மன்னிப்பின் மகத்துவம்:
இக்கதையை பலர் பல சந்தர்ப்பங்களில் பல மாறுதல்களுடன் படித்திருக்கலாம், நான் படித்த வெர்ஷனை எனது சொற்களில் தர முயலுவேன்.
அந்த எக்ஸ்பிரஸ் ரயில் இரண்டாம் வகுப்பு மூன்றடுக்கு ஸ்லீப்பர் முழுவதும் ஒரு கல்யாண பார்ட்டியால் நிரம்பியிருந்தது. ஒரே கும்மாளம், பாட்டுகள் அலை பாய்ந்தன. அக்கூட்டத்தை சேராத ஒரே ஒரு வாலிபன் கண்ணை துடைத்த வண்ணம் ஒரு ஓர இருக்கையில் அமர்ந்திருந்தான். உதடுகள் ஏதோ முணுமுணுத்த வண்ணம் இருந்தன.
டைனிங் காரிலிருந்து சாப்பாடு வந்தது. அவரவருக்கான சாப்பாடு அவரவர் கையில் தரப்பட்டது. இந்த வாலிபன் ஒன்றும் ஆர்டர் செய்யாததால் அவன் மட்டும் வெறித்த பார்வையுடன் அமர்ந்திருந்தான். அருகில் அமர்ந்திருந்த ஒரு சிறு குழந்தை தன் அம்மாவிடம் “அந்த அண்ணா அழறான்” என்றது. அப்பெண்மணி அவனிடம் அன்புடன் என்ன பிரச்சினை எனக் கேட்க அவன் விக்கி விக்கி அழ ஆரம்பித்தான்.
அவனால் ஒன்று பேச இயலவில்லை. சிறிது நேரம் கழித்து சுதாரித்து கொண்ட அவன் தன் கதையை சொல்லலானான்.
அவனுடன் கூடப் பிறந்தவர்கள் ஏழு பேர். எல்லோரும் அவனை விட வயதில் மிக பெரியவர்கள். தனது பெற்றோருக்கு கடைசி குழந்தையான இவன் எல்லோருக்கும் செல்லம். முரடனாக வளர்ந்தான். யாரிடமும் சரியான பேச்சு கிடையாது. ஒரே முரட்டுத்தனம். வீட்டில் சண்டை போட்டு கொண்டு கடைசி அக்காவின் திருமணத்துக்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை எடுத்து கொண்டு திருட்டு ரயிலேறி வேறு ஊருக்கு சவாரி விட்டான். அக்காவின் கல்யாணம் நின்று போய் அவள் தற்கொலைக்கு முயன்றதை பிறகு சமீபத்தில்தான் அறிந்தான். வீட்டில் யாருமே சந்தோஷமாக இல்லை என்பதையும் அறிந்தான். இவன் கையில் இருந்த பணமும் விரைவில் கரைந்து போயிற்று.
இப்போதுதான் தான் செய்த தவறுகள் அவனுக்கு புலப்பட்டன. என்ன பலன், காலம் கடந்து விட்டதே. இப்போது அவன் ஒரு காரியம் செய்தான். தனது அன்னைக்கு ஒரு கடிதம் எழுதினான். ஒரு குறிப்பிட்ட தேதியன்று அவன் ஊரை கடந்து செல்லும் ரயில் வண்டியில் அவன் வருவான். அவனை வீட்டில் உள்ளவர்கள் மன்னித்தால் அவன் வீட்டு மொட்டைமாடி கொடியில் ஒரு வெள்ளை துணியை உலர்த்த சொன்னான். புகை வண்டி நிலையத்திலிருந்து அவன் வீடு கிட்டத்தில்தான் இருந்தது, வண்டியிலிருந்தே அதைத் தெளிவாக பார்க்கவும் இயலும், ஏனெனில் சுற்றிலும் அந்த உயரத்துக்கு வேறு கட்டிடம் ஏதும் இல்லை.
இப்போது அவன் செல்லும் வண்டி அவன் ஊருக்கு அடுத்த நாள் காலை 7 மணி அளவுக்கு போகும். அவன் வண்டியிலிருந்தவாறு வெளியே பார்த்து, அம்மாதிரி வெள்ளைத் துணி ஏதும் இல்லையென்றால் அப்படியே அந்த வண்டியிலேயே மேலே பயணம் போய்விடுவதாகவும் எழுதியிருந்தான். இக்கதையை கேட்ட அப்பெண்மணி அவன் தலையை அன்புடன் கோதி, யார் மன்னித்தாலும் மன்னிக்காவிட்டாலும் அவன் அன்னை கண்டிப்பாக மன்னிப்பாள் என்ற தனது உறுதியான நம்பிக்கையைத் தெரிவித்தாள்.
