பகுதி - 96 (17.06.2009)
உமா, அவள் மாமனார் மற்றும் மாமியார் சீனில் வருகின்றனர். மாமனாரும் மாமியாரும் ரமேஷ் பற்றிய தத்தம் நினைவுகளை கூறி, அவன் இறந்ததற்காக பிரலாபிக்கின்றனர். உமாவோ ரமேஷ் இன்னும் சாகவில்லை என்பதை உறுதியாக நம்புகிறாள். இதில் அவளது அந்தராத்மாவையே அவள் நம்புகிறாள். மாமனாரோ மாமியாரோ அந்த நம்பிக்கையை ஏற்க ஒத்து கொள்ளவில்லை. அவன் இறந்தான் என்பதில் அவர்களுக்கு சந்தேகமே இல்லை.
“இம்மாதிரி அவசர அவசரமா ரிஜிஸ்டர் மேரேஜ் செய்ததால்தான் இந்த கஷ்டம் எல்லாம். அது நடக்காமல் இருந்திருந்தால் இந்த பெண்ணூக்கு இந்த கஷ்டம் வந்திராதல்லவா” என சோவின் நண்பர் கேட்கிறார். அப்படியெல்லாம் சொல்ல முடியாது என கூறுகிறார். முன்பிறவி பயன் என்பது பற்றியும் பேசுகிறார். அதற்கு உதாரணமாக மகாபாரதத்திலிருந்து கௌதமி என்னும் பெண்ணின் கதையை கூறுகிறார். அவள் மகனை பாம்பு கடித்து இறக்க, அதற்கு யார் காரணம் என பார்க்க போய், பாம்பு, யமன், கடைசியாக காலதேவன் என்று ட்ரேஸ் செய்து கொண்டு போக, கடைசியில் அச்சிறுவனின் முற்பிறவியின் பலனே அது எனவும், அதைத் தடுக்க காலதேவனாலும் ஏலாது எனவும் நிலைநிறுத்தப்படுகிறது.
உமாவின் மாமனார் தன் மகன் இறந்துவிட்டான் என்பதில் உறுதியாகவே இருக்கிறார். அவனை அலை அடித்து போனதை எல்லோரும் பார்த்தார்கள் எனவும் கூறுகிறார். ஆனால் உடல் கிடைக்கவில்லை என்பதை உமா சுட்டிக் காட்டுகிறாள். அவன் இறந்ததை அமெரிக்க செய்தித் தாள்களும் உறுதி செய்ததையும் மாமனார் எடுத்துரைக்கிறார். இல்லை ரமேஷ் சாகவில்லை என உமா திரும்பத் திரும்ப கூறுகிறாள்.
நீலகண்டனும் உமா சொல்வதை ஏற்க மறுக்கிறார். ரமேஷ் இறந்தது ஒரு விபத்து மட்டுமே, அதற்கு காரணம் ரமேஷே தனக்கு விதித்து கொண்டது என்பதையும் நீலகண்டன் கூறுகிறார். கல்யாணத்துக்கு முன்னால் ரமேஷ் உமா ஜாதகத்தை பார்த்திருக்க வேண்டும் என்று பர்வதம் கூறியதையும் அவர் ஏற்கவில்லை. ரமேஷுக்கு நீரில் கண்டம் இருந்ததை பர்வதம் கூற அப்போதும் அவர் ஒத்து கொள்ளவில்லை. ஒரு வேளை அது பற்றிய பயமே ரமேஷை செயல்பட விடாது தடுத்திருக்கும் என்று வேண்டுமானால் கூறலாம் என்கிறார். விதி என தனியாக எந்த மண்ணாங்கட்டியோ நான்சென்ஸோ இல்லை என்பதையும் அவர் கூறுகிறார்.
நீலகண்டன் சரியாகப் பேசுவதாக சோவின் நண்பர் கூறுகிறார். ஏதாவது ஒரு புரியாத நிகழ்ச்சி நடந்தால் அது விதி என கூறுவதே பலருக்கு வழக்கமாகப் போயிற்று எனவும் அவர் கூறுகிறார். வேறு என்னதான் அம்மாதிரி நிகழ்வுகளுக்கு காரணமாகக் கூற முடியும் என சோ அவர்கள் எதிர்கேள்வி போடுகிறார். நன்கு ஆராய்ந்தே இந்த விதி என்னும் கோட்பாடு உருவாயிற்று என அடித்து கூறுகிறார் அவர். இது சம்பந்தமாக மகாபாரதத்தில் கடைசியில் வியாசர் சொல்வதையும் அவர் கூறுகிறார். இந்த ஸ்லோகத்தை படித்தால் முழுமையாக பாரதம் படித்த பலன் கிட்டும் என்று வேறு கூறுகிறார். அதை படித்து பொருளும் கூறுகிறார்.
பிறகு பர்வதம் மற்றும் ரமேஷின் தெய்வ நம்பிக்கை எதுவுமே ரமேஷை காப்பாற்றவில்லை என்பதையும் நீலகண்டன் சுட்டிக் காட்டுகிறார். இந்த தெய்வம் என்ற கான்செப்டே ஏற்று கொள்ள முடியாதது எனவும் கூறிவிட்டு அப்பால் செல்கிறார்.
அசோக் வீட்டில் சமையற்கார மாமி அவனிடம் இப்போதெல்லாம் சந்தோஷமாக அவன் காட்சி தருகிறான் என்பது குறித்து பேசுகிறார். மேக மூட்டங்கள் எல்லாம் விலகி எல்லாமே தெளிவாகத் தெரிகின்றன என அசோக் கூறுகிறான். பிறகு மாமியிடம் அவள் கணவர் பர்றி விசாரிக்கிறான். அவர் ரிட்டயர் ஆகிவிட்டதாகவும் ரொம்ப கடன் தொல்லையில் இருப்பதாகவும் மாமி கூறுகிறாள். எல்லாத்துக்கும் வேளை வரவேண்டும் என அசோக் கூறுகிறான். எல்லோரும்தான் எல்லா காலங்களிலும் ஆப்பிள் மரத்திலிருந்து விழுவதை பார்த்து கொண்டே இருந்தார்கள். ஐசக் நியூட்டன் வந்த பிறகுதான் அந்த நிகழ்வை பார்த்து மேலே யோசித்து புவியீர்ப்பு விசை பற்றி எல்லாம் பேச முடிந்தது என அவன் விளக்குகிறான்.
நாதன் வசுமதியிடம் போய் சமையற்கார மாமி அசோக்கின் முன்னேற்றம் பற்றி பேச அவர்களும் அதை தாங்களே கண்டுணர்ந்ததாக கூறி மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.நாதன் பாகவத்ருக்கு கிரெடிட் கொடுக்க, வசுமதி சாரியாரை சிலாகிக்கிறாள். அங்கு வரும் அசோக் தான் பாகவதரை காண திருச்சி போக வேண்டுமென்றும் அப்படியே அவர் அட்டெண்ட் செய்யும் ஹிந்து மத மகாநாட்டௌக்கும் செல்ல வேண்டும் என நாதனிடம் கூற அவரும் சம்மதிக்கிறார். வசுமதி பயப்படுகிறாள், அவன் மறுபடி காணாமல் போவன் என்று, நாதன் அப்படியெல்லாம் நடக்காது என உறுதி கூறுகிறார்.
பார்வதியின் காதலன் சேட்டு பையன் நடேச முதலியாரிடம் வந்து சோபனாவின் பெயர் பெருமாளின் பெயருடன் சேர்ந்து பேப்பரில் அடிபட்டது எனவும், பெருமாள் அதை பற்றி ஒன்றும் செய்யாது பேசாமல் இருந்ததால், சோபனா பாச்சாவை திருமணம் செய்து கொள்ள போகிறாள் என கூறுகிறான். இதெல்லாம் தனக்கு தெரியும் எனக் கூறும் நடேச முதலியார் விரக்தியுடன் எப்படியோ பென்ணூக்கு திருமணம் ஆனால் சரி என பேசுகிறார்.
ரமேஷ் உமா ஜாதகத்தை ஒரு ஜோசியரிடம் காட்ட, அவர் உமா ரமேஷுக்கு பத்துக்கு பத்து பொருத்தங்கள் இருப்பதையும், உமாவுக்கு நல்ல மாங்கல்ய பலம் இருப்பதையும் கூறி, ரமேஷின் ஜாதக கணிப்பில் சில தவறுகள் இருப்பதை கூறி, அவனுக்கும் நல்ல ஆயுள் இருப்பதாகவும் அடித்து கூறுகிறார். முக்கியமாக சுக்கிரனின் பார்வை அவனுக்கு நன்றாக இருக்கிறது என்னும் அவர் சுக்கிராச்சாரியார் இறந்த அசுரர்களையும் பிழைக்க வைத்தவர் என கூறுகிறார்.
அப்படியா சார் என சோவின் நண்பர் கேட்கிறார்.
பகுதி - 97 (18.06.2009)
”செத்து போனவர்களை சுக்கிராச்சாரியார் உயிர்ப்பிக்க கூடியவரா, நம்பவே முடியவில்லையே” என சோவின் நண்பர் கேட்கிறார். நம்பிக்கை இருந்தால் நம்பலாம், கதை என்றால் கதைதான் என சொல்லும் சோ நம்மவருக்கும் மேல் நாட்டினருக்கும் இடையிலே காலம் என்ற கான்சப்ட் சம்பந்தமாக முக்கிய வித்தியாசங்கள் உள்ளன என்பதை சுட்டிக் காட்டுகிறார். அவர்கள் ஐயாயிரம் ஆண்டுகள்தான் அதிக பட்சமாக யோசிக்கக் கூடியவர்கள் ஆனால் நம்மவர்களோ, யுகக்கணக்கில் லட்ச லட்சமான ஆண்டுகள் பற்றி பேசுபவர்கள். மேலும் சில கருத்துகளை இது சம்பந்தமாக கூறிய அவர் பிறகு தேவகுரு பிருஹஸ்பதியின் மகன் கச்சன், அசுரகுரு சுக்கிராச்சாரியார் மற்றும் அவரது மகள் தேவயானி பற்றிய கதையையும் கூறுகிறார். இறப்பவர்களை உயிர்ப்பிக்கும் சஞ்சீவினி மந்திரம் தெரிந்தவர் சுக்கிராச்சாரியார். அதனால் தேவாசுரப் போரில் இறக்கும் அசுரர்களை உயிர்ப்பித்து மீண்டும் சண்டையில் பங்கேற்கச் செய்ய, அதனால் ஆயாசம் கொள்கின்றனர் தேவர்கள். ஆகவே அவர்கள் கச்சனை சுக்கிராச்சாரியாருக்கு சிஷ்யனாகி மந்திரம் கற்று வருமாறு அனுப்புகின்றனர். அவன் அதை கற்றுக் கொள்ளாமலிருப்பதற்காக அசுரர்கள் அவனுக்கு பல வகையில் தொல்லை தர, கடைசியில் அந்த தொல்லைகளே கச்சன் சஞ்சீவினி மந்திரத்தை கற்ற்க வழி செய்கின்றன. இதில் முக்கியமாக இந்த சீரியலின் காண்டக்ஸ்டில் சுக்கிராச்சாரியார் என்பவர் மரணமடைந்தவர்களை உயிர்ப்பிக்கிறவர் என புரிந்து கொள்ள வேண்டியது.
ஆக இந்த ஜாதகரான ரமேஷ் சுக்கிரனின் பூர்ண பரிவு பார்வைக்கு உட்பட்டவராக இருப்பதால் அவர் துர்மரணம் அடைந்திருக்க இயலாது எனவும், அவர் தீர்க்காயுளோடு இருப்பதாக அடித்து கூறுகிறார் ஜோசியர். உமாவுக்கு மகிழ்ச்சி.
“உன் மனப்படியே எல்லாம் நடந்து, நீ ரமேஷுடன் அமோகமான வாழ்க்கையை வாழ்வாயாக, ததாஸ்து” என அசோக் கூற உமா மகிழ்வது இருக்கட்டும், பார்வையாளர்களுக்கும் ஒரு மனநிம்மதி வருவதை மறக்கவியலாது. “உன் பார்வையிலும் தெளிவு வந்துள்ளது” என கூறுகிறாள் உமா. பிரும்மோபதேசத்துக்கு பிறகு தன்னுள் ஒரு தேடல் வந்துள்ளதாக கூறும் அசோக், உண்மையான பிராமணன் இருக்கிறானா, அவன் எங்கே இருக்கிறான் என்று அத்தேடலை விவரிக்கிறான். தான் திருச்சி மகாநாட்டுக்கு செல்ல இன்னொரு முக்கிய காரணமே ஒரு வேளை பாகவதரே தான் தேடும் உண்மையான பிராமணராக இருப்பாரா என்ற தனது எண்ணத்தை பரிசோதித்து கொள்ளவே எனவும் கூறுகிறான். “எங்கே பிராமணன் என்பதை தேட புறப்பட்ட உனது முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்” என மகிழ்ச்சியோடு உமா கூற, அதற்கு நன்றி கூறுகிறான் அசோக்.
திருச்சியில் பாகவதரை சந்திக்கும் அசோக் நேரடியாகவே சில கேள்விகள் கேட்கிறான். பிராமணன் என்ற தகுதியையடைய பல கடுமையான நியமங்கள் உண்டு. அவர்கள் கற்க வேண்டிய சாத்திரங்கள் பல. அம்மாதிரி எல்லா தகுதிகளையும் பெற்ற பிராமணர் யாராவது தற்சமயம் இருக்கிறார்களா? சுருக்கமாக எங்கே பிராமணன் என அசோக் கேட்க, பாகவதர் திக்குமுக்காடி போகிறார். எல்லா குணாதிசயங்களும் பொருந்தி வருவது என்பது நடக்காத காரியம், கிட்டத்தட்ட அவற்றில் பெரும்பான்மையான குணங்களுடன் உள்ளவர்கள் உண்டு என பாகவதர் இழுக்க, அது எப்படி கால் பிராமணன், அரைக்கால் பிராமணன் என கொள்வது என அசோக் கேட்கிறான்.
அசோக் மேலும் கூறுவதாவது. நான்கு வர்ணங்கள் என்பது அந்தந்த மனித இயல்புகளுக்கு பொருத்து வரையறுக்கப்பட்டன. அதில் வர்ணம் என்பது பிறப்பினால் வருவதல்ல என்பது மிக முக்கியம். அவற்றுக்கும் இப்போது காணப்படும் சாதிக்கும் ஒரு சம்பந்தமுமே இல்லை. வெறுமனே பூணல் போடுவதாலும், பல சின்னங்களை தரிப்பதாலுமே ஒருவன் பிராமணன் ஆகிவிட முடியாது. இப்போது இன்னொரு நேரடியான கேள்விக்கு அவன் வருகிறான். பாகவதர் பிராமணரா, அவர் தந்தை, பாட்டனார் பிராமணர்களா, தனது தந்தை பிராமணரா அல்லது தானே கூட பிராமணனா என்பதே அவன் கேட்பது.
“என்ன சார் பாகவதரையே இப்படி கேட்டுவிட்டான்” என சோவின் நண்பர் ஆச்சரியப்படுகிறார். அது அவனது தேடல். ஆகவே அப்படி அவன் கேட்டதில் தவறு இல்லை என்பதை சோ விளக்குகிறார். இம்மாதிரி பார்த்தால் தானே கூட பிராமணன் இல்லை என அவர் தெளிவுபடுத்துகிறார். சாதி என்பதே தற்காலத்தில் மனிதருக்கே உரித்தான குழு அமைக்கும் மனப்பான்மை என்பதையும் தெளிவுபடுத்துகிறார். சாதி இல்லையென்றால் வேறு வகையில் குழு அமையும். கட்சிகள் உருவாவது போல. இப்போதைக்கு அசோக் கேள்வி கேட்டுள்ளான், மேலே என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என சோ கூறுகிறார்.
தன்னைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் பாகவதர். உணர்வு பூர்வமாக தான் தன்னை பிராமணன் என கூறிக் கொண்டாலும், அறிவு பூர்வமாக அவ்வாறு கூறத் தயக்கமாக இருக்கிறது என்று ஆரம்பிக்கும் அவர், தான் பிராமணனக்குரிய வெளிச் சின்னங்களுடன் இருப்பவர், வேத சாஸ்திரங்களை கரைத்து குடித்தவர் என அவர் ஆரம்பிக்கிறார்.
“நிஜமாகவே பாகவதர் வேத சாஸ்திரங்களை கரைத்து குடித்தவரா” என சோவின் நண்பர் கேட்க, அவர் அப்படி நினைத்து கொண்டிருக்கிறார் என சோ பேச ஆரம்பிக்கிறார். இம்மாதிரித்தான் பலர் தாங்கள் சிறிது கற்க ஆரம்பித்ததுமே எல்லாமே தெரிந்து கொண்டு விட்டதாக நினைத்து கொள்கின்றனர் எனக் கூறி. அவ்வளவு அறிவு பெற்ற நாரதரே தனக்கு எல்லாமே தெரியும் எனக் கூறிக் கொள்ளாது, அடக்கத்துடன் சனத்குமாரரிடம் பாடம் கேட்க வருகிறார் என்பதையும் விளக்குகிறார். இங்கு இது பாகவதரின் பாத்திர குணாதிசயத்தை விளக்குகிறது என்றும் அவர் கூறுகிறார்.
