பகுதி - 94 (15.06.2009):
இப்பகுதியின் ஒளிபரப்பை பார்க்க இயலாமல் மின்சாரம் சதி செய்தது. அடுத்த நாள் மாலை 5 மணி வரை அப்லோட் ஆகவில்லை. இப்போது ஆனதும் மூன்று துண்டுகளாக வந்துள்ளது. அனானி ஒருவர் பின்னூட்டம் மூலம் இன்னொரு சுட்டியும் இதே எபிசோடுக்கு கிடைத்தது. நல்ல வீடியோ மற்றும் ஆடியோ தரத்துடன் உள்ளது. அவருக்கும் என் நன்றி.
சாம்பு, அவர் மனைவி செல்லம்மா, நீதியரசர் ஜகன்னாதன் மற்றும் அசோக் வேத பாடசாலை பற்றி பேசுகின்றனர். வேளச்சேரி பக்கத்தில் நிலம் வாங்கி விட்டதாகவும் ரிஜிஸ்டர் செய்யப் போவதாகவும் ஜகன்னாதன் கூற சாம்பு மகிழ்கிறார். தனது ஆசை இவ்வளவு துரிதமாக செயலுக்கு வருவது குறித்து மகிழ்ந்து அசோக்கை போற்றுகிறார். இது ஐந்து வருடம் நீடிக்கக் கூடிய முயற்சி என ஜகன்னாதன் கூற, அது ஏன் என அசோக் கேள்வி எழுப்புகிறான். பணம் மிக அதிகம் இழுக்கும் என அவர் பதில் கூற, பெரிய மனிதர்கள் தர வேண்டியதை தந்தாகி விட்டது, இனிமேல் பொது மக்களை அணுக வேண்டும் எனவும், தலைக்கு நூறு ரூபாய் போட்டால் கணிசமான பணம் சேரும் என அவன் எடுத்துரைக்கிறான். இப்போதே தன் மனக்கண்ணீல் வேதபாடசாலை எழுவதையும், வித்யார்த்திகள் ஆர்வமாக அங்கே செல்வதையும் பார்க்கிறான். வேத கோஷம் அவன் காதில் ஒலிப்பதாகவும் அவன் கூறுகிறான்.
சாம்பு சாஸ்திரிகள் சட்டென தன் மடியிலிருந்து நூறு ரூபாய் எடுத்து இதோ தனது பங்கு எனத் தர, அவர் மனைவியோ தனது பங்கு என இழுக்க, புன்முறுவலுடன் இன்னொரு நூறு ரூபாயும் தருகிறார். “வெறும் நூறு நூறு ரூபாயாலே என்ன சாதிக்க முடியும்” என சோவின் நண்பர் கேட்கிறார். இம்மாதிரி சக்திக்கு மீறிய தானத்தின் மகிமையே தனிதான் என சோ கூறிவிட்டு, மகாபாராதத்திலிருந்து ஒரு விஸ்தாரமான கதையை எடுத்து கூறுகிறார்.
