------------
//
மேலே உள்ளதை தங்களுக்கு மெயில் செய்துள்ளேன், ஆனால் பதில் இன்னும் இல்லை. கிடைத்ததா எனத் தெரியவில்லை... பதில் சொல்லவும்.
கேள்விகள்:
எம்.கண்ணன்.
1. நாற்பதில் (40ல்) நாய்க்குணம் என்கிறார்களே ? அதற்கு என்ன விளக்கம் ? திருமணமான ஒருவன் தன் மனைவியைத் தவிர பிற பெண்களை நாடும் இச்சையைக் குறிக்கிறதா இது ?
2. பதிவர்களுக்காக திரையிடப்பட்ட கிம்.டு.கிக் கின் 'ஸ்பிரிங்க் சம்மர்.....' படம் பார்க்கப் போகவில்லையா ? ஏன் ? அடுத்து 'ஐல்' படம் போட்டால் போவீர்களா ? சாரு நிவேதிதா எழுதும் ஒவ்வொரு தலைப்பையும் பதிவர் உலகம் இப்படி பின்பற்றும் அளவிற்கு பதிவர் உலகத்தையே தன் பக்கம் திருப்பியுள்ளாரே ? அடுத்து பதிவர்கள் கும்மியடிக்கும் தலைப்பு யூ.ஜி.கிருஷ்ணமூர்த்தியின் சித்தாந்தங்களா ?
3. பொதிகை டிவியில் காண்பிக்கப்படும் 'வயலும் வாழ்வும்' நிகழ்ச்சிகளை இந்தக் காலத்திலும் பார்த்து பயன் பெறும் மக்கள் இருக்கிறார்களா ? (சென்னை/திருச்சி/மதுரை வானொலியில் ஒலிபரப்பாகும் விவசாய நிகழ்ச்சிகளைக் கேட்டு பயன் பெற நிறைய பேர் உள்ளார்கள்)
4. மானாட மயிலாட - MM-4 க்கு மீண்டும் நமீதா வந்துவிட்டாரே ? சூப்பர் ? சென்ற வார இறுதியில் கலைவாணர் அரங்கில் நடந்த பிறந்த நாள் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தவர்களின் ஏற்பாடா ?
5. நாசா விஞ்ஞானி ஹுஸ்டன் டாக்டர் நா.கணேசன் ஓம் தமிழ் எழுத்திற்கு மைக்ரோசாஃப்ட் விண்டோசில் யுனிகோடில் இடம் வாங்கிக் கொடுத்துள்ளாரே ? மிகவும் முக்கியமான செயல் அல்லவா ? இதைப் பற்றி உங்கள் கருத்து என்ன ?
http://nganesan.blogspot.com/2009/05/tamil-om-windows7.html
6. நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலில் என்றாவது பஞ்சாமிர்தம் கொடுத்துள்ளனரா ? சாப்பிடத்துண்டா ?
7. வைணவ (பெருமாள்) கோயில் புளியோதரை பிரசாதத்தில் மட்டும் என்ன ஸ்பெஷல் ? ஏன் டேஸ்ட் மிகவும் சூப்பராக உள்ளது ? அந்த டேஸ்ட் மற்ற கோயில்கள் பிரசாதத்திலோ வீட்டில் செய்தாலோ புளியோதரை மிக்ஸ் வாங்கி செய்தாலோ இருப்பதில்லை ? உங்கள் வீட்டுப் புளியோதரையில் கோயில் டேஸ்ட் வருமா ? செய்முறை விளக்கம் அளிக்க முடியுமா ?
8. வடகலை - தென்கலை இரு பிரிவினருமே சரணாகதி தத்துவத்தையே பின்பற்றுகின்றனர் (சிறு வித்தியாசத்தில்) என்கிறபோது ஏன் தனித்தனி நாமங்கள் ? ஏன் இவ்வளவு வேறுபாடுகள் ? சச்சரவுகள் ? யார் உசத்தி என்கிற வாதங்கள் ? வடகலை - தென்கலை பெண்ணெடுக்கும் முறை உண்டா ? இல்லை அது மிக தீவிரமாக எதிர்க்கப்படுமா ?
9. மற்ற மாநிலங்களை விட (கேரளா, ஆந்திரா, பிற இந்திய மாநிலங்கள்..) தமிழ் நாட்டில் மட்டுமே ஏன் குடிகாரர்கள் அலம்பல் - அலப்பரை எல்லாம் பண்ணுகிறார்கள் (டாஸ்மாக் வாசலில் அல்லது அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழிகளில்) ? மற்ற மாநிலங்களில் எல்லாம் போனாமா, சரக்கை அடிச்சோமா, வீட்டுக்கோ வேலைக்கோ போனோமா என நடக்கிறது. குடித்துவிட்டு கலாட்டா பண்ணும் கலாச்சாரம் பெரும்பாலும் தமிழனுக்கு மட்டுமே உண்டான பழக்கமா ?
10. எல்லா டிவி சேனல்களிலும் (எஃப்.எம் ரேடியோவிலும்) தமிழ் சினிமா, பாடல்கள், சீரியல்கள் 3 மாதம் இல்லாமல் இருந்தால் உற்பத்தித் திறனும் (productivity) குடும்ப உறவுகளிலும் முன்னேற்றம் வருமா ?
//சாத்திரம் சொன்னதில்லை நாடகத்தை நான் படித்ததில்லை. ஆனால் குன்ஸாக கேள்விப்பட்டுள்ளேன். வாய்ப்பு கிடைக்கும் போது புத்தகத்தை விலைக்கு வாங்கியோ, நூலகத்திலிருந்து எடுத்தோ படிக்கிறேன்.//
இல்லை, அந்த நாடகத்தை படிப்பதற்கு பதிலாக டிவிடி அல்லது விசிடி வாங்கி (மெட்ராஸில் கிடைக்கிறது) ஒரு முறை கண்டிப்பாக பாருங்கள். சாரியார் பாத்திரத்தில் சோவின் நடிப்பு விஸ்வரூபம் எடுத்து நிற்கும் அதி அற்புதமான நாடகம் அது!
Post a Comment