பாகவதர் தொடர்கிறார். ஆயினும் தான் தன்னை பிராமணன் என அடையாளம் காட்டிக் கொள்ள இவை போதாது என்பதையும் ஒத்து கொள்கிறார். அசோக் சீரியசான முகபாவத்துடன் அவர் கூறுவதை மிக கவனத்துடன் கூறுகிறான். பாகவதர் பேசப்பேச அவரது உணர்ச்சிகள் பீறிட்டு எழுகின்றன. பல வகைகளில் தன்னையே ஆய்ந்து பார்க்கும் அவர் தான் பிராமணன் இல்லை, தன் தகப்பனாரோ பாட்டனாரோ பிராமணர்கள் இல்லை, அதே போல அசோக்கோ அவன் தந்தையோ கூட பிராமணர்கள் இல்லை என்பதை ஒரு கையறு நிலையில் ஒத்து கொள்கிறார். இந்த பேச்சுக்களையெல்லாம் நான் இங்கே எழுதுவதை விட வீடியோவில் பார்ப்பதே அதிக பலன் தரும்.
நடேச முதலியார் வீட்டில் நடக்கவிருக்கும் சோபனா பாச்சாவின் திருமணம் பற்றி பார்வதி, அவள் அன்னை நடேச முதலியாரிடம் விவாதிக்கின்றனர். நடேச முதலியார் எதுவும் தன் கையில் இல்லை, எல்லாம் நடக்கிறபடி நடக்கட்டும் என்னும் விரக்தியான நிலையை அடைந்துள்ளார். சாரியார் ஏதேனும் சொன்னாரா என்று மனதில் குறுகுறுப்புடன் பார்வதி கேட்க, அவர் ஒன்றுமே சொல்லவில்லை எனக் கூறி, அவரை சிலாகித்து பேசுகிறார் முதலியார். அவரைப் பார்த்து தானும் இனி சாதி என்னும் குறுகிய வட்டத்திலிருந்து விடுபடப் போவதாக நடேச முதலியார் கூற, இதுதான் சாக்கு என பார்வதி தனது தந்தையிடம் இப்போதாவது அவர் தனது தம்பியுடன் சமாதானமாக்ப் போக வேண்டும் என கேட்டு கொள்கிறாள். அவரும் சம்மதிக்கிறார். அப்படியே தம்பியின் சம்பந்தி வேம்பு சாஸ்திரிகளையும் பார்த்தால் அவர் நாள் குறித்து கொடுப்பார் என பார்வதியின் அன்னை தன் பங்குக்கு கூறுகிறாள்.
“என்ன சார் நாள் குறிக்கிறது, வசிஷ்டர்தான் ராம பட்டாபிஷேகத்துக்கு நாள் குறித்து தந்தார். ஆனால் என்ன ஆச்சு, ராமர் காட்டுக்குத்தானே போனார்” என சோவின் நண்பர் கேட்கிறார்.
பகுதி - 98 (19.06.2009)
நண்பர் கூறுவது போல சொல்வது ராமாயணத்தை இழிவுபடுத்த வேண்டும் என்று விரும்புபவர்களே என சோ கூறிவிட்டு மேலே சொல்கிறார், வால்மீகி ராமாயணத்தில் வசிஷ்டர் நாள் குறித்து தரவில்லை. தசரதராக தீர்மானம் செய்து கொண்டது. அவருக்கு வந்த கெட்ட சொப்பனங்கள், அவர் ஜாதகத்தில் கோள்நிலைகளின் சரியின்மை, அவருக்கே தான் சீக்கிரம் இறந்து விடுவோம் என்ற பயங்கள் ஆகியவற்றின் பேரில் அவராகவே தீர்மானிக்கிறார் பட்டாபிஷேக நாளை. பிறகுதான் சபையை கூட்டி அதை தெரிவிக்கிறார். சபையினர் அவர் ராமர் பட்டாபிஷேக உத்தேசத்தை வெறுமனே அறிவித்த உடனேயே எல்லோருமே ஏக மனதாக ஆரவாரத்துடன் ஆமோதித்தது அவரை டென்ஷன்படுத்தியது தனி சேனலில் வருவது வேறு விஷயம். எது எப்படியாயினும் ஒரு வாதத்துக்காக வசிஷ்டர் நாளை குறித்து தந்தார் என வைத்து கொண்டாலும் அதுவும் ராமாவதார காரியம் நடப்பதிலேயே முடிந்திருக்கிறது. ஆனால் வசிஷ்டர் நாள் குறிக்கவில்லை என்பதில் சோ தெளிவாகவே இருக்கிறார்.
வேம்பு சாஸ்திரிகள் மூன்று நாட்களை குறித்து தருகிறார். நடேச முதலியாரும் அவர் குடும்பத்தினரும் மகிழ்கின்றனர்.
திடீரென ரமேஷ் தன் வீட்டிற்கு வந்து நிற்கிறான். எல்லோரும் திகைக்கின்றனர். பிறகு தான் அலையால் இழுக்கப்பெற்று ஒரு தீவில் ஒதுக்கப்பட்டதாகவும், அங்குள்ளவர்களால் காப்பாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டதாகவும், கேயென் (Cohen) என்னும் ஒருவர் தன்னை பிள்ளை போல் பார்த்து கொண்டதாகவும், அம்னீசியாவில் எல்லாவற்றையும் மறந்திருந்ததாகவும் இப்போது திடீரென எல்லாம் நினைவுக்கு வந்ததாகவும் கூறுகிறான். நீலகண்டன், பர்வதம், உமா, ரமேஷின் பெற்றோர்கள் எல்லோரும் திகைக்கின்றனர். நம்ப முடியாததுதான் ஆனால் தான் உயிருடன் இருப்பதுதான் நிஜம் என அவன் கூறுகிறான்.
திருச்சியிலிருந்து திரும்பி வந்த அசோக் தனது அனுபவங்களை கூறுகிறான். வெளிநாட்டுக்காரர்கள் அனேகம் பேர் இந்த மகாநாட்டுக்கு வந்ததாகக் கூற, நாதனோ அவர்களுக்கு இந்து மதம் பற்றி என்ன தெரியும் என வியக்கிறார். நம்மைவிட அவர்கள் நமது மதம் பற்றி அறிந்துள்ளனர் என அசோக் திட்டவட்டமாக கூறுகிறான். ஹிக்கின்ஸ் என்னும் அமெரிக்கருடன் தான் பேசிய விவரங்களையும் அவன் கூறுகிறான். தனது நாட்டில் இல்லாத இத்தனை மதங்களும் ஜாதிகளும் இந்தியாவில் மட்டும் ஏன் என ஹிக்கின்ஸ் தன்னை கேட்டதாக அசோக் கூற, வசுமதி என்ன இருந்தாலும் அமெரிக்கன் அமெரிக்கனே என தனது மேல்நாட்டு மோகத்தை பறைசாற்றுகிறார். வேற்றுமைகளே இல்லாத நாடு என ஏதேனும் ஒரு நாட்டை காட்ட முடியுமா என தான் கேட்டதாக அசோக் கூற, நாதன் அவையெல்லாம் பொருளாதார வேற்றுமைகள், அவையும் சாதி வேற்றுமைகளும் ஒன்றல்ல என கூறுகிறார்.
சோவின் நண்பரும் அதை ஆமோதிக்கிறார். இன்று ஏழையாக இருப்பவன் நாளை உழைத்து பணக்காரனாகலாம் ஆனால் ஒரு ஜாதியிலிருந்து இன்னொரு ஜாதிக்கு வரவியலுமா என்று அவர் ஆணித்தரமாக கேட்கிறார். சோ அவர்களோ மறுபடியும் வர்ணம் வேறு சாதி வேறு என்பதை சுட்டிக் காட்டுகிறார். சாதி என்பது பின்னால் தோன்றியது. ஆனால் முதலில் வந்த வர்ணங்களோ மனித இயல்பை பொருத்தே நிர்ணயிக்கப்பட்டன. அவற்றுள் ஒன்றிலிருந்து தாராளமாக இன்னொன்றுக்கு மாறிக் கொள்ளலாம். பிறகு இதற்கான பல உதாரணங்களை சோ அவர்கள் அடுக்கிறார். ஷத்திரியராக இருந்த விஸ்வாமித்திரர் பிரும்மரிஷியாகவே மாறியது, தர்மவியாதர் என்ற கசாப்பு கடைக்காரர் பிராமணராக உருவெடுத்தது, தந்தை பெயர் தெரியாத சத்யகாம ஜாபாலி உயர்ந்த நிலையை பெற்றது போன்றவையே அவை. ஆக பொருளாதார நிலைகளை மாற்றிக் கொள்வதை போல இங்கும் வர்ணங்களை மாற்றி கொள்ள இயலும் என கூறிய சோ இவை எல்லாவற்றையும் சொல்வது இப்போது எல்லோராலும் வெறுக்கப்படும் மனுஸ்ம்ருதியே என குறும்புடன் கூறி முடிக்கிறார்.
பாகவதர் கூட இந்து மதத்தை சனாதன தர்மம் என கூறுவார் என நாதன் சொல்ல, அசோக்கும் அதை ஆமோதித்து இந்துமதத்துக்கு பேரே இல்லை என கூறுகிறான். இதென்ன கூத்து என சோவின் நண்பர் வியக்க, சோ விளக்குகிறார். இந்து மதம் என்பதே கிரேக்கர்கள் தங்கள் புரிதலுக்காக வைத்து கொண்ட பெயரே. இதுதான் முதலில் இருந்த ஒரே மதம் எனக் கூறி, அதற்கான சான்றுகளை அடுக்குகிறார். முதலில் நாம் தமிழில் மதம் என்பதை (madham) என உச்சரிக்கிறோம், ஆனால் சரியான உச்சரிப்போ (matham) என்பதே ஆகும். முதலாவதற்கு பொருள் வெறி இரண்டாவதற்கு பொருள் நம்பிக்கை. பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் சரித்திர, கல்வெட்டு ஆதாரங்களை சுட்டிக் காட்டுகிறார். தகவல் தொடர்பு மிகக் குறைவாய் இருந்த பழைய காலத்தில் இச்சான்றுகள் பல இடங்களில் பரவியிருப்பதே இந்து மதம்தான் முதலில் எல்லா இடங்களிலும் இருந்தது என்பதற்கான சான்று எனவும் கூறுகிறார்.
அதையே அசோக்கும் அந்த அமெரிக்கருக்கு கூறியிருக்கிறான். இதெல்லாம் தேவையற்ற ஆராய்ச்சி என அலுத்து கொள்ளும் வசுமதி அசோக்கிடம் “நீ எப்போ பிறந்தே அப்படீங்கறதாவது உனக்கு தெரியுமா” என்ம கேட்கிறாள். தான் அனாதி (ஆரம்பம் அற்றவன்) என அவன் சாந்தமாக கூற, பெற்றோர்கள் குத்துக்கல்லாட்டம் உயிரோட இருக்கும்போது அவன் எப்படி தன்னை அநாதை என கூறிக் கொள்ளலாம் என வசுமதி கொதித்து போகிறாள். அசோக் பொறுமையுடன் அனாதி மற்றும் அநாதைக்கானா வேறுபாட்டை விளக்குகிறான்.
பாகவதரின் நலத்தை நாதன் வர்ணிக்க அவரை தான் அவர் பிராமணனா எனக் கேட்டதாகக் கூற வசுமதி திகைக்கிறாள். இது என்ன கூத்து அந்த பிராமணன் இந்த கேள்வியை எப்படி தாங்கிக் கொண்டார் என்றும் அவள் கேட்கிறார். அசோக்கோ பாகவதரே தான் பிராமணன் என ஒத்து கொள்ளவில்லை எனக்கூற, அப்போ நான் பிராமணன் இல்லையா என நாதன் சீறுகிறார். அது அவர் தன்னையே கேட்டு கொள்ள வேண்டிய கேள்வி என கூறிவிட்டு அசோக் அப்பால் செல்கிறான். நாதனும் வசுமதியும் செய்வதறியாது திகைக்கின்றனர்.
நீலகண்டனிடம் வசுமதி அவர் முதலில் தெய்வ நம்பிக்கையை கிண்டலடித்து பேசியதை சொல்லி குத்தி காட்டுகிறார். நீலகண்டன் பிரமிப்பில் இருக்கிறார். ரமேஷ் கடலில் மூழ்கி இறந்ததாக எல்லோரும் கூற உமா மட்டும் தனது உள்ளுணர்வை நம்பி அவன் உயிருடன் இருப்பதாக கூறியிருக்கிராள். இது முதலாவது இல்லாஜிகல் விஷயம். இரண்டாவதாக உமாவின் ஜாதகத்தை பார்த்த சோசியர் அவளுக்கு மாங்கல்ய பலம் மிக அதிகமாக இருப்பதாகவும் ஆகவே ரமேஷ் இறந்திருக்க முடியாது என அடித்து கூறியிருக்கிறார், அது இரண்டாவது இல்லாஜிகல் விஷயம் என குழம்புகிறார்.
“இந்த விஷயத்தில் ஜோசியர் சொன்னது பலித்து விட்டது. எப்போதும் அப்படியே நடக்குமா என சோவின் நண்பர் கேட்க, எப்போதுமே பலிக்கும் எனக் கூறவியலாததுதான். ஆனால் இச்சமயம் பலித்தது. தனக்கு ஜோசியம் பார்க்க ஒருவன் வரும்போது அவனது நேரம் மட்டும் நன்றாக இருந்தால் போதாது, அவனுக்கு பலன் பார்த்து சொல்பவனது நேரமும் நன்றாக இருத்தல் அவசியம் என்ற பார்வை கோணத்தை முன்வைக்கிறார் சோ அவர்கள்.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
11 hours ago
7 comments:
பகுதி 98 ஐ சோ வே ஆக்கிரம்பிப்பது போல் இருக்கிறது.நிறைய விளக்கம் தேவைப்படுகிறதோ என்னவோ!
19-06-2009 அன்று ராகுல் காந்தியின் பிறந்தநாள சிறப்பு நிகழ்ச்சியை ஒலிபரப்பு செய்த வசந்த் டீவி , ராகுலின் பதவி ஆசை இல்லாத சிறப்புத் தன்மையை புகழும் வகையில், எல்லோரையும் விமர்சிக்கும் துக்ளக் ஆசிரியர் சோ கூட,ராகுலின் இந்தத் தியாக உணர்வினை வித்தியசமாய் இருக்கிறது என பாராட்டியுள்ளதாகவும்.ஆனால் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை கணிக்கமுடியாது எனக் கருத்து சொன்னதாய் சொன்னது ( ஒளி பரப்பியது)உண்மையா?விளக்கவும் ?
1.எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு பற்றிய அரசின் பிரச்சாரத்தின் இப்போதைய நிலை?
2.இலஞ்சம் வாங்கிய குற்றத்தை பெண் ஊழியர்களும் செய்ய் ஆரம்பித்துள்ளது பற்றி?
3.தொடரும் மின் தட்டுப்பாடு, இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டிகள் தொடர்ந்து வழங்கல், இது எதில் சேர்த்தி ?
4.சோனியா காந்தி தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் காங்கிரஸ் தலைவியாக பணியாற்றியுள்ளார்கள்?
5.பெரிய நிறுவனங்கள் சிறுவியாபாரத்தில் ஈடுபடக்கூடாது என்கிற தடை கொண்டுவரப்பட வேண்டும் எனும் வாதம் என்ன்னாச்சு?
Dondu Sir,
Isaitamil.net link is not all that good for episode 98. You can use this one (has 3 parts)
http://www.techsatish.net/2009/06/19/enge-bramanan-19-06-09/
Regards.
Partha.
எங்கே பிராமணர் பகுதி பற்றிய தங்களின் தொகுப்பு சீரியல் பார்க்கதவரும் தெரிந்து கொள்ளும் விதத்தில் வருவது அருமை
ஆனால் சராசரியாக தினம் எத்தனை (இந்தப் பதிவு) ஹிட்டுகள் பெறுகின்றன?
இந்தப் பதிவுகளை புத்தக வடிவில் வெளியிடும் விடும் எண்ணம் உண்டா?
அதற்கு கிழக்கு புத்தக பதிப்பாளர்களின் உதவி கிட்டுமா?
புத்தக வடிவில் வ்ந்தால் வரவேற்பு எப்படி இருக்கும்?
பிடிஎப் பைலாக மாற்றி டவண்லோடு செய்ய ஏதுவாய் செய்யும் எண்ணம் உண்டா?
@இப்பதிவுக்கு என ஹிட்கள் எண்ணிக்கை பார்க்கும் வசதி இல்லை.
இது எனது ஆத்ம திருப்திக்காக மட்டும் எழுதப்படுவது. புத்தகம் எல்லாம் போடும் அளவுக்கு அதன் தரம் இல்லை எனக் கூறும் முதல் ஆளே நானாகத்தான் இருப்பேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
இன்று வேணுக்குளி கிருஷ்ணன்( பொதிகை சேனலில் காலை/மாலை பகவத் கீதை பாடம் நடத்துகிறார்)அவர்களின் பக்தி பிரசங்கம் கேட்டேன் மிக அருமையாய் பேசுகிறார்.அவர் பற்றிய முழுச் செய்தியும் தகவலும் தெரிவிக்கவும்.
அவ்ர் இந்த சீரியலில் சோ சொல்வதை போல் பல இந்து மத கோட்பாடுகளை மிக அழகாய் எளிய தமிழில் மக்களுக்கு போதிக்கிறார்.
அவ்ரது பிரசங்கம் பற்றிய பதிவு பலருக்கு அவ்ரது த்கவல்கள் போய்ச் சேர ஏதுவாய் இருக்கும்.
மகர நெடுங்குழைக்காதனின் அருள் பரவட்டுமே
Post a Comment