மகாபாரத யுத்தம் முடிந்ததும் தருமபுத்திரர் ஒரு அஸ்வமேத யாகம் செய்ததாகவும், அதில் தானம் மிகப் பெரிய அளவில் நடைபெற்றதாகவும் கூறுகிறார் சோ அவர்கள். அப்போது அங்கே வந்தது ஒரு கீரிப்பிள்ளை. அதன் பாதி உடல் தங்கமயமாக இருந்தது. இதெல்லாம் என்ன தர்மம் என அசுவமேத யாகத்தையே குறைத்து பேச, அதை எல்லோரும் விளக்கம் கேட்டனர். அப்போது அது தன் நேரடியாக கண்டு அனுபவித்த தர்மம் ஒன்றை குறிப்பிட்டு பேசியது. ஒரு ஏழை அந்தணன் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தான். அன்றைய உணவை அன்றைக்கே சேமிப்பது என்னும் ஒழுக்கத்தை கடைபிடிப்பவர் அவரும் அவர் குடும்பத்தினரும். ஒரு நாள் சிறிதளவே மாவு கிடைக்க அதை சமைத்து உண்ண தயாரான சமயம் ஒரு முனிவர் பசியால் அங்கு வந்தார். தனது கால் பங்கை அந்தணன் அவருக்கு முதலில் அளிக்க, அது போதாமல் போக அடுத்தடுத்து அவன் மனைவி, மகன் மற்றும் மருமகள் தத்தம் கால் பங்கை தர முனிவர் தர்ம தேவதையாகிய தனது ரூபத்தை அவர்களுக்கு காட்டி அருள் புரிந்தார். அந்த இடத்தில் தான் இருந்தமையால் சில நீர்த்துளிகள் தன் மேல் விழ, தன் உடலில் பாதி தங்கமயமானதை அது கண்டது. ஆகவே எங்கெல்லாம் தருமம் நடக்கிறதோ, அங்கெல்லாம் தன் சென்று பார்த்ததாகவும், அம்மாதிரி நடக்கவில்லை எனவும், இங்கும் அதே நிலையே எனவும் கீரி கூறியது. ஆக, கையில் இருப்பதையேல்லாம் தானமாக தருவதை மிஞ்சி எந்த தருமமும் இல்லை எனவும், இங்கு சாம்பு சாஸ்திரிகளின் தானமும் அவ்வகையே என சோ கூறுகிறார்.
அசோக் தூக்கத்திலிருந்து திடீரென திடுக்கிட்டு எழுகிறான். ரமேஷுக்கு ஏதோ ஆபத்து என்பது அவன் மனதுக்கு படுகிறது. நடு ராத்திரி என்பதையும் கவனியாது உமாவுக்கு ஃபோன் போட முயலுகிறான். நாதனும் வசுமதியும் விஷயம் புரியாமலும், அவன் சொல்வதை கவனியாமலும் அவனை ஒரு அறையில் தள்ளி கதவை சாத்துகின்றனர்.
அதே போல உமாவுக்கும் தூக்கத்திலிருந்து விழிப்பு ஏற்படுகிறது. அவள் கணவன் ரமேஷ் அவளை அழைக்கும் குரல் தெளிவாகக் கேட்கிறது. கதவைத் திறந்து பார்த்தால் யாரும் இல்லை. நீலகண்டன், பர்வதம் மற்றும் அவள் சகோதரன் ராம்ஜி அவளை தேற்றி, எல்லாம் பிரமை எனக் கூறி அவளை உள்ளே அழைத்து செல்கின்றனர். ரமேஷுக்கு ஜலத்தில் கண்டம் என உமா கதறுகிறாள். அதெல்லாம் ஒன்றும் ஆகாது என நீலகண்டன் கூறி விடுகிறார்.
வையாபுரி தனது அடியாள் சிங்காரத்திடம் நடேச முதலியார் மகள் சோபனாவை கெடுத்துவிட்டு அவளை காதலிக்கும் தன் மகன் பெருமாளிடம் அதை கூறவேண்டும் என கட்டளையிடுகிறார். பெருமாள் சோபனா திருமண விஷயம் தனது குடும்பத்தாரிடமும் எதிர்ப்பை விளைவித்ததாகவும், இம்மாதிரி செய்தால் இக்கல்யாண ஏற்பாடு நடக்காது என வையாபுரி கூறுகிறார். சிங்காரம் அவ்வாறு செய்ய ஒட்டு மொத்தமாக மறுத்து விடுகிறான். இந்த யோசனை கூறியதற்காக வையாபுரியை ஒருமையில் திட்டி விட்டு அவரது சங்காத்தமே தனக்கு வேண்டாம் என கூறி, அவரை விட்டு விலகுகிறான். அவர் திகைத்து போய் பார்க்கிறார்.
ஒரு டெலிஃபோன் அடிக்கிறது, உமா அதை எடுத்து பேசுகிறாள். அங்கிருந்து விலகிவர, அவள் மாமியார் கையில் ரமேஷின் படத்துடன் வந்து அவளை கட்டி அழுகிறாள். அவள் மாமனார் நாற்காலியில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். ரமேஷ் தண்ணீஈரில் மூழ்கி விட்டதாகவும், என்ன செய்தும் உடல் இன்னமும் கிடைக்கவில்லை என்றும் ஒரு குரல் எங்கிருந்தோ ஆங்கிலத்தில் கூறி, ரமேஷின் குடும்பத்துக்கு அனுதாபம் தெரிவிக்கிறது. உமா அழுகிறாள். இந்தக் காட்சி ஒரு கனவுக்காட்சியாகத்தான் இருக்க வேண்டும் எனக்கு படுகிறது. அப்படித்தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
பகுதி - 95 (16-06-2009):
கடற்கரையில் சிங்காரம் அழுது கொண்டிருக்கிறான். அங்கு வரும் அசோக் திகைப்புடன் அவன் ஏன் அழுகிறான் என்று திகைப்புடன் கேட்க, அவனோ முதலில் “அழக்கூட உரிமை இல்லையா”? எனக் கோபப்படுகிறான். பிறகு தன்னை ஏன் இவ்வாறு படைத்தாய் என கடவுள் என்னும் கழுதையை கேட்பதாக கூறுகிறான். கடவுளையா கழுதை என்கிறான் என அசோக் திகைக்கிறான். “ஏன் சொல்லக் கூடாது. என்னோட மனைவி என்னை கழுதை மாதிரி சொமந்தா, அதே போல இந்தக் கடவுள் நம் எல்லோரையும் கழுதை மாதிரி சுமக்கிறான், அவனை ஏன் கழுதை எனச் சொல்லக்கூடாது” என சிங்காரம் எதிர் கேள்வி போடுகிறான்.
“அதானே, இந்த ஹிந்து மதத்திலே ஏன் இப்படி கடவுளை அடாபுடா என்றெல்லாம் கூப்பிடுகிறாங்க. கடவுள் நம்பிக்கை இல்லாத தானே அவ்வாறு கூறுவதில்லையே என சோவின் நண்பர் கேட்கிறார். “நீங்கள் அவ்வாறு கூப்பிட மாட்டீர்கள், ஏனெனில் கடவுளின் அண்மை உங்களுக்கில்லை. ஆனால் அதுதான் ஹிந்து மதத்தில் உள்ள சிறப்புகளில் ஒன்று. கடவுளை எல்லாவாகவும் உருவகப்படுத்தி நாம்தான் அவருடன் பேசுகிறோம். அவரை காதலனாக, காதலியாக, வேலைக்காரனாக என்று பக்தர்கள் கற்பனை செய்வதற்கேற்ப பல ரூபம் எடுக்கிறான்”, எனக் கூறிய சோ அதற்கான பல உதாரணங்களை அடுக்குகிறார்.
அதில் ஒரு உதாரணம் இதோ. தன் சீடன் கணிகண்ணனை காஞ்சி அரசன் நாடு கடத்த, திருமழிசை ஆழ்வார் திருவெஃகா கோயில் சென்று, பெருமாளைத் தொழுது,
“கணிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா - துணிவுடைய
செந்நாப் புலவனும் போகின்றேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்
என்று வேண்டவே, பெருமாளும் யோக நித்திரை விட்டெழுந்து, அம்மூவரும் (பெருமாள், ஆழ்வார், கணிகண்ணன்) அவ்வூரை விட்டு அகன்று, அருகில் உள்ள ஓர் ஊருக்கு சென்று தங்கினர். இதனால், காஞ்சி முழுதும் ஒளியிழந்து, இருள் சூழ்ந்த நகரமாயிற்று. தன் தவறை உணர்ந்த அரசன் தன் மந்திரிமாரோடு கணிகண்ணனிடம் சென்று தன்னை மன்னித்து மீண்டும் காஞ்சி நகருக்கு வருமாறும் வேண்டினான். கணிகண்ணன் ஆழ்வாரை நோக்க, அவரும் அதற்கு ஒப்பி, சேஷசாயிப் பெருமானை நோக்கி,
கணிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் - துணிவுடைய
செந்நாப் புலவனும் போக்கொழிந்தேன் நீயுமுன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக் கொள்
என்று முன்பு பாடிய பாட்டை மாற்றிப் பாடி வேண்ட, எம்பெருமான் அதற்கும் உடன்பட்டு, ஆழ்வாரும் கணிகண்ணனும் உடன்வர திருவெஃகாவில் மீண்டெழுந்தருளினார். மூவரும் சென்று, ஓர் இரவு தங்கியிருந்த கிராமமானது, 'ஓரிரவிருக்கை' என்ற பெயர் பெற்று, பின் மருவி, ஓரிக்கை என்று இப்போது அழைக்கப்படுகிறது”.
அதேபோல பிட்டுக்கு மண் சுமந்து பாண்டியனிடம் அடிப்பட்டார் சிவபெருமான். ஆக மற்ற மதங்கள் போலன்றி இறைவனை உரிமையுடன் அழைத்து பழகுவது இந்து மதத்தின் சிறப்பு எனவும் சோ கூறினார். முக்கிய விஷயம் பக்தி மட்டுமே எனவும் அவர் கூறினார்.
சிங்காரத்துக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால் கடவுளிடம் வேண்டிக் கொள்ளலாமே என அசோக் கூற, அது பேமானித்தனம், கடவுளுக்குத் தெரியாதா தனக்கு என்ன தரவேண்டும், தரவேண்டாம் என என சிங்காரம் கூற, அசோக் இன்னும் பிரமிக்கிறான். ஞானிகளுக்கு மட்டும் சித்திக்கக் கூடிய இந்த மனோபாவம் சிங்காரத்துக்குள் இயல்பாகவே அமர்ந்திருப்பது அவனை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. சிங்காரம் தான் இதற்கு முன்னால் வையாபுரியின் கட்டளை பேரில் செய்த பல கெட்ட காரியங்களுக்காக வருந்துகிறான். இனிமேல் எல்லோருக்கும் நண்பனாக இருக்க விரும்புகிறான். உலகில் உள்ள எல்லோரும் நலமாக இருக்க வேண்டும் என்னும் தனது விருப்பத்தைத் தெரிவிக்கிறான்.
அவன் எந்த கடவுளை மனதில் நிறுத்தி பேசுகிறான், பிரும்மாவா, விஷ்ணுவா, பிள்ளையாரா என அசோக் கேட்க, தனக்கு அதெல்லாம் ஏது என சிங்காரம் கேட்கிறான். பிறகு சூரியனைம் பார்த்து கர்ஜிக்கிறான். எல்லோருக்கும் வெளிச்சத்தை தரும் சூரியனும் தன்னுள் உள்ள இருளை எரித்து நீக்கட்டும். அவனால்தான் சகல ஜீவராசிகளும் வாழ்கின்றன. இவ்வாறெல்லாம் அவன் பேசும்போது பின்னணியில் கம்பீரமான குரலில் காயத்ரி மந்திரம் ஒலிக்கிறது. கூடவே மந்திரத்தின் பொருளும் நிறுத்தி நிதானமாக கூறப்படுகிறது. அசோக் பரவச நிலையில் நிற்கிறான். ஏதோ தன் வேலை முடிந்ததுபோல சிங்காரம் அந்த இடத்தை விட்டு அகல்கிறான்.
மேலே வானத்தில் விஸ்வாமித்திரரும் நாரதரும் நிற்கின்றனர். பூலோகத்தில் அசோக் என்னும் பெயரில் வாழும் வசிஷ்டனுக்கு பிரும்மோ[பதேசம் முடிந்தது என திருப்தியுடன் கூறுகிறார் விஸ்வாமித்திரர். அவர் வாயிலிருந்து மேலே விஷயங்களை பிடுங்க முயற்சி செய்யும் நாரதர் தோல்வியையே சந்திக்கிறார். நாரதருக்கே அவரது கேள்விக்கான விடைகள் தெரியும் எனவும், ஈசன் வசிஷ்டருக்கு இட்ட கட்டளையை தான் நிறைவேற்ற இயலாது எனவும் அவர் கூறுகிறார்.
“அது எப்படி சார், பூணல் எதுவும் போடாமலேயே அசோக்குக்கு இங்கு பிரும்மோபதேசம் நடந்தது என எப்படி சொல்கிறீர்கள்” என சோவின் நண்பர் கேட்கிறார். பூணல் போட்ட போது நடந்தது பிரும்மோபதேசமே அல்ல என சோ அவர்கள் அடித்து கூறுகிறார். நாதன் தேவையான சிரத்தையுடன் மந்திரங்கள் சொல்லவில்லை. ஆனால் இங்கே சிங்காரம் தன் மொழியில் சொன்னது சரியான பிரம்மோபதேசமாகவே அமைந்தது என சோ கூறி விடுகிறார். அதில் சிங்காரம் நான்காம் வர்ணத்தவன் என்பது முக்கியமேயில்லை எனவும் அவர் கூறுகிறார். புராணங்களில் இம்மாதிரி நிகழவுகளுக்கு எண்ணற்ற உதாரணங்கள் உண்டு எனவும் கூறுகிறார்.
வசிஷ்டரின் அவதார நோக்கத்தை நோக்கி அவரது பயணம் இனி தொடரும் என விஸ்வாமித்திரர் மறுபடியும் மகிழ்ச்சியோடு கூறுகிறார். இனிமேல் மங்களமே நடக்கும் எனவும் அவர் கூறுகிறார்.
முருகேசன் என்னும் அரசியல்வாதி சாரியாரிடம் ஜோஸ்யம் பார்க்க வருகிறார். வையாபுரியின் மகன் வேற்று சாதி பெண்ணை மணக்க விரும்புவதை வைத்து அவருக்கு ஹரிஜனங்கள் வோட்டுகள் வராது செய்ய வேண்டும், ஆகவே தன் இது சம்பந்தமாக பத்திரிகை அறிக்கை விடப் போவதாக அவர் கூறுகிறார். அவரை அவ்வாறு செய்யாமல் தடுக்க சாரியார் செய்யும் எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.
மேலே என்ன செய்வது என்பது பற்றி அவர் வையாபுரியுடனும், அவர் மகனுடனும் யோசிக்கிறார். வையாபுரியின் மகனாக வளரும் பெருமாள் தன் சொந்த மகன் என டாக்டர் கைலாசம் கூறியது அவர் மனதை அரித்த வண்ணம் உள்ளது. அதற்கேற்ப அவர் சொல்லும் ஆலோசனைகளும் அமைகின்றன.
எங்கே பிராமணன் மெகா சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஜெயா டி.வி.யில் இரவு 8 மணிக்கு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நவீன அறிவியலின் வழிமுறைகள்
-
நவீன அறிவியல் என்பது என்ன? அதன் தர்க்கம் என்ன? ‘இதைப்பற்றி இன்னார் ஓர்
ஆய்வேட்டில் சொல்கிறார்’ என்றால் அது அறிவியலுண்மையா? என் சொந்த அனுபவம்
என்றால் அது அற...
18 hours ago
3 comments:
அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...
உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு
அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!
ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்
//இப்பகுதியின் ஒளிபரப்பை பார்க்க இயலாமல் மின்சாரம் சதி செய்தது. //
இழப்பும் சில நேரத்தில் நன்மை செய்யும்னு இதை தான் சொல்வாங்க போல!
@வால்பையன்
அப்படியும் சுதாரிச்சுக்கிட்டு பதிவு போட்டுத்து இல்ல இந்த பெரிசு? அது யாரு, புறாவுக்கே பெல் அடிச்ச மின்சாரக் கண்ணாவாச்சே.
முரளி மனோகர்
Post a Comment