இக்கதை அந்த கம்பார்ட்மெண்டில் இருந்த மற்றவருக்கும் பரவிற்று. எல்லோரும் இது பற்றியே ஒருவருடன் இன்னொருவர் பேசிய வண்ணம் இருந்தனர். அடுத்த நாள் காலை 6 மணியிலிருந்தே வாலிபனின் பதட்டம் அதிகரிக்க ஆரம்பித்தது. அவனை விட அதிக டென்ஷன் ஆனது கம்பார்ட்மெண்டில் இருந்தவர்களே. வண்டி சரியாக 7 மணிக்கு ஸ்டேஷன் அவுட்டரிலிருந்து பிளாட்பாரத்தில் நுழைய எல்லோரது இதழகளிலிருந்தும் “ஆ” என்ற சத்தம் எழுந்தது. ஸ்டேஷன் முழுக்க வெள்ளைத் துணியை பிடித்தவாறு அந்த வாலிபனின் உறவினரும் ஊர்க்காரர்களும் நின்றிருந்தனர். அந்த வாலிபன் வீட்டு மாடி முழுக்க வெள்ளைத் துணிகள். ஒரு பெண்மணி மாடியில் இருந்த வண்ணம் ஆவேசத்துடன் ஒரு நீண்ட வெள்ளைத் துணியை கொடி போல அசைத்து கொண்டிருந்தாள். வாலிபன் சந்தோஷக் கூச்சலுடன் வண்டி நின்றதும் கீழே இறங்கி தன் வீட்டை நோக்கி ஓடலானான். மாடியிலிருந்து கீழே இறங்கிய அப்பெண்மணியும் அதே வேகத்துடன் தெருவில் தனது மகனை நோக்கி ஓடி வந்தாள்.
வண்டி மேலே சென்றது. கம்பார்ட்மெண்டில் இருந்தவர்கள் மன்னிப்பின் மகத்துவத்தை பார்த்து பிரமித்து நின்றனர். பிறகு அவர்களுக்கிடையேயும் பல மன்னிப்பு படலங்கள் நடந்தேறின.
மரணத்தை விட கொடிய சோகம்
ஆர்.கே.நாராயண் அவர்களது “பாட்டியின் கதை” என்னும் குறுநாவலை படிக்கும்போது பல எண்ணங்கள் என்னுள் எழுந்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் நடந்த கதை. இதை ஒரு பாட்டி தன் பேரனுக்கு கூறுகிறாள். அவள் அம்மாவுக்கு ஏழு வயதில் திருமணம் ஆயிற்று. மணமகனுக்கு வயது பத்து. மணமான சில மாதங்களிலேயே மணமகன் வீட்டை விட்டு ஓடிவிட்டான். இங்கே பெண்ணுக்கு பிரச்சினை ஆரம்பம். ஏதோ அவளால்தான் அவன் ஓடிவிட்டான் என ஊரார் பேச ஆரம்பித்தனர்.
கணவனைத் தேடி அப்பெண் செல்கிறாள். அதற்கு முன்னால் ஊராரிடம் தான் கணவனுடன் திரும்ப வந்து வம்பு பேசியவர்கள் வாயை அடைப்பேன் என் சூளுரைத்து செல்கிறாள். பிறகு ஊர் ஊராக கணவனை தேடி சென்று, கடைசியில் பூனா அருகில் அவனை கண்டெடுக்கிறாள். அங்கு அவன் உள்ளூர் பெண்ணை மணந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இவள் தன் கணவனை மனம் மாற்றி தன்னுடன் அழைத்து வருகிறாள். பல ஆண்டுகள் கழித்து ஊருக்கு வந்து பார்த்தால் அவளுக்கு மிக்க அதிர்ச்சி. அவள் ஊரில் அவளுக்கு தெரிந்தவர்கள் யாருமே மிச்சம் இல்லை. ஊரில் கொடிய பஞ்சம் வந்து முக்கால்வாசி பேர் மரணம், மீதியுள்ளவர்கள் வேறு ஊர்களுக்கு சென்று விட்டனர். ஆக, அவளுக்கு தன்னை ஊரில் நிலைநிறுத்த வழியில்லை. பிறகு சென்னைக்கு சென்று தன் கணவனுடன் குடித்தனம் நடத்துகிறாள் என்னும் கதையெல்லாம் ஆண்டி க்ளைமாக்ஸாகவே வருகின்றன.
இக்கதையில் என்னை பாதித்தது ஒரு விஷயம். ஒருவன் உயிருடன் இருந்தால் மட்டும் போதுமா? அவன் உயிருடன் இருப்பதை பார்த்து அவன் இருப்பை மற்றவர் அங்கீகரிப்பதும் முக்கியமே. இப்பெண்ணை பொருத்தவரை அவள் ஊரார் கண்களில் அவள் இறந்து போனவளே. அவள் உயிருடனேயே இருக்கிறாள் என்பதை அக்கறையுடன் பார்க்க யாருமே இல்லை என்பதுதான் எனக்கு வேதனையாக இருந்தது. இம்மாதிரியான கைவிடப்பட்ட மனோபாவம் மரணத்தை விடக் கொடியது. சிறைகளில் கூட தனிமைச் சிறை தண்டனை மிக மிகக் கொடிய அனுபவம் எனக் கூறுகிறார்கள்.
ஐயையோ! நல்லவேளை! ஐயையோ! நல்ல வேளை!
ஷண்முகப் பிரியன் என்பவரது ஒரு உண்மைச் சம்பவம்,ஆனால் எத்தனை திருப்பங்கள் என்னும் தலைப்பில் இப்பதிவைப் பார்த்ததுமே எனக்கு நான் முன்பொருமுறை படித்த இக்கதை நினைவுக்கு வந்தது. இருவர் ஒரு நிகழ்ச்சி பற்றி பேசுகின்றனர்.
கிட்டு: ராமமூர்த்தி அவசரமா ஃபிளைட்டை பிடிக்கப் போய் கொண்டிருந்தான். ஆனால் டிக்கெட் அடங்கிய பையை ஆட்டோவிலேயே வைத்து விட்டு ஏர்போர்ட்டில் இறங்கி விட்டான்.
பட்டு: ஐயையோ!
கிட்டு: ஆனால் நல்ல வேளையாக ஆட்டோ டிரைவர் அதை கண்டெடுத்து, ராமமூர்த்தியோட செல் நம்பருக்கு ஃபோன் செய்து டிக்கட்டையும் ஏர்போர்ட்டுக்குள்ள வந்து கொடுத்துட்டார்.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: ஆனா ரிப்போர்டிங் டைம் முடிஞ்சு போச்சுன்னு சொல்லிட்டாங்க.
பட்டு: ஐயையோ!
கிட்டு: ஆனா ராமமூர்த்தி உயர் அதிகாரியை பிடிச்சு போர்டிங் பாஸ் போட வச்சுட்டான்.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: கடைசீலே ஃப்ளைட்டும் காலவரையின்றி டிலே ஆச்சுன்னு சொன்னாங்க.
பட்டு: ஐயையோ!
கிட்டு: கடேசிலே ஒரு மணி நேர டிலேக்கு அப்புறம் ஃப்ளைட் கிளம்பிச்சு.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: சமுத்திரத்து மேலே பறக்கச்சே ஒரு மோட்டார் அவுட் ஆயிடுச்சு.
பட்டு: ஐயையோ!
கிட்டு: ஆனாக்க மீதி 3 மோட்டாருங்களும் வேலை பண்ணித்து, சமுத்திரத்தையும் தாண்டிட்டாங்க.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: இப்போ மீதி 3 மோட்டாருங்களும் பணால்.
பட்டு: ஐயையோ!
கிட்டு: ஆனாக்க எல்லார் கையிலும் பாரசூட் இருந்தது, அதனாலே வெளியில் குதிச்சுட்டாங்க.
பட்டு: நல்ல வேளை.
கிட்டு: ராமமூர்த்தியோட பாரசூட் திறக்கவில்லை,
பட்டு: ஐயையோ!
கிட்டு: தரையிலிருந்து ஆயிரம் அடி உயர இருக்கச்சே பாரசூட் திறந்தது.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: நூறு அடி உயரத்துலே இருக்கச்சே பாரசூட் அறுந்து போச்சு. கீழே நோக்கி ராமமூர்த்தி வேகமா வரான். கரெக்டா அங்கே முட்புதர்களா இருந்தது.
பட்டு: ஐயையோ!
கிட்டு: திடீர்னு அடிச்ச காத்தாலே முட்புதர்களை க்ளியர் பண்ணிட்டான். இனிமே வைக்கப் போர்களா இருந்தது.
பட்டு: நல்ல வேளை!
கிட்டு: கடைசீலே அதுங்க மேலேயும் விழல்லே. அதுங்களுக்கு நடுவிலேதான் தரையில் விழுந்தான்.
பட்டு: ????????
இதைத்தான் நாங்க blow hot blow cold-னு சொல்லுவோம்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
எம்.கோபாலகிருஷ்ணன் உரை
-
22 டிசம்பர் 2024 அன்று கோவையில் நிகழ்ந்த விஷ்ணுபுரம் விருது விழாவில்
எம்.கோபாலகிருஷ்ணன் ஆற்றிய உரை
11 hours ago
13 comments:
மூன்று கதைகளுமே அருமை, வித்தியாசமான தளங்கள் + வித்தியாசமான மெசேஜ்..
கதையெல்லாம் பலமா இருக்கு!
இப்பெல்லாம் இதை இடையில் சொருகி தான் திரைப்படங்களே வருது!
மன்னிப்பு
தனிமை
hot blow cold blow
அருமை.
@வால்பையன்
“இன்னிசை பாடிவரும்..” என்னும் பாடலுடன் வரும் விஜய் படமான “உள்ளம் கொள்ளை போகுதே” படத்தில் ஒரு காட்சி நினைவுக்கு வருகிறதா. என்ன, இங்கே மன்னிப்பு என்றெல்லாம் சான்சப்ட் கிடையாது. காதலி காதலனை அடையாளம் காண்கிறாளா என்று சஸ்பென்ஸ் மட்டும் இருக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
அந்த படத்தின் பெயர் “துள்ளாத மனமும் துள்ளும்”
மன்னிப்பு என்ற வார்த்தை மற்றவர்களுக்கு பிடிக்கலாம், ஆனால் எங்க கேப்டனுக்கு பிடிக்காதே!
நீங்கள் குறிப்பிட்ட படத்திலும் நாயகி கண் தெரியாமல் இருப்பதால் வந்த குழப்பமாக இருக்கலாம்!
உங்களதில் கெள்சல்யா
நான் சொன்னதில் சிம்ரன்!
ரெண்டு பேருமே சிலிம்மில் ரன் எடுத்தவர்கள்!
டோண்டு சார்,
எவருக்காவது பின்னூட்டம் போடும் போது முன்பெல்லாம் உங்கள் இடுகையின் சுட்டியை இணைத்து பின்னூட்டமிடுவீர்கள். தற்பொழுது பல இடுகைகளை 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்' என்று எழுதுவதால், அதில் இருக்கும் தகவல்களை தேடி இணைப்பதற்கு கடினமாக இருக்காதா ?
பயணக் கட்டுரைகளுக்காக பிரத்யோகமாக ஏதேனும் வலைப்பூ இருக்கிறதா ?
கூகிளில் தேடினால் வெறும் டூர் ஆப்ரேடேர் விலாசம் தான் வருகிறது.
நாராயணன்
//பல இடுகைகளை 'நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்' என்று எழுதுவதால், அதில் இருக்கும் தகவல்களை தேடி இணைப்பதற்கு கடினமாக இருக்காதா ? //
பக்கத்துலயே தேதி போடுறார் பாருங்க, இவரு பலே கில்லாடி,
தில்லானா மோகனாம்பாள் எந்த வருசம் ரீலிசாச்சுன்னு சொல்லிட்டு பக்கத்துலயே ஒரு கதை சொல்லுவார், அப்போ தான் என் அத்திம்பேருக்கு கல்யாணம் ஆச்சுன்னு!
@கோவி கண்ணன்
அதனால் என்ன “எனது இந்த தேதியிட்ட நங்கநல்லூர் பஞ்சாமிர்தத்தில் உள்ளிட்ட இந்த தலைப்பில் எழுதியபடி” என போட்டு அப்பதிவுக்கான ஹைப்பர்லிங்கை தந்துவிடுவதுதான் ஒரே வழி.
அன்புடன்,
டோண்டு ராகவன்
@வால்பையன்
தில்லானா மோகனாம்பாள் சமீபத்தில் 1968-ல் வெளியானது. அதுக்கு அடுத்த ஆண்டுதான் என் அத்திம்பேருக்கு கல்யாணம் ஆச்சு, அதே ஆண்டில் அல்ல.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//தில்லானா மோகனாம்பாள் சமீபத்தில் 1968-ல் வெளியானது. அதுக்கு அடுத்த ஆண்டுதான் என் அத்திம்பேருக்கு கல்யாணம் ஆச்சு, அதே ஆண்டில் அல்ல.//
வத்தகொழம்பு டேஸ்ட் சூப்பருல்ல!
அதுக்கு அடுத்த ஆண்டுதான் என் அத்திம்பேருக்கு கல்யாணம் ஆச்சு, அதே ஆண்டில் அல்ல.
திருமணத்திற்குப் பிறகு தானே அவர் உங்களுக்கு அத்திம்பேர் ஆகியிருப்பார் ?
Post a Comment