12/11/2006

நரகம் என்றால் என்ன?

சமீபத்தில் 1953-ல், எனக்கு ஏழு வயதாக இருந்தபோது என் மாமா பிள்ளை ஸ்ரீதரன் நரகம் என்றால் என்ன என்பதை புராணங்களிலிருந்து பல கதைகள் மூலம் விளக்கினான். வடமொழி அவனுக்கு தண்ணீர் பட்டபாடு. சுலோகங்களாக கூறி வேகமாக அவற்றுக்கு பொருள் கூறுவான். நரகம் பற்றி அவன் கொடுத்த விவரங்கள் பயமாக இருக்கும்.

அப்போதெல்லாம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் உற்சவ காலங்களில் கோபுர வாசலில் பல ஸ்டால்கள் போட்டிருப்பார்கள். இப்போது எப்படியோ தெரியவில்லை. கோவிலுக்கு அருகில் தாண்டவராய முதலித் தெருவில் வீடு. திருவிழாக் காலங்களில் அந்த ஸ்டால்கள் பக்கம் சுற்றிக் கொண்டிருப்பேன். ஒரு பயாஸ்கோப் பெட்டியில் காலணா கொடுத்தால் (2 பைசாக்கள்) நரகம் பற்றிய காட்சிகள் காட்டுவார்கள். தீயில் போட்டு வாட்டுதல், எண்ணெய் கொப்பறையில் பொறித்தெடுத்தல் என்றெல்லாம் பார்க்கவே பயமாக இருக்கும்.

பல ஆண்டுகளுக்கு நரகம் என்றால் எனது எண்ணங்கள் மேலே கூறப்பட்டதையே பெரும்பாலும் சார்ந்து இருந்தன. மெதுவாக அவை மாறத் தொடங்கின. கல்லூரிக் காலங்களில் எனக்கு பிடித்த எழுத்தாளர் Taylor Caldwell என்ற அமெரிக்க பெண்மணி. அவர் புத்தகங்களை வெறியுடன் தேடித் தேடி படித்திருக்கிறேன். அவர் நரகம் பற்றி கூறுவது ஏறத்தாழ கீழ்க்கண்ட முறையில் இருக்கும்.

நம் வாழ்க்கையிலேயே நாம் நரகத்தை அனுபவித்து வருகிறோம். நரகம் என்றால் துன்பங்கள் வரும்போது அவற்றை எதிர்த்துப் போராடி ஜெயிப்போம் என்று எந்த நம்பிக்கையும் இல்லாது இருத்தல் என்று கூறி அதை பல மேற்கோள்கள் மூலம் விளக்கினார். அவர் கூற வந்தது கடவுள் நம்பிக்கை இருந்தாலே பெரும்பான்மையான தருணங்களில் ஜெயித்து விடலாம் என்ற உறுதி வந்து விடும் என்பதே. அப்போது நரகம் இனிமேல் இல்லை என்பதுதான் அவர் சித்தாந்தம்.

இதை நான் முதன் முறையாக அனுபவித்தது பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணக்கு பேப்பர் சமயத்தில். தொட்ட கணக்குகள் ஒன்றும் சரியாகவே வரவில்லை. பல சூத்திரங்கள் திடீரென நினைவுக்கு வராமல் போக அவற்றையெல்லாம் வேகமாக டிரைவ் செய்ய வேண்டியிருந்தது. ஆனால் நேர அளவு 3 மணிகள்தானே. கடைசி பெல் அடிக்கும்போதே தெரிந்தது பேப்பர் காலி என்று. அதே போல தேர்வில் தோல்வியுற்று ஓர் ஆண்டு வீட்டிலேயே முடங்கிக் கிடக்க வேண்டியிருந்தது. என்ன செய்வது என்று முதலில் புரியவில்லை. நிலைமை சரியாகும் என்றெல்லாம் பெரிய நம்பிக்கை இல்லை. இதுதான் நான் அனுபவித்த முதல் நரகம்.

என் மேலேயே கண்மண் தெரியாத கோபம் வந்தது. அதுவும் கணக்கில் போய் தோல்வியா என்ற எண்ணம் என்னை அறுத்தது. அப்போதுதான் குருட்டாம் போக்கில் எனது முரட்டுவைத்தியத்தை ஆரம்பித்தேன். ஆனால் அது மட்டும் போதாதே. கணக்கு இம்மாதிரி காலை வாரிவிடும் என்பதை நான் எதிர்ப்பார்க்காமல் தெனாவட்டாக இருந்திருக்கிறேன். ஆகவே அதை முதலில் சரி செய்ய என்ன செய்தேன் என்பதை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன்.

கணக்கில் விட்டதை பிடிக்கலாம் என்ற நிலை வந்ததும் நம்பிக்கை வந்தது. கூடவே ஃபெயிலான பௌதிகம் மற்றும் ரசாயனத்தையும் படிக்கும் ஆர்வம் வந்து அதே ஆண்டு அக்டோபரில் வந்த பரீட்சை பாஸ் செய்ய முடிந்தது. கணக்கில் டிஸ்டிங்க்ஷன்.

அடுத்த நரகம் எனது கடைசி வருட பரீட்சை ரிசல்டுகள் வந்ததும் அனுபவிக்க வேண்டியிருந்தது. அது ஜூன் 1969. ஐந்தாம் ஆண்டு பரீட்சை ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங்களில் நான் தேறவில்லை - கண்ட்ரோல் சிஸ்டம்ஸ் மற்றும் எலெக்ட்ரிகல் மெஷினெரி. நாங்கள் படித்த ஐந்து ஆண்டுகள் ஒருங்கிணைப்பு பாடத் திட்டத்தில் கடைசி 3 ஆண்டுகள் ரொம்ப முக்கியம் வாய்ந்தவையாகும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்துத்தான் எங்களுக்கு கிளாஸ் நிர்ணயம் செய்வார்கள். அதில் முக்கிய கண்டிஷன் மூன்று ஆண்டுகள் படிப்பை சரியாக 3 ஆண்டுகளில் எல்லா பாடங்களிலும் பாஸ் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் என்ன மதிப்பெண்கள் எடுத்தாலும் இரண்டாம் வகுப்புதான். ஆகவே எனது முதல் வகுப்பு கனவுகள் கானல் நீராயின. ரொம்பவும் நொந்துப் போன நிலையில் இருந்தேன். அடுத்த பரீட்சை நவம்பர் மாதம்தான்.

அப்போதுதான் என் தந்தை என்னிடம் கூறினார், "பரவாயில்லை, இதற்காக ரொம்ப வருத்தப்படாதே. என்னிடம் மேக்ஸ் ம்யுல்லர் பவனில் ஜெர்மன் க்ளாஸ் ஆரம்பிக்கப் போவதாக அங்கிருந்து கையேடு வந்திருக்கிறது. சும்மா வீட்டில் டிப்ரஸ்டாக உட்கார்ந்திருப்பதை விட பேசாமல் ஜெர்மன் க்ளாஸில் சேர்வதுதானே" என்று கேட்டார்.

அதன் பிறகு என்ன நடந்தது என்பதுதான் இந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது. அது எப்படி என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது என்பதையும் அதில் பார்க்கலாம்.

இந்த அனுபவங்கள் எதிரில் போன ஆண்டு எனக்கு நேர்ந்த பெரிய பிரச்சினை என்னைப் பொருத்தவரை நரகம் இல்லைதான். ஏனெனில் முதலில் என்ன செய்வது என்று சற்றே மயங்கினாலும், என்னை ரொம்பநேரம் சோர்வடைய விடாது என் உள்ளங்கவர் கள்வன் என் அப்பன் தென்திருப்பேரை மகரநெடுங்குழைகாதன் என்னை ஆட்கொண்டான். என்னென்ன செய்வது என்பதை ஒரு தந்தை குழந்தைக்கு சொல்வதுபோல எனக்கு காட்டினான். அதுவும் கடந்து போயிற்று.

எதிர்காலத்தில் பிரச்சினைகள் வருமா? கண்டிப்பாக வரும். ஏனெனில் வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. ஆனால் அச்சமயங்களில் என்ன செய்வது என்பதை யோசித்து நாம்தான் செயல்படவேண்டும், ஆண்டவனைத் தவிர வேறு யாரும் துணை இல்லை என்பதையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். நாமே பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள உழைத்தால் நண்பர்களும் உற்சாகமடைந்து உதவிகள் செய்வார்கள் என்பதும் நிஜம். அதன்றி வெறுமனே அழுது கொண்டிருந்தால் நாம் இப்பதிவிலும் அதற்கு முந்தைய பதிவிலும் குறிப்பிட்டிருந்தபடி தவிர்க்கப்பட வேண்டிய நபர்களாகக் கருதப்பட்டுவிடும் அபாயம் உண்டு.

அன்புடன்,
டோண்டு ராகவன்

12 comments:

மகேஸ் said...

உங்கள் பதிவுகள் பலவற்றைப் படித்திருக்கிறேன். அனைத்தும் அருமையாக உள்ளன.
காமராஜரைப் பற்றிய தொடர் நான் அறியாத பல நிகழ்சிகளைப் பற்றி தெரிந்து கொள்ள உதவியது.

வணக்கத்துடன்,
மானா

dondu(#11168674346665545885) said...

மிக்க நன்றி மானா அவர்களே. பதிவுகளைப் படித்து உங்கள் கருத்துக்களை எழுதுங்கள். ஆதரவோ, எதிர்ப்போ, எதுவாயினும் கருத்துக்களே முக்கியம். சம்பந்தப் பதிவின் பொருளுக்கேற்றதாக மட்டுமே பின்னூட்டங்கள் இருக்கட்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

மகேஸ் said...

//சம்பந்தப் பதிவின் பொருளுக்கேற்றதாக மட்டுமே பின்னூட்டங்கள் இருக்கட்டும் என்பதுதான் எனது ஒரே வேண்டுகோள்//
அப்படியே ஆகட்டும்.

கார்மேகராஜா said...

ஒவ்வொரு பாராவிலும் ஒவ்வொரு லிங்க் கொடுக்குமளவுக்கு நிறைய எழுதியுள்ளிர்கள் போல.

இப்பொழுதுதான் உங்கள் பதிவுகளை படித்துக்கொண்டு வருகிறேன்.

dondu(#11168674346665545885) said...

மீண்டும் நன்றி, உங்கள் புரிதலுக்கு, மானா அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நன்றி கார்மேக ராஜா அவர்களே. ஹைப்பர் லிங்குகள் என் வாழ்க்கையில் 1970 முதலிலிருந்தே விளையாடி வந்திருக்கின்றன. ஆகவே அவை எனக்கு மிகப் பிடித்தமானவை. அதனாலேயே எங்கெல்லாம் முடியுமோ அவற்றைத் தருவேன். உங்கள் உடனடியான புரிதலுக்காக அவ்வித அனுபவங்கள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன.

1
2
3
4
5
6

பதிவுகளைக் காட்டிலும் அவற்றுக்கு வந்த எதிர்வினைகள் அதிக முக்கியம். ஏனெனில், மனித இயற்கைக்கான சான்றுகளைத் தருகின்றன.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Bajji(#07096154083685964097) said...

கருட புராணத்திலே போட்டதா அன்னியன் படத்திலே போட்டிருந்தாங்களே அதையா சொல்றீங்க?

கிருஷ்ணன்

கஞ்சா கருப்பு said...

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ்னு சொல்லறீங்களா?

முகம்மது யூனுஸ்

dondu(#11168674346665545885) said...

வணக்கம் கிருஷ்ணன் அவர்களே. கருடபுராணம் படிக்க பயங்கரமானது என கேள்விப்பட்டிருக்கிறேன். அது பற்றி சுஜாதா அவர்கள் தனது தந்தை இறந்த சமயம் எழுதியிருந்தார்.

இறந்த பத்து நாட்களுக்கு பிரேதாத்மா எப்படியேல்லாம் அல்லாடுகிறது என்பதை விவரிப்பது யாருக்கும் அடிவயிற்றில் சங்கடம் தரக்கூடியது. சாதாரணமாக சாவு வீடுகளில் கர்மம் செய்ய வேண்டியவர்கள் படிப்பதற்காக இந்த புராணம் சிபாரிசு செய்யப்படுகிறது. மற்ற நேரங்களில் அதை படிக்கக் கூடாது என்று கூட கூறுவார்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

dondu(#11168674346665545885) said...

நிம்மதி நிம்மதி உங்கள் சாய்ஸ் சீரியல் வரிசை பார்த்திருக்கிறீர்களா முகம்மது யூனுஸ் அவர்களே?

அதிலும் அதில் வந்த முதல் சீரியல் நிஜமாகவே நன்றாக இருந்தது. சரத்பாபு, ஜெயபாரதி, வாசுகி ஆகியோர் நடித்திருந்தனர்.

இது பற்றி மேலே நான் பிறகு பதிகிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...

வணக்கம் டோண்டு ஐயா. உங்களோட இந்த பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சுது.

கிட்டத்தட்ட ஒங்க வயசுதான் எனக்கும். நீங்க இருந்த திருவல்லிக்கேணிலேதான் நான் டி.பி. கோவில் தெருவிலே, பாரதியார் வீட்டுக்கு நாலு வீடு தள்ளி 1970 வரை குடியிருந்திருக்கேன். ஹிந்து உயர்நிலை பள்ளிலே 1963-லே எஸ்.எஸ்.எல்.சி. பரீட்சை எழுதினேன்.

நீங்க சொன்ன யமலோக பயாஸ்கோப்பெல்லாம் நானும் பார்த்திருக்கேன்.

உங்க பதிவு என்னோட பழைய ஞாபகங்களை தூண்டிவிட்டது. நன்றி.

முனிவேலு

dondu(#11168674346665545885) said...

வணக்கம் முனிவேலு அவர்களே. என்ன, என்னோட ஹிந்து உயர் நிலைப் பள்ளியில் படித்தீர்களா? அதுவும் எனக்கு அடுத்த செட்டில்? டைரக்டர் விசு எனக்கு முந்திய செட்டில் படித்தார். அவர் தம்பி காலம் சென்ற கிஷ்மு ஒங்க செட்டில். எவ்வளவு சிறிய உலகம் இது?

என்ன ஆச்சரியம் பாருங்கள். நான் இருந்தது வெங்கடாசல செட்டித் தெரு. நீங்க இருந்த இடத்திலிருந்து ஐந்து நிமிஷ நடை கூட இல்லை. அவ்வளவு வருஷங்கள் ஒத்தரை ஒர்ருத்தர் பார்த்தது கூட இல்லை. இப்ப என்னவென்றால் திடுதிப்பென்று ஆஜர் கொடுக்கிறீர்கள்? இப்போது எங்கிருக்கிறீர்கள்?

முடிந்தால் பார்க்கலாம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது