6/15/2009

நங்கநல்லூர் பஞ்சாமிர்தம் - 15.06.2009

எதிரி, பகைவன்:
இன்று காலை எதேச்சையாக நண்பர் கோவி கண்ணன் அவர்களது இப்பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எதிரிக்கும் பகைவனுக்கும் இடையில் இருக்கும் வேறுபாட்டை குறிப்பிட்டிருந்தார். அது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதே.

அதாவது, “பகைவன் மற்றும் எதிரி இரண்டு சொற்களுக்கும் போதிய இடைவெளியில் பொருள் வேறுபாடு உண்டு, பகைவன் என்பவன் முன்பு நண்பனாக இருந்தவன், எதோ ஒரு பிணக்கின் காரணமாக எதிரியாக மாறி விடுபவன், பகைவன்...” “ஆனால் எதிரிகள் அப்படி அல்ல, நமக்கு முன் பின் அறிமுகம் ஆகாதவர்கள் கூட நமக்கு எதிரிகள் ஆகும் வாய்ப்புகள் உண்டு, எடுத்துக் காட்டிற்கு நாம் செய்யும் தொழில் அதே தொழிலில் நமக்கு முன்பே இறங்கியவர், சமகாலத்தில் இறங்கியவர், பின்பு இறங்கியவர் போட்டித் தன்மை காரணமாக மறைமுகமாகவோ, நேரடியாகவோ நம்மை வீழ்த்த உத்திகள் வகுக்கலாம், அதனை கண்டுபிடித்த பிறகு முன்பின் அறிமுகம் இல்லாத அந்த நபர் நமக்கு எதிரியாக (அறிமுகம் இல்லாத மறைமுக எதிரியாக) இருப்பார்”.

சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு ஹிந்தி படம் பார்த்தேன். இரண்டு எழுத்தாளர்கள். ஒருவருக்கொருவர் போட்டி, ஒருவரைப் பற்றி இன்னொருவர் அவதூறு செய்தல் என்றெல்லாம் போய்க் கொண்டிருக்கும். ராமு, சோமு என அவர்களது பெயரை நாம் சௌகரியத்துக்கு வைத்து கொள்வோமே.

ராமுவிடம் நம் கதாநாயகன் வருகிறான். அவனிடம் ராமு புலம்புகிறார். சோமுவும் தானும் நண்பர்களாகவே இருந்ததாகவும், பிறகு ஏதோ ஒரு இலக்கியக் கூட்டத்தில் கருத்து வேற்றுமை வந்ததாகவும் அதிலிருந்து சண்டை பரவி இப்போது பெரிய அளவை அடைந்து விட்டதாகவும் கூறுகிறார். இப்போது சோமு இவர் மேல் மான நஷ்ட வழக்கு போட்டிருக்கிறார், பத்தாயிரம் ரூபாய்க்கு. இவர்கள் இருவரையும் அறிந்த கதாநாயகன் ஒரு அதிரடி வேலை செய்கிறான். ராமுவிடம் கூறுகிறான், “பேசாமல் சோமுவுக்கு ஃபோன் செய்து, நடந்ததற்கு வருத்தம் தெரிவித்து ஒரு லட்சம் ரூபாய் தருவதாகக் கூறச் சொல்கிறான். ராமுவுக்கு என்ன தோன்றியதோ, சட்டென்று ஃபோனை எடுத்து சோமுவுக்கு டயல் செய்கிறார். சோமுவே ஃபோனை எடுக்கிறார். இப்போது இருவரும் பேசுவதை கவனியுங்கள்:

சோமு: ஹலோ, சோமு பேசறேன்.
ராமு: சோமு, நான் ராமு பேசறேன்.
சோமு (விறைப்புடன்): என்ன விஷயம்?
ராமு: இல்லப்பா, நான் யோசித்து பார்த்தேன். உன்னை அவ்வளவு கடுமையாக திட்டியிருக்கக் கூடாதுதான். மன்னிப்பு கேட்டுக்கறேன். நீ கேட்ட ஒரு லட்சத்தையும் தந்து விடுகிறேன்.
சோமு (திகைப்புடன்): என்னது, ராமுவா பேசறது? ஆச்சரியமா இருக்கே.
ராமு: ராமுதான் பேசறேன். மன்னிப்பு கேட்கறேன், ஒரு லட்சம் ரூபாய் தருவதற்கும் சித்தமாக இருக்கிறேன்.
சோமு: அடச்சே, என்னம்மா இது. லட்ச ரூபாயை தூக்கி குப்பையிலே போடப்பா, உன் சினேகிதம் மறுபடி கிடைச்சுதே, அதுவே போதும். வீட்டில் எல்லோரும் சௌக்கியமா? சீக்கிரம் சந்திப்போம், வணக்கம்”.

அவ்வளவுதான், பல ஆண்டுகளுக்கான விரோதம் ஒரு நொடியில் விலகியது. கோவி அவர்கள் சொன்னது போல எல்லாவற்றுக்குமே ஒரு ஈகோதான் காரணம். நான் குறிப்பிட்ட ஹிந்தி படத்தின் டைட்டில் ஞாபகமில்லை. (அமிதாப், ஜயா நடித்த ஏக் நஜர் என்னும் படமாக இருக்கலாம், ஆனால் நிச்சயமில்லை). இருந்தாலும் அது முக்கியமல்ல, பகைவன் மீண்டும் நண்பனானதுதான் முக்கியம்.

புலிகள் மற்றும் ஜெயலலிதா பற்றி சோ அவர்கள் பேசியது:
மேலே சொன்ன விஷயம் பற்றி உடன்பிறப்பு என்னும் பெயரில் வளையவரும் கலைஞர் சார்பு பதிவர் ஒருவர் எழுதியதைப் படித்தேன். எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது, இவரைப் போன்றவர்கள் கலைஞருக்கு நல்லது செய்கிறார்களா அல்லது அவரை கிண்டல் செய்கிறார்களா என்று. நீங்களே அப்பதிவில் உள்ள க்ளிப்பிங்கை போட்டு பாருங்கள். 2008 ஜனவரியில் மோடி பங்கெடுத்து கொண்ட துக்ளக் ஆண்டுவிழா கூட்டத்தில் ஒரு பகுதி காண்பிக்கப்படுகிறது. ஒன்பதரை நிமிடங்கள் ஓடிய டேப்பில் முதல் 3 நிமிடங்கள் 15 நொடிகள் போல (பெண்கள் இட ஒதுக்கீடு ரேஞ்சில்) கருணாநிதியின் குடும்ப பாசம், அதனால் விளையும் பங்கீடுகள் ஆகியவை பற்றித்தான் சோ அவர்கள் பேசியுள்ளார். அது பற்றி இப்பதிவருக்கு கூற ஒன்றுமே இல்லை. முதலில் அந்த க்ளிப்பிங்கில் என்ன சொன்னார் சோ அவர்கள் என்பதைப் பார்க்க நான் எனது இப்பதிவிலிருந்து சாராம்சமாக எழுதியதை இங்கே எடுத்து கூறுவேன்.

“தமிழ்நாடு விஷயத்துக்கு வந்தார் சோ. கழகம் ஒரு குடும்பம் என்பது இப்போதுதான் நன்றாக புரிகிறது என்று கூற கொல்லென சிரிப்பு. ஏன் ஸ்டாலினுக்கு முடிசூட்டவில்லை என்பதற்கும் விளக்கம் அளித்தார் சோ. அதாவது குடும்பத் தலைவர் தனது கடைசி காலம் வரை சொத்து தன் கையில் இருக்கும்படித்தான் பார்த்து கொள்வார். இங்கு சொத்து பதவியே. அதே சமயம் இவ்வளவு குடும்ப அங்கத்தினர்களை உலவ விடுவது ஆபத்தில்தான் முடியும் என்றும் கூறினார். சென்னை சங்கமம் என்ற கூச்சல் அரங்கத்திலிருந்து எழுந்தது. அது பரவாயில்லை ஆனால் அதை செய்யும் காஸ்பர் புலி ஆதரவாளர் என்பதுதான் கவலை தருகிறது என்று கூறினார். மத்திய அரசு இதை அவதானிக்க வேண்டும், ஆனால் அவ்வாறு செய்யுமா என்பது சந்தேகத்துக்குரியது என்றும் கூறினார் அவர். தமிழகத்தின் தற்போதைய ஆட்சியில் புலிகள் அதிகம் தைரியம் பெற்றுள்ளனர் என்பதையும் சோ அவர்கள் குறிப்பிட்டார். இம்மாதிரி ஜெயலலிதாவின் ஆட்சியில் நடக்காது என்பதையும் கூறினார் அவர்.

மீனவர்கள் கொலை விஷயத்தில் முதலில் ஸ்ரீலங்கா அரசுதான் குற்றவாளி என நினைத்து சவுண்ட் விட்டவர்கள் அது புலிகளின் வேலை என்றறிந்ததும் வாயை மூடிக் கொண்டனர் என்றும் கூறினார். புலியின் மரணத்துக்கு கவிதை அஞ்சலி செய்கிறார் முதல்வர் என்பதையும் சாடினார் அவர். தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்குலைவு, கூலிப்படை மூலம் கொலை செய்விக்கும் கலாச்சாரம் ஆகியவற்றையும் சோ குறிப்பிட்டார். இந்த அழகில் கலைஞர் குடும்ப நெருக்கடி. டில்லி, சென்னை, மதுரை மற்றும் சங்கமம்.எல்லா குடும்பங்களுக்கும் அது பொருந்தும். நடுவில் ராமதாஸ் அவர்கள் படுத்தல் வேறு. ஒவ்வொரு திட்டமாக அறிவிக்க வேண்டியது, பிறகு பின்வாங்க வேண்டியது. எதிலும் தெளிவு இல்லை. நிறைய பணம் இருப்பதாக ஜெயலலிதாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டியது, பிறகு மைய அரசிடம் நிதி கேட்பது. இந்து மதத்தை மட்டம் தட்டுவது. ராமர் குடிகாரர். துளசி ராமாயணத்தின்படி சீதைக்கு ராமர் அண்ணா”.


ஆக, கழகத்தை கருணாநிதி தனது சொத்தாகக் கருதி பங்கிட்டதை மறுக்க அப்பதிவரிடம் ஒன்றுமே இல்லை என்றுதான் தோன்றுகிறது. பிறகு ஏன் சார் அதையேல்லாம் உள்ளடக்கிய க்ளிப்பிங்கை போட்டு கலைஞருக்கு அனுகூல சத்துரு ஆகிறீர்கள்? உங்களைப் போல நண்பர்கள் இருக்கும்வரை கலைஞருக்கு (மேலே கோவி அவர்கள் குறிப்பிட்ட) எதிரியே தேவையில்லைதானே.

ஆனால், புலிகள் சம்பந்தமாக ஜெயா பற்றி என்ன சொன்னார் எனப் பார்த்தால் ஒரே ஒரு வாக்கியம்தான் சொன்னார், அதாவது இம்மாதிரி புலிகள் ஆதரவு கோமாளி நிலை ஜெயலலிதா ஆட்சியில் வந்திராது என்று. அது மட்டும் பதிவரின் தலைப்பில் வருகிறது, அதுவும் கருணாநிதி அவர்களை கிண்டல் செய்வது போலவே இருக்கிறது!!

ஆக, நான் கலைஞர் அவர்களை ஆதரித்து இட்ட இப்பதிவில் உள்ள விஷயங்கள் இன்னும் பொருந்துகின்றன போலும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

5 comments:

கோவி.கண்ணன் said...

டோண்டு சார் எனது பதிவை இங்கு பஞ்சாமிர்தம் செய்ய பயன்படுத்தியற்கு நன்றி !

மங்களூர் சிவா said...

ஹிந்தி படத்தில் இருந்து நீங்கள் சொன்ன மாதிரியே தமிழில் ஒரு விஜய் படம் ரெண்டு பேர் எதோ பிரச்சனையால் பேசிக்க மாட்டாங்க ஒரு நாள் இருவருடைய வண்டியும் நின்றுவிடும் நம்ம விஜய் ஒரு வண்டியிலிருந்து பெட்ரோல் வாங்கி இன்னொரு வண்டிக்கு ஊற்றி இருவரையும் ஒரே வண்டியில் அனுப்பி வைப்பார். படம் பேர் 'பூவே உனக்காக' அப்படின்னு நினைக்கிறென்.

Anonymous said...

1.தென்மேற்கு பருவ மழை ஏமாற்றுகிறதா?
2.நாற்கரசாலை வேலைகள் முடிய இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்,இந்த தாமதத்திற்கு டி.ஆர்.பாலு கல்லாகட்டியதுதான் காரணமா?
3.இந்த தடவை ம்ன்மோஹன் சிங் லக்கானை(பனம் கொட்டும் துறைகளின் மந்திரிகளை) இழுத்து பிடிப்பார் போலுள்ளதே ,மெகா ஊழலுக்கு வாய்ப்பிருக்காதாம் நம்பலாமா?
4.காங்கிரஸுக்கு இந்த தடவை திமுக தேவை இல்லாதபோதும் இவ்வளவு கரிசனம் ஏன்?( பார்முலா கசமுசா)
5.2011 ல் காங்கிரஸ் ஆட்சி கோஷம் கலைஞரை கடுப்பேத்தவா?இல்லை ஆட்சியில் பங்கு பெறவா?

Sivakumar said...

1. துக்ளக்கின் சமீபத்திய ஐந்து இதழ்கள் தவிர்த்து பிற
பழைய இதழ்கள் ஆன்லைனில் இலவசமாக கிடைக்கிறதே?

2. 20-20ல் இந்தியா இப்படி சொதப்பி விட்டதே?

3. பகைவனுக்கருள்வாய் என்ற பதம் சோனியாவிற்கு
பொருந்தும் போலிருக்கிறதே? (சங்மாவின் மகளுக்கு மந்திரி
பதவி அளித்ததின் மூலம்)

4. மீண்டும் மாநில சுயாட்சி என்கிறாறே கருணாநிதி!!
(காங்கிரசை வெறுப்பேற்றவா?)

5. கத்திப்பாரா மேம்பாலம் வந்ததால் விரைவாக உங்கள்
பகுதிக்கு செல்ல முடிகிறதாமே?

6. சென்னையில் இவ்வளவு மரங்கள் இருந்தும் ஏன் வெப்பம்
அதிகம்?

7. மளிகை பொருட்கள் பாக்கெட்டில் - பாக்கெட் கலாச்சாரம்
நம்மை சீரழித்து விடும் பொலிருக்கிறதே?

8. பேப்பர் உபயோகத்தைக் குறையுங்கள் என்பவர்கள்
கம்ப்யூட்டரை அதிகம் உபயோகித்து மின்சார உபயோகத்தை
கூட்டுகின்றனரே?

9. "எங்கே பிராமணன்" நேற்றைய (16-6-2009) பகுதி மிகவும்
நன்றாக இருந்தது. இதே போன்ற வேகத்தில் சென்றால் தொடர்
எப்போது முடிவடையும்?

10. சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்துப் படித்த சினிமா
தொடர்பான கிசுகிசு!!

Sivakumar said...

11. சிதம்பரம் மீண்டும் தனது கடும் கண்டனத்தை தெரிவி-
க்க ஆரம்பித்து விட்டாரே?

12. என்ன இருந்தாலும் மன்மோகன் சிங் பொம்மை தானே?

13. பாரதிய ஜனதாவில் நடக்கும் உட்கட்சிப் பூசல் மிகவும்
கீழ்த்தரமாகவும் சகிக்க முடியாததாகவும் உள்ளதே?

14. இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தை செயல்படுத்திய
வேகம் ஒகேனெக்கல் விவகாரத்தில் காட்டுவாரா ஸ்டாலின்?

15. சென்னையில் வீட்டு வாடகை அதிகரித்துக் கொண்டே
போகிறதே?

16. தமிழ்நாடு கடலால் அழிந்த லெமுரிய கண்டம் போல்
அழியும் போலுள்ளதே? குமரி கடல் 1 1/2 கிலோ மீட்டர்
உள்வாங்கி விட்டதாமே?

17. பன்னாட்டு நிறுவனங்களில் பிளாஸ்டிக், பேப்பர் கப், டிஸ்யூ
பேப்பர் முதலியவற்றின் குப்பைகள் அதிக அளவில்
சேர்க்கின்றனரே!! ரீசைக்கிளிங் செய்வரா?

18. உண்மையிலேயே நயன்தாரா பிரபுதேவாவை திருமணம்
செய்து விட்டாரா?

19. தூக்கம் மனிதனுக்கு நல்லதா? கெட்டதா?

20. சமீபத்தில் நீங்கள் மிகவும் ரசித்த அரசியல் தொடர்பான
கிசுகிசு!!